Saturday, 1 November 2014

நிலமும் நீரும் - இரு திரைப்படங்கள்



நிலம்
கத்தி திரைப்படம் வந்ததும் கார்ப்பரேட்-கோலா-ஏமாற்று என நிறையவே விவாதிக்கப்பட்டு விட்டது. கார்ப்பரேட் உலகம் என்பது கத்தி படத்தில் காட்டப்படுவது போல கேனத்தனமாகத் திட்டமிடுவோர் அல்ல. மிகத் தெளிவ்வ்வாகத் திட்டம் போடுகிறவர்கள். அதுவும் எப்படி... தனக்கான எதிரியைக்கூட தானே உருவாக்குகிற அளவுக்கு திட்டமிடக்கூடியவர்கள் என்பதையும் காட்டுவதுதான் Promised Land - 2012இல் வந்த திரைப்படம்.


குளோபல் என்னும் இயற்கை எரிவாயு நிறுவனம், ஒரு சிறிய நகரத்தின் கீழே புதைந்திருக்கும் எரிவாயுவை எடுக்கும் தனது திட்டத்திற்காக அந்த நகரத்தின் நிலத்தை விலைபேச முனைகிறது. அதற்காக இருவரை அனுப்புகிறது. முக்கியமனவர் ஸ்டீவ் பட்லர் - கதாநாயகன். நடித்தவர் மேட் டாமன். துணைக்கு அவரைவிட மூத்த சூயி தாமசன். (Good Will Hunting இயக்குநர்தான் இதையும் இயக்கியவர்.)

தன் கிராம அனுபவத்தால், இயந்திரமயமும் தொழில்மயமும்தான் தாக்குப்பிடிக்கும் என்று நம்புகிற ஆளாக இருக்கிறார் ஸ்டீவ். இதையே எடுத்துக்கூறி, அந்த நகரத்தின் மேயரையும் கைக்குள் போட்டுக்கொண்டு மக்களை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். அங்கே முளைக்கிறார் ஒரு புது வில்லன். வில்லன் என்றால் தமிழ்த்திரைப்பட வில்லன் அல்ல. பள்ளி ஆசிரியர். எரிவாயு எடுக்கும் ஃபிரேக்கிங் திட்டத்தின் பாதகங்களை எடுத்துக்கூறி ஸ்டீவை மடக்குகிறார்.

பிறகுதான் ஸ்டீவுக்குத் தெரிகிறது அவர் சாதாரண ஆசிரியர் அல்ல. தேர்ந்த பொறியாளர், கல்லூரியில் பணியாற்றியவர், பொழுதுபோக்குக்காக மாணவர்களுக்கு இலவசமாக கல்வி புகட்டும் ஆசிரியராக இருப்பவர்.

ஸ்டீவ் ஒவ்வொரு வீடாகப் போய் விலைபேசி சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இடையில் ஆலிஸ் என்ற ஆசிரியரையும் சந்திக்கிறார். ஆலிஸ் ஆக நடித்தவர் - ரோஸ்மேரி டீவிட். (ஆலிஸ் மீது நீங்கள் யாரும் காதல் கொள்ளாதிருக்கக்கடவது.)


திடீரென்று அங்கே முளைக்கிறார் மற்றொருவர். ஏதெனா என்னும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த டஸ்டின் நோபிள். இதேபோன்ற திட்டத்தால் தன் கிராமம் எப்படி அழிந்தது, கால்நடைகள் செத்தொழிந்தன என்று படங்களுடன் விளக்குகிறார். "Global - Go Home" என்று நோட்டீஸ் அடித்து விநியோகிக்கிறார், போஸ்டர் ஒட்டுகிறார், தெருவுக்குத் தெரு தட்டிகளை வைக்கிறார். இடையே ஆலிசுடன் நட்பும் பாராட்டுகிறார். ஸ்டீவுக்கும் டஸ்டினுக்கும் பனிப்போர் நடக்கிறது.

இதற்கும்மேல் கதையை விளக்குவது தேவையற்றது. ஸ்டீவின் முயற்சி வெற்றி பெறுகிறதா என்பதை சின்னத் திரையில் அல்லது கணினித்திரையில் காண்க.
*
பி.கு. இந்தத் திரைப்படத்திலும் ஒரு சர்ச்சை உண்டு. இப்படத்திற்கு ஸ்பான்சர் இமேஜ் நேஷன், அபு தாபியில் உள்ள நிறுவனம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு சொந்தமான பொழுதுபோக்கு ஊடக நிறுவனம். மை நேம் ஈஸ் கான் உள்பட பல திரைப்படங்களுக்கு நிதியுதவி செய்துள்ளது. எண்ணெய்வள நாட்டின் இந்த நிறுவனம் ஏன் அமெரிக்க எரிவாயு நிறுவனத்துக்கு எதிரான படத்துக்கு நிதியுதவி செய்தது என்பதே அந்த சர்ச்சை. அமெரிக்க நிறுவனங்கள், இந்தத் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்குகளில் தமது விளம்பரங்களையும் வெளியிட்டன என்பது தனிக்கதை. எண்ணெய் நிறுவனங்கள் எப்படி மக்கள்நலத் திட்டங்களைக் கையாள்கின்றன என்பதை விளக்கி, The Real Promised Land என்றே ஒரு பேஸ்புக் பக்கம்கூட இருக்கிறது. பெரும்பாலான வணிக இதழ்கள் இந்தப்படம் தவறான தகவல்களைத் தருகிறது என்று விமர்சனம் செய்தன. இருப்பினும், பிராமிஸ்டு லேண்ட் பல சுற்றுச்சூழல் விருதுகளையும் பெற்றது. சில விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அவசியம் பாருங்கள்.

*

யாகூ
Promised Land திரைப்படம் குறித்து பேஸ்புக்கில் பதிவு எழுதியபோது நண்பர் ஒருவர் Even the Rain படத்தைப் பாருங்கள் என்று கருத்துக் கூறினார். பார்த்தேன், பகிர்கிறேன்.

மெக்சிகோவைச் சேர்ந்த இயக்குநர் செபாஸ்டியன் (கேய்ல் கார்சியா பெர்னால்), தயாரிப்பாளர் கோஸ்டா (லூயிஸ் டோசார்) இருவரும் தம் திரைப்படத்தை தயாரிப்பதற்காக குழுவுடன் பொலிவியாவுக்கு வருகிறார்கள்.

முதல்முதலாக அமெரிக்காவைக் கண்டுபிடித்து (?!) கப்பலில் வந்து இறங்கிய கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டினர் எப்படி இந்தியர்களை அடிமைப்படுத்தினார்கள், சுரண்டினார்கள், கிறித்துவத்தைப் பரப்பினார்கள், வெற்றி கொண்டார்கள், பழங்குடிகள் எப்படிகலகம் செய்கிறார்கள் என்பதே அவர்கள் எடுக்க இருக்கும் திரைப்படத்தின் கதை. (இந்தியாவைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டு கப்பலில் அமெரிக்காவில் இறங்கிய கொலம்பஸ் அதுதான் இந்தியா என்று நினைத்துக்கொண்டதால், அமெரிக்கப் பழங்குடிகளை இந்தியர் என அழைத்தனர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)

திரைப்படக் குழுவினர் வந்து சேரும் இடம் கோச்சாபம்பா எனும் நகரம். பொலிவியாவைத் தேர்வு செய்யக் காரணம், அந்நாட்டின் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும்தான். ஆளுக்கு நாள் ஒன்றுக்கு வெறும் 2 டாலர் கூலியில் உள்ளூர் மக்களை நடிகர்களாகத் தேர்வு செய்கிறார்கள். முக்கியப் பாத்திரத்திற்கு - இந்தியப் பழங்குடிகளின் முக்கியத் தலைவன் பாத்திரத்திற்கு - டேனியலைத் (ஜுவான் கார்லோஸ் அடுவிரி) தேர்வு செய்கிறார் செபாஸ்டியன். காரணம் சுவையானது.

 
படத்துக்கான ஆட்களைத் தேர்வு செய்யும்போதே எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார் டேனியல். தேவைக்கும் அதிகமாக நபர்கள் வந்துவிடுவதால், தேர்வு செய்தவர்கள் தவிர எல்லாரும் போகலாம் என்கிறார் தயாரிப்பாளர் கோஸ்டா. அந்த இடத்திலேயே கலகக்குரல் எழுப்புகிறார் டேனியல். எல்லாரையும் ஆடிஷன் செய்தே தீர வேண்டும் என்கிறார். டேனியலின் முக அமைப்பு, கண்களில் தெரியும் கோபம், கூடவே இருக்கும் அவருடைய மகள் பெலேன் - இவை எல்லாம் செபாஸ்டியனுக்கு பிடித்துப்போக, அவரைத் தேர்வு செய்து விடுகிறார். கொலம்பஸ் படத்தில் தந்தையின் கையை வெட்டுவதைக் கண்டு துடிக்கும் மகளாக சிறுமி பெலேன் தேவைப்படுகிறாள். "டேனியலை தேர்வு செய்ய வேண்டாம், இவரால் பிரச்சினை வரும்" என்கிறார் கோஸ்டா. செபாஸ்டியன் அவரை வற்புறுத்தி இணங்க வைக்கிறார்.

படப்பிடிப்பு முன்னேறிக்கொண்டிருக்கும்போது வேறொரு பிரச்சினை முளைக்கிறது. படத்தில் நடிக்கும் பெரும்பாலான ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் கிடைப்பதில்லை. அதற்காக அவர்களே ஒரு வாய்க்கால் வெட்டி, 7 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவர ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் கிணற்றுக்கு மூடிபோட்டு பூட்டிவிடுகிறது அரசாங்கம். கோச்சாபம்பா நகரின் தண்ணீர் தனியார்மயமாக்கப் படுவதே காரணம். அரசு தனியாருக்கு சாதகமாக இருக்கிறது. எனவே மக்கள் போராட்டத்தில் இறங்குகிறார்கள், டேனியல்தான் முக்கியப் பங்கு வகிக்கிறார். காவல்துறையின் தாக்குதலில் அடிபடுகிறார்.

இதைப்பார்த்ததுமே தயாரிப்பாளர் கோஸ்டா நொந்து போகிறார். முக்கியமான சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டியிருக்கிறது. எனவே, படம் எடுத்து முடிக்கும்வரை - 3 வாரங்களுக்கு போராட்டத்தில் கலந்து கொள்ளாதே என்று கூறி அதற்காக 5000 டாலர் பணமும் தருகிறார். பணத்தை வாங்கிக்கொண்ட டேனியல் அதை போராட்டத்துக்காக பயன்படுத்துகிறார். அடுத்தமுறை போராட்டத்தின்போது டேனியல் அடியும் வாங்கி கைதும் செய்யப்படுகிறார். கோஸ்டா காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து, ஒருநாள் படப்பிடிப்புக்கு அவரை அழைத்துச் செல்கிறார். அந்தக் காட்சியில் கொலம்பஸின் ஆட்கள் பழங்குடிகள் மனதில் அச்சத்தை மூட்டுவதற்காக எதிர்க்குரல் கொடுப்பவர்களை தீயிட்டுக் கொல்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்ததுமே போலீசார் டேனியலை மீண்டும் பிடித்துச்சென்று விடுகிறார்கள்.

அதற்குள் நகரில் போராட்டம் வலுக்கிறது. நகரம் முற்றுகையிடப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடக்கிறது. போராட்டக்காரர்கள்மீது காவல்துறையின் வன்முறையைக் கண்டு பயந்துபோன படப்பிடிப்புக்குழுவின் சிலர் இனியும் இங்கே இருந்தால் உயிர் பிழைக்க முடியாது, நாங்கள் போகிறோம் என்கிறார்கள். அவர்களை ஒருவழியாக சமாதானப்படுத்தி நகருக்கு அப்பால் வேறொரு இடத்தில் படப்பிடிப்பை முடிப்போம் என்று எல்லாரும் புறப்படுகிறார்கள்.

காரில் ஏற இருக்கும்போது வருகிறார் டேனியலின் மனைவி. அவருடைய மகள் சிறுமி பெலேன் போராட்டத்தில் கலந்து கொண்டு படுகாயம் அடைந்து விட்டாள். அவளைக் காப்பாற்ற நீங்கள் வந்தால்தான் முடியும் என்கிறார். செபாஸ்டியன் இது சாத்தியமே இல்லை என்று மறுக்கிறார். தர்மசங்கடமான நிலையில் கோஸ்டாவும் முதலில் மறுக்கிறார். கடைசியில் நீங்கள் முன்னே செல்லுங்கள், நான் சீக்கிரம் வருகிறேன் என்று குழுவினரை அனுப்பிவைக்கிறார். டேனியலின் மனைவியுடன் பெலேனைத் தேடப் புறப்படுகிறார், காலில் படுகாயம் அடைந்தவளைக் கண்டுபிடிக்கிறார், மருத்துவமனையில் சேர்க்கிறார்.

படப்பிடிப்புக் குழுவின் வாகனங்கள் நகரை விட்டு வெளியேற ராணுவம் அனுமதி மறுக்கிறது. படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் தம் நாட்டுக்குப்போக முடிவு செய்து விமானநிலையத்துக்குப் போய்விடுகிறார்கள். செபாஸ்டியன் அங்கேயே நின்று விடுகிறார், கூடவே நின்றுவிடுகிறார் கொலம்பஸாக நடித்த ஆன்டன்.

இதற்கிடையில், போராட்டத்தை சமாளிக்க முடியாத அரசு, தனியார்மயத்தைக் கைவிடுகிறது.

படத்துக்கான செட்டிங்குகள் இருந்த இடத்துக்குச் செல்கிறார் கோஸ்டா. அங்கே வருகிற டேனியல், கோஸ்டாவுக்கு ஒரு பரிசுப்பெட்டியைத் தருகிறார். படம் என்னவாகும் என்று கேட்கிறார் டேனியல். செபாஸ்டியனுக்காக எப்படியும் ஒருநாள் முடிப்போம் என்கிறார் கோஸ்டா. இருவரும் விடைபெற்றுக்கொள்கிறார்கள். காரில் போகும்போது பெட்டியைத் திறந்து பார்க்கிறார் கோஸ்டா. அதில் இருக்கிறது ஒரு சிறிய கண்ணாடிப்புட்டி. அதில் இருக்கிறது - யாகூ - தண்ணீர்.

Even the Rain - தலைப்புக்கு என்ன பொருள் என்று கேள்வி வருகிறது அல்லவா...?
போராட்டக்காரர்கள் மத்தியில் பேசும்போது டேனியல் சொல்கிறார் -
அவர்கள் சட்டத்தின் பெயரால் நம் கிணறுகளை விற்கிறார்கள், நமது ஏரிகளை விற்கிறார்கள், ஏன்... நம் தலையில் விழுகிற மழையையும்கூட. ஆம், மழையினால் கிடைக்கும் தண்ணீரைக்கூட நாம் எடுக்க முடியாது என்கிறார்கள்... யார் மழையை எடுத்துச் செல்கிறார்கள்... லண்டனிலும் கலிபோர்னியாவிலும் இருக்கிற ஒரு கம்பெனி. நம்மிடமிருந்து இன்னும் எதைப் பறிக்கப் போகிறார்கள்.... நம் மூச்சிலிருந்து கிடைக்கும் ஆவியையா...? நம் நெற்றியில் வழியும் வியர்வையையா...?

திரைப்படத்துக்குள் திரைப்படம் என்ற பாணி ஏதும் புதியதல்ல. தமிழிலும்கூட பார்த்திருக்கிறோம். ஆனால் இது முற்றிலும் வேறு ரகம். கதாநாயகர்களை ஒரு உயர்வான பிம்பத்தில் வைத்துப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் நாம். திரைநாயகன் உண்மையிலும் நாயகனாக இருக்க வேண்டியதில்லை என்பதைக் காட்டிய அண்மைக்காலப் படம் - பயணம். ஆனால் அது வெறும் நகைச்சுவைக் காட்சி. அதே கருத்தை இந்தத் திரைப்படத்தில் மூன்று பாத்திரங்களில் நுணுக்கமாகப் பார்க்க முடிகிறது.
1. கொலம்பசின் கொடுமைகளுக்கு ஆளாகும் பழங்குடிகளுக்கு ஆதரவாக கொலம்பசையே எதிர்த்துக் குரல் கொடுப்பவராக வருகிறார் ஒரு பாதிரியார் - அதாவது, பாதிரியாராக நடிப்பவர். தண்ணீருக்காகப் போராடும் மக்களைக் கண்டு பயந்து படப்பிடிப்பும் வேண்டாம் எதுவும் வேண்டாம் ஊருக்குப்போகிறேன் என்று முதல்ஆளாக நிற்பவர் அதே பாதிரிதான்.


2. திரைப்படத்திற்குள் திரைப்படத்தில் கொலம்பசாக நடித்தவர் - இந்தப் படத்தில் ஆன்டன் என்ற பெயரில் மிடாக்குடியராக இருப்பவர் - கார்ரா எலிஜால்டே. கொலம்பஸ் வேடத்தில் கொடூரமானவர். ஆனால் கடைசிக் காட்சியில் திரைப்படக்குழுவினர் எல்லாரும் உயிராசையில் ஓடிப்போன பிறகு செபாஸ்டியனோடு நின்றுவிடுகிறார். ராணுவத்தினர் ஒரு லாரியில் கைது செய்து வைத்திருக்கும் போராட்டக்காரர்களுக்கு, ராணுவத்தினர் தடுப்பதையும் மீறி தன்கையில் இருந்த குளிர்பானத்தைத் தருகிறார்.

3. உள்ளூர்ப் பழங்குடிகளுக்கு தண்டனை தர சிலுவை அமைக்கப்படுகிறது. பெரியதொரு சிலுவையை நிறுவ சிரமப்பட வேண்டியிருக்கிறது. உள்ளூர் ஆட்களை வைத்தே அதைச் செய்து முடிக்கிறார் தயாரிப்பாளர் கோஸ்டா. ஏதாவது அசம்பாவிதம் ஆனால் என்ன செய்வது, கிரேன் பயன்படுத்திச் செய்திருக்க வேண்டும் என்று கேட்கிறார் செபாஸ்டியன். இதில் மட்டும் 30,000 டாலர் மிச்சம் என்கிறார் கோஸ்டா. அதே கோஸ்டாதான், டேனியலின் மனைவியின் அழுகையைக் காணப் பொறுக்காமல் திரைப்படத்தை விட்டுவிட்டு சிறுமியைத் தேடச் செல்கிறார்.

அற்புதமான ஒளிப்பதிவு, அர்த்தம் பொதிந்த வசனங்கள், சிறப்பான எடிட்டிங், புதிய உத்தி என பலவகைகளிலும் இந்தப்படம் சிறப்புப்பெறுகிறது.

அட... இதெல்லாம் பொலிவியாவில்தானே என்று நினைக்கத் தேவையில்லை. இங்கும் தண்ணீர் தனியார்மயம் ஆகியிருக்கிறது. இன்னும் ஆகவும் போகிறது. ஹ... சும்மா பயப்படுத்தாதீங்க... இந்தியாவில் எல்லாம் இப்படி நடக்காது என்று நினைப்பவர்கள் கொஞ்சம் இணையத்தில் அலசலாம்.

ஆர்வமும் வாய்ப்பும் இருப்பவர்கள் அவசியம் பாருங்கள்.

1 comment:

  1. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் பார்க்கிறேன் நண்பரே

    ReplyDelete