Friday 24 March 2017

கூலர் வாங்கலையோ கூலர்...!

கோடை வந்துவிட்டது, அல்லது வந்து கொண்டே இருக்கிறது. ஏசி வாங்க / அதற்கு மின்சார செலவு செய்ய நிதிவசதி இல்லாதவர்கள், ஏசி பொருத்த அனுமதி / வசதி இல்லாதவர்கள் கூலர்களை வாங்குவார்கள்.

கூலர் எப்படி இயங்குகிறது? அதன் பாகங்கள் என்ன? எப்படி பராமரிப்பதது? உண்மையில் கூலர் பயன் தருமா? வாங்கலாமா? எப்படிப்பட்ட கூலர் வாங்கலாம்? வாருங்கள் பார்ப்போம்.


நான் 1991இல் தில்லிக்கு வந்த பிறகுதான் கூலர் என்ற ஒரு சாதனத்தையே பார்த்தேன். (அடேயப்பா... எல்லா வீட்டுலயம் ஏசி போட்டிருக்காங்க என்று ஏமாறவும் செய்தேன்.) அரசு அலுவலகங்களின் சன்னல்களின் வெளியே, பெரும்பாலும் நீல வண்ணம் பூசப்பட்ட பெட்டி போன்ற தகரக் கூலர்கள் பொருத்தப்பட்டிருக்கும். தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றுவது பியூன்களுக்கான வேலை. ஒரு குழாயை அலுவலகம் முழுவதும் இழுத்துச் சென்று, ஒவ்வொரு அறையிலும் உள்ள கூலர்களில் தண்ணீர் நிரப்பி, வெராண்டாக்களையும் அலுவலகத் தரைகளையும் ஈரமாக்கிவிட்டுப் போவார் அவர். தில்லியின் கொளுத்தும் வெயிலில் சற்றுநேரத்தில் அந்த ஈரம் காய்ந்துவிடும் என்பது வேறு விஷயம். கூலரில் நீர் ஊற்றும்போது அது நிறைந்து சன்னல் வழியே வழிந்து, வெளிப்புறச் சுவர்களையும் ஈரமாக்கி, அதன் தடங்கள் காவி நிறத்தில் படிந்திருக்கும்.

ஆண்டுக்கொருமுறை அலுவலகங்களில் கூலர்கள் புதிதாக மாற்றப்படும். அதாவது, பழைய கூலர்கள் கழற்றிச் செல்லப்படும், அவற்றின் வெளிப்பக்கம் உப்புக்காகிதத்தால் சுரண்டப்பட்டு, புதிய பெயின்ட் அடிக்கப்பட்டு, சர்வீஸ் செய்யப்பட்டு, புதிய கூலர் என்ற கணக்கில் வேறு அலுவலகத்தில் பொருத்தப்படும். அந்த அலுவலகத்தில் கழற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கூலர் இந்த அலுவலகத்தில் பொருத்தப்படும். கூலர் சப்ளை / பராமரிப்பு கான்ட்ராக்ட் என்பது ஆண்டுதோறும் பணம் கொட்டும் தொழில். சில அலுவலகங்களில் பழைய கூலர்களை ஏலம் விடுவார்கள். ஊழியர்கள் அதை மிக மலிவாக ஏலத்தில் எடுத்து தம் வீட்டில் பொருத்திக்கொள்வார்கள். அப்போதெல்லாம் அரசு அலுவலர்களின் வீடுகளில் பெரும்பாலும் அந்தத் தகரக் கூலர்களைத்தான் காண முடியும். காரணம், ஏலத்தில் எடுத்ததாக இருக்கும், அல்லது அந்த கான்ட்ராக்டர் மூலமாகவே வாங்கியதாக இருக்கும், அல்லது அலுவலகத்தில் எந்த கூலரில் திருப்தி ஏற்பட்டதோ அதே கூலர்தான் வீட்டிலும் பொருத்த வேண்டும் என்ற எண்ணமாக இருக்கும். இப்போது ஏசி பரவலாக வந்து விட்டது.

சில கூலர்களில் விசிறிகள் கடும் வேகமாகச் சுழலும். அதன் இரைச்சல் மாவு அரைக்கும் ஆலை போல இருக்கும். கூலரின் சத்தத்தில் வீட்டுக்குள் கொலை விழுந்தாலும் தெரியாமல் போன கதைகளும் உண்டு. சன்னலில் பொருத்திய கூலரின் வழியாக உள்ளே நுழைந்து திருடிச் செல்லும் கதைகள் இப்போதும் உண்டு. சரி, அந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு என்பீர்கள்.... ஆமாம். நிறுத்திவிடுகிறேன்.

கூலர் என்பது என்ன? எப்படி இயங்குகிறது?
பொதுவாக இதற்கு டெசர்ட் கூலர் (பாலைவனக் குளிரூட்டி) என்று பெயர். திரவ நீரை நீராவியாக மாற்றி காற்றில் கலக்கச் செய்வதே இதன் அடிப்படைத் தத்துவம். எனவே இதனை ஆவியாக்கும் கூலர் (evaporative cooler), ஈரக் காற்றுக் கூலர் (wet air cooler) என்றும் கூறலாம். இதில் ஏர் கண்டிஷனர் எனப்படும் சாதனத்தில் உள்ள அமைப்பு ஏதும் கிடையாது. (உண்மையில் ஏசி என்பது குளிர்சாதனம் மட்டுமல்ல, குளிர் காலத்தில் வெப்பமும் ஊட்டுவது - அதனால்தான் அதன் பெயர் ஏர் கண்டிஷனர், ஏர் கூலர் அல்ல.) கூலரின் இயக்கம் மிகவும் எளிமையானது. படத்தைப் பாருங்கள்.


கூலரின் வெளிப்புறத் தோற்றம். அடிப்பக்கம் சதுரமாய் இருப்பது தண்ணீர் தொட்டி. முன்பக்கத்தின் மறைப்புக்கு உள்ளே நல்ல வேகத்தில் சுழலக்கூடிய ஒரு விசிறி இருக்கிறது. (இதை விசிறி என்று சொல்வதைவிட, காற்றை வீசும் புளோயர் என்று சொல்லலாம்.) மூன்று பக்கமும் வெளிப்புறத் தகர மூடிகளில் வெட்டிவிடப்பட்ட இடைவெளிகள் இருக்கின்றன.



 

கூலரின் குறுக்குவெட்டுத் தோற்றம். தண்ணீர் தொட்டிக்கு மேலே சிறிய பம்ப் ஒன்று இருக்கிறது. மூன்று பக்கமும் மூடிக்கு உட்பகுதியில் வைக்கோலைப் பரப்பி, தட்டையாக்கப்பட்ட ஒரு பத்தை (pad) பொருத்தப்பட்டுள்ளது (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்). பம்பிலிருந்து வரும் தண்ணீர் ஒரே சீராக அந்தப் பத்தைகளின் மீது விழும் வகையில் குழாய் மூன்று கிளைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.

முன்பக்கம் இருக்கிற விசிறி, வேகமாக காற்றை முன்னோக்கித் தள்ளும்போது, மூன்று பக்கத்திலிருந்தும் வெளிக்காற்று உள்ளே இழுக்கப்படும். அப்போது தண்ணீரால் ஈரமடைந்த வைக்கோல் பத்தைகளின் ஊடாக காற்று உள்ளே நுழைந்து, முன்புறமாக வெளியேறும்போது குளிர்ச்சியான காற்றாக வரும்.



மேலே இருக்கும் படம் இதை இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டுகிறது. வைக்கோல் பத்தைகளின் மீது விழும் தண்ணீர் அப்படியே வடிந்து மீண்டும் தண்ணீர் தொட்டிக்கே போய்விடும். இப்படியே சுழற்சி நிகழந்து கொண்டே இருக்கும்.

ஆக, நமக்குக் கிடைக்கும் குளிர்ச்சி உண்மையில் காற்றின் குளிர்ச்சி அல்ல. காற்றில் ஆவியான நீர்த்துளிகள் கலந்து வருவதால் குளிர்ச்சியாகத் தோன்றுகிறது - அது உண்மையில் காற்றின் ஈரம். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காற்றோடு நீர் கலந்து விடுவதால் தொட்டி காலியாகி விடும். அவ்வப்போது நிரப்ப வேண்டும். வெளிப்புறக் காற்றோடு தூசுகளும் சேரும், வைக்கோலில் விழுந்து ஈரப்படுத்துவதால் அதிலிருக்கும் அழுக்கும் சேர்ந்து நீருடன் தொட்டியில் விழும். எனவே அவ்வப்போது பழைய நீரை நீக்கிவிட்டு புதிய நீர் விட வேண்டும். இல்லையேல் நாற்றம் அடிக்கும்.

கூலரின் மெகானிசம் இவ்வளவுதான் - ஒரு தண்ணீர் பம்ப், நீரை விநியோகிக்கும் மெல்லிய குழாய்கள், புளோயர் அல்லது விசிறி. இதே அமைப்பு இப்போது பிளாஸ்டிக்கில் வருகிறது. அதைத்தான் பிரபல பிராண்ட்களின் பெயர்களால் நாம் வாங்குகிறோம்.

நீங்கள் வாங்குகிற மாடலையும், கொடுக்கிற பணத்தையும் பொறுத்து, விசிறியின் வேகத்தை கூட்டும், குறைக்கும் வசதி இருக்கும்; விசிறியின் முன்பக்கம் அசையும் தடுப்பான்கள் இருக்கும், டேபிள் பேனைப் போல அவை இடதும் வலதுமாக அசைந்து காற்றை இரண்டு திசைகளிலும் வீசச் செய்யும். காற்றை மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி வீசும் வகையில் திசை திருப்பக்கூடிய அமைப்பும் இருக்கலாம். சில கூலர்களில் ஐஸ் கட்டிகளைப் போடுவதற்கான டிரே வசதியும் இருக்கலாம்.

இதில் பராமரிப்பு தேவைப்படும் விஷயங்கள் -
அவ்வப்போது தண்ணீர் மாற்றுவது
தண்ணீர் தீர்நது விட்டதா என்று பார்ப்பது.
சுழற்சியில் இயங்கும் தண்ணீரில் வைக்கோல் குப்பையும் சேர்வதால், குழாயிலிருந்து பத்தைகளில் விழும்போது சீராக விழாமல் போகலாம். அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியிருக்கலாம்.
வைக்கோல் பத்தைகள் ஓரிரு மாதங்களில் நைந்து போகும். மாற்ற வேண்டியிருக்கலாம். (இப்போதெல்லாம் வைக்கோலுக்குப் பதிலாக ஃபைபரால் செய்த பேட்கள் வந்து விட்டன. இவற்றில் அடிக்கடி தண்ணீர் மாற்றத் தேவையில்லை.)
தண்ணீர் பம்ப் கெட்டுப் போகலாம்.
முன்புறம் அசைந்து அசைந்து காற்றை இரண்டு பக்கமும் திருப்பிவிடும் தடுப்பான்கள் விரைவிலேயே கெட்டுப்போய்விடும். அதை சரி செய்ய முயற்சி செய்வது வீண் வேலை!
கூலரை சமதளமாக நிறுத்தாவிட்டால், மூன்றுபக்கமும் தண்ணீர் சீராக விழாமல், எந்தப் பக்கம் சாய்ந்திருக்கிறதோ அந்தப் பக்கம் மட்டும் அதிக தண்ணீர் விழக்கூடும்.

கூலர்கள் உண்மையிலேயே பயன் தருகிறதா?
பயன் தரும். நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், அந்த இடத்தின் தட்பவெப்ப நிலை என்ன என்பதைப் பொறுத்தது அது. பாலைவனப் பகுதிகளில் - மிகவும் வறட்சியாக இருப்பதால் நிச்சயமாகப் பயன்தரும். தில்லி போன்ற பகுதிகளில், கடும் கோடை இருக்கிற - வறட்சியான கோடைக் காலத்தில் பயன் தரும். கோடையின் பிற்பகுதியில், வெப்பம் அதிகமாக இருந்தாலும், காற்றில் ஈரப்பதம் இருக்கிற ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் பயன் தராது. ஆனாலும் கூலர் இருக்கிறதே என்பதற்காக பலரும் அதை இயக்குவதுண்டு. அத்தகைய தட்பவெப்ப நிலையில், ஏற்கெனவே காற்றில் ஈரப்பதம் இருக்கும்போது, கூலர் வீசுகின்ற நீரின் ஈரப்பதமும் சேர்ந்து, கசகசப்பாக உணரச் செய்யும். உங்களுக்குக் கிடைப்பது குளிர்ச்சியான காற்று அல்ல, ஈரக் காற்று.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, காற்றில் ஈரப்பதம் எப்போதும் உண்டு. எனவே, கூலர் என்பது உளரீதியாக திருப்தி தரும் விஷயமாக இருக்கலாமே தவிர, உண்மையான குளிர்ச்சியத் தந்து விடாது. இதற்கும் மேல் வாங்குவது உங்கள் விருப்பம்.

எச்சரிக்கை - சைனஸ், ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு கூலர் காறறு தொல்லைகளை அதிகப்படுத்தக்கூடும்.
கூலரைப் பயன்படுத்தாமல், தண்ணீரை சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால், அது கொசுக்களின் உற்பத்தித் தலமாகி விடுகிறது. (இதற்காக தில்லியில் கடும் சட்டங்களும் உண்டு. வீடு வீடாக சோதனையிடுவார்கள், கூலரில் தேங்கிய நீர் இருந்தால் அபராதம் விதிக்கப்படலாம்.)

மேலும் கவனிக்க வேண்டிய விஷயம் - நீங்கள் எப்படிப்பட்ட கூலர் வாங்குகிறீர்கள் என்பது. இப்போதெல்லாம் நாம் வாங்குவது, அழகாகத் தோன்றும் பிளாஸ்டிக்கினால் செய்த கூலர்கள். இவற்றில் பெரும்பாலும் தண்ணீர் விழும் பத்தைகளின் அமைப்பு மிகச் சிறியதாகவே இருக்கும். எனவே, மேலே குறிப்பிட்ட தகரக் கூலர்களின் அளவுக்கு இவை குளிர்ச்சி தர முடியாது. அதுதவிர, விசிறிகளின் வேகமும் குறைவாகவே இருக்கும். அதைவிட முக்கியமான விஷயம் - டெசர்ட் கூலர் எனப்படும் கூலர்களை இங்கே சன்னலுக்கு வெளியேதான் பொருத்துவார்கள். இதன் மூலம் வெளிப்புறத்திலிருந்து புதிய காற்று கூலர் வழியாக உள்ளே நுழைகிறது. ஆனால் நாம் வாங்குகிற பிளாஸ்டிக் கூலர்களை வீட்டுக்குள் அடைத்து வைத்த கதவுகளுக்குள்தான் வைத்திருப்போம். எனவே, ஏற்கெனவே ஈரமாகி விட்ட காற்றுதான் திரும்பத் திரும்ப சுற்றிக்கொண்டிருக்கும். சன்னலுக்கு வெளியே, பொருத்தும்போது, காற்று வீசுகிற விசிறிப்பக்கம் உள்ள திறப்பின் அகலத்துக்கு மட்டும் திறந்து வைத்து, மற்ற பகுதிகளை பலகையால் அடைத்து விடவேண்டும்.


வாங்கும்போது கவனிக்க வேண்டியவை :
எந்த அறையில் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்து, கூலரின் அளவை முடிவு செய்யுங்கள்.
கூடியவரையில், கூலருக்குள் காற்று நுழைவதற்கான மூன்று பகுதிகளிலும் அதிக திறப்பு இருக்கிறதா என்று பாருங்கள். அழகாகத் தோன்றும் பிராண்ட் கூலர்கள் பலதிலும் அதிக திறப்பு இருக்காது. அப்படி இருந்தால், புதிய காற்று அதிகமாக உள்ளே நுழையாது.
விசிறியின் வேகம் திருப்திகரமாக இருக்கிறதா என்று பாருங்கள்.
கூடிய வரையில், வீட்டுக்குள் வைக்காமல் சன்னலுக்கு வெளியே வைக்கிற வகையில் வாங்குங்கள்.
• வெளியே பொருத்துவதாக இருந்தால், தண்ணீரை மாற்றுவதற்காக கூலரைத் திறக்கும் வசதி எளிதாக இருக்கிறதா என்று பாருங்கள்.
சில கூலர்களில் தண்ணீரை தானே வெளியேற்றக்கூடிய வகையில் ஒரு திருகு குழாய் இருக்கலாம். அப்படியிருந்தாலும், அடியில் குப்பை தங்கிவிடும், அது குழாய்களை - கூலிங் பத்தைகளின் மேல் தண்ணீர் விழும் மெல்லிய துவாரங்களை அடைத்துவிடும் என்பதால், முழுக்கத் திறந்து சுத்தம் செய்யக்கூடிய வசதி இருப்பது நல்லது.
சில கூலர்களில் விசிறியின் வேகக் கட்டுப்பாட்டு குமிழ் இருக்கும் (Slow, Medium, High). அது உண்மையிலேயே வேகத்தை கட்டுப்படுத்துகிறதா - கூட்டுகிறதா / குறைக்கிறதா என்று பாருங்கள். வெறும் அலங்காரக் குமிழாகவும் இருக்கலாம்.
தகரம் அல்லது உலோகக் கூலர்கள் தெற்கே அதிகம் கிடைக்காது. கிடைத்தால் துருப்பிடிக்காத உலோகமா என்று பாருங்கள்.
தண்ணீர் ஊற்றும் வசதி எளிதாக இருக்கிறதா என்று பாருங்கள். அதேபோல, தொட்டியில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது, தீர்ந்து விட்டதா என்று எளிதாகப் பார்க்கும் வசதியும் தேவை. ஒவ்வொரு நாளும் கூலரைத் திறந்து பார்க்க முடியாது.
சில கூலர்களில் Humidity Control என்று போட்டு வைத்திருப்பார்கள். பெரும்பாலும் அது ஏமாற்று. விழுகிற தண்ணீரின் அளவை குறைக்கும் அல்லது கூட்டும், மற்றபடி, காற்றின் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் எந்த கன்ட்ரோலும் கூலரில் இருக்காது. ஏமாற வேண்டாம்.


கடந்த ஆண்டு, புத்தம்புதிய கூலரை எங்களுக்கு அன்பளித்த ரவீந்திரமணி-சித்ரா தம்பதிக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

Thursday 23 March 2017

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு

நாங்கள் பள்ளியில் படிக்கிற காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. யாராவது புதிதாக ஏதாவது சொன்னால், “ஆமா... இவரு பெரிய ஜி.டி. நாயுடு!என்பார்கள். அந்த அளவுக்கு ஜி.டி. நாயுடுவின் பெயர் மக்களிடையே பரவியிருந்தது. அரசுப் பள்ளிகளின் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும்போது ஜிடி நாயுடுவின் இல்லம் தவறாமல் இடம்பெற்றிருக்கும். பள்ளி மாணவனாக ஏதோவொரு காலத்தில் சென்று வந்த நினைவுகள் மிகமிக மங்கலாகவே நினைவில் உள்ளன. வளர்ந்த பிறகு அவருடைய இல்லத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைவேற வாய்க்கவே இல்லை. இத்தனைக்கும் அவருடைய வீட்டுக்கு மிக அருகில் போலீஸ் பயிற்சிப் பள்ளியின் கேன்டீனில் பல மாதங்கள் வேலை செய்திருந்தும்கூட அந்த நேரத்தில் வாய்க்கவில்லை. இப்போது வருத்தப்பட்டு என்ன செய்ய?


இந்திய விஞ்ஞானிகளை / கருவிகளைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம், ஜிடி நாயுடு பெயர் நினைவு வரும். அவர் இருந்திருந்தால் இதைக் கண்டுபிடித்திருப்பார் என்று தோன்றும். அவ்வளவு ஏன், பாதாள சாக்கடை சுத்தம் செய்ய இறங்கிய மூன்று பேர் உயிரிழந்த செய்தியை இரண்டு நாட்களுக்கு முன்னால் வாசித்தபோதும் நாயுடுவின் நினைவு வந்தது. அவர் இருந்திருந்தால் நிச்சயமாக ஒரு கருவியைக் கண்டுபிடித்திருப்பார் அதுவும் மிக மலிவாக. இத்தனை பெரிய மனிதர் எப்படி தேசிய அளவில் கவனிக்கப்படாமல் போனார் என்பது இப்போதும் எனக்கு வியப்புதான்.

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எப்போதுமே எனக்கு உண்டு. ஆனால் கிடைப்பவை எல்லாம் ஆதாரங்கள்-அலசல்கள் குறைவாகவும், செவிவழிச் செய்திகள்-மிகைப்படுத்தல் மிகுதியாகவும் கொண்ட வழக்கமான தமிழ் வாழ்க்கை வரலாற்று நூலாகவே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கோவை சென்றிருந்தபோது விஜயா பதிப்பகத்தில் ஒரு சிறிய நூல் கிடைத்தது. அது மேலே சொன்ன ரகம்தான். கடந்த வாரம் ஏதோ தேடும்போது, இணையத்தில் ஒரு புத்தகம் கிடைத்தது. கலைமணி என்பவர் எழுதியது. அதுவும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது. (இந்த நூலை எழுதிய கலைமணி என்பவர், தொழிலாளியாக இருந்து, படிப்படியாக உயர்ந்து, கலைமணி என்ற பெயரில் அச்சு இயந்திரத்தை உருவாக்கி வெற்றி கண்ட அதே நபர்தானா என்று தெரியவில்லை.)

என் காலத்தில் அவருடைய சாதனைகளைப் பற்றிய செய்திகளோடு சாகசங்களைப் பற்றிய கட்டுக்கதைகளும் ஏராளம். சிக்கல் என்னவென்றால், சாகசங்களை நம்பாமலும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவை சாதனைகளோடு கலந்திருக்கும். உதாரணமாக, அவர் ஏராளமான பேருந்துகளை இயக்கி வந்தார். ஒரே எண்ணில் பல வழித்தடங்களில் வாகனங்கள் ஓடுமாம். வருமான வரிக்காரர்கள் ரெய்டு நடத்த வந்தால் பேருந்துகளே மாயமாகி விடுமாம். அண்டர் கிரவுண்டில் அவ்வளவு பெரிய கிடங்கு வைத்திருந்தாராம். சாகசக் கட்டுக்கதைகளுக்கும் மேலே அவருடைய சாதனைகள் இருந்தன என்பது உண்மை. அவற்றில் சிலவற்றின் பயன்களை நானும் அனுபவித்திருக்கிறேன். ஒன்றல்ல இரண்டல்ல, எண்ணற்ற விஷயங்களுக்கு அவர் முன்னோடி. பள்ளிப்படிப்புகூட முறையாக முடிக்காத ஒருவர் எப்படி எண்ணற்ற துறைகளில் கால்பதித்து சாதித்துக் காட்டியிருக்க முடியும் என்ற கேள்விக்கு எவரிடமும் பதில் கிடையாது. சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

ஜி.டி. நாயுடு, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்தவர். பள்ளியில் படிக்க விருப்பமில்லாமல் பாதியில் விட்டவர். ஆங்கிலேயர் ஒருவர் ஓட்டிக்கொண்டு வந்த மோட்டார் பைக்கை தற்செயலாகப் பார்க்க நேர்ந்து, வீட்டைவிட்டு ஓடி கோவைக்கு வந்து, ஹோட்டலில் வேலை செய்து, காசு சேர்த்து, மோட்டார் பைக்கை விலைக்கு வாங்கி, ஊருக்குக் கொண்டு போய் அக்க்க்காகப் பிரித்து மீண்டும் பொருத்தி இயக்கிப் பார்த்தவர். இதிலிருந்து தொடங்குகிறது அவரது சாதனைப் பயணம்.


1920இல் பொள்ளாச்சி-பழனி வழித்தடத்தில் பஸ் ஓட்டுகிறார். அவரே டிரைவர், அவரே கண்டக்டர், அவரே மெக்கானிக்.
அடுத்த சில ஆண்டுகளில் யுஎம்எஸ் என்ற பேருந்து நிறுவனம். இதிலும் என் நினைவிலிருந்து குறிப்பிட வேண்டியது, இந்த நிறுவனம் டீசென்டிரலைஸ் செய்யப்பட்டிருந்தது. உடுலை கிளை பேருந்துகள் யுஎஸ், கோவை கிளை பேருந்துகள் சிஎஸ், தாராபுரம் கிளை பேருந்துகள் டிஎஸ் என எல்லாமே ஒரே மாதிரியான லோகோ கொண்டிருக்கும். பேருந்தின் நடுவே வட்டத்தில் இந்த இரண்டு எழுத்துகளும் இருக்கும். தன்னுடைய பேருந்துகளில் டிக்கெட் கொடுக்க தானியங்கி இயந்திரம் அவரே வடிவைத்தார். இப்போது கண்டக்டர் கையில் வைத்திருக்கும் எலக்டிரானிக் கருவி போல, அப்போது மெக்கானிக்கல் இயந்திரம் இருந்தது.

பாலசுந்தரம் என்பவருடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே முதல் மோட்டார். (இந்த பாலசுந்தரம் டெக்ஸ்டூல் என்ற நிறுவனத்தை அமைத்தார். அதுதான் பிற்காலத்தில் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் ஆக விரிவடைந்தது.)
சர்வதேச அளவில் பரிசு பெற்ற பேட்டரி ரேசர்
மெல்லிய ரேசர் பிளேடு
ஐந்து வால்வு ரேடியோ
கால்குலேட்டர்
புகைப்படக் கருவிக்கு போகஸ் செய்யும் இயந்திரம். லண்டனில் ஜார்ஜ் மன்னர் இறந்தபோது, இறுதிச்சடங்கை முழுமையாக படம்பிடித்தவர்.
1952இல் 2000 ரூபாய்க்கு கார். அரசு அனுமதி தரவில்லை.
வீரிய ஒட்டுவிதைப் பயிர்கள்.


தொழில்துறை, இயந்திரத்துறை, மின்சாரத்துறை, வேளாண்துறை என பல துறைகளிலும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் வேறு எவரும் கிடையாது.

கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடி எல்லாம் அறியப்படாத காலத்திலேயே, தொண்டிலும் தன் கவனத்தை செலுத்தியவர் அவர். சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் என்பவர் மீது கொண்ட மரியாதையால் ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக், ஆர்தர் ஹோப் என்ஜினியரிங் கல்லூரியை நிறுவினார். அதுதான் பின்னாளில் அரசு பொறியியல் கல்லூரி ஆனது. கோவையில் இப்போதும் ஹோப் காலேஜ் என்ற பெயரில்தான் பேருந்து நிறுத்தம் இருக்கிறது. கல்லூரிகளிலும் என்ஜினியரிங் கல்விக்கு நான்காண்டுகள் தேவையில்லை, இரண்டு ஆண்டுகள் போதும் என்பது அவர் கருத்தாக இருந்தது. 15 நாட்களில் என்ஜினியர் ஆக்கும் சிறப்பு படிப்பும்கூட நடத்த முடியும் என்றாராம் அவர்.

அவருடைய மூளையை 2 கோடி ரூபாய்க்கு இன்ஷ்யூர் செய்து வைத்திருந்தார். இல்லை இல்லை, இன்ஷ்யூர் செய்ய விரும்பினார், ஆனால் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் அதற்குத் தயாராக இல்லை. அவர் இறந்த பிறகு, கோவையில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடுத்த சில நாட்கள் கழித்துப் பார்த்தபோது உடலைக் காணவில்லை. அமெரிக்காகாரன் அவருடைய மூளையை ஆராய்ச்சி செய்வதற்காக எடுத்துக்கொண்டு போய்விட்டான். ... இதெல்லாம் எங்கள் மாணவகால கட்டுக்கதைகள்.


இன்று ஜி. துரைசாமி நாயுடுவின் பிறந்தநாள். அவரைப்பற்றிய தகவல்களைத் தேடும்போது, ஜி.டி. நாயுடு நூலகத்தில் 30000 புத்தகங்களும் பத்திரிகைளும் உள்ளன என்று கூறுகிறது ஒரு பத்திரிகைச் செய்தி. கோவையில் உள்ள ஜி.டி. நாயுடு அருங்காட்சியம் பற்றிய தகவலும் கிடைத்தது. வாய்ப்புக் கிடைக்கும்போது அவசியம் பாருங்கள், குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.
G.D Naidu Museum
734, Avinashi Road, President Hall, Coimbatore - 641018

Phone: +91 422 2222548