Monday 1 December 2014

மோடி அரசின் ஆறு மாதங்கள்

யோகேந்திர யாதவ் கட்டுரையின் தமிழாக்கம்
அதற்குள் ஏன் அவசரம் என்று சிலர் கேட்கலாம். புதிய அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் கண்கூடாகத் தெரியக்கூடிய பலன்களை எதிர்பார்க்க முடியாது. ஆளும் கட்சி சொன்னதையும் அதன் ஆரம்ப காலத்தில் எடுத்த நடவடிக்கைகளையும் வைத்துத்தான் மதிப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.

சாதாரண நேரத்தில் இந்த வாதம் சரியாக இருக்கலாம். ஆனால் இது சாதாரண அரசு அல்ல. கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்குப் பிறகு அறுதிப் பெரும்பான்மையுடன் அமைந்திருக்கிற அரசு இது. மக்களின் எதிர்பார்ப்புகளைத் தூண்டி ஆட்சியைப் பிடித்த அரசு இது. இந்திய வாக்காளர்களுக்கு மோடி மிக எளிமையான, ஆனால் ஆற்றல் மிக்க கனவு ஒன்றை முன்வைத்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மகளிர் பாதுகாப்பு என எல்லாவற்றிலும் கெட்ட காலம் முடிந்து நல்ல காலம் பொறக்குது என்றார் அவர். இப்படிப்பட்ட சக்திவாய்ந்த கோஷங்களில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், அவற்றை மக்கள் சட்டென மறப்பதில்லை, அவை துரத்திக்கொண்டே இருக்கும்.

கேள்விகளுக்கு கேள்விகளையே பதிலாக்கும் கேள்விகளை சற்றே ஒதுக்கி விடுவோம். இந்த அரசின் வாக்குறுதிகள், செயல்கள், விளைவுகள் ஆகியவற்றை சற்றே அலசிப் பார்ப்போம். மோடி அரசின் முதல் செமஸ்டர் தேர்வின் மதிப்பெண்களைப் பார்ப்போம்.

முந்தைய ஆட்சியில் என்ற கேள்வியில் துவங்கலாம். முந்தைய பிரதமரைவிட தற்போதைய பிரதமர் பரவாயில்லையே என்று சிலர் சொல்கிறார்கள்.
அதுவல்ல கேள்வி. அந்தக் கேள்விதான் நாடாளுமன்றத் தேர்தலின்போதே முடிந்து விட்டதே, இனியும் எழுப்பத் தேவையில்லை. இப்போதைய கேள்வி இதுதான் : பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல்கால வீராவேச வாக்குறுதிகளை இந்த அரசு எந்த அளவுக்கு நிறைவேற்றியது? நரேந்திர மோடி இந்திய ஊடகங்களால் அணுக முடியாதவராக இருக்கிறார் என்றாலும், வெளிநாடுவாழ் இந்தியர்கள், நடுத்தர மக்கள் மத்தியில் மோடிக்கு பெரும் செல்வாக்கு என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவ்வப்போது அறியாமை உளறல்கள், சமயங்களில் ராஜதந்திரப் பேச்சுகள் தவிர இந்த அரசின் விரிவான தொலைநோக்கு என்ன என்பதை இதுவரை அவர் தெரிவிக்கவில்லை. அவசியமான தொலைநோக்கு இல்லாதபட்சத்தில் இந்த அரசு உருவாக்கிய எதிர்பார்ப்புகள் மிக எளிதாக விரக்திப் பிதற்றல்களுக்கே வழிவகுக்கும்.

இன்னொரு முக்கியமான கேள்வியையும் கேட்க வேண்டியிருக்கிறது : இந்த அரசு கூறுவதை நம்ப முடியுமா?
தேர்தல் நேரத்தில் வாக்களித்த பல விஷயங்களிலும் இந்த அரசு கவலையே படாமல் பல்டி அடித்திருப்பதைப் பார்த்தால், சந்தேகமாக இருக்கிறது. பாகிஸ்தான் அல்லது சீன ஊடுருவல் ஆகட்டும், அரசமைப்புச்சட்ட விதி 370 ஆகட்டும், புரூக்ஸ்-ஹெண்டர்சன் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சொன்னதாகட்டும், எதிர்க்கட்சியாக இருந்தபோது எதையெல்லாம் பாரதிய ஜனதா கட்சி கோரியதோ அதையெல்லாம் மிகச்சுலபமாக, தந்திரமாக, இப்போது மறந்து விட்டது. கறுப்புப் பண விவகாரத்தில் அடித்த பெரும் பல்டி, சிஏஜி-யின் பங்கு குறித்த கருத்து, மானியங்கள், காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு, டீசல் கட்டுப்பாடு நீக்கம், மீண்டும் ஆதார் அட்டை போன்றவை இந்த அரசின் இன்னும் மோசமான போக்கைக் காட்டுகின்றன. ஆட்சியில் இருக்கிற கட்சி, தன் முன்னே இருக்கிற முக்கியப் பிரச்சினைகள் என்ன என்று சிந்தித்ததாகவே தெரியவில்லை. ஆகவேதான் அரசு என்ன சொல்கிறது, அதன் பொருள் என்னவாக இருக்கும், என்ன செய்யப் போகிறது, உறுதியாகச் செயல்படப் போகிறதா என்பதைத் தொடர்புபடுத்திப் பார்க்கவே முடிவதில்லை.

சொற்கள் செயல்களாக உருமாற்றம் பெற்றனவா?
அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவக்கும் ஜன் தான் யோஜனா, தூய்மை பாரத இயக்கம் ஆகிய திட்டங்கள், வெறும் அடையாளங்களாகவே உள்ளன என்றாலும் நல்ல துவக்கம்தான். ஆனால் இவை விதிவிலக்குகள் என்பதுதான் துரதிருஷ்டம். உடனடி நடவடிக்கை தேவைப்படுகிற, நடவடிக்கை எடுக்கவும்கூடிய கறுப்புப் பண விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் காணோம். விவசாயிகள் நலனுக்கு அரசு எந்த நலத்திட்டத்தையும் முன்வைக்கக் காணோம். வேளாண் விளைபொருள்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்படும் என்ற வாக்குறுதியை கைகழுவி விட்டு, நில கையகப்படுத்தல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதில் ஈடுபட்டுள்ளது இந்த அரசு. சூழலியல் துறையில் அரசு போகின்ற போக்கைப் பார்த்தால், இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான, சுற்றுச்சூழலுக்கு எதிரான அரசாகப் பெயர்வாங்கும் பாதையில் பயணித்து வருகிறது.

செயல்பாடுகளைப் பற்றி ஆறு மாதங்களுக்குள் தீர்ப்புக்கூற முடியாது என்றாலும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நம்பத் தகுந்ததாக இருக்கிறதா இந்த அரசு?
இதிலும் நம்பிக்கை ஏதும் கொள்ள இயலவில்லை. புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் சஞ்சீவ் சதுர்வேதி நடத்தப்பட்ட விதம், எந்தவொரு நேர்மையான அதிகாரிக்கும் ஊக்கத்தைக் குலைக்கும். நேர்மையான அரசு என்று கூறிக்கொள்ளும் இதே அரசில்தான் சட்டத்தின் வலைக்குள் சிக்காத அமைச்சர் ஒருவரும் இருக்கிறார். சுரேஷ் பிரபுவும், மனோகர் பரிக்கரும் இருக்கிற அதே அமைச்சகத்தில்தான் ஜே.பி. நத்தாவும் அமைச்சராக இருக்கிறார். இது தவிர, அமைச்சர்களுக்கு எந்த அதிகாரமும் இருப்பதாகவும் தெரியவில்லை. முந்தைய ஆட்சியில் பிரதமர் பொம்மை என்று விமர்சிக்கப்பட்டதற்கு இது மாற்றம் போலத் தெரியலாம், ஆனால் இது எந்த வகையிலும் சிறிய அமைச்சகம், சிறந்த நிர்வாகம் என்பதற்கான அடையாளம் ஆகாது.

அரசின் செயல்பாடுகளால் பெரும் பயன்கள் ஏதும் கண்கூடாகத் தெரியவில்லை என்பதுகூட முக்கியப் பிரச்சினையாக நான் கருதவில்லை. சில பிரச்சினைகளைக் காணாமல் கண்களை மூடிக்கொண்டும், சிலவற்றுக்கு ரகசியமாகத் தலையாட்டியும் இந்த அரசு செய்கிற செயல்களின் விளைவுகள்தான் கவலைக்குரியவை. வட இந்தியாவின் பல பகுதிகளில் முன்காணாத வகுப்புக் கலவரங்கள் அரசின் கொள்கைகளால் எழுந்தவை அல்லதான். ஆனால், மத்தியில் ஆட்சியிலிருக்கும் அரசுக்குத் தொடர்பற்றவை என்று சொல்ல முடியாது. நேற்றுவரை யாராலும் கவனிக்கப்பட்டிராத இந்துத்துவ அடிப்படைவாதிகள் இன்று முக்கியஸ்தர்கள் ஆகியிருக்கிறார்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பொதுத்துறை நிறுவன சுதந்திரம் சற்றே ஆட்டம் கண்டிருந்தது, இன்று நொறுங்கி விழுந்து கொண்டிருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6200 கோடி ரூபாயை அதானி நிறுவனத்துக்கு கடன் கொடுக்க முன்வந்த சம்பவம், சுதந்திரமான பொதுத்துறை நிறுவனங்கள் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிவதன் சிறிய உதாரணம்தான்.

அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதைத்தான் இது காட்டுகிறதா?
இல்லை என்று நம்ப விரும்புகிறேன். 
*
யோகேந்திர யாதவ்,  ஆம் ஆத்மி கட்சியின் பேச்சாளர்.

No comments:

Post a Comment