Sunday, 9 November 2014

கணக்கெடுப்பும் சாதியும்



அமெரிக்காவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - சென்சஸ் - நடைபெறுகிறது. கணக்கெடுப்பு என்பது எதற்காக, அதில் ஒவ்வொரு குடிமகனும் ஏன் பங்கேற்க வேண்டும், கணக்கெடுப்பு விவரங்கள் எதற்குப் பயன்படுகின்றன, தனிநபர் கொடுக்கும் விவரங்கள் எந்த அளவுக்கு ரகசியமாக வைக்கப்படும் என்றெல்லாம் சிறுசிறு பிரசுரங்கள் அமெரிக்க அரசால் வெளியிடப்படுகின்றன. அவற்றைப் படிப்பவருக்கு, ஒரு குடிமகனாக தான் அவசியம் கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வு வரும்.

அதுவும் எந்த மொழியில் தெரியுமா...? தமிழ் மொழியில். ஆம், 2001 கணக்கெடுப்பின்போது இந்த விவரங்களை எல்லாம் அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு இனத்தவருக்கும் புரியும் வகையில் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழில் மொழிபெயர்க்கும் பணி எனக்குக் கிடைத்ததால் இந்த விவரங்களை அறிய முடிந்தது.

அதே 2001இல் இந்தியாவிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுமார் 50 வீடுகள் இருந்த எங்கள் கட்டிடத்தில் கணக்கெடுப்பு ஊழியர்கூட வரவில்லை. எங்கள் பகுதியில் வாடகை வீடுகளில் வசிக்கும் பல்லாயிரக் கணக்கானோர் அதில் பங்கேற்க இயலவில்லை. அதாவது, நாங்கள் இருக்கிறோம் என்பதே அரசுக் கணக்கில் வரவில்லை. இந்தியாவில் கணக்கெடுப்பு ஊழியர்கள் என்று யாரும் தனியாக இல்லை. பள்ளி ஆசிரியர்கள்தான் இந்தப் பணியையும் செய்ய வேண்டும். அவர்களுக்குக் கொடுக்கப்படும் காலத்திற்குள், அவர்களுடைய பகுதிக்குள்ளான எல்லா வீடுகளுக்கும் சென்று, பதிலளிக்கத் தயங்குகிற மக்களை சமாதானம் செய்து, கிண்டிக் கிளறிக் கேள்விகள் கேட்டு பதில்களைப் பதிவு செய்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

இந்தப்பதிவு கணக்கெடுப்பில் உள்ள குறைகளை அலசுவதற்கானது அல்ல. சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியது சரியா என்று அலச முனைகிறது. அதை அலசும் வேளையில் கணக்கெடுப்பு ஏன் தேவை என்பதையும் அலசுவது அவசியமாகிறது.

கணக்கெடுப்பு ஏன் தேவை?
சென்சஸ் என்ற சொல்லுக்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்று பொருள் கூறுகிறோம். அதாவது, மக்கள் தொகை எவ்வளவு என்று கணக்கிடுவதாகவே பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இதுதான் முதல் பிரச்சினை. கணக்கெடுப்பில் மக்கள் தொகை குறித்து விவரங்கள் கிடைக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அதுமட்டுமே அல்ல. அதன்மூலம் பல விவரங்கள் பிரித்தறியப்படுகின்றன.

மக்கள் தொகை எவ்ளவு அதிகரித்துள்ளது, எந்த விகிதத்தில் அதிகரித்துள்ளது, மக்கள் தொகை அடர்த்தி என்ன, குடும்பங்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது, குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை என்ன, அதில் எழுத்தறிவு அல்லது கல்வியறிவு பெற்றவர்கள் எத்தனை பேர், குடும்பத்தில் உள்ள சொத்துகள் என்ன, வருவாய் ஆதாரம் என்ன, குடும்பத்தின் பொருளாதார நிலை என்ன, வாழ்க்கைத்தரம் எப்படியிருக்கிறது, சொந்த வாகனங்கள் உண்டா, போக்குவரத்து வசதிகள் எப்படி இருக்கின்றன, ............ இன்னபிற விவரங்கள் திரட்டப்படுகின்றன, அல்லது திரட்டப்பட வேண்டும்.

எதற்காக இவை திரட்டப்பட வேண்டும்?
மேலே குறிப்பிட்டவாறு திரட்டப்பட்ட விவரங்கள்தான் தேசியத் திட்டமிடலுக்கு அடிப்படையாக இருக்கின்றன. இவை தொகுக்கப்படுகின்றன, பகுக்கப்படுகின்றன, பலவாறாக ஆராயப்படுகின்றன. உதாரணத்துக்காக எளியமுறையில் விளக்க வேண்டுமானால், இந்த விவரங்களைக் கொண்டு
- நாட்டின் எந்தப்பகுதியில் மக்கள்தொகை அதிகரித்துள்ளது, எந்தப் பகுதியில் மக்கள்தொகை அதிகரிப்பு விகிதம் அபாயகரமாக இருக்கிறது என்று கண்டறிந்து, எங்கே குடும்பக்கட்டுப்பாடு குறித்து தீவிரம் காட்ட வேண்டும் என்று திட்டமிடலாம்.
- மக்கள்தொகை அடர்த்தி எந்தப்பகுதியில் அதிகமாக இருக்கிறது அல்லது அதிகரித்துள்ளது, ஏன் அதிகரித்துள்ளது என்று ஆராயலாம். அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா, எதில் குறைபாடு உள்ளது என்று கண்டறிந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.
- எந்த சமூகப்பிரிவினர் அல்லது இனத்தினர் அல்லது வர்க்கத்தினர் மத்தியில் கல்வியறிவு அதிகமாக இருக்கிறது, அல்லது குறைவாக இருக்கிறது என்று கணக்கிட்டு அவர்களுக்கேற்ற திட்டங்களை வகுக்கலாம்.
- எந்தப் பகுதியில் அல்லது எந்த சமூகத்தில் அல்லது எந்த இனப்பிரிவில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது, ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறது என்று கண்டறிந்து மருத்துவ வசதிகள் குறித்து திட்டமிடலாம்.
- எந்தப்பகுதியில் குடிநீர் வசதி இல்லை அல்லது தட்டுப்பாடு என்று கண்டறியலாம்.
- எங்கே அரசின் நலத் திட்டங்கள் சரியாக மக்களை எட்டவில்லை, அல்லது எந்தத் துறையில் இன்னும் அதிகத் தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திட்டமிடலாம்.

இவை உதாரணங்கள்தான். இப்படி பல நோக்கங்களுக்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள்தான் அடிப்படைத் தரவுகளாக இருக்கின்றன. மேலே மூன்றாவது பத்தியில் குறிப்பிட்டவாறு, நான் வசிக்கும் பகுதியில் 4 லட்சம் பேர் வசிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்களில் ஒரு லட்சம் பேர் கணக்கெடுப்பில் வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். அந்தப்பகுதிக்கான திட்டமிடலில் குறைபாடுகள் இருந்தே தீரும். சாலைகளோ, குடிநீரோ, மின்விளக்குகளோ, மின்சார விநியோகமோ, சுகாதாரமோ, மருத்துவமோ எல்லாமே அங்கே குறையாகவே இருக்கும்.

எனவேதான் கணக்கெடுப்பில் பங்கேற்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. என்னதான் கணக்கெடுப்பு முறைகளில் குறைகள் இருந்தாலும்கூட, நம்மிடமும் குறைகள் உண்டு. குறிப்பாக, கேட்கப்படும் தகவல்கள் அனைத்தையும் நாம் தருவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. வருவாய் பற்றிய உண்மையைச் சொன்னால் வருமான வரிக்காரர்கள் வந்து விடுவார்களோ என்று பயம். சொந்த வாகனம் இல்லை என்று சொன்னால் நம் அந்தஸ்து குறைந்து விடுமோ என்ற மயக்கம். வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பதாகத் தெரிந்துவிட்டால் ரேஷன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம். இதுபோன்ற பல காரணங்களால் நாம் உண்மையான தகவல்களைத் தருவதில்லை, சிலவற்றை மிகைப்படுத்துகிறோம், சிலவற்றை மறைக்கிறோம், சிலவற்றை குறைத்துக் கூறுகிறோம். நாம் செய்யும் இந்தத் தவறு கடைசியில் நம்மையே பாதிக்கப்போகிறது என்பதை நாம் உணர்வதில்லை.

முதல் பத்தியில் குறிப்பிட்ட அமெரிக்கக் கணக்கெடுப்பு குறித்தும் இந்த இடத்தில் ஒன்றைக் கூற வேண்டும். அந்தப் பிரசுரங்களில் ஒன்று ரகசியம் காப்பது குறித்தது. அதாவது, கணக்கெடுப்பில் நீங்கள் வெளிப்படுத்தும் விவரங்களை யார் கேட்டாலும் தர மாட்டோம் என்று கணக்கெடுப்பு நிர்வாகம் உறுதியளித்தது. அதுவும் எப்படி தெரியுமா? “கணக்கெடுப்பு ஆணையம் யாருடைய அதிகாரத்திற்கும் உட்படாத சுதந்திரம் கொண்டது, அமெரிக்க அதிபரே கேட்டாலும் விவரங்களைத் தர மாட்டோம், உச்சநீதிமன்றம் கேட்டாலும் தர மாட்டோம், அந்த அளவுக்கு உங்கள் விவரங்கள் ரகசியமாக இருக்கும்என்பது அந்தப் பிரசுரத்தில் இருந்த உத்தரவாதம்.

இந்தியாவில் இத்தகைய உத்தரவாதங்கள் ஏதும் இல்லை. அது மட்டுமல்ல, மக்கள் அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்ற நோக்கமும் இல்லை. (அமெரிக்காவில் இருக்கிற தமிழர்களுக்காக தமிழில் பிரசுரங்களை வெளியிடும் அளவுக்கு அமெரிக்க அரசு இயங்குகிறது. இங்கே இந்தியாவில் ஆங்கிலம் அல்லது இந்தி தவிர பிற மொழிகளில் இதுபோன்ற முயற்சிகள் ஏதும் நான் கண்டதில்லை. கணக்கெடுப்புப் படிவம் மட்டுமே அந்தந்த மாநில மொழிகளில் இருக்கும்.)

இந்த ரகசியக்காப்பு உறுதி இல்லாத காரணத்தாலேயே கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் குறித்து சில அச்சங்கள் எழுவதையும் மறுக்க முடியாது. யார் யார் எங்கெங்கே வசிக்கிறார்கள் என்கிற விவரங்கள் மதவெறி பிடித்த ஆளும் கட்சியினருக்கு அல்லது அவர்களின் சார்பானவர்களின் கைகளுக்குக் கிடைக்கும் ஆபத்து இருக்கிறது. (ஆதார் அட்டையை நான் எதிர்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.)

இந்த அச்சங்கள் ஒருபக்கம் இருந்தாலும் கணக்கெடுப்பில் பங்கேற்பது அவசியம். அதுதான் எதிர்காலத் திட்டமிடுவதற்கான அடிப்படையாக இருக்கிறது.

இனி சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியமா என்ற கேள்விக்கு வருவோம்.
2008இல், சென்னை உயர்நீதிமன்றம், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கணக்கெடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டது. மற்றொரு வழக்கில் 2010இல் மீண்டும் இதை வலியுறுத்தியது. 1931க்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறவில்லை. அதற்குப் பிறகு பின்தங்கிய வகுப்பினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு கணக்கெடுப்பது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சமூக நீதி கிடைக்க வழி செய்யும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.

கணக்கெடுப்பு ஆணையம் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் முடிவு, அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதாகும், சமூக நீதி என்னும் கருத்தை இதில் திணிக்க உயர்நீதிமன்றம் முயன்றுள்ளது, வழக்கில் தொடர்புடைய விவகாரங்களுக்கும் அப்பால் உயர்நீதிமன்றம் சென்று விட்டது. விஷயத்தை உணர்வுபூர்வமாக அணுகியுள்ளது,” என்று கூறி, உயர்நீதிமன்றத்தின் முடிவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதுதான் விஷயம்.

இந்தத் தீர்ப்பை அளித்த உச்சநீதிமன்றமும், “கணக்கெடுப்பு என்பது வெறும் தகவல் திரட்டல் மட்டுமல்ல, இது மக்கள் நலத் திட்டங்களின் அடிப்படையாகும்என்று கூறியுள்ளது. இதைத்தான் நானும் கணக்கெடுப்பு ஏன் தேவைஎன்ற பத்தியில் விளக்கியிருக்கிறேன்.

இனி, சாதிவிவரம் ஏன் தேவை என்று அலசுவோம்.
முதலாவதாக, இது சாதிக் கணக்கெடுப்பு அல்ல. திரட்டப்படும் இதர விவரங்களோடு சாதி பற்றிய விவரமும் கணக்கெடுப்பில் இடம்பெற வேண்டுமா என்பதே கேள்வியாகும்.
நடப்புக் கணக்கெடுப்பு முறையில் சாதி இல்லையா...? இருக்கிறது. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் பற்றிய கேள்விகள் உண்டு. 2011 கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எண்ணிக்கை 20,13,78,372 - சுமார் 20 கோடி. பழங்குடியினர் எண்ணிக்கை 10,45,45,716 - சுமார் 10.5 கோடி. மொத்த மக்கள் தொகை 121 கோடி.

கணக்கெடுப்பு என்பது மக்கள்நலத் திட்டங்களின் அடிப்படை தகவல் வளம் எனும்போது, இப்போதும் மதவாரியான கணக்கெடுப்பும் எஸ்சி- எஸ்டி பிரிவினரின் எண்ணிக்கை விவரங்களும் திரட்டப்படும்போது, சாதிவாரியான விவரங்கள் திரட்டுவதில் மட்டும் என்ன பிரச்சினை இருக்க முடியும்...?

சாதியைக் கேட்கத் தேவையில்லை அல்லது கூடாது என்று கூறுவோர் என்ன காரணங்களை முன்வைப்பார்கள் என்று பார்ப்போம் -
1. இப்போதெல்லாம் சாதியை யார் பார்க்கிறார்கள்?
2. பெயர்களிலிருந்து சாதியை ஒழித்து விட்டோம், எதற்கு சாதியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்?
3. சாதியைக் கூறுமாறு ஏன் ஒருவரைக் கட்டாயப்படுத்த வேண்டும்?
4. சாதியின் பெயரால் அரசியல் நடத்த மட்டுமே இது உதவும். சாதி வெறிக்கே வழிவகுக்கும்
5. பொருளாதார ரீதியாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, சாதி ரீதியாகப் பார்க்கக்கூடாது.
(வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால் ஏன்னு சொல்லத் தெரியாது, ஆனா சாதி கேக்கக்கூடாதுஎன்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்!)

மேற்கண்ட காரணங்களை மேலோட்டமாகப் பார்க்கையில் சரிதானே என்று தோன்றும். மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களைப் பார்ப்போம்
1, 2 - சாதியை யார் பார்க்கிறார்கள் என்பது டிபிகல் நகர்ப்புற நடுத்தர வர்க்கக் கேள்வி. நீங்களும் நானும் சாதியை ஏற்கிறோம்-ஏற்கவில்லை, விரும்புகிறோம்-விரும்பவில்லை என்பதையெல்லாம் மீறி, சாதி இருக்கிறது, சாதி மனப்பாங்கு இருக்கிறது, சாதி அடக்குமுறை இருக்கிறது, சாதிக்கொடுமைகளும் இருக்கின்றன. பெயரிலிருந்து சாதியை நீக்கி விட்டாலும் மனங்களிலிருந்து சாதி இன்னும் அகலவில்லை.
தவிர, சாதிப்பெயர்கள் ஒழிந்துவிட்டன என்பது தமிழகத்தில்தானே தவிர நாடு முழுவதிலும் அல்ல. சர்மா, பட், திரிவேதி, பட்டாச்சார்யா, ஆச்சார்யா, அகர்வாலா ................. எல்லாம் சாதிப்பெயர்கள்தான். (சாதிப்பிரிவுகள் தொழில்முறையாக அமைந்தனவா அல்லது சாத்திரங்களின் வழியில் அமைந்தனவா என்பதை இங்கே அலச வேண்டாம்.) ஆக, நாடு முழுவதும் சாதியும் இருக்கிறது, சாதி அடையாளமும் இருக்கிறது.
3 - சாதியைக் கூற விரும்பாதவர் அதைச் சொல்லாதிருக்க வகை செய்யலாம். இப்போதும்கூட கணக்கெடுப்பின்போது ஒருவர் தன் மதத்தைக் கூறாதிருக்க உரிமை உண்டு.
4 - இப்போது மட்டும் சாதி அரசியல் இல்லையா என்ன? அதிலும் தமிழ்நாட்டில் பெருகியிருக்கும் சாதிக் கட்சிகள் பற்றி விளக்க வேண்டுமா என்ன?
5. சாதி விவரத்தைத் திரட்டுவதால் பொருளாதார விவரங்களை திரட்டக்கூடாது என்று யாரும் கூறவில்லை. நடப்புக் கணக்கெடுப்புப் படிவங்களில் இரண்டு வகைகள் உண்டு. இரண்டையும் அலசினால் என்னென்ன விவரங்கள் திரட்டப்படுகின்றன என்ற தெளிவு பெறலாம். சாதி விவரம் திரட்டுவது அரசியல் செய்யவே பயன்படும் என்றால் ஒரு கேள்வி - இப்போது மத விவரங்கள் திரட்டப்படுகின்றன, அதற்கு எதிர்ப்பு இல்லை. மத விவரங்கள் திரட்டுவது மட்டும் அரசியலாக்கப் பயன்படாதா...? மத விவரங்கள் திரட்டுவதையும் நிறுத்திவிடலாமே...?!

சாதி விவரம் திரட்டப்படக்கூடாது என்று கூறுவதன் பின்னணியில் ஓர் அரசியல் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
மண்டல் கமிஷன் அறிக்கையின்படி இந்திய மக்கள் தொகையில் எஸ்சி-எஸ்டி பிரிவினர் 32 சதவிகிதம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52 சதவிகிதம். மண்டல் கமிஷன் கணக்கு தவறு என்றது நேஷனல் சாம்பிள் சர்வே. அதன் கணக்குப்படி 36 விழுக்காடுதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின் மதிப்பீட்டின்படி 30 விழுக்காடுதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மண்டல் கமிஷன் பரிந்துரைத்ததை அப்படியே அரசு நிறைவேற்றவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என முடிவு செய்தது.

மண்டல் கமிஷன் மதிப்பீட்டில் பிற்படுத்தப்பட்டோர் 52 விழுக்காடு என்பதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், மேலே குறிப்பிட்ட இரண்டு துறைகளின்– ஒரே அரசின் இரண்டு துறைகளின் - மதிப்பீட்டில் 6 விழுக்காடு வித்தியாசம் இருக்கிறது! சாம்பிள் சர்வே மதிப்பீட்டை முழுமையானதாகக் கருத முடியாது என்பதையும் கவனத்தில் கொண்டால், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம்.

சாதிவாரி கணக்கெடுப்பு 1931இல்தான் கடைசியாக நடைபெற்றது. 1941இல் இரண்டாம் உலகப்போர் காரணமாக கணக்கெடுப்பு நடைபெறவில்லை. 1951இல், சாதியற்ற சமுதாயத்தை நோக்கிய பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக கணக்கெடுப்பில் சாதியைச் சேர்க்க வேண்டியதில்லை என முடிவானது. அறுபது ஆண்டுகள் கடந்து விட்டன. சாதியற்ற சமுதாயம் படைத்து விட்டோமா என்ன?

ஆக, உண்மையிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி விவரம் திரட்டப்பட்டால் உண்மை நிலவரம் ஓரளவுக்குத் தெரிய வரும். அதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகள் வலுவடையும் என்கிற அச்சம்தான் சாதி விவரம் கூடாது என்பதன் காரணமாக இருக்க முடியும்.

இந்த அச்சம் சரியானதா...?
கணக்கெடுப்பில் பொருளாதார நிலையும் இடம்பெறுகிறது, ஏற்கெனவே கிரீமி லேயர் என்கிற ஓர் அமைப்பும் நடைமுறையில் இருக்கிறது. பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் இல்லை என்ற நிலை இப்போதும் இருக்கிறது. எனவே இந்த அச்சம் தேவையற்றது.

கணக்கெடுப்பில் சாதியை சேர்ப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியாக இருப்பது மற்றொரு மாநிலத்தில் மேல்சாதியாக இருக்கலாம். ஒரே சாதிக்குள் உட்பிரிவுகள் இருக்கலாம். இவையெல்லாம் பெரிய விஷயங்கள் அல்ல.

  • குறைந்தபட்சம் ஒவ்வொரு மாநிலமும் தனக்கேற்ற முடிவுகளை எட்டவும் சாதிவாரி விவரங்கள் உதவும்.
  • சிலர் தம் சாதியை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றே வைத்துக்கொண்டாலும், மக்கள் தொகையில் சாதி மறுத்தவர்கள் எத்தனை விழுக்காட்டினர் என்பதையும் கண்டறிய முடியும்.
  • சாதிக் கணக்கெடுப்பு என்பதே இட ஒதுக்கீட்டுக்காகத்தான் என்று அஞ்சவும் தேவையில்லை.
  • எந்த சமூகத்தினர் பல்வேறு துறைகளில் பிற்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அந்த சமூகத்தினரின்பால் கவனம் செலுத்தவும் இது உதவும்.
  • மேலே குறிப்பிட்ட கணக்கெடுப்பின் நோக்கங்களை மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்.


கடந்தகாலக் கணக்கெடுப்புகளின் வாயிலாக முஸ்லிம்கள் பல துறைகளில் பின்தங்கியிருப்பதாகத் தெரிய வந்தது. எந்தத் திட்டமிடலும் இதில் பயன்தரவில்லையே என்று கேட்டால்... ஆம் உண்மைதான். இதற்கு என்னிடம் பதில் இல்லைதான். ஆனால், நான் குறிப்பிடுவதெல்லாம், ஒரு நல்லரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்ற நோக்கில்தான். இன்றைய பாஜக அரசோ, நேற்றை காங்கிரஸ் அரசோ செய்யத் தவறிவிட்டது குறித்ததல்ல. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும், இனியேனும் முறையான விவரங்களாவது திரட்டப்பட வேண்டும் என்பதே என் கருத்து.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்பதுதானே தவிர, சாதிக் கணக்கெடுப்பே கூடாது என்பதல்ல என்றுதான் இதை நான் பார்க்கிறேன். அரசு விரும்பினால் முடிவு செய்யலாம். செய்யுமா...

படம் - Margaret Samte, வால் ஸ்டிரீட் ஜர்னல்

No comments:

Post a Comment