Thursday 14 January 2016

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா 2016

எனது நூல்களின் வெளியீட்டுக்கும், வெள்ள நிவாரணப் பணிக்குமான தமிழகப் பயணம் முடிந்து திரும்பியதிலிருந்து புத்தகத் திருவிழா வேலைகளில் மூழ்கியிருந்ததால் வலைப்பூ பக்கம் வர இயலவில்லை. ஒவ்வொரு திருவிழா துவங்குவதற்கு முன்பும் விளக்கமாக எழுதுவது வழக்கம். அதையும் இந்த முறை செய்ய இயலவில்லை. வாசகர்கள் மன்னிப்பார்களாக.
 
புதத்கத் திருவிழாவை மைய அமைச்சர் ஸ்மிருதி இரானி 9ஆம் தேதி திறந்து வைத்தார். புது எழுத்து என்ற புதிய நூல்வரிசையின்கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நூல்களையும் வெளியிட்டார். இந்த வரிசையில் புது எழுத்து : தமிழ்ச் சிறுகதைகள் என்றொரு நூலும் வந்துள்ளது. ஜோ டி குருஸ் தொகுத்திருக்கிறார். விவரங்கள் அடுத்த பதிவில்.
  • திருவிழா நாட்கள் - 9ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை.
  • அனுமதி நேரம் - 11 மணி முதல் 8 மணி வரை.
  • நுழைவுக் கட்டணம் - சிறுவர்களுக்கு ரூ. 10, பெரியவர்களுக்கு ரூ. 20.
  • கிடைக்கும் இடம் - நுழைவுச் சீட்டுகள் பிரகதி மைதானின் எண் 1, 2 மற்றும் 10 ஆகிய வாயில்களில் மட்டுமே கிடைக்கும். 50 மெட்ரோ நிலையங்களிலும் கிடைக்கும்.
  • தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி நூல்கள் 12-12ஏ அரங்கில் இருக்கும். (மெட்ரோ ரயிலில் வந்தால், பிரகதி மைதானில் நுழைந்ததும் வலதுபுறம் இருப்பவை 12-12ஏ அரங்குகள்.)
  • குழந்தைகள் நூல்களுக்கான அரங்கம் - 14
  • குழந்தைகள் பெவிலியன் - 14ஆம் அரங்கு. இங்கே குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து நடைபெறும்.
  • ஆங்கில நூல்களின் அரங்குகள் - 6, 8, 9, 10, 11, 18
  • வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் அரங்கம் - 7
  • இந்தி எழுத்தாளர்கள் சந்திப்புக்கான மேடை - சாகித்ய மஞ்ச் 8ஆம் அரங்கில் இருக்கும்; லேகக் மஞ்ச் 12-12ஏ அரங்கில் இருக்கும். ஆங்கில எழுத்தாளர்கள் சந்திப்புக்கான மேடை - ஆதர்ஸ் கார்னர் 6 மற்றும் 10-11 அரங்குகளில்.
  • இந்த ஆண்டு சீனா சிறப்பு விருந்தினர் நாடு. 7ஆம் எண் அரங்கில் சீனா பெவிலியன் இருக்கிறது.
  • இந்த ஆண்டின் மையக் கருத்து - இந்தியாவின் பாரம்பரியப் பண்பாடு. இதற்கென சிறப்பு பெவிலியன் 7ஆம் அரங்கில் இருக்கிறது. பல்வேறு பிராந்தியங்களின் பண்பாட்டை சித்திரிக்கும் கருத்தரங்குகள், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கூச்சிப்புடி உள்ளிட்ட செவ்வியல் நடனங்கள், ஒலி-ஒளிக் காட்சிகள் என பல நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை நடந்து கொண்டே இருக்கும்.

 

இந்தத் திருவிழாவில் பங்கேற்க இருக்கும் தமிழ்ப் பதிப்பாளர்கள் 12ஏ அரங்கில் இடம்பெற்றிருக்கிறார்கள் -
  1. Bharathi Puthakalayam - 12-12A - S1/40
  2. New Century Book House (P) Ltd. - 12-12A - 95
  3. Ongaram Publications - 12-12A - 94
  4. Science Universe - 12-12A - 188

தமிழகத்திலிருந்து இதர சில ஆங்கிலப் பதிப்பாளர்களும், சிடி, டிவிடி விற்பனையாளர்களும் பங்கேற்கின்றனர். சுமார் ஆயிரம் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்கிறார்கள்.

திருவிழாவை ஒட்டி Fair Daily என்ற பெயரில் ஒரு நாளிதழ் வெளிவருகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் அந்தப் பணியில் நான் இருக்கிறேன். 7ஆம் அரங்கில், நேஷனல் புக் டிரஸ்ட் அலுவலகங்களின் பகுதியில் பத்திரிகை அலுவலகம் இருக்கும். அவசியம் என்னை சந்திக்க நினைப்பவர்கள் அங்கே வரலாம்.


வாசிப்பை நேசிப்போம்.