தமிழ்ச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு கவியரங்கு. வேலைநாள் என்பதாலோ, நிகழ்ச்சி பற்றி சரியாகத் தெரிவிக்கப்படவில்லை என்பதாலோ கூட்டம் மிகக்குறைவு.
சித்தருக்குப் பக்தராகி
சீர்மிகு விழாவெடுப்போர்
கவிப்பித்தர்களின் நிகழ்ச்சிக்கும் நேரம்
தத்தம் செய் திருக்கலாமே
என்று எனக்குள் ஒரு கவிதை எழுந்தது.
கவியரங்குக்கு முன்னதாக, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் துணைப் பேராசிரியர் த.நா. சந்திரசேகரன் (தநாமகன்) எழுதிய சரித்திரச் சறுக்கல்கள் எனும் நூலை வெளியிட்டார் துறைத்தலைவர் பேராசிரியர் கி. நாச்சிமுத்து. முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டவர் முனைவர் எம்.ஏ. சுசீலா.
கவிதையின் பல்வேறு வகைகள் பற்றியும், புதுக்கவிதையைக் காட்டிலும் பிறவகைக் கவிதைகளின்பால் தனக்கிருக்கும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்திய நாச்சிமுத்து, கவிதை நூலிலிருந்து சில கவிதைகளைக் கூறி, சந்திரசேகரன் மேலும் பல கவிதைகள் எழுத வேண்டும் என்று வாழ்த்தினார்.
வாழ்க்கையை
வாழ்ந்துவிட்டுச்
செத்துப்போ
என்ற கவிதையை கபீரின் இந்திக்கவிதை ஒன்றுடன் ஒப்பிட்டார்.
எம்.ஏ. சுசீலா தில்லிக்குக் கிடைத்த பொக்கிஷம். அவருக்கே உரிய பாணியில், திறனாய்வுக் கோணத்தில் குறுகிய நேரத்தில் சிறப்பாக மதிப்புரைத்தார். பிரதி வாசிக்கப்படுபவரைப்பொறுத்து வேறு பொருள் அளிக்கிறது, என்று அவர் சுட்டியது மிகச் சரியானது. கவிதைக்கு மிகவும் பொருந்தக்கூடியது. பெண்ணிய நோக்கில் ஒரு கவிதையையும் சுட்டினார் சுசீலா.
சங்க இலக்கியத்தில் தோழர் என்ற சொல் மூன்று இடங்களில்தான் இடம்பெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, நூலின் ஒரு கவிதையின் பகுதியையும் படித்தார். மறுபிரசுரம் செய்வது பொருத்தமாக இருக்கும் - அந்தக் கவிதையின் முரண்சுவை அறிய -
சங்கம் கண்டதில்லை தோழன்
"தோழர்"
ஒன்றுபடவும் போராடவும்
வெற்றி பெறவும்
ஒன்றிணைந்த செஞ்சொல்
படிநிலைகளைத் தகர்த்துப்
பதம் பார்த்த பதம்
ஆண்டான் அடிமை
உயர்நிலை தாழ்மை
அறிவாளி உடல்வலிமை
இன்னபிற முரண்களுடன்
முரண்டு பிடித்த
மிட்டாய்ப் பேச்சு
டீச்சர் என்றதும்
பெண் ஆரிய பிம்பம்
மனம் காண்பதுபோல
தோழர் என்றதுமே
சமூகத்துச் சகலசங்கங்களுடன்
கம்யூனிஸ்ட்
புரட்சிக்காரன்
தீவிரவாதி என்றே
வருமொரு
செஞ்சட்டைப் பிம்பம்
ஊடவும் கூடவும்
உறுதுணை வாயிலாய்
உளவியலறிந்த தோழி
ஊடுபரவிய பழந்தமிழ்ச்சங்கம்
கண்டதில்லை
இப்படியான
தோழன்.
நூல் வெளியீட்டை அடுத்து வந்தது வித்தியாசமான கவியரங்கம். சொல்விழுதுகளால் ஊஞ்சலாடுவோம் என்பது தலைப்பு. தொல்காப்பியம் சுட்டும் எண்சுவைகளைக் குறிக்கும் எட்டு தலைப்புகள். எட்டு கவிஞர்களும் அந்தச் சுவைகளை வெளிப்படச் சொல்லாமல் கவிதைவழி கூற வேண்டும். கவிதை கேட்க வந்தவர்கள், தமக்குத் தரப்பட்ட தாள்களில் கவிஞர்களின் பெயர்களுக்கு நேராக அவருடைய கவிதையில் வெளிப்பட்ட சுவையைக் குறித்துக்கொடுக்க வேண்டும். இது வழக்கமான கவியரங்கல்ல, ஆய்வுக்கான பயிற்சிப்பட்டறைக் கவியரங்கு.
இந்த எண்மரும் படைத்த கவிதைகளையும் அதன் சுவைகளையும் சுட்ட எனக்கு இப்போது உரிமை உண்டா என்று தெரியாது. அதனால் அப்படியே விட்டு விடுகிறேன். எட்டுபேரின் கவிதைகளும் ரசிக்கத்தக்கதாகவே இருந்தன.
· இராஜேஸ்வரி கவிதையில் ஆங்கிலச் சொற்களை தவிர்த்தே இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியும், அந்தத் திறமையும் அவருக்கு உண்டு.
· சு. அம்பேத்கர் கவிதையில் சிறப்பான வீச்சு இருந்தது.
· ஆ. ஈஸ்வரன் கவிதை கவியரங்குக்கு ஏற்றதாக எனக்குத் தோன்றவில்லை - ஆனால் அருமையான வாசிப்பனுபவம் தரக்கூடியது என்பதில் சந்தேகமே இல்லை.
· பாரதி பிரகாஷுக்கு உச்சரிப்பும், குரல்வளமும் கவித்திறமும் இருந்தும் இவ்வளவு சுருக்கமாகத் தந்திருக்க வேண்டுமா என்று அவரிடம் கேட்க வேண்டும்.
· இரா. தமிழ்ச்செல்வனின் கவிதை உச்சரிப்பு நன்றாக இருந்தும்கூட ஒலிவாங்கிக்கு மிகஅருகில் கவிதை படித்ததால் கவிதையை முழுதாக உள்வாங்க இயலவில்லை.
· ஜோதி பெருமாள், சத்யா அசோகன் - கருத்துச் சொல்லாமல் இருப்பது உறவுக்கு உத்தமம்.
· கவிதா ரமேஷ் வாசித்த கவிதையிலிருந்து ஒரு பகுதியைக் கேட்டு வாங்கி கீழே தருவது காலம் தந்திருக்கும் கடமை எனத் தோன்றுகிறது.
இயற்கையின் சாபத்தால் உயிர்களை
இழந்து தவிக்கும் நிலையில்
செயற்கையின் அவதாரமாய்
நெஞ்சை பதைபதைக்கும் கூடங்குளம்
அணுசக்தி சோதனைக்கோ
அண்டை நாடுகளின் எதிர்ப்பு
அணுஉலை திறப்பிற்கோ
ஆராய்ச்சியாளர் முதல்
ஆட்சியாளர் வரை
அமோக வரவேற்பு
சுற்றிவாழும் மக்களுக்கோ
சொல்லறியா பரிதவிப்பு - ஆம்
சூரியக் கதிர்களின்
சுட்டெரிக்கும் நெருப்பிற்கே
சுருங்கித் தவிக்கும் உடல்களுக்கு
அணுஉலைக் கதிர்வீச்சு ஓர்
அபாய எச்சரிக்கை
கூடங்குளம் திறந்து விட்டால்
கொட்டிப் பாயுமாம் மின்சாரம்
அணுஉலையால் வீட்டில் எரியப்போவது
மின்விளக்குகள் மட்டுமல்ல
வறியவர்களின் வயிறும்தான்
வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக மக்களை
விட்டில் பூச்சிகளாகச் சொல்வது என்ன நியாயம்
விளக்குகளின் வெளிச்சத்தில் வெந்து மடிவதற்கா
வெடித்துச் சிதறிய அணுஉலையால்
வெந்து சாம்பலாகிப்போன உயிர்த்திரள்களின்
வெப்பம் இன்னும் தணியவே இல்லை
அன்று அக்கினிக் குஞ்சிற்கு காட்டை இரையாக்கினான் பாரதி
இன்று அணுஉலைக் கதிர்களுக்கு நாட்டை
இரையாக்கப்பார்க்கின்றனர் அதிகார வர்க்கத்தினர்
...
உருக்குலைந்த தேகத்தோடு
உயிர்வாழும் தேசத்தைவிட
உண்ணாவிரதத்தில் உயிர்விடுவதே மேல்
அன்றைய இலக்கிய வரலாற்றின் இருண்டகாலம்கூட
இன்றைய தமிழர்களுக்கு இன்பகாலமாகும்
கூடங்குளம் திறக்காது போனால்.
தில்லித் தமிழ்ச்சங்கம் பல்வேறு புதிய வடிவங்களை அவ்வப்போது பரிசோதித்துப் பார்த்திருக்கிறது. சுழலும் சொல்லரங்கம், கவிதைப் பட்டிமன்றம், ஒரு கவி மாலை, கவி இசை மாலை... இப்போது பயிற்சிப்பட்டறைக் கவியரங்கு.
கவிதைகள் சிறப்பாக இருந்தாலும் அவற்றில் பொதிந்திருக்கும் சுவை என்னவாக இருக்கும் என்று யோசிக்க நேர்ந்ததில் கவிதைகளை முழுமையாக ரசிக்க முடியாமல் போனது ஆரம்பத்தில். நல்லவேளை, எனக்கு சீட்டு தரப்படவில்லை என்பதால் அந்தக் கவலையை முதலிரண்டு கவிஞர்களோடு விட்டுவிட்டு கவிதைகளை ரசிப்பதில்மட்டும் ஈடுபட்டேன். மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.
புதிய முயற்சி, வரவேற்போம், பழக்கப்படுத்திக்கொள்ள முயலுவோம்.
பி.கு. - வலைபதிவர்கள் சில நேரங்களில் கொஞ்சம் குசும்பாக எழுதுவார்கள் என்பதை நானும் பின்பற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ஜோதி பெருமாள், சத்யா அசோகன் கவிதைகளைப் பற்றி குயுக்தியாக எழுதினேன். அதில் இருக்கும் நகைச்சுவையை அதிகம்பேர் புரிந்து கொள்ளவில்லை என்று தொலைபேசி அழைப்புகளிலிருந்து தெரிய வந்தது. முந்தைய ஒரு பதிவில் முத்துலட்சுமியை வாங்கியிருக்கிறேன். அவர் சகபதிவர் என்பதால் புரிந்துகொண்டார் என்று தோன்றுகிறது.
ஜோதி பெருமாளும் சத்யாவும் எங்கள் குடும்ப நண்பர்கள். கொடுத்த பொறுப்பை கடுமையாக, சிரத்தையாக மேற்கொள்பவர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுடைய கவிதைகள் அருமையாக இருந்தன என்பதை நேர்மையுடன் பதிவுசெய்து குழப்பத்தை நீக்க விரும்புகிறேன். இந்தப் புதிய வடிவில் கவிதைபாட என்னை அழைத்திருந்தால் இவ்வளவு நன்றாகச் செய்திருப்பேனா என்று எனக்கே தோன்றியது
யாருக்கேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும். இனி எழுதுகிற பதிவுகளில் இயன்றவரை நேர்பொருளில் மட்டுமே எழுத வேண்டும் என்ற பாடமும் கிடைத்தது,
பி.கு. - வலைபதிவர்கள் சில நேரங்களில் கொஞ்சம் குசும்பாக எழுதுவார்கள் என்பதை நானும் பின்பற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ஜோதி பெருமாள், சத்யா அசோகன் கவிதைகளைப் பற்றி குயுக்தியாக எழுதினேன். அதில் இருக்கும் நகைச்சுவையை அதிகம்பேர் புரிந்து கொள்ளவில்லை என்று தொலைபேசி அழைப்புகளிலிருந்து தெரிய வந்தது. முந்தைய ஒரு பதிவில் முத்துலட்சுமியை வாங்கியிருக்கிறேன். அவர் சகபதிவர் என்பதால் புரிந்துகொண்டார் என்று தோன்றுகிறது.
ஜோதி பெருமாளும் சத்யாவும் எங்கள் குடும்ப நண்பர்கள். கொடுத்த பொறுப்பை கடுமையாக, சிரத்தையாக மேற்கொள்பவர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுடைய கவிதைகள் அருமையாக இருந்தன என்பதை நேர்மையுடன் பதிவுசெய்து குழப்பத்தை நீக்க விரும்புகிறேன். இந்தப் புதிய வடிவில் கவிதைபாட என்னை அழைத்திருந்தால் இவ்வளவு நன்றாகச் செய்திருப்பேனா என்று எனக்கே தோன்றியது
யாருக்கேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும். இனி எழுதுகிற பதிவுகளில் இயன்றவரை நேர்பொருளில் மட்டுமே எழுத வேண்டும் என்ற பாடமும் கிடைத்தது,