Saturday 20 August 2016

சிந்து

தந்தை ரமணா, தாயார் விஜயா. இருவரும் வாலிபால் விளையாட்டு வீர்ர்களாக இருந்தவர்கள். 1995 ஜூலை 5ஆம் தேதி இவர்களுக்குப் பிறந்தவர் சிந்து. தந்தை ரமணா அர்ஜுனா விருது பெற்றவர். பெற்றோர் வாலிபால் ஆர்வம் கொண்டவர்கள் என்றாலும், சிந்து பேட்மின்டனை தேர்வு செய்தார். 8 வயதில் ஆடத் தொடங்கினார். இவருடைய ஆதர்சம் கோபிசந்த்.

முதலில் செகந்திராபாதில் இந்திய ரயில்வே பேட்மின்டன் மைதானத்தில் மெஹபூப் அலி என்பவரிடம் விளையாடக் கற்றார். பிறகு கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தார். பயிற்சிக்காக தினமும் வீட்டிலிருந்து 56 கிமீ பயணம் செய்வார். கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தபிறகு சிறிதும் பெரிதுமாக வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார்.
• 10 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் செர்வோ ஆல் இண்டியா ரேங்கிங் சாம்பியன்ஷிப்.
அம்புஜா சிமென்ட் ஆல் இண்டியா ரேங்கிங்கில் ஒற்றையர் பிரிவில் சேம்பியன்.
• 13 வயதுக்குட்ட பிரிவில் சப்-ஜூனியர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்.
கிருஷ்ணா கைதான் ஆல் இண்டியா டோர்னமென்ட் சாம்பியன்.
ஐஓசி ஆல் இண்டியா ரேங்கிங் சாம்பியன்
தேசிய சப் ஜூனியர் சாம்பியன்
• 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 51ஆவது நேஷனல் ஸ்கூல் கேம்ஸில் தங்கம்.

அடுத்து வந்தன பன்னாட்டுப் போட்டிகளில் வெற்றிகள்.
கொழும்புவில் 2009 சப் ஜூனியர் ஆசியன் பேட்மின்டனில் வெண்கலம்.
• 2010இல் ஈரான் ஃபஜர் இன்டர்நேஷனல் பேட்மின்டன் போட்டியில் வெள்ளி.
• 2010 ஜூனியர் வேர்ல்ட் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிவரை எட்டினார். உபேர் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்.
• 2012இல் ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப்பில் தங்கம்.
• 2012இல் லி நிங் சீனா மாஸ்டர் சூப்பர் சீரிஸ் போட்டியில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற லி சுயுருயியை வென்று அரையிறுதியை எட்டினார்.
ஸ்ரீநகரில் தேசிய பேட்மின்டன் போட்டியில் சயாலி கோகலேயிடம் தோல்வி கண்டார். அதற்கு முந்தைய சீனா ஓப்பன் போட்டியின் காயம் பட்டதுதான் தோல்விக்குக் காரணம் என்பது பின்னர் தெரிய வந்த்து. எனவே வேர்ல்ட் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவில்லை.
• 2012இல் சையத் மோடி இண்டியா கிராண்ட் பிரி போட்டியில் இரண்டாம் இடம்.
• 2013இல் மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மின்டனில் சாம்பியன். இதுதான் சிந்துவின் முதல் கிராண்ட் பிரி வெற்றியாகும்.
• 2013 வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம். பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
• 2013 மகாவ் ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில் சாம்பியன்.
• 2014இல் கிளாஸ்கோ காமன்வெல்த் கேம்ஸ் போட்டியில் அரையிறுதி வரை எட்டி தோல்வி கண்டார்.
• 2014 மகாவ் ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில் சாம்பியன்.
• 2015 டென்மார்க் ஓப்பன் போட்டியில் இறுதிவரை எட்டினார்.
• 2015 மகாவ் ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில் சாம்பியன். (தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சாம்பியன்.)
• 2016இல் மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரி போட்டியில் சாம்பியன்.

ஆக, ஆறு சர்வதேசப் போட்டிகளில் சாம்பியன் பட்டமும், ஐந்து சர்வதேசப் போட்டிகளில் இரண்டாம் இடமும் பெற்றார். 
2014இல் இந்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றார். 2015இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

இப்போது ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றில், கனடாவின் மிஷெல் லி-யை தோற்கடித்தார் (19-21, 21-15, 21-17). அடுத்த தகுதிச் சுற்றில் ஹங்கேரியின் லாரா சரோசியை இரண்டு செட்களில் (21-4, 21-9) தோற்கடித்தார். முன் காலிறுதியில் தைபேயின் தாய்-சு யிங்-கை இரண்டுசெட்களில் (21-13,21-15) தோற்கடித்தார். காலிறுதில் சீனத்தின் வாங் யிஹானை இரண்டுசெட்களில் (22-20, 21-19) தோற்கடித்தார். நேற்று அரையிறுதியில் ஜப்பானின் நொசோமியை இரண்டுசெட்களில் (21-19, 21-10) தோற்கடித்தார்.

இன்று இறுதிப்போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த கரோலினா மரியாவுடன் மோத இருக்கிறார். முந்தைய போட்டிகளில் பெரும்பாலும் இரண்டு செட்களில் வெற்றி பெற்றிருக்கிறார் சிந்து. ஆனால் 19 சர்வதேசப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற கரோலினாவை வெல்வது அவ்வளவு எளிதல்ல. (சாய்னாவை 3 சர்வதேசப் போட்டிகளில் வென்றவர் கரோலினா. படத்தில் கறுப்பு உடை அணிந்திருப்பவர்.) சர்வதேசத் தர வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் கரோலினா, பத்தாவது இடத்தில் இருப்பவர் சிந்து.


வெற்றி-தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் சிந்து தன் திறமையை வெளிப்படுத்த வாழ்த்துவோம்.

*

மேலே எழுதியிருப்பது இறுதிப்போட்டிக்கு முன்னர் எழுதியது. எதிர்பார்த்தது போலவே இறுதிப்போட்டி கடுமையாக இருந்தது. முதல் செட்டை சிந்து வெல்ல, இரண்டாவது செட்டை கரோலினா வெல்ல, அப்போதே முடிவு தெரிந்து விட்டது. கரோலினா தங்கம் வென்றார், சிந்து வெள்ளியை வென்றார்.

*

இந்தியா ஓப்பன் பேட்மிண்டன் போட்டிகள் தில்லியில் நடைபெற்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து காலிறுதியை எட்டி, தோல்வி கண்டு வெளியேறினார். ஆனாலும், இந்தியா ஓப்பனில் காலிறுதியை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. ஆனால் இதே சிந்து, அடுத்து பங்கேற்றது மலேசியா ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில். இதில் அபாரமாக முன்னேறி, இந்த மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரின் ஜுவான் கு-வைத் தோற்கடித்து முதல் கிராண்ட் பிரி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஹைதராபாதிலிருந்து வந்திருக்கும் இந்த 17 வயது நட்சத்திரம், பேட்மின்டனில் மற்றொரு நம்பிக்கையாகத் திகழ்கிறார்.
*
மேலே இருப்பது, சுமார் 25 ஆண்டுகளாக வானொலியில் வழங்கி வந்த ஆட்டக்களம் நிகழ்ச்சியில் 7-5-2013 அன்று நான் சொன்னது.


நம்பிக்கையை நிறைவேற்றிய சிந்துவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 

Friday 5 August 2016

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றப்படும் என்பதில் எந்தத் தடங்கலும் இல்லை. இதைப்பற்றி எல்லாரும் ஆஹா ஓஹோ என்று போற்றுகிறார்களே... இதனால் நமக்கு என்ன பயன் என்று புரிகிற வகையில் எழுதுங்களேன் என்று நண்பர்கள் கேட்டார்கள்.

இது கொஞ்சம் குழப்படியான விஷயம். இந்தியாவில் இதுவரை வழக்கில் இருக்கும் வரிகள் குறித்துத் தெரிந்து கொள்ளாமல் ஜிஎஸ்டி குறித்து புரிந்து கொள்ள முடியாது. எனவே, வரிகள் குறித்து சுருக்கமாகத் தருகிறேன்.

வரிகளில் பல உண்டு. ஆனால் அவை குறிப்பாக இரண்டு பிரிவுகளின் கீழ் வரும் : டைரக்ட் டேக்ஸ் (நேரடி வரி), இன்டைரடக்ட் டேக்ஸ் (மறைமுக வரி).
நேரடி வரிகள் - வருமான வரி, சொத்து வரி, பரிசுகள் மீதான வரி, செலவு வரி, வட்டி வருமான வரி, கார்ப்பரேட் வரி, போன்றவை.
மறைமுக வரிகள் - விற்பனை வரி, சேவை வரி, மதிப்புக்கூட்டு வரி (வாட்), கஸ்டம்ஸ் டியூடி, ஆக்டிராய், எக்சைஸ் வரி போன்றவை.
இவற்றில் சில வரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. சில வரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை.

எந்தவொரு நாட்டிலும் நேரடி வரிகளின் விகிதம் அதிகமாகவும் மறைமுக வரிகளின் விகிதம் குறைவாகவும் இருப்பதே நல்லது. இந்தியாவில் 2011 கணக்கெடுப்பின்படி 76 கோடிப்பேர் வயதுவந்தவர்கள். ஆனால் 2012-13 கணக்கின்படி, வருமான வரி செலுத்துவோர் வெறும் 2.9 கோடிப் பேர்தான். அதிலும், 18,358 பேர்தான் ஒரு கோடிக்கும் அதிகமான வருமானத்தைக் காட்டினார்கள். அதாவது, ஏராளமானோர் வரி ஏய்ப்புச் செய்கிறார்கள். இதேபோல இதர வரிகளுக்கும் புள்ளிவிவரங்களைத் தோண்டி அடுக்கலாம். அது இருக்கட்டும்.

நேரடி வரி வருவாய் குறைகிறது என்பதால் அரசு மறைமுக வரிகளை புதிதாக விதிக்கிறது அல்லது வரி விகிதங்களை அதிகப்படுத்துகிறது. நேரடி வரிகளை அதிகரித்தால் அது பளிச்சென எல்லாருக்கும் புரிந்து போகும், கூப்பாடு போடுவார்கள் என்பதாலும் மறைமுக வரிகளை உயர்த்துகிறது. மறைமுக வரிகளை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினால் அல்லது அறிமுகம் செய்தால் அது பலருக்கும் தெரிய வராது. உதாரணமாக, சேவை வரிகள் உயர்ந்தது இப்படித்தான். இந்தியாவில் வரி வருவாய் 100 ரூபாய் என்றால், அதில் 30 ரூபாய்தான் நேரடி வரிகளிலிருந்து கிடைக்கிறது. 70 ரூபாய் மறைமுக வரிகளிலிருந்தே கிடைக்கிறது / அல்லது பிடுங்கப்படுகிறது.

ஆனால் மறைமுக வரிகளை அதிகரித்துக்கொண்டே போகவும் முடியாது. வருமான வரி, சொத்து வரி போன்ற நேரடி வரிகள் குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே பாதிப்பவை. ஆனால் மறைமுக வரிகள் எல்லாப் பிரிவு மக்களையும் - அவர்களே அறியாமல் - பாதிக்கக்கூடியது. ஆகவே, மறைமுக வரிகளை கூடிய வரையில் குறைப்பது அவசியம்.

மற்றொரு பக்கம் இத்தனை வரிகள் இருக்கும்போது, ஒரே பொருளுக்கு பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதும் நிகழ்கிறது. உதாரணமாக, ஒரு நபர் ஒரு பொருளை உற்பத்தி செய்ய கச்சாப் பொருளை வாங்கும்போது வரி செலுத்துகிறார். உற்பத்தி செய்தமைக்கு ஒரு வரி செலுத்துகிறார். அதை வாங்குகிற மொத்த விற்பனையாளர் வாட் வரி செலுத்துகிறார். அவரிடமிருந்து சில்லறை விற்பனையாளர் வாங்கும்போது அவரும் வரி செலுத்துகிறார். இப்படி, ஒரே பொருளுக்கு பலமுனைகளில் வரிகள் விதிக்கப்பட்டு, பொருளின் விலை அதிகமாகிறது.

இவற்றில் சிலவற்றை நீக்கி, ஒரு பொருளுக்கு ஒரே வரியாக ஆக்கினால் எப்படியிருக்கும்? அதுவும் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாக வைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் ஜிஎஸ்டி. உலகின் பல நாடுகளும் ஜிஎஸ்டி முறையை ஏற்றுக்கொண்டுள்ளன. வரிஅமைப்பை எளிமைப்படுத்துவதால் இது வரவேற்கத் தகுந்த விஷயம்.

ஆஹா... மோடி அரசு மிகப்பெரிய சாதனை செய்துவிட்டது என்றோ, இது முதலில் காங்கிரஸ் அரசின் திட்டம்தான் என்றோ யாரும் பொங்கவும் வேண்டாம் புகையவும் வேண்டாம். காங்கிரஸ் அரசு கொண்டு வந்தபோது கடுமையாக எதிர்த்தது பாஜக. வழக்கம்போல இதிலும் யுடர்ன் அடித்திருக்கிறது. இந்தப்பதிவு அரசியல் கட்சிகளைப் பற்றியதல்ல. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இந்த மசோதா நிறைவேற முக்கியக் காரணமாக இருந்தது.

இந்தியாவில் வரவிருக்கும் ஜிஎஸ்டி என்பது இரண்டு வகை - மத்திய பொருட்கள் மற்றும் சேவை வரி (Central Goods & Service Tax - CGST), மாநில பொருட்கள் மற்றும் சேவை வரி (State Goods & Service Tax - SGST)

உற்பத்தி மற்றும் சேவை மீதான அடிஷனல் கஸ்டம்ஸ் டியூடி, எக்சைஸ் டியூடி போன்ற வரிகள் எல்லாம் மத்திய அரசின் கீழ் வருபவை. ஜிஎஸ்டி வரும்போது இந்த வரிகள் எல்லாம் போய்விடும்.
வாட், விற்பனை வரி, ஆடம்பர வரி, பொழுதுபோக்கு வரி, போன்றவை மாநில அரசின் கீழ் வருபவை. ஜிஎஸ்டி வந்தால் இவையும் போய் விடும்.

ஆக பல வரிகளுக்குப் பதிலாக, வரிக்கு மேல் வரிக்கு பதிலாக ஒரே வரி இருக்கும். நாடு முழுமைக்கும் ஒரே வகையான வரி என்னும்போது மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகமும் எளிமையாகும். வரி ஏய்ப்புக் குறையும். வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும். அந்த வகையில் இது வரவேற்கத்தக்க விஷயம். தமிழ்நாடு போன்ற உற்பத்தியில் முன்னேறிய மாநிலங்களுக்கு பின்னடைவும் உண்டு. அதற்கேற்ப மத்திய அரசு நிவாரணம் வழங்கவும் இப்போதைக்கு ஏற்பாடு உண்டு.

இப்போதைய நிலவரப்படி பலமுனை வரிகளால் வரிவிகிதம் சுமார் 25 சதவிகிதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவிகிதம் (18 விழுக்காடு என்று கூறப்படுகிறது) குறைவாக இருக்கும், எனவே நுகர்வோருக்குப் பயன் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ஒருபக்கம் சில பொருட்களின் மீது ஜிஎஸ்டி காரணமாக விலைகள் குறையலாம். ஆனால் இப்போது சேவை வரி 15 விழுக்காடு, ஜிஎஸ்டி வரும்போது 18 விழுக்காடு ஆகும். மருந்துகள் போன்ற சில பொருட்களுக்கு இப்போது வரி குறைவாக இருக்கலாம், அது அதிகரிக்கும்.

மசோதா நிறைவேறி விட்டது. இது முதல் படிதான். வரி விகிதம், வரி வருவாய் பங்கீடு ஆகியவை குறித்து மத்திய அரசும் மாநில அரசுகளும் ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கும். மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். அப்புறம், இன்னொரு விஷயம் - அரசுக்கு பல்லாயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கச் செய்யும் பெட்ரோலியப் பொருட்கள், மதுபானம் ஆகிய பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் இப்போதைக்கு வராது.

சரி, உண்மையில் இதனால் உங்களையும் என்னையும் போன்ற நுகர்வோருக்குப் பயன் கிடைக்குமா? இதற்கான பதிலை நீங்கள எளிதாக ஊகம் செய்யலாம். எந்தவொரு அரசும் வரி விகிதத்தை சீரமைக்கிறது என்றால் அது வரிகளைக் குறைத்து தனது வருவாயைக் குறைக்கப்போவதில்லை, வருவாயை அதிகரிக்கத்தான் என்பது தெளிவான விஷயம். ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சிக் கூத்தாடுகிறவர்கள் யார் யார் என்று பாருங்கள். பதில் புரிந்து போகும்.