Saturday, 7 January 2017

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா 2017

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா பிரகதி மைதானில் இன்று துவங்குகிறது.


திருவிழா நாட்கள் - 7 முதல் 15 வரை
அனுமதி நேரம் - 11 மணி முதல் 8 மணி வரை.

நுழைவுக் கட்டணம் - சிறுவர்களுக்கு ரூ. 20, பெரியவர்களுக்கு ரூ. 30.
நுழைவுச் சீட்டுகள் பிரகதி மைதானின் எண் 1, 2, 5, 7, 10 ஆகிய வாயில்களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பிட்ட சில மெட்ரோ நிலையங்களிலும் கிடைக்கும். (என்னிடம் இலவச நுழைவுச்சீட்டுகள் சில உண்டு. தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ளலாம்.)

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி நூல்கள் 12-12ஏ அரங்கில் இருக்கும். (மெட்ரோ ரயிலில் வந்தால், பின்புற வாயிலில் பிரகதி மைதானில் நுழைந்ததும் வலதுபுறம் இருப்பவை 12-12ஏ அரங்குகள்.)


குழந்தைகள் நூல்களுக்கான அரங்கம் - 14
குழந்தைகள் பெவிலியன் - 14ஆம் அரங்கு. இங்கே குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து நடைபெறும்.

ஆங்கில நூல்களின் அரங்குகள் - 8, 9, 10, 11, 18, மற்றும் 18ஏ என்ற பெயரிடப்பட்ட கூடாரம்.
வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் அரங்கம் - 7

ஆங்கில எழுத்தாளர்கள் சந்திப்புக்கான மேடை - ஆதர்ஸ் கார்னர் 10-11 மற்றும் 18ஆம் அரங்குகளில் இருக்கும்.
இந்தி எழுத்தாளர்கள் சந்திப்புக்கான மேடை - சாகித்ய மஞ்ச் 8ஆம் அரங்கில் இருக்கும்; லேகக் மஞ்ச் 12-12ஏ அரங்கில் இருக்கும்.

இந்த ஆண்டின் மையக் கருத்து - மனுஷி. பெண்களின், பெண்களைப் பற்றிய படைப்புகள். இதற்கென சிறப்பு பெவிலியன் 7ஆம் அரங்கில் இருக்கிறது.

இந்தத் திருவிழாவில் என்சிபிஎச் தவிர தமிழ்ப் பதிப்பாளர்கள் யாரும் வரவில்லை -
New Century Book House (P) Ltd. - 12-12A கடை எண் 157
சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றின் மொழிப்பிரிவு அரங்கக் கடைகளில் சில தமிழ் நூல்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
சாகித்ய அகாதமி - 12-12A - கடை எண் 230-231
நேஷனல் புக் டிரஸ்ட் - 12-12A கடை எண் 45-68

மூன்று ஆண்டுகளில் புத்தகத் திருவிழா சுருங்கிக்கொண்டே வருகிறது. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் நாடு ஏதும் இல்லை. 1200 பதிப்பாளர்கள் பல்லாயிரம் கடைகளை பதிவு செய்ததெல்லாம் போய் இப்போது 800 பேர்தான் பங்கேற்கிறார்கள்.  

திருவிழாவை ஒட்டி Fair Daily என்ற பெயரில் ஒரு நாளிதழ் திருவிழா முடியும்வரை தினமும் வெளிவரும். வழக்கம்போல இந்த ஆண்டும் பத்திரிகை வடிவமைப்புப் பணியில் நான் இருக்கிறேன். 7ஆம் அரங்கில், நேஷனல் புக் டிரஸ்ட் அலுவலகங்களின் பகுதியில் பத்திரிகை அலுவலகம் இருக்கும். அவசியம் என்னை சந்திக்க நினைப்பவர்கள் அங்கே வரலாம்.


வாசிப்பை நேசிப்போம்.

Friday, 2 December 2016

இன்னுமொரு குளிர்காலம்

2014 குளிர்காலத்தில் பேஸ்புக் நண்பர்கள் மூலம் சுமார் 60 ஆயிரம் ரூபாய் திரட்டி சாலையோர மக்களுக்கு இலவச கம்பளிகளை விநியோகித்த படங்களில் இதுவும் ஒன்று
 • நிறுத்தப்பட்டு விட்டன மின்விசிறிகள். இனி அவை பனிக்கரடிகள் போல நீளுறக்கம் காணும் நான்கு மாதங்களுக்கு.
 • காணாமல் போய்விட்டன சமையலறைக் கரப்புகள்
 • பாலும் குழம்பும் மீந்துபோன பழசும் ப்ரிஜ்ஜில் வைக்க மறந்ததற்கான திட்டுகள் தேவைப்படாத காலைகள்.
 • காலை உறக்கம் கலைக்க மறுக்கும் கண்கள், கம்பளியை தலைக்குமேல் இழுத்துக்கொள்ளும் கைகள்.
 • எழுந்தபின்போ, எவ்வளவு உழைத்தாலும் களைத்துப்போகாத உடல்.
 • எரிச்சலைக்கிளப்புகின்றன எட்டு மணிக்கும் திறக்காத பால் கடைகள்.
 • ரத்தாகிய விமானங்கள் பற்றிய செய்திகளைத் தாங்கிவருகின்றன நாளிதழ்கள்.
 • அடுத்த தேநீருக்கு ஏங்க வைக்கிறது கண்முன் இருக்கும் காலிக் கோப்பை.
 • இறக்கி வைத்து விறைப்பாய் அமர்ந்தாலும் ஒரு கால் மேல் தானே ஏறிக்கொள்ளும் மற்றொரு கால்.
 • சுவை கூடிவிட்டது சூடான கடலைக்கு. கடலைத்தொலிகள் கணினியின் விசைப்பலகையில் உதிர்கின்றன. எழுத்துகள் விழ மறுக்கையில் குப்புறப்போட்டு அடித்துத் தட்டி ஊதி ஊதி அடுத்த தேநீர்.
 • பழைய ஸ்வெட்டர்கள் வெளியே வருகின்றன, வழக்கமில்லாத கம்பளிகள் முட்களாய் உறுத்துகின்றன.
 • குளிக்கும்போதும், பனியன் அணியாமல் வெளியே நடக்கையிலும் மார்புக்காம்புகளில் தீப்புண் எரிச்சல்.
 • எகிறப்போகும் ஸ்வெட்டர் செலவுகளை காய்கறிகளின் விலை இறக்கம் ஈடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு.
 • ஒவ்வொரு குளிர்காலத்தில் மட்டும் வேலைகள் எப்படி கூடி விடுகின்றன என்ற விடைதெரியாத புதிரின் பிறப்பு.
 • வீட்டின் அடையா நெடுங்கதவுகள் அடைக்கப்படவேண்டிய அவசியம். ஒவ்வொரு திறப்புக்கும் ஊசியாய் குத்தும் குளிர்காற்று.
 • புகைக்காதவனும் புகைவிட்டுக்கொண்டே நடக்ககிற சாலைகள்.
 • கூடுகிற கரியமிலவாயுவின் கவலையின்றி எரிக்கப்படக் காத்திருக்கின்றன சுள்ளிகளும் சருகுகளும்.
 • கடந்த ஆண்டுகளின் காலநிலைகளுடன் ஒப்பிடுகின்றன ஒன்றரைக்கோடி வாய்கள்.
 • எப்படா இந்த ஊரைவிட்டுப் போவோம்னு இருக்குவசனம் இருபத்தைந்தாவது ஆண்டுவிழா காணப்போகிறது
 • பிப்ரவரியில் குளிர் முடிந்துவிடுமே என்று இப்போதே எனக்குள் எழும் கவலை இருக்க முடியாது சாலையோர சாமானியர்களுக்கு.
பி.கு. - கடந்த ஆண்டும் பேஸ்புக் நண்பர்களின் நிதிதவியால் ஓரளவு கம்பளி விநியோகம் நடந்தேறியது. சேரிகளில் வசிக்கும் தமிழர்களுக்கே பெரும்பாலும் விநியோகம் செய்யப்பட்டது.

Thursday, 1 December 2016

செத்துச் செத்து விளையாடலாம்புழக்கத்தில் இருக்க வேண்டிய ரூபாய் நோட்டுகளை மக்கள் முடக்கி வைக்காமல் இருப்பதற்காக, வங்கிக் கணக்கில் பணம் செலுத்துங்கள், நீங்கள் எவ்வளவு தேவை என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அரசு கூறியுள்ளது. (வாரத்துக்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்ற வரம்பு இதற்குப் பொருந்தாது.) இது உண்மையா என்று ஏராளமானோர் சந்தேகம் கேட்டார்கள்.

இது உண்மை. ஆனால் சரியான புரிதல் தேவை.

பழைய 500 / 1000 ரூபாய் நோட்டுகளை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தியிருந்தால் இது பொருந்தாது. வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட உங்கள் சம்பளம் போன்ற வரவுகளுக்கும் இது பொருந்தாது. 29ஆம் தேதிக்கு முன்னர் உங்கள் கணக்கில் இருக்கிற பணத்துக்கும் இது பொருந்தாது. இதற்கெல்லாம் வாரம் 24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.

29ஆம் தேதிக்கு மேல், நடப்பு தேதியில் செல்லுபடியாகும் ரூபாய் நோட்டுகளை எவ்வளவு செலுத்தினீர்களோ அதை எடுக்கலாம். இதற்கு உச்ச வரம்பு கிடையாது.

அதாவது, புதிய 2000 / 500 ரூபாய் நோட்டுகளாக அல்லது 100 / 50 / 20 / 10 / 5 ரூபாய் நோட்டுகளாக எவ்வளவு செலுத்தியிருந்தாலும் அதை நீங்கள் எடுக்கலாம். நீங்கள் எடுக்கும்போது 2000 / 500 ரூபாய் நோட்டுகளாகத் தரப்படும்.
2. As it is impeding active circulation of currency notes, it has been decided, on careful consideration, to allow withdrawals of deposits made in current legal tender notes on or after November 29, 2016 beyond the current limits; preferably, available higher denominations bank notes of ₹ 2000 and ₹ 500 are to be issued for such withdrawals.


*

இந்த விளக்கம் பலருக்கும் புரியவில்லை. மேலும் சந்தேகம் வந்து கொண்டே இருந்தது. கேள்விகளும் தொடர்ந்தன. எனவே, எளிதாகப் புரிகிற வழக்குத் தமிழில் விளக்குகிறேன்.

பழைய 500 / 1000 ரூபாய் நோட்டுகளை மறந்துடுங்க. ஓகேவா?

நீங்க பேங்க்ல அல்லது ஏடிஎம்ல லைன்ல நின்னு உங்க அகவுன்ட்லிருந்து பணம் எடுத்தீங்க. அதாவது, புது 2000 ரூபாய் நோட்டு எடுத்தீங்க. அல்லது 100 ரூபாய் நோட்டு எடுத்தீங்க. (500 ரூபா நோட்டு எடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏன்னா, அது இன்னும் வரவே இல்லை.) ஓகேவா?

வாரத்துக்கு அதிகபட்சம் 24 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம்னு சொன்னாலும், 2000 / 10000 எடுக்கிறதுக்குள்ளயே கண்ணாமுழி திருகிப் போயிருக்கும். இருந்தாலும் ஏதோ கொஞ்சம் பணம் புது நோட்டா எடுத்திருப்பீங்க. ஓகேவா....?

இப்படி லைன்ல மணிக்கணக்குல நின்னு எடுத்த பணத்தைக் கொண்டுபோய், யார்கிட்டேயாவது கெஞ்சிக்கூத்தாடி சில்லறை நோட்டா மாத்தியிருப்பீங்க. ஓகேவா?

அங்கங்கே செலவு செஞ்சது போக 10 / 20 / 50 ரூபா நோட்டு சில்லறையா சேர்ந்திருக்கும். ஓகேவா?

இப்படி எல்லாரும் ஆளாளுக்கு கையில நோட்டுகளை வச்சுகிட்டா பணம் புழங்குமா? பணம்னா புழங்கிட்டே இருக்கணும்லா?

அதனாலே, லைன்ல நின்னு நீங்க எடுத்த 2000 ரூபா நோட்டு, 10 / 20 / 50 / 100 ரூபாய் நோட்டுகளை கையில் வச்சுக்காதீங்க. நேரா பேங்குக்குப் போயி லைன்ல நின்னு உங்க கணக்குல போட்டுடுங்க. ஓகேவா?

இப்படி 29ஆம் தேதிக்குப் பொறவு, ரொக்கமா கணக்குல நீங்க எவ்ளோ போட்டாலும் அதிலிருந்து எப்போ வேணாலும் எவ்ளோ வேணாலும் எடுக்கலாம். எடுக்கும்போது புது 500 / 2000 நோட்டுகளாகத் தருவாங்க. (வாரத்துக்கு 24 ஆயிரம்தான் எடுக்க முடியும்கிற விதி இதற்குப் பொருந்தாது.)

அதாவது,
லைன்ல நின்னு எடுத்த பணத்தை
லைன்ல நின்னு பேங்க்ல போடுங்க.
மறுபடி லைன்ல நின்னு எடுத்துக்குங்க.

மறுபடி எவன்கிட்டேயாவது கெஞ்சி சில்லறை மாத்துங்க.
மறுபடி லைன்ல நின்னு பேங்க்ல போடுங்க.
அப்புறம் லைன்ல நின்னு எடுத்துக்குங்க.

இவ்ளோதான். எவ்ளோ சிம்பிள் இல்லே?

லைன்ல நின்னு நின்னு வெளையாடலாம். பொழுது போறதே தெரியாதாக்கும். க்க்கும்!

Wednesday, 30 November 2016

எங்கே போயின 500 ரூபாய் நோட்டுகள்?ஐநூறு ரூபாய் நோட்டுகள் வெளிவந்துவிட்டன. இன்னும் நான்கைந்து நாட்களில் நிலைமை சீராகி விடும் என்று கூறப்பட்டு பத்து நாட்களுக்கு மேலாயிற்று. இன்னும் 500 ரூபாய் நோட்டுகளை பலரும் பார்க்கவே இல்லை.

இதற்கிடையில், என்னுடைய வங்கியில் 500 ரூபாய் நோட்டு கிடைத்தது, எந்த சிக்கலும் இல்லை, கூட்டமும் இல்லை என்று சிலர் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுவதைப் பார்க்கும்போது, அவை பெரும்பாலும் தனியார் வங்கிகள். ஆக, தனியார் வங்கிகளுக்கு மட்டும் முன்னுரிமை தரப்பட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள் போய்ச் சேருகின்றன. பொதுத்துறை வங்கிகளுக்குப் போகவில்லை என்ற சந்தேகம் எவருக்கும் எழும். வங்கி அதிகாரிகளுக்கும் இதே சந்தேகம் எழுந்து, அது பத்திரிகைச் செய்தி ஆகியுள்ளது.டீமானிடைசேஷனை ஆதரித்து எழுதுபவர்களுக்கு மட்டும் எப்படி 500 ரூபாய் நோட்டு எளிதாகக் கிடைக்கிறது? நண்பர் அருண் எழுதிய கற்பனை உரையாடல் :
 *
சார், புது 500 ரூவா நோட்டு கொஞ்சம் ரெடியாயிருக்கு. விநியோகத்துக்கு அனுப்பிரலாமா....?

சீக்கிரம் அனுப்பு. எங்கே அனுப்பறே?

2000 நோட்டே இன்னும் பற்றாக்குறையா இருக்குற எடத்துக்கெல்லாம் உடனே அனுப்புறேன்...

அங்க எதுக்கு அனுப்பனும் ??

உழவுக்கு, உரத்துக்கு, மளிகைக்கு, மருத்துவத்துக்கு இப்படி எல்லாத்துக்கும் பணமா தேவைப்படுற எல்லாரும் அங்கதான வரிசைல நிக்குறாங்க...?

தேவைப்படுறவனுக்கு பணத்தைக் குடுத்தா அதை செலவு பண்ணிட்டு அடுத்த செலவுக்கு மறுபடியும் பணமெடுக்க வரிசைல வந்து நிப்பான்... மீடியாக்காரன் மக்கள் அவதின்னு நியூஸ் போடுவான்.

அப்போ எங்கதான் அனுப்ப ...?

சிட்டில உள்ள ஐடி பார்க்ல உள்ள எல்லா ஏடிஎம்களையும் முதல்ல நிரப்ப சொல்லு... அதுக்கும் மேலே மிச்சமிருந்தா மத்த இடத்துக்கு அனுப்பு.

ஆனா அவங்கதான் மீல் பாஸ், பேடீஎம், கிரெடிட்/டெபிட் கார்டு, ஆன்லைன் பர்சைஸ், டோர் டெலிவரின்னு இருக்காங்களே, அவங்களுக்கு இவ்ளோ லிக்யூட் கேஷ் தேவைப்படாதே...?!

அது எனக்கும் தெரியும். அவசியம் உள்ளவனுக்கு காசு குடுத்தா செலவழிப்பான்.அவசியம் இல்லாதவனுக்கு குடுத்தா அத வச்சு செல்ஃபீ எடுத்து போஸ்ட் போடுவான்...அத பாத்துட்டு இன்னும் நாலு பெரு செல்ஃபீ போடுவான்....
பத்தலைனா நாலு தேசபக்தி கட்டெறும்பை பிடிச்சு சட்டைக்குள்ள விட்டோனு வையி... பொது ஜனம் வரமுடியாத, கேம்பஸ் உள்ளாடி இருக்குற பாங்குக்கு போய் பணம் வித்ட்ரா பண்ணிட்டு வந்து... நான் பத்து நிமிஷம் தான் லைன்ல நின்னேன் பணம் எடுத்துட்டு வந்துட்டேன்... நாட்டுக்காக ஒரு பத்து நிமிஷம் பொறுக்க முடியாதான்னு போஸ்ட் போடுவான்... லைக்கு ஷேர்ன்னு சும்மா பிச்சுக்கும்..... 
அடுத்த பேட்ச் பணம் வர வரைக்கும் நாமளும், பணம் இல்லைன்னு சொல்றதெல்லாம் பொய்... சமூக வலைத்தளத்துல பாருங்க.... எதிர்க் கட்சிகள் மிகை படுத்துறாங்கன்னு சொல்லி சமாளிச்சுட்டே போலாம்....
எது வேணா தீரலாம்... தேசபக்தி எறும்பு மட்டும் எப்பவும் ஸ்டாக் வச்சிருக்கணும்... புரிஞ்சுதா...

நல்லா புரிஞ்சுது சார்...!