Thursday, 20 November 2014

வீணர் சமூகம் – நீயா-நானாவை முன்வைத்து


நான் நீயா-நானா பார்ப்பதில்லை. வீட்டில் தொலைக்காட்சி இணைப்பே இல்லை. உணவு வீணடிக்கப்படுவது குறித்த விவாதத்தில் நண்பர் ஸ்ரீதர் பங்கேற்றார் என்பதால் நிகழ்ச்சியை யூடியூபில் பார்த்தேன். எனக்குப் பிடித்த, என்னை கவலை கொள்ளச் செய்கிற தலைப்பு என்பதும் ஒரு காரணம். நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யலாம்.
 
உணவை வீணடிக்கக்கூடாது - வீணடிப்பது தவிர்க்க முடியாது என்று இரண்டு தரப்புகள். வீணடிப்பது தவிர்க்க இயலாது என்ற தரப்பில் ஸ்ரீதர் இருந்தார். அவர் ஒருவர்தான் அந்தப்பக்கத்தில் நிறைய புள்ளிவிவரங்களுடன் பேசினார். வாதத் திறமையும் இருப்பதால், எதிர்த்தரப்பை மடக்கவும் செய்தார். தான் வாதத்துக்காகவே பேசுவது அவருக்கே தெரிந்திருந்தது என்பதை ஓரிடத்தில் நான் கவனிக்க முடிந்தது. உண்மையில் அவர் இருந்திருக்க வேண்டியது எதிர்த்தரப்பில் என்றுதான் நினைக்கிறேன்.

மோகன் என்று ஒருவர் ரிசர்ச்சர் என்று காட்டினார்கள் அப்படிக் காட்டி விட்டார்கள் என்பதற்காகவோ என்னவோ, சைக்காலஜி என்றெல்லாம் உளறினார். குழந்தைகள் சாப்பிட மறுப்பது ஒருவித எதிர்ப்பு உணர்வின் வெளிப்பாடு என்றார். அதே குழந்தைகளுக்கு லே அல்லது ஐஸ்கிரீம் கொடுத்தால் எப்போதும் எதிர்ப்பு உணர்வைக் காட்டுவதே இல்லையே என்றெல்லாம் கேட்பது வீண். ஒவ்வொரு விவாதத்திலும் ஏதாவது வித்தியாசமாகப் பேச வேண்டும் என்பதற்காக இப்படி உளறக்கூடிய ஓரிருவரைப்பார்க்க முடிகிறது. ஸ்ரீதர் பக்கத்தில் இருந்த குறுந்தாடி இளைஞர் பேசும்போது எலிசியம் திரைப்படம்தான் நினைவுக்கு வந்தது. (எலிசியம் திரைப்படமும் பார்க்கத்தகுந்ததுதான்.)

எதிர்த்தரப்பில் முத்துக்கிருஷ்ணனும் ராஜகோபாலும் அழகாகப் பேசினார்கள். முத்துக்கிருஷ்ணன் மாறிவரும் மனப்பாங்கு குறித்துப் பேசியது கவனிக்கத்தக்கது. வீணடிக்கப்படுவது பெரும்பாலும் பாரம்பரிய உணவுகள்தான், சந்தைப்படுத்தப்பட்ட உணவுகள் அல்ல. இதன் பின்னே பெரிய தந்திரம் இருக்கிறது என்றார் ராஜகோபால். பாரம்பரிய உணவுகள்தான் அதிகம் வீணடிக்கப்படுகின்றன என்பதற்கு புள்ளிவிவரம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டார் ஸ்ரீதர். (அவர் கேட்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.) நானும் புள்ளிவிவரங்களைக் கையில் எடுக்கப்போவதில்லை.

உண்மையிலேயே திறமையான தொகுப்பாளராக இருந்திருந்தால், இன்னும் பல விஷயங்களைக் கொண்டு வந்திருக்க முடியும். கோபிநாத்திடம் இதை எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் உற்பத்தியாகும் உணவுப்பொருள், விலைக்கு வாங்கப்படும் உணவுகள், விருந்து உணவுகள், ஹோட்டல் உணவுகள், வீட்டில் சமைக்கப்படும் உணவுகள், உணவுப் பொருள்கள் என திசைமாறி திசைமாறித் தடுமாறியது நிகழ்ச்சி. முடிவு ஒரு அபத்தம்.

இங்கே முக்கியமாகப் பேசப்பட்டது இரண்டு விஷயங்கள் - திருமணங்கள் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் ஆடம்பரமாக நிறைய வீணடிக்கப்படுவது, வீடுகளில் வீணடிக்கப்படுவது எனவே இவற்றைப்பற்றி மட்டும் பார்ப்போம்.

"தன் மகனுக்கோ மகளுக்கோ திருமணத்திற்கு 1000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த தந்தை 1100 பேர் வந்தால் என்னவாகும் என்பதற்காக அதிகம் தயாரிப்பது தவறில்லை, கல்யாணம் என்பது ஒரேமுறை நிகழ்வது, அதை சிறப்பாக நடத்துவது என்பதே பெற்றோரின் அக்கறையாக இருக்கும், எனவே வீணாவது தவிர்க்க முடியாது" என்றார் ஸ்ரீதர் அருகே இருந்தவர். இங்கே இரண்டு விஷயங்கள் - ஒன்று, திருமண நிகழ்வுகளில் தயாரிக்கப்படும் அதிகப்படி உணவு. மற்றொன்று, சாப்பிட எடுத்ததை வீணாக்கும் உணவு.

எந்தவொரு திருமணத்திலும் விருந்துக்கு முக்கிய இடம் உண்டு. திருமணம் எவ்வளவுதான் சிறப்புற நடந்தாலும், உணவில் குறை இருந்தால் அது எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடிய பிரச்சினையாக இருக்கும். இது இயற்கைதான். விருந்து கொடுத்தவருக்கு குறிப்பாக பெண் வீட்டாருக்கு பெரிய பிரச்சினைதான். ஆனால், தயாரிக்கிற உணவை சிறப்பாக தயாரிப்பது என்பது வேறு, ஆடம்பரத்துக்காக தேவையே இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட உணவு வகைகளைத் தயாரிப்பது என்பது வேறு. இப்போதெல்லாம் இந்த இரண்டாவது விஷயம்தான் முக்கியத்துவம் பெறுகிறது.

திருமணங்கள் எல்லாக்காலத்திலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன. பலநாள் திருமணங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. ஆனால் நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை அண்மைக்காலத் திருமணங்களில் உணவு வகைகள் ஆடம்பரமாகவே தயாரிக்கப்படுகின்றன. ஒருவர் நண்பர் வீட்டுத் திருமணத்துக்குச் செல்கிறார், அங்கே கிடைத்த அனுபவத்தைப் பார்த்துவிட்டு தன்வீட்டுத் திருமணத்தில் அதைவிடச் சிறப்பாக, அதைவிடப் பகட்டாக, உணவு வகைகளைப் படைத்துக்காட்ட நினைக்கிறார். இது சங்கிலித்தொடர்போல அதிகரித்துக்கொண்டே போகிறது.

மக்களின் மனப்பாங்கில் ஏற்பட்டுள்ள இந்த அடிப்படை மாற்றம் கவனிக்கத்தக்கது, கவலை கொள்ளத்தக்கது. ஆனால் இதற்கும் சிலர் ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள் - இருக்கிறவன் செய்கிறான், உனக்கு என்ன நட்டம்? இருக்கிறவன் செய்வதைப் பார்த்து இல்லாதவனும் செய்கிறான், அல்லது செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறான் என்பதுதான் பிரச்சினை.

தற்போது பணக்காரப் பிரிவினரின் முற்றிலும் தேவையற்ற ஆடம்பர பகட்டு நிலைக்கும் உழவர்களின் கடும் வறுமையான சூழ்நிலைக்கும் பெரும் இடைவெளி உள்ளது. இந்த ஏழைகள் மத்தியில்தான் பணக்காரர்கள் வாழ்கிறார்கள். நாம் சரியான வாழ்க்கை வாழத் தொடங்கியதும் விரும்பத்தகாத விஷயங்களும் போய்விடும்என்று சுதந்திர இந்தியாவைப் பற்றிக் கனவு கண்டார் காந்தி. காந்தியின் இந்தக் கருத்து இன்றைக்குப் பொருந்தாது என்று இவர்கள் கூறுவார்களா? காந்தி என்றதுமே புன்னகையைத் தவழவிட்டுவிட்டு அல்லது அடக்கிக்கொண்டு அமைதியாவார்கள். சரி, அது இருக்கட்டும், நானும் காந்தியை அந்தப்பக்கம் திருப்பி நிறுத்திவிடுகிறேன்.

விவாதத்தில் யாரும் குறிப்பிடாத ஒரு விஷயம் - நம் உணவுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம். திருமண விருந்துகளில் வயிறுபுடைக்க உண்பது என்பது இன்று வெறும் நகைச்சுவைக்காகவே பெரும்பாலும் பயன்படுகிறது. நம் வாழ்க்கைமுறை மாற்றங்களுக்கு ஏற்ப உணவுமுறையும் மாறிவிட்டது. அதிக அளவில் உணவு வீணடிக்கிற நடுத்தர வர்க்கத்தினரில் கணிசமானவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. விருந்தில் உண்ணும் ஆசை இருந்தாலும்கூட உண்ண முடிவதில்லை. விருந்துக்குத் திட்டமிடுவோர் இதைக் கணக்கில் கொள்வதில்லை.

உதாரணமாக, இஸ்லாமியர் வீட்டுத் திருமணங்களில் பிரியாணியைப் பற்றிப் பார்ப்போம். எங்கள் குடும்பத்து வழக்கப்படி ஒரு கிலோ அரிசிக்கு ஒரு கிலோ கரி, அதில் 5 பேர் சாப்பிடலாம். (1:1=5) பிரியாணிக்குத் துணையாக தால்ச்சா எனும் கடலைப்பருப்புக் குழம்பும், வெங்காயப் பச்சடியும். ஏதாவதொரு இனிப்பு வகை. பத்திருபது ஆண்டுகள் முன்புவரை இந்தக் கணக்கு சரிதான். இப்போது விருந்து முறை மாறிவிட்டது. பிரியாணி, குழம்பு, வெங்காயப் பச்சடியுடன் கத்தரிக்காய் வதக்கல், சிக்கன் கிரேவி அல்லது சில்லி சிக்கன் அத்தியாவசியமாகிவிட்டது. இரண்டு இனிப்புகள் கட்டாயம், கடைசியில் ஐஸ்கிரீம் சேர்ந்து விட்டது. கூல் டிரிங்கும் இருக்கலாம். சிலருக்கு ஒயிட் ரைஸ்-ரசம் வேறு. இங்கும் வாழ்க்கை முறை மாற்றத்தால் சாப்பிடும் அளவு குறைந்துவிட்டது என்பதோடு உணவு வகைகள் அதிகரிப்பதாலும் சாப்பிடுவது குறையவே செய்யும். ஆனால் பலரும் இதைக் கணக்கிடுவதில்லை. அதே 1:1=5 பேர் என்று கணக்குப்போடுகிறார்கள். சமைத்ததிலும் நிறைய மீந்து விடுகிறது, இலையில் அல்லது தட்டில் வைத்ததும் வீணாகிறது. (அண்மையில் என் மகள் திருமணத்தின்போது மதிய விருந்துக்கு, 1:1= 8 பேர் என்று யோசித்தோம், பிறகு 1:1=7 என செய்தோம். கொஞ்சம் மீதியாகி விட்டது.)

ஆக, விருந்துக்குத் திட்டமிடுவோர் சற்றே கவனம் வைத்தால் தயாரிப்பில் வீணாவதைக் குறைக்க முடியும். பரிமாறும்போது கொஞ்சம் கவனத்துடன் கேட்டுப் பரிமாறினால் இலையில் வீணாவதைக் குறைக்க முடியும். இரண்டுமே கொஞ்சம் சிரமம்தான். ஆனால் இப்போதெல்லாம் கல்லூரி மாணவர்கள் பகுதிநேரப் பணியாக பரிசாரகர்களாக வேலை செய்ய முன்வருகிறார்கள், அவர்களிடம் விளக்கினால் நாம் எப்படி விரும்புகிறோமே அப்படி அழகாகச் செய்து முடிப்பார்கள்.

பரிமாறிய உணவு வீணாகாதிருக்க உகந்த வழி பஃபே சிஸ்டம். சாப்பிட எடுத்தபிறகு வீணாவது குறித்து முன்வைக்கப்பட்ட மற்றொரு கருத்து பஃபே சிஸ்டம் பற்றியது. பஃபே சிஸ்டம் வெளியிலிருந்து வந்தது என்பதாலேயே அதை மோசம் என்று கூறிவிட முடியாது. பஃபே சிஸ்டம் நல்லதா கெட்டதா என்பது, அது எங்கே பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தது. இலைபோட்டு சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல் என்னும் விருந்துக்கு பஃபே உதவாது. இந்த விவாதம் முழுவதும் நடுத்தர வர்க்கத்தையும் மேல்தட்டு வர்க்கத்தையும் மையமாகக் கொண்டது என்பதால் இந்த ஆராய்ச்சியை விட்டு விடுவோம்.


பஃபே சிஸ்டம் வந்ததே உணவைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அல்ல. அதற்குப் பல நோக்கங்கள் உண்டு பகட்டைக் காட்டுவதும் அதில் அடங்கும். இருந்தாலும் அதை விட்டுவிட்டு பொதுவாக நம்பப்படும் விஷயத்தை மட்டும் அலசுவோம். பஃபே சிஸ்டத்தில் எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதே ஒரு தனிக்கலை. பத்திய உணவு வல்லுநர்களை - டயட்டீஷியன்களைக் கேட்டால், பஃபே பக்கமே போகாதீர்கள் என்பார்கள். (இந்த மேலைக் கலாச்சாரத்தைத் தூக்கி எறிவோம் என்று தேசபக்தக்கூட்டம் இன்னும் புறப்படாதது குறித்து சந்தோஷப்படலாம்.) அவரவர் முதலில் ஏதேனும் ஒரு வகையை ருசி பார்த்து, பிடித்திருந்தால் மேலும் எடுத்துக்கொள்ள வழி செய்வது பஃபே சிஸ்டம். ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. வீணடிப்போர் அணியில் இருந்தவர்களே இதை ஒப்புக் கொள்ளவும் செய்தார்கள்.

"பஃபே சிஸ்டம் 10-15 ஆண்டுகளாகத்தான் அறிமுகம் ஆகியிருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் வீணடிக்காமல் இருக்க விரைவில் மக்கள் பழகி விடுவார்கள்" என்று ஒருவர் கூறினார். பஃபே சிஸ்டம் தெற்கே புதிதாக இருக்கலாம். வடக்கிலும் பெருநகரங்களிலும் பல்லாண்டுகளாக நடைமுறையில் இருப்பதுதான். நான் தில்லிக்கு வந்த 1991இலேயே இங்கே பஃபே சிஸ்டம் இருந்தது. இப்போதும் வீணடிக்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. விரைவில் மக்கள் பழகிவிடுவார்கள் என்பது ஒருவகையான விஷ்ஃபுல் திங்கிங்தான், சாத்தியப்பாடு அல்ல.

பஃபே சிஸ்டத்திலும் பலவகை உணவுகள் குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. மீண்டும் அதே ஆடம்பரம் குறித்து அலச வேண்டியிருக்கிறது. உணவுக்கு முன்னதாக ஸ்டார்ட்டர்ஸ் எனப்படும் கூல் டிரிங்க், சூப், சமோசா, கோபி மஞ்சூரியன், பிரெஞ்ச் பிரைஸ், பனீர் பகோடா, ஆலு பகோடா, பனீர் டிக்கா என பல வகைகள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருக்கும். தவிர, காய்கறி அல்லது பழவகை சாலட்கள். இவற்றைச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். இருந்தாலும் உணவு வகைகளையும் தட்டில் நிரப்பிக் கொள்கிறார்கள். சாப்பிட முடியாமல் அப்படியே கொட்டுகிறார்கள். பஃபே சிஸ்டத்தில் உணவுக்கான முக்கியத்துவத்தைவிட பல நண்பர்களுடன் மாறி மாறி உரையாடிக் கொண்டே உணவுண்பதே இனிய அனுபவம். தில்லியில் நான் கலந்து கொண்ட சுமார் 500 பஃபே விருந்துகளில் கண்டதை எல்லாம் அள்ளிப் போட்டுக்கொள்ளாத நபர்கள் மிகச்சிலர்தான். பஃபே விருந்துக்கான கேட்டரிங் கான்டிராக்டர் தம்மால் இயன்ற அளவுக்கு வகைகளைத் திணிக்கவே முயற்சி செய்வார். கொஞ்சம் கவனமாக, கொஞ்சம் அக்கறையுடன் பேரம்பேசித் திட்டமிட்டால் போதும். ஸ்டார்ட்டர்களைக் குறைப்பது உண்போருக்கு நல்லது. வகைகளைக் குறைப்பது விருந்து கொடுப்பவருக்கு நல்லது.

விவாதத்தின்போது கவனித்த ஒரு விஷயம், உணவுப்பொருள் வீணாவது தவிர்க்க முடியாது என்று கூறியவர்கள் எவரும் அது குறித்து சற்றேனும் வருத்தத்தொனியை வெளிப்படுத்தவில்லை என்பதுதான். மனப்பாங்கில் மாற்றம் என்று அதைத்தான் முத்துக்கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இந்த விவாதத்தில் மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அளித்த விஷயம் ஃபுட் அபண்டன்டா இருக்கு.... ஐ கேன் அஃபோர்ட்... நான் வீணாக்காமல் விட்டால் அந்த சாப்பாடு ஏழைக்குப் போய்ச்சேர்ந்து விடுமா...? என்று கேட்டது. இதுதான் என்னை இந்தப்பதிவு எழுதும் வெறியை ஏற்படுத்தியது.

உணவு என்பது வெறும்நுகர் பொருள் இல்லை என்பதை இந்த எலிசியம் குடிமகன்களுக்கு எப்படி விளக்குவது? மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் எவை என்று கேட்டால் இந்தியில் சொல்வார்கள் ரோட்டி, கப்டா, மகான். தமிழில் உணவு, உடை, இருப்பிடம். உணவு வெறும் பண்டமல்ல, உயிர்வாழ்வின் அத்தியாவசியத் தேவை. என்னிடம் பணம் இருக்கிறது என்பதால் நான் வீணடிப்பேன் என்பதும், நான் வீணடிக்காதது ஏழைக்குப் போய்ச் சேருதா என்பதும் அர்த்தமற்ற, புரிதலற்ற, அரைவேக்காட்டு விதண்டாவாதம்.

உணவு அல்லது உணவுப்பொருள் என்பது மற்ற பண்டங்களைப் போன்றதல்ல. ஒருவன் சொந்த இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்து செத்துப்போக முடியும். ஆனால் சொந்த உணவோ சொந்த உடையோ இல்லாமல் வாழ முடியாது. அதனால்தான் உணவுக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. உலகின் எந்த நாட்டிலும் அடிப்படைத்தேவை உணவாகத்தான் இருக்கும். வேறு எந்தப் பொருளும் காலத்துக்கேற்பத் தேவையாக மாறலாம். தில்லியிலும் ராஜஸ்தானிலும் கோடைக்கு கூலரும் ப்ரிஜ்ஜும் அடிப்படைத்தேவை. குளிருக்கு ஹீட்டர் தேவை. ஆனால் எவரும் இந்தத் தேவைகள் இல்லாமலும் வாழ்ந்துவிட முடியும், உணவின்றி வாழ முடியாது. இதைப்பற்றி அதிகம் விளக்கத்தேவையில்லை. ஆக, உணவு என்பது வெறும் நுகர் பண்டமல்ல. மனிதர்கள் அனைவருக்கும் அத்தியாவசியத் தேவை.


எல்லாப் பொருட்களையும் போலவே உணவும் ஓர் உற்பத்திப் பொருள்தான். ஆனால் உணவுப் பொருள்களின் உற்பத்தியில் நீர்வளமும், நிலவளமும் பெருமளவுக்குப் பயன்படுகின்றன. தனியார் உடைமைகளில் உற்பத்தியாகிறது என்றாலும் அது பயன்படுத்துகிற வளங்கள் சமுதாயம் அனைத்துக்குமான வளங்கள். உணவு உற்பத்திக்கான வளங்களின் பயன்பாடும் ஓர் எல்லைக்குட்பட்டது. மாறிவரும் பொருளாதார, உலகமய, வர்த்தகச் சூழலில் வேளாண்மை நசிந்து வருகிறது. எந்தப் பொருளுக்கும் உற்பத்திக்கேற்ற விலை கிடைக்காவிட்டாலும் அது கவலைக்கு உரியதுதான். ஆனால் வேளாண் உற்பத்திக்கேற்ற விலை கிடைக்காதிருப்பது விவசாயி மட்டும் கவலைப்பட வேண்டிய விஷயமல்ல, நாமும் கவலைப்பட்டாக வேண்டும். ஏனென்றால், விவசாயம் குறைந்தால் உணவுப்பொருள் உற்பத்தி குறையும், உற்பத்தி குறைந்தால் விலை அதிகரிக்கும், விலை அதிகரித்தால் ஏழைகளுக்கு எட்டாது, நடுத்தர மக்களுக்கும்கூட பிரச்சினைதான். ஆக, இது ஒரு சங்கிலித்தொடர் விளைவை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினை. (புதிதாக வர இருக்கிற 100 ஸ்மார்ட் சிடிகளையும் சேர்த்து கவலை கொள்ளலாம்.)

என்னிடம் பணம் இருக்கிறது, உணவுப்பொருள் மிகையாக இருக்கிறது என்கிற வாதம், தன்னிடம் இருப்பதால் எல்லாரிடமும் இருக்கிறது என்று கருதிக்கொள்கிற மனோபாவம்தான். மிகையாக இருக்கிறது என்றால் விடுதலைக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட நாட்டில் 25 விழுக்காட்டு மக்கள் வெறும் வயிற்றுடன் இருக்கும் நிலை நீடிக்க முடியுமா? இதில் தெரியும் உண்மை என்ன? உணவுப்பொருள் மிகையாக இருக்கிறது, ஆனால் அது மேலே கண்ட "நான்"களுக்கு மட்டுமே எட்டும் வகையில் இருக்கிறது.


நீங்கள் வீணாக்காமல் மிச்சப்படுத்தும் உணவு ஏழைக்கு நேரடியாகப் போகாதுதான், ஆனால் அளவான பயன்பாடு என்பது உற்பத்தி-தேவை-விலை இடையிலான உறவுச் சமநிலையைப் பேண உதவியாக இருக்கும். மக்கள் தொகை இன்னும் அதிகரிக்கப் போகிறது, சராசரி ஆயுளின் காலமும் அதிகரிக்கப்போகிறது. உற்பத்தி வளங்கள் குறைந்து கொண்டே போகையில், தேவை அதிகரித்துக் கொண்டே போகையில், உணவுப்பொருளை அதன்மூலமாக நாட்டின் வளங்களை - வீணாக்க யாருக்கும் உரிமையில்லை. இந்த அடிப்படையைக்கூடப் புரிந்து கொள்ளாமல், ஐ கேன் அஃபோர்ட் என்பது அப்பட்டமான சுயநலம். (உணவுகளை வீணாக்குவோர் பிற்காலத்தில் கஷ்டப்படுவார்கள் என்றார் ஒருவர். அது காலம்காலமாகக் கூறப்படும் ஒரு நம்பிக்கைதானே தவிர அதில் தர்க்கநியாயம் இல்லை.) இயற்கை அன்னை நம் அனைவருக்கும் தேவையான அளவுக்குத்தான் வைத்திருக்கிறாளே தவிர, பேராசையைத் தீர்க்கும் அளவுக்கு அல்ல” (Nature has enough for our need but not for our greed) என்றார் காந்தி.

கடைசியாக கவனிக்க வேண்டியது, எந்தவகை உணவுப்பொருள்கள் வீணாக்கப்படுகின்றன என்பது. பாரம்பரிய உணவுகள்தான் வீணடிக்கப்படுகின்றன, வர்த்தகரீதியான பிராண்ட்ட் பேக்டு உணவுகள் அதிகம் வீணடிக்கப்படுவதில்லை என்றார் ராஜகோபால். இதற்குப் புள்ளிவிவரம் உண்டா என்று கேட்டார் ஸ்ரீதர். வீணடிக்கப்படும் உணவு குறித்தே புள்ளிவிவரங்கள் அதிகம் இல்லாதபோது இதற்கு புள்ளிவிவரம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் தர்க்கரீதியாக யோசிக்க முடியும்.

நம் வாழ்க்கை முறையும் உணவுமுறையும் மாறிவிட்டது என்பதை இருதரப்பினருமே ஒத்துக்கொள்வார்கள். வீணடிப்போர் குழுவில் இருந்தவர்களே அம்மா கொடுத்த சாப்பாட்டை கொட்டி விடுவேன், 5 இட்லி குடுத்தா மூன்றுதான் சாப்பிட முடியும் என்றெல்லாம் உதாரணங்களை அடுக்கினார்கள். வீட்டில் குடும்பத்தினர் சமைக்கும் உணவுகள்தான் அதிகம் வீணடிக்கப்படுகின்றன என்பதை நிறுவ புள்ளிவிவரங்கள் தேவையில்லை. நம்மை நாமே கொஞ்சம் அலசிப் பார்த்துக் கொண்டாலே போதும். எல்லாமே கார்ப்பரேட் சதி என்று கூற மாட்டேன். ஆனால் நிறுவனமயமான உணவுப் பொருள்களின் விளம்பரங்களின் மயக்கத்தில் நாம் படிப்படியாக விழுந்து கொண்டே இருக்கிறோம், இன்னும் இன்னும் அதன் வலைகளுக்குள் விழத்தான் போகிறோம். இது அதிகரிக்கத்தான் போகிறது.

நமது உணவு வகைகளைப் பெருக்கிக் கொண்டே போவதுதான் நாகரிகத்தின் அறிகுறியாக, உண்மையான வாழ்க்கையின் அடையாளமாக நீங்கள் நினைக்கிறீர்களா? இப்போதுகூட நாம் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமலே இவ்வாறு பெருக்கிக்கொண்டே போக வேண்டுமா? நாம் முற்றிலும் பைத்தியமாகி இந்த உண்டிகளைப் பற்றிய விளம்பரங்களை வெளியிடும் செய்தி ஏடுகளைத் துரத்திக்கொண்டு இந்த உணவுப்பொருட்களில் மயங்கப் போகிறோமா?” – காந்தி.

டம்ளரில் ஊற்றிய தண்ணீர் பாதி குடித்தீர்கள், போதும் என்றாகிவிட்டது, மீதிப்பாதி வீண்தான், அதைக் கொட்டாமல் என்ன செய்வீர்கள், அதையும் வீண் என்று கூறுவீர்களா?” என்று இளசு ஒன்று கேட்டது.

இவர்கள் எல்லாம் என்னதான் படித்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. என்னதான் என்ஜினியரிங் அல்லது கம்ப்யூட்டர் படித்திருந்தாலும் ஆரம்ப்பபள்ளி நிலையிலேயே நீரின் முக்கியத்துவம் கற்றுத்தரப்படவில்லையா? ஒவ்வொரு சொட்டுநீரும் விலைமதிப்பு மிக்கது என்று விளம்பரங்கள் எல்லாம் இவர்கள் கண்களில் படவே இல்லையா? உலகில் உள்ள நீரில் 2.5 சதவிகிதம்தான் குடிக்கத்தகுதியுள்ள நீர் என்பதை இவர்கள் அறிவியலில் படித்ததே இல்லையா? குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்றால், அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்கும் கடமையை அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக கைகழுவி விட்டதுதான் காரணம் என்று புரியவில்லையா? பிஸ்லெரி உள்ளிட்ட பெரும் நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் உங்கள் அடிப்படைத் தேவையை வைத்தே பல்லாயிரம் கோடியை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன என்று இவர்களுக்குத் தெரியாதா? இவர்களைத்தான் நாம் எதிர்கால இந்தியா என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.

அண்மையில், பரிமாறப்படும் விருந்துகளில் புதிய பழக்கம் ஒன்று வந்திருக்கிறது. தண்ணீரை டம்ளர்களில் ஊற்றுவதற்குப் பதிலாக சின்ன பாட்டில்களை வைத்துவிடுவது. டம்ளர்களை வாடகைக்கு வாங்கத் தேவையில்லை, தண்ணீர் சிந்தி தரை ஈரமாகாது, தண்ணீர் ஊற்றுவதற்கென ஆளும் தேவையில்லை என்று இதற்கு சமாதானம் சொல்கிறார்கள். தண்ணீர் பாட்டில் என்ன தானாகவே சாப்பாட்டு மேசையில் வந்து உட்கார்ந்து கொள்ளுமா? பாட்டில் தண்ணீர் தீர்ந்த்தும் அடுத்த பாட்டில் கேட்பவருக்கு யாராவது கொண்டுவந்து கொடுத்துத்தானே தீர வேண்டும்…. கால் லிட்டர் தண்ணீர் பாட்டில் வைக்கப்பட்டால், சற்றுநேரத்தில் இன்னொரு பாட்டிலும் தேவைப்படும். சாப்பிட்டு முடித்து எழுந்திருக்கும்போது ஆளுக்கு ஒரு பாட்டில் எடுத்துப் போகிறார்கள். குழந்தைகள் வேறு பாட்டில்களை விளையாட்டாக எடுப்பார்கள். ஆக, 1000 பேர் பங்கேற்ற திருமணத்தில் 3000 பாட்டில்கள் மிகச்சுலபமாகத் தீர்ந்து, போதாத நிலையும் ஏற்படுகிறது. அத்துடன் சேர்கின்றன சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் 3000 பிளாஸ்டிக் புட்டிகள். இதன் பின்னே இருப்பது அப்பட்டமான பகட்டே தவிர வேறு ஏதும் இல்லை. புட்டிநீர் விற்பனை செய்யும் பகாசுர நிறுவனத்துக்கும் லாபம் தேடித்தந்துவிட்டு, உள்ளூரில் டம்ளர்களை வாடகைக்கோ விலைக்கோ கொடுக்கும் சிறு வியாபாரியின் தொழிலை நாம் கெடுக்கிறோம்.

அடுத்து, வாங்கி வைத்த உணவுப்பொருள்கள் கெட்டுப்போவது அல்லது வீணாவது குறித்தும், வீட்டில் சமைத்த உணவுகள் வீணாவது குறித்தும் பார்ப்போம். விவாதத்தில் குறிப்பிடப்பட்ட பொருட்கள் கோதுமை மாவு, பிரெட், பயறு வகைகள், ஜாம், பால், இட்லி மாவு, வாழைப்பழம், இன்னபிற. என் வீட்டிலும்தான் உணவு வீணாகிறது. ஆனால் அதுகுறித்து நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு பெருமை அடிக்க என்னால் முடியாது, வருத்தப்படத்தான் முடியும்.

என்னிடம் மிகையாக இருக்கிறது, என்னிடம் செலவு செய்யும் சக்தி இருக்கிறது, நான் வீணடிப்பதால் இல்லாதவனுக்குப் போய்ச் சேர்ந்து விடுமா என்று கேட்கிற அறிவுக்கொழுந்துகளின் கவனத்துக்கு ஒரு விஷயம். நீங்களும் நானும் சிறுவயதிலிருந்தே போற்றி மதித்து வந்திருக்கிற காந்தியின் கருத்துகளை ஏராளமாக மேற்கோள் காட்ட முடியும். ஒன்றே ஒன்றை மட்டும் சுட்டுகிறேன்
நாகரிகம் என்பது உண்மையில் உடைமைப் பெருக்கில் அல்ல, தன்னார்வத்தோடு தேவைகளைக் குறைப்பதே ஆகும். ... நகரங்களில் வாழும் நாம் இந்தியா நகரங்களில்தான் இருக்கிறது என்றும், கிராமங்கள் நம் தேவைகளை நிறைவேற்றவே உள்ளன என்றும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த ஏழை மக்களுக்குப் போதிய உணவும் உடையும் உள்ளதா என்று ஒருமுறையேனும் நாம் யோசித்துக்கூடப் பார்த்ததில்லை.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சொன்னது இப்போதும் அப்படியே பொருந்துகிறது என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது, கவலையும் கொள்ளச் செய்கிறது.

வீணாகாமல் திட்டமிடுவது சுலபம்தான். மீந்து போனாலும் நம் பாரம்பரிய உணவுமுறைகளில் சில வசதிகள் உண்டு. நாம் கொஞ்சம் கவனமாக இருந்தால் இதில் பலவற்றைத் தவிர்க்கலாம். உணவை வீணாக்காமல் இருக்க சில குறிப்புகள் கீழே. இவற்றில் எதுவும் உங்களுக்குத் தெரியாதது அல்ல, பெரும்பாலும் பின்பற்றாமல் விடுவது.

  • முதலாவதாக, ரிலையன்ஸ் போன்ற பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோரில் சென்று கண்டதையும் அள்ளிப்போட்டுக் கொள்வது. டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் சுயமாக எடுத்துக்கொள்ளும் வசதி வைத்திருப்பதே இப்படி கண்ணில் பட்டதை எல்லாம் உங்களை தள்ளுவண்டியில் போடச் செய்வதற்காகத்தான் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் கார்ப்பரேட்டை குற்றம் சொல்ல மாட்டேன். முட்டாளாவது நாமாக விரும்பித்தானே?
  • கடைக்குச் செல்லும்போது பட்டியல் போட்டுக் கொண்டு போவது உத்தமம். தேவைக்கும் அதிகமான பொருள்கள் சேராது.
  • ஆஃபர்களில் ஏமாறாதீர்கள். சோப்பு போன்ற கெடாத பொருட்களை வாங்கலாம்தான். ஆனால் ஒரு ஜாம் வாங்கினால் ஒரு ஜாம் இலவசம் போன்ற ஆஃபர்களைக் கண்டு தேவைக்கு அதிகமாக வாங்காதீர்கள்.
  • கடையில் சாப்பிட்ட பிறகு மீந்து போனால் அதை பேக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள், நாமே வீட்டில் சாப்பிடலாம், அல்லது வேலைக்காரர்களுக்குக் கொடுக்கலாம், அல்லது வீடு திரும்புகிற வழியில் கண்ணில் படுகிற ஏழைப் பிச்சைக்காரருக்குக் கொடுக்கலாம். இல்லாவிட்டாலும் சாலையோரம் வைத்துவிட்டால் நாயாவது சாப்பிடும்.
  • கோதுமை மாவு கெட்டுப்போகிறது என்பது எனக்கு வியப்பளிக்கும் விஷயம். (அதைச் சொன்னவர் அனேகமாக சமையலறை பற்றியே தெரியாதவர் என்று நினைக்கிறேன், அது இருக்கட்டும்) சில மாதங்களாகிவிட்ட கோதுமை மாவில் வண்டு விழுந்துவிட்டால் காகித்ததில் பரப்பி வெயிலில் காய வைத்தால் போதும்.
  • இப்போது எல்லா வீடுகளிலும் ஃப்ரிஜ் இருக்கிறது. பிரெட்டை ஃப்ரிஜ்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் பதினைந்து நாட்கள் வரை கெடுவதில்லை. ஃப்ரிஜ் இல்லாவிட்டால், அரை பிரெட் வாங்கலாம்.
  • இட்டிலி மாவு புளித்துப்போனால் கொஞ்சம் கோதுமை மாவு சேர்த்து தோசை சுடலாம்.
  • அப்படியும் மீந்துபோனால் மறுநாள் கொஞ்சம் ரவை சேர்த்து தோசை சுடலாம்.
  • இட்டிலி மீந்து போனால் அதை உப்புமா செய்து சாப்பிடலாம்.
  • பிடிக்காத உப்புமாவாகவே இருந்தாலும் ரசத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
  • பால் திரிந்துபோனால் மேலும் காய்ச்சி, நீரை வடித்து, பனீர் ஆக்கலாம்.
  • மீந்து போன சோற்றை பழைய சோறாகச் சாப்பிடலாம்.
  • மீந்து போன சோற்றை அரைத்து வடகம் போடலாம்.

இதற்குமேலும் எழுதினால் ஏதோ சமையல் குறிப்பு போலாகிவிடக்கூடும். எனவே நிறுத்துகிறேன். உணவு என்பது தனிச்சொத்தல்ல, கூட்டு உழைப்பின்மூலம் கிடைப்பது, ஆடம்பரத்தால் அல்லது கவனக்குறைவால் வீணடிப்பது பெரும்குற்றம் என்பதை நினைவில் கொள்வோம்.

13 comments:

  1. நான் இந்த நிகழ்ச்சியை பார்தத போது எனக்கும் நீங்கள் கூறிய பெரும்பாலான எண்ணங்கள் தோன்றின. யாராவது உணவு பற்றாக்குறை இருப்பதையும், உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வறுமை நிலை பற்றியும், உணவை தேவையான அளவு பயன்படுத்தினால் சந்தாயில் தேவை குறைந்து விலை குறயும் வாய்ப்பும் அதனால் ஏழைகள் அதை நுகர ஏற்படும் வாய்ப்பு என்றெல்லாம் பேச மாட்டார்களா என்று எதிர்பார்த்தேன். அருமையான கட்டுரை. அதுவும் நடைமுறை உதாரணங்களுடன் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் நண்பரே. என்னிடம் பணம் இருக்கிறது மற்றும் இந்தியாவில் உணவு அபரிமிதமாக இருக்கிறது அதனால் நான் வீணடித்த்தால் என்ன என்ற தொனியில் சிலர் பேசியதை என்ன்னால் இன்னும் சீரணிக்க முடியவில்லை. - கிரிஷ்

    ReplyDelete
  2. padhivittamaikku nandri,
    surendran , guntur

    ReplyDelete
  3. நன்றி கிரீஷ். இந்தக் கட்டுரை பேஸ்புக்கில் பெருத்த விவாதத்தையும் ஆர்வத்தையும் கிளப்பியது.

    ReplyDelete
  4. வீணர் சமூகம் கட்டுரை நன்று. நானும் நிறைய உணவை வீணாக்கும் வழக்கம் கொண்டவன்தான். இனி கவனமாக இருப்பேன். வீணாக்காதிருப்பேன். நான் அந்த நீயா நானா பார்க்கவில்லை. இக்கட்டுரை படித்தபிறகு பார்க்கவும் விரும்பவில்லை. மோகன் என்று தாங்கள் குறிப்பிடுவது பிசிரான தாடி வைத்திருந்த நபரை என்று நினைக்கிறேன். வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் வந்திருக்கிறார். அதுவரை புரிந்திருந்த விசயங்கள் எல்லாம் குழம்பிவிடும். அற்புதமான பேச்சு அவருடையது.

    உணவு வீணாவதைப் பற்றிய இக்கட்டுரையில் கூறியது கூறல் இருப்பதால் நிறைய சொற்கள் வீணானது போன்று இருக்கின்றன. சுருங்கச் சொல்லல் அழகு.

    க.கதிரவன்

    ReplyDelete
  5. நன்றி கதிரவன்.
    கூறியது கூறல் குறித்த உங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. நன்றி பிரகாஷ் ராஜகோபால்.

    ReplyDelete
  7. சுரேந்திரன், உங்களுக்கும் என் நன்றி.

    ReplyDelete
  8. மிக நீளமான அதே சமயத்தில் ஆழமான அர்த்தமுள்ள பதிவு. சிந்திக்கத்தக்கது மட்டுமல்ல செயல்படுத்தவும் வேண்டியது.

    ReplyDelete
  9. மிக நீளமானதும் மட்டுமல்ல மிக ஆழமான பதிவு. சிந்திக்கமட்டுமல்ல செயல்படுத்தவும் வேண்டிய பதிவு.

    ReplyDelete
  10. வீணர்கள் யோசிக்கட்டும். நாங்களும் தேவையான அளவே செய்து சாப்பிடுகிறோம், கொஞ்சம் முயன்றால் உணவுகள் வீணாவது தடுக்கப்படும்.

    நல்ல கட்டுரை. நன்றிகள் சார்.

    ReplyDelete
  11. பார்த்தபடியே தூக்கத்தில் ஆழ்ந்து விடுவதற்கு வசதியான நிகழ்ச்சி 'நீயா நானா' என்பதால் எப்போதாவது, தூக்கம் வராத இரவுகளில் அதைப் பார்ப்பதுண்டு. நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. (2) விருந்துகளில் பரிமாறப்படும் உணவின் வகைகளைத் தீர்மானிப்பது, விருந்தளிப்பவரின் மதம், சாதி, ஊர், மற்றும் பொருளாதரா நிலைமை இவற்றைச் சார்ந்த ஒன்றாகவே இருக்கிறது. இதை எந்த வகையிலும் மாற்ற வழியில்லை. (3) எனவே, உண்பவர்களின் மனநிலயைத் தான் மாற்றியாகவேண்டும். தன் ஆரோக்கியம் பாற்பட்ட கவலை உடைய எந்த மனிதனும் இப்போதெல்லாம் விருந்துண்ணும்போது கவனமாகவே இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.(4) உணவுப் போருலியாவீனாக்கவேண்டாம் என்பது சரியே. ஆனால், இலையில் போடப்பட்ட, என் வயிற்றுக்கோ, நாவுக்கோ உடன்படாத ஒரு பொருளை நான் எப்படிச் சாப்பிடமுடியும்? (5) வீணாகும் சமைத்த பொருட்களை அருகிலுள்ள சிறுவர் அல்லது முதியோர் இல்லங்களுக்கு- அவை வீணாகும் முன்பே- வழங்கும் எண்ணம் விரிவாக ஏற்படவேண்டும். இதற்குத் தங்களைப் போன்ற சிந்தனாவாதிகள் உதவவேண்டும். - இராய செல்லப்பா.

    ReplyDelete
  12. Many years ago when I visited India, Chennai. I attended a wedding in a hotel reception. During dinner the servants were throwing banana leaves out side at the dust bin. There was a pregnant mother with a two year and five year child standing next to her hungry.The mother placed a blank used banana leave and started collecting
    food particles from the thrown leaves.

    The mother collected just a handful of rices and vegetables not enough for the children. She was still collecting food from the eaten banana leaves. All of a sudden a dog jumped and ate the save food in a second. I could see the agony on the mother's face and disappointment on the children's face.

    From that day on wards, I never wasted food from my plate. Either I take a little or complete it without wasting a particle. In an international meeting dinner, as usual I left my plate clean without leaving any food particle wasting. The waitress (W) commented that I must be hungry and licked the plate to be clean in a loud voice. I took her aside and I explained her the reason why my plate was clean. She cried for the mother. I tipped her a large amount of money. She told me she would never waste food, while millions of people look for food.

    Isaac

    ReplyDelete