இருபதாண்டு கால தில்லி வாழ்வின் அவதானிப்பில் தலைநகரம் பெருமளவு மாறி விட்டது. தீபாவளியும். இந்த தீபாவளி சற்றே திருப்தியையும் வியப்பையும் அளித்த தீபாவளி. 1991இல் தில்லிக்கு வந்தபின் முதல் சில ஆண்டுகளில் சந்தித்த தீபாவளி எனக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. சென்னையில் சில ஆண்டுகள் வசித்த நகரவாசியாக இருந்தாலும் ஓலை வெடி, ஊசி வெடி, கேப், சுருள் கேப், லட்சுமி வெடி, ஆடம் பாம் ... இதற்கு மேல் மனதளவில் பழக்கப்பட மறுத்து வந்தவனுக்கு தில்லியின் தீபாவளி மற்றுமொரு பண்பாட்டு அதிர்ச்சி.

ஊரில் நாங்கள் வசித்த பகுதியில் ஒரே இஸ்லாமியக் குடும்பம் எங்களுடையது. பக்கத்து வீட்டார்கள் தரும் முறுக்குகளும் தீனிகளும் வீட்டில் நிறைந்திருக்கும். அவர்கள் வீட்டில் தீர்ந்துபோன பிறகும் எங்கள் வீட்டில் பல நாட்களுக்கு தீனி இருப்பில் இருக்கும். பக்கத்து வீட்டு யூனியன் ஆபீஸ் கேஷியர் மாமா தன் மகன்களுக்கு பட்டாசுகள் வாங்கும்போது எங்களுக்கும் சேர்த்து வாங்கி வருவார். அதுதவிர, பட்டாசுகளை வெடிக்க எங்களையும் சேர்த்துக்கொள்வார். அது வேறு தீபாவளி...
தில்லி தீபாவளியுடன் ஒட்ட முடியாமல் போனதற்கு இன்னும் சில காரணங்கள். எனக்குத் தெரிந்த தமிழக தீபாவளி நரகாசுரனுடன் தொடர்புடையது. தில்லி தீபாவளியோ ராமன் வனவாசம் முடிந்து திரும்பியதை, பாண்டவர்கள் காட்டிலிருந்து திரும்பியதைத் தொடர்புபடுத்தியது.... தீபாவளிக்கு லட்சுமி வர வேண்டும், அதற்காக சீட்டாடியாவது பணம் பண்ணலாம்... தீபாவளிக்கு முன் அனுஷ்டிக்கப்படுகிற தன் தேராஸ்... அன்றைய தினம் வீட்டுக்கு ஏதாவது தங்கமோ வெள்ளியோ வாங்க வேண்டும்... தீபாவளிக்கு அடுத்த நாள் தொழிலகங்களில் ஆயுத பூஜை... அடு்த்த நாள் பாய் தூஜ்...
இப்படி கேள்விப்பட்டேயிராத பண்டிகைகளுடன் என்னால் ஒட்ட முடியவில்லை.
1992இல் பத்து வயதுச் சிறுவன் ஒருவன், நான் போன வருடம் 50000 ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கினேன், இந்த வருடம் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்குவேன் என்று கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் தீபாவளியை ஒட்டி வந்த செய்தியைப் படித்து அதிர்ந்து போனதும் இன்று நினைவு வருகிறது.
இந்த தீபாவளி இரைச்சலைத் தவிர்ப்பதற்காக நாங்களும் இன்னொரு குடும்பத்தினரும் 1995இல் தில்லியை விட்டு வெளிநடப்புச் செய்ததைப் பற்றி இன்னொரு பதிவு எழுதலாம்.

சில ஆண்டுகள் முன்னால் வந்தது உச்சநீதிமன்ற உத்தரவு - இரவு பத்து மணிக்கு மேல் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்ற சட்டம் ஓரளவு இரைச்சலையும் குறைத்தது, பட்டாசுகளையும் குறைத்தது. குழந்தையும் வளர்ந்து விட வெடிச்சத்த வெறுப்பும் சற்றுக் குறைந்தது.
அடுத்து வந்தது பள்ளிகளில் பட்டாசுகளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம். பட்டாசு வெடிக்க மாட்டேன் என்று பள்ளியில் உறுதிமொழி எடு்த்துக்கொண்ட சின்ன மகள் கொஞ்சம் மத்தாப்பும், பூவாளியும் என்று கெஞ்சியபோது உபதேசம் செய்ய மனம் வரவில்லை.
இருந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு பட்டாசுகளின் ஒலி குறையத் துவங்கியது தெளிவாகத் தெரிந்தது. தில்லியில் எந்தச் சட்டமும் செல்லுபடியாகாது என்பது உண்மைதான். இருந்தாலும் பத்து மணி வரை என்ற சட்டம் பதினொன்று - பனிரெண்டு வரைதான் நீடித்தது என்பதே பெரிய வியப்புத்தான்.
இந்த ஆண்டு...

இந்த ஆண்டின் தீபாவளிக்காக வாங்கும் முன்னுரிமைகளில் பட்டாசுகள் பின்தள்ளப்பட்டு விட்டன என்று தோன்றுகிறது. விலைவாசி உயர்வு நடுத்தர மக்களை பெரிதும் பாதித்திருப்பதே இதன் காரணம் என்று தோன்றுகிறது. தீமையிலும் ஒரு நன்மை என்பது இதுதானோ....
இந்த ஆண்டும் தீபாவளிக்கு கடைகள் நிரம்பி வழிந்தன. எந்தக் கடை என்ன விற்பனை செய்யும் என்ற லஜ்ஜையின்றி எல்லாம் இருந்தன. ரேடியோ ரிப்பேர் கடை வண்ணப் படங்களை விற்றுக் கொண்டிருந்தது. சிகரெட்-பீடி-பான் விற்கும் பெட்டிக்கடை மெழுகுவர்த்திகள் வைத்திருந்தது. துணிக்கடை முன்னால் வீட்டு அலங்காரப் பொருட்கள். பழக்கடைக்காரன் மஞ்சள் பல்ப் விளக்கொளியில் மினுமினுக்கும் பித்தளைப் பொருட்களை அடுக்கி வைத்திருந்தான். சைக்கிளிலும் கேரியரிலும் செவந்திப்பூ மாலைகளை சுமந்து கொண்டிருந்த திடீர்க் கடைகள். கடையே இல்லாமல் மடக்குக் கட்டிலைப் பிரித்துப்போட்டு அனுமதி இல்லாத பட்டாசுக்கடைகள்.
இந்த ஆண்டும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கடை கடையாக அலைந்தார்கள். சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாயின. பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறையினர் மோட்டார் பைக்காரர்களை மடக்கி காசு பார்த்தார்கள். தன் தேராஸ் நாளில் 1800 கார்கள் வாங்கப்பட்டதாக செய்திகள் கூறின. பெண்கள் மின்னும் ஜரிகைப் புடவைகள் கட்டிக்கொண்டு முழங்காலுக்குத் தூக்கிப் பிடித்துக்கொணடு குதிகால்உயர செருப்புகளுடன் தத்தக்கா-பித்தக்கா என்று நடந்தார்கள். குழந்தைகளின் பெயரால் அப்பாக்கள் வெடிகளை வெடித்தார்கள். டிராய் உபயத்தால் குறுஞ்சேதி வாழ்த்துகள் குறைந்து போயின. 
ஆனால் இந்தத் தீபாவளியில் எனக்குப் புதிய கவலை முளைத்து விட்டது. இந்தியா-சீனா உறவு எல்லைப்புறத்தில் அவ்வப்போது சிக்கல்களைச் சந்தித்தாலும் மலிவான சீன மின்சாதனங்கள் கடந்த சில ஆண்டுகளாக திடமான இடம் பிடித்து வருகின்றன. சீனத் தயாரிப்பு ஏதேனும் ஒன்று இல்லாத வீடே இன்று தில்லியில் இருக்க முடியாது. இப்போது சீனத்துச் சர விளக்குகள் உள்ளூர் விளக்குகளின் இடத்தைப் பிடித்து விட்டன. மண்ணால் ஆன அகல் விளக்குகளின் இடத்தில் மெழுகுவர்த்திகள் வந்தபோது இவையும் நமது நாட்டின் உற்பத்திகள்தானே... இதிலும் சிறுதொழில் முனைவோரும் எளியோரும்தானே பயன் பெறுகிறார்கள் என்கிற மனச்சமாதானம் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு... 

ஐம்பது ரூபாய்க்கு தொடர்ந்து எரிகிற, விட்டு விட்டு எரிகிற, வரிசை மாறி எரிகிற மூன்று புரொக்ராம்கள் கொண்ட சர விளக்குகள். அகல் விளக்கு போலவே காட்சி தருகிற மின் விளக்குகள். இவை போதாதென்று மெழுகுவர்த்தி போன்ற அதே வடிவத்தில் சர விளக்குகள்.

அதற்குள் தில்லியை விட்டுப் போய்விட வேண்டும்.
(காமிரா கெட்டுப் போய் விட்டதால், இங்கே உள்ள படங்கள் எல்லாம் இணைய உபயம்)
உண்மைதான் .. இந்த முறை வெடிச்சத்தம் மிகவும் குறைந்துவிட்டதாகவே உணர்ந்தேன். அடுத்த நாள் இருக்கும் புகைமூட்டமும் அதை உறுதி செய்தது..
ReplyDeleteசீனா நம் ஒவ்வொரு பண்டிகையிலும் அவர்கள் பொருட்களை வாங்கவைக்க படாத பாடு பட்டு புதுப்புது மாடலில் கொண்டுவருகிறார்கள்.
Sir ini varum kalangalil diwaliyai dibha aavaliyaga kondaduvom
ReplyDeleteஏறக்குறைய சம காலத்தில் தில்லி வந்து இருக்கிறோம்.... நீங்கள் எழுதிய பெரும்பாலான விஷயங்களை நானும் நேரடியாக அனுபவித்து இருப்பதால் எழுத்தின் முழு வீச்சினை உணர முடிந்தது....
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பரே.... தொடர்ந்து வலைப்பூவிலும் எழுதுங்கள்....
மனதை நெருட வைக்கும் பதிவு.
ReplyDeleteஇந்த முறை தீபாவளிக்கு வெடிச் சத்தங்கள் குறைந்து விட்டதாகக் கூறியுள்ளீர்கள்.தில்லிக்கு புதிது என்பதாலா தெரியவில்லை.காது அதிரும்படிதான் இருந்தது சத்தம்.
பத்துமணிக்கு மேல் வெடிக்கக் கூடாது எனச் சட்டம் இருந்தும் முநிர்கா ஏரியாவில் பத்துமணிக்கு மேல்தான் தீபாவளியே ஆரம்பித்தது எனலாம்.வானவேடிக்கைகளின் சத்தத்தால் எனது குழந்தை இரவெல்லாம் அழுதது தனிக் கதை.
கொண்டாட்டம் என்ற பெயரில்,
இவ்வாறு குழந்தைகளையும், முதியவர்களையும்,நோயாளிகளையும்அவர்களது தூக்கம் கெடுத்துத் துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
வருடத்திற்கு ஒருமுறைதான் எனக் காரணம் சொன்னாலும் மனதை நெருடத்தான் செய்கிறது.