Friday 2 December 2016

இன்னுமொரு குளிர்காலம்

2014 குளிர்காலத்தில் பேஸ்புக் நண்பர்கள் மூலம் சுமார் 60 ஆயிரம் ரூபாய் திரட்டி சாலையோர மக்களுக்கு இலவச கம்பளிகளை விநியோகித்த படங்களில் இதுவும் ஒன்று
  • நிறுத்தப்பட்டு விட்டன மின்விசிறிகள். இனி அவை பனிக்கரடிகள் போல நீளுறக்கம் காணும் நான்கு மாதங்களுக்கு.
  • காணாமல் போய்விட்டன சமையலறைக் கரப்புகள்
  • பாலும் குழம்பும் மீந்துபோன பழசும் ப்ரிஜ்ஜில் வைக்க மறந்ததற்கான திட்டுகள் தேவைப்படாத காலைகள்.
  • காலை உறக்கம் கலைக்க மறுக்கும் கண்கள், கம்பளியை தலைக்குமேல் இழுத்துக்கொள்ளும் கைகள்.
  • எழுந்தபின்போ, எவ்வளவு உழைத்தாலும் களைத்துப்போகாத உடல்.
  • எரிச்சலைக்கிளப்புகின்றன எட்டு மணிக்கும் திறக்காத பால் கடைகள்.
  • ரத்தாகிய விமானங்கள் பற்றிய செய்திகளைத் தாங்கிவருகின்றன நாளிதழ்கள்.
  • அடுத்த தேநீருக்கு ஏங்க வைக்கிறது கண்முன் இருக்கும் காலிக் கோப்பை.
  • இறக்கி வைத்து விறைப்பாய் அமர்ந்தாலும் ஒரு கால் மேல் தானே ஏறிக்கொள்ளும் மற்றொரு கால்.
  • சுவை கூடிவிட்டது சூடான கடலைக்கு. கடலைத்தொலிகள் கணினியின் விசைப்பலகையில் உதிர்கின்றன. எழுத்துகள் விழ மறுக்கையில் குப்புறப்போட்டு அடித்துத் தட்டி ஊதி ஊதி அடுத்த தேநீர்.
  • பழைய ஸ்வெட்டர்கள் வெளியே வருகின்றன, வழக்கமில்லாத கம்பளிகள் முட்களாய் உறுத்துகின்றன.
  • குளிக்கும்போதும், பனியன் அணியாமல் வெளியே நடக்கையிலும் மார்புக்காம்புகளில் தீப்புண் எரிச்சல்.
  • எகிறப்போகும் ஸ்வெட்டர் செலவுகளை காய்கறிகளின் விலை இறக்கம் ஈடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு.
  • ஒவ்வொரு குளிர்காலத்தில் மட்டும் வேலைகள் எப்படி கூடி விடுகின்றன என்ற விடைதெரியாத புதிரின் பிறப்பு.
  • வீட்டின் அடையா நெடுங்கதவுகள் அடைக்கப்படவேண்டிய அவசியம். ஒவ்வொரு திறப்புக்கும் ஊசியாய் குத்தும் குளிர்காற்று.
  • புகைக்காதவனும் புகைவிட்டுக்கொண்டே நடக்ககிற சாலைகள்.
  • கூடுகிற கரியமிலவாயுவின் கவலையின்றி எரிக்கப்படக் காத்திருக்கின்றன சுள்ளிகளும் சருகுகளும்.
  • கடந்த ஆண்டுகளின் காலநிலைகளுடன் ஒப்பிடுகின்றன ஒன்றரைக்கோடி வாய்கள்.
  • எப்படா இந்த ஊரைவிட்டுப் போவோம்னு இருக்குவசனம் இருபத்தைந்தாவது ஆண்டுவிழா காணப்போகிறது
  • பிப்ரவரியில் குளிர் முடிந்துவிடுமே என்று இப்போதே எனக்குள் எழும் கவலை இருக்க முடியாது சாலையோர சாமானியர்களுக்கு.
பி.கு. - கடந்த ஆண்டும் பேஸ்புக் நண்பர்களின் நிதிதவியால் ஓரளவு கம்பளி விநியோகம் நடந்தேறியது. சேரிகளில் வசிக்கும் தமிழர்களுக்கே பெரும்பாலும் விநியோகம் செய்யப்பட்டது.

Thursday 1 December 2016

செத்துச் செத்து விளையாடலாம்



புழக்கத்தில் இருக்க வேண்டிய ரூபாய் நோட்டுகளை மக்கள் முடக்கி வைக்காமல் இருப்பதற்காக, வங்கிக் கணக்கில் பணம் செலுத்துங்கள், நீங்கள் எவ்வளவு தேவை என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அரசு கூறியுள்ளது. (வாரத்துக்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்ற வரம்பு இதற்குப் பொருந்தாது.) இது உண்மையா என்று ஏராளமானோர் சந்தேகம் கேட்டார்கள்.

இது உண்மை. ஆனால் சரியான புரிதல் தேவை.

பழைய 500 / 1000 ரூபாய் நோட்டுகளை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தியிருந்தால் இது பொருந்தாது. வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட உங்கள் சம்பளம் போன்ற வரவுகளுக்கும் இது பொருந்தாது. 29ஆம் தேதிக்கு முன்னர் உங்கள் கணக்கில் இருக்கிற பணத்துக்கும் இது பொருந்தாது. இதற்கெல்லாம் வாரம் 24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.

29ஆம் தேதிக்கு மேல், நடப்பு தேதியில் செல்லுபடியாகும் ரூபாய் நோட்டுகளை எவ்வளவு செலுத்தினீர்களோ அதை எடுக்கலாம். இதற்கு உச்ச வரம்பு கிடையாது.

அதாவது, புதிய 2000 / 500 ரூபாய் நோட்டுகளாக அல்லது 100 / 50 / 20 / 10 / 5 ரூபாய் நோட்டுகளாக எவ்வளவு செலுத்தியிருந்தாலும் அதை நீங்கள் எடுக்கலாம். நீங்கள் எடுக்கும்போது 2000 / 500 ரூபாய் நோட்டுகளாகத் தரப்படும்.
2. As it is impeding active circulation of currency notes, it has been decided, on careful consideration, to allow withdrawals of deposits made in current legal tender notes on or after November 29, 2016 beyond the current limits; preferably, available higher denominations bank notes of ₹ 2000 and ₹ 500 are to be issued for such withdrawals.


*

இந்த விளக்கம் பலருக்கும் புரியவில்லை. மேலும் சந்தேகம் வந்து கொண்டே இருந்தது. கேள்விகளும் தொடர்ந்தன. எனவே, எளிதாகப் புரிகிற வழக்குத் தமிழில் விளக்குகிறேன்.

பழைய 500 / 1000 ரூபாய் நோட்டுகளை மறந்துடுங்க. ஓகேவா?

நீங்க பேங்க்ல அல்லது ஏடிஎம்ல லைன்ல நின்னு உங்க அகவுன்ட்லிருந்து பணம் எடுத்தீங்க. அதாவது, புது 2000 ரூபாய் நோட்டு எடுத்தீங்க. அல்லது 100 ரூபாய் நோட்டு எடுத்தீங்க. (500 ரூபா நோட்டு எடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏன்னா, அது இன்னும் வரவே இல்லை.) ஓகேவா?

வாரத்துக்கு அதிகபட்சம் 24 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம்னு சொன்னாலும், 2000 / 10000 எடுக்கிறதுக்குள்ளயே கண்ணாமுழி திருகிப் போயிருக்கும். இருந்தாலும் ஏதோ கொஞ்சம் பணம் புது நோட்டா எடுத்திருப்பீங்க. ஓகேவா....?

இப்படி லைன்ல மணிக்கணக்குல நின்னு எடுத்த பணத்தைக் கொண்டுபோய், யார்கிட்டேயாவது கெஞ்சிக்கூத்தாடி சில்லறை நோட்டா மாத்தியிருப்பீங்க. ஓகேவா?

அங்கங்கே செலவு செஞ்சது போக 10 / 20 / 50 ரூபா நோட்டு சில்லறையா சேர்ந்திருக்கும். ஓகேவா?

இப்படி எல்லாரும் ஆளாளுக்கு கையில நோட்டுகளை வச்சுகிட்டா பணம் புழங்குமா? பணம்னா புழங்கிட்டே இருக்கணும்லா?

அதனாலே, லைன்ல நின்னு நீங்க எடுத்த 2000 ரூபா நோட்டு, 10 / 20 / 50 / 100 ரூபாய் நோட்டுகளை கையில் வச்சுக்காதீங்க. நேரா பேங்குக்குப் போயி லைன்ல நின்னு உங்க கணக்குல போட்டுடுங்க. ஓகேவா?

இப்படி 29ஆம் தேதிக்குப் பொறவு, ரொக்கமா கணக்குல நீங்க எவ்ளோ போட்டாலும் அதிலிருந்து எப்போ வேணாலும் எவ்ளோ வேணாலும் எடுக்கலாம். எடுக்கும்போது புது 500 / 2000 நோட்டுகளாகத் தருவாங்க. (வாரத்துக்கு 24 ஆயிரம்தான் எடுக்க முடியும்கிற விதி இதற்குப் பொருந்தாது.)

அதாவது,
லைன்ல நின்னு எடுத்த பணத்தை
லைன்ல நின்னு பேங்க்ல போடுங்க.
மறுபடி லைன்ல நின்னு எடுத்துக்குங்க.

மறுபடி எவன்கிட்டேயாவது கெஞ்சி சில்லறை மாத்துங்க.
மறுபடி லைன்ல நின்னு பேங்க்ல போடுங்க.
அப்புறம் லைன்ல நின்னு எடுத்துக்குங்க.

இவ்ளோதான். எவ்ளோ சிம்பிள் இல்லே?

லைன்ல நின்னு நின்னு வெளையாடலாம். பொழுது போறதே தெரியாதாக்கும். க்க்கும்!

Wednesday 30 November 2016

எங்கே போயின 500 ரூபாய் நோட்டுகள்?



ஐநூறு ரூபாய் நோட்டுகள் வெளிவந்துவிட்டன. இன்னும் நான்கைந்து நாட்களில் நிலைமை சீராகி விடும் என்று கூறப்பட்டு பத்து நாட்களுக்கு மேலாயிற்று. இன்னும் 500 ரூபாய் நோட்டுகளை பலரும் பார்க்கவே இல்லை.

இதற்கிடையில், என்னுடைய வங்கியில் 500 ரூபாய் நோட்டு கிடைத்தது, எந்த சிக்கலும் இல்லை, கூட்டமும் இல்லை என்று சிலர் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுவதைப் பார்க்கும்போது, அவை பெரும்பாலும் தனியார் வங்கிகள். ஆக, தனியார் வங்கிகளுக்கு மட்டும் முன்னுரிமை தரப்பட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள் போய்ச் சேருகின்றன. பொதுத்துறை வங்கிகளுக்குப் போகவில்லை என்ற சந்தேகம் எவருக்கும் எழும். வங்கி அதிகாரிகளுக்கும் இதே சந்தேகம் எழுந்து, அது பத்திரிகைச் செய்தி ஆகியுள்ளது.



டீமானிடைசேஷனை ஆதரித்து எழுதுபவர்களுக்கு மட்டும் எப்படி 500 ரூபாய் நோட்டு எளிதாகக் கிடைக்கிறது? நண்பர் அருண் எழுதிய கற்பனை உரையாடல் :
 *
சார், புது 500 ரூவா நோட்டு கொஞ்சம் ரெடியாயிருக்கு. விநியோகத்துக்கு அனுப்பிரலாமா....?

சீக்கிரம் அனுப்பு. எங்கே அனுப்பறே?

2000 நோட்டே இன்னும் பற்றாக்குறையா இருக்குற எடத்துக்கெல்லாம் உடனே அனுப்புறேன்...

அங்க எதுக்கு அனுப்பனும் ??

உழவுக்கு, உரத்துக்கு, மளிகைக்கு, மருத்துவத்துக்கு இப்படி எல்லாத்துக்கும் பணமா தேவைப்படுற எல்லாரும் அங்கதான வரிசைல நிக்குறாங்க...?

தேவைப்படுறவனுக்கு பணத்தைக் குடுத்தா அதை செலவு பண்ணிட்டு அடுத்த செலவுக்கு மறுபடியும் பணமெடுக்க வரிசைல வந்து நிப்பான்... மீடியாக்காரன் மக்கள் அவதின்னு நியூஸ் போடுவான்.

அப்போ எங்கதான் அனுப்ப ...?

சிட்டில உள்ள ஐடி பார்க்ல உள்ள எல்லா ஏடிஎம்களையும் முதல்ல நிரப்ப சொல்லு... அதுக்கும் மேலே மிச்சமிருந்தா மத்த இடத்துக்கு அனுப்பு.

ஆனா அவங்கதான் மீல் பாஸ், பேடீஎம், கிரெடிட்/டெபிட் கார்டு, ஆன்லைன் பர்சைஸ், டோர் டெலிவரின்னு இருக்காங்களே, அவங்களுக்கு இவ்ளோ லிக்யூட் கேஷ் தேவைப்படாதே...?!

அது எனக்கும் தெரியும். அவசியம் உள்ளவனுக்கு காசு குடுத்தா செலவழிப்பான்.அவசியம் இல்லாதவனுக்கு குடுத்தா அத வச்சு செல்ஃபீ எடுத்து போஸ்ட் போடுவான்...அத பாத்துட்டு இன்னும் நாலு பெரு செல்ஃபீ போடுவான்....
பத்தலைனா நாலு தேசபக்தி கட்டெறும்பை பிடிச்சு சட்டைக்குள்ள விட்டோனு வையி... பொது ஜனம் வரமுடியாத, கேம்பஸ் உள்ளாடி இருக்குற பாங்குக்கு போய் பணம் வித்ட்ரா பண்ணிட்டு வந்து... நான் பத்து நிமிஷம் தான் லைன்ல நின்னேன் பணம் எடுத்துட்டு வந்துட்டேன்... நாட்டுக்காக ஒரு பத்து நிமிஷம் பொறுக்க முடியாதான்னு போஸ்ட் போடுவான்... லைக்கு ஷேர்ன்னு சும்மா பிச்சுக்கும்..... 
அடுத்த பேட்ச் பணம் வர வரைக்கும் நாமளும், பணம் இல்லைன்னு சொல்றதெல்லாம் பொய்... சமூக வலைத்தளத்துல பாருங்க.... எதிர்க் கட்சிகள் மிகை படுத்துறாங்கன்னு சொல்லி சமாளிச்சுட்டே போலாம்....
எது வேணா தீரலாம்... தேசபக்தி எறும்பு மட்டும் எப்பவும் ஸ்டாக் வச்சிருக்கணும்... புரிஞ்சுதா...

நல்லா புரிஞ்சுது சார்...!

Tuesday 29 November 2016

பணத்தாள் நீக்கம் – ஏழைகளின்மீதான மரண அடி



டீமானிடைசஷேன் – ஏழைகளின் சேமிப்புகளை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி
(ஸ்க்ரோல்-இன் கட்டுரையின் தமிழாக்கம்)

பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது ரொக்கப் பணம் தேவைப்படாத நிலை வரும் என்பதைப் பற்றியே பேசுகிறது. இரண்டும் நடந்தால் நல்லது என்பது அதன் உள்ளடங்கிய அர்த்தம். ஆனால், பொருளாதாரத்தின்மீது ஒட்டுமொத்தமாக என்ன தாக்கம் ஏற்பட்டாலும் சரி, வளங்களின் பகிர்வின்மீது மிகப்பெரும் தாக்கம் ஏற்படும் என்பதை இந்த வாதம் புறக்கணிக்கிறது. டீமானிடைசேஷன் என்பது பெரியதொரு வெற்றிடம் சொல்லப்படுவதற்கு நேர் மாறாக - வலிமையற்றவர்களிடம் இருக்கும் வளங்களை செல்வாக்கு மிக்கவர்களுக்குச் சென்றடையுமாறு உறிஞ்சுகிற வெற்றிடம். குறிப்பாக, இந்த மாற்றம் நிரந்தரமானது.

இந்தியர்களில் எத்தனை பேர் முறைசாராத் தொழில்களில் இருக்கிறார்கள் என்ற மதிப்பீடுகள் மாறுபடலாம்; ஆனால் சுமார் 80%-90% முறைசாராத் தொழில்களில்தான் இருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிப்பதும் செலவு செய்வதும் ரொக்கமாகத்தான். இப்போது ஏற்பட்டுள்ள ரொக்கப் பண வறட்சி, இவர்கள் எல்லாரையும் வாட்டும், மற்றவர்களைவிட மிக அசாதாரணமாக வாட்டும்.

அசாதாரணமான தாக்கம் என்பது வீட்டுக்குள்ளிருந்து துவங்குகிறது. குடிகார, அடித்து உதைக்கிற, பொறுப்பற்ற கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட உழைக்கும் பெண்கள், அவசரத் தேவைகளுக்காக பணத்தை ஒளித்து வைத்திருப்பார்கள். இப்போது அந்தப் பணம் முழுக்கவும் தொலைந்து விட்டது, அல்லது வெளியாகி விட்டது. இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி, பெண்ணிடம் இருந்த ஒரு ஆயுதம் போய் விட்டது. அவளை சுரண்டுவது இன்னும் எளிதாகிவிட்டது.

ரபி என்பது குளிர்காலத்தில் விதைத்து, வசந்தத்தில் அறுவடை செய்யும் பயிர். நவம்பர் மத்தியில்தான் ரபி பயிருக்கு விதைக்கும் காலம். விவசாயிகள் விதைக்க முடியவில்லை, பயிர்களை விற்க முடியவில்லை. பணத்தாள் நீக்கம் காரணமாக கூட்டுறவு வங்கிகள் அடைபட்டு விட்டதால் அவர்கள் கடன் கொடுப்பவர்களை நாட வேண்டியதாயிற்று. இதற்காக அவர்கள் அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். கடனை திருப்பிச் செலுத்த முடியாது போனால், நிலமும் கைவிட்டுப் போய்விடும்.

சிறிய தொழிற்சாலைகளில் லேஃஆப் விடப்பட்டு கொத்துக் கொத்தாக ஆட்கள் வேலையிழக்கிறார்கள். அவர்களின் நிலையும் இதுதான், சிறிய தொழிற்கூடங்களின் உரிமையாளர்களின் நிலையும் இதுதான். பணத் தேவைக்காக தனியாரிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டியதாகிறது, விளைவாக, இருக்கிற சொத்துகளை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

உணவு, மளிகை, மருத்துவச் செலவு, அவசரச் செலவு என பழைய நோட்டுகளை மாற்ற வேண்டிய ஒவ்வொருவரும் தரகர்களை அணுக வேண்டியிருந்தது. சனிக்கிழமை நான் டேராடூனில் ஒரு சேரியில் இருந்தேன். அந்த சேரியில் சுமார் 300 குடும்பங்கள் இருந்தன. நான் அங்கே இருந்தபோது குறைந்தது ஐந்து பேர் 500 ரூபாய் நோட்டுக்கு 100 ரூபாய் நோட்டு வேண்டுமெனக் கேட்டு சேரியின் தலைவரிடம் வந்தார்கள். அவர் நேர்மையான மனிதர், கமிஷன் ஏதும் வாங்கவில்லை. ஆனால் பணத் தரகர்கள் இதுதான் நேரம் என்று சுரண்டுகிறார்கள். 500 ரூபாய் நோட்டுக்கு 400 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கு 800 ரூபாய். பணத்தை மாற்றிய எவரும் தம்மிடமிருந்த ரூபாயின் மதிப்பில் 20% ஒரே இரவில் இழந்தார்கள்.

சிறிய வணிகர்கள், சாலையோரக் கடைக்காரர்கள், பெட்டிக் கடைக்காரர்கள் போன்றோர் தமது வியாபாரத்தை ஆன்லைன் வர்த்தகத்திடம் இழந்து விட்டார்கள். பே டிஎம் முறையை பயன்படுத்தலாம் என்றால், அதற்கு ஒரு ஸ்மார்ட் போன் தேவை, 10 ஆயிரத்துக்கு மேல் வருமானம் என்றால் டேக்ஸ் இன்பர்மேஷன் எண் தேவை. சிறு வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகள் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

புழக்கத்தில் இருந்த பணம் முழுவதையும் உறிஞ்சி எடுத்துக்கொண்டதால் வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கின்றன. இதன் காரணமாக முதலீடு அதிகரிக்கும் என்கிறார்கள் சிலர். பணப்பற்றாக்குறை என்றால் டிமாண்டே இல்லை என்னும்போது, முதலீடு எப்படி அதிகரிக்கும் என்று தெளிவில்லை.

ஆனால், வட்டி விகிதம் குறைவதால் பயனடையக்கூடிய ஒரு பிரிவு உண்டு கடன் வாங்கியவர்கள்தான் அவர்கள். எவ்வளவு அதிக கடன் வாங்கினார்களோ அவ்வளவுக்கு லாபம். 2015 மார்ச் கணக்கின்படி, 10 கார்ப்பரேட் நிறுவனங்கள் 7.3 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் கடன் வைத்திருந்தார்கள். வட்டிவகிதம் ஒரு சதவிகிதம் குறைந்தாலும் இந்த ஆண்டு மட்டும் அவர்களுக்கு 7300 கோடி ரூபாய் லாபமாகும். கோடிக்கணக்கான மக்கள் தமது பணத்தைப் பயன்படுத்த முடியாமல் போனதால் மட்டுமே கார்ப்பரேட்களுக்கு இந்த அதிர்ஷடம் கிடைத்திருக்கிறது. பணத்தின் உரிமையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலனை அதைவிட அதிகமாக கார்ப்பரேட்டுகள்தான் அனுபவிக்கிறார்கள்.

எவ்வளவு நோட்டுகள் வங்கிக்கு வரவில்லையோ அவ்வளவும் கறுப்புப் பணம் என்று சிலர் பேசுகிறார்கள். வங்கியை அணுக வசதி இல்லாதவர்கள், முதியவர்கள், கியூவில் நிற்கும் அளவுக்கு நேரத்தை செலவழிக்க இயலாதவர்கள், முறையான அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆகியோரின் கையிருப்பிலிருந்த பணம் வராது. உதாரணமாக, அடையாள அட்டை இல்லாதவர்களை எடுத்துக்கொள்வோம். இந்திய அரசு தருகிற புள்ளிவிவரங்களின்படி பார்த்தாலும் வயது வந்தவர்களில் 5.8 கோடிப் பேரிடம் ஆதார் அட்டை இல்லை. இவர்களிடம் வேறு அடையாள அட்டையும் இருக்காது, வங்கிக் கணக்கும் இருக்காது என்று உறுதியாகச் சொல்ல்லாம். இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் அவசரச் செலவுக்காக ரொக்கப் பணத்தை வைத்திருக்கும். இதுகுறித்த ஒரு கணக்கெடுப்பில், வருமானத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் 59% பேர் பணத்தை ரொக்கமாக வீட்டிலேயே வைத்திருப்பார்கள் என்று தெரிந்தது. இவர்கள் ஒவ்வொருவரிடமும் மாற்ற முடியாத, வங்கியில் போட முடியாத 2000 ரூபாய் இருந்தது என்றால், அதன் மதிப்பு 11,400 கோடி ஆகும்.

மேற்சொன்ன நஷ்டங்கள் எதிலும் 50 நாட்களில் முன்னேற்றம் வந்து விடாது. நிலத்தை இழந்தது, சேமிப்பு போனது, வேலை இழந்தது, கமிஷன் கொடுத்தது, உணவோ மருந்தோ இல்லாமல் மக்கள் இறந்தது இதில் எதுவும் திரும்பி வரப்போவதில்லை. இழப்போ லாபமோ நிரந்தரம். மேலும், பணத்தாள் நீக்கத்தின் காரணமாக பெரும்பான்மை மக்களின் பெருமளவிலான செல்வ வளம் இடம் பெயர்ந்தது எந்தவித உற்பத்தி சார் காணமாகவும் அல்ல. இதனால் பயன் பெறுகிறவர்கள் எவரும் அதற்காக ஒரு துரும்பையும்கூட கிள்ளிப்போட்டவர்களும் அல்ல. அவர்கள் வலிமை உள்ளவர்களாக இருப்பதால் அவர்கள் பெருத்த லாபம் அடைகிறார்கள். அடக்குமுறைப் பொருளாதாரம் என்பதற்கு இதைவிடப் பெரிய விளக்கம் இருக்க முடியாது.

பணத்தாள் நீக்கத்தின் ஆதரவாளர்கள், இது வரி ஏய்ப்பைத் தடுக்கும் என்கிறார்கள். ஆனால் இந்த அரசு வரி ஏய்ப்பை குறித்து கவலைப்படும் என்று எதிர்பார்க்க எந்த நியாயமும் இல்லை. இந்தியாவில் மிகப்பெரிய வரி ஏய்ப்பாளர்கள் பெரிய கம்பெனிகள்தான். உதாரணத்துக்கு, நடப்பில் இருக்கிற மிக முக்கியமான பெரிய வரி ஏய்ப்பு வழக்கு வோடஃபோனுக்கு எதிரானது. 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கு. ஆனால், வோடஃபோன் பயன்படுத்தி வந்த சட்டத்தின் ஓட்டையை அடைப்பதற்காக 2012இல் கொண்டு வந்த விதி General Anti-Avoidance Rules செயல்படுத்தப்படவே இல்லை. முந்தைய காங்கிரசும் சரி, 2014இல் வந்த பாஜக அரசும் சரி, இந்த விதிகளை நடைமுறைப்படுத்துவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்துள்ளன. 2017 ஏப்ரலுக்கு முந்தைய விவகாரங்களில் இந்த விதி செல்லுபடியாகாது என்று இந்த அரசு இப்போது அறிவித்திருக்கிறது! வரி ஏய்ப்புக்காக தண்டனை விதிப்பது என்பது சூட்கேஸ்களில் பணத்தை வைப்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் போலும்!

திடீர் வரி வருவாய் பெருக்கம் அல்லது ரிசர்வ் வங்கி அரசுக்கு டிவிடென்ட் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் தற்காலிகமாக சில நலத் திட்டங்களை அறிவிக்கச் செய்யலாம். ஆனால் பணத்தாள் நீக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்யக்கூடிய வகையில் பொதுநலத் திட்டங்களில் இந்த அரசு செலவு செய்யாது, செலவு செய்யக்கூடிய அரசியல் நோக்கமும் அதனிடம் கிடையாது. பணத்தாள் நீக்கம் என்பது ஏழைகளுக்கு உதவுவதற்காக வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிரான போர் என சித்திரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியப் பொருளாதாரத்தை இன்னும் ஏற்றத்தாழ்வு கொண்டதாகவே இது மாற்றும். பாதிப்புக்கு ஆளாகும் பெரும்பான்மை மக்கள் சமூகம் இன்னும் அதிக பாதிப்புக்கு ஆளாகும்.

சந்தேகமில்லாமல் இது அதிரடிதான் ஏழைகள் மீதான மரண அடி.