Thursday, 16 November 2017

நீரிழிவு நோய் தினம்

நவம்பர் 14 - இந்தியாவில் குழந்தைகள் தினம். சர்வதேச அளவில் உலக நீரிழிவு நோய் தினம். இந்த ஆண்டுக்கான மையக் கருத்து : பெண்களும் நீரிழிவு நோயும் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கான நமது உரிமை



ஏன் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது?
ஏனென்றால், பெண்களில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) இருக்கிறது. ஏழு பேரில் ஒருவர் பிரசவத்தின்போது கர்ப்பகால நீரிழிவுக்கு (gestational diabetes - GDM) ஆளாகிறார். பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு எதிர்கால குழந்தைகளையும் பாதிக்கிறது.

கர்ப்பகால நீரிழிவு என்றால் என்ன?
பிரசவ காலத்துக்கு முன்பு நீரிழிவு நோய் இல்லாத, கர்ப்ப காலத்தில் அதிக குளுக்கோஸ் (சர்க்கரை) இருக்கிறவர்கள் கர்ப்பகால நீரிழிவுக்கு ஆளானதாக கருதப்படுவார்கள். 2014ஆம் ஆண்டில் ஒரு கணக்கின்படி, கருவுற்றவர்களில் 9.2% பேருக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் இருக்கிறது.


கர்ப்பகால நீரிழிவு எதனால் ஏற்படுகிறது?
துல்லியமாகத் தெரியாது, ஆனால் சில காரணங்கள் தெரியும். கருவில் இருக்கும் குழந்தை வளர்வதற்கு பிளசென்டா எனப்படும் சூல்கொடி உதவி செய்கிறது. அது தரும் ஹார்மோன்கள் குழந்தை வளர்வதற்கு உதவுகிறது. ஆனால் இதே ஹார்மோன்கள் தாயின் உடலில் இன்சுலின் செய்யும் வேலையைத் தடுக்கின்றன. அதாவது, தாயின் உடல் இன்சுலினைப் பயன்படுத்த முடியாமல் தடுக்கின்றன. பிரசவ காலத்தில் தாய்க்கு மூன்று மடங்கு இன்சுலின் தேவைப்படலாம்.

ஆக, பிரசவ காலத்திற்குத் தேவைப்படும் இன்சுலினை உற்பத்தி செய்யவும், முழுமையாக பயன்படுத்தவும் முடியாமல் போகும். இன்சுலின் இல்லாவிட்டால், இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸ் ஆற்றலாக மாற முடியாது. அதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இது ஹைபர்கிளைசீமியா எனப்படும்.

கர்ப்பகால நீரிழிவு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?
கர்ப்பகால நீரிழிவு என்பது, கருவில் சிசு ஓரளவுக்கு நன்கு உருவான பிறகு, கர்ப்பகாலத்தின் பிற்பகுதியில் பாதிக்கும். அதாவது, சிசு வளர்வதில் முனைப்பாக இருக்கும்போது தாயைப் பாதிக்கும். அதனால், பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் குறைபாடுகள் இருக்காது. ஆனால் கர்ப்பகால நீரிழிவுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அல்லது சரியாகக் கட்டுப்படுத்தப்படா விட்டால், குழந்தையையும் பாதிக்கலாம்.

கர்ப்பகால நீரிழிவு இருந்தால், இன்சுலின் அதிகம் உற்பத்தி செய்ய கணையம் அதிகப்படியாக உழைக்கும். ஆனால் இன்சுலின் அதிகம் உற்பத்தி ஆகியும்கூட, அது முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் குளுக்கோஸ் அளவு குறையாது. பிளசென்டாவின் வழியாக இன்சுலின் சிசுவைச் சென்றடையாது என்றாலும், குளுக்கோசும் இதர ஊட்டச் சத்துகளும் சிசுவை அடையும். எனவே, பிளசென்டா வழியாக சிசுவை அடையும் அதிகப்படியான குளுக்கோஸ், குழந்தைக்கும் அதிக குளுக்கோஸை சேர்க்கும். எனவே, அதை சமாளிக்க குழந்தையின் கணையம் கூடுதலாக இன்சுலின் உற்பத்தி செய்யும். குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அளவுக்கும் அதிகமாக ஆற்றல் அதற்குக் கிடைக்கும்போது, அந்த அதிகப்படியான ஆற்றல் கொழுப்பாக சேமிக்கப்படும். இதனால் அதிக எடை கொண்ட குழந்தையாக உருவாகும் (macrosomia). இப்படி அதிக கொழுப்புடன் கூடிய மேக்ரோசோமியா குழந்தைகளுக்கு அவர்களுக்கே உரிய உடல்நலப் பிரச்சினைகள் உருவாகும். உரணமாக, சிசுக்களின் தோள்களில் பாதிப்பு, குளுக்கோஸ் அளவு குறைதல், மூச்சுத்திணறல் போன்றவை. அதிகப்படியான இன்சுலினுடன் பிறக்கும் குழந்தைகள் பருமனாகவும் (obesity), பிற்காலத்தில் டைப்-2 சர்க்கரை நோய்க்கு ஆளாகவும் வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பகால நீரிழிவுக்கு ஆளாகும் பெண்களில் பாதிப்பேர், பிரசவத்துக்குப் பிறகு ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் டைப்-2 சர்க்கரை நோயாளிகளாக ஆகிறார்கள்.

ஆறுதலளிக்கும் விஷயம் என்னவென்றால், டைப்-2 நீரிழிவு நோய் உள்ளவர்களில் 70% பேருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளால் நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலோருக்கு சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லை, சிகிச்சைக்கான வசதி இல்லை, சிகிச்சைக்குப் பிறகும் கவனிப்பு இல்லை. விழிப்புணர்வு, பரிசோதனை, சிகிச்சை, இவற்றின மூலம் தாய்-சேய் ஆரோக்கியத்தைப் பேண முடியும்.

இந்த ஆண்டின் மையக்கருத்து இதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்களுக்கு ஏன் சிறப்புக்கவனம் தேவை?
உலகில் தற்போது 20 கோடி பெண்கள் சர்க்கரை நோய்க்கு ஆளாகி உள்ளனர். 2040 வாக்கில் இது 31 கோடியாக உயரும் என அஞ்சப்படுகிறது. நீரிழிவு நோயின் பாதிப்பு, சிகிச்சைக்கான வாய்ப்பு, கவனிப்பு ஆகியவற்றிலும் பாலியல் பாகுபாடுகளால் ஆணாதிக்க சமூகங்களில் பெண்களுக்கு பின்னடைவு உண்டு. உலக அளவில் ஏற்படும் மகளிர் உயிரிழப்புகளில் 9ஆவது காரணமாக இருப்பது நீரிழிவு நோய்; ஆண்டுதோறும் 2.1 கோடிப்பேர் இதனால் உயிரிழக்கிறார்கள்.

பரிசோதனை, ஆரம்பகாலத்திலேயே நோயைக்கண்டறிதல், சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு ஆகியவற்றில் சமூக-பொருளாதாரக் காரணிகளும் பெண்களுக்கு பெரும் சோதனையாக உள்ளன. உணவு போதாமை, ஊட்டச் சத்துக் குறைபாடு, கூடுதல் உழைப்பு அல்லது உழைப்பின்மை ஆகியவை பெண்களை பாதிக்கின்றன.

நீரிழிவு நோய் உள்ள பெண்களில் பத்தில் 4 பேர், கருவுறக்கூடிய வயதில் உள்ளவர்கள். எனவே, இவர்களுக்கு கருவுறுதல், கருவுற்ற காலத்தில் கவனிப்பு, பிரசவம், ஆகியவற்றின்போதும் சிக்கல்கள் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.

உலகளவில் 11 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. (பெண்களில் 10 பேரில் ஒருவருக்கு). தற்போது 35 கோடிப்பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது; 2045 வாக்கில் 70 கோடிப்பேருக்கு சர்க்கரை நோய் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

சர்க்கரை நோய் கண்கள், இதயம், சிறுநீரகம், நரம்புகள், பாதங்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். அதிலும் சர்க்கரை நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் உழைக்கும் வயதில் உள்ளவர்கள் என்பதைப் பார்க்கையில், மேற்கண்ட நோய்கள் அவர்களையும், அவர்கள் குடும்பங்களையும் எந்த அளவுக்கு வருத்தும் என்பதை ஊகிக்கலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகளில் பாதிப்பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாது. எனவேதான் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.

சர்க்கரை நோய் இதுவரை அதிகம் கவனிக்கப்படாத, புறக்கணிக்கப்பட்ட நோயாகவே இருந்து வருகிறது. ஆனால் இனியும் இப்படி இருக்க முடியாது. மார்பகப் புற்றுநோய்க்கு சொன்னதே இங்கும் பொருந்தும் குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்கு சிகிச்சை வசதிகளை அணுக முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு பெண்களுக்கு –– சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், ஆரம்ப காலத்திலேயே பரிசோதனை செய்து கொள்ளுதல் / செய்ய வைத்தல், சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு அவசியம்.

பத்திரமா பாத்துக்குங்க. 

No comments:

Post a Comment