Tuesday 4 June 2019

ஹீட் ஸ்டிரோக்


“அய்யோ... புயலடிக்கப் போகிறதாமே?” என்று பதறுவதற்குப் பதிலாக, “அய்யோ புயல் அந்தப் பக்கம் போயிடுச்சாமே...” என்று பதறுகிற நிலைமைக்கு நாம் வந்திருக்கிறோம். அந்த அளவுக்கு கோடையைப் பற்றியும், தண்ணீர் பற்றாக்குறை பற்றியும் பயந்து போயிருக்கிறோம். அச்சம் நியாயம்தான், ஆனால் அதற்குக் காரணமும் நாமேதான். குளிரைக்கூட சமாளித்து விடலாம். கோடையை சமாளிப்பது மிகக்கடினம்.

“...................... நகரில் வெயிலுக்கு ...... பேர் பலி
“70 வயது முதியவர் சுருண்டு விழுந்து சாவு
போன்ற செய்திகளை கோடை காலங்களில் பார்த்திருப்பீர்கள். வெயிலால் எப்படி உயிரிழப்பு நேரும்? எங்காவது நிழலில் உட்கார்ந்தால் போதாதா? இப்படியெல்லாம் கேள்விகள் தோன்றக்கூடும்.

முந்தைய ஒரு பதிவில் நீர்ச்சத்துக் குறைபாடு குறித்து எழுதியிருந்தேன். நாம் வெயிலில் அலைந்து கொண்டிருக்கிறோம், நீரிழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே புரியாமல் தொடர்ந்து அலைந்து, கடும் வெப்பத்துக்கு ஆளாகும்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதுதான் ஹீட் ஸ்டிரோக். இதற்கு மற்றொரு பெயர் சன் ஸ்டிரோக் (sunstroke). வெப்பத் தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு உடனடி உதவி கிடைக்காவிட்டால் உயிருக்கே ஆபத்துதான். வெயிலில் அலைபவர்களுக்கு மட்டுமல்ல, வீட்டுக்குள் இருப்பவர்களும்கூட பாதிக்கப்படலாம்.

ஹீட் ஸ்டிரோக் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களில் பெரும்பாலோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். ஆனாலும், அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை.


ஹீட் ஸ்டிரோக் ஏற்படும்போது மூளை அல்லது இதர உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். நீர்ச்சத்து இழப்புடன் அதிக வெப்பத்துக்கு ஆளாவதால் உடலின் வெப்பநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு பாதிக்கப்படுகிறது. உடலின் வெப்பநிலை 104 டிகிரிக்கும் மேலே போய்விடும். மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். வாந்தி, வலிப்பு, கிறுகிறுப்பு, மயக்கம், கோமா என பல நிலைகளும் ஏற்படலாம்.

ஹீட் ஸ்டிரோக்கின் அறிகுறிகள்
உடல் வெப்பம் அதிகரித்தல்
கடும் தலைவலி
கிறுகிறுப்பு, தலைசுற்றல்
சூடாக இருந்தாலும் வியர்ப்பதில்லை
தோல் உலர்ந்து போதல்
தசைகள் பலவீனம்
குமட்டல், வாந்தி
இதயப்படபடப்பு
மூச்சுத்திணறல்
குழப்ப மனநிலை, குளறுதல், கவனச்சிதைவு
வலிப்பு
மயக்கம்

யாருக்கேனும் ஹீட் ஸ்டிரோக் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது என்றால், உடனே மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக, இயன்ற முதலுதவிகளை செய்யலாம்.
குளிர்ச்சியான / நிழலான இடத்துக்கு மாற்றுதல்
ஆடைகளைத் தளர்த்தி விடுதல்
விசிறியால் காற்று வீசுதல்
ஈரத்துணியால் துடைத்தல்
உடல் வெப்ப நிலையைக் குறைத்தல்
முகத்தில் தண்ணீர் தெளித்தல்
கழுத்து, முதுகு, அக்குள் பகுதிகளில் ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுத்தல் (வயது முதிர்ந்தவர்களுக்கு, குழந்தைகளுக்கு ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை. அதுவே பாதகமாகவும் ஆகலாம்.)
மருத்துவ உதவி வருவதற்குத் தாமதம் ஆனால், இன்னும் என்ன முதலுதவி செய்யலாம் என்று மருத்துவமனையிடமே கேட்கலாம்.

வெயிலில் அலைபவர்களுக்கு மட்டுமே ஹீட் ஸ்டிரோக் ஏற்படும் என்பது இல்லை. அதிக காற்றோட்டம் இல்லாத வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு, போதுமான நீர் அருந்தாதவர்களுக்கு, அதிக மது அருந்தியவர்களுக்கும் ஏற்படலாம். 90 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் இருந்தால், வெப்பத்தால் பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதுவே நேரடி வெயிலுக்கு ஆளாகும்போது மேலும் 15 டிகிரி வெப்பம் ஏறிவிடும். எனவே, வெளியே செல்கிறவர்கள் அனல் காற்று நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டுச் செல்வது நல்லது.
காற்றோட்டமில்லாத, கான்கிரீட் கட்டிடங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
• 4 வயதுக்குக் குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ஹீட் ஸ்டிரோக் வாய்ப்புகள் அதிகம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

எப்படி காத்துக்கொள்வது
இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்
தலைக்கு தொப்பி அணியலாம்
எடை குறைவான, தளர்வான, ஆடைகள் அணியலாம்
நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். பழச்சாறுகள் சேர்க்கலாம்.
எலக்டிரால் போன்ற சத்து பானங்கள் அருந்தலாம்.
வெளியில் வெயிலில் அலையும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொடும் வெயிலில் வெளியே போகும் வேலைகளை ஒத்திப்போடலாம்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் பானங்கள் அருந்தலாம்.
சிறுநீரின் நிறத்தை கவனியுங்கள்.
காபி / மதுபானங்கள் தவிர்க்கவும்.
சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
இதயம், கிட்னி, ஈரல் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள், வலிப்பு உள்ளவர்கள், உணவுக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள், மருத்துவரின் பரிந்துரைப்படிதான் பானங்களை அருந்த வேண்டும்.

நீர்ச்சத்துக் குறைபாட்டுக்கு என்ன முன்னெச்சரிக்கைகள் உண்டோ அவை இதற்கும் தேவை.

நன்றி - www.webmd.com

நீர்ச்சத்துக் குறைபாடு – டீஹைடிரேஷன்


கோடை வந்துவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் சொல்லப்படுவதுபோல, “போன வருசத்தைவிட இந்த வருசம் வெயில் ரொம்ப சாஸ்திஎன்று ஒவ்வொரு வாயும் ஒருமுறையாவது சொல்லும். (அதெல்லாம் கிடையாது, வயதாகி விட்டதால் அப்படித் தோன்றுகிறது என்று சொன்ன மாமேதை நினைவும் இந்த நேரத்தில் வந்து தொலைக்கிறது.)

கோடையில் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும், குளிர்ச்சியான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத விஷயங்கள் அல்ல. ஆனால் பெரும்பாலும் யாரும் சரியாகச் செய்யாத விஷயங்கள். டீஹைடிரேஷன் எனப்படும் நீர்ச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படாதவர்கள் மிகவும் குறைவு. எனவேதான், எப்படியெல்லாம் நாம் தவறிழைக்காமல் தப்பிக்கலாம் என்ற உதவிக்குறிப்புகளுடன் இந்தப்பதிவு.

நீர்ச்சத்துக் குறைபாடு என்றால் என்ன?
மனித உடலில் சராசரியாக 50-65 விழுக்காடு நீராக இருக்கிறது என்கிறது அறிவியல். உடலுக்குத் தேவையான நீரின் அளவு குறைவதுதான் நீர்ச்சத்துக் குறைபாடு அல்லது, டீஹைடிரேஷன். உடலில் எவ்வளவு நீர் குறைந்தது என்பதைப்பொறுத்து டீஹைடிரேஷன் மிதமாக, அல்லது கடுமையாக இருக்கும்.

உடலிலிருக்கும் நீர் பல விதங்களில் வியர்வை, சிறுநீர், மலம் போன்ற வழிகளில் வெளியேறுகிறது. எச்சில், கண்ணீர் போன்ற வழிகளிலும்கூட நீர் வெளியேறுகிறது. நாம் உண்ணும் உணவுகள், அருந்தும் பானங்கள் போன்றவற்றால் இழப்பை ஈடு செய்கிறோம். எவ்வளவு நீர் வெளியேறுகிறதோ அதைவிடக் குறைவாக எடுத்துக் கொள்கிறோம் என்றால், டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. (கடுமையான வயிற்றுப்போக்கினாலும் டீஹைடிரேஷன் ஏற்படும். என்றாலும் இந்தக் கட்டுரையில் கோடையின் தாக்கம் பற்றியே பார்க்கிறோம்.)

நீரிழப்பு எப்படியெல்லாம் ஏற்படக்கூடும்?
காய்ச்சல்
வயிற்றுப்போக்கு
வாந்தி
அதிகமாக வியர்த்தல்
அதிகமாக சிறுநீர் கழிதல்
சர்க்கரை நோயாளிகளின் நீரிழிவு

நீரிழப்பு ஏற்படுவதை நாம் பொதுவாக கவனிக்காமல் விட்டு விடுவோம். வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது தண்ணீர் குடிக்க மறந்து விடுவோம். தாகம் இருப்பதே உணராமல் இருப்போம். தொண்டைக்கரகரப்பு அல்லது வாய்ப்புண் அல்லது வயிற்றுக் கோளாறு இருக்கும்போது குடிக்கவே தோன்றாது. வெளியில் அலைபவர்களுக்கு மட்டுமல்ல, வீட்டுக்கு உள்ளேயே வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடும்.

டீஹைடிரேஷன் அறிகுறிகள் என்ன?
அது மிதமாக அல்லது கடுமையாக இருப்பதைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும்.
தலைவலி
தாகம்
வாய் / உதடுகள் உலர்ந்து போவது
சிறுநீர் குறைந்து விடுவது
சிறுநீர் மஞ்சளாக இருப்பது
தசைகளில் வலி
தோல் உலர்ந்து போவது
கிறுகிறுப்பு / தலைசுற்றல்
இதயத்துடிப்பு தாறுமாறாக இருத்தல்
மூச்சிரைப்பு / மூச்சிளைப்பு
கண்களில் எரிச்சல், கண்கள் சிவத்தல்
உறக்கமின்மை, எரிச்சல்
மயக்கம்

பெரியவர்கள் இதுபோன்ற அறிகுறிகளைப் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளால் சொல்ல இயலாது. எனவே, நாம்தான் கவனமாகப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான அறிகுறிகள்
வாயும் நாக்கும் உலர்ந்திருத்தல்
அழும்போது கண்ணீர் வராது
கண்கள் சிவத்தல்
கண்கள் குழிந்து போதல்
உறக்கமின்மை, ஆற்றலிழப்பு
எரிச்சலடைதல்

குழந்தைகள் வீட்டில் அடங்காமல் வெளியே விளையாடிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும். அவர்கள் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை நாம்தான் கவனிக்க வேண்டும்.

நம் கிராமப்பகுதிகளில் யார் வீட்டுக்குப் போனாலும் முதலில் தண்ணீர் தருவார்கள். நகர்ப்புறங்களில் அந்தப்பழக்கம் அருகி வருகிறது. தில்லியில் வடக்கத்தியர்களின் எந்த வீட்டுக்குப் போனாலும் முதலில் தண்ணீர் தரும் பழக்கம் தொடர்கிறது.

டீஹைடிரேஷனுக்கு தனி சிகிச்சை ஏதும் தேவையில்லை. ரீஹைடிரேஷன் செய்தால் போதும் அதாவது, மறுபடி நீரேற்றினால் போதும்.

டீஹைடிரேஷன் ஆகாமல் காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
நாளுக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்தியாக வேண்டும். அவரவர் உடலையும் வசிக்கும் பகுதியையும் பொறுத்து 3 / 4 லிட்டரும் தேவைப்படலாம்.
1 லிட்டர் என்பது சுமார் 34 அவுன்ஸ்

வெளியில் போகும்போது எப்போதும் கையில் தண்ணீர் பாட்டில் வைத்திருங்கள். கைவசம் நீர் இல்லை என்பதாலேயே தாகம் இருந்தாலும் குடிக்காமல் தவிர்ப்பவர்கள் பலர். (தில்லியில் இந்தக்கால இளைஞர்களைத்தவிர பெரும்பாலோர் வெளியே போகும்போது தண்ணீர் எடுத்துக்கொண்டுதான் புறப்படுவார்கள்.)
தாகம் எடுப்பதற்கு முன்பே தண்ணீர் அருந்த வேண்டும்.
தண்ணீர் மட்டுமல்ல, காபி / தேநீர், புட்டி பானங்கள், உண்ணும் பொருட்கள் ஆகியவற்றின் மூலமும் நீர் கிடைக்கிறது. ஆனாலும் தண்ணீர்தான் சிறந்தது என்கிறார்கள்.
வெள்ளரி, தர்பூசணி, நுங்கு, இளநீர், கிர்ணிப்பழம் / முலாம்பழம், வெள்ளரிப்பழம் கோடையில் கிடைப்பது இயற்கை நமக்குத் தரும் வரம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மார்க்கெட்டிங், டெலிவரி போன்ற ஊர்சுற்றும் வேலைகளில் இருப்பவர்கள் எப்போதும் கைவசம் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். போகிற இடங்களில் எங்கே தண்ணீர் கிடைத்தாலும் குடித்து, நிரப்பிக்கொள்ளுங்கள்.
வீட்டுக்கு வரும் டெலிவரி ஆட்கள், கூரியர் ஆட்கள், அஞ்சல் துறையினர், மின்சாரப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு குடிக்கத் தண்ணீர் தருவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
சாலையோர வீடுகளில் வசிப்பவர்கள், இயலுமானால், வீட்டுக்கு வெளியே பானையில் தண்ணீர் நிரப்பி வையுங்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு டீஹைடிரேஷன் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிகப்படியாக சிறுநீரை வெளியேற்ற வேண்டும். அதிக தண்ணீர் அருந்தவில்லை என்றாலும் குளுக்கோஸை வெளியேற்ற, உடலில் உள்ள நீரை சிறுநீரகம் எடுத்துக்கொள்ளும். எனவே, அதிக குளுக்கோஸ் இருந்தால் அதிக திரவம் தேவைப்படும். அதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும். எவ்வளவு அருந்தலாம் என்று சந்தேகம் உள்ள சர்க்கரை நோயாளிகள், தமது மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது.

கடுமையான நீர்ச்சத்துக் குறைபாடு எற்படும்போது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இதைத்தான் ஹீட் ஸ்டிரோக் (heat stroke) என்கிறார்கள். இதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி - www.webmd.com