Friday 31 May 2013

புதைந்தவன்


காலை ஆற்றுவெளிக்குப் போகையில்
வேப்பமர இடுக்கில் ஒளித்துவைத்த
வெட்டும்புலி தீப்பெட்டியும் பீடியும்

ஆற்றில் குளித்து முடித்துத் திரும்புகையில்
எனக்கு மட்டுமே அடையாளம் தெரிந்த
பாறைகளில் பதுக்கி வைத்த தீக்குச்சியும் பக்கும்

எல்லாரும் அறிந்த என்வீட்டு கழிப்பறையில்
எங்கே எதை ஒளிக்கலாம் என்பதும்
எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது

முன்னிரவே சன்னலுக்கு வெளியே
மழையில் நனையாமல் 
ஒளித்து வைத்த சிகரெட்

புகைத்து முடித்து ஓசையெழுப்பாமல் 
வேட்டியை உதறி உதறி
வெளியே விரட்டிய புகை

செட்டியார் கடைக்கணக்கில்
அம்மா வாங்கிவரச்சொன்ன
பொட்டுக்கடலையுடன்
துணையாய் வந்தது கத்திரி

சந்தையில் வாங்கிய கத்தரிக்காய் கூறில்
இரண்டு குறைய வந்ததொரு பாசிங் ஷோ

புத்தகம் வாங்குவதற்கான பணம்
புகைப்பதற்கும்தான் ஆனது

ஆலைக்குள் வேலைக்கு நுழைகையில்
காவல்காரனின் தடவல்களுக்குச் சிக்காமல் 
சிகரெட்டை ஒளிப்பதில் கில்லாடி நான் என்பது
சகாக்கள் எனக்களித்த பட்டம்

சட்டைக் காலர், பாக்கெட் மடிப்பு
முழுக்கை மடிப்பு, கீழ்ப்புற அகலப்பட்டை 
தையல் பிரித்த பேன்ட்டின் பட்டை
குளிருக்கு அணிந்த தொப்பி
சைக்கிளின் கைப்பிடி
பின்புறம் உடைந்த கண்ணாடி

எத்தனை ரகசிய இடங்களை
எனக்குள் வைத்திருந்தேன்...
ஏமாற்றும் திறமை எண்ணி
எத்தனை பெருமிதம்....

எவருக்கும் மறைக்கும் 
தேவைகள் இன்றி
சிகரெட் பெட்டியும்
வண்ண லைட்டரும்
எப்போதும் உடனிருக்கும்
இப்போது புரிகிறது
ஏமாறியவன் நான் என்பது.

4 comments:

  1. I knew that someday you will not fail to write about your eternal companion, the CIGARETTE! Great! (I'm travlg. Now in Chicago. Not yet conversant with writing in Tamil from my Blackberry. Sorry!)

    ReplyDelete
  2. ஏமாறுகிறோம் என்று தெரியாமலேயே ஏமாந்து விட்ட பலர்.....

    கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே நண்பரே.....

    ReplyDelete
  3. //எவருக்கும் மறைக்கும்
    தேவைகள் இன்றி//

    நன்பர்கள் சிலர் மனைவி குழந்தைகள் பெரியவர்கள் முன் பயப்படுவது போல் நடித்து மறைக்கிறார்கள்.
    [நாடகத்துணுக்கு தான் ஞாபகம் வருகிறது. பையன் சிகரெட் புடிக்கிறானே! கேட்கக்கூடாதா?
    தந்தை: கேட்டால் தரமாட்டானே!]
    ஆனால், அப்படி பயப்படுவது போல் நடிப்பது கூட ஓரளவு deterrent ஆக இருக்கிறது.

    ReplyDelete
  4. நீங்கள் சொன்னது சரிதான் வேங்கட ஸ்ரீநிவாசன். எவர்க்கும் மறைக்கும் தேவைகள் இன்றி என்று எழுதியது இங்குள்ளவர்களைப் பற்றி. இப்போதும் என் சகோதரிகள் அல்லது மைத்துநர்கள் முன்னால் புகைப்பது என்ன, சிகரெட் பெட்டிகூட காட்ட மாட்டேன்.டிடரென்ட் மட்டுமல்ல, மரியாதையும்கூட.

    ReplyDelete