Thursday, 28 December 2017

நண்டும் ஏஞ்சலினா ஜூலியும்

மார்பகப் புற்றுநோய் குறித்து பேஸ்புக்கில் எழுதியதைத் தொகுக்கும்போது சிவசங்கரி எழுதிய நண்டு எனும் நாவல் நினைவு வந்தது. சுமார் நாற்பதாண்டு காலத்துக்குப்பிறகு சிவசங்கரியை வாசித்தேன்.

நாவலின் நாயகியின் பெயர் சீதா. பெயரிலும் ஒரு குறியீடு உண்டு. சீதா பேரழகி இல்லை என்றாலும் குடும்பப்பாங்கான அழகி, புத்திசாலி, மென்மையானவள், அமைதியானவள், தியாகி, குடும்பத்தைத் தாங்கிச் சுமக்கக் கூடியவள். அகிலன்-நாபா கதைகளில் வரும் கதாநாயக அரவிந்தன்கள் போல அப்பழுக்கற்றவள் சீதா. சரி, போகட்டும், இது இலக்கிய விசாரம் அல்ல. நான் சொல்ல வந்தது, கதையில் சீதாவுக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறது.

அவ்வளவு புத்திசாலியாக இருக்கும் சீதா, மார்பகத்தில் கட்டி வந்தபோது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவள் முதலில் பார்த்த மருத்துவரும் அதை சாதாரணக் கட்டியாக நினைத்து ஏதோ மாத்திரைகளைக் கொடுத்து விடுகிறார். சீதாவும் அத்துடன் மறந்து விடுகிறாள். அடுத்த சில மாதங்களில் நோய் முற்றிய பிறகு, வேறொரு மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறாள் அவளுடைய தோழி. அந்த மருத்துவர் கேட்கிறார் - படிச்சவங்களே இப்படிச் செஞ்சா எப்படிம்மா?

இந்த நாவல் தினமணி கதிரில் தொடராக வெளிவந்ததாக நினைவு. உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதியதாக சிவசங்கரி கூறிய இந்த நாவல் வெளிவந்தது 1975. இது எழுதப்பட்டு நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் மார்பகப் புற்றுநோய் விஷயத்தில் சமூகத்தின் மனநிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

புற்றுநோயைப் பொறுத்தவரையில் சிக்கல் என்னவென்றால் அது அறிகுறிகள் ஏதும் காட்டாமல் வரக்கூடிய நோய். சில அறிகுறிகள் தெரிந்தாலும், அது வேறு ஏதாவது சிறிய உடல்நலப் பிரச்சினையின் அறிகுறிகள் போலத் தோன்றும் சாத்தியங்கள் அதிகம். மார்பகப் புற்றுநோய் விஷயத்திலும் அப்படித்தான்.

ஆனால், மார்பகப் புற்றுநோயை மட்டும் ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்புகள் அதிகம். அதற்குத் தேவை விழிப்புணர்வு மட்டுமே. அதிலும், இந்தியப் பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் விழிப்புணர்வு அவசியம் தேவை. மார்பகப் புற்றுநோயின் காரணமாக உயிரிழக்கத் தேவையில்லை. மார்பகம் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் உறுப்பு அல்ல. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மார்பகத்தை நீக்கியும் விடலாம்.

இதற்காகவே தொகுத்திருக்கிறேன் எனது தொடர் கட்டுரைகளை. மார்பகப் புற்றுநோய் : அறிந்ததும் அறியாததும்என்ற தலைப்பில் விரைவில் நூல் வெளிவர இருக்கிறது. நூலிலிருந்து ஒரு பகுதி

*


ஏஞ்சலினா ஜூலி என்ற பெயரை அறிந்திருப்பீர்கள். அவர் பிரபல ஆங்கில நடிகை மட்டுமல்ல, மனிதாபிமானம் மிக்க செயல் வீரர். அவருடைய தாய்வழிப் பரம்பரையில் புற்றுநோய் வரலாறு இருந்தது. தாயாருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது, பிறகு கருப்பைப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். தாய்வழிப் பாட்டி கருப்பைப் புற்றுநோய்க்கும்சித்தி மார்பகப் புற்றுநோய்க்கும் பலியாயினர். ஆக, ஏஞ்சலினா ஜூலிக்கு மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய சாத்தியங்கள் இருந்தன. புற்றுநோய் ஆபத்து உண்டா என்பதை BRCA1 மற்றும் BRCA2 என்ற மரபணுக்கள் காட்டிவிடும். ஏஞ்சலினா ஜூலிக்கு பரிசோதனை செய்தபோது BRCA1 மரபணுக்களில் பிறழ்வு இருப்பது தெரிய வந்தது. அதனால், மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு 87 சதவிகிதம், கருப்பைப் புற்றுநோய் வாய்ப்பு 50 சதவிகிதம் இருந்தது. எனவே, முன்னெச்சரிக்கையாக, மார்பகங்கள் இரண்டையும் நீக்கிவிடுவதென அவர் முடிவு செய்தார். இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஆபத்து 5 சதவிகிதமாகக் குறைந்தது.

2013இல் மார்பக நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். என் கதையை ரகசியமாக வைக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், புற்றுநோயின் நிழலில்தான் நாம் இருக்கிறோம் என்று அறியாத பெண்கள் ஏராளமானோர் உண்டு. என் கதையை அறிவதன் வாயிலாக, அவர்களும் மரபணு பரிசோதனை செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அப்படி அவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம் இருந்தால், அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு என்பதையும் அவர்கள் அறிய முடியும்.  மார்பக நீக்க அறுவை செய்து கொள்வது என்பது அவ்வளவு எளிய விஷயம் அல்ல என்பதையும் பெண்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், அந்த முடிவை எடுத்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்து 87இலிருந்து 5 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. என்னை இழந்து விடுவோமோ என்று என் குழந்தைகள் இனி அச்சப்படத் தேவையில்லை.

ஏஞ்சலினா ஜூலியின் கட்டுரைகளைத் தொடர்ந்து, மார்பக நீக்க அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை ஏஞ்சலினா விளைவுஎன்று குறிப்பிடுகின்றனர். ஏஞ்சலினா விளைவின் காரணமாக, ஏராளமான பெண்கள் தேவையே இல்லாமல் மரபணுப் பரிசோதனை செய்து கொண்டார்கள் என்று ஒரு தரப்பு குற்றம் சாட்டுகிறது. BRCA மரபணு பரிசோதனை செய்வதன் மூலம் பெண்கள் தம்மைக் காத்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது என்று ஒரு தரப்பு மகிழ்ச்சி அடைகிறது. பெரும்பாலான பெண்களுக்கு மரபணு பரிசோதனையில் புற்றுநோய் ஆபத்து இருக்கவில்லை. ஏனென்றால், பரம்பரையாக புற்றுநோய் வரலாறு இருப்பவர்களிலும் 10 சதவிகிதம் பேருக்குத்தான் புற்றுநோய் மரபணு இருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, ஏஞ்சலினா ஜூலியின் மரபணுவைப் பரிசோதித்த மிரீயட் ஜெனடிக்ஸ் (Myriad Genetics) என்ற நிறுவனம் புதியதொரு டிஎன்ஏ பரிசோதனையை வழங்க முன்வந்துள்ளது. இதுவரை அறியப்பட்ட BRCA பரிசோதனைகளுக்கு பதிலாக, மரபணுத் தொகுதியை முழுமையாகப் பரிசோதித்து சின்னச்சின்னத் தடயங்களைக் கண்டறியும் வழி இது என்கிறார்கள். இவற்றைத் தொகுப்பதன்மூலம் கிடைப்பது, பாலிஜெனிக் குறியீடு. இப்போது புற்றுநோய்க்கு உதவும் இந்தப் பரிசோதனை நாளடைவில் ஞாபகமறதி நோய், இதய நோய் உள்ளிட்ட நோய்களின் சாத்தியங்களையும் கண்டறிய உதவும் என நம்பப்படுகிறது. மிரீயட் நிறுவனம், இப்போதைக்கு இந்தச் சேவையை, பரம்பரையாக புற்றுநோய் ஆபத்து உள்ள ஐரோப்பியப் பின்னணி கொண்ட பெண்களுக்கு மட்டுமே வழங்குகிறது. இத்துறையில் இன்னும் ஆய்வுகள் நடைபெற உள்ளன.


ஆக மொத்தத்தில், புற்றுநோயை வெல்வதற்கான முயற்சியில் மருத்துவ அறிவியல் துறை தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதுவும் விரைவாகவே முன்னேறி வருகிறது என்பது ஆறுதலான விஷயம்.

No comments:

Post a Comment