Friday 2 March 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 1-3-12

நேற்று இரவு வீடு திரும்ப நேரமாகி விட்டதாலும், காலையில் நண்பர் வேணு அவர்களின் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்ததாலும் கண்காட்சிக்குத் தாமதமாகவே வர முடிந்தது. வந்த பின் அதிகம் புத்தகங்களை வேட்டையாட முடியவில்லை. இன்று வாங்கியவையும் ஏற்கெனவே வாங்கி பட்டியலில் விட்டவையும் -

  • நினைவின் தாழ்வாரங்கள் - கலாப்ரியா
  • நினைவு அலைகள் - தி.சே. சௌ. ராஜன்
  • தலையில்லாத பையன் - எஸ். ராமகிருஷ்ணன்
  • எனக்கு ஏன் கனவு வருது - எஸ். ராமகிருஷ்ணன்
  • எழுதத் தெரிந்த புலி - எஸ். ராமகிருஷ்ணன்
  • நீள நாக்கு - எஸ். ராமகிருஷ்ணன்
  • பீர்முகமது அப்பா கதைகள்

நியூ செஞ்சுரியில் சிலவற்றைத் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். நாளை கொஞ்சம் வாங்க வேண்டும்.

நேற்று கண்காட்சிக்கு வந்த பிரபலங்களில் குறிப்பிடத்தக்கவர் நந்திதா தாஸ். குழந்தைகள் அரங்கில் நிகழ்ச்சிக்கு வந்தவர் திரை அரங்குக்கும் வந்தார். ஏராளமான படங்கள் இருந்தாலும், இந்தப் படம்தான் அவருக்கு நியாயம் சேர்க்கும் என்பது என் கருத்து.


எனக்குப் பிடித்த மிகச்சில நடிகைகளில் முக்கியமானவர். சந்திக்க வேண்டும் என்ற ஆவலும்கூட உண்டு. அவருடைய அம்மா வர்ஷா தாஸ் எனக்கு நல்ல அறிமுகம் உள்ளவர்தான் என்றாலும்கூட பின்னால் ஓடும் கூட்டத்துடன் ஓடிப்போய் அவசர அறிமுகம் செய்துகொள்ளும் அரிப்பில்லாததால் சந்திக்க இயலவில்லை. இன்னொரு படமும் நன்றாக வந்திருக்கிறது.


இன்று மையக் கருத்து அரங்கிற்கு வந்தவர் பரூக் ஷேக். ஒருகாலத்தில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர், பிறகு சின்னத்திரைக்குச் சென்றார். இன்று இதுபோன்ற அரங்குகளில் அதிகம் பார்க்க முடிகிறது. என்பிடி அழைக்கும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் வரக்கூடியவர். கடந்த புத்தகக் கண்காட்சியின்போதும் வந்திருந்தார். வழக்கம்போல ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கையெழுத்து வாங்க போட்டி போட்டார்கள்.



ஒன்று மட்டும் உறுதியானது - திரைப்படங்கள் இந்திய சமூகத்தின்மீது ஏற்படுத்தியதற்கு நிகரான தாக்கம் வேறெந்த நாட்டிலும் சமூகத்திலும் இருக்க முடியாது. யார், என்ன படத்தில் நடித்தார், என்னென்ன வேடங்களில் நடித்தார், வித்தியாசமான பங்களிப்பு ஏதும் அளித்தாரா என்பதெல்லாம் பொருட்டே இல்லை. திரை நட்சத்திரம் என்றால் போதும் - இந்நாள் நட்சத்திரமாக இருந்தாலும் சரி, முன்னாள் நட்சத்திரமாக இருந்தாலும் சரி, ரசிகர்கள் புடை சூழ்ந்துகொள்வதில் தெற்குக்கும் வடக்குக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஊடகங்களும் இவர்களை முன்வைப்பதில்தான் முனைப்புக் காட்டுகின்றன.

இல்லையேல், இந்த இந்திப்பட வில்லனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள இப்படிப் பறப்பார்களா...


இதே இடத்துக்கு எத்தனையோ எழுத்தாளர்கள் வந்திருப்பார்கள். அவர்களுடன் யார் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள்... அல்லது அவர்கள் வந்துபோனதுதான் யாருக்குத் தெரியும்...

நேற்று ஸ்டாலின் குணசேகரன் வந்திருந்தார். மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பின் வாயிலாக ஈரோடு புத்தகக் கண்காட்சியை ஏழாண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருபவர். இந்தக் கண்காட்சியிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்க வந்திருக்கிறார். இன்றும் வந்திருந்த அவரை சந்திக்க இயலவில்லை.

தில்லி அரங்குக்குச் சென்று அங்கிருக்கும் படங்களின் குறிப்புகளை குறிப்பெடுத்துக்கொள்ள நேரம் இல்லாததால் அத்தனையையும் படமாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். அனேகமாக கண்காட்சி முடிந்தபிறகு பதிவு செய்வேன் என்று எண்ணுகிறேன். கண்காட்சிக்கு வருபவர்கள் சில நிமிடங்களை இங்கே செலவு செய்வதற்காக வருந்த மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை.

இன்னும் மூன்று நாட்கள்தான்... இன்னும் கண்காட்சிக்கு வராத நண்பர்களுக்கு தெரிவிக்கத் தவறாதீர்கள்.

வாசிப்பை நேசிப்போம்.

1 comment:

  1. கி.நாச்சிமுத்து8 March 2012 at 15:07

    அன்புள்ள நண்பருக்கு
    வணக்கம்.உங்கள் பதிவுகளை நான் நாளும் ஆவலோடு படித்து வருகிறேன்.நானும் புத்தகக் கண்காட்சிக்குப் போகிறேன்.என்றாலும் உங்களைப்போலக் கவனத்துடன் செய்திகளை பகிர்ந்து கொள்ள நேரம் இல்லையோ என்னவோ எனக்கு என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.உங்கள் பதிவுகளைப் படிக்கிற எவரும் போகாமல் இருக்க மாட்டார்கள்.தொலைவில் இருப்பவர்கள் ஏங்காமல் இருக்க மாட்டார்கள்.
    வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுக..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete