Sunday 28 February 2010

அடையாளம்

அடையாளம்


தில்லியில் 2007 செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற 'இலக்கியச் சந்திப்பு' கூட்டத்தில், இலங்கை எழுத்தாளர் சேரனின் 'உயிர் கொல்லும் வார்த்தைகள்' நூலுக்கான மதிப்புரை.


அடையாளம் என்ற சாதாரணச் சொல்லை ஒரு மனிதனுடன் பொருத்திப் பார்க்கும்போது அது வித்தியாசமான பரிமாணங்களைப் பெறுகிறது. அவனது இந்த அடையாளத்தை அவன் பெரும்பாலும் உணர்வதில்லை. மார்பு வலி ஏற்படும்போது மட்டும் இதயத்தின் துடிப்பு தெரிவதுபோல, மூக்கு அடைத்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே மூச்சின் இயக்கத்தை உணர்வது போல, இந்த மனித அடையாளமும் சில சமயங்களில் மட்டுமே அவனால் உணரப்படுகிறது. பெரும்பாலும் தெரியாமலே இருக்கிறது. ஆனால் இந்த அடையாளத்தை அவன் உணராமல் இருந்தாலும், மற்றவர்கள் எப்போதுமே அவனை அந்த அடையாளத்துடன் இணைத்தே பார்க்கிறார்கள். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த அடையாளம் அவனுடன் ஒட்டிக்கொண்டே இருக்கிறது. பல சமயங்களில் இந்த அடையாளம் அவனுக்கு உதவியாக அமைகிறது என்றாலும், பாதகமான சூழல்களை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களையும் இந்த அடையாளம் அவனுக்கு ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு மனிதனையும் மற்றவர்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு, ஓரளவுக்கு அவனுடைய பெயர், மொழி, இனம், மதம், சாதி, கட்சிச் சார்பு, அரசியல் கொள்கை, உலகாயத விஷயங்களின் அவனுக்கு இருக்கும் கருத்துகள் போன்ற காரணங்களே முக்கியக் காரணிகளாக அமைகின்றன என்றாலும், அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவன் வெறுத்தாலும் வெறுக்காவிட்டாலும், அவன் ஏற்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும், மற்றவர்கள் அவரவர் கருத்தோட்டத்தையும், வாழ்நிலையையும் பொறுத்துத்தான் அந்த அடையாளத்தை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். இதில் அவன் செய்யக்கூடியது மிகக் கொஞ்சம் என்றுகூடச் சொல்ல முடியாது, அவன் கையில் எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

ஏனென்றால், இந்த அடையாளப்படுத்தல் எந்த முகாந்திரமும் இன்றி தானே துவங்கி விடுகிறது. எந்தவொரு மனிதனையும் முழுதாக அறியாமலே, அவனுடன் பேசாமலே, அவனுடன் பழகாமலே, அவன் கொண்டிருக்கிற கருத்துகள் பற்றிய அரிச்சுவடிகூடத் தெரியாமலே நாம் மற்றவர்களை அடையாளப்படுத்தி விடுகிறோம். நாமும் இப்படி மற்றவர்களால் அடையாளம் காணப்படுகிறோம். ஆதிகாலம் தொட்டு இந்த அடையாளப்படுத்தல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய அடையாளப்படுத்தல் புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறது – விபரீதமான விளைவுகளைக் கொண்டதாகவும் ஆகியிருக்கிறது.

மதவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான வாய்ப்புகளை நம் நாடு பயன்படுத்திக் கொள்ளாத நிலையிலும், தனிநபர் நம்பிக்கை என்ற அளவுக்குள் இருக்க வேண்டிய மதத்தை, சமூக வாழ்வில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக மாற்றுவதற்கு மதம் வெற்றிகரமான வழி என்று பலமுறை நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையிலும், இந்த அடையாளப்படுத்தலை மதவாதம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்கள் இங்கு அதிகம் தேவையில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கோவை நகரிலும் குஜராத்திலும் அடையாளப்படுத்தப்பட்ட கடைகளும் மக்களும் மட்டுமே தாக்கப்பட்டதை சுலபமான உதாரணமாகக் கொள்ளலாம். எந்தவொரு கண்டுபிடிப்பையும் புதிய தொழில்நுட்பத்தையும் தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதில் வல்லவர்கக்கு, இவையெல்லாம் இந்தப் புதிய அடையாளப்படுத்தலுக்கும் உதவியாய் இருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் இல்லாவிட்டாலும் அடையாளப்படுத்தல் நிகழ்ந்தே தீரும் என்றாலும், இவை அடையாளப்படுத்தலை விரைவுபடுத்தியுள்ளன, எளிதாக்கியுள்ளன. உதாரணமாக, கணினியைப் பயன்படுத்தி மொத்த வாக்காளர் பட்டியலிலிருந்து சில நிமிட நேரத்தில் குறிப்பிட்ட மதத்தை அல்லது இனத்தை அல்லது சாதியைச் சேர்ந்தவர்கள் யார் என்பதைப் பட்டியலிட்டு விட முடியும். அவர்களின் ஜாதகம் தவிர, அனைத்து விவரங்களையும் திரட்டிவிட முடியும். அடையாளப்படுத்தலில் தொழில்நுட்பத்தின் பங்கைப் பற்றிப் பேசுவதில், இப்போது விவாதிக்கப்படும் விஷயத்திலிருந்து திசைதிரும்பிவிடக்கூடிய ஆபத்து இருப்பதால் இத்தோடு இதை நிறுத்திக் கொள்ளலாம்.

பனிப்போர் முடிவும், சோவியத் சிதறலும், ரஷ்ய பொருளாதாரச் சரிவும் அமைத்துக் கொடுத்த ஒற்றை ஏகாதிபத்திய ஆற்றலைப் பயன்படுத்தி எண்ணெய் வளம் மிக்க மத்தியக் கிழக்கு நாடுகளில் தன் ஆதிக்கத்தை அப்பட்டமாக நிலைநாட்டிக் கொள்ம் அமெரிக்காவின் முயற்சியால் விளைந்த செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு இந்த அடையாளப்படுத்தல் சர்வதேச அளவில் மற்றொரு பரிமாணம் பெற்றிருக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகள் என்று அடையாளப்படுத்துவதுகூடத் தவறு என்று சிலர் கூறுகிறார்கள். தூரக்கிழக்கு நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள் என்று குறிப்பிடுவதே, மேற்கு நாடுகளை மையமாக வைத்துக் கொண்டுதான். எனவே இத்தகைய சொற்களை ஏற்க மறுப்பவர்கள் இருக்கிறார்கள். இது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம். ஆக, இனம் சார்ந்த அடையாளப்படுத்தல் இன்று உலகளாவிய என்று சொல்ல முடியாவிட்டாலும் பலநாடுகள் தழுவிய பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது.
இவையெல்லாம் நிகழ்வதற்குப் பல ஆண்டுகள் முன்பாகவே ஒரு இனம் குறிப்பான அடையாளத்தைப் பெற்றுவிட்டது. அதுதான் ஈழத் தமிழினம். அறுபதுகளில் துவங்கிய இனப்பிரச்சினை பலவாறாக வளர்ச்சியும் மாற்றங்களும் பெற்று அந்த இனத்தையே மாற்றி விட்டிருக்கிறது. தமிழர் என்று ஒரு இனம்தான் இருக்க முடியும், ஈழத் தமிழினம் என அதைத் தனி இனமாகக் கூற முடியுமா என்று ஒரு கேள்வி எழுகிறது. இங்கே ஈழத் தமிழினம் என்று குறிப்பிடப்படுவது தமிழினத்திலிருந்து தனித்துப் பிரித்துக் காட்டுவதற்கு அல்ல. தொப்புள்கொடி உறவு, தாய்-பிள்ளை உறவு என்று எப்படி மார்தட்டிக் கொண்டாலும் எதார்த்தம் வேறாக இருக்கிறது. இனமானத் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களையும் - நூறாண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்து இலங்கை சென்று இன்னும் காலூன்ற முடியாமல் புலம் பெயர்ந்துகொண்டே இருக்கும் தமிழர்களையும் ஒரே இனம் என்று அடையாளப்படுத்த என்னால் இயலவில்லை. தமிழகத் தமிழினம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்துக கொண்டிருக்கும் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் விமான குண்டுமழைகளையும் ஈழத் தமிழினம் அன்றாடம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுக்கப் பாதயாத்திரை நடத்தி முன்னறிவிப்புக் கொடுத்து, பெரிய பெரிய பேனர்களால் விளம்பரம் செய்து இலங்கைக்குப் படகில் போகப்போவதாக நாடகம் காட்டிக் கொண்டிருக்கிறது தமிழகத் தமிழினம். எந்த அறிவிப்பும் இல்லாமல், இருப்பதை எல்லாம் கைவிட்டு, இரவோடு இரவாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கள்ளத்தோணி ஏறி, நிறைவேறாக் கனவுகடன் புலம் பெயர்வது ஈழத் தமிழினம். குக்கிராமத்துக் குப்பாயியின் குழந்தையும் மம்மி-டாடி என்று பேச ஆங்கிலப்பள்ளிகக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது தமிழகத் தமிழினம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் தீவைத்துக் கொத்தப்பட்ட பின்னும் உலகளாவிய முறையில் இணையத் தமிழில் பல சோதனைகளை மேற்கொண்டுள்ளது ஈழத் தமிழினம். இந்த இரண்டு இனங்களையும் ஒரே தமிழினம் என்று என்னால் அடையாளப்படுத்த முடியாது. இதை இத்துடன் நிறுத்திவிட்டு, மீண்டும் ஈழத் தமிழர் என்ற பிரச்சினைக்குப் போவோம்.
அறுபதுகளில் ஈழத் தமிழர் பிரச்சினையாக இருந்தது, பிறகு ஈழத் தமிழரே பிரச்சினை என்றாகி விட்டதற்கு, பல நாடுகள், பல அரசியல் கட்சிகள், பல அரசியல் கட்சித் தலைவர்கள், பல இயக்கத் தலைவர்கள் காரணமாக இருந்ததுடன் இந்த அடையாளப்படுத்தலும் ஒரு காரணம். இந்தியாவில் இந்துத்துவவாதிகள் "அவர்கள்" என்று இஸ்லாமியரை அடையாளப்படுத்துவதுபோல, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் அனைவரையுமே "அவர்கள்' என்று அமெரிக்கா அடையாளப்படுத்துவதுபோல, இன்று தீவிரப்பட்ட பிரச்சினையாக இல்லாமல், முப்பதாண்டுகளாக இந்த அடையாளம் ஈழத் தமிழர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது. இன்று இந்து போன்ற சில பத்திரிகைகளில் மட்டுமே ஆழமான கட்டுரைகளில் விமர்சிக்கப்படும் நாம் - அவர்கள் என்ற கருத்தோட்டத்தின் பாதிப்பை ஈழத் தமிழர்கள் பல பத்தாண்டுகளாகவே அனுபவித்து வருகிறார்கள். இதிலும் குறிப்பாக, ஈழத் தமிழர் என்றாலே புலிகள் என்ற அடையாளப்படுத்தலாக மாறிவிட்டதுதான் விந்தை.

இதுபோலவே, சர்வதேச அளவில் ஈழத் தமிழர் என்றாலே புலிகள் என்ற கருத்து உருவானால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. அவர்களுக்கு இலங்கை-இனப்பிரச்சினை-புலம்பெயர்ந்த தமிழர்-ஈழத்தமிழர்-ஈழ இயக்கம் போன்ற வரலாறுகள் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், இந்தியாவின் வடபகுதியில் இருப்பவர்கள் தெற்கே உள்ள தமிழும் தெலுங்கும் மலையாளமும் கன்னடமும் எல்லாமே மதராசிதான் என்றே அடையாளப்படுத்துவதுபோல, இந்தியாவில் உள்ள படித்த வர்க்கத்தினர்கூட ஈழத் தமிழர் எவரையும் புலிகள் என்று மட்டும் அடையாளப்படுத்துவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவும் ஒருவகையில் இனஆதிக்க, மொழியாதிக்க உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் ஈழத்தமிழர் எவரும் புலியாக அடையாளம் காணப்படும் அபாயம் தொடர்ந்தே வந்திருக்கிறது. இதனால் ஏற்படும் வேதனையை அனுபவித்தவர் மட்டுமே உணர முடியும். அதுவும் தொப்புள்கொடி உறவு உள்ள நாட்டில் இந்த அடையாளப்படுத்தலின் வேதனை அனுபவிக்கப்படுமானால் அந்த வேதனை இன்னும் அதிகமாக இருக்கும்.

சேரனின் இந்த நூலில் உள்ள ஒரு கட்டுரை அங்கதச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் அதன்பின்னே ஒளிந்துள்ள வேதனையை உணர முடிகிறது. இந்த நூலில் சர்வதேசப் பிரச்சினைகள் பலவும் அலசப்பட்டுள்ளன என்றாலும் குறிப்பாக இந்த ஒரு அனுபவக்கட்டுரை, அவர் அனுபவித்த வேதனையை நானே அனுபவித்ததாக உணரச் செய்தது.
நேபாளத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை - ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நடத்திய ஒரு மாநாட்டில் பங்கேற்க சேரன், கோல்கத்தா வழியாகச் செல்ல நேர்கிறது. கோல்கத்தா விமான நிலையத்தில் அவர் எதிர்கொண்ட சிக்கல்தான் இந்த அனுபவம்.

கட்டுரையின் இறுதியில் எழுதுகிறார் - "யாருக்காவது நேபாளம், பூடான், திம்பு என்ற போகிற உத்தேசம் இருந்தால் சிங்கப்பூர் பாங்காக், ஊடாகச் செல்லவும். பயணம் தொலைவு, பணமும் அதிகம் எனினும் புண்ணிய பாரதத்தினால் புண்படாமல் போய்ச் சேருவீர்கள்''
இந்தச் சொற்றொடரின் அங்கதத்தைப் புரிந்து சிரிக்க வேண்டும் ஆனால் சிரிப்பு வரமறுக்கிறது. அடையாளப்படுத்தலின் முழுஅர்த்தம் அங்கே புரிகிறது.

தமிழர் அனைவரும் புலிகள் என்று அடையாளம் காணப்படுவது ஒருபுறம் இருக்க, சார்புநிலை எடுக்காத ஈழத் தமிழர்கள் எவரும் புலிகளின் எதிரிகளாக புலிகளால் அடையாளம் காணப்படும் அபாயமும் ஈழத் தமிழர்களுக்கு உண்டு. மற்ற அடையாளப்படுத்தல்களைவிட இந்த அடையாளப்படுத்தலுக்குக் கொடுக்கும் விலை மிக உயர்ந்த விலையாக இருக்கும். புலிகளின் அகராதியே வேறு என்பதை அண்மை வரலாற்றை அறிந்த நாம் விவாதிக்க வேண்டியதில்லை.
எனவேதான், இன்னொரு கட்டுரையில் - ஒன்றல்ல, பல கட்டுரைகளில் - புலிகள்மீதான பார்வை வெளிப்படும்போது சேரனின் நேர்மை வெளிப்படுகிறது.
சேரனின் நண்பர் சபாலிங்கம் பாரிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்படுகிறார். புலிகளின் மறுப்பாளர்கள் ஈழத்தில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை பத்மநாபா இருந்த சென்னை என்றாலும் சரி, சபாலிங்கம் இருந்த பாரிசானாலும் சரி, புலிகளால் அடையாளம் காணப்பட்டவர்களின் கதி அதோ கதிதான். இந்தப் படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என்று தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று சேரன் குறிப்பிட்டாலும், 'கேள்விகளுக்கு அப்பாலான ஒரு தலைமைப் பீடமும், நம்பிக்கையும் தலைவர்மீதான விசுவாசத்தையும் தவிர வேறெதையுமே கருதாத ஒரு விடுதலைப்பட்டாளமும் - அது எவ்வளவு சாமர்த்தியம் மிக்கதாக இருந்தாலும் - அது உண்மையான விடுதலையைப் பெற்றுத் தந்துவிடப் போவதில்லை. இது வரலாற்றின் துயரம், துயரத்தின் வரலாறு... பேனா முனையை துப்பாக்கிக் குண்டுகளால் சிதைப்பதுதான் மாவீரம் என்பது எங்கடைய கருத்தியலாக மாறி விட்டால் எங்கடைய தேசத்தின் கல்லறைக்குள் ஒரு எலும்புக்கூடுகூட மிஞ்சாது' என்கிற வாசகங்கள், ஈழப்போராட்டத்தின் திசைவழியைக் கண்டு வேதனைப்படுகிற ஒரு மனதின் குரல்கள்.

ஈழத் தமிழர்களையே முஸ்லீம்கள் - மற்றவர்கள் என்று புலிகள் அடையாளப்படுத்துவதை "ஈழத்தின் தேசியத் தற்கொலை' என்ற கட்டுரை விவரிக்கிறது. பாலஸ்தீனத்தை ஒப்பிட்டுக்காட்டும் சேரன் -

'வடக்கிலிருந்து முஸ்லீம் மக்களை விரட்டியடிப்பது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு குறுக்குவழி என்று யாராவது நினைத்தால் அதைவிட மூடத்தனம் வேறு ஒன்றுமில்லை. ஈழத்தின் தேசியத் தற்கொலைதான் இது, முஸ்லிம் மக்களை அடித்துத் துரத்தி விட்டு உருவாக்கப்படும் ஈழம் இஸ்ரேலாகத்தான் இருக்குமே தவிர ஈழமாக இருக்க முடியாது.' என்கிறார். தமிழ்த் தேசியவாதத்தில் நோய்க்கூறாகப் பரவி வரும் முஸ்லிம் எதிர்ப்பையும் ஆக்ரோஷமாக எதிர்க்க வேண்டும் என்கிறார்.

தேசியவாதத்தின் எல்லைகள் என்கிற கட்டுரை, இன அடையாளப்படுத்தலை விவாதிக்கிறது.

'தேசியவாதத்தின் பொதுவானதும் குறிப்பானதுமான வரலாற்றுப் பாடங்கள் சுட்டுவது என்னவென்றால், தேசியவாதம் மற்றவர்களை அல்லது "வெளியார்கள்" என்று தான் உருவகிப்பவர்களை விரட்டுகிறது அல்லது கொல்கிறது. யார் இந்த "வெளியார்கள்" என்பது காலத்துக்கும், அரசியல், சமூக வரலாற்றுத் தேவைகளுக்கும் ஏற்ப உருவகித்துக் கொள்ளப்படுவது வழக்கம். சிங்கள-பௌத்த தேசியவாதத்திற்கு தமிழர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள் அனைவரும் வெளியார். இந்துத் தேசியவாதிகளுக்கு முஸ்லீம்கள் வெளியார். ஈழத் தமிழ் தேசியவாதத்திற்கு (இப்போதைக்கு) முஸ்லீம்கள் வெளியார்.

'இத்தகைய வெளியார் என்ற உருவகிப்பும் வெளியார் நீக்கமும் தேசிய வாதங்களுக்கு அடிப்படையிலேயே ஒரு ஜனநாயக இயல்பைத் தருகின்றன. இன்னொரு தளத்தில், தன்னுடைய இருப்பையும் உன்னதத்தையும் வலியுறுத்த எல்லாத் தேசியவாதங்களும் கடந்துபோன "பொற்காலங்களின்' வரலாற்று, இலக்கிய, கலாச்சார மேன்மைகளிலிருந்து தமக்குத் தேவையான தமது இன்றைய அரசியலுக்குச் சாதகமான விவரங்களையும் அம்சங்களையும் மட்டுமே பொறுக்கி எடுத்துத் தமது அடையாளத்தை நிறுவுகின்றன...' என்று தேசியவாதப் பிரச்சினையை சர்வதேச வரலாறுகளை ஒப்பிட்டுச் சுட்டிக்காட்டுகிறது இக்கட்டுரை.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இப்போது எழுப்பப்பட்டுள்ள ராமர் சேது பிரச்சினை. ஆட்சியில் இருந்தபோது சேதுசமுத்திரம் திட்டத்தை எந்தக் கட்சி அங்கீகரித்ததோ, அதே கட்சி இப்போது முழுக்கரணம் அடித்து திட்டத்தை எதிர்க்கிற விந்தை இத்தகைய தேசியவாதத்தினால் மட்டுமே சாத்தியம். 'விடுதலையும், தேசிய விடுதலையும் எங்கடைய புரிந்துகொள்ளலின்படி சமத்துவம், சுதந்திரம், மானுடம், ஆகிய விழுமியங்களின் மேல் கட்டப்படுவது. இந்த சமத்துவம், இனத்துவ சமத்துவம் மட்டுமல்ல, பொருளாதார சமத்துவம், பால் அடிப்படையிலான சமத்துவம் போன்ற அனைத்தையும் உள்ளடக்க வேண்டும்' என்ற ஆவலை வெளிப்படுத்துகிறது. ஆனால் இது நிறைவேறுமா என்கிற ஐயப்பாடுடன்தான் கட்டுரை முடிகிறது.
வதைமுகாம்கள் எழுப்புகிற கேள்விகள் என்னும் கட்டுரை, நாஜி கொலை முகாம்களைப் பற்றி விளக்கிவிட்டு, நீங்களே சிந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோடன் முடிகிறது. 'நாஜிகனின் கொலை முகாம்கள் வரலாற்றின் ஒருபக்கமாக ஆவணங்களுக்குள் சென்று விட்டது என்று நாம் அமைதி கொள்ள முடியாது. பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு அரசியலுக்கூடாகவும் இத்தகைய பயங்கரங்களின் கூறுகள் மேலெழுவதை ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், வளர்ந்துவரும் நவ-நாஜிகளிலும் இன்று பர்க்கிறோம. நிறவெறியும், இனவெறியும் இன்னொருமுறை மனிதகுல அழிப்புகளுக்குக் காரணமாகாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. நீங்கள் பயப்படுகிறீர்கள். பயப்படுவதில் அர்த்தமில்லை. மனிதநேயம் எங்கிருந்து ஆரம்பமாகிறது என யோசித்துப் பாருங்கள். உங்கள் அயலவர்களை உண்மையாக இதயபூர்வமாக உங்களால் நேசிக்க முடிகிறதா என்று உங்கள் மனச்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள்' என்கிறார் சேரன்.
சேரன் நிச்சயம் வன்முறைவாதி அல்ல என்றாலும் காந்தியவாதி என்றும் கருதிவிட இயலாது. ஆனால் இங்கே தேசியவாதத்துக்கு மருந்தாக அவர் குறிப்பிடுகிற வழி உண்மையில் பயன்தரக் கூடியதுதானா என்பதில் அவருக்கும் சந்தேகமாகத்தான் இருக்கும். இறுதிவரிகள் சாத்தியப்பாட்டில் ஐயத்தை எழுப்புவன என்றாலும், இக்கட்டுரையும் ஆழமானது, விரிவானது.

மகாகவியின் மகனான சேரன், கவிதையின் மூலம் அறிமுகமாகி, பிறகு பத்திரிகைகளில் கட்டுரைகளும் எழுதினார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் 1989 முதல் 97 வரையான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் இவரது ஒரு கட்டுரை "உயிர் கொல்லும் வார்த்தைகள்" என்ற தலைப்பில் அமைந்துள்ளது. செல்வி என்பவருக்கு எழுதப்பட்ட கடிதமாக அது இருக்கிறது. இலங்கையில் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட கவிஞர் செல்வியைத்தான் இவர் குறிப்பிடுகிறார் என்று எண்ணுகிறேன். 'எங்கடைய வார்த்தைகள் உயிர் கொல்லும் வார்த்தைகள் என்று அவர்கள் கருதினால் கருதட்டும். உயிர் கொல்வது அல்ல எங்கடைய வேலை. வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பதே எங்கள் வேலை. விரைவில் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன்' என்று முடிக்கிறார். இவர் சந்திக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அந்த செல்வி 97இல் புலிகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று நினைவு.
அமைதி வழி விமர்சனம் என்றாலும் சரி, ஆயுதமேந்திய எதிர்ப்பானாலும் சரி, புலிகள் தமக்கு வேண்டாதவர் என்று அடையாளம் கண்டவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களை ஒழித்துக் கட்டுவதில் குறியாக இருப்பவர்கள். இவர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தமிழ்க் கவிஞர்களும் தலைவர்களும் ஏராளம். கனடாவுக்குப் புலம் பெயர்ந்துவிட்டார் சேரன். யார்க் பல்கலையில் சமூகவியல் ஆசிரியராக இருக்கிறார்.
இந்த நூல், சேரனே குறிப்பிடுவதுபோல நான்கு தளங்களில் இயங்குகிறது. கருத்துச் சுதந்திரம் ஒன்று. தேசியவாதம், அடையாளங்கள் எழுப்புற சிக்கல்கள் இரண்டாவது. போராட்டங்களும், அதற்கான வழிமுறைகளும் என்பது மூன்றாவது. அறம்சார்ந்த அணுகுமுறை என்பது நான்காவது தளம்.
'நியாயமான வழிமுறைகள்தான் நியாயமான முடிவுகளுக்கும் இட்டுச் செல்லும்' என்று போராட்ட வழிமுறைகள் பற்றிய இவரது கூற்று, காந்தியின் ways justifies the means என்பதோடு நெருங்கி நிற்கிறது.
தமிழ், சுற்றுச்சூழல், சோசலிசம், உலகமயமாக்கம், ஈழத் தமிழர் பிரச்சினை, கஷ்மீர், மனித உரிமைகள், என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இருக்கின்றன. பல கட்டுரைகளில் இடுக்கண் வருங்கால் நகுக என்பதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் சேரன். வேதனை தரக்கூடிய சில கட்டுரைகளையும்கூட அங்கதச் சுவையுடன் இவரால் தர முடிந்திருக்கிறது.
ஏ.கே. 47இலிருந்து பேஸ்பால் மட்டை வரை என்கிற கட்டுரை, ஆயுதப் போராளிகளையும் காய்ச்சுகிறது, ஈழத்தைவிட்டு மேலை நாடுகளுக்குப் பறந்தோடிவிட்டவர்களைக் காய்ச்சுகிறது. 'ஆயுதபாணிகளை மட்டுமல்ல, நிராயுதபாணிகளையும் குழந்தைகளையும் சுட்டுவீழ்த்துகிற வீரம் எங்களுடையது... வீரமும் களத்தே விட்டுவிட்டு, பாஸ்போர்ட்டையும் மலசல கூடத்தில் வீசிவிட்டு, வெறுங்கையோடு கனடா புக்க வீரத் தமிழ் மறவர்கள் பலர் ஏ.கே. 47க்குப் பதில், பேஸ்பால் மட்டைகளை ஆயுதமாகத் தரித்திருப்பதுதான் இன்றைய அவல நிலை. . . இந்த வீரத்தைப் பற்றி எழுதிக்கிழிக்க என்ன இருக்கிறது? வெல்பேர் காசில் தூள் கிளப்புகிறது வீரம்...'
என்று முடிகிறது. வெல்பேர் காசு என்று இவர் சுருக்கமாக எழுதியிருப்பது எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து போன்ற நாடுகள் தற்காலிக இருப்பிடமும், செலவுக்குப் பண உதவியும் தருவார்கள். இதை வெல்பேர் நிதி என்பார்கள். குடியுரிமை கிடைக்கும் வரை, அல்லது தஞ்சம் அனுமதிக்கப்படும் வரை, இருப்பிடம் உணவு போக்குவரத்து எல்லாவற்றுக்கும் அரசின் உதவி கிடைக்கும். இதை வாங்கி திருப்தியாகச் சாப்பிட்டுக்கொண்டு அங்கேயே இருந்து கொண்டு வீரம் பேசுபவர்களைச் சாடுவதாகவும் சொல்லலாம். அந்த வெல்பேர் காசில் ஒரு பகுதி கட்டாயமாக புலிகளால் வசூலிக்கப்பட்டு அது இலங்கையில் ஆயுதங்களுக்குப் பயன்படுவதைக் குறிப்பிடுவதாகவும் சொல்லலாம். எல்லாமே வெல்பேர் காசு என்பது புரிந்தவனுக்கு மட்டுமே இதுவும் புரியும்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்கிற கட்டுரையில், புலம்பெயர்ந்து உலகெலாம் பரவியிருக்கிற தமிழர்களை 'எட்டுத் திக்கும் சென்றாயிற்று. கொலைச் செல்வங்களுக்குப் பதில் கலைச் செல்வங்களைக் கொண்டு வந்துசேருங்களேன் தயவுசெய்து' என்று வேண்டுகிறார்.
பல்லவ புராணம் என்று ஒரு கட்டுரை தமிழ்ப் பத்திரிகையாளர்களை நகைச்சுவையாகச் சாடுகிறது. இவர் புதுவைக் கல்லூரியில் பேராசிரிய நண்பரை சந்திக்கப் போயிருந்தாராம். அப்போது அங்கே வருகிறார் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர். இவர் இலங்கைக் கவிஞர் என்று தெரிந்ததும், தன் பத்திரிகைக்கு ஒரு கவிதை கேட்கிறார். இவர் தயங்க, கடைசியாக பத்திரிகயாளர் கூறுகிறார் - நானே ஒரு நாலுவரி எழுதி உங்க பேரில போட்டுடட்டுமா? தமிழ்ப் பத்திரிகையாளர்களை இதைவிட மோசமாக சாட முடியாது.

சிந்தனையைத் தூண்டும் இக்கட்டுரைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. விலை 90 ரூபாய். நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே ஆழமானவை, விவாதத்துக்கு உரியவை. இவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழ் வாசக வட்டம் விரிவடைய வேண்டும் என்பதே என் ஆவல்.

No comments:

Post a Comment