“அய்யோ... புயலடிக்கப் போகிறதாமே?” என்று
பதறுவதற்குப் பதிலாக, “அய்யோ புயல் அந்தப் பக்கம் போயிடுச்சாமே...” என்று பதறுகிற
நிலைமைக்கு நாம் வந்திருக்கிறோம். அந்த அளவுக்கு கோடையைப் பற்றியும், தண்ணீர்
பற்றாக்குறை பற்றியும் பயந்து போயிருக்கிறோம். அச்சம் நியாயம்தான், ஆனால் அதற்குக்
காரணமும் நாமேதான். குளிரைக்கூட சமாளித்து விடலாம். கோடையை சமாளிப்பது
மிகக்கடினம்.
“......................
நகரில் வெயிலுக்கு ...... பேர் பலி”
“70 வயது முதியவர்
சுருண்டு விழுந்து சாவு”
போன்ற செய்திகளை கோடை காலங்களில்
பார்த்திருப்பீர்கள். வெயிலால் எப்படி உயிரிழப்பு நேரும்? எங்காவது நிழலில்
உட்கார்ந்தால் போதாதா? இப்படியெல்லாம் கேள்விகள் தோன்றக்கூடும்.
முந்தைய ஒரு பதிவில் நீர்ச்சத்துக் குறைபாடு குறித்து எழுதியிருந்தேன். நாம் வெயிலில் அலைந்து கொண்டிருக்கிறோம்,
நீரிழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே புரியாமல் தொடர்ந்து அலைந்து,
கடும் வெப்பத்துக்கு ஆளாகும்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதுதான் ஹீட்
ஸ்டிரோக். இதற்கு மற்றொரு பெயர் – சன் ஸ்டிரோக் (sunstroke). வெப்பத்
தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு உடனடி உதவி கிடைக்காவிட்டால் உயிருக்கே ஆபத்துதான்.
வெயிலில் அலைபவர்களுக்கு மட்டுமல்ல, வீட்டுக்குள் இருப்பவர்களும்கூட
பாதிக்கப்படலாம்.
ஹீட் ஸ்டிரோக் தாக்குதலுக்கு
ஆளாகிறவர்களில் பெரும்பாலோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். ஆனாலும், அவர்கள் மட்டுமே
பாதிக்கப்படுவதில்லை.
ஹீட் ஸ்டிரோக் ஏற்படும்போது மூளை அல்லது
இதர உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். நீர்ச்சத்து இழப்புடன் அதிக வெப்பத்துக்கு
ஆளாவதால் உடலின் வெப்பநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு பாதிக்கப்படுகிறது. உடலின்
வெப்பநிலை 104 டிகிரிக்கும் மேலே போய்விடும். மத்திய நரம்பு மண்டலம்
பாதிக்கப்படும். வாந்தி, வலிப்பு, கிறுகிறுப்பு, மயக்கம், கோமா என பல
நிலைகளும் ஏற்படலாம்.
ஹீட் ஸ்டிரோக்கின் அறிகுறிகள்
• உடல் வெப்பம் அதிகரித்தல்
• கடும் தலைவலி
• கிறுகிறுப்பு, தலைசுற்றல்
• சூடாக இருந்தாலும் வியர்ப்பதில்லை
• தோல் உலர்ந்து போதல்
• தசைகள் பலவீனம்
• குமட்டல், வாந்தி
• இதயப்படபடப்பு
• மூச்சுத்திணறல்
• குழப்ப மனநிலை, குளறுதல், கவனச்சிதைவு
• வலிப்பு
• மயக்கம்
யாருக்கேனும் ஹீட் ஸ்டிரோக் தாக்குதல்
ஏற்பட்டிருக்கிறது என்றால், உடனே மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதற்கு முன்னதாக, இயன்ற முதலுதவிகளை செய்யலாம்.
• குளிர்ச்சியான / நிழலான இடத்துக்கு
மாற்றுதல்
• ஆடைகளைத் தளர்த்தி விடுதல்
• விசிறியால் காற்று வீசுதல்
• ஈரத்துணியால் துடைத்தல்
• உடல் வெப்ப நிலையைக் குறைத்தல்
• முகத்தில் தண்ணீர் தெளித்தல்
• கழுத்து, முதுகு, அக்குள்
பகுதிகளில் ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுத்தல் (வயது முதிர்ந்தவர்களுக்கு, குழந்தைகளுக்கு
ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை. அதுவே பாதகமாகவும் ஆகலாம்.)
• மருத்துவ உதவி வருவதற்குத் தாமதம் ஆனால்,
இன்னும் என்ன முதலுதவி செய்யலாம் என்று மருத்துவமனையிடமே கேட்கலாம்.
வெயிலில் அலைபவர்களுக்கு மட்டுமே ஹீட்
ஸ்டிரோக் ஏற்படும் என்பது இல்லை. அதிக காற்றோட்டம் இல்லாத வீட்டில் இருக்கும்
முதியவர்களுக்கு, போதுமான நீர் அருந்தாதவர்களுக்கு, அதிக மது
அருந்தியவர்களுக்கும் ஏற்படலாம். 90 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் இருந்தால், வெப்பத்தால்
பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதுவே நேரடி வெயிலுக்கு ஆளாகும்போது மேலும் 15 டிகிரி வெப்பம்
ஏறிவிடும். எனவே, வெளியே செல்கிறவர்கள் அனல் காற்று நிலைமை எப்படி இருக்கிறது
என்று பார்த்துவிட்டுச் செல்வது நல்லது.
• காற்றோட்டமில்லாத, கான்கிரீட்
கட்டிடங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
• 4 வயதுக்குக்
குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ஹீட் ஸ்டிரோக்
வாய்ப்புகள் அதிகம்.
• சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க
வேண்டும்.
எப்படி காத்துக்கொள்வது
• இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்
• தலைக்கு தொப்பி அணியலாம்
• எடை குறைவான, தளர்வான, ஆடைகள் அணியலாம்
• நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
பழச்சாறுகள் சேர்க்கலாம்.
• எலக்டிரால் போன்ற சத்து பானங்கள்
அருந்தலாம்.
• வெளியில் வெயிலில் அலையும்போது
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொடும் வெயிலில் வெளியே போகும் வேலைகளை
ஒத்திப்போடலாம்.
• உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும்
பின்பும் பானங்கள் அருந்தலாம்.
• சிறுநீரின் நிறத்தை கவனியுங்கள்.
• காபி / மதுபானங்கள் தவிர்க்கவும்.
• சுயமாக மருந்துகளை
எடுத்துக்கொள்ளக்கூடாது.
• இதயம், கிட்னி, ஈரல் தொடர்பான
நோய்கள் உள்ளவர்கள், வலிப்பு உள்ளவர்கள், உணவுக்
கட்டுப்பாட்டில் உள்ளவர்கள், மருத்துவரின் பரிந்துரைப்படிதான் பானங்களை அருந்த வேண்டும்.
நீர்ச்சத்துக் குறைபாட்டுக்கு என்ன
முன்னெச்சரிக்கைகள் உண்டோ அவை இதற்கும் தேவை.
நன்றி - www.webmd.com