Sunday 22 July 2012

எந்தன் மனநிலையே தங்கமே தங்கம்

ஒலிம்பிக் துவங்க இருக்கிறது. அதன்பிறகு பதினைந்து நாட்களுக்கு - ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை, உலகெங்கும் ஒலிம்பிக்ஸ் பற்றிய பேச்சாகவே இருக்கும். விளையாட்டு ரசிகர்களுக்கு ஒலிம்பிக்ஸே மூச்சாகவும் இருக்கும்.

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களைத்தான் உலகமே போற்றப் போகிறது. இது சரிதானா? ஒலிம்பிக் நோக்கத்துக்கு உகந்ததா? வெற்றி மட்டும்தான் விளையாட்டின் இலக்கா? விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒலிம்பிக்கின் நோக்கம் அல்லவா?!

இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஒலிம்பிக்கை ஒட்டி இடம்பெற இருக்கிறது ஒரு விளம்பரம். தோற்பவர்களைப் போற்ற இருக்கும் இந்த விளம்பரங்களை வடிவமைக்க இருக்கிறார் புதுதில்லிக் கலைஞர் சாரநாத் பானர்ஜி. ஒலிம்பிக்கை ஒட்டி பல அமைப்புகள் நடத்தும் பல்வேறு விளம்பர வகைகளை வடிவைக்கத் தேர்வு செய்யப்பட்ட ஏழு பேரில் இவரும் ஒருவர்.

ஒலிம்பிக்கை ஒட்டி லண்டனில் பலவிதமான கலை-இலக்கிய-பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை உருவாக்கும் வகையில் இலவச நூலக உறுப்பினர் திட்டம் ஒன்றும்கூட ஒலிம்பிக்கை ஒட்டி நடைபெற்று வருகிறது. அதே போல, ஒலிம்பிக் நடைபெறும் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் வாயிலாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் விளையாட்டில் தோல்வி காண்பது இழுக்கல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில், மயிரிழையில் பதக்கத்தைத் தவற விட்டவர்கள், தோற்றவர்கள் பற்றிய படங்களையும் விளக்கங்களையும் உருவாக்கி இருக்கிறார் சாரநாத். சில விளம்பரப்பலகைப் படங்கள் கீழே - 

 

 
மேலும் விவரம் அறிய விரும்புவோருக்கு - http://friezeprojectseast.org/sarnath-banerjee/


சரி, பங்கும் பெற்று வெற்றியும் பெறும் சாத்தியம் உள்ளவர்கள் என இந்தியா எதிர்பார்ப்பது யாரை? 13 பிரிவுகளில் 81 விளையாட்டு வீரர்கள் இந்தியாவிலிருந்து பங்கேற்கிறார்கள். ஹாக்கியில் 16 பேர், தடகளப் பிரிவில் 14 பேர், துப்பாக்கி சுடும் பிரிவில் 11 பேர், குத்துச் சண்டையில் எட்டுபேரும் இதில் அடங்குவர்.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா 10 முதல் 12 பதக்கங்கள் வெல்லும் என எதிர்பார்ப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சகச் செயலர் கூறியிருக்கிறார். 1900இல் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் துவங்கிய இந்தியா இதுவரை 20 பதக்கங்களைத்தான் வென்றிருக்கிறது. அதிலும் எட்டு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் உள்பட பதினொரு பதக்கங்கள் ஹாக்கியில் கிடைத்தவை. அதே இந்திய ஹாக்கி, கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதிகூடப் பெறவில்லை. பெய்ஜிங்கில் அபினவ் பிந்த்ரா வென்ற தங்கம் ஒன்றுதான் இந்தியாவுக்குக் கிடைத்த ஒரே தனிநபர் தங்கப் பதக்கம். பிறகு எதனால் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு? எல்லாம் காமன்வெல்த் அளித்த ஊக்கம்தான். அத்துடன், இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள்தான் இதுவரையிலான வரலாற்றில் தகுதியின் அடிப்படையில் முன்னிலை வகிப்பவர்கள் என்பதும் ஒரு காரணம். இருக்கட்டும், எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் எல்லாருக்குமே மகிழ்ச்சிதான். இந்தியா யார் யாரை நம்பியிருக்கிறது... 

1948 இந்திய ஹாக்கி அணி
1948இல் லண்டனில் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நிகழ்ந்தபோது, ஹாக்கியில் பிரிட்டிஷ் மண்ணில் பிரிட்டிஷ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது இந்திய அணி. அதுவும், விடுதலைக்குப் பிறகு, தேசப் பிரிவினையின் வேதனைகளுக்குப் பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம் என்பதால் ஹாக்கி வெற்றிகளிலேயே அபார வெற்றியாகக் கொண்டாடப்பட்டது அதுதான். லண்டன்வாழ் இந்தியர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று அந்தக்கால செய்திகள் காட்டுகின்றன. இப்போது லண்டனில் ஏழு லட்சம் இந்தியர்கள். ஹாக்கியில் இந்திய அணியை உற்சாகப்படுத்த ஆட்களுக்குக் குறைவே இருக்காது. ஆனால் மீண்டும் ஒரு 1948 நிகழுமா? பங்கேற்கிற அணிகளில் இந்திய அணி நிச்சயமாகச் சிறந்த அணிதான். ஆனால் சிறந்தவர்கள் எல்லாரும் பதக்கம் பெற்றுவிட முடியுமா...! ஆவலுடன் காத்திருக்கிறது இந்தியா.

ஹாக்கியை விட்டால், இந்தியாவுக்கு முதல் தனிநபர் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்த அபினவ் பிந்த்ரா. அதற்குப் பிறகு 2010இல் காமன்வெல்த்தில் இரட்டையர் பிரிவில் ககன் நாரங்-உடன் தங்கம் வென்றார். ஆனால் தனிநபர் பிரிவில் வெள்ளியை வென்றார். கடந்த ஒலிம்பிக்கில் சாதனைப் புள்ளிகள் பெற்ற அபினவ் அதே திறத்துடன் இருக்கிறாரா... சந்தேகம்தான்.

ககன் நாரங்க், காமன்வெல்த்தில் 10 மீட்டர் ரைபிள் தனிநபர், இரட்டையர் என இரண்டிலும் தங்கம் வென்றிருக்கிறார். 50 மீட்டர் ரைபிளில் தனிநபர் பிரிவில் தங்கமும், இரட்டையர் பிரிவில் இம்ரான் ஹசனுடன் சேர்ந்து தங்கமும் வென்றிருக்கிறார். 2010 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், தனியாகவும் அபினவ் பிந்த்ராவுடன் சேர்ந்தும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் பெற்றிருக்கிறார். காமன்வெல்த் விளையாட்டில் புள்ளிகளில் சாதனை புரிந்தவர் என்பதால் இவரிடமிருந்து எதிர்பார்ப்பு அதிகம்.

துப்பாக்கிப் பிரிவுகளில் மேலும் இருவர் - மானவ்ஜித் சந்து, ரஞ்சன் சோதி. மானவ்ஜித் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பிறகு மெக்சிகோவில் உலகக் கோப்பைப் போட்டியிலும் தங்கம் வென்றார். காமன்வெல்த்தில் இரண்டு வெள்ளிகள் வென்ற ரஞ்சன் சோதி, 2010 ஆசிய விளையாட்டுப் போட்டி, 2010 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை ஆகியவற்றில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என ஏதாவது ஒரு பதக்கத்தை வென்று வந்தார். டபுள் டிராப் பிரிவில் இந்த இருவர்மீதும் கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம்.

கடந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்றதும் இந்தியாவின் எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டன. அதற்கு நியாயமான காரணமும் உண்டு. குத்துச்சண்டையில் ஆடவரில் ஏழு பிரிவுகளில் ஏழு பேர் பங்கேற்கிறார்கள். ஒவ்வொருவருமே அண்மையில் பல சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வென்று வந்திருப்பவர்கள். குத்துச் சண்டையில் விஜேந்தர் சிங், விகாஸ் கிருஷ்ணன், மனோஜ் குமார், ஷிவ் தாப்பா ஆகியோர்மீதான எதிர்பார்ப்பு அதிகம்.

இடது கையிலே ஒண்ணே ஒண்ணுதான் இருக்கும்மா மேரிக் கண்ணு... இன்னொண்ணு சேக்க வேணாமா ?
மகளிர் குத்துச் சண்டைப் பிரிவில் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் மேரி கோம். 48 கிலோ பிரிவில் ஐந்து முறை உலக சாம்பியன். இந்த ஒலிம்பிக்கில் இவருக்கு நிகர் எவருமே இல்லை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இவரிடம் உண்டு.


திரும்பி வர்றப்பவும் இதே மாதிரி வரவேற்பு கிடைக்கணும்...
மல்யுத்தத்தில் சுஷில் குமார் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிறகு, இதிலும் ஆர்வம் கூடிவிட்டது. ஒலிம்பிக் பதக்கத்துக்குப் பிறகு தான் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் தங்கம் வென்று வந்திருக்கிறார் சுஷில் குமார். இந்த ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என்று நம்பிக்கை.

இந்திய வில்வித்தை வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதி பெற்றது 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில்தான். இப்போது இரண்டாவது முறையாக நான்கு பேர் பங்கேற்கிறார்கள். இவர்களில் தீபிகா குமாரி மீது நம்பிக்கை வைக்கலாம். மகளிர் அணியின்மீதும் கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம்.

பேட்மிண்டனில் சைநா நேவால் மீது அபார நம்பிக்கை நமக்கு. கடந்த மூன்று மாதங்களுக்குள் ஸ்விஸ் ஓப்பன் கிராண்ட் பிரி, தாய்லாந்து ஓப்பன் கிராண்ட் பிரி, இந்தோனேசியா ஓப்பன் சூப்பர் சீரிஸ் ஆகிய மூன்றிலும் தங்கம் வென்றதால் இவர்மீது நம்பிக்கை வருவது நியாயம்தான். இரட்டையர் பிரிவுகளில் ஜ்வாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா, டிஜு ஆகியோரும் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள். எனவே பேட்மிண்டனில் குறைந்தது ஒரு பதக்கம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

டென்னிசில் சோமதேவ் தேவ்வர்மனுக்கு பயிற்சி போதாது என்று டென்னிஸ் குழுவின் தலைவரே கூறி விட்டார். பயஸ்-பூபதி குழப்படி வரலாறு காணாதது. இப்போது, இரட்டையர் பிரிவில் பூபதி-போபண்ணா ஜோடி, பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ்-சானியா மிர்சா ஜோடி. இவற்றில் பயஸ்-விஷ்ணுவர்த்தன் ஜோடிக்கு வாய்ப்பு இருப்பதாக யாருக்கும் நம்பிக்கை இல்லை. பூபதி-போபண்ணா ஜோடி மீது கொஞ்சம் நம்பிக்கை. பயஸ்-சானியா மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை.

தடகளப் போட்டிகளில் பலர் இருக்கிறார்கள். டின்டு லுகா, கிருஷ்ணா பூனியா, மயூகா ஜானி, சோனியா ச்சானு - இவர்களில் சோனியா ச்சானு மீது கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம். மற்றவர்களில் எவர் பதக்கம் கொண்டு வந்தாலும் மகிழ்ச்சிதான். முதல் எட்டு இடங்களில் ஓரிடம் பிடிப்பதே பெரிய விஷயம் அல்லவா...

ஜுடோ பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்கும் ஒரே பெண் கரிமா சவுத்ரி. மீரட்டைச் சேர்ந்த இவர் ஒலிம்பிக் தகுதி பெறுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அண்மையில் தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டியில் ஏழாவது இடம் பெற்றதால் ஒலிம்பிக் தகுதி பெற்றிருக்கிறார். உலகத் தர வரிசையில் 88ஆவது இடத்தில் இருக்கும் இவரின் தன்னம்பிக்கை அபாரமானது. "உலகக் கோப்பைப் போட்டியில் பெலாரஸ், ஆஸ்திரேலியா வீராங்கனைகளை நான் தோற்கடித்தேன். இவர்களும்தான் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறார்கள். 63 கிலோ பிரிவில் பங்கேற்கிற எல்லாருமே கிட்டத்தட்ட என் தரத்தில் இருப்பவர்கள்தான். எனக்கு பயமோ அதீத பதற்றமோ இல்லை. எதிராளிகளின் வீடியோக்களைப் பார்த்து அவர்களுடைய தந்திரங்களைப் புரிந்து கொண்டிருக்கிறேன். எடுத்தவுடனேயே தாக்குதலில் இறங்காமல் தாக்கும் தருணத்திற்குக் காத்திருக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். பதக்கத்துடன் திரும்புவேன்" என்று அபார நம்பிக்கையுடன் இருக்கிறார் கரிமா.

கடைசியாக ஒரு சிறப்புச் செய்தி. ஒலிம்பிக் கலைநிகழ்ச்சிகளுக்கு ஆசியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு இசைக்குழுக்களில் ஒன்று தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளதாம். சென்னையைச் சேர்ந்த ஸ்டக்காடோ என்னும் இசைக்குழுவின் இளைஞர்கள், ஜூலை 30, ஆகஸ்ட் 2 ஆகிய இரண்டு நாட்கள் ஒலிம்பிக் பூங்காவில் இசைக்க இருக்கிறார்கள் என்பதில் தமிழர்கள் பெருமைப்படலாம். ஆஹா... இசைக்கு மொழி ஏது... இசை எல்லை கடந்தது அல்லவா என்று எண்ணுபவர்கள் என்னைத் திட்டலாம்.

இறுதியாக, லண்டன் செல்லும்முன் சானியா கூறியதை நினைவுகூரலாம்.
"தங்கம், தங்கம் என்றே பேசிக்கொண்டிருக்கக் கூடாது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் எந்தவொரு விளையாட்டு வீரனுக்கும் இறுதி இலக்கு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பங்கேற்க இருக்கும் 10500 பேருக்கும் இதுதான் இலக்கு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் இல்லையா...? ரோஜர் பெடரர் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம்கூட வென்றதில்லை. அதற்காக அவர் குறைந்து விடுவாரா? பதக்கத்துக்கான ஒவ்வொருவரின் முயற்சியையும் வேறுபாடின்றி பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் கருத்து."

அருமையான வார்த்தைகள். விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்போம். வெற்றியோ தோல்வியோ ஒலிம்பிக்கை ரசிப்போம். 

பி.கு. என்ன இது... தலைப்புக்கும் கடைசிப் பத்திக்கும் சம்பந்தமே இல்லேயேன்னு உங்க மனசுக்குள்ள ஓடறது எனக்குக் கேக்குது. என்ன செய்ய... என்னதான் நம்பிக்கை இருந்தாலும், என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்... அதனால கூபர்டின் சொன்னதையும் மனசுல வச்சுக்கணும் - வெற்றி காண்பதல்ல, பங்கேற்பே முக்கியம்.


Sunday 15 July 2012

தமிழ்-இந்தி இலக்கிய உறவு


(தில்லித் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தில்லிகை இலக்கிய வட்டம் நடத்தும் மாதாந்திர இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் 14-7-2012 அன்று ஆற்றிய உரை. தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும் என்பது பொதுத் தலைப்பு. தமிழ்-இந்தி இலக்கிய உறவு என்பது எனக்குத் தரப்பட்ட தலைப்பு. தமிழும் இந்தியும் என்று மட்டுமே பேசினால், தமிழின் முன்னோடி மொழிபெயர்ப்பாளர்கள் பலரின் பெயர்கள் விடுபடும். இது பொதுத் தலைப்புக்கு துரோகமாக இருக்கும். எனவே இரண்டும் கலந்தே என் உரை அமைந்தது. அரைமணி நேர உரை என்பதால், நீளம் கருதி இரண்டு பகுதிகளாகத் தரப்படுகிறது. இது இரண்டாம் பகுதி. முதல்பகுதியைக் காண இங்கே சொடுக்கவும். நேரம் கருதி உரையில் சொல்லாமல் விடப்பட்ட விஷயங்களும் இதில் இருக்கும். வாப்பளித்த தில்லிகைக்கு - இப்பதிவின் படங்களுக்கும் சேர்த்து -  நன்றி.)


இந்தியிலிருந்து தமிழுக்கு வந்ததைப் பார்த்தால், சரஸ்வதி ராம்நாத் படைப்பாளியாகத் தொடங்கி, மொழிபெயர்ப்பாளராகப் புகழ் பெற்றவர். இந்தியிலிருந்து தமிழுக்கு பல நாவல்களை அளித்தவர். ஜெய் சோம்நாத், தர்பாரி ராகம், ராதையுமில்லை ருக்மணியுமில்லை ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. இந்தி வழியாக அசாமி, பஞ்சாபி, குஜராத்தி, வங்காளம், ராஜஸ்தானி, மணிப்புரி, ஒரிய மொழிகளின் இலக்கியங்களையும் தமிழுக்குத் தந்தார் அவர். நிர்மல் வர்மா, அஜித் கெளர், அம்ரிதா ப்ரீதம், மோகன் ராகேஷ் போன்ற இந்தியின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளையும் தமிழாக்கம் செய்தவர்.

சௌரிராஜன், எச். பாலசுப்பிரமணியன் இருவருமே தமிழிலிருந்து இந்திக்கும் இந்தியிலிருந்து தமிழுக்கும் ஏராளமான நூல்களைத் தந்திருக்கிறார்கள்.

சுருங்கச் சொன்னால், ஜைனேந்திர குமார், கிரிராஜ் கிஷோர், பீஷம் சாஹனி, விஷ்ணு பிரபாகர், முன்னர் குறிப்பிட்ட நிர்மல் வர்மா, மோகன் ராகேஷ் உள்ளிட்ட இந்தியின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவரின் நூல்களும் ஓரளவுக்கு தமிழில் வந்து விட்டன.

நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள மொழியாக்க நூல்களை நான் பட்டியலிடப்போவதில்லை. நீங்களே எளிதில் அறிய இயலும்.

முத்தையா மொழிபெயர்ப்பில் வால்காவிலிருந்து கங்கை வரை எனக்குத் தெரிந்து 25 பதிப்புகள் கண்டிருக்கிறது. மாஜினி மொழிபெயர்ப்பில் சிந்து முதல் கங்கை வரையும் பல பதிப்புகள் கண்டுள்ளது. இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் கிட்டத்தட்ட அனைத்துப் படைப்பாளிகளின் எழுத்துகளும் தமிழுக்கு வந்துள்ளன. ஆனால் தமிழிலிருந்து இந்திக்குச் சென்றவை மிகக் குறைவே.

இதில் பெரிதும் பங்காற்றியிருப்பது சாகித்ய அகாதமியும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனமும்தான். என்பிடி, ஆதான் பிரதான் - கொடுக்கல் வாங்கல் - என்ற வரிசையின்கீழ் ஒரு இந்திய மொழியிலிருந்து வேறு இந்திய மொழிகளுக்கு நூல்களை மொழியாக்கம் செய்தது. சாகித்ய அகாதமி விருது பெறுகிற படைப்புகள் அனைத்தையும் என்பிடி விருது பெற்ற மொழியைத் தவிர வேறு மொழிகளில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த வழக்கம் அறிவிப்புகள் இல்லாமலே கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.

சரஸ்வதி ராம்நாத் தமிழிலிருந்து அகிலன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அகிலன், நீல.பத்மநாபன், தி.ஜானகிராமன், பாவண்ணன், ஜெயமோகன், சுப்ரபாரதிமணியன், சங்கர நாராயணன் என பலருடைய படைப்புகளை இந்தியில் தந்தவர். கனிமொழி, ரவி.சுப்ரமணியன், மகுடேசுவரன் ஆகிய இளங்கவிஞர்களுடைய கவிதைகளையும் மொழிபெயர்த்திருப்பதாக அறிய வந்தேன்.

'மராத்தியில் நான் பெற்ற புகழைவிட, தமிழில் என் இலக்கியத்தை மொழி பெயர்த்து கா.ஸ்ரீ.ஸ்ரீ.பெற்ற புகழ் அதிகம். அதற்கு அவர் தகுதியானவருங்கூட ' என்று காண்டேகரே கூறிய கா,ஸ்ரீ.ஸ்ரீ. இந்தி இலக்கியவாதிகளின் தற்பெருமையைக் கண்டு பொருமிப்போய் ஏராளமான சிறுகதைகளையும் கட்டுரைகளையும் இந்திக்கு வழங்கினார். பாரதியின் தராசு கட்டுரைகளை இந்திக்குத் தந்திருக்கிறார். இந்தியச் சிறுகதைகளின் தொகுப்பில் கல்கி, புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, கு.ப.ரா, போன்றோர் படைப்புகள் இடம்பெறச் செய்தார்.

இந்தியிலிருந்தும் குஜராத்தியிலிருந்தும் தமிழுக்குத் தந்த ரா. வீழிநாதன், ஜெகசிற்பியனின் ஜீவகீதம், ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர, ராஜாஜியின் பஜகோவிந்தம், நா.பா.வின் சமுதாய வீதி, தி.ஜா.வின் வடிவேலு வாத்தியார், பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு, என்.சிதம்பர சுப்ரமணியத்தின் இதயகீதம், கல்கியின் அலை ஓசை உள்ளிட்ட மேலும் பல நூல்கள் இந்திக்கு அளித்திருக்கிறார்.

கு. சின்னப்பபாரதி, நீல. பத்மநாபன் உள்ளிட்ட அண்மை எழுத்தாளர்கள் சிலரின் பல நூல்கள் இந்தியில் வந்துள்ளன என்றால் அதற்குக் காரணம் இந்திப் பதிப்பாளர்களிடம் இருக்கும் ஆர்வம் அல்ல. ஆர்வமுள்ள மொழிபெயர்ப்பாளர்களும், தமிழக அரசின் ஒரு துறை தமிழ் நூல்களை இந்திக்கு அறிமுகம் செய்ய எழுத்தாளர்களுக்கு மானியம் தருவதும்தான். மணிமேகலை பிரசுரம் வளரும் எழுத்தாளர்களிடம் பணம் வாங்கி நூல்களை வெளியிடுவது போல அந்த மானியத்தை வாங்கிக் கொண்டு ராஜ்கமல் போன்ற பதிப்பகங்கள் அச்சிட்டு லாபம் பார்க்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஜெயகாந்தன் போன்றவர்களைத் தவிர மற்றவர்களைப் பற்றி வடக்கே அதிகம் தெரியாது.

தில்லியில் இருக்கும் பேராசிரியர் ஆர்.கே. சேத் அவர்களின் தலைமையில், தொழிலதிபர் மகாலிங்கம் அவர்களின் நிதியுதவியாலும் பாலசுப்பிரமணியன் உழைப்பாலும் திருவாசகம் உள்ளிட்ட பல சைவ சித்தாந்த நூல்கள் இந்தியில் வெளிவந்துள்ளன. சேத் உடல்நலம் குன்றியிருக்கிறார். பாலசுப்பிரமணியனும் பல நூல்களின் பணியில் இருக்கிறார். எனவே இதுபோன்ற நூல்கள் இந்தியில் இனி வெளிவரும் சாத்தியம் இல்லை.

சங்க இலக்கியங்கள் பதினெட்டையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்தியில் மொழிபெயர்த்துள்ளது.

திருக்குறள், பாரதியார் கவிதைகள், சைவ இலக்கியங்கள், கருணாநிதியின் ஒரே ரத்தம் உள்பட 24 நூல்களை இந்திக்குத் தந்திருக்கிறார் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட, சென்னை மாகாணக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த என். சுந்தரம்.

பேராசிரியர் நாச்சிமுத்து வழிகாட்டலில், தொல்காப்பியத்தை பாலசுப்பிரமணியன் இந்தியில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். எழுத்ததிகாரம் முடிந்து விட்டது. சொல்லதிகாரம் இறுதிநிலையில் உள்ளது.

91இல் இந்தியச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிடத் துவங்கிய கதா, தமிழின் புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சு.ரா., அசோகமித்திரன், இமயம் உள்பட சில நாவல்களையும் வெளியிட்டுள்ளது.

சின்னப்பபாரதி, ராஜம் கிருஷ்ணன், சு. சமுத்திரம், சூடாமணி, பிவிஆர், அகிலன், நா.பா., லட்சுமி, இரா. முருகன் என பலருடைய எழுத்துகளை இந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார் விஜயலட்சுமி சுந்தர்ராஜன் என்பவர்.

பட்டியல் முழுமையானதல்ல என்றாலும் இந்தியில் எப்படி தமிழ் நூல்கள் வெளி வந்துள்ளன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். எனவே, இப்போது  இதில் உள்ள சிக்கல்களை சற்றே பார்ப்போம்.

இலக்கிய விருது மட்டுமே வழங்கி வந்த சாகித்ய அகாதமி, மொழியாக்க விருதுகளையும் வழங்கத் துவங்கியது. இந்த விருது, இணைப்பு மொழிவழியாக இல்லாமல், இந்திய மொழிகளில் நேரடி மொழியாக்கத்துக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த விருதுகளில் பெரும்பாலான நூல்கள் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டவை என்பது சிறப்புச் செய்தி. அதாவது, தரமான நேரடி மொழிபெயர்ப்புகள் மற்ற பதிப்பகங்களால் வெளியிடப்படுவது மிகக் குறைவே என்பது தெரிகிறது. விருதுகளின் பட்டியல் இருக்கிறது. அதை நான் படிக்கப்போவதில்லை.

தமிழிலிருந்து இந்திக்கு வரவேண்டியவை என்று பட்டியலிடுவது எனக்குக் கடினம். இந்தியிலிருந்து தமிழுக்கு வர வேண்டிய எழுத்தாளர்கள் என்று எனக்குத் தோன்றும் சிலரை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழில் மொழியாக்கப்பதிப்புகள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தமிழில் இலட்சியவாத எழுத்துகளுக்கு பெரும் ஈர்ப்பு இருந்ததால் காண்டேகர் மிகவும் பிரபலம் ஆனார். அதே காலகட்டத்தில் இந்தியில் விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதுடன், தமிழுக்கு அறிமுகம் இல்லாத தேசப் பிரிவினையின் பாதிப்புகளையும் மையமாகக் கொண்டு பல படைப்புகள் வெளியாகியுள்ளன.

இன்றைய சமூகச் சூழலில், மதவாதம் புதிய முகத்துடன் ஊடுருவிக் கொண்டிருக்கிற நேரத்தில், இந்தக் கதைகளை தமிழுக்குத் தருவது அவசியம் என நான் கருதுகிறேன். உதாரணமாக, அண்மையில் ஞானபீட விருது பெற்ற அமர் காந்த், ஏற்கெனவே இந்த விருது பெற்ற மகாதேவி வர்மா, சுமித்ரநந்தன் பந்த், ஏராளமாக எழுதி 48 வயதுக்குள் மறைந்து போன ஜெயசங்கர் பிரசாத், நிராலா எனப்படும் சூரியகாந்த் திரிபாடி, இவர்களுடைய எழுத்துகள் எதுவும் தமிழில் வந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் எல்லாருமே கவிஞர்களாகவும் இருந்தவர்கள் என்பது சிறப்பு.

அந்தா யுக் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாடகத்தையும், சூரஜ் கா சாத்வான் கோடா என்னும் நாவலையும் அளித்த தரம்வீர் பாரதியின் நாவல்கள். ஹரிவன்ஷ் ராய் பச்சனின் கவிதைகள் என இன்னும் பலரது படைப்புகளை நாம் தமிழில் அறிய வேண்டியிருக்கிறது.

இவையெல்லாம் தமிழில் வருமா... வரக்கூடிய சாத்தியம் உண்டா... சாத்தியங்கள் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது. காரணம் ஒன்றல்ல, பல. நான் முன்னர் குறிப்பிட்ட பாரதி, சேநாபதி, குமாரசாமி, உள்ளிட்ட பலரும் பன்மொழி வித்தகர்கள். அவர்களுடைய நோக்கம் மொழியாக்கம் செய்து பொருள் சேர்க்க வேண்டும் என்பதாக மட்டும் இருக்கவில்லை. தான் சுவைத்தவற்றை தமிழர்க்குத் தரவேண்டும் என்ற ஆர்வம் காரணம். அதனால்தான் அவர்கள் பெயர்கள் நிலைத்து நிற்கின்றன. அத்துடன், மொழியாக்கம் செய்யும்போது தமிழுக்கு அறிமுகம் இல்லாதவற்றை அடிக்குறிப்புகளாக விளக்கினார்கள். அதற்காக சிரத்தை எடுத்துக்கொண்டார்கள்.

சான்றாக, ஹோம்கமிங் என்பது தாகூரின் கதை. சிறுவர் கதை என்றுதான் கூற வேண்டும். அதை மொழிபெயர்த்த பாரதி, வீடு திரும்புதல் என்றோ, வீடு சேருதல் என்றோ தலைப்பு வைக்கவில்லை. ரஜாக்காலம் என்று தலைப்பு வைத்தார். பண்பாட்டுரீதியாக தமிழர்களுக்கு அறிமுகமில்லாத செய்திகளுக்கு அடிக்குறிப்புகள் கொடுத்திருக்கிறார். கிரிபாலா என்ற கதையில், மொழிபெயர்ப்பாளரின் ஆட்சேபம் என்றேகூட ஒரு அடிக்குறிப்பு கொடுத்திருக்கிறார் என்கிறார் சலபதி. அதேபோல, கா.ஸ்ரீ.ஸ்ரீ. த.நா. சகோதரர்கள் உள்ளிட்டோர், தலைப்புகளை நேரடி மொழியாக்கம் செய்யவில்லை.

ஆனால் இன்று அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் மொழியாக்கம் செய்பவர்கள் குறைவு. போதாதற்கு, கல்வித்துறையில் மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. தமிழ்நாட்டிலேயே தமிழ்மீதான ஆர்வம் குறையும்போது பிறமொழிகளைக் கற்கும் ஆர்வம் இருக்கும் சாத்தியமும் இல்லை. எனவே வருங்காலத்தில் நேரடி மொழிபெயர்ப்புகள் இன்னும் குறையும் சாத்தியம்தான் இருக்கிறதே. அப்படியே ஆனாலும் அதன் தரம் குறைவாகவே இருக்கும்.

அடுத்த பிரச்சினை பதிப்பகங்கள். தமிழகத்தின் வர்த்தகப் பதிப்பகங்கள் பலவும் மொழியாக்க நூல்களில் கவனம் செலுத்துவதை அதிகரித்துள்ளன என முன்னர் குறிப்பிட்டேன். இந்த நூல்கள் அனைத்துமே இலக்கியங்களா - நல்ல இலக்கியங்களா என்பது பெரும் கேள்வி. உதாரணமாக, தமிழகத்தின் பிரபலமான ஒரு பத்திரிகை மலையாளத்திலிருந்து ஏராளமான குறுநாவல்களை வெளியிட்டுள்ளது. பெரும்பாலானவை வாசகனைக் கிளர்ச்சி அடையச்செய்கிற நாவல்கள். வாசகனை அடுத்த கட்டத்துக்கு இட்டுச்செல்கிற எதுவும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை.

பதிப்பகங்கள் எது விற்குமோ அதை மொழியாக்கம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். தொடங்கிய பணியை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும், முதலீடு முடங்கக்கூடாது என்பதுதான் அவர்களின் அக்கறையாக இருக்கும், அப்படித்தான் இருக்கிறது. அதனால்தான், மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு படைப்பை மீள்பார்வை செய்து செப்பனிடும் வழக்கத்தை எந்தப் பதிப்பகமும் பின்பற்றுவதில்லை. தன் மொழியாக்கம் எவ்வாறு செப்பனிடப்பட்டது என்பதை ஸ்ரீதரன் எழுதியதைப் படித்தது இங்கே நினைவு வருகிறது.

தனியார் பதிப்பகங்கள் மட்டுமல்ல, அரசு நிறுவனங்களான சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் கூட இப்போதெல்லாம் பிரதியை செப்பனிடும் பணியைச் செய்வதில்லை. அப்படியும் சில நல்ல மொழியாக்கங்கள் வருகின்றன என்றால் என்னைப் போன்றவர்களின் சிரத்தைதான் காரணம் என்பதை தற்பெருமை ஏதும் இல்லாமல் பொறுப்புடன் ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கமும் இல்லை. பதிப்பகங்களின் இந்தப் போக்கினால் யாரும் பாதிக்கப்படுவதாக கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. மொழியாக்கம் செய்தவருக்கு பணம் கிடைத்து விட்டது, அவருடைய தன்விவரக் குறிப்பில் இன்னொரு நூல் சேர்ந்து விட்டது, பதிப்பகத்துக்கு புத்தகம் வந்து விட்டது, வாசகனுக்கு படிக்க புத்தகம் கிடைத்து விட்டது. மொழியாக்கப் புள்ளிவிவரத்தில் இன்னொரு நூல் சேர்ந்து விட்டது.

மற்றொரு பிரச்சினை, இணைப்பு மொழியின் வாயிலாக மொழியாக்கம் செய்யப்படுவது. சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவர், கிட்டத்தட்ட வாரத்திற்கு ஒரு சிறுகதையை தமிழில் தருகிறார். அவரே மொழியாக்கம் செய்கிறாரா என்பதே எனக்கு சந்தேகம்தான். அதுவும், உருது, ஒரியா, பஞ்சாபி, இந்தி என பல்வேறு மொழிக்கதைகள். அத்தனையும் ஆங்கிலவழி மொழியாக்கம் செய்யப்பட்டவைதான். இருந்தாலும் ஆங்கிலவழி மொழியாக்கம் என்று அவர் குறிப்பிட்டதே இல்லை.

மொழிபெயர்ப்பாளன் மூலமொழியிலும் இலக்குமொழியிலும் புலமை பெற்றவனாக இருக்க வேண்டும் என்பது முக்கிய விதி. புலமை இருந்தால் மட்டும் போதாது, இரண்டுமொழிப் பண்பாடுகளையும் புரிந்தவனாக, புரியாதவற்றைக் கேட்டு அறிந்துகொள்ளத் தயங்காதவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் இன்று குறைவு.

தமிழுக்கும் இந்திக்கும் - பால - சுப்பிரமணியன் என பாராட்டப்படும் எச். பாலசுப்பிரமணியன் அவர்கள் ஏராளமான நூல்களை இரண்டு மொழிகளிலும் மொழியாக்கம் செய்திருக்கிறார். பணீஷ்வர்நாத் ரேணு சிறுகதைகள் நூல் மொழியாக்கத்துக்காக சாகித்ய அகாதமி விருதும் பெற்றிருக்கிறார். மலையாளத்திலிருந்தும் மொழியாக்கம் செய்தவர். வைரமுத்துவின் கவிதைகளை பிந்து சிந்து கீ ஓர் என இந்தியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சமஸ்கிருதமும் தெரியும். அவர் எந்த மொழியாக்கப் பணியை மேற்கொண்டாலும், பிரதியை எழுதும்போதே தனித்தாளில் தன் ஐயங்களை பக்க எண்களுடன் குறித்துக்கொள்வார். அந்தந்த மொழியினரிடம் தயங்காமல் சென்று தெளிவுபடுத்திக் கொள்வார். அதனால்தான் அவருடைய மொழியாக்கங்கள் சிறப்பாக அமைகின்றன.

இப்படி தனக்குத் தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்கும் மனப்பக்குவம் இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் பலரிடமும் இல்லை. நான் எதற்கு மற்றவனிடம் கேட்க வேண்டும் என்ற ஆணவம், கேட்டால் தன் மதிப்புக் குறைந்துவிடுமோ என்ற தயக்கம், கேட்க விரும்பினாலும் வாய்ப்பு இல்லாத சூழல் - இவையெல்லாம் சேர்ந்து மொழியாக்கத்தை சிதைத்து விடுகின்றன.

இன்னொரு முக்கியப் பிரச்சினை தமிழின் தனித்தன்மை. கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் திராவிட மொழிகள்தான் என்றாலும் வடமொழிச் சொற்கள் பலவற்றை தனதாக்கிக்கொண்ட மொழிகள் அவை. தமிழுக்கும் இந்திக்கும் உள்ள இலக்கண வேறுபாடு மிக அதிகம். தமிழிலும் பல தமிழ்கள் - செந்தமிழ், கொங்கு தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ். ஒவ்வொரு பகுதிக்கும் எத்தனையோ சொலவடைகள். அவற்றில் பலவற்றை மொழியாக்கம் செய்வது சிரமம் அல்ல, சாத்தியம்கூட இல்லை என்பதே உண்மை. சரியான புரிதல் இல்லாவிட்டால் மொழியாக்கம் தோற்றுப் போகும்.

சுவையான ஒரு உதாரணம் காட்டலாம். மகாத்மா காந்தியின் சிந்தனைகள் என்ற நூல். தமிழில் வெளியாக உள்ளது. அந்த நூலில் ஒரு இடத்தில் பீபி ஷான் சொன்னார் என்று இருந்தது. திருப்பித்திருப்பி வாசித்துப் பார்த்தும் புரியவில்லை. காந்தியின் ஆசிரமத்தில் பீபி என்று யாரும் இருந்ததாகத் தெரியவில்லையே என்னவாக இருக்கும் என்று குழம்பினோம். மூலத்தை சரிபார்த்தபோது - Bibishan என்று இருந்தது. அப்புறம்தான் புரிந்தது விபீஷணனை ஆங்கிலத்தில் பிபீஷன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அது புரியாமல் தமிழ் மொழிபெயர்ப்பாளர் பீபி ஷான் ஆக்கி விட்டார். இதுபோல பலநூறு உதாரணங்கள் என்னிடம் உண்டு. அதற்கெல்லாம் நேரமும் இல்லை, தேவையும் இல்லை.

மொழியாக்கம் செய்பவர்கள் மூலமொழி பேசப்படும் பகுதியில் வசித்தால் அந்த மொழியாக்கம் சிறப்பாக அமைகிறது. கிருஷ்ணமூர்த்தி கோல்கத்தாவில், பாவண்ணன் பெங்களூரில், பாலசுப்பிரமணியன் தில்லியில். தி.சா. ராஜு ராணுவத்தில் பணிபுரிந்ததால் பஞ்சாபில் இருந்து தமிழுக்குத் தந்தார். குஜராத்தியிலிருந்து யாரும் இல்லாததால்தான் இருக்கிற நூல்களிலேயே குறைவான நூல்கள் குஜராத்திலிருந்து வந்துள்ளன. அண்மையில் மறைந்த தி.சு. சதாசிவம் பெங்களூரில் வசித்து ஏராளமான நூல்களை தமிழுக்குத் தந்தவர். விஜயலட்சுமி சுந்தர்ராஜன் மத்தியப்பிரதேசத்தில் பிறந்து மகாராஷ்டிரத்தில் படித்து வளர்ந்தவர். ஒடியாவிலிருந்து யாரும் இருப்பதாகவே தெரியவில்லை. ஒரிய மொழியாக்கத்துக்காக சாகித்ய அகாதமியின் விருது பெற்ற இந்திரன் ஒரியக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார் என்பது மிகுந்த தேடலுக்குப் பிறகுதான் தெரிய வந்தது. தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் மாரியப்பன் அசாமிய நாவலை ஆங்கிலத்திலிருந்துதான் மொழிபெயர்த்தார். அஸாமியா அறிந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் முன்னர் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு ஜாம்பவான்கள் அனைவருமே படைப்புத்துறையில் இருந்தவர்கள். இருந்தாலும் மொழியாக்கமும் செய்திருக்கிறார்கள். அத்தகைய பழங்கால ஆசாமிகளுக்கு படைப்பு மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்ததே தவிர, தான் பெரிய எழுத்தாளன், மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது என்ற சிந்தனை இருக்கவில்லை.

சிறப்பான ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், நேஷனல் புக் டிரஸ்ட் பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஒரு நூல். ஆமையும் முயலும் என்ற சிறுவர் கதை. எல்லாரும் அறிந்த இந்தப் பழைய கதையை எழுதியவர்-மொழிபெயர்த்தவர்-சித்திரம் வரைந்தவர் பெயர்களைக் கேட்டால் நீங்கள் வியப்படைவீர்கள். கதைசொன்னவர் ஜாகீர் உசேன். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் குஷ்வந்த் சிங். அதற்கு சித்திரம் வரைந்தவர் எம்.எப். உசேன். இந்த மாபெரும் மனிதர்களுக்கு சிறுவர் கதைதானே என்ற எண்ணம் எழவில்லை. ஆனால் நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு மொழியாக்கம் என்பது கீழானதாகத் தோன்றுகிறது. அவர்களுடைய படைப்புகள் எல்லா மொழிகளிலும் வெளியாக வேண்டும் என்ற பேராசை மட்டும் இருக்கிறது. தான் மட்டும் எதையும் மொழியாக்கம் செய்யும் விருப்பம் இருப்பதில்லை.

இந்தப் பின்னணியில், ஓய்வு நேரங்களில் புத்தகங்களைப் படிக்கும் வழக்கம் மறைந்துபோய் செல்லிடப்பேசிகளின் ஒலிப்பான்களைக் காதில் செருகிக் கண்களை மூடிக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிற திருப்புமுனைக் காலகட்டத்தில் மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் வளப்படுத்தவும் என்ன செய்யலாம்....

முதலாவதாக, வாசிக்கும் வழக்கத்தை நம் குழந்தைகள் மனங்களில் விதைக்க வேண்டும். சுற்றிலும் உள்ள சூழலின் தாக்கத்தில் உள்ள குழந்தைகளை இவ்வாறு மாற்றுவது சற்று சிரமம்தான் என்றாலும், வாசிப்பை மட்டும் நேசிக்கக் கற்றுவிட்டால் அவர்களால் அதை நிறுத்த முடியாது. அடுத்து -இங்கே இந்த அரங்கில் இருக்கும் என்னையும் உங்களையும் போன்றவர்கள் நிறைய சாதிக்க முடியும். ஆனால் அதற்கான முனைப்பும் ஆர்வமும் நம்மிடம் இல்லை. சிலருக்கு ஆர்வம் இருக்கும், ஆனால் நம்மால் முடியுமா என்ற நம்பிக்கையின்மை. நம்மைப்போல ஒவ்வொரு மாநிலத்திலும் வசிக்கிற புலம்பெயர் தமிழர்கள் நினைத்தால் மொழியாக்கத் துறையை இன்னும் சிறப்பிக்க முடியும். புலம்பெயர்ந்த பகுதியில் பிறந்து வளரும் நம் குழந்தைகளிடம் இதை அதிகம் எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தில் பிறந்து, தமிழ் ஆர்வத்தோடு வளர்ந்து தில்லியில் வசிக்கிற நாம் சற்றே முனைப்புக் காட்டினால் இந்தியை நன்கு பயன்படுத்த முடியும். தமிழிலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்ய முடியும்.

நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற நிறுவனங்கள் சரியான மொழிபெயர்ப்பாளர்கள் கிடைக்காமல் தவிக்கின்றன. இதுதவிர தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் ஒன்றும் துவங்கியிருக்கிறது. அதன் இலக்குகள் பிரம்மாண்டமானவை. தமிழ் செம்மொழி ஆனபிறகு தமிழின் இலக்கியங்களை பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்ய மானியமும் கிடைக்கிறது. உதயம் சீனிவாசன் அண்மையில் திருக்குறளை கன்னடத்தில் மொழிபெயர்த்து அது நூலாக வெளிவர இருக்கிறது. இவை தவிர, தொழில்முறை மொழியாக்கப் பணிகளும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. சாகித்ய அகாதமி மொழியாக்க விருது மற்றும் திசை எட்டும் மொழியாக்க விருதுக்கான வாய்ப்புகளும் உண்டு. எனவே, மொழியாக்கப் பணிகளுக்கு இலக்கிய அங்கீகாரத்துடன் பொருளாதார ரீதியான லாபங்களும் உண்டு.

எனக்கு தாய்மொழி உருதுதான். சிறுவயதில் வீட்டில் உருது எழுதவும் படிக்கவும் கற்றவன்தான். ஆனால், ஊரில் நூலகத்தோடு ஏற்பட்ட உறவும், வாழ்க்கைச் சூழலும் தமிழோடு மட்டும் உறவை வலுப்படுத்தி விட்டது. இன்று உருது மொழியில் முதல் எழுத்து தவிர அட்சரம் தெரியாது. இதற்காக வருந்தாத நாளே கிடையாது. மொழியை இழப்பது சுலபம், கற்பது கடினம் என்பது புரிந்தபோது மிகவும் தாமதமாகி விட்டது. உருது தெரிந்திருந்தால் எத்தனை நூல்களை தமிழுக்குத் தந்திருக்கலாம், தமிழ் நூல்களை உருதுவுக்கு அறிமுகம் செய்திருக்கலாம் என்ற வருத்தம் அழுத்துகிறது.

இந்தியை நான் முறையாகப் பயின்றதில்லை. ஆனால் சுயமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டேன். இன்று இந்தியில் பிழைதிருத்தம் செய்யும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். தமிழ் எனக்கு சோறுபோடுகிறது என்று முன்னர் ஒருமுறை கூறினேன். இப்போது இந்தியும் எனக்கு சோறு போடுகிறது என்று பெருமையாகக் கூற முடியும். சிறிய நூல்களை மொழியாக்கம் செய்யும் அளவுக்குத் தேர்ச்சி உண்டு என்றாலும் நேரமின்மை தடையாக இருக்கிறது. இங்கே இருக்கிற யாரேனும் இந்திமொழி கற்றுக்கொண்டு மொழியாக்கம் செய்ய முன்வருவார்களே ஆனால் இயன்ற அளவுக்கு ஊக்கப்படுத்தத் தயாராக இருக்கிறேன்.

வடக்கே உள்ளவர்களில் பலருக்கு தெற்கே நான்கு மொழிகள் உள்ளன என்பதே தெரியாது. அவர்களைப் பொருத்தவரை எல்லாம் மதராசிதான். இவர்களில் பலருக்கும் இந்தி உசத்தி என்ற எண்ணமும் உண்டு. நீங்களெல்லாம் இந்தி கற்றுக் கொள்கிறீர்கள் என்றால் அது உங்கள் தேவை - தலைவிதி, எனக்கு தமிழ் கற்க வேண்டிய தேவை இல்லை என்ற சிந்தனை இங்கே உள்ளவர்களுக்கு அதிகம். எனவே இங்கே இருப்பவர்கள் தமிழ்ப் படைப்புகளை தமது மொழிகளில் பெயர்ப்பார்கள் என்று எவரும் கற்பனைகூடச் செய்யத் தேவையில்லை. தமிழ்ப் படைப்புகளை பிற மொழிகளுக்குத் தருவதானால் அதைத் தமிழர்கள்தான் செய்ய முடியும். ஆகவே, புலம்பெயர்ந்த காரணத்தால் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புள்ள நமக்கு இரட்டைப் பொறுப்பு இருக்கிறது. புரிந்து செயல்பட்டால் தமிழ் சிறக்கும்.




தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்


(தில்லித் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தில்லிகை இலக்கிய வட்டம் நடத்தும் மாதாந்திர இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் 14-7-2012 அன்று ஆற்றிய உரை. தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும் என்பது பொதுத் தலைப்பு. தமிழ்-இந்தி இலக்கிய உறவு என்பது எனக்குத் தரப்பட்ட தலைப்பு. தமிழும் இந்தியும் என்று மட்டுமே பேசினால், தமிழின் முன்னோடி மொழிபெயர்ப்பாளர்கள் பலரின் பெயர்கள் விடுபடும். இது பொதுத் தலைப்புக்கு துரோகமாக இருக்கும். எனவே இரண்டும் கலந்தே என் உரை அமைந்தது. அரைமணி நேர உரை என்பதால், நீளம் கருதி இரண்டு பகுதிகளாகத் தரப்படுகிறது. இது முதல் பகுதி. இரண்டாம் பகுதியைக் காண இங்கே சொடுக்கவும். நேரம் கருதி உரையில் சொல்லாமல் விடப்பட்ட விஷயங்களும் இதில் இருக்கும். வாப்பளித்த தில்லிகைக்கு - இப்பதிவின் படங்களுக்கும் சேர்த்து - நன்றி.)


தமிழும் பிற இந்தியமொழி இலக்கியங்களும் என்னும் தலைப்பை பேசுபொருளாக எடுத்துக்கொள்ளும்போது, எங்கே துவங்குவது என்ற கேள்வி முதலில் எழுகிறது. உடனே முதலில் நினைவுக்கு வருவது கம்பராமாயணம். அடுத்து நினைவுக்கு வருவது பாரதியின் பெயர். கூடவே, கம்பராமாயாணம் வடமொழி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பா, தழுவலா, புதுக் காப்பியமா என்ற சர்ச்சைக்குரிய கேள்விகளும் எழுந்து விடுகின்றன. அத்துடன், கம்பராமாயணத்திலிருந்து தொடங்குவது என்றால், கம்பர் காலத்தை 9ஆம் நூற்றாண்டிலிருந்து துவங்குவதா, பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து கணக்கிடுவதா என்ற கேள்வியும், அதற்குப் பிறகு சுமார் எட்டு-பத்து நூற்றாண்டுகள் தொடர்ச்சி இல்லாமல் போனதைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. காளிதாசன் தமிழைத் தழுவி எழுதினானா, தமிழர்கள் காளிதாசனைத் தழுவி எழுதினார்களா என்ற மற்றொரு சர்ச்சைக்குரிய கேள்வி பிறக்கிறது. வடமொழியில் முதன்முதலில் சிறப்பாகக் காவ்யாதர்சம் என்னும் அணியிலக்கணம் தொகுத்த தண்டி (கி.பி. 650-700) - தண்டியலங்காரம் இயற்றியவர் - தென்னாட்டவர் என்றால், திருக்குறள் ஏன் வடமொழிக்குச் செல்லாமல் போனது? கம்பருக்கு முன்பு சாகுந்தலமோ மகாபாரதமோ ஏன் தமிழுக்கு வராமல் போனது? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. அப்படி எல்லாம் அலசிப் பார்த்தாலும் அது தமிழும் வடமொழியும் என்ற அளவில்தான் இருக்குமே அல்லாமல் தமிழும் பிற இந்தியமொழிகளும் என்று ஆகாது.

தமிழையும் வடமொழியையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பிற இந்திய மொழிகள் எல்லாமே காலத்தால் இளையவை. எனவே, தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்குமான உறவும் கால அளவுகோலின்படிப் பார்த்தால் மிகக் குறைவு. எனவே, இந்தப் பேசுபொருளை கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் என்று வரையறுத்துக்கொள்வதே சரியாக இருக்கும் என்று கருதி, அதன் அடிப்படையில் என் உரை அமைகிறது.

மொழிகளுக்கு இடையிலான உறவின் மையமாக இருப்பது மொழியாக்கம். கல்வெட்டு, ஓலை, சீலை போன்ற வடிவங்களில் பதியப்பட்டும், வாய்மொழியாகவும் இலக்கியங்களின் பரிமாற்றம் இருந்தவரையில் மொழிகளுக்கு இடையிலான உறவுகள் ஒரு மட்டுக்குள்தான் இருந்திருக்க முடியும். ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சுக்கலை உருவாகி, அடுத்த நூற்றாண்டிலேயே இந்தியாவில் அறிமுகமாகி, பதினெட்டாம் நூற்றாண்டில் வேரூன்றியது. ஐரோப்பாவிலிருந்து வந்த இத்தொழில்நுட்பம் கடற்கரைப் பகுதிகளையே முதலில் எட்ட முடியும் என்பதால் தென்மாநிலங்கள் இதன் பயனை முதலில் பெற்றன. கேரளத்திலும் தமிழகத்திலும்தான் பெரும்பாலான அச்சகங்கள் உருவாயின. வேதாகமத்தை அச்சிடுவதில் துவங்கிய இத்தொழில்நுட்பம், மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் வளப்படுத்தவும் உதவியது.

இந்த விவரங்களைக் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது. இந்திய மொழி இலக்கியங்களின் பரிமாற்ற அளவுகளை ஆராயும்போது, பிற மொழிகளிலிருந்து வேறெந்த மொழிக்குச் சென்றதைவிடவும் தமிழுக்குத்தான் மிக அதிக படைப்புகள் வந்து சேர்ந்திருக்கின்றன என்றே எனக்குத் தெரிந்த பதிப்பு வரலாறு காட்டுகிறது. சான்றாக, 1941-50 ஆண்டுகளில் தமிழ் வெளியீடுகளில் 8.6 விழுக்காடு மொழியாக்க நூல்களாக இருந்திருக்கின்றன. 1951-70 காலகட்டத்தில் தமிழ்ப் பதிப்புலகில் 51 விழுக்காடு மொழியாக்கமாக இருந்தது என வியப்பூட்டும் தகவலை பதிவு செய்கிறார் அமரந்தா. இதை அச்சுக்கலைக்கு முன்னோடியாக தமிழகம் இருந்ததன் பின்விளைவாகக் கருதலாம் என்பது என் எண்ணம்.

தமிழ் இலக்கியம் குறித்துப் பேசுவதானாலும், தமிழ் குறித்துப் பேசுவதானாலும் பாரதியைத் தொடாமல் பேசவே முடியாது. அதிலும் மொழியாக்கம் குறித்துப் பேசும்போது பாரதியின் பாடலையும் பங்களிப்பையும் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்.
மொழியாக்கம் பண்பாடுகளிடையே பரிமாற்றத்தையும், சமூகங்களைப் பற்றிய புரிதலையும் உருவாக்குகிறது, வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு இனச் சமூகங்களுக்கு இடையே உறவுகளை உருவாக்குகிறது, வலுப்படுத்துகிறது, வளப்படுத்துகிறது எனப்பல மொழியாக்கப் பயன்களை முற்றமுழுக்க உணர்ந்திருந்த முன்னோடி பாரதி என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. நான் முன்னோடி என்று குறிப்பிடுவது தமிழ்ச்சூழலிலோ இந்தியச் சூழலிலோ மட்டுமல்ல. வானொலிகூட வந்திருக்காத அக்காலத்தில், அச்சு ஊடகங்கள் வாயிலாக மட்டுமே பிறமொழி இலக்கியங்களைப் பரிச்சயம் செய்து கொள்ளும் சாத்தியம் இருந்த பாரதியின் சமகாலத்திய உலகப்பெரும் படைப்பாளிகள் யாரேனும் மொழியாக்கத்தின் முக்கியத்துவம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்களா என்று இன்றைய நவீனத் தொழில்நுட்பம் கொண்டு தேடிப் பார்த்தால், மேலைநாட்டில் அப்படி யாரும் எழுதியதாகத் தெரியவல்லை. இலக்கியத்திலும் தத்துவத்திலும், அச்சுக்கலையிலும் முன்னோடிகளாக இருந்த சீனத்தில் இதுகுறித்து ஏதும் கூறப்பட்டிருக்கலாம். ஸ்ரீதரன் போன்றவர்கள் இதை ஆராய்ந்தால் தகவல்கள் கிடைக்கலாம்.

ஆக, மொழியாக்கத்தின்வழி பிறமொழிப் படைப்புகள் தமிழுக்கு வரவேண்டும், தமிழ்மொழிப் படைப்புகள் பிறமொழிகளை அடைய வேண்டும் எனக் கூறிய பாரதி அதைச் செய்தும் காட்டியவர். பாரதியே மொழியாக்கம் செய்தவை பற்றி இங்கே நான் குறிப்பிடத் தேவையில்லை.

பகவத் கீதையையும், பங்கிம் சந்திரர் எழுதிய வந்தே மாதரத்தையும் அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். தானே ஏராளமாக எழுதிக் குவித்த பாரதி, குறிப்பாக தாகூரின் பல கதைகளையும், கவிதைகளையும் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்திருக்கிறார். தாகூர் படைப்புகளின் மொழியாக்கங்கள் பற்றிய அருமையான ஒரு கட்டுரையை சலபதி எழுதியிருக்கிறார். பாரதி பின்பற்றிய மொழியாக்க உத்திகளும் குறிப்பிடத்தக்கவை. அதுகுறித்துப் பின்பு பார்ப்போம்.

இப்போது இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த பதிப்பகங்கள், மொழிபெயர்ப்பாளர்கள், படைப்புகள், பற்றிப் பார்ப்போம். இந்தப் பட்டியல் குறையுடையதாகவே இருக்கும் என்று கூறுவதில் தயக்கமோ வெட்கமோ எனக்கு இல்லை.

த.நா. சேநாபதி, த.நா. குமாரசாமி, கா.ஸ்ரீ.ஸ்ரீ, பாரதிதாசன், புதுமைப்பித்தன், க.நா.சு., கு.ப.ரா., எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு என்கிற நாராயணசாமி, தி.ஜ.ர., குமுதினி, சந்தானம், என ஏராளமான பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. மேலைக் கதைகளைத் தமிழுக்குத் தந்த புதுமைப்பித்தன், தழுவலை வெறுத்தவர், பாரதிதாசனின் புரட்சிக் கவி, பில்கணியத்தின் தழுவல்தானே என்று ஒரு கட்டுரையில் கூறுகிறார்.

18ஆம் நூற்றாண்டில்,  மராத்தி மூலத்திலிருந்து பஞ்ச தந்திரக் கதைகள் வீரமார்த்தாண்ட தேவரால் கவிதை வடிவில் மொழிபெயர்க்கப் பெற்றது. என இணையம் காட்டுகிறது.

முன்னர் குறிப்பிட்டதுபோல, 1950 முதல் 70 வரை கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்துப் பதிப்பகங்களும் மொழியாக்க நூல்களை வெளியிட்டன. அலயன்ஸ், பாரி நிலையம், நவயுக பிரசுராலயம், ஜோதி பதிப்பகம், சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஜெனரல் பப்ளிஷர்ஸ், கற்பக வித்யா பதிப்பகம், கலைமகள், மங்கள நூலகம், பாரதி பதிப்பகம், கவிதா பப்ளிகேஷன்ஸ், ஸ்டார், வாசகர் வட்டம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என மொழிபெயர்ப்புகளை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் நீளமானது. இரண்டரை ரூபாய், மூன்றரை ரூபாய் என மலிவு விலையில் பாரி நிலையமும் பூம்புகாரும் கே.ஏ. அப்பாசின் நூல்களை வெளியிட்டுள்ளன. அப்பாசின் தீவிர ரசிகனாக அனைத்து நூல்களையும் வாங்கியிருக்கிறேன்.

மொழியாக்க நூல்களை வெளியிடுவதில் முன்னோடிகளாக இருப்பவை சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள். சாகித்ய அகாதமி 1954இல் பிறந்தது, நேஷனல் புக் டிரஸ்ட் 1957இல் பிறந்தது. அதாவது, தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் ஏராளமாக வந்த பிறகு உருவானவை இவை. அரசுப் புள்ளிவிவரங்கள், பிரதமர்களின்-குடியரசுத் தலைவர்களின் உரைகள் போன்ற நூல்களை வெளியிட்டு வந்த தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பதிப்பகத் துறையும் இப்போது பலவகை நூல்களை வெளியிட்டு வருகிறது. தமிழ்ப் பதிப்புலகில் அண்மைக்காலத்தில் தரமான மற்றும் விவரமான வியாபாரப் பதிப்பகங்கள் ஏராளமான மொழியாக்க நூல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தப் போக்கு விரைவாக அதிகரித்தும் வருகிறது.

தமிழுக்கு வந்த பிறமொழிப் படைப்புகளைப் பார்க்கப்போனால், வங்கத்திலிருந்தே முதலில் வந்ததாகத் தெரிகிறது. பாரதியை முன்னரே குறிப்பிட்டேன். வ.வெ.சு. அய்யர், தாகூரின் கதைகளை மொழிபெயர்த்தார். தமிழின் முதல் சிறுகதை எனக் கருதப்படும் குளத்தங்கரை அரசமரம் தாகூரின் காடேர் கதா - படித்துறையின் கதை என்ற சிறுகதையின் தழுவல் எனக் கருதப்படுகிறது. இக்கதையில் பாதிக்குப்பாதி வடமொழிச் சொற்கள் விரவியிருப்பதைக் காணலாம்.

த.நா. சேநாபதி, வங்கத்திலிருந்து சரத்சந்திரரை தமிழில் பிரபலம் ஆக்கியவர். ஆசிரியப் பணியை விட்டு விட்டு, மஞ்சரி இதழில் ஆசிரியராக ஆனவர். மஞ்சரி சிறந்த மொழிபெயர்ப்பு இதழாக உருவானது. தாகூரின் நூல்களை வங்கத்திலிருந்து தமிழுக்குத் தந்தவர். பட்டியல் நீளமானது. அமர ஜோதி காந்திஜி என்ற நூலும், சிறுகதைகளும் இவரே எழுதியவை.

வங்கத்திலிருந்து மற்றவர் சேநாபதியின் சகோதரர் த.நா. குமாரசாமி - வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திரர், தாகூர், தாரா சங்கர் பானர்ஜி, நேதாஜி ஆகியோரை மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய சொந்தப் படைப்புகள் - ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்கள், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகள். சேநாபதி-குமாரசாமி இருவரும் சேர்ந்தும் வங்கத்திலிருந்து தமிழுக்கு அளித்தவை ஏராளம். தாகூரின் கிட்டத்தட்ட அனைத்து நாவல்களையும் சிறுகதைகளையும் தமிழுக்குத் தந்திருக்கிறார்கள்.

ஆர்.ஷண்முகசுந்தரம், தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பாந்தோபாத்யாய, சரத்சந்திர சட்டோபாத்யாயா, மாணிக் பந்த்யோபாத்யாய எழுதிய பல சிறப்பான மொழிபெயர்ப்புகளைத் தந்தவர். அழியாக் கோலம், மாயத் தாகம் ஆகியவை இவரே எழுதியவை.

இன்று வங்கத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து வங்கத்துக்கும் மொழியாக்கம் செய்து வருபவர்களில் முக்கியமானவர் - என்னுடைய பார்வையில் ஒரே ஒருவர் - சு. கிருஷ்ணமூர்த்தி. புதுக்கோட்டையில் பிறந்த இவர், கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். வங்கம், இந்தி, ஜெர்மன், ஆங்கிலம் அறிந்தவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோல்கத்தாவில் வசிப்பவர். வங்கத்திலிருந்தும் அஸாமியாவிலிருந்தும் 25க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழுக்குத் தந்தவர். சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்திலும், திருக்குறளை வங்கத்திலும் மொழியாக்கம் செய்தவர்.

நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே காண்டேகரின் எழுத்துகளின் அறிமுகம் கிடைத்தது. அதவும் மொழியாக்கம் என்றுகூடத் தெரியாமல் தமிழிலேயே எழுதப்பட்ட நூல்கள் என்றே அவற்றை வாசித்திருக்கிறேன். அவ்வளவு ஏன், காண்டேகர் எப்படி இருப்பார் என்றுகூட ஒரு உருவத்தை வரித்துக் கொண்டிருந்தேன். வாசகன் என்ற முறையில் என் மனதில் இருப்பதை இங்கே பகிர்ந்து கொள்வது கொஞ்சம் சுவையாக இருக்கும்.

அக்காலத்தில் காண்டேகர்-கண்டசாலா இரண்டு பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. ஆனால் இரண்டுமே பிரபலம். ஒலிப்பொருத்தம் காரணமாக இரண்டு பெயர்களும் எப்படியோ எனக்குப் பிடித்த பெயர்களாக ஆயின. கண்டசாலாவின் பாடல்கள் பலவற்றில் நடித்தவர் தமிழிலும் புகழ் பெற்ற நடிகர் ரங்கா ராவ் என்ற தெலுங்கர். கம்பீரமான உருவம் கொண்டவர். அன்புச் சகோதரர்கள் படத்தில் முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக என்ற கண்டசாலா பாடலுக்கு நடித்தவர் ரங்கா ராவ். முத்துக்கு முத்தாக பாடலைக் கேட்டு கொட்டகையில் கண்ணீர் சிந்தாமல் வந்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்தப்படத்தில் சகோதரர்கள் ஐந்து பேர். எங்கள் வீட்டில் நானும் சகோதரிகளுமாக ஐந்துபேர். ஆக, காண்டேகர்-கண்டசாலா-ரங்காராவ் முக்கோணத்தால், காண்டேகராக என் மனதில் பதிந்திருப்பது ரங்கா ராவ். இந்தச் சித்திரம் பொய்யாகி விடக்கூடாது என்பதற்காகவே, இந்தக் கட்டுரையை எழுதும்போதுகூட காண்டேகரின் படத்தை நான் தேடிப்பார்க்க விரும்பவில்லை. தலைப்புக்குப் பொருந்தாத உளறல்களை விட்டு மீண்டும் தலைப்புக்கு வருகிறேன்.

காண்டேகரை மராத்தியில் அறிந்தவர்களைவிட தமிழில் அறிந்தவர்கள் அதிகம் என்று காண்டேகரே கூறியதாக நினைவு. தமிழ் எனக்குப் புகழையும் இந்தி பணத்தையும் கொடுத்தது என்றார் காண்டேகர். அந்த அளவுக்கு அவருடைய படைப்புகளை தமிழுக்குத் தந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. 1913இல் பிறந்த கா.ஸ்ரீ. ஸ்ரீனிவாசாச்சாரியார், சமஸ்கிருதம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். கா.ஸ்ரீ.ஸ்ரீ என்ற புனைபெயரில் எழுதியவர். விந்தை என்னவென்றால், கா.ஸ்ரீ.ஸ்ரீ என்றதுமே நினைவுக்கு வருவது காண்டேகர்தானே தவிர, கா.ஸ்ரீ.ஸ்ரீ எழுதிய நாவல்களோ சிறுகதைகளோ அல்ல. கலைமகளில் பணியாற்றிய கா.ஸ்ரீ.ஸ்ரீ. பாரதியின் தராசு கட்டுரைகளையும், சைவ சித்தாந்தத்தையும, சொக்கநாதர் வெண்பாவையும் இந்திக்கு அளித்தார். இன்று கேலியாகப் பார்க்கப்படுகிற, அன்று மிகவும் மதிக்கப்பட்ட லட்சியவாத எழுத்துகளில் நா.பா., அகிலன், மு.வ. போன்றோருடன் சேர்த்து வாசிக்கப்பட்டவர் காண்டேகர். காரணமாக இருந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.

கே.ஏ. அப்பாசின் நாவல்களை பெரும்பாலும் முக்தார் என்பவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருடைய நாவல்கள் தமிழில் செம்மொழி நடையில்தான் எழுதப்பட்டுள்ளன.

மலையாளத்திலிருந்து தமிழுக்குத் தந்தவர்களில் முன்னோடி தூக்கு மர நிழலில் புகழ் சி.ஏ. பாலன். தகழியின் ஏணிப்படிகள், இரண்டு படி, கயிறு என்னும் மூன்று பாக நாவல், மலயாற்றூர் ராமகிருஷ்ணனின் பொன்னி, எஸ்.கே. பொற்றேகாடின் ஒரு கிராமத்தின் கதை, ராமன் நாயரின் வாழ மறந்தவள், கேசவ தேவின் நான்..., ஓர் அழகியின் சுயசரிதை ஆகிய மலையாள நூல்களை தமிழுக்குத் தந்தவர் சி.ஏ. பாலன். குஞ்ஞாலி மரைக்கார் மொழிபெயர்த்தவர்கள் சி.ஏ. பாலனும் கே. பத்மநாபன் நாயரும். தகழியின் தோட்டியின் மகன், செம்மீன் - சுந்தர ராமசாமி தமிழுக்குத் தந்திருக்கிறார்.

சுந்தர ராமசாமி நாவல்களையும், ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவலையும் மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மா தந்திருக்கிறார். அசோகமித்திரனின் தண்ணீர், பி.கே. சீனிவாசன் மொழியாக்கம் செய்தார். தோப்பில் முகமது மீரான் நாவல்களும் மலையாளத்தில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

இன்று குறிப்பிடப்பட வேண்டியவர் மொழிபெயர்ப்புக்கான காலாண்டிதழ் நடத்தி வரும் குறிஞ்சி வேலன். இளம்பாரதி என்று அறியப்படும் ருத்ர. துளசிதாஸ், குளச்சல் யூசுப்.

ஸ்ரீ ராம ரெட்டி என்பவர் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மணிமேகலை பெரியபுராணம் ஆகியவற்றை தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கின்றார்.

தெலுங்கில் கிருஷ்ணதேவராயர் எழுதியதை மு.கு. ஜகந்நாதராஜா தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார். சாகித்ய அகாதமியின் மொழியாக்கப் பரிசை தமிழில் முதலில் பெற்றவர் இவர்.

தமிழ் தெலுங்கு, ப்ராகிருதம், ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் பாண்டித்யமும் அறிவும் பெற்றிருந்த பன்மொழிப் புலவர் மு.க. ஜகன்னாத ராஜா. பல மொழிகளில் ஒன்றிலிருந்து மற்றதுக்கு மொழிபெயர்த்துள்ள நூல்கள் கிட்டத்தட்ட அறுபதுக்கு மேல் இருக்கும். பாரதி கவிதைகள், திருக்குறள், முத்தொள்ளாயிரம் புற நானூறு போன்ற பல தமிழிலிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு மொழிபெயர்த்துள்ளார். இவரைப் போல பல மொழிகளை அறிந்து மொழிபரிமாற்றம் செய்துள்ளவர்கள், ஒரு பாலமாகத் திகழ்ந்தவர்கள் தமிழில் இல்லை. என்கிறார் வெங்கட் சாமிநாதன்.

தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பா. பாலசுப்பிரமணியம் - பாப்பா என்று அழைக்கப்பட்டவர், தெலுங்கிலிருந்து பல நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரிப் பேராசிரியர் சுஹ்ராவர்தி என்பவர் திருக்குறளை உருதுவில் தந்திருக்கிறார். இது ஆங்கிலவழி மொழியாக்கம் எனத் தெரிகிறது. முக்தார் பத்ரி என்பவரும் உருதுவில் தந்திருக்கிறார். பேராசிரியர் யூசுப் கோகான் என்பவர் அரபியில் மொழியாக்கம் செய்திருப்பதாகத் தெரிகிறது. இதுவும் ஆங்கிலவழி மொழியாக்கம் என்றே கருத இடமிருக்கிறது.

திருக்குறளை பல மொழிகளிலும் பலரும் மொழிபெயர்த்துள்ளனர். ஆங்கிலத்தில் சுமார் 30, இந்தியில் 10, குஜராத்தி, ஒடியா, சௌராஷ்டிரா, ராஜஸ்தானி, பஞ்சாபியில் ஒவ்வொன்று, கன்னடத்தில் 5, மலையாளத்தில் 7, ஒடியாவில் 1, உருது 2, தெலுங்கு 2.

தமிழ்ச் சங்க நூலகத்தில் மட்டும் சுமார் ஐநூறு மொழியாக்க நூல்கள் தமிழில் இருக்கின்றன என்பதிலிருந்தே தமிழில் எத்தனை ஆயிரம் நூல்கள் வந்திருக்கும் என ஊகிக்கலாம்.

இந்தியிலிருந்து தமிழுக்கு வந்தவை, தமிழிலிருந்து இந்திக்குச் சென்றவை, மொழியாக்கத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.