2014 குளிர்காலத்தில் பேஸ்புக் நண்பர்கள் மூலம் சுமார் 60 ஆயிரம் ரூபாய் திரட்டி சாலையோர மக்களுக்கு இலவச கம்பளிகளை விநியோகித்த படங்களில் இதுவும் ஒன்று |
- நிறுத்தப்பட்டு விட்டன மின்விசிறிகள். இனி அவை பனிக்கரடிகள் போல நீளுறக்கம் காணும் நான்கு மாதங்களுக்கு.
- காணாமல் போய்விட்டன சமையலறைக் கரப்புகள்
- பாலும் குழம்பும் மீந்துபோன பழசும் ப்ரிஜ்ஜில் வைக்க மறந்ததற்கான திட்டுகள் தேவைப்படாத காலைகள்.
- காலை உறக்கம் கலைக்க மறுக்கும் கண்கள், கம்பளியை தலைக்குமேல் இழுத்துக்கொள்ளும் கைகள்.
- எழுந்தபின்போ, எவ்வளவு உழைத்தாலும் களைத்துப்போகாத உடல்.
- எரிச்சலைக்கிளப்புகின்றன எட்டு மணிக்கும் திறக்காத பால் கடைகள்.
- ரத்தாகிய விமானங்கள் பற்றிய செய்திகளைத் தாங்கிவருகின்றன நாளிதழ்கள்.
- அடுத்த தேநீருக்கு ஏங்க வைக்கிறது கண்முன் இருக்கும் காலிக் கோப்பை.
- இறக்கி வைத்து விறைப்பாய் அமர்ந்தாலும் ஒரு கால் மேல் தானே ஏறிக்கொள்ளும் மற்றொரு கால்.
- சுவை கூடிவிட்டது சூடான கடலைக்கு. கடலைத்தொலிகள் கணினியின் விசைப்பலகையில் உதிர்கின்றன. எழுத்துகள் விழ மறுக்கையில் குப்புறப்போட்டு அடித்துத் தட்டி ஊதி ஊதி அடுத்த தேநீர்.
- பழைய ஸ்வெட்டர்கள் வெளியே வருகின்றன, வழக்கமில்லாத கம்பளிகள் முட்களாய் உறுத்துகின்றன.
- குளிக்கும்போதும், பனியன் அணியாமல் வெளியே நடக்கையிலும் மார்புக்காம்புகளில் தீப்புண் எரிச்சல்.
- எகிறப்போகும் ஸ்வெட்டர் செலவுகளை காய்கறிகளின் விலை இறக்கம் ஈடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு.
- ஒவ்வொரு குளிர்காலத்தில் மட்டும் வேலைகள் எப்படி கூடி விடுகின்றன என்ற விடைதெரியாத புதிரின் பிறப்பு.
- வீட்டின் அடையா நெடுங்கதவுகள் அடைக்கப்படவேண்டிய அவசியம். ஒவ்வொரு திறப்புக்கும் ஊசியாய் குத்தும் குளிர்காற்று.
- புகைக்காதவனும் புகைவிட்டுக்கொண்டே நடக்ககிற சாலைகள்.
- கூடுகிற கரியமிலவாயுவின் கவலையின்றி எரிக்கப்படக் காத்திருக்கின்றன சுள்ளிகளும் சருகுகளும்.
- கடந்த ஆண்டுகளின் காலநிலைகளுடன் ஒப்பிடுகின்றன ஒன்றரைக்கோடி வாய்கள்.
- “எப்படா இந்த ஊரைவிட்டுப் போவோம்னு இருக்கு” வசனம் இருபத்தைந்தாவது ஆண்டுவிழா காணப்போகிறது
- பிப்ரவரியில் குளிர் முடிந்துவிடுமே என்று இப்போதே எனக்குள் எழும் கவலை இருக்க முடியாது சாலையோர சாமானியர்களுக்கு.
இன்னுமொரு குளிர்காலம் வரிகள் எல்லாம் சுவை...
ReplyDeleteஇரண்டு நாட்களாக பனிமூட்டம் அதிகரித்து இருக்கிறது. குளிரால் அவதிப் படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சோகம்...
ReplyDelete