Tuesday, 25 February 2014

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா நிறைவு

இந்த மாதம் 15ஆம் தேதி துவங்கிய 22ஆவது உலகப் புத்தகத் திருவிழா 23ஆம் தேதி முடிவடைந்தது. நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா இந்தத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. உள்நாட்டிலிருந்தும், சுமார் 25 வெளி நாடுகளிலிருந்தும் 1100க்கும் அதிகமான நிறுவனங்கள் திருவிழாவில் கலந்து கொண்டன.2012 வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வந்த புத்தகத் திருவிழா, இப்போது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இது ஒரு வகையில் சாதகமாகவும் அமைந்தது, ஒருவகையில் பாதகமாகவும் அமைந்தது என்று கூறலாம். இந்தியப் பதிப்புத் துறையின் மையமாக இருக்கிற தில்லிப் பதிப்பாளர்களுக்கு இது சாதகமான விஷயம். தமிழ்நாடு போன்ற தொலைதூர மாநிலங்களின் பதிப்பாளர்களுக்கு இது கொஞ்சம் சோதனையான விஷயம். ஆங்கிலம், இந்தி தவிர்த்து பிறமொழிப் பதிப்பாளர்கள் பொதுவாகவே குறைவான எண்ணிக்கையில்தான் கலந்து கொள்வார்கள். புத்தகங்களைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு, வருகிற ஆட்களுக்கான தங்குமிடச் செலவு, உணவுச்செலவு, வாடகை எல்லாம் போக, ஏதும் மிஞ்சுமா என்பதே சந்தேகம். இந்தச் சூழலில், ஆண்டுதோறும் திருவிழா எனும்போது, மிகச்சில நூல்களே வெளிக்கொணரும் சிறு பதிப்பாளர்களும் பிராந்திய மொழிப் பதிப்பாளர்களும் பங்கேற்பது சிரமமாகி விடுகிறது.
 
தமிழ்நூல்களை வாங்கும் இலங்கைத் தமிழர்கள்
இருப்பினும், இந்தப் புத்தகத் திருவிழாவில் தென்மாநிலங்களிருந்து கலந்து கொண்ட பதிப்பாளர்களைப் பார்க்கும்போது, தமிழத்திலிருந்தும் கேரளத்திலிருந்தும் கணிசமான பதிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து தலா ஒவ்வொரு நிறுவனம் மட்டுமே கலந்து கொண்டன. தமிழிலிருந்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலச்சுவடு, கிழக்கு பதிப்பகம், இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட், ஓங்காரம், பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், செம்பருத்தி ஆகிய பதிப்பகங்கள் பங்கேற்றன. முதல்முறையாக சென்னையிலிருந்து பதிப்பாளர் விற்பனையாளர் சங்கமாகிய பபாசியும் பல பதிப்பகங்களின் நூல்களைக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியது. இவை தவிர, இந்திய அரசின் கீழ் இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட், மற்றும் சாகித்ய அகாதமி ஆகிய நிறுவனங்களும் தமது கடைகளில் அனைத்துமொழி நூல்களையும் விற்பனைக்கு வைத்திருந்தன. (மக்கள் எந்த அளவுக்கு இவற்றில் வாங்கினார்கள் என்பது கேள்விக்குறிதான்.)

இந்த ஆண்டின் புத்தகத் திருவிழாவில் போலந்து சிறப்பு விருந்தினர் நாடாகப் பங்கேற்றது. போலிஷ் எழுத்தாளர்கள் பலர் பங்கேற்றனர். போலந்து இலக்கியம் பற்றிய உரையாடல்கள், இந்தி மொழியாக்க நூல் வெளியீடுகள் போன்றவை இதுவரை இந்தியாவில் அதிகம் அறியப்படாத போலந்து இலக்கியத்தை அறிமுகம் செய்வதற்கான அஸ்திவாரமாக அமைந்தன.

கடந்த ஆண்டு அறிமுகமான நியூ டெல்லி ரைட்ஸ் டேபிள் இந்த ஆண்டும் நடைபெற்றது. அதாவது, பதிப்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், நூல்களுக்கான காப்புரிமைகளை விற்பது அல்லது வாங்குவதற்காக நேருக்கு நேர் அமர்ந்து உரையாடுவதற்கான ஏற்பாடுதான் ரைட்ஸ் டேபிள். மேலை நாடுகளின் புத்தகத் திருவிழாக்களில் இவை வழக்கமாக இருந்தன. இப்போது தில்லியிலும் அறிமுகமாகி, விரைவில் ஷார்ஜா புத்தகத் திருவிழாவிலும் இது அறிமுகமாக இருக்கிறது.


குழந்தைகள் இலக்கியம்தான் இந்த ஆண்டுத் திருவிழாவின் மையக் கருத்து என்பதால் குழந்தைகளை மையப்படுத்திய பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. குழந்தை இலக்கியம் பற்றிய கலந்துரையாடல்கள், பயிற்சிப்பட்டறைகள், ரஸ்கின் பாண்ட் போன்ற பிரபல எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் போன்றவை பெரும் வரவேற்புப் பெற்றன.திருவிழாவுக்கு வருவோரை மகிழ்விக்க தினமும் மாலை வேலைகளில் பழங்குடி மற்றும் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளை சங்கீத நாடக அகாதமி மற்றும் சாகித்ய கலா பரிசத் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் முதல் மேற்கே குஜராத் வரை, வடக்கே லேப்சா சமூகத்தினர் முதல் தெற்கே கேரளத்தின் களரிப்பயற்று வரை பலவிதமான கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.வருகை தந்த பிரமுகர்களில் சிலர் – அமைச்சர் ஃபரூக் அப்துல்லா, கரன் சிங், மனீஷ் சிசோடியா, அமைச்சர் பல்லம் ராஜு, கவிஞர் சத்தியானந்தம், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசின்ஹ, மற்றும் பலர். எழுத்தாளர் சந்திப்புகளில் கலந்து கொண்ட பட்டியல் நீ........ளமானது.

அடுத்த புத்தகத் திருவிழா பிப்ரவரி 14 முதல் 22 வரை என அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு நான் எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகள் விரைவில் பகிர்வேன். வாங்கிய நூல்களின் பட்டியலும் விரைவில்.

வாசிப்பை நேசிப்போம்.

5 comments:

Chellappa Yagyaswamy said...

நண்பரே, நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலை வெளியிடுவதால் என்ன லாபம்? இவற்றை நாம் வாங்கமுடியாமல் போனதே என்று பொறாமைப்படுவதற்கா? அல்லது, என் ரசனையைப் பார்த்தாயா என்று பெருமிதப்படுவதற்கா?

- என்று யாராவது பின்னூட்டம் இடுவார்களோ என்று பயப்படுகிறேன்.

Anonymous said...

மிகச் சிறப்பான பகிர்வுகள். நேரில் போய் வராதவர்களுக்கு நேரில் கண்ட மகிழ்ச்சி. தேசிய புத்தக கண்காட்சியை வேறு முக்கிய நகரங்களில் நடத்த வேண்டும், இதனால் மாநில மொழி புத்தகங்களின் பங்கு அதிகரிக்கும். குறிப்பாக தில்லி மற்றுமின்றி கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூர், உட்பட பல நகரங்களிலும் நடத்தினால் பலரும் பயனடைவர். வெளிநாடுகளிலும் கூட நடத்தலாம் துபாய், சிங்கப்பூர் போன்ற இடங்களில் இந்திய புத்தகங்களை பிரபலபடுத்தலாம்.

Shahjahan Rahman said...

செல்லப்பா சார், இதுதான் உங்களுக்கே உரிய குறும்பு. புத்தகம் வாங்க மற்றவர்களைத் தூண்டுவதே நோக்கம்.

Shahjahan Rahman said...

விவரணன் நீலவண்ணன்,
உலகப் புத்தகத் திருவிழாவை வேறு நகரங்களில் நடத்துவது சாத்தியமில்லை. தில்லிதான் இந்தியாவின் முக்கியப் பதிப்பு மையம். மற்றபடி, தேசிய புத்தக வாரம் நாடெங்கும் நடத்துகிறது நேஷனல் புக் டிரஸ்ட். தவிர, முக்கிய நகரங்களில் புத்தகத் திருவிழாக்களையும் நடத்துகிறது. கோல்கத்தா புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. சிங்கப்பூர், ஷார்ஜா, பிராங்க்பர்ட், பொலோனியா, மாஸ்கோ போன்ற புத்தகத் திருவிழாவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கிறது.

சே. குமார் said...

அருமையாப் பகிர்ந்திருக்கீங்க சார்...
வழ்த்துக்கள்.