தளம் இதழை தவறாமல் அனுப்பி
வருகிறார் அதன் ஆசிரியர், நண்பர் பாரவி. முதல்முறை மூன்று இதழ்களை அனுப்பினார்.
அவற்றைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, தேர்தல் நேரத்துப் பதிவுகளால் சாத்தியப்படாமலே போயிற்று. சி.சு. செல்லப்பா
குறித்த சிறப்பிதழைப் பற்றி கொஞ்சம் எழுதி வைத்திருந்த பதிவைத் தேடி எடுக்க
இயலவில்லை.
அக்டோபர்-டிசம்பர் இதழ்
சில நாட்களுக்கு முன் கிடைத்தது. இனியும் எழுதாமல் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தேன்.
இத்தனைக்கும் நான் இதுவரை சந்தாவே செலுத்தவில்லை. நான் தீவிர வாசகன் என்ற
மரியாதைக்காகவே தொடர்ந்து அனுப்பி வருகிறார் என்று நினைக்கிறேன். நன்றி நண்பரே.
இந்த இதழில் என்ன இருக்கிறது? சுருக்கமாக, கீழே இருக்கிற
பட்டியலின் அமைப்பைப் பார்த்தாலே இதழ் என்ன வடிவில் இருக்கிறது என்று புரியும். -
• தி.க.சி.யுடன்
அவருடைய இறுதிநாட்களில் நிகழ்ந்த உரையாடல்
• சத்தியமூர்த்தியின்
மகள் லட்சுமி நடத்திய வாசகர் வட்டம் குறித்து அசோகமித்திரன் எழுதிய கட்டுரை.
ஜானகிராமனின் அம்மா வந்தாள் இதழ் வெளிவந்ததும்,
கோவையைச் சேர்ந்த காந்தி-வள்ளலார் பக்தர் வாசகர் வட்டத்துக்கு சந்தாவை
திரும்பப் பெற்றுக்கொண்டாராம்.
• வாசகர் வட்டம் பற்றி
லட்சுமியுடன் சிறிய நேர்காணல்.
• பி.எம். கண்ணன்
குறித்து வே. சபாநாயகம் எழுதிய கட்டுரை.
• பி.எம். கண்ணனின்
சிறுகதை
• ஸித்தி ஜுனைதா பேகம்
குறித்து அம்பை எழுதிய கட்டுரை
• பெண் கல்வியின்
முக்கியத்துவம் குறித்து ஸித்தி ஜுனைதா பேகம் எழுதிய கட்டுரை. பெண்களுக்குக்
கல்வியை மறுக்கும் இஸ்லாமியர் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை.
• ஸித்தி ஜுனைதா பேகம்
எழுதிய காதலா கடமையா நாவலுக்கு அவர் எழுதிய முகவுரை
• எம்.வி. வெங்கட்ராம்
குறித்து வி. விஜயராகவன் கட்டுரை
• எம்.வி. வெங்கட்ராம்
எழுதிய சிறுகதை
• வ.ரா.வின்
நடைச்சித்திரம் என்ற தலைப்பில் வி. அரசு எழுதிய கட்டுரை
• வ.ரா. எழுதிய
வண்டிக்கார செல்லமுத்து
• க.நா.சு குறித்து
செ. ரவீந்திரன் எழுதிய கட்டுரை
• க.நா.சு. எழுதிய
நினைவுப்பாதை கவிதை
• கோபி கிருஷ்ணனைப்
பற்றி தஞ்சாவூர் கவிராயர் கட்டுரை
• கோபி கிருஷணனின்
மகான்கள் சிறுகதை
• காலத்தைக் கவிதை
செய்த கலைஞன் என்ற தலைப்பில் ஆத்மாநாம் குறித்து இல. சைலபதியின் கட்டுரை
• ஆத்மாநாம் கவிதைகள்
• என்.ஆர். தாசன்
குறித்து பா. இரவிக்குமார் கட்டுரை
• என்.ஆர். தாசனின்
கவிதை
• ஜெயந்தனின் கோடு
இதழ் குறித்து பாரவி எழுதிய கட்டுரை
• ஜெயந்தன் எழுதிய
துக்கம் என்னும் சிறுகதை
• மருதகாசியைப் பற்றி
மு.இரா. முருகன் கட்டுரை
• மருதகாசியின் சில
பாடல்கள்
• மூவலூர்
இராமாமிர்தம் குறித்து மனுஷியின் கட்டுரை
• மூவலூர்
இராமாமிர்தம் எழுதிய தாசிகளின் மோசவலையிலிருந்து ஒரு பகுதி
• சுரேஷ் பாபு
மலையாளத்தில் எழுதிய லோகாயதம் நாடகம், தமிழில் மு. ஜீவா.
• யு.ஆர்.
அனந்தமூர்த்தி, கொல்கத்தா
கிருஷ்மூர்த்தி, ராஜம் கிருஷ்ணன், தேனுகா, அசோக் குமார்
ஆகியோரின் பணிகள் குறித்த கட்டுரைகள்
• இன்னும் சில
இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், நூல் அறிமுகம்....
மொத்தத்தில், கதைகள், கவிதைகள், கட்டுரைகள்,
இலக்கியக் கோட்பாடுகள், திரைப்படம், நாடகம் என அனைத்தும் கலந்து அமைந்திருக்கிறது இதழ்.
தளம் இதழ் எப்படியிருக்கிறது? இப்போது வெளிவருகிற
இதர சில இலக்கிய இதழ்கள்போல வண்ணப்பக்கங்களோ,
லேஅவுட் செய்வதில் ஜாலங்களோ இல்லை. நான் வெளியிட்டுவந்த தலைநகரத் தமிழோசை
இதழும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது,
ஆனால் நானே வடிவமைக்க முடியும் என்பதால் லேஅவுட்டில் கொஞ்சம் கூடுதல் கவனம்
செலுத்தினேன். தளம் இதழில் உள்ளடக்கத்துக்குத்தான் முக்கியத்துவம். அட்டையும்கூட
கறுப்பு வெள்ளைதான். 160 பக்கங்களுக்கு
கனமான இதழை கனமான விஷயங்களுடன் கொண்டுவருவது சாதாரண வேலையல்ல. அதற்காக
வணங்குகிறேன் நண்பரே.
காலாண்டு இதழான தளம், இப்போது இரண்டாவது ஆண்டை நிறைவுசெய்கிறது என்று
தலையங்கத்தில் அறிகிறேன். பாராட்டுகள்.
இத்தகைய இதழ்கள் தொடர்ந்து
வெளிவர வேண்டுமானால் வாசகர்கள்தான் ஆதரவு தர வேண்டும். தனி இதழ் 50 ரூபாய். ஆண்டுக்கு 200 ரூபாய். (இதுவரை சந்தா செலுத்தாத குற்றத்துக்காக ஐந்தாண்டு சந்தாவை உடனே
அனுப்பி விட்டேன்.)
தொடர்புக்கு - தளம், 46/248, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை, சென்னை-600014; தொலைபேசி 044-28485000;
9445281820
சந்தா செலுத்த விரும்புவோர்
வங்கிவழி செலுத்தலாம்.
Name of the Account: THALAM ; Current Ac No. : 6087653615 ; Bank : Indian Bank ; Branch : Tamil Nadu Open University Campus
Branch; IFSC Code : IDIB000T146
நல்ல புத்தகம் அறிமுகம்...
ReplyDeleteஊரில் இருந்தால் சந்தா கட்டலாம்... வெளிநாட்டு வாழ்க்கை... ஊருக்குப் போகும் போது தொடர்பு கொள்கிறேன்..