ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது.
திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றப்படும் என்பதில் எந்தத் தடங்கலும் இல்லை.
இதைப்பற்றி எல்லாரும் ஆஹா ஓஹோ என்று போற்றுகிறார்களே... இதனால் நமக்கு என்ன பயன்
என்று புரிகிற வகையில் எழுதுங்களேன் என்று நண்பர்கள் கேட்டார்கள்.
இது கொஞ்சம் குழப்படியான விஷயம். இந்தியாவில் இதுவரை
வழக்கில் இருக்கும் வரிகள் குறித்துத் தெரிந்து கொள்ளாமல் ஜிஎஸ்டி குறித்து
புரிந்து கொள்ள முடியாது. எனவே, வரிகள் குறித்து சுருக்கமாகத் தருகிறேன்.
வரிகளில் பல உண்டு. ஆனால் அவை குறிப்பாக இரண்டு பிரிவுகளின்
கீழ் வரும் : டைரக்ட் டேக்ஸ் (நேரடி வரி), இன்டைரடக்ட் டேக்ஸ் (மறைமுக வரி).
• நேரடி வரிகள் - வருமான வரி, சொத்து வரி, பரிசுகள் மீதான வரி, செலவு வரி, வட்டி வருமான வரி, கார்ப்பரேட் வரி, போன்றவை.
• மறைமுக வரிகள் - விற்பனை வரி, சேவை வரி, மதிப்புக்கூட்டு வரி (வாட்),
கஸ்டம்ஸ் டியூடி,
ஆக்டிராய், எக்சைஸ் வரி போன்றவை.
இவற்றில் சில வரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை.
சில வரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை.
எந்தவொரு நாட்டிலும் நேரடி வரிகளின் விகிதம் அதிகமாகவும்
மறைமுக வரிகளின் விகிதம் குறைவாகவும் இருப்பதே நல்லது. இந்தியாவில் 2011 கணக்கெடுப்பின்படி 76 கோடிப்பேர் வயதுவந்தவர்கள்.
ஆனால் 2012-13 கணக்கின்படி, வருமான வரி செலுத்துவோர் வெறும் 2.9 கோடிப் பேர்தான். அதிலும், 18,358 பேர்தான் ஒரு கோடிக்கும்
அதிகமான வருமானத்தைக் காட்டினார்கள். அதாவது, ஏராளமானோர் வரி ஏய்ப்புச்
செய்கிறார்கள். இதேபோல இதர வரிகளுக்கும் புள்ளிவிவரங்களைத் தோண்டி அடுக்கலாம். அது
இருக்கட்டும்.
நேரடி வரி வருவாய் குறைகிறது என்பதால் அரசு மறைமுக வரிகளை
புதிதாக விதிக்கிறது அல்லது வரி விகிதங்களை அதிகப்படுத்துகிறது. நேரடி வரிகளை
அதிகரித்தால் அது பளிச்சென எல்லாருக்கும் புரிந்து போகும், கூப்பாடு போடுவார்கள்
என்பதாலும் மறைமுக வரிகளை உயர்த்துகிறது. மறைமுக வரிகளை கொஞ்சம் கொஞ்சமாக
உயர்த்தினால் அல்லது அறிமுகம் செய்தால் அது பலருக்கும் தெரிய வராது. உதாரணமாக,
சேவை வரிகள்
உயர்ந்தது இப்படித்தான். இந்தியாவில் வரி வருவாய் 100 ரூபாய் என்றால், அதில் 30 ரூபாய்தான் நேரடி
வரிகளிலிருந்து கிடைக்கிறது. 70 ரூபாய் மறைமுக வரிகளிலிருந்தே கிடைக்கிறது / அல்லது பிடுங்கப்படுகிறது.
ஆனால் மறைமுக வரிகளை அதிகரித்துக்கொண்டே போகவும் முடியாது.
வருமான வரி, சொத்து வரி போன்ற நேரடி வரிகள் குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே பாதிப்பவை.
ஆனால் மறைமுக வரிகள் எல்லாப் பிரிவு மக்களையும் - அவர்களே அறியாமல் - பாதிக்கக்கூடியது.
ஆகவே, மறைமுக வரிகளை கூடிய
வரையில் குறைப்பது அவசியம்.
மற்றொரு பக்கம் இத்தனை வரிகள் இருக்கும்போது, ஒரே பொருளுக்கு பல்வேறு
வரிகள் விதிக்கப்படுவதும் நிகழ்கிறது. உதாரணமாக, ஒரு நபர் ஒரு பொருளை
உற்பத்தி செய்ய கச்சாப் பொருளை வாங்கும்போது வரி செலுத்துகிறார். உற்பத்தி
செய்தமைக்கு ஒரு வரி செலுத்துகிறார். அதை வாங்குகிற மொத்த விற்பனையாளர் வாட் வரி
செலுத்துகிறார். அவரிடமிருந்து சில்லறை விற்பனையாளர் வாங்கும்போது அவரும் வரி
செலுத்துகிறார். இப்படி, ஒரே பொருளுக்கு பலமுனைகளில் வரிகள் விதிக்கப்பட்டு, பொருளின் விலை அதிகமாகிறது.
இவற்றில் சிலவற்றை நீக்கி, ஒரு பொருளுக்கு ஒரே வரியாக
ஆக்கினால் எப்படியிருக்கும்? அதுவும் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாக வைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் ஜிஎஸ்டி. உலகின் பல
நாடுகளும் ஜிஎஸ்டி முறையை ஏற்றுக்கொண்டுள்ளன. வரிஅமைப்பை எளிமைப்படுத்துவதால் இது
வரவேற்கத் தகுந்த விஷயம்.
ஆஹா... மோடி அரசு மிகப்பெரிய சாதனை செய்துவிட்டது என்றோ, இது
முதலில் காங்கிரஸ் அரசின் திட்டம்தான் என்றோ யாரும் பொங்கவும் வேண்டாம் புகையவும்
வேண்டாம். காங்கிரஸ் அரசு கொண்டு வந்தபோது கடுமையாக எதிர்த்தது பாஜக. வழக்கம்போல
இதிலும் யுடர்ன் அடித்திருக்கிறது. இந்தப்பதிவு அரசியல் கட்சிகளைப் பற்றியதல்ல. காங்கிரஸ்
கட்சியின் ஆதரவு இந்த மசோதா நிறைவேற முக்கியக் காரணமாக இருந்தது.
இந்தியாவில் வரவிருக்கும் ஜிஎஸ்டி என்பது இரண்டு வகை -
மத்திய பொருட்கள் மற்றும் சேவை வரி (Central Goods & Service Tax -
CGST), மாநில பொருட்கள்
மற்றும் சேவை வரி (State Goods & Service Tax - SGST)
உற்பத்தி மற்றும் சேவை மீதான அடிஷனல் கஸ்டம்ஸ் டியூடி,
எக்சைஸ் டியூடி
போன்ற வரிகள் எல்லாம் மத்திய அரசின் கீழ் வருபவை. ஜிஎஸ்டி வரும்போது இந்த வரிகள்
எல்லாம் போய்விடும்.
வாட், விற்பனை வரி, ஆடம்பர வரி, பொழுதுபோக்கு வரி, போன்றவை மாநில அரசின் கீழ் வருபவை. ஜிஎஸ்டி வந்தால் இவையும் போய் விடும்.
ஆக பல வரிகளுக்குப் பதிலாக, வரிக்கு மேல் வரிக்கு பதிலாக
ஒரே வரி இருக்கும். நாடு முழுமைக்கும் ஒரே வகையான வரி என்னும்போது மாநிலங்களுக்கு
இடையிலான வர்த்தகமும் எளிமையாகும். வரி ஏய்ப்புக் குறையும். வரி செலுத்துவோரின்
எண்ணிக்கையும் அதிகரிக்கும். அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும். அந்த வகையில் இது
வரவேற்கத்தக்க விஷயம். தமிழ்நாடு போன்ற உற்பத்தியில் முன்னேறிய மாநிலங்களுக்கு
பின்னடைவும் உண்டு. அதற்கேற்ப மத்திய அரசு நிவாரணம் வழங்கவும் இப்போதைக்கு ஏற்பாடு
உண்டு.
இப்போதைய நிலவரப்படி பலமுனை வரிகளால் வரிவிகிதம் சுமார் 25 சதவிகிதம் இருப்பதாகக்
கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவிகிதம் (18 விழுக்காடு என்று கூறப்படுகிறது) குறைவாக இருக்கும்,
எனவே
நுகர்வோருக்குப் பயன் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ஒருபக்கம் சில பொருட்களின்
மீது ஜிஎஸ்டி காரணமாக விலைகள் குறையலாம். ஆனால் இப்போது சேவை வரி 15 விழுக்காடு, ஜிஎஸ்டி வரும்போது 18 விழுக்காடு ஆகும்.
மருந்துகள் போன்ற சில பொருட்களுக்கு இப்போது வரி குறைவாக இருக்கலாம், அது அதிகரிக்கும்.
மசோதா நிறைவேறி விட்டது. இது முதல் படிதான். வரி விகிதம்,
வரி வருவாய் பங்கீடு
ஆகியவை குறித்து மத்திய அரசும் மாநில அரசுகளும் ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கும்.
மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். அப்புறம்,
இன்னொரு விஷயம் -
அரசுக்கு பல்லாயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கச் செய்யும் பெட்ரோலியப் பொருட்கள்,
மதுபானம் ஆகிய
பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் இப்போதைக்கு வராது.
சரி, உண்மையில் இதனால் உங்களையும் என்னையும் போன்ற நுகர்வோருக்குப் பயன் கிடைக்குமா?
இதற்கான பதிலை
நீங்கள எளிதாக ஊகம் செய்யலாம். எந்தவொரு அரசும் வரி விகிதத்தை சீரமைக்கிறது என்றால்
அது வரிகளைக் குறைத்து தனது வருவாயைக் குறைக்கப்போவதில்லை, வருவாயை அதிகரிக்கத்தான்
என்பது தெளிவான விஷயம். ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சிக்
கூத்தாடுகிறவர்கள் யார் யார் என்று பாருங்கள். பதில் புரிந்து போகும்.
//ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சிக் கூத்தாடுகிறவர்கள் யார் யார் என்று பாருங்கள். பதில் புரிந்து போகும்.//
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள். ஆட்சி பீடத்தில் அமர்த்தியதற்கு நன்றி செய்ய வேண்டும் அல்லவா?
--
Jayakumar
//எந்தவொரு அரசும் வரி விகிதத்தை சீரமைக்கிறது என்றால் அது வரிகளைக் குறைத்து தனது வருவாயைக் குறைக்கப்போவதில்லை, வருவாயை அதிகரிக்கத்தான் என்பது தெளிவான விஷயம். ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சிக் கூத்தாடுகிறவர்கள் யார் யார் என்று பாருங்கள். பதில் புரிந்து போகும்.//
ReplyDeleteஉண்மை... மிகச் சிறப்பான கட்டுரை...