Tuesday, 25 November 2014

‘கறுப்புப் பணம்’ என்றால் என்ன?



சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தைக் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, மோடி அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது.
 
பேராசிரியர் அருண் குமார்
வெளிநாடுகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன, குறிப்பாக தேர்தல் நேரங்களில் நிறையவே ஊகங்கள் பரவும். ‘கறுப்புப் பணம் என்றால் என்ன? அதை எவ்வாறு திரும்பப் பெறுவது? தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அருண் குமார் கறுப்புப் பொருளாதாரத் துறை வல்லுநர். அவருடன் உரையாடுகிறார் சுபோத் வர்மா.

கறுப்புப் பணம் என்பதை எப்படி வரையறை செய்யலாம்?
சரியாகச் சொல்வதானால், கறுப்புப் பொருளாதாரம் எனும் பிரம்மாண்டத்தின் சிறியதோர் அங்கம்தான் கறுப்புப் பணம். சட்டரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ பெறப்பட்ட, கணக்கில் காட்டப்படாத வருமானங்களும், அந்த வருமானத்தை நுகர்வுக்காக அல்லது முதலீட்டுக்காகப் பயன்படுத்துவதும் கறுப்புப் பொருளாதாரம் ஆகும். இந்தப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி பணம் என்ற வடிவில் இருக்கும்போது அது கறுப்புப் பணம் என அழைக்கப்படுகிறது. 

லஞ்சம் ஊழல் போன்ற சட்டவிரோத வழிகளில் திரட்டப்பட்டதுதான் கறுப்புப் பணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், இது கறுப்புப் பணத்தின் ஒரு சிறிய பகுதிதான். ஒரு தனிப்பயிற்சி ஆசிரியரோ, ஒரு மருத்துவரோ பணம் சம்பாதித்தால் அது சட்டவிரோதம் அல்ல. ஆனால், அந்தப் பணத்தை தன் வருமான வரிக் கணக்கில் காட்டவில்லை என்றால் அது கறுப்புப் பணம் ஆகிறது. இது பொதுச் சமூக அளவில் காணப்படும் முறையாகும். ஒரு சர்க்கரை ஆலை முதலாளி, வாங்குகிற கரும்பு, அல்லது சாறு, அல்லது சர்க்கரையின் கணக்கை எடை குறைத்துக் காட்டுகிறார், குறைந்த உற்பத்தி செய்ததாகக் காட்டுவதற்காக எக்சைஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம் கொள்முதல், உற்பத்தி மற்றும் விற்பனை என ஒவ்வொரு கட்டத்திலும் கணக்கில் வராத வருமானம் அவருக்குக் கிடைக்கிறது.

இந்தியாவில் உள்ள கறுப்புப் பொருளாதாரத்தின் அளவு என்ன, அதில் எவ்வளவு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது?
இந்தியப் பொருளாதாரத்தில் 50%க்கும் அதிகம் கறுப்புப் பொருளாதாரம் என்பது என் மதிப்பீடு. இதில் பாதி நுகர்வில் செல்கிறது, மீதிப் பாதி சேமிப்பில் இருக்கிறது. இந்தச் சேமிப்பில் சுமார் 20% நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. அதாவது, மொத்த கறுப்புப் பொருளாதாரத்தில் 10% வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது என்று கூறலாம். இதில் ஒரு பகுதி அங்கேயே (ஆடம்பரப் படகுவீடுகள், பங்களாக்கள் அல்லது சுற்றுலா செல்வது போன்றவற்றில்) செலவும் செய்யப்படுகிறது. இன்னொரு பகுதி இந்தியாவுக்கே திரும்பிக் கொண்டுவரப்படுகிறது – அது ஹவாலா மூலமாகவோ, மொரீஷியஸ் போன்ற சிறிய நாடுகளின் வழியாகவோ இருக்கலாம். இவ்வாறு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட பணம் முழுவதும் மீண்டும் இந்தியாவில் திரும்ப முதலீடு செய்யப்படுமானால், அதன் தொகை சுமார் $2 டிரில்லியன் (சுமார் 120 லட்சம் கோடி ரூபாய்) இருக்கலாம். அவ்வளவும் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூற முடியாது.  

வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை எப்படி மீட்பது?
முதலாவதாக, கறுப்புப்பணம் வெளிநாட்டில் உள்ளது, அதை மீட்க வேண்டும் என்பதே ஒரு திசைதிருப்பல்தான். கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி இங்கே, இந்தியாவிலேயே, உள்நாட்டிலேயே இருக்கிறது!  வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர் அடிமுட்டாளாக இருந்தாலொழிய, அங்கிருந்து கொண்டு வருவது அசாத்தியம். இன்னொன்றும் சொல்ல வேண்டும் – வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் எல்லாரும் கிரிமினல்கள் அல்ல. கணக்குக் காட்டாத, வரி செலுத்தப்படாத பணமாக இருந்தால் அதைக் கண்டுபிடிப்பதும் நடவடிக்கை எடுப்பதும் அவசியம்தான். ஆனால், இரண்டு நாடுகளுக்கு இடையே இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பது, தகவல்களைப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றில் எந்த ஒப்பந்தம் போட்டாலும் சரி, கணக்கு வைத்திருப்பவர்களின் உண்மை விவரங்கள் கிடைத்து விடாது. கறுப்புப் பணம், போலி நிறுவனங்கள் வாயிலாக பல படிநிலைகளைத் தாண்டித்தான் ஏமாற்று வழியில் வெளியே கொண்டு செல்லப்படுகிறது. ஸ்விஸ் வங்கியிடம் கேட்டால், தம்மிடம் உள்ள சில பெயர்களை அவர்கள் தரக்கூடும், ஆனால் இவர்கள் மட்டுமே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் என்று ஆகாது. உண்மையில் பதுக்கி வைத்திருப்பவர்களைப் பிடிக்க இங்கே செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு. ஸ்விட்சர்லாந்தில் யுபிஎஸ்-இல் பணம் பதுக்கி வைத்த தனது குடிமக்கள் விவகாரத்தில் அமெரிக்கா அதைத்தான் செய்தது. அவர்கள் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடுக்கப்பட்டது, அதை ஸ்விஸ் அரசுக்குக் கொடுத்தது. இந்தியாவும் அதேபோலச் செய்தாக வேண்டும். 

அல்லது, லிக்டென்ஸ்டெயின் வங்கியில் யாரோ கணக்கு விவரங்களைத் திருடி வெளியிட்டதுபோல யாராவது திருடி வெளியிடமாட்டார்களா என்று காத்திருக்க வேண்டியதுதான்!

கறுப்புப் பணத்தைத் துரத்துவதில் தற்போதைய அரசு முனைப்பாக இருப்பது போலத் தெரிகிறது. இது பலன் தருமா?
1948 முதல் இன்று வரை சுமார் 40 கமிட்டிகளும் கமிஷன்களும் இதற்காக அமைக்கப்பட்டு விட்டன. ரெய்டுகள் நடத்தப்பட்டன, பொதுமன்னிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பயன் என்னவோ பூஜ்யம்தான். உச்சநீதிமன்றத்தின் நிர்ப்பந்தத்தால் அரசு அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகம் பயன் தராது என்பதே என் கருத்து. ஏனென்றால், நடப்பில் உள்ள வழக்குகளை, தன்னிடம் தரப்பட்ட விவரங்களை மட்டுமே அது பரிசீலிக்கப்போகிறது.

இந்த நாட்டை பல்வேறு சுயநல சக்திகள்தான் இயக்கிக் கொண்டிருக்கின்றன – வர்த்தக நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அரசின் அதிகார வர்க்கம் ஆகியவை அவை. இந்த மூன்றுக்கும் இடையே உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை ராடியா டேப் விவகாரம் அப்பட்டமாகக் காட்டி விட்டது. இந்தக் கூட்டணிதான் கறுப்புப் பணத்தின் உண்மைப் பயனாளி. எனவே, கறுப்புப் பணப் பிரச்சினையைத் தீர்க்க இதற்கு முன்னர் இருந்தவர்களுக்கும் அரசியல் உறுதி இருக்கவில்லை, இப்போதைய அரசுக்கும் அந்த அரசியல் உறுதி இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அப்படிச் செய்ய வேண்டுமானால், ஹவாலா ஆபரேட்டர்கள் மீதும், சட்டவிரோதமான பணப் புழக்கத்தில் ஈடுபட்டிருப்போர் மீதும் மோடி ரெய்டு நடத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! தீவிரமான மக்கள் இயக்கம் மட்டுமே கறுப்புப் பொருளாதாரத்தின்மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியாளர்கள் மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். 

வரிகள் குறைக்கப்பட்டால் கறுப்புப் பொருளாதாரம் குறையுமா?
நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா...? சிவப்பு விளக்கு இல்லை என்றால், சிவப்பு விளக்கை மீறிய குற்றத்துக்காக தண்டனை இருக்காது அல்லவா என்று கேட்பது போல இருக்கிறது! ஒருவிஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். ஜிடிபி-நேரடி வரி இந்த இரண்டுக்குமான விகிதத்தில் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைவான வரிவிகிதம் இருக்கிறது. நமது வரி-ஜிடிபி விகிதம் உயர்ந்து விட்டது என்று ப. சிதம்பரம் கூறுவதுண்டு. கார்ப்பரேட் லாபங்கள் படுபயங்கரமாக அதிகரித்ததன் விளைவுதான் அது. இந்திய மக்களில் உச்சத்தில் இருக்கும் 0.1% பேரின் வருமானம், கீழே இருக்கும் 55% மக்களின் மொத்த வருமானத்தைவிட அதிகம் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. எளிமையாகச் சொன்னால், பெரும் செல்வந்தர்களாக இருக்கும் 12 லட்சம் பேரின் மொத்த வருவாய், ஏழைகளாக இருக்கும் 66 கோடி மக்களின் வருவாயைவிட அதிகம் ! வர்த்தகக் கட்டுப்பாடுகள் நீக்கமும் வரிகளில் சலுகையும்தான் இதன் காரணம். ஆனாலும் கறுப்புப் பொருளாதாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

No comments:

Post a Comment