Saturday 29 November 2014

மகளிர் நலனுக்காக 10 திட்டங்கள்



விடுதலைக்குப் பிந்தைய அறுபது ஆண்டுகளில் எத்தனையோ நலத்திட்டங்கள் வந்து விட்டன. மேலை நாகரிகம் அமோகமாகப் பரவியாயிற்று. சுகாதாரம், சுற்றுச்சூழல் என்று எத்தனையோ புதிய புதிய விஷயங்கள் அறிமுகமாக பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் பொது இடங்களில் மகளிருக்கு பொதுக் கழிப்பறைகள் இல்லாத நிலைமையில் மட்டும் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. ஆண்களுக்கும் சில நேரங்களில் பிரச்சினை இருக்கிறது என்றாலும் அவர்கள் சாலையோரம் எங்கு வேண்டுமானாலும் தம் அவஸ்தையைத் தீர்த்துக்கொள்ள முடிகிறது. பெண்கள் நிலைதான் பரிதாபம். 
 
Photo courtesy: Live Mint
கழிப்பறைகள் இல்லாததே பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கும்கூடக் காரணமாக இருக்கிறது. தில்லியில் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு கணக்கே கிடையாது. செய்தித்தாள்களில் தினமும் குறைந்தது மூன்று சம்பவங்களாவது இடம் பெறுகின்றன. இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி கட்சியின் புதிய திட்டம் பற்றி அறிய நேர்ந்த்து. அக்கட்சியின் வலைதளத்தில் இருந்த பதிவின் மொழியாக்கம் இது.

*

ஆம் ஆத்மி கட்சி துவக்கிய டெல்லி டயலாக் திட்டத்தின்படி ஏற்கெனவே இளைஞர்களுக்கான திட்டங்கள் குறித்து மக்களுடன் உரையாடல் நடைபெற்றது. அடுத்ததாக, மகளிர் பிரச்சினைகள் குறித்து உரையாடும் மக்கள் சந்திப்பு 26 நவம்பர் அன்று - ஆம் ஆத்மி கட்சி நிறுவப்பட்ட நாள் - அன்று நடைபெற்றது.

தல்கதோரா திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற கூட்டம், மகளிர் பாதுகாப்பு, மகளிர் உரிமைகள், மகளிருக்கு அதிகாரம், மகளிர் கண்ணியம் காத்தல் ஆகியவற்றுக்கான அறைகூவலுடன் முடிவடைந்த்து.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததும் மகளிர் நலனுக்காக கீழ்க்கண்ட 10 திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று கட்சித் தலைவரும் தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்:
1. தில்லியில் இருளடைந்த பகுதிகள் இருக்காது. நகரின் எல்லாத் தெருக்களிலும் நடைபாதைகளிலும் விளக்குகள் பொருத்தப்படும்.
2. பேருந்துகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். பொதுமக்கள் போக்குவரத்து வசதிகளில் குற்றச் செயல்கள் தடுக்கப்படும்.
3. ஒவ்வொரு பேருந்திலும் சிறப்புக் காவலர்கள் இருப்பார்கள். பெண்களை சீண்டுதல், கிண்டலடித்தல், வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கப்படும்.
4. கிராமீன் சேவா மினி வேன்கள், பகிர் ஆட்டோக்கள், மின் ரிக்‌ஷாக்கள் போன்ற சிறுரக வாகனங்கள் வாயிலாக நகரின் எந்த மூலைக்கும் போக்குவரத்து வசதி அளிக்கப்படும். குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே அவை இயங்குமாறு செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.
5. மகளிர் கழிப்பறை இல்லாதது மகளிர் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, மகளிருக்காக இரண்டு லட்சம் கழிப்பறைகள் அமைக்கப்படும். இவற்றில் 50,000 கழிப்பறைகள் பொதுமக்கள் புழங்கும் பகுதிகளிலும், ஒன்றரை லட்சம் கழிப்பறைகள் சேரிப்பகுதிகளிலும் அமைக்கப்படும்.
6. மகளிருக்கு எதிரான குற்றங்களில் விரைவாக நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 47 விரைவு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும்.
7. புதுதில்லி ஹோம் கார்டு மற்றும் குடிமக்கள் பாதுகாப்புப் படையைப் பயன்படுத்தி, 12,000 பேரைக் கொண்ட மகளிர் பாதுகாப்புப் படை உருவாக்கப்படும்.
8. மொபைல் தொலைபேசிகள் அனைத்துக்கும் பாதுகாப்புப் பொத்தான் வசதி வழங்கப்படும். அவசர காலத்தில் எவரும் எங்கிருந்தும் வை-ஃபை வாயிலாக தில்லி போலீஸைத் தொடர்பு கொள்ள இயலும்.
9. சேரிப்பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகள் அமையும் விஷயத்தில் மகளிர் கருத்துக் கூறும் உரிமை தரப்படும்.
10. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்பவர்கள், அன்றாடக் கூலிகள் போன்றவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்க கவனம் செலுத்தப்படும். தில்லியின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சுகாதாரம், உடல் நலம், கல்வி வசதிகள் மேம்படுத்தப்படும்.
 
Photo Courtesy: The Hindu
கேஜ்ரிவால் இந்தத் திட்டங்களை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் பெண் டிஜிபி-யும், ஹரித்வார் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டவருமான திருமதி கன்ச்சன் சௌத்ரி உணர்ச்சி மிகு உரையாற்றினார். ஆக்சிஸ் வங்கியின் முன்னாள் துணைத்தலைவர் மனிஷா லாத் குப்தா, கிரீன்பீஸ் இயக்கத்தின் தலைவர் லலிதா ராமதாஸ், ஆகியோரும் உரையாற்றினர். ஆப் கட்சித் தலைவரும், நடிகையுமான குல் பனாக், கட்சியின் பேச்சாளர் அதிஷி மர்லேனா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

ஸ்காட்லாந்தின் ராயல் வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரியும், தென் மும்பை தொகுயில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகவும் இருந்த மீரா சன்யால், கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி பந்தனா குமாரி ஆகியோர் கட்சியில் மகளிர் பங்கேற்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர். பிரசாந்த் பூஷண், மனீஷ் சிஸோடியா, சஞ்சய் சிங் போன்ற கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் பிரிவின் மாவட்டத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

டெல்லி டயலாக் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆஷிஷ் கைதான், ஆதர்ஷ் சாஸ்திரி இருவரும் இத்திட்டத்துக்கான கருத்துகள் பற்றிய கலந்துரையாடல்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்று விளக்கினர். இதற்காக தில்லி முழுவதும் பல்வேறு வார்டுகளில் 300க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன என்றும் விளக்கினர்.

டெல்லி டயலாக்கின் அடுத்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

*

இந்தப் பிரச்சினைகள் குறித்து இதுவரை வேறெந்தக் கட்சியும் இப்படிப்பட்ட சிந்தனைகளை முன்வைத்ததாகத் தெரியவில்லை. பங்கேற்றவர்களும் பாருங்களேன் - சர்வதேச அளவில் பெரிய பதவிகளை வகித்தவர்கள். வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இறங்கியிருக்கிறார்கள்.

நமக்குத்தான் வாய்ச்சவடால் வீரர்களைப் போற்றியே பழகிப் போய்விட்டதே. அதிலிருந்து வெளிவர முடியாததால்தான் ஏதேதோ விமர்சனம் செய்து, இருக்கிற நல்ல கட்சிகளையும் அழிக்க முனைந்து கொண்டிருக்கிறோம்.

தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது மட்டுமே பாரதிய ஜனதா அரசின் மோசமான போக்குக்கு முட்டுக்கட்டையாக இருக்க முடியும்.

1 comment:

  1. நல்ல திட்டங்கள். செயல் படுத்தினால் சிறப்பாக இருக்கும். பார்க்கலாம் - இம்முறை என்ன நடக்கப் போகிறது என.

    ReplyDelete