Saturday 30 June 2012

சொல்ல நினைத்தவை


இரண்டு மாத காலத்தில் எழுத நினைத்ததும் பகிர நினைத்ததும் ஏராளம். கோடைகால விடுமுறைகளில் உறவினர்களின் வருகை, அதற்குப் பிந்தைய என் மற்றொரு பயணம், திரும்பிவந்த பிறகு வேலைப்பளு இன்னும்கூட இன்னும்கொஞ்சம் திணறல் என எழுத்து கொஞ்சம் விலகிப்போயிற்று. இது கட்டுரை அல்ல. உறவு, பிரிவு, தகவல், வியப்பு, நினைப்பு, வேண்டுதல் எல்லாம் அடங்கிய துணுக்குகள்.

வேண்டுதல்
உறவுப்பாலம் என்ற தலைப்பில் இலங்கைச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று வெளிவர இருக்கிறது. அதில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிச் சிறுகதைகளும் இடம் பெறும். சிங்களக் கதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு விட்டன. தமிழ்க் கதைகளில் ஒரு கதை கிடைக்கவில்லை. ஆங்கிலக் கதைகளும் மொழியாக்கம் ஆகிவிட்டன. என்றாலும், தமிழர்கள் எழுதிய ஆங்கிலக்கதைகளுக்கு இலங்கைத் தமிழில் ஏற்கெனவே தமிழாக்கம் ஆகியிருந்தால், அவை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று ஆசை. கீழே உள்ளது பட்டியல். யாரிடமாவது இந்தக் கதைகள் தமிழில் இருந்தால், ஸ்கேன் செய்து அனுப்பினால் நலம். உரைக்கோப்பாக இருந்தாலும் மகிழ்ச்சி.
1. தாமரைச்செல்வி தமிழில் எழுதிய எங்கேயும் எப்போதும் அது நிகழலாம்
2. அழகு சுப்பிரமணியன் ஆங்கிலத்தில் எழுதிய கூலிக்கு மாரடிப்பவர்கள் (Professional Mourners, The Big Girl என்ற சிறுகதைத் தொகுப்பில் வெளியானது)
3. சி.வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய நாடும் இல்லை, நாயும் இல்லை (No State, No Dog, Born to Labour என்ற தொகுப்பில் வெளியாகியிருக்கலாம்)
4. ஆமீனா ஹுசேன் ஆங்கிலத்தில் எழுதிய வாழ்க்கையின் நிறம் (The Colour of Life, 1975இல் வெளியானது).

பிரிவு
என் இனிய நண்பர்களில் இன்னொருவர் தில்லியை விட்டு தமிழகம் சென்று விட்டார். நாக. வேணுகோபாலன் - கவிஞர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர், பேச்சாளர், நாடக நடிகர், தமிழ்ச் சங்கத்திலும் கல்விக் கழகத்திலும் பல பொறுப்புகள் வகித்தவர். மயூர் விஹாரில் வசித்து வந்த இவர் அண்மையில் சென்னைக்குச் சென்று விட்டார். கேளம்பாக்கத்திற்கு சற்று முன்னே, புதிதாக உருவாகியிருக்கும் கான்கிரீட் காட்டில் பதிநா......ன்......கு மாடிக் கட்டிடம் ஒன்றில் தற்போது வாசம்.
நேர்மையான இந்த மனிதரின் நட்பு சுமார் 21 ஆண்டுகாலப் பழையது. வயதில் மூத்தவர் என்றாலும் சகாவாக மதிக்கிற நல்மனம். பொது அமைப்புகளைப் பற்றிப் பேசும்போது விரக்திக் கோபத்தில் இதையெல்லாம் விட்டுட்டு பேசாம உங்க வேலைகளைப் பாருங்க என்று குமுறுபவர். அடுத்த நொடியே, அது சரி, அப்படியே எல்லாரும் விட்டுட்டா என்னதான் ஆகும் என்றும் கூறுபவர்.
இப்பல்லாம் பல விஷயங்கள் மறந்து போயிடுது என்று கூறிக்கொண்டே 60களின் லயோலா காலேஜ் விஷயங்களையும், கணையாழி-தீபம்-சரஸ்வதி-இத்தியாதி பத்திரிகைகளில் வந்த கதைகளையும் - அதன் ஆசிரியர்களைப்பற்றிய குறிப்புகளுடன் பேசக்கூடியவர். சுவையான ஒரு உதாரணம் - எங்கள் வீட்டுக்கு அவர் வந்திருந்த ஒரு நாள், சந்துருவுக்கு இன்று மனைவியாய் இருக்கிற, அன்று இக்னோ மாணவியாய் இருந்த அனார்கலியின் தந்தையார் ஷாஜஹானும் வந்திருந்தார். இலக்கியம்பற்றிப் பேச்சுத் திரும்ப, சந்திரமூலரசன் என்ற பெயரில் எழுதியதாக ஷாஜஹான் கூற, ஆமா படிச்சுருக்கேன் என்று பத்திரிகையின் பெயருடன் கதையையே வேணு சார் கூற, நான் என் நினைவுத்திறன் குறைவு பற்றிக் மீண்டும் கவலைப்படத் தொடங்கினேன்.
நேர்மையான, நல்லெண்ணம் கொண்ட, பன்முகத் திறமைகள் வாய்ந்த நபர்கள் ஒவ்வொருவராக தலைநகரை விட்டு விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
பத்துநாள் முன்பு சென்னை சென்றிருந்தபோது சென்னையின் பழைய நண்பர்களை எல்லாம் ஒதுக்கி விட்டு அவர் வீட்டுக்குப் போய் வந்தேன். கையில் கொடுத்தது இரண்டு பழைய இதழ்களை - சதங்கை இதழ்கள், 90களில் வந்தவை. நாகர்கோவிலில் இருந்து வெளிவந்திருக்கிறது சதங்கை. கதைகளும் கட்டுரைகளும் வியப்பை அளித்தன. தவிர்க்க இயலாமல் சென்னையிலிருந்து சிலகாலம் வெளியான சதங்கையின் நினைவு வந்தது. இரண்டுக்கும் உள்ளடக்கத் தரத்தில் சம்பந்தமே இல்லை என்பது வேறு விஷயம்.
வேணு சாருடைய தொலைபேசி தொல்லைபேசி ஆகிவிடக்கூடாது என்பதால் சென்னை எண்களை இங்கே தரவில்லை. அவசியம் தேவைப்படுகிறவர்கள் கேளுங்கள் தரப்படும்.
ஏதாவது வேலையாக அவர் தில்லி வரும்போது தமிழ்ச்சங்கத்தினரை வழியனுப்பு விழா நடத்தச்சொல்ல வேண்டும்.

உறவு
கோடை விடுமுறையில் எங்கள் வீட்டில் ஏகப்பட்ட விருந்தினர்கள். மைத்துனியும் கணவரும் தம் இரண்டு குழந்தைகளுடன் சுமார் 20 நாட்கள். அக்கா மகளும் அவர் குடும்பமும் நான்கு குழந்தைகளுடன் சுமார் நாற்பது நாட்கள். தங்கையும் நாங்களும் எதிரெதிர் வீட்டில் இருப்பதால் பெரிய வசதி. இரண்டு வீடுகளிலும் கலகலப்பா களேபரமா என்று எனக்கே சந்தேகம். தில்லியை சுற்றி வந்தார்கள், டிவி பார்த்தார்கள், ஐபாடிலும் கம்ப்யூட்டரிலும் கேம் ஆடினார்கள். நடுநடுவே சாப்பிடவும் செய்தார்கள்.
டீவி-யில் கார்ட்டூன் நெட்வொர்க் மட்டுமே கதியென இருந்திருக்க வேண்டிய குழந்தைகளை கேரம் போர்டு ஆட வைத்த பெருமை என்னைச் சாரும். அன்று ஆடத்துவங்கியது, இன்றும் என் மகள்கள் தினமும் ஒரு ஆட்டமாவது ஆடிவிட்டுத்தான் தூங்குவது என்று ஆகியிருக்கிறார்கள். நானும்கூட ஆடுகிறேன். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தாராபுரம் லாரி ஷெட்களை ஒட்டி இருந்த கேரம் கிளப்களில் ஆட்டத்துக்கு அல்லது மணிக்கு இவ்வளவு என்று காசு கட்டி ஆடிய ஆட்டங்களுக்குப் பிறகு இப்போது என் ஆட்டம் கொஞ்சம் மெருகேறியிருப்பதாகத் தெரிகிறது.
நன்றி சொல்ல வேண்டியது பென்னேஸ்வரனுக்கு. முறைப்பெண் நாடக நாட்களில் ஒருநாள் வீட்டில் இருந்த கேரம்போர்டில் யாரும் ஆடுவதில்லை என்று சொல்ல, அதுதான் சாக்கு என்று ஆட்டோவில் போட்டு என் வீடு சேர்த்தாயிற்று. அவரும் திருப்பிக் கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் நானும் கொடுத்திருக்கப் போவதும் இல்லை. என்ன அருமையான போர்டு... எல்லாரும் ஆடிக்கொண்டிருக்கையில் ஒருநாள் பெரியசாமி வந்தார். என்னையா, போர்டு யாருதுன்னு தெரியுதா என்றேன். திரும்பிப் பார்த்தார். "தெரியாம என்ன... கேபி சாருது... யார் யாரெல்லாம் ஆடியிருக்கோம். முறைப்பெண் அப்பதான எடுத்துட்டு வந்தது..." என்றார். அவருடைய நினைவுத்திறன் பற்றிய பொறாமை ஒரு கணம் எழுந்து அடங்கியது.

வியப்பு
பதினைந்து நாள் பயணமாக தமிழகம் சென்று நாளுக்கு ஒரு ஊராக அலைந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்டவை ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் யார் என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிவிக்கும் சுவரொட்டிகள். அடேயப்பா... என்னே விழிப்புணர்வு நம் தமிழர்களுக்கு... அதிரவைத்த மற்றொரு அம்சம் - டாஸ்மாக் கடைகளின் தாக்கம். எந்த ஊரிலும் எந்த பஸ்சிலும் மாலை ஏழு மணிக்கு மேல் பயணம் செய்தால் எங்கே உட்கார்ந்தாலும் நாற்றம்.... ஐயோ என்று அலறத் தோன்றுகிறது - என்ன் செய்வார்களோ என்ற பயத்தால் அல்ல, என்ன ஆகிக்கொண்டிருக்கிறோம், என்ன ஆகப்போகிறது என்ற மலைப்பால்.

நினைப்பு
ஒய்வில்லாமல் ஓட்டமும் பயணமுமாக இருந்ததால் கேமராவின் செல்களுக்கு மின்னேற்றம் செய்யாததும், கேமராவையே மறந்து விட்டு பல ஊர்களுக்குச் சென்று விட்டதும், சுவையான பலவற்றைப் பதிய முடியாமல் செய்துவிட்டது. இது எங்கள் பள்ளி, எங்கள் பள்ளி நல்ல பள்ளி என்று கட்டுரை எழுதவைத்த பள்ளிக்குச் சென்றேன். தோற்றம் கொஞ்சம் மாறிவிட்டது என்றாலும் அதே பள்ளி. நானும் என் நண்பனும் மட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். படமாகப் பதிய இயலாத பலவும் மனதில் சித்திரங்களாகப் பதிவில் உள்ளன. எழுத்தில் சித்திரிக்க வேண்டும் என்ற ஆவல். முடிகிறதா பார்ப்போம்.

இணைப்பு
சிவலிங்கம் என்பவரின் வலைதளத்தைப் பார்க்க நேர்ந்தது. கணினிக்கு இவர் தொகுத்திருக்கும் கலைச்சொற்கள் உங்களுக்கும் பயன் தரலாம்.
மு. சிவலிங்கம்
வினவு வலைதளத்தில் இணையம் பற்றிய கட்டுரை ஒன்று. அதில் பேஸ்புக் பற்றிய விளக்கம் எளியமொழியில். சுவைத்துப் பாருங்களேன்.
முகநூல்


பதிவு வெளியானதற்குப் பிந்தைய குறிப்பு 1 - லண்டனிலிருந்து பதிவைப் படித்த இலங்கை நண்பர் ஒருவர் கூலிக்கு மாரடிப்போர் கதையின் இலங்கைத் தமிழ் மொழியாக்கத்தை அனுப்பி விட்டார். எனவே, மற்ற கதைகளுக்கு மட்டும் உதவவும்.
குறிப்பு 2 - நாடுமில்லை, நாயுமில்லை கதையையும் அவரே அனுப்பி விட்டார். தாமரைச் செல்வியின் கதையையும் அனுப்புவதாகக் கூறிவிட்டு தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கு நன்றி கூறுவது என் கடமை. நன்றி பத்மநாபன் ஐயா.