Friday 18 January 2013

பயணங்கள் முடிவதில்லை - 1


மீண்டும் ஒரு பயணம். கடந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் இருக்க நேர்ந்தது. பல்வேறு நகரங்களுக்கும் பயணம் செய்ய நேர்ந்தது. தில்லிக்குப் புலம்பெயர்ந்த பிறகு என்றும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு தொடர் பயணங்கள்.

எப்போதுமே என் பயணங்கள் அனைத்தும் சூறாவளிப் பயணங்களாகவே அமைந்து விடுகின்றன. நட்பு-உறவு வட்டம் எனக்கு மட்டும் அதிகமா, அல்லது நான்தான் தேவையில்லாமல் பல ஊர்களுக்குமான பயணங்களை இழுத்துப்போட்டுக்கொள்கிறேனா என்று புரியவில்லை.

எவ்வளவு சிறப்பான இன்டர்நெட் இணைப்பு இருந்தாலும் சரி, வீட்டில் உட்கார்ந்தபடியே ரயிலில் தத்கால் டிக்கெட் வாங்குவதெல்லாம் இனி சாத்தியமில்லை என்பது அண்மையில் புரிந்தது. ஏஜென்டுக்கு ஐநூறு ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குவதெல்லாம் கொள்கைக்கு ஒத்துவராது என்று முடிவுசெய்ததன் விளைவு பத்தாயிரம் ரூபாய் கொட்டிக்கொடுத்து முதுகை ஒடிக்கும் விமானப்பயணமாக முடிந்தது.

தில்லியின் பழைய விமான நிலையம் நிறையவே மாறிவிட்டிருக்கிறது. புதிய டி-3 முனையத்தின் அளவுக்கு சர்வதேசத்தரம் இல்லை என்றாலும் குறைவில்லை. டெப்போவில் குறுக்கும் நெடுக்குமாக நிற்கும் பஸ்கள் போல நின்று கொண்டிருக்கின்றன பல்வேறு விமானங்கள். சுமார் 240 இருக்கைகளுடன் இன்டிகோ பெரிய பஸ் போலத்தான் இருக்கிறது.

சக்கரங்கள் பொருத்திய பெட்டிகள் எல்லாம் ஹேண்ட்பேக்கேஜ் வகையில் எப்போது சேர்ந்தன என்று புரியவில்லை. ஆளாளுக்கு இடுப்புயரப் பெட்டிகளை தூக்க முடியாமல் தூக்கி தலைக்கு மேலை திணித்தார்கள். பெண்களின் பெட்டிகளைத் தூக்கித் திணிக்க உதவியவர்கள் கணநேர வீரர்களாக உணர்ந்தார்கள்.

எத்தனை பாவனைகள்.... இதையொத்த பாவனைகளை ரயிலின் ஏசி பெட்டிகளிலும் காண முடியும். நான் அடிக்கடி விமானப்பயணம் செய்கிறவனாக்கும் என்கிற அலட்சிய பாவனை முகங்கள். பெல்ட் மாட்டுவது எப்படி என்று பக்கத்தில் இருப்பவரைக் கேட்கத் தயங்கும் புது முகங்கள். ஜன்னலோர இருக்கை கிடைத்ததில் வேடிக்கை பார்க்கும் முகங்கள். ஜன்னலோர இருக்கை கிடைக்காதது பெரிய விஷயமில்லை என்ற பாவனையில் கண்களை மூடிக்கொள்ளும் முகங்கள். பணிப்பெண் விளக்கத்தை ஏதோ பாடம்போல கவனமாகக் கேட்கும் முகங்கள்.

அறிவிப்புக்கு ஏற்ப ஒரு பணிப்பெண் முன்னால் நின்றுகொண்டு கைகளை மேலேயும் கீழேயும் இடதும் வலதுமாக ஆட்டுகிறாள். ஒருசமயம் பாவனை ஏதுமற்ற கற்றுக்குட்டி மாணவியின் பரதநாட்டியம்போல இருக்கிறது. ஒருசமயம் போக்குவரத்து காவலரின் கையசைப்பாகத் தோன்றுகிறது. 

இடப்பக்க இருக்கையில் இருந்த இளம்பெண்ணின் மடியில் இருந்த குழந்தை எம்பி எம்பி மேலே இருக்கும் விளக்குகளை போடுவதும் அணைப்பதுமாக விளையாடத் துவங்கியது. அதைப் பார்த்த பணிப்பெண் அந்தப் பெண்ணிடம் வந்து ஏதோ சொல்லத் துவங்கினாள். அந்த இளம்பெண் எல்லாவற்றும் ஓகே ஓகே என்று ஒற்றை வார்த்தையில் மண்டையை ஆட்டிக்கொண்டிருந்தாள். பணிப்பெண் சொன்னதில் ஒற்றை வார்த்தையும் அந்த இளம்பெண்ணுக்குப் புரிந்திருக்காது என்பதில் சந்தேகமே இல்லை.

வைக்கோல் போரில் மாடு மூத்திரம் கழிப்பதுபோல உணர்ச்சியற்ற விளங்காதவேகத்தில் ஆங்கில அறிவிப்புகள். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே ஏதோ ஒரு வெளிநாட்டு விமான நிறுவனத்துக்கு அறிவிப்புகளை தமிழாக்கம் செய்து கொடுத்தது நினைவுக்கு வந்தது. இந்திய விமானங்களிலும் ஏன் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற மொழிகளில் அறிவிப்புகள் செய்யக்கூடாது என்பது எனக்குப் புரியாத பல்லாயிரம் புதிர்களில் ஒன்று.

கீழிருந்து பார்க்கையில் மேலே தெரியும் மேகக்கூட்டங்கள் மேலிருந்து கீழே பார்க்கையில் வித்தியாசமாகத் தெரியும்போது கண்டுபிடிப்புகளின்மீது வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.  

விமானம் மேலெழுந்தபின் லேப்டாப்பைத் திறந்து வேலை துவங்கிய அதே கணத்தில் முன்னால் இருந்தவர் தன் இருக்கையை சற்றே பின்னால் சாய்த்துக்கொண்டார். நானும் என் இருக்கையைப் பின்னால் சாய்க்கலாம் என்றால்.... அதற்கான பிடியையே காணவில்லை.

அவசர வழிக்குப் பக்கத்தில் உள்ள இரண்டு வரிசைகளிலும் இருக்கையை சாய்க்கும் வசதி இல்லை. இணையவழியில் முன்னரே இருக்கையைத் தேர்வுசெய்யாமல் விட்டுவிட்ட முட்டாள்தனத்தை மனதுக்குள் நொந்து கொள்கிறேன். செக்-இன் செய்யும்போது விமான நிலையத்தில் இருக்கை எழுதிக்கொடுத்தவராவது கூறியிருக்கலாம்.  சில நிமிடங்கள் தவித்தபின் பொறுக்க முடியாமல் பணிப்பெண்ணை அழைத்தேன்.
நாங்கள் சபிக்கப்பட்டவர்களா ?
ஏன், என்னவாயிற்று ?
எங்கள் ஆறு பேருக்கும் சாய்க்க முடியாத இருக்கை என்பது சாபம் அல்லாமல் வேறென்ன ?
மன்னிக்கவும், இதில் நான் எதுவும் உதவ இயலாது.
தெரியும். நிலையத்தில் இருக்கையை ஒதுக்கியவர் இதைத் தெரிவித்திருக்க வேண்டுமா இல்லையா ?
தெரிவிக்கவில்லையா ?
தெரிவித்திருந்தால் கேட்பேனா...
...
சரி போகட்டும். இதற்குமுன்னும் என்னைப்போல வேறு பயணிகள் இதுகுறித்துப் புகார் செய்திருப்பார்கள் இல்லையா ?
இல்லை.
இதுவே இந்த ஆண்டின் கடைசிப்பொய்யாக இருக்கட்டும்.
என்ன ?
இதுவரை இந்தப் பிரச்சினைபற்றி யாருமே உங்களிடம் புகார் செய்யவே இல்லை என்றால் ஒன்று வந்தவர்கள் எல்லாரும் ஊமைகளாக இருந்திருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு காதில் கோளாறாக இருக்க வேண்டும்.
சாரி சார்....
போகட்டும். இப்போது நான் புகார் செய்திருக்கிறேன். இதை உங்கள் மேலே உள்ளவர்களுக்குத் தெரிவித்து, இனிமேலாவது இருக்கை ஒதுக்கீடு செய்யும்போது இந்த இருக்கையில் சாய்வு வசதி இல்லை என்பதைத் தெரிவிக்கச் சொல்லுங்கள்.
நிச்சயம் சார்.

அவளுடைய அடுத்த பயணத்தில் இதே பொய்யையும் இதே நிச்சயம் சாரையும் வேறொருவரிடம் கூறுவாள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இன்டிகோ-விமானத்தில் செல்பவர்கள் செக்-இன் செய்யும்போது முன்ஜாக்கிரதையாக இருக்கையைப் பற்றிக் கேட்கத் தவறாதீர்கள். ஸ்பைஸ்ஜெட்டில் இந்தளவு மோசமில்லை. 

அதற்குப் பிறகு அவள் அந்தப்பக்கம் கடக்கும்போதெல்லாம் என் திசையைப் பார்க்கவும் மறுத்து, கூரையைப் பார்த்துக் கடந்தாள். அரைமணி நேரம் கழித்து சிற்றுண்டி வந்தது. பத்து ரூபாய்க்குக் கிடைக்கும் அரை கப் எஸ்பிரஸோ காபி 60 ரூபாய். ஏர் இந்தியா போண்டியாவதற்கு அதில் தரும் சிற்றுண்டிகளே போதும் என்று தோன்றியது.


சேருமிடம் நெருங்கியதுமே முதல் ஆளாக இறங்க வேண்டுமென பெட்டியை முன்னரே எடுத்து வைத்துக்கொள்பவர்கள் பஸ்சிலும் ரயிலிலும் மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன ?

ரயிலில் வரும்போது விஜயவாடா வந்தாலே ஏதோ நம்ம ஊர் வந்துவிட்டதுபோன்ற உணர்வு ஏற்படும். இதோ கோவை வந்து விட்டது என்ற நினைப்பே ஒருவிதமான நெகிழ்வை ஏற்படுத்துகிறது. என் ஊர்... வானத்திலிருந்து பார்க்கையில் எந்த ஊருமே நாம் பார்த்த ஊராக இருப்பதில்லை. துண்டு துண்டாய் பார்த்த ஊரையும் மொத்தமாய்த் தெரியும் ஊரையும் ஒன்றென நம்மால் கருத முடிவதில்லை. நெரிசலான கோவையில் இத்தனை பசுமையான காலி இடங்கள் இருக்கின்றன என்பது அந்தக் கோவைக்கும்கூடத் தெரியாது....

கோவை விமான நிலையம் அப்படியேதான் இருக்கிறது. ஒரே வித்தியாசம் - வெளியே காத்திருக்கும் கால் டாக்சிகள். கோவையில் நிறைய கால்டாக்சிகள் வந்து விட்டன. 

லேப்டாப் வைக்கும் தோள் பை, துணிகளுக்கு சின்ன ஏர்-பேக் மட்டும் எடுத்துக்கொண்டு சுமைகளின்றிப் பயணிப்பது சுகமாக இருக்கிறது. திரும்பிவரும்போது சுமை அதிகரித்திருக்கும் என்ற கவலை இப்போதே வந்துவிட்டது.

விறுவிறுவென நடந்து அவினாசி சாலையில் பஸ்சைப் பிடித்து திருப்பூர் பயணம். நான்கைந்து ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கும் கோவை ஈரோடு நெடுஞ்சாலைப் பணி பெரிதும் முடிந்து விட்டது. இருப்பினும் பல இடங்களில் குலுங்கியும் ஆடியும்தான் பயணிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் அவோமின் மாத்திரை என்றால் என்ன என்று கேட்கும் தலைமுறை உருவாகி விட்டது என்பதும் புரிகிறது. யாரும் குலுங்கல்களப்பற்றி கவலைப்படவில்லை. தலையை எட்டியும், வளைத்தும் நீட்டியும் குனிந்தும் முன்னால் இருக்கும் டிவியில் ஓடுகிற காணத்தவறிவிடக்கூடாத நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு மகிழ்வதில் முனைப்பாய் இருக்கிறார்கள். காலத்தின் மதிப்பு அறிந்தவர்கள்.


திருப்பூர் உடுமலை சாலையில் காற்றாலைகள் இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கின்றன. கூடவே மின்வெட்டும் இன்னும் கொஞ்சம் அதிகரித்திருப்பதாக தொலைபேசியில் நண்பர்கள் தெரிவித்தார்கள்.

அரசுப் பேருந்திலும் பாட்டு அலறுகிறது. இன்னும் ஒருவாரத்திற்கு இந்த அலறல்களை சகித்துக்கொண்டுதான் இருந்தாக வேண்டும் என்ற நினைப்பில் கண்களை மூடியவனை பா...ம்.... என்று அலறிக்கொண்டே முந்திச்செல்கிற தனியார் பஸ் எழுப்பி விடுகிறது. கவலைப்பட இன்னொரு விஷயம் கிடைத்துவிட்டது....

No comments:

Post a Comment