Wednesday, 19 June 2013

படித்ததில் பிடித்தது - தூப்புக்காரி


நான் மறுபிறவி எடுக்க விரும்பவில்லை. ஆனால் நான் மறுபிறவி எடுத்தே ஆகவேண்டுமானால் ஒரு தீண்டப்படாதவனாகவே பிறக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய துயரங்களையும், துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்; அவமதிப்பைத் தாங்க முடியும்; என்னையும் விடுவித்துக்கொண்டு அந்த அவல நிலை யிலிருந்து அவர்களுக்கும் விடுதலைத் தேடித் தர முயல முடியும்.
- காந்தி

திங்கள்கிழமை வானொலி நிலையத்துக்குச் செல்லும் வழியில் தூப்புக்காரி படித்து முடித்து வீடுவந்த சற்று நேரத்தில் வேறொரு நூலில் இந்த வாக்கியங்களையும் படிக்க நேர்ந்தது தற்செயல் நிகழ்வாகத்தான் இருக்க வேண்டும்.

* * *

“நம் சமூக வாழ்வின் அதலபாதாளங்களில் பீ வாளியும் அகப்பையுமாக, விளக்குமாறும் பிளீச்சிங் பவுடருமாக, மலிவான நீலச்சேலையில் அலையும் துப்புரவுத் தொழிலாளர்களோடு வாகரையும் அலையவிடும் தீவிர எழுத்து மலர்வதியின் தூப்புக்காரி நாவலில் அதன் முழு வீரியத்துடனும், வன்மத்துடனும், கொந்தளிப்புடனும் பதிவாகியிருக்கிறது. எல்லாரும் அன்றாடம் பார்க்கிறவர்கள்தான் இந்தத் தூப்புக்காரிகள். இதுவரை வாசகரின் புலனுக்குப் புலப்படாத துண்டுதுண்டான பீயையும், திட்டுத்திட்டான தூமை இரத்தத்தையும், அது ஏற்படுத்தும் அருவருப்பையும், அழுகிப்போன அழுக்குகள் அள்ளப்படும்போது குபீரென எழும்பும் குடலைப் புரட்டும் வாடையையும்... இப்படி சமூக குண்டியைக் கழுவி, குளிப்பாட்டி, பவுடருக்குப் பதிலாக பிளீச்சிங் பவுடர் பூசி, ஒப்பனை பண்ணும் இந்தச் சமூகத் தாய்மாரை நன்றிகெட்ட சமூகம் நாயிலும் பன்றியிலும் கீழாக நடத்தும் கேவலத்தை கனகம், ரோஸ்ஸிலி, கனகத்தின் மகள் பூவரசி, மாரி என அழுக்குப் பாத்திரங்களின் ஊடாக மனித மனத்தை அழவைக்கும் சித்திரங்களாக அணு அணுவாக வரைந்து காட்டியிருக்கிறார் மலர்வதி.”

அணிந்துரையில் பொன்னீலன் மேற்கண்டவாறு சீறுவதன் காரணம் நாவலைப் படிக்கையில் புரிகிறது. எவராலும் புரிந்து கொள்ளப்படாத வேதனைகளை, அவலங்களை, வலிகளை உள்ளது உள்ளபடிக் காட்டுகிறது தூப்புக்காரி. 

* * *

மருத்துவமனையில் கழிப்பறை உள்பட எல்லாவற்றையும் சுத்தம் செய்யும் தூப்புக்காரி கனகம். ரோஸ்ஸிலி, கனகத்தின் சக உழைப்பாளி. கனகத்தின் ஒரே மகள் பூவரசி. நகரின் தோட்டியாக வேலை செய்கிற மாரி. மருத்துவமனைக்கு வெளியே டாக்சி ஓட்டுகிற மனோ. இவர்கள்தான் கதையின் முக்கியப்பாத்திரங்கள்.

இறந்து போன கணவனின் மருத்துவச் செலவுக் கடனை ஈடுகட்டவும் சோற்றுக்காகவும் தூப்புக்காரியாக இருக்கிறாள் கனகம். மகள் பூவரசி மனோவை மனதுக்குள் நேசிக்கிறாள். மனோவும் பூவரசியை மனதுக்குள் நேசிக்கிறான். மாரி பூவரசியை நேசிக்கிறான். இந்த முக்கோணக் காதல்கதையைச் சுற்றி வலைபின்னி இருப்பது வறுமையும் அவலமும் தீண்டாமையும் சமூக மதிப்பீடுகளும்.

மனோவின் வீட்டுத் திருமணத்தில் பந்தியிலை எடுக்கும் வேலைக்குச் செல்லும் கனகம், பசிக்குச் சாப்பிட உட்காரும்போது அவமதிக்கப்படுகிறாள். அதை பூவரசி பார்க்க நேருகிறது. அவமதிக்கப்பட்ட கனகத்தின் உடல்நிலை மோசமாகிறது. அவளுடைய இடத்தின் வேலையை செய்ய வேண்டிய கட்டாயம் வருகிறது பூவரசிக்கு. மனோ செய்வதறியாது தவிக்கிறான். ஆபத்பாந்தவனாக வருகிறான் மாரி. கனகத்தை பூவரசியோடு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அவளுடைய வேலையை தான் செய்கிறான். பூவரசிக்கு மாரியின்மீதான மதிப்பு உயர்கிறது. இருந்தாலும் மனோவின் நினைப்பும் வாட்டுகிறது.

கனகம் மருத்துவமனையில் இருக்க, வீட்டுக்குச் செல்லும் பூவரசிக்கு ஆறுதலாக வருகிறான் மனோ. மூன்றாண்டுகளாகப் பூட்டிவைத்திருந்த காதல் இருவருக்குள்ளும் பரஸ்பர வெள்ளமாய்ப் பாய்கிறது. பூவரசியைத் தேடி முதல்முறை வீட்டுக்கு வரும் மாரிக்கு இது தெரிந்து உடைந்து போகிறான். ஆனாலும் மனதுக்குள் புதைத்துக்கொள்கிறான். 

கனகத்தின் இடத்தில் தூப்புக்காரியாக நேர்கிறது பூவரசிக்கு. அறிமுகமில்லாத, குமட்டும் வேலையை தவிர்க்க இயலாமல் சுமக்கிறாள் பூவரசி. மருத்துவமனைக்குள் அவளைத் தேடிவரும் மனோவின் தோளில் சாய்கிறாள். ஆனால் மனோவால் அந்தக் கோலத்தில் அவளை அணைக்க முடியாமல் இரும்பாகி நிற்கிறான். இதைக்கண்டுவிட்ட கனகம் மனமுடைந்து இறந்து போகிறாள்.

பூவரசி நிரந்தரத் தூப்புக்காரி ஆகிறாள். குடும்பத்தினரின் வற்புறுத்தல் தாளாமல், வெளியே சொல்லும் தைரியமும் இல்லாமல் மனோ வேறு ஒருத்தியை திருமணம் செய்துகொண்டு வெளியூர் சென்று விடுகிறான். ஒருநாள் காதல் கூடலில் பூவரசி கருத்தரிக்க, அவளுடைய குழந்தைக்குத் தானே தகப்பனாக வருகிறான் மாரி. 

குற்ற உணர்வுடன் குமுறிக்கொண்டிருக்கும் மனோ ஊருக்குத் திரும்பி வருவதிலும், அவனுடைய நினைவுகளிலும் துவங்குகிறது முதல் அத்தியாயம். கடைசி அத்தியாயத்தில் அவன் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கையில், மாரி விபத்தில் இறந்து போயிருப்பதையும், பூவரசி தூப்புக்காரியாய் இருப்பதையும் பார்த்து நொந்து வெளியேறுவதில் முடிகிறது. 

மருத்துவமனைக்கு வரும் ஒருவருக்கு குழந்தையை தத்துக் கொடுத்தால் குழந்தையாவது நன்றாக இருக்கும் என்கிறார் மருத்துவர். முதலில் ஒப்புக்கொள்ளும் பூவரசி, கடைசியில் மனம் மாறி அவர்களிடமிருந்து குழந்தையைப் பறித்துக்கொண்டு போகிறாள். 

* * *

மேலாண்மை பொன்னுசாமி அணிந்துரையில் குறிப்பிட்டதுபோல முதல் ஐந்தாறு பக்கங்கள் கற்றுக்குட்டித்தனமான பிரதியைப் படிப்பது போலத்தான் இருந்தது. அதைமட்டும் சீர்செய்திருந்தால் நாவல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எப்படியிருப்பினும், மலர்வதிக்கு இது இரண்டாவது நாவல்தான் என்று எண்ணும்போது பாராட்டியே தீர வேண்டும்.

கதை மாந்தர்கள் எவருமே கெட்டவர்கள் இல்லை. அவரவர் அவரவரின் சூழ்நிலைக் கைதிகள். இந்த சமூகத்தின் தீண்டாமைப் பார்வைதான் மிகப்பெரிய தீய பாத்திரம். 

உரையாடல்களின் ஊடே தீயாக வந்துவிழுகின்றன சொற்கள். அன்றாட உரையாடல்களில் பயன்படுத்தாத அசிங்கச் சொற்கள் முகத்தில் அறைகின்றன. சொற்களே அறையும்போது, அந்தச் சொற்களுக்கு உரிய பொருட்களின் அறைகளை அன்றாடம் தாங்கிக்கொண்டிருக்கும் தூப்புக்காரிகளுக்கும் துப்புரவுத் தொழிலாளிகளுக்கும் எப்படி இருக்கும்...? வாசிப்பின் இடையே பல இடங்களில் கண்ணீர் கட்டிக்கொண்டதைக் கூறிக்கொள்ள வெட்கமில்லை எனக்கு.

* * *

நாவலிலிருந்து சில வரிகள் –

குடலைப்பிடுங்கும் நாற்றத்திலும் முகம் சுழிக்காமல் நின்றான் மாரி. சாக்கடை வெள்ளத்தில் மூழ்கி அதை வாரி கரையேற்றிக் கொண்டிருந்தான். ... கறுப்புக்கலரில் பாய்ந்து வந்த அழுக்குகளை வாரியபோது எழுந்த துர்நாற்றத்தில் பக்கத்தில் சென்ற பலரும் மூக்கில் கைவைத்தபடியே கடந்து சென்றனர்.

உள்ளதுபோல சாக்கடைய ஓடவிட்டுட்டு இப்ப ஒண்ணும் தெரியாதது மாதிரி நல்லா பொத்திக்கிட்டு போங்க. தூறியதையும் வாரி எறிஞ்சிட்டு, தூமத்துணிகளையும் கலக்கி விட்டு, மீன் கழுவிய வெள்ளத்தையும் இதுல ஊத்தி, மோண்டு துப்பி விட்டுட்டு, இப்ப மட்டும் நாறுதோ... இதெல்லாம் வாரியவனுக்கு மணம், கொணம் ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சீங்களோ... 

* * *

அடுத்தமுறை சாக்கடை சுத்தம் செய்யும் எவரையேனும் பார்க்க நேர்ந்தால் கைகொடுக்க இயலாவிட்டாலும், ஒரு புன்னகையைப் பரிமாறிக்கொள்ள இயலாவிட்டாலும் பரவாயில்லை, கேவலமான பார்வையை வீசிவிடாமல் போனாலே போதும்.  மலர்வதிக்கு அது வெற்றிதான். 

* * *

மலர்வதி வேறு யாருமில்லை. சில மாதங்களுக்கு முன்னால் சாகித்ய அகாதமி அழைப்பின்படி அஸாம் செல்ல பணமில்லாமல் தவிக்கிறார் என்று பத்திரிகைகள் மிகைப்படுத்தி எழுத, அதை ஆளாளுக்கு பேஸ்புக்கில் பகிர்ந்தார்களே, அதே எழுத்தாளர்தான். அவரை தில்லிக்கு வரவழைத்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக பணமுடிப்பு தரவும் ஏற்பாடு செய்திருந்தேன். மலர்வதிதான் வர இயலவில்லை என்று தெரிவித்து விட்டார். கடந்த மாதம் நூலை வரவழைத்தேன், இப்போதுதான் வாசிக்க முடிந்தது. 


அனல் பதிப்பகம், அனலகம், தண்ணீர்பந்தல், பாலூர், கருங்கல்-629157, தொலைபேசி - 9442584238

Friday, 14 June 2013

உளவையும் களவையும் நிந்தனை செய்வோம்


இன்று சூடாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் அமெரிக்க உளவு விவகாரம்.  நண்பர் ஈரோடு கதிரும்கூட சன்டிவியில் ஒரு விவாதத்தில் கலந்து கொண்டார். அமெரிக்கா மட்டும்தான் உளவு பார்க்கிறதா... நம் அரசு என்ன செய்கிறது... பழைய நினைவுகளிலிருந்து ஒரு பதிவு.

1994-95வாக்கில் நடந்தது இது. வேலை செய்து வந்த நிறுவனத்திலிருந்து விலகியிருந்தேன். சொந்தத் தொழில் துவங்குவதற்கான இடைக் காலத்தில் கரோல்பாகில் பழைய அச்சகத்தை குத்தகைக்கு எடுத்து நடத்திக்கொண்டிருந்தேன். தமிழ்ச்சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்த காலம் அது. 

ஒரு நாள் வழக்கம்போல அச்சகத்தில் அமர்ந்திருந்தேன். சற்றுத் தொலைவில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்த நபரை ஏற்கெனவே பார்த்திருந்தது போலத் தோன்றியது. நினைவுகளைக் கிளறியபோது, 2-3 நாட்களாகவே அவர் அப்படி நிற்பது நினைவு வந்தது. நான் வாசலில் வந்து நின்று அவரைப் பார்த்தேன். அவர் சரசரவென நகர்ந்து போய்விட்டார். மீண்டும் உள்ளே போய் அமர்ந்து ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தேன். அருகே இருந்த ரவுண்டானா அருகே ஒரு கம்பத்தின்பின் நின்றவாறு கவனித்துக் கொண்டிருந்தார். 

அவர் கவனிக்காத கணத்தில் சட்டென வெளியே சென்றவன் வேறு வழியாகச் சுற்றிவந்து அவர் நின்று கொண்டிருந்த ரவுண்டானாவுக்குச் சென்றேன். அவருக்குப் பின்னால் நின்று யாராய் இருக்கும் என்று கவனித்தேன். தோளைத் தட்டினேன். திடுக்கிட்டுத் திரும்பியவர் வெலவெலத்துப் போனார். சாடையிலிருந்தே அவர் தமிழர் என்று தெரிந்தது. உடலமைப்பும் தலைமுடி அமைப்பும் அவர் யார் என்று யூகம் செய்ய வைத்தன.
- “என்ன சார்... எதுக்காக என்னையே கவனிச்சுகிட்டு இருக்கீங்க... ”
- “நானா... இல்லையே... வேற ஒருத்தருக்காக காத்திட்டிருக்கேன். ”
- “சார்... எனக்கும் கொஞ்சம் மூளை இருக்குன்னு நம்புங்க. நீங்க கிரைம் பிராஞ்ச்னு தெரியும் எனக்கு”
சிரித்துக்கொண்டே உத்தேசமாக ஒரு போடு போட்டேன். அவரிடம் வேறு பதில் இருக்கவில்லை. முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. நான் சிரித்துக்கொண்டே பேசியதால் அவர் முகத்திலும் கடுமை இருக்கவில்லை. 
- “பரவாயில்லை சார். நீங்க உங்க டியூட்டிய செய்யறீங்க. அதை நான் வேண்டாம்னு சொல்லலே. ஆனா என்ன விஷயம்னு சொன்னா நல்லது. சொல்ல விருப்பமில்லேன்னா விடுங்க. எனக்கும் ஆளுக இருக்கு, கண்டுபிடிச்சுடுவேன். ”
அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். 
- “இங்கே வேண்டாம் சார்...”
தன்னை வேறு யாராவது வேவு பார்க்கிறார்களா என்று அவர் அஞ்சியிருக்கலாம்.
“சரி, வாங்க” என்று பக்கத்தில் இருந்த டீக்கடைக்குப் போய் அமர்ந்தோம்.
- “சொல்லுங்க என்ன விஷயம்... என்கிட்ட சொல்றது எதுவும் வெளியே போகாது. உங்களுக்கும் ஏதும் சிக்கல் வராது. சொல்லுங்க. ”
- “சார்... உங்களைப் பத்தித் தெரியும் எனக்கு. ஆனா என்ன செய்யறது... எங்க பொழப்பு அப்படி. தப்பா எடுத்துக்காதீங்க. ”
வழக்கமான போலீஸ் பாழை.
- “கண்டிப்பா இல்லை. விஷயத்தைச் சொல்லுங்க.”
- “எவனோ ஒரு தே...ப்பய மொட்டைக் கடுதாசி போட்டிருக்கான் சார். எங்க தலையில விடியுது. ”
- “என்னன்னு போட்டிருக்கான்.... ”
- “நீங்களும் இன்னும் சிலபேரும் சேர்ந்து பிரைம் மினிஸ்டரைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கீங்கன்னு அதுல எழுதியிருக்கான். ”
- “சிரிக்கிறதைத்தவிர வேற எதுவும் செய்ய முடியாதுங்க என்னால.”
- “நீங்க சிரிக்கலாம் சார். ஆனா நாங்க சிரிக்க முடியாது. ஏன்னா... நீங்க இதுக்காக ஒரு டிரை ரன்கூட நடத்தியிருக்கிறதாவும் அதுல எழுதியிருக்கான். இப்படி டெக்னிகலா எழுதும்போது அலட்சியம் செய்ய முடியாது இல்லியா... அதனால்தான் என்னைய இங்கே டியூட்டி போட்டிருக்கு. ”
ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு டிரை ரன் போன்ற சொற்கள் எல்லாம் பரவலாகிக் கொண்டிருந்த நேரம் அது. விஷயத்தின் தீவிரம் புரிந்தது.
- “சரி, வேறு யார் யார் பேரில் புகார் வந்திருக்கிறது. ”
அவர் பதில் சொல்லத் தயங்கினார்.
- “கவலையே படாம சொல்லுங்க. நீங்களே சொன்னீங்க என்னைப்பத்தித் தெரியும்னு. என்கிட்டயிருந்து எதுவும் வெளியே போகாது.” 
அவர் சில பெயர்களைச் சொன்னார். அவர்கள் எல்லாரும் மைய அரசில் உயர் பதவியில் பணிபுரிபவர்கள், என் நெருங்கிய நண்பர்கள். நேர்மையின் சின்னங்கள். பெயர்களைக் கேட்டதுமே இது யாருடைய வேலையாக இருக்கும் என்று புரிந்துவிட்டது.
- “சரி. இப்போது இதை யார் செஞ்சிருப்பாங்கன்னு புரிஞ்சு போச்சு. இப்போ என்ன செய்யப்போறீங்க.... ” 
- “நான் நேற்றே ரிப்போர்ட் கொடுத்தாச்சு சார். இன்னிக்கு கடைசியா ஒருதடவை வந்துட்டுப் போலாம்னு வந்தேன். எனக்கு உங்க மேல சந்தேகமே இல்லை. ஆனா பைல் குளோஸ் பண்ணனும்னா அதுக்கான எல்லாம் செஞ்சுதானே ஆகணும்.... ”
- “நீங்க விஷயத்தைச் சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம். உங்க நம்பிக்கைக்காக தேங்க்ஸ். சரி, அந்த மத்தவங்களை யாரு பாக்கிறாங்க... அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியுமா... ”
- “அவங்களுக்கு எல்லாம் பேவரபிளாதான் சார் இருக்கு. கவர்மென்ட் செர்வன்ட்ஸ் இல்லியா... மேலோட்டமா ரெகார்டையும் சேத்துப் பாத்ததுல அவங்க பேரு எல்லாம் கிளியர் ஆயிடுச்சு. இப்போ உங்க பேரையும் கிளியர் பண்ணிட்டு கேசை க்ளோஸ் பண்ணிடுவோம்.”

அவரை விடைகொடுத்து அனுப்பியபிறகு மனதுக்குள் பெருத்த நிம்மதி ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது. காரணம் உண்டு. நான் அமர்ந்திருந்த அச்சகத்துக்கு இலங்கைப் போராளிகளின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் தமிழகத்தின் முக்கியப்புள்ளிகள் சிலர் வந்து சென்றிருக்கிறார்கள். எப்படியோ, விஷயம் முடிந்ததில் நிம்மதி.

அந்த கிரைம் பிராஞ்ச் காவலர் பிறகு நண்பராகிவிட்டதும், பத்திரிகையாளராக நான் செல்லும் இடங்களில் எல்லாம் அவரும் பொது மக்களில் ஒருவராக இருந்து கண்காணிப்பதும், நாங்கள் இருவரும் மௌனப் புன்னகை பரிமாறிக்கொண்டதும் தனிக்கதை.

எங்களுக்கு எதிராக இதைச் செய்தவர்கள் யாரும் இப்போது தில்லியில் இல்லை. 

இதற்கு முந்தைய வேவு அனுபவம் எப்படி இருந்தது. 1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது நான் தில்லியில் இருந்தேன். இரவு நடந்த சம்பவம் என்பதால், இந்திரா கொலையுண்டபோது ஏற்பட்ட கலவரத்தையும் கணக்கில் கொண்டு, இரவோடு இரவாக நகரெங்கும் பாதுகாப்பை பலப்படுத்திவிட முடிந்தது. நகரில் எந்தவொரு இடத்திலும் தமிழர்கள் எவரொருவரும் பாதிக்கப்படவில்லை. வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்ததால்தான் தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்று இன்றும் தில்லிவாழ் தமிழர்கள் சிலர் பேசிக்கொள்வதுண்டு. எனக்குத் தெரியும், அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பார்கள். இந்திரா காந்தி கொல்லப்பட்டது பகலில். செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. செல்பேசிகள் இல்லாத, தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத அக்காலத்தில் இரவோடு இரவாக ராஜீவ் கொலை பற்றிய செய்தி பரவ வழி இருக்கவில்லை. கிடைத்த அவகாசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

நான் அப்போது வசித்தது கரோல்பாகில். காலையில் பிபிசி கேட்டுத்தான் ராஜீவ் காந்தி கொலை விஷயம் எனக்குத் தெரிந்தது. கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. சரஸ்வதி மார்கில் இருந்த உடுப்பி ராகவேந்திரா ஹோட்டல் சர்வர் எனக்கு நண்பராகி இருந்தார். அவர்தான் பாதிக் கதவைத் திறந்து வைத்து எனக்கும் இன்னும் சில நண்பர்களுக்கும் உணவு படைத்தார். யாரும் அந்தக் கடையை அடைக்கச் சொல்லவில்லை.

இப்படி இருந்தும்கூட, தில்லியில் சரஸ்வதி மார்க் மூலையில் எப்போதோ மூடப்பட்ட, சிதிலமான ஒரு ஹோட்டலின் சாய்ந்து கிடந்த தமிழ்ப் பெயர்ப்பலகையைப் படம் எடுத்துப்போட்டு, தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன என்று எழுதி தன் பரபரப்பு அரிப்பைத் தீர்த்துக்கொண்டது ஒரு விகடப் பத்திரிகையின் தம்பி. அதை விடுங்கள்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழர்கள் உளவுபார்க்கப்பட்டனர். எனக்கு வந்த கடிதங்கள் எல்லாமே உடைக்கப்பட்டே கிடைத்தன. தினமும் 2-3 கடிதங்கள் வரும். விலைப்பட்டியல்கள் வரும். அத்தனையும் கிழிக்கப்பட்டிருக்கும், அல்லது கிழித்தது அரைகுறையாக ஒட்டப்பட்டிருக்கும். மாதாமாதம் வருகிற சம்பளமும் செலவுக்காசும் கிழிக்கப்பட்டால் காசோலை காணாமல் போய்விடக்கூடும் என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது.

அலுவலகத்துக்குத் தெரிவித்து, தனியார் கூரியர் வாயிலாக அனுப்பச் சொன்னேன். அவையும் கிழிக்கப்பட்டே வந்தன. கூரியர் ஆளும் பழகிப்போனபிறகு அவனிடம் கேட்டேன். என்ன சார் செய்யறது. லெட்டர் சார்ட் பண்ணி, சந்தேகமான எல்லாத்தையும் அவங்க கிழிச்சுப்பாத்து கிளியர் செஞ்ச பிறகுதான் கொண்டுவர முடியும். எங்களுது மட்டுமில்லே. எல்லா கூரியர் ஆபீஸ்லயும் இப்பிடித்தான் என்றான். பல மாதங்களுக்குத் தொடர்ந்தது.

எங்கெங்கோ வீடு மாறி மாறி சுற்றியபிறகு இப்போது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தேன். பாபர் மசூதி, மும்பை சம்பவங்களைத் தொடர்ந்து மீண்டும் துவங்கியது தலைவலி. கடிதங்கள் உடைபட்டே வந்தன. தொலைபேசியில் பேசும்போது இடையே ஏதேதோ ஒலிகள் கேட்கும். சில மாதங்களில் இதுவும் முடிந்தது.

இப்படிப்பட்ட நேரங்களில் சொந்தக் குடிமகனையே சந்தேகிக்கும் நிலைகுறித்து வருத்தம் ஏற்படாமல் இருப்பதில்லை. மாதாமாதம் தாமதமாகவே வருகிற சம்பள உறை கிழிந்திருக்கும்போது, உள்ளே காசோலை இருக்குமா என்ற அச்சத்துடன் அவசரஅவசரமாகப் பார்க்கிற வேதனையை வார்த்தைகளில் விளக்க முடியாது. நேசத்துக்கு உரியவர்கள் எழுதிய கடிதத்தை எவனோ படித்திருப்பான் என்று தோன்றும்போது எழுகிற இயலாமையை சொல்லி முடியாது.

இப்போதும் நான் உளவுபார்க்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து கடிதம் வருவதால் நான் தீவிரவாதியாக இருக்கக்கூடும், இஸ்லாமியப் பெயராக இருப்பதால் நான் தீவிரவாதியாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவது எத்தனை பெரிய துரதிர்ஷ்டம். அப்படியொரு கொந்தளிப்பான மனநிலையில் நான் யார் (Who am I?) என்றொரு கட்டுரை எழுதி வைத்தேன். எங்கே இருக்கிறது என்று தேடி ஒருநாள் அதையும் பதிய வேண்டும். 


என்று தணியும் இந்த உளவெனும் சோகம்....

Friday, 31 May 2013

புதைந்தவன்


காலை ஆற்றுவெளிக்குப் போகையில்
வேப்பமர இடுக்கில் ஒளித்துவைத்த
வெட்டும்புலி தீப்பெட்டியும் பீடியும்

ஆற்றில் குளித்து முடித்துத் திரும்புகையில்
எனக்கு மட்டுமே அடையாளம் தெரிந்த
பாறைகளில் பதுக்கி வைத்த தீக்குச்சியும் பக்கும்

எல்லாரும் அறிந்த என்வீட்டு கழிப்பறையில்
எங்கே எதை ஒளிக்கலாம் என்பதும்
எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது

முன்னிரவே சன்னலுக்கு வெளியே
மழையில் நனையாமல் 
ஒளித்து வைத்த சிகரெட்

புகைத்து முடித்து ஓசையெழுப்பாமல் 
வேட்டியை உதறி உதறி
வெளியே விரட்டிய புகை

செட்டியார் கடைக்கணக்கில்
அம்மா வாங்கிவரச்சொன்ன
பொட்டுக்கடலையுடன்
துணையாய் வந்தது கத்திரி

சந்தையில் வாங்கிய கத்தரிக்காய் கூறில்
இரண்டு குறைய வந்ததொரு பாசிங் ஷோ

புத்தகம் வாங்குவதற்கான பணம்
புகைப்பதற்கும்தான் ஆனது

ஆலைக்குள் வேலைக்கு நுழைகையில்
காவல்காரனின் தடவல்களுக்குச் சிக்காமல் 
சிகரெட்டை ஒளிப்பதில் கில்லாடி நான் என்பது
சகாக்கள் எனக்களித்த பட்டம்

சட்டைக் காலர், பாக்கெட் மடிப்பு
முழுக்கை மடிப்பு, கீழ்ப்புற அகலப்பட்டை 
தையல் பிரித்த பேன்ட்டின் பட்டை
குளிருக்கு அணிந்த தொப்பி
சைக்கிளின் கைப்பிடி
பின்புறம் உடைந்த கண்ணாடி

எத்தனை ரகசிய இடங்களை
எனக்குள் வைத்திருந்தேன்...
ஏமாற்றும் திறமை எண்ணி
எத்தனை பெருமிதம்....

எவருக்கும் மறைக்கும் 
தேவைகள் இன்றி
சிகரெட் பெட்டியும்
வண்ண லைட்டரும்
எப்போதும் உடனிருக்கும்
இப்போது புரிகிறது
ஏமாறியவன் நான் என்பது.

Thursday, 23 May 2013

வலிகளை மறைத்து வழியனுப்புதல்


     அன்றுபோல நேற்றும் ஒரு நண்பர் வந்தார்
     தமிழகத்துக்கு புலம் பெயர்வதாய் சொன்னார்.
     மனம்நிறைய வாழ்த்தி விடைதந்த பின்னாலும்
     நட்பைத் தந்ததும் பெற்றதும் விடைபெறத்தானோ
     என்றெனக்குள் விடை தெரியாக் கேள்வியின் பின்
     நானும் விடைபெற இயலாததன் ஏக்கமோ...

நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் சென்னைக்குப் புலம் பெயர்ந்தபோது முகநூலில் எழுதிய இந்த வரிகளுடன்தான் உரையைத் துவங்கினேன் கடந்த மாதம் நிகழ்ந்த ஒரு வழியனுப்பு விழாவில். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்கள் பணிக்காலம் முடிந்து கோவைக்குப் புலம் பெயர்ந்தார். அவருக்கு மாணவர்களும் சகாக்களும் சேர்ந்து ஏற்பாடு செய்த வழியனுப்பு விழாவில் என்னையும் பேச அழைத்திருந்தார்கள். 


தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மைய அரசுப் பல்கலைக்கழகங்களில் தமிழ்ப்பிரிவு துவங்கப்பட வேண்டியிருந்தது. அவ்வாறு ஜேஎன்யு-வில் தமிழ்ப்பிரிவு துவங்கப்பட்டபோது பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டவர் திரு நாச்சிமுத்து. எந்தவொரு அரசு அமைப்பிலும் இருக்கக்கூடிய அரசியல்களை சமாளித்து, தமிழ்ப்பிரிவை கட்டியெழுப்பிய பெருமை இவரையே சாரும். 

இவருக்குத் துணையாக பின்னர் வந்தார் த.நா. சந்திர சேகரன் என்னும் இளைஞர். இருவரும் இணைந்து பணியாற்றி, ஜேஎன்யு-வில் இன்று சுமார் 25 தமிழ் மாணவர்கள் ஆய்வுப்படிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே ஒரு பல்கலையில் இத்தனை தமிழ் மாணவர்கள் என்பது இதுவே முதல்முறையாக இருக்கும் என்பது என் மதிப்பீடு. ஜேஎன்யு-வுக்கே உரிய சுதந்திரமான சூழலில், பாலின அடையாள் பாதிக்காத வகையில் சுதந்திரமான கற்றல்சூழலைப் பெற்ற இவர்கள் கொடுத்த வைத்தவர்கள். இவர்களுக்கான தமிழ் நூல்களை வாங்கச்செய்து, வலுவான நூலகத்துக்கும் உதவியிருக்கிறார் நாச்சிமுத்து.

நாச்சிமுத்து அவர்கள் செய்தவற்றில் குறிப்பாக நான் பாராட்டியது மாணவர்களின் ஆய்வுக்கு அவர் பரிந்துரைத்த ஒப்பிலக்கியம். இதன் காரணமாக உருது, அரபி, கொங்கணி, மராத்தி, இந்தி என பலமொழிகளுடனும் இலக்கணங்களுடன் தமிழை ஒப்பீடு செய்கிறார்கள் மாணவர்கள். இது என்னைப்பொறுத்தவரை முக்கியான பங்களிப்பு. இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, வங்கம் தவிர்த்து பிற மொழிகளிலிருந்து நேரடியாக தமிழுக்கோ, தமிழிலிருந்து நேரடியாக பிற மொழிகளுக்கோ மொழிபெயர்க்க இன்று நம்மிடையே ஆட்கள் இல்லை. இப்போது நேரடி மொழிபெயர்ப்பில் இருக்கும் மூத்தவர்களுக்குப் பிறகு யார் என்ற கேள்வி ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தக் கேள்விக்கு விடையாக வருவார்கள் ஜேஎன்யு மாணவர்கள். 


தன் வேலை, தன் துறை என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததும், இலக்கிய நிகழ்ச்சிகளில் தன் பங்களிப்பை அளித்ததோடு, தன் மாணவர்களையும் பங்கேற்கச் செய்ததும் நாச்சிமுத்து அவர்களின் மற்றொரு சாதனை. இன்று தில்லியில் நடைபெறும் தில்லிகை இலக்கியச் சந்திப்பின் முதுகெலும்பாக இருக்கிறார்கள் அந்த மாணவர்கள். 

நாச்சிமுத்து அவர்கள் பலமுறை அழைத்தும் அவருடைய இல்லத்துக்குச் செல்லும் வாய்ப்பு அமையவில்லை. அதனைப் பொருட்படுத்தாது பல முறை தன் துணைவியாருடன் எங்கள் இல்லத்துக்கு வந்து சென்ற பெருந்தகை அவர். வழியனுப்பு விழா முடிந்த இருநாட்கள் கழித்து ஒரு மாலையில் குடும்பத்துடன் அவர் இல்லம் சென்று சற்றுநேரம் உரையாடி வந்தோம். அவர் தமிழகம் செல்வது தில்லிக்குப் பேரிழப்புதான். ஆனால் இழப்புகள் தவிர்க்க முடியாதவை. 
ஒரே ஒரு திருப்தி எனக்கு – அவர் செல்வது கோவைக்கு. நானும் என்றோ ஒருநாள் கோவைப்பகுதிக்குத்தான் புலம் பெயரப்போகிறேன். 

* * *

மற்றொரு பிரிவு 19ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியின் நாயகர் சுசீலாம்மா. எம்.ஏ. சுசீலா, மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். தில்லிக்கு மகளுக்குத் துணையாக வந்தவர். கடந்த சுமார் 7 ஆண்டுகளில் தில்லியில் இலக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றில் பேச்சாளராக, பங்கேற்பாளராக, தமிழ்ச்சங்கத்துக்கு உதவியவர். 


இவருக்கான வழியனுப்புவிழா நடந்த அதே இடத்தில், நான் பேசிய அதே இடத்தில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு வழியனுப்புவிழா நடைபெற்றது. அதன் நாயகர் சுப்புலட்சுமி நடராசன். நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் தமிழ்ப்பிரிவு பதிப்பாசிரியராக இருந்தவர். அவர் கணவர் நடராசன் வானொலியில் தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர். சுப்புலட்சுமி அவர்கள் உடல்நிலை சீர்கெட்டபோது தமிழகம் புலம்பெயர்ந்தார். அவருக்கான வழியனுப்புவிழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாமல் பாதியில் நிறுத்தி விட்டேன். சில மாதங்களுக்குப் பிறகு அவர் மறைந்தார். அது ஏனோ தெரியவில்லை, என் குடும்பத்தினர் பலரையும் என் நட்புக்குகந்த பலரையும் பறித்துக்கொள்வதில் இந்தப் புற்றுநோய்க்கு என்னதான் திருப்தியோ தெரியவில்லை.


அவர் மறைவுக்குப்பிறகு, அவர் எழுதி முடிக்காமல் வைத்திருந்த மற்றொரு நாவலை பதிப்பிக்கும் பணியை நான் செய்தேன். அதன் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றபோது நான் நிகழ்ச்சித் தொகுப்பு செய்தபோது சந்தித்தவர் சுசீலாம்மா. தோப்பிலும், வீரபாண்டியனும் இருந்தனர். நேற்று உரையாற்றும்போது அதெல்லாம் கணநேரத்தில் சலனப்படங்களாக நினைவில் விரைந்தோடி மறைந்தன.  சுசீலாம்மாவின் பிரியத்துக்குந்த மாணவியாக இருந்தவர் சுப்புலட்சுமி.

தில்லியில் சுசீலாம்மாவின் பங்களிப்பு இந்தக் காலகட்டத்தில் முக்கியமானது. தில்லியில் இலக்கிய வறட்சி ஏற்பட்டுள்ள காலம் இது. இலக்கிய ஆர்வலர்களாக இருந்தவர்கள் பலர் உலகிலிருந்தே மறைந்து விட்டார்கள், பலர் தமிழகத்துக்குப் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், சங்கம் ஏதேனும் இலக்கிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும்போது இலக்கியப் பரிச்சயம் உள்ளவராக கைகொடுக்க வாய்த்தவர் சுசீலாம்மா. தமிழகத்திலிருந்து வருகிற பேச்சாளப்பெருமக்களைப்போல, எங்கேயோ அரைத்ததை எல்லா இடங்களிலும் அரைத்து, சில நகைச்சுவைகளையும் சேர்த்து, கைதட்ட வைத்து நினைவிலிருந்து மறையும் பிரபலம் அல்ல அவர். என்ன தலைப்புக் கொடுத்தாலும் அதற்கு முழுமையாகத் தயார்செய்து கொண்டு வந்து, அவருக்கே உரிய ஆற்றொழுக்கு நடையில் எங்களை மயக்கியவர் சுசீலாம்மா. 

அதுமட்டுமல்ல, தில்லிகை நிகழ்ச்சிகளிலும் உரையாற்றினார், பார்வையாளராகப் பங்கேற்று வந்தார். வலைப்பதிவில் தீவிரமாக எழுதி வருகிறார். தன்னிலும் வயது குறைந்தவர்களை சமமாக மதிக்கும் பண்பாளர். மகளுக்குப் பணியிட மாற்றம் நிகழ்வதால் இவரும் தமிழகம் செல்கிறார். இணையம், மின்னஞ்சல், முகநூல் என பலவழிகளில் தொடர்பில் இருக்க முடியும் என்றாலும் இவர் விட்டுச்செல்லும் இடைவெளி நிரப்பப்பட முடியாத இடைவெளி என்பது புரிந்தே இருக்கிறது.

நிகழ்ச்சி முடிந்து திரும்பிய சில நிமிடங்களில், சுசீலாம்மா எப்போது வருகிறார் எங்கே வருகிறார் என்று முகநூலில் கேள்விக்கணைகளால் துளைத்தார் இரா. எட்வின். இரவு முதல்முறையாக நாங்கள் தொலைபேசியில் உரையாடும்போதும் அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். சுசீலாம்மாவின் வழியனுப்பு விழா செய்தியை முகநூலில் பகிர்ந்தபோது கிடைத்த பின்னூட்டங்களே போதுமாக இருக்கிறது எனக்கு பொறாமை ஏற்படுத்த. பத்தாண்டுகளுக்கு முன்புபோல இல்லாமல் வலிகளை அடக்கிக்கொண்டு வார்த்தைகளைச் சிந்தப் பழகிப்போயிருக்கிறது இப்போதெல்லாம்.


ஆனாலும் எனக்கு ஒரு திருப்தி. இவரும் கோவைக்குதான் செல்கிறார். நானும் என்றோ ஒருநாள் கோவைப்பகுதிக்குத்தான் புலம் பெயரப்போகிறேன் என நம்பிக்கொண்டிருக்கிறேன்.

கோவை மற்றும் தமிழக இலக்கிய நண்பர்களே... இரண்டு அரிய பெருமக்களை உங்களிடம் ஒப்படைக்கிறோம். 

பத்திரமா பாத்துக்குங்க.

Tuesday, 14 May 2013

ஸ்போக்கன் இங்கிலீஷ்


திங்கள்கிழமை. வானொலி நிலையத்துக்குச் செல்வதற்காக வழக்கம்போல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். வழக்கம்போல கையில் ஸ்கிரிப்டும் ஒரு புத்தகமும். அப்பத்தாளும் ஒரு கல்யாணமும், மா. நடராசன் சிறுகதைகள். பிப்ரவரியில் கோவை சென்றபோது விஜயாவில் வாங்கியது. வழக்கம்போல பஸ் வரும்வரை நின்றுகொண்டே ஸ்கிரிப்டை மீண்டும் ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்து திருத்தும் வேலையில் மூழ்கியிருந்தேன். நான்குபக்கங்கள் பார்த்து முடித்து ஐந்தாவது பக்கம் திருப்பும்போது திடீரென்று காலில் செருப்புகளின் ஊடாக ஏதோ குத்தியது. அனிச்சையாக கண்கள் காலை நோக்கி, உடனே இடதுபக்கமும் திரும்பின. 
பார்வையிழந்த ஒரு பெண் தன் மடக்குக் குச்சியை தட்டியவாறே வந்திருக்கிறாள். குறுக்கே நின்றிருந்த என் கால் செருப்புக்குள் அது நுழைந்து விட்டது.
தடங்கலில் திகைத்த பெண் சட்டென இடது கையை காற்றில் துளாவினாள். அவள் கையைப்பற்றி அமைதியடைச்செய்து வழிவிலகி அவளுக்கு வழிவிட்ட அந்தக் கணத்தில்தான் தோன்றியது அவளை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று. 
அடுத்த கணமே நினைவும் வந்துவிட்டது. என்னைக் கடந்து கொண்டிருந்த அவளைப்பார்த்து “சுனோ... ஏக் மினிட் ருகோ... ” (ஏம்மா... ஒரு நிமிஷம் நில்லு) என்றேன். அவள் கண்களைச் சுருக்கியவாறே குரல்வந்த திசை நோக்கி உத்தேசமாகத் திரும்பினாள். 
“கைசே ஹோ...?” (எப்படி இருக்கே...)
“ஹா.... டீக்.... ஆப் கோ....” (ஆங். நல்லா இருக்கேன்... நீங்க) என்ற வார்த்தை பாதியில் நின்றுவிட்டது. அவளும் நினைவுபடுத்திக்கொள்ள முனைகிறாள் என்று புரிந்தது. 
[ இதற்கு மேலும் இந்தி இங்கே தேவையில்லை. ]
“என்னம்மா இங்கிலீஷ் பேசக் கத்துகிட்டியா...?” என்றேன்.
சட்டெனப் புரிந்து கொண்டாள். “சார்... நீங்களா....” கையை நீட்டினாள். நான் அவள் கையைப் பிடிக்க, கையைப்பிடித்து தடவிப்பார்த்தாள்... 
“நான் நல்லா இருக்கேன் சார். சார்.... உங்க பேரு ஷாஜஹான்தானே....”
“ஆமாம். பரவாயில்லையே, கரெக்டா ஞாபகம் வச்சிருக்கியே...”
அவள் பெயர் நினைவில் இல்லாதது குறித்து வெட்கமும், எங்கே என் பெயரைச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கூறிவிடுவாளோ என்ற அச்சமும் ஒருங்கே எழுந்து அடங்கின. அவள் என் கைகளை இறுகப்பிடித்துக்கொண்டாள்.
“எத்தனை வருசமாச்சு சார் உங்களை சந்திச்சு...”
பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தவர்களுக்கு வேடிக்கைப்பொருள் ஆவது புரிந்தது. அவள் கையைப்பற்றி நடத்திச்சென்று ஓரமாக நின்றுகொண்டேன்.
“எப்படி இருக்கீங்க சார்...?”
“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கேம்மா.... சட்டுனு கண்டுபிடிச்சுட்டியே...”
“என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க... மறக்க முடியுமா சார்....”
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவளுக்கு எளிமையான கேள்வி எனக்கு மிகவும் சிக்கலான கேள்வி. குரலை வைத்து, ஸ்பரிசத்தை வைத்து கண்டுபிடிக்கக் கூடியவளிடம் இப்படி ஒரு கேள்வியை நான் கேட்டிருக்கக்கூடாது. தாமதமாகக் கிடைத்த ஞானம்.
“அது சரி... ஏன் அங்கேயே பஸ் ஏறாம இங்கே வரைக்கும் நடந்து வந்திருக்கே...?”
அவள் படிக்கும் பார்வையற்றோர் பள்ளி சுமார் அரை கிமீ தூரத்தில் இருந்தது. பரபரப்பாக வாகனங்கள் விரையும் சாலையைக் கடந்துதான் இங்கே வர வேண்டும்.
“கொஞ்சம் சாமான் வாங்க வேண்டியிருந்தது, அதுக்குதான் வந்தேன் சார். இங்கேயும் அதே பஸ்தானே வரும். ஆமா நீங்க எங்கே போறீங்க சார்...? ”
“நான் ரேடியோ ஸ்டேஷனுக்குப் போறதுக்காக நின்னுகிட்டு இருக்கேன். உன் பஸ் வரட்டும், அப்புறம் போயிக்கலாம்.”
“நான போயிக்குவேன் சார். உங்க பஸ் வந்தா நீங்க போங்க. அதுவரைக்கும் பேசிட்டிருப்போம்.”
“சரி. ஆமா, இங்கிலீஷ் பேசக் கத்துக்கிட்டியா...? ”
“எ லிட்டில்...” சிரிப்போடு சொன்ன அவள் கண்கள் என் நெற்றியையும் அதற்கு மேலான கூரையையும் பார்த்தவாறு அலைந்தன. பார்வை இழந்தவர்களின் கண்கள் பெரும்பாலும் உள்ளொடுங்கி இருப்பது ஏன் என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்து அடங்கியது.
“சரி, உன் பிரண்ட் எங்கே... அவனும் கத்துகிட்டானா...?”
“”ஓ... அந்த பத்மாஷைக் (திருட்டுப்பயலைக்) கேக்கறீங்களா... ஓ, ரெண்டு பேருமே அப்பப்போ இங்கிலீஷ்ல பேசிக்குவோம். ”
“அப்ப என்கூட இங்கிலீஸ்ல பேசு பாக்கலாம். ஹவ் ஈஸ் லைஃப்...”
“சும்மா இருங்க சார்.... எனக்கு கூச்சமா இருக்கு.....” இவர்களும் கூச்சம் வரும்போது தலை குனிந்து கொள்வார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது எனக்கு.

* * *


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது அது. அதுவும் ஒரு கோடை காலம். வழக்கம்போல மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் போய்விட்டிருந்தார்கள். வேலைகளுக்கு இடையே சிறு மாற்றத்துக்காக நண்பரின் போட்டோஸ்டாட் கடையில் சற்றுநேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். சட் சட் என்று தரையைத் தட்டியவாறே வந்தார்கள் இரண்டு பேர். இந்தப் பெண்ணும் அவளுடன் ஒரு பையனும். இவள் நன்றாக கொழுக் மொழுக் என்று இருந்தாள். பையன் என்னைப்போல மெலிதாக இருந்தான். அவள தோள்மீது கையைப்போட்டு பின்னே நின்றிருந்தான். என்ன வேண்டும் என்று அவர்களிடம் கேட்டார் கடைக்காரர் ராஜன். குரல் வரும் திசையை உத்தேசமாகக் கணிக்க முடியாத அவள் 120 கோணத்தில் தலையைத் திருப்பிப் பார்த்தவாறே பதிலளித்தாள்.
“இங்க ஏதோ இங்கிலீஷ் சொல்லிக்குடுக்கிற இன்ஸ்டிடியூட் இருக்காமா... அதைத் தேடித்தான் வந்தோம்.”
“இங்கியா... ? இது பிரின்டிங் பிரஸ்... போட்டோகாபி கடை.” 
“இங்கேன்னா இந்தக் கடை இல்லை. இந்தப் பக்கம்தான்னு சொன்னாங்க.”
“இங்க அப்படி எதுவும் இல்லியே...”
அப்போதுதான எனக்கு அவர்கள்மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது. நான் அமர்ந்திருந்த இடத்தில் அவர்களை உட்காரவைத்துவிட்டு பக்கத்தில் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.
“ஆமா, எதுக்கு தேடறீங்க...? ”
“எங்களுக்கு இங்கிலீஷ் கத்துக்கணும். பேசக் கத்துக்கணும்.”
“ஏம்மா, இங்கே இங்கிலீஷ் ஸ்கூல்னு வச்சிருக்கவங்களுக்கே இங்கிலீஷ் பேச வராது. நீ அவங்ககிட்டே கத்துக்கப் போறியா...?”
“படிக்க எல்லாம் தெரியும் சார். பேசத்தான் கத்துக்கணும்.”
“இல்லம்மா... இங்கே கடை வச்சிருக்கவங்க எல்லாம் ஃபிராடுங்க. ஒரு மண்ணும் தெரியாது. இவங்ககிட்டே பணத்தைக்கொடுத்து வீணாக்கணுமா....? ”
“வேற என்ன செய்யறது சார்...”
“பிரிட்டிஷ் கவுன்சில் போய் படிக்கலாமே... அவங்க ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் நடத்துறாங்க. அங்கே உங்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் வகுப்பு இருக்கான்னு விசாரிக்கலாம்.”
“அது எங்கே இருக்கு சார்....?” சட்டென முகங்களில் பிரகாசம் தென்பட்டது.
“கனாட் பிளேஸ்.”
மலர்ந்த முகம் அப்படியே வாடியது. “அய்யோ... அவ்வளவு தூரமெல்லாம் முடியாது சார்.”
“எங்கிருந்து வர்றீங்க ரெண்டு பேரும்...? ”
“நான் பிதம்புரா. இவன் நாங்க்லாய்.”
பிதம்புரா குறைந்தது 25 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது. இரண்டு பஸ்கள் மாறினால்தான் இவர்களுடைய பள்ளிக்கு வர முடியும். நாங்க்லாய் அதற்கும் அப்பால். இன்னும் இரண்டு பஸ்களோ ரிக்சாவோ பிடித்தால்தான் போய்ச்சேர முடியும்.
என்னிடம் வேலை செய்து வந்த மைதிலியின் வீடு பிதம்புராவை அடுத்து இருந்தது. அவர் வீட்டுக்குப் போவதென்றால் ஒருநாள் முழுக்கப் போய்விடும் என்பதால் மிக அரிதாகவே செல்வேன். இவர்களோ இவ்வளவு தொலைவிலிருந்து, தினமும் பஸ்மாறி பயணித்து பள்ளிக்கு வருகிறார்கள் என்பதே மலைப்பாக இருந்தது. இரண்டு பேரின்மீதும் ஏதோவொரு மரியாதை ஏற்பட்டது. 
என் வீட்டுக்கு இரண்டு கட்டிடங்கள் அடுத்து ஒரு வளாகத்தில் ஆங்கிலப்பள்ளி என்ற பலகையைப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பக்கத்தில் மற்றொன்றும் இருந்தது. ஆனால் அதன் பெயர்ப் பலகையே கோளாறாக இருந்தது. 
“சரிம்மா, எனக்குத் தெரிஞ்சு இங்கே ரெண்டு இன்ஸ்டிடியூட் இருக்கு. ஒண்ணு ரொம்ப மோசமா இருக்கும்னு தோணுது. இன்னொண்ணு பத்தி எனக்குத் தெரியாது. ஆனா பேசிப் பார்க்கலாம்.”
மீண்டும் உற்சாகம் தொற்றிக் கொண்டது அவளுக்கு.
“எங்கே சார்.... ? வழி சொல்லுங்க.”
“நேராப் போயி வலதுபக்கம் திரும்புங்க. ரெண்டாவது கட்டடம். பேஸ்மென்ட்ல இருக்கு.” சொல்லும்போதே சொல்வதன் அபத்தம் புரிந்தது. “சரி, வாங்க, நான் கூட்டிட்டுப் போய் காட்டறேன்.”
நண்பரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.
“
அவள் என் தோளின்மீதும், பையன் அவள் தோளின்மீதும் கை வைத்துக்கொள்ள, ரயில்விளையாட்டுப் போல நாங்கள் நடந்தோம். 
“ஏம்மா... நல்லா விவரமா கேட்டுட்டு முடிவு பண்ணுங்க. அவசரப்பட்டு அட்வான்ஸ் ஏதும் குடுத்துடாதீங்க. சரியா...?”
“சரி சார். ”
பேஸ்மென்ட்டில் இருந்த ஆங்கிலப்பள்ளியை அடைந்தோம். எழுதுவதற்கான பலகை பொருத்திய பிளாஸ்டிக் நாற்காலிகள் நிறைந்த ஒரு அறை. அதற்கு ஒரு தடுப்பு. அதுதான் அலுவலகம். அங்கே இருந்த ஓர் இளைஞனிடம் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். இருவரையும் எதிரே இருந்த குஷன் பெஞ்சில் அமர்த்திவிட்டு, “சரிம்மா, நீங்க பேசுங்க. நான் வரட்டுமா...” என்று புறப்பட்டேன்.
“சார் சார்... அஞ்சு நிமிசம் நீங்களும் இருங்க சார்” என்றாள்.
தட்ட முடியவில்லை. நானும் அமர்ந்து கொண்டேன்.
அதற்குப்பிறகு அவள் நடத்திய குறுக்கு விசாரணை விவரமெல்லாம் சொல்ல வேண்டுமானால் ஒரு நாள் போகும். அண்மையில் ஐஏஎஸ் படிக்க வந்த மெத்தப்படித்த ஒரு பெண் கேனத்தனமாக முப்பதாயிரம் ரூபாயை ஒரு இன்ஸ்டிடியூட்டில் முதல்நாளே மொத்தமாகக் கொடுத்துவிட்டு ஒரு பைசாவுக்கும்கூட பயன்பெறாமல் போனது நினைவு வந்தது. அவளுடன் ஒப்பிடும்போது இவள் எவ்வளவோ மேல். அரைமணி நேரம் கேள்விகளால் துளைத்தெடுத்தாள்.
வாரத்துக்கு எத்தனை வகுப்புகள், எவ்வளவு நேரம், பேட்ச் துவங்கி விட்டது என்றால் எப்படி எங்களை அதன் அளவுக்கு தேற்றுவீர்கள், என்னென்ன சொல்லித்தருவீர்கள், எங்களுக்கென தனி கவனம் செலுத்த முடியுமா, கட்டணம் என்ன, கட்டணத்தில் எங்களுக்கெல்லாம் ஏன் சலுகை தரக்கூடாது....
ஆரம்பத்தில் வழக்கமான பந்தா காட்டிய பையன் திணறிப்போய் விட்டான். கடைசியில், “சார் வந்தபின் அவரிடம் பேசுங்கள். அவர் நாளை காலை வருவார்” என்று நழுவினான்.
ஆங்கிலப் பள்ளி குறித்து நான் சொன்னது சரிதான் என்று அவளுக்குப் புரிந்து விட்டது.
இருவரும் எழுந்தார்கள், நானும் எழுந்தேன்.
“சாரி சார்... உங்களை ரொம்ப லேட் ஆக்கிட்டோம்” என்றாள்.
“அதனால் என்ன பரவாயில்லை... சரி, உங்களை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுடறேன்.”
“இல்லை சார், வழி சொல்லுங்க நாங்க போயிக்குவோம்” என்றார்கள்.
“இவ்வளவு தூரம் வந்தும் பிரயோசனம் இல்லாமப் போச்சேங்கறதுதான் கஷ்டமா இருக்கு” என்றான் பையன்.
கேட்கவே சங்கடமாக இருந்தது எனக்கு. ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. “ஏம்மா... நான் வேணும்னா பிரிட்டிஷ் கவுன்சில்ல கேட்டு ஏதாச்சும் சிடி இருக்கான்னு விசாரிக்கட்டுமா...”
சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் பொறி தட்டியது.
ஓராண்டுக்கு முன்னால் எனக்கு ஒரு ஆர்டர் கிடைத்திருந்தது. ஸ்போக்கன் இங்கிலீஷ் குறுந்தகடு தயாரிக்கும் ஆர்டர் அது. Let Us Speak English என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை தயாரித்திருந்த நண்பர் ஒருவர், அதில் உள்ள உரையாடல்கள் அனைத்தையும் குரல்வளம் உள்ள நபர்களைப்பயன்படுத்தி பதிவு செய்து சிடி தயாரிக்கும் ஆர்டரை எனக்குக் கொடுத்தார். வானொலி நாடகம், சீரியல்கள் போன்ற பல வேலைகளில் பல ரிகார்டிங் ஸ்டுடியோக்களுடனும், பலமொழிக் கலைஞர்களுடனும் எனக்குத் தொடர்பு இருந்ததே காரணம். உழைத்த உழைப்புக்குப் பலனாக பணமும் கிடைத்தது, பதிவுகளின் தரமும் நன்றாகவே இருந்தது. அவருக்கு மாஸ்டர் சிடி தயாரித்துக் கொடுத்தபின் அதன் பிரதி ஒன்றை நானும் வைத்துக்கொண்டேன். 
“ஏம்மா... உங்க வீட்ல சிடி பிளேயர் இருக்கா...?”
“ஓ இருக்கே சார்....”
“சரி. என்கிட்டே ஒரு சிடி இருக்கு. இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகத்தோட இலவச இணைப்பா தயாரிச்சது. புத்தகம் என்கிட்டே இல்லை. இருந்தாலும் உங்களுக்குத் தேவையில்லை. இதை திரும்பத் திரும்ப கேட்டீங்கன்னா ஓரளவுக்கு உச்சரிப்பும் ஏற்ற இறக்கமும் கத்துக்கலாம். சிம்பிள் இங்கிலீஷ்தான். வேணும்னா சொல்லுங்க, தர்றேன்.”
இரண்டு பேரின் முகங்களிலும் தென்பட்ட மகிழ்ச்சியை இங்கே விவரிக்க முடியாது.
மீண்டும் ரயில் விளையாட்டு நடையோடு என் வீடு வந்தோம். இருவரையும் உட்கார வைத்துவிட்டு பல நூறு சிடிக்களில் தேடத்துவங்கினேன். காத்திருந்த அவர்களுக்கு வீட்டில் இருந்த முறுக்கும் பிஸ்கட்டும் தட்டுகளில் போட்டு இருவர் கையிலும் கொடுத்தேன். “சாப்பிடுங்க. அதுக்குள்ள சிடி தேடி எடுக்கிறேன். அப்புறம் அதை காபி போடணும். அப்போ உங்களுக்கு காபியும் போட்டுத் தர்றேன்.”
பிஸ்கட்டும் வாரத்தைகளும் அவர்களுடைய களைப்பைப் போக்குவதாக இருந்திருக்க வேண்டும். இருவரும் சிரித்துப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். 
சிடி கிடைத்துவிட்டது. கம்ப்யூட்டரில் பிரதி எடுக்க ஏற்பாடு செய்துவிட்டு அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பார்வையிழந்தவர்களை தூரத்திலிருந்து பார்ப்பதற்கும் பக்கத்தில் பார்க்கவும் வேறுபாடுகள் நிறையவே தெரிந்தது. தலையை முட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள் இரண்டுபேரும். காதலர்களாக இருப்பார்களோ என்று தோன்றியது. இருக்காது என்றும் தோன்றியது.
திடீரென செல்போன் மணி அடித்தது. அந்தப் பையன் தன் சட்டைப் பைக்குள் கைவிட்டு போனை எடுத்தான். விரல்களால் நெருடி பட்டனை அழுத்தி பேச ஆரம்பித்தான். 
அவள் அவன் தலையின் திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் ஒரு நிமிடத்தில் பேசி முடித்தான். அவள் அவனுடைய சட்டையைப்பிடித்து இழுத்து அடித்தாள், உலுக்கினாள். “பத்மாஷ்... (திருட்டுப்பயலே) போன் வாங்கியிருக்கே, என்கிட்டே சொல்லவே இல்லேல்ல.. ”
“சொல்றேன் சொல்றேன் பொறு பொறு...” அவன் நெளிந்தான். 
“அதான் சொல்றேன்னு சொல்றான்ல, விடும்மா அவனை பாவம்” என்றேன்.
“பாருங்க சார்... எத்தனை வருசமா பிரண்டா இருக்கான். போன் வாங்கினதை சொல்லணுமா இல்லியா... இவன்லாம் பிரண்டா சார்....?”
இருவரின் நட்புரிமைச் சண்டையைக் காண எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏதோ எழுபது எண்பது வயதுக் கிழவன் போலவும், சண்டை போட்டுக்கொள்ளும் குழந்தைகளைப் பார்ப்பது போலவும் இருந்தது எனக்கு.
“சரி, சரி, சொல்லுவான்... சொல்லுப்பா ஏன் அவளுக்கு சொல்லலை...?”
“சார், நேத்திக்குதான் வாங்கித்தந்தாங்க. வரும்போது நான் வேற பஸ், இவ வேற பஸ். ஸ்கூல்ல இதெல்லாம் பாக்கவே மாட்டோம். இன்னிக்கு பஸ்ல ஏறுனதுக்கு அப்புறம் மிஸ் கால் குடுத்து சஸ்பென்சா சொல்லலாம்னு இருந்தேன். அவ்வளவுதான் சார்... இதுக்குப்போயி பத்மாஷ்ங்கறா சார்...”
“ஆமா சொல்லுவேன். நீ பத்மாஷ், பத்மாஷ், பத்மாஷ்...”
மீண்டும் மூன்றுமுறை முதுகில் குத்தியபின் கோபம் தணிந்து அமைதியானாள் அவள். நான் தேநீர் தயாரிக்கப் போன நேரத்தில் அவன் அவளுக்கு மிஸ் கால் கொடுக்க, அவள் அந்த எண்ணை சேமித்துக்கொண்டாள். அவர்கள் எப்படி பெயர்களை சேமிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தது முடியவில்லை. கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நாகரிகம் இல்லை என்று கேட்காமல் விட்டுவிட்டேன்.
இரண்டு சிடிக்களையும் தரமான இரண்டு பிளாஸ்டிக் உறைகளில் போட்டு இருவருக்கும் கொடுத்தேன். தேநீ்ர் குடித்தபின் பஸ் ஏற்றிவிட்டேன். ஏற்றிவிட்ட பிறகுதான் நினைவு வந்தது, போன் நம்பர்கள் வாங்கி வைத்திருக்கலாமே என்று.

* * *

“என்னம்மா, நான் குடுத்த சிடி ஏதாவது உபயோகமா இருந்துச்சா...?”
“என்ன சார் இப்படிக் கேக்கறீங்க... அதுல உள்ள எல்லாமே எங்க ரெண்டு பேருக்கும் இப்ப மனப்பாடம். நல்லா தயார் பண்ணிருக்காங்க.”
“அப்பிடியா...”
ஆமா சார், கடையில, ரயில்வே ஸ்டேஷன்ல, லாட்ஜில, சொந்தக்காரங்க வீட்டுல, டீச்சர்கிட்டே... இப்படி ஒவ்வொரு இடத்திலும் எப்படிப் பேசணும்னு நல்லா சொல்லியிருக்கு. இங்கிலீசும் ஈசியா புரியறா மாதிரி இருக்கு. அதைக் கேட்டுக்கேட்டு நாங்க ஸ்கூல்ல தமாசா இங்கிலீஷ்ல பேசுவோம். எங்களைப் பாத்து மத்தவங்களும் தத்தக்கா பித்தக்கான்னு பேச ஆரம்பிச்சாங்க. அதனால எங்க மாஸ்டரும் இங்கிலீஷ்ல அப்பப்போ சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சாரு. அப்புறம் மேடமும் ஒரு ஆர்டர் போட்டாங்க, எதையெல்லாம் இங்கிலீஷ்ல சொல்லிக்குடுக்க முடியுமோ அதுக்கெல்லாம் இந்தியில சொல்லக்கூடாதுன்னு... ரொம்ப தாங்க்ஸ் சார்.”
“சரி உன் பிரண்ட் எப்படி இருக்கான்?”
“நல்லா இருக்கான் சார். இன்னிக்கும் என்கூட வான்னேன். அவன் ரொம்ப டயர்டா இருக்கு நான் போறேன்னு போயிட்டான். அப்புறம் சார், நாங்க ரெண்டுபேரும் பஸ்சுல போகும்போது பக்கம் பக்கமா உக்கார இடம் கிடைச்சா அந்த சிடியில இருக்கிற இரண்டு பேர் மாதிரி பேசிப்பாப்போம்....”
கேட்பதற்குத் திருப்தியாக இருந்தது. அவளுக்கான பஸ் வந்துகொண்டிருந்தது.
“சரி பஸ் வந்துருச்சு... வா வா...” கைபிடித்து நடத்திச்சென்று அவளை ஏற்றிவிட்டு என் பஸ்சுக்காகக் காத்திருக்கும்போதுதான் தோன்றியது, இன்றைக்கும் போன் நம்பரை வாங்காமல் விட்டு விட்டேன் என்று. 
எனக்கான பஸ்சில் ஏறி நடராசனின் புத்தகத்தைத் திருப்பினேன். கோவைத் தமிழுக்காகவே வாங்கிய புத்தகம். ஒரு பக்கம்கூட மேலே போக முடியவில்லை, எழுத்துகளைத் தடவிப் பார்த்தேன். சொரசொரப்பும்கூட தட்டுப்படவில்லை. புத்தகத்தை மூடிவிட்டு வெளியே பார்க்கத் துவங்கினேன்.