Sunday 1 April 2012

படித்தவர் சூதும் பாவங்களும்...


முன் குறிப்பு - இன்று முதல் என் வலைப்பூவின் தலைப்புக் கவிதை மாற்றப்படுகிறது.


கூடங்குள விவகாரத்தில் ஜெயபாரதன் என்பவர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு எழுதியிருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. அவர் எழுதிய சில மறுப்புகளுக்கு புள்ளிவிவரங்களுடன் அவருடைய வலைப்பக்கத்திலும் கேள்விகள் எழுப்பினேன். வேறு பலரும் கேள்விகள் எழுப்பினர். அதற்கு புள்ளிவிவரத்துடன் பதில்தர முடியாத கோபமோ என்னவோ, தொடர்ந்து மின்னஞ்சல்களும் பின்னூட்டங்களும் அனுப்பத் துவங்கி விட்டார். அவற்றை முந்தைய பதிவின் பின்னூட்டங்களில் நீங்கள் பார்க்க முடியும். சிலவற்றை என் அஞ்சலுக்கு மட்டுமே அனுப்பினார். தன் வலைப்பக்கத்தில்கூட வெளியிடவில்லை.

பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப்பற்றும் குருதி, எலும்பு, சதை எல்லாவற்றிலும் பதிந்திருக்கிறது என்று எழுதுவதைப் படித்து விட்டு, ஆஹா என்று புல்லரித்துப்போன சிலர் பாராட்டுவதில் புளகாங்கிதம் அடைந்திருந்தவரை கேள்விகள் கேட்டால் அவரால் பொறுக்க முடியுமா...

அதனால்தான் ஒவ்வொரு அஞ்சலிலும் ஒவ்வொரு தொனி - புலம்பல், குழப்புதல், பொருந்தாத கூற்றுகள், மிரட்டல் எல்லாம் கலந்தவை அவை. அவரிடம் கேட்ட கேள்விகள் சரியானவையா என்பதை அவருடைய வலைதளத்திலேயே நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு அவரிடம் பதில்கள் இல்லை என்பதையும் பார்த்துக்கொள்ளலாம். ஜெயபாரதன்

அலெக்ஸ் என்பவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு (இந்தக்கேள்விகள் ஞாநியால் பெரிதும் எழுதப்பட்டவைதான்) அணுஉலைக்கு ஆதரவாக ஜெயபாரதன் அளித்த பதில்களும், அதற்கு நான் எழுப்பிய கேள்விகளும் கீழே அட்டவணையாகத் தரப்பட்டுள்ளன.

வெற்று மார்தட்டல்களை நீங்கள் படிக்க நேரலாம் என்பதற்காக வருந்துகிறேன். ஆனால் நேர்மையான வாதங்களை முன்வைப்பதற்கு இது தேவைப்படுகிறது. ஞாநி சில நேரங்களில் பின்னூட்டங்களுக்கு கோபம் தொனிக்க பதில் எழுதுவது ஏன் என்று இப்போது புரிகிறது. இரண்டு மாதங்களாக எழுதி வருபவனுக்கே இந்த நிலை என்றால் இருபது ஆண்டுகளாக எழுதி வருபவருக்கு எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

அலெக்ஸ் வினாக்களுக்கு (சிவப்பில்) ஜெயபாரதன் பதில்கள்
ஜெயபாரதனுக்கு என் கேள்விகள்
1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஜப்பானில் 52 அணு உலைகள் நிறுத்த நிலையில் சோதிக்கப்பட்டுச் செப்பனிடப் படுகின்றன. செர்நோபில் விபத்துக்குப் பிறகு மூடப்பட்ட ஒரே அணு உலை செர்நோபில் நாலாவது யூனிட் ஒன்றுதான். புகுஷிமா விபத்துக்குப் பிறகு உலகில் ஓர் அணு உலை கூட மூடப்பட வில்லை. நிறுத்திய அணு உலைகளில் வெப்பம் தணிப்பு நிகழ்ந்து இயங்கிய நிலையில் அவை யாவும் உயிருடன் உள்ளன. நிறுத்திய அணு உலைக்கும், மூடிய அணு உலைக்கும் வேறுபாடு உள்ளது.
1. ஜப்பானில் அணுஉலைகள் சோதிக்கப்படுகின்றன, அங்கே அதிகரித்து வரும் மக்களின் எதிர்ப்பையும் மீறி விரைவில் இயக்கப்படும் என்றே வைத்துக்கொள்வோம். வலுவான அணுசக்தி நெறிப்படுத்து ஆணையம் ஒன்றை உருவாக்குவது பற்றி தீவிர ஆலோசனை நடந்து வருகிறது அங்கே. மேலும் விவரங்களுக்கு நாளைய செய்திகளைப் பார்க்கவும். அதுவும் எப்படி அணுஉலை நிறுவனங்களின் தாக்கத்திற்கு ஆளாகாத, முழு சுதந்திரம் கொண்ட நெறிப்படுத்தும் ஆணையம். ஒழுங்குக்குப் பெயர்போனவர்கள் ஜப்பானியர்கள் என்பது உலகுக்கே தெரியும். அவர்களே மறுபரிசீலனை செய்து பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வலிமையான நெறிப்படுத்து முகமை அமைக்கப் போகிறார்கள். நம் இந்தியாவில் குற்றவாளி, வழக்குரைஞர், சாட்சி, நீதிபதி எல்லாம் ஒருவரேதான் இங்கே ஜப்பானை உதாரணம் காட்ட எந்தத் தகுதியும் இல்லை.
2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?
இந்திய அணு உலைகளில் கதிரடி வீசும் சிறு விபத்துகள் நிகழ்வது உண்மைதான். உலகில் இயங்கும் 430 அணு உலைகளிலும் நேர்ந்துள்ளன. இவற்றால் பாதிப்பு நேருவதில்லை. இந்தச் சிறு தவறுகளால் அணு உலைகள் மூடப் படுவதில்லை. காரணங்கள் ஆய்வு செய்யப் பட்டு அதே தவறு மீளாமல் கண்காணிப்பர்.
2. இந்திய அணுஉலைகளில் விபத்தே ஏற்பட்டதில்லை என்பதிலிருந்து கீழே இறங்கி இப்போது விபத்துகள் ஏற்படத்தான் செய்கின்றன…. ஆனால் கதிரடியால் யாரும் உயிரிழந்ததில்லை என்று சாக்குப்போக்கு சொல்கிறீர்கள். ஜப்பானில்கூட உயிரிழந்தவர்கள் உண்மையில் எத்தனை பேர் என்ற முழுமையான தகவல் இதுவரை தெரியாது. இங்கே என்ன லட்சணத்தில் இருக்கும் என்பதை எவரும் ஊகித்துக்கொள்ளலாம்.
இதற்கு பதிலாக ஜெயபாரதன் எழுதியது விபத்தே ஏற்பட்டதில்லை என்று நான் கூறவில்லை.
3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?
டாகடர் அப்துல் கலாம் கூறிய 57 மரண நபர்கள் விபத்தின் போதும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகும் உயிரிழந்தவர். கார்பசாவ் கூறியது 25 வருட மொத்த எண்ணிக்கைமிருவர் கூற்றும் மெய்யே.
3. 57 மரண நபர்கள் விபத்தின் போதும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகும் உயிரிழந்தவர் என்று அப்துல் கலாம் கூறவில்லை. அப்துல் கலாம் சொன்னது இதுதான் – “செர்னோபில் அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் கேன்சரினால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 4000 பேர்கள் என்றும், நேரடியாக இறந்தவர்கள் 57 பேர்கள் என்றும் UNSCEAR என்ற அமைப்பு கணித்திருக்கிறது.
அணுஉலை கதிரியக்கத்தினால் ஏற்பட்ட புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அணுஉலை விபத்தின் உயிரிழப்புகளில் விஞ்ஞானிகள் சேர்க்க மாட்டார்கள் போலும்.
4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?
கதிரியக்கத் தீவிர அளவே புற்றுநோய் விளைவைத் தூண்டுவது. சிறியதளவு கதிரடியை உடல் தாங்கிக் கொள்ளும். குமரிக்கரை மணலில் தோரியம் உள்ள மானசைட் மணல் ஏராளமாய் இருக்கிறது. அங்கே வாழும் தமிழரும், கேரளா மக்களும் திடகாத்திரமாய் இருக்கிறார். தோரியம் எடுக்கும் ஆலையும் அங்கே உள்ளது. கல்பாக்கத்தின் அருகே வாழ்பவர் சிலர் கதிரடி பட்டுப் புற்று நோயால் மடிகிறார் என்பதை டாகடர் சாந்தா மறுத்துள்ளார்.
4. குமரிப் பகுதியில் தோரியம் இருப்பது பற்றிய விழிப்புணர்வே இப்போதுதான் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. புற்றுநோய் பற்றிய ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்றால்தான் அந்தப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிப்புகள் உள்ளன என்பது தெரிய வரும். சாந்தா அம்மையாரைப் பொறுத்தவரை, கதிரியக்கத்தால் புற்றுநோய் வராது என்று சொல்லும அளவுக்குப் போய்விட்டார்.

5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மை யானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?
அமெரிக்காவிலும் கனடாவிலும் ஏராளமான அணு உலைகள் ஆற்றின் கரையிலும், ஏரிக் கரையிலும் ஜனத்தொகை மிக்க நகரங்களின் அருகில்தான் உள்ளன. ஜனத்தொகை பெருகினால் அணு உலையை நகர்த்திச் செல்ல முடியாது.
5. அமெரிக்காவிலும் கனடாவிலும் கண்காணிப்பு அமைப்புகள் வலுவாக அமைக்கப்பட்டு தீவிரமாக இயங்குகின்றன. த்ரீமைல் தீவு விபத்துக்குப் பிறகு ஒரு லட்சம் கோடி டாலர் செல்வு செய்து கசிவை சுத்தம் செய்தார்கள். அதை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது.
6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
1974 அணு ஆயுத வெடிப்புக்குப் பிறகு மேலை நாடுகள் இந்தியாவுக்கு அணு உலைச் சாதனங்களை விற்க மறுத்து விட்டன. அதனால் இந்தியா தன் காலில் நிற்க வேண்டியதாயிற்று. 1974 இல் இந்தியாவிடம் இருந்தவை 4 அணுமின் உலைகள். 2012 இல் இப்போது உள்ளவை 20. 1988 இல் ரஷ்யா மட்டும் 1000 மெகாவாட் இரட்டை அணுமின் உலைகள் கட்ட கூடங்குளத்தில் முன்வந்தது. தாராப்பூரில் 500 மெகாவாட் இரட்டை கனநீர் அணு உலைகளை இந்தியா முழுக்க முழுக்க சுய முற்சியில் செய்து இயக்கியது ஒருமகத்தான சாதனை.
6. திரிக்கப்பட்ட தகவல். 1974இல் அணுவெடி சோதனைக்குப் பிறகு அணுஉலைகளை விற்க மறுத்து விட்டன என்றால் 1981, 84, 86, 91, 92, 93 என்று தொடர்ச்சியாக அணுஉலைகள் எப்படி உருவாயினசரி, தடை விலகியபிறகு உருவானவை என்றே வைத்துக்கொண்டாலும், மன்மோகன்-அலுவாலியா கூட்டணி அறிமுகம் செய்த உலகமயமாக்கம் தொடங்கி 20 ஆண்டுகளில் சுமார் 12 உலைகள் நிறுவப்பட்டு இருபது ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அணுஉலை மின்சாரத்தின் சராசரி உற்பத்தி 60 சதவிகிதம்தான். இத்தனை ஆண்டுகளாக அதிகரிக்காத உற்பத்தி விகிதம் இப்போது கூடங்குளம் வந்ததும் அதிகரித்து விடுமா என்னஒருவேளை கூடங்குளத்திலிருந்து வேறு அணு உலைகளுக்கு கடன் கொடுத்து அதன் கணக்கில் காட்டப்படுமோ என்னவோ
7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?
இது விபரம் தெரியாத மூடர் கூறும் தவறான கருத்து.
See this site for all the details [http://164.100.50.51/ (Nuclear Power Corporation of India Ltd)]
8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை.
7 – 8. இது விவரம் அறிந்த விஞ்ஞானி கூறும் தவறான தகவல். இணைத்துள்ள சுட்டியில் முழுதகவல் கிடைக்காது. சரியான தகவல் பெற
http://www.npcil.nic.in/main/ProjectOperationDisplay.aspx?ReactorID=75
கல்பாக்கத்தின் உற்பத்தித் திறனை எவரும் இங்கே பார்த்துக்கொள்ளலாம் சராசரி 50 சதவிகிதத்துக்கும் குறைவுதான். இப்போதுதான் 65ஐ எட்டியுள்ளதாக காட்டப்படுகிறது.


கூடங்குளம் என்ன லட்சணத்தில் இயங்கப்போகிறது என்பதை நாமும் பார்க்கத்தானே போகிறோம்நாராயணசாமிகளுக்குக் கவலை இல்லை. நாளுக்கு ஒரு அறிக்கை விட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம். உங்களைப் போன்றவர்களை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது.
9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?
தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை.
9. மழுப்பல். இதுகுறித்து ஆய்வு செய்யப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் தைரியம் இல்லாததால் வருகிற பதில்.

10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?
தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை.
10. இதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது பொய். கூடங்குளம் அணுஉலை பற்றிய விளக்க வரைபடம் ஒன்று அதன் வலைதளத்தில் இருக்கிறது. எதிர்பார்க்கப்படும் சுனாமியின் ஆபத்து என்று சுட்டிக்காட்டியிருப்பது வெறும் 5.4 மீட்டர்தான். அதற்காக 8 மீட்டர் உயர பாதுகாப்பு இருப்பதாகத்தான் அது காட்டுகிறது. உண்மையில் 2004 சுனாமியின் உயரம் என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?
ரஷ்யச் சாதனங்கள் உள்ள கூடங்குளம் அணுமின் உலைகள் இயங்கட்டும் முதலில். ஊழல் இல்லாத நிர்வாகம் எங்கே உள்ளது ?
11. ஆக, இங்கும் ஊழல் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இந்த ஊழல் நிர்வாகம்தான் பாதுகாப்பான அணுஉலைகளை அமைக்கப்போகிறது இல்லையா.!!

12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா
தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை. கற்பனைக்கு எல்லை இல்லை.
12. தவறான யூகம் அல்ல, நியாயமான அச்சம். ஜப்பானில்கூட யாரும் இப்படி ஒரு சுநாமி வரும் என்று கற்பனைகூட செய்திருக்கவில்லைதான். இயற்கைச் சீற்றங்கள் லாஜிக் பார்ப்பதில்லை.

13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
இந்தியா அரசு ஆயுள் காப்பீடுக்குத் தன் அணு உலைகளுக்குப் பொறுப்பேற்று உள்ளது. மற்ற நாடுகளுக்கு நாம் நியாயம் கூற முடியாது. தேவைக்கு அந்நிய அணு உலை வாங்குவது இந்தியா. அதன் நிபந்தனையை அந்நிய நாடு ஒப்புக் கொள்ளா விட்டால் என்ன ?
13. இது என்ன பதில் என்று புரியவில்லை. இந்திய அரசின் அணு உலைகளுக்கு இந்திய அரசே காப்பீடாஅதாவது, ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் இந்திய அரசுதான் இழப்பீடு தர வேண்டும் என்பதுதானே பொருள். அது வெளிநாட்டு இயந்திரத்தின் கோளாறாக இருந்தாலும் இந்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் இல்லையாஇதைத்தானே எல்லாரும் எதிர்க்கிறார்கள்.
14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்தியா தன் தேசீயப் பாதுகாப்புக்குத் தனிப்பட்ட விதியை வைத்துள்ளது அதை யார் குறை கூறினால் என்ன ? புகார் செய்தால் என்ன ? யாரும் மாற்ற முடியாது. கோபாலகிருஷ்ணன் கட்டுப்பாட்டை அமெரிக்க முறையில் மாற்ற விழைகிறார். இந்தியப் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவின் விதிமுறைகள் ஏற்றதல்ல.
14. இந்தியாவுக்கு அமெரிக்க வழிமுறைகள் ஏற்றதில்லையாஅது எப்படிஎன்னதான் வல்லாதிக்க நாடாக இருந்தாலும் நெறிப்படுத்து முறைகள் அங்கே சற்று வலுவாக உள்ளன என்பதாலாஅமெரிக்காவில் அதிகம் மூடி மறைக்க முடியாது, இந்தியாவில் எல்லாவற்றையும் மூடி மறைக்கலாம் என்பதாலாமற்றதெற்கெல்லாம் அமெரிக்கா வேண்டும். கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் என்றால் மட்டும் அமெரிக்கவழிமுறை இந்தியாவுக்கு ஒத்துவராது, இல்லையாநல்ல வாதம் ஐயா இது. அப்போதுதானே அணுஉலை நிறுவனங்கள் தம் இச்சைப்படி எல்லாவற்றையும் சாதித்துக்கொள்ள முடியும்

15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
அந்த அதிகாரிகளைக் கேளுங்கள்
15. ஏன் இப்படி ஆத்திரப்படுகிறீர்கள்பதில் இல்லை என்பதாலாநீங்கள் தூக்கிப்பிடித்த லாம்பார்க் குரலுடன் உங்கள் குரலும் ஒத்திசைகிறது என்பது பகிரங்கமாகி விட்டது என்பதாலா
குறிப்பு லாம்பார்க் என்பவர், சிஎப்எல் விளக்குகளால் எந்தப் பயனும் இல்லை என்றும் கட்டுரை எழுதியவர்

16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

கூடங்குளம் இப்போது இயங்கப் போகிறது. ஆனால் அணு விஞ்ஞானி உதயகுமாரை எந்த விஞ்ஞானியும் மாற்றிவிட முடியாது.
16. அதுதான் தெரிகிறதேநாங்கள் யாருக்கும் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள் அல்ல, நாங்கள்தான் எல்லாம் அறிந்தவர்கள்நாங்கள் போட்டதுதான் திட்டம், நாங்கள் வைத்ததுதான் சட்டம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எது லாபம் தருவதோ அதுதான் நாட்டுக்கு நல்லது. எவருடைய கேள்வியும் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது.

ஆணவத்தால் வரும் அறியாமை, அறியாமையால் வரும் ஆணவம் இரண்டுமே ஆபத்தானவை.
மனச்சாட்சியையும் கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன் என்று கூறுவதைத்தவிர வேறென்ன சொல்ல முடியும்….

இனி, என் முந்தைய பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்ப்போம்.

பின்னூட்டம் 1 -   27 மார்ச் 2012
30 மேற்பட்ட உலக நாடுகள் 430 மேற்பட்ட அணுமின் உலைகளைத் "தேவையான தீங்குகள்" என்று தெளிவாகத் தெரிந்துதான் இயக்கி வருகின்றன, பேரளவு மின்சக்தி கிடைப்பதால்.
அணுமின் உலைகள் இன்னும் 25 - 50 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், கதிர்வீச்சில்லாத அணுப்பிணைவு (Nuclear Fusion Power) நிலையம் வாணிப ரீதியாக வரும்வரை.
30க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தனியார்வசமே இருந்தாலும் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் கடுமையாக உள்ளன. ஜப்பானிலும் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பற்றி தீவிரமாக பரிசீலிக்கப்படு வருகிறது. இந்தியாவில் கட்டுப்பாடு முழுக்கவும் அணுசக்தித்துறையிடம் மட்டுமே உள்ளது.
அணுப்பிணைவு 2050வாக்கில் வரலாம். நம் அடுத்த தலைமுறையினர் அதை முடிவுசெய்து கொள்ளட்டும். ஆபத்தான இப்போதைய தொழில்நுட்பத்தை நம் எதிர்கால சந்ததிகளின்மீது சுமத்த நமக்கு உரிமை இல்லை என்பதுதான் இன்றைய வாதம்.

பின்னூட்டம் 2 - 27 மார்ச் 2012 
மதுவும், சிகரெட்டும் கோடான கோடி ரூபாய் வருமானம் தருவதால் அவற்றைத் தமிழக அரசாங்கம் நிறுத்துமா வென்று கேளுங்கள்.
பாமரத்தனமான கேள்வியாகத் தோன்றவில்லையா. சிகரெட்டும் மதுவும் அதை நுகர்வோர்கள் தீமை என்று அறிந்தே பயன்படுத்துவது. அது தனிநபர் விவகாரம், அதிகபட்சம் குடும்பத்தை மட்டும் பாதிக்கக்கூடியது. அணுஉலையை இவற்றுடன் ஒப்பிடுபவர் பொறியிலாளராம். இதற்கு பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார் அருண் என்பவர், நானும் கேட்டேன், அதற்கும் அவருடைய வலைதளத்தில் பதில் இல்லை.

பின்னூட்டம் 3 - 29 மார்ச் 2012 
ஷாஜஹான் இந்திய அணுசக்தித் துறை பற்றி அரைகுறை விஞ்ஞான அறிவோடு மூடத்தனமாக என்னைப் பற்றி எழுதி இருக்கிறார். டாக்டர் கோபாலகிருஷ்ணன் அமெரிக்க முறையில இந்தியப் பாதுகாப்பு விதிகள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அமெரிக்காவில் இந்தியா போலின்றி அணுவியல் துறைகள் தனியார் வசம் உள்ளன. ஆதலால் அந்த விதிமுறைகள் இந்தியாவுக்கு ஏற்றதல்ல.
எனக்கு விஞ்ஞான அறிவு கிடையாது என்பதில் எனக்கே ஐயமில்லை. பகுத்தறிவுதான் என்னைக் கேள்வி கேட்க வைக்கிறது. விஞ்ஞான அறிவுள்ளவர்கள் எல்லாம் பகுத்தறிவைக் கழட்டி வைத்துவிட்டு ஆட்சியாளர் அறிவிப்புகளுக்கு ஆமாம்சாமி போட்டால் அது என்ன அறிவு...
அதுசரி, கோபாலகிருஷ்ணன் அதை மட்டும்தான் சொன்னாரா... அப்பணசாமியின் வலைப்பூவில் படிக்கலாமே... - அப்பணசாமி

பின்னூட்டம் 4 -  29 மார்ச் 2012
கூடங்குளம் போன்ற ஓர் அணுமின் உலை 1000 மெகாவாட் மின்சார ஆற்றல் 30 ஆண்டுகள் மின்கடத்தில் அனுப்பி வருவதால், மின்சாரமோடு 100 கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி அது நீடித்து ஓடச் சாதனங்கள் தயார் செய்வதுடன், ஆயிரக்கணக்கான பேருக்கு ஊழியமும் ஊதியமும், அரசாங்கத்துக்கு வருமானம் தருகிறது.
In India Atomic Power Industries & Space Exploration are two major components of its sustaining Infrastructures
ஷாஜஹான் கண்களுக்கு கிட்டப் பார்வை தவிர தூரப் பார்வை இல்லை.
அதீத உணர்ச்சிவசப்பட்டதால் என்ன எழுத வந்தாரோ அதை எழுத இயலவில்லை போலத் தெரிகிறது. அணுஉலைகளும் வானியல் ஆய்வும் எத்தனை கோடிப்பேருக்கு அல்லது எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பளித்தன என்று புள்ளிவிவரத்தோடு குறிப்பிட வேண்டும். வெற்று வாதத்தை முனவைத்து நேரத்தை வீணடிக்கக்கூடாது. இந்திய அணுசக்தித் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைத்த வேலைவாய்ப்பு விகிதம் என்ன என்பதை ஆதாரத்தோடு முன்வைப்பார் என்று நாம் எதிர்பார்க்கவே தேவையில்லை. ஆதாரத்தோடு முன்வைக்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதே இல்லை. 
எனக்கு தூரப்பார்வை இல்லை என்று எழுதியிருக்கிறார் பொறியாளர். தூரப்பார்வை என்றால் தொலைவில் உள்ளது தெரியாது என்று பொருள். ஆக, இவர் எனக்கு தொலைநோக்கு இருக்கிறது என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி சொல்லலாமா...

பின்னூட்டம் 5 - 29 மார்ச் 2012
நான் யாரென்று "புதியவன்" தெரிந்து கொள்ள வேண்டும். 
ஷாஜஹான் உண்மையைத் திரித்துக் காட்டி என்னைத் தாழ்த்தித் தன்னை உயர்த்தி உள்ளார்.
அவர் வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கிறார் குறை கூறுவதைத் தவிர?
இது என்ன மிரட்டலா... நீங்கள் யார் என்பதுதான் உங்கள் தளத்திலேயே இருக்கிறதே... பாரதப்பற்று பிடித்தாட்ட, பாரதத்துக்கு 18 அணு உலைத் தொழில்நுட்பத்தை விற்பனை செய்திருக்கும் கனடாவின் காண்டுவுக்குச் சேவை புரிந்தவர் என்று நீங்களே எழுதியிருக்கிறீர்களே இதற்கும் மேல் என்ன தெரிந்துகொள்ள வேண்டும். 
குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் நக்கீரன் வரிசையில் என்னையும் சேர்த்து விட்டார் போலத் தெரிகிறது. நல்லது. அத்துடன் நான் என்னை உயர்த்திக்கொள்ள என்ன எழுதினேன் என்பதையும் சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும். நான் எதையும் சாதித்ததில்லை - குறைந்தபட்சம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காவடி தூக்கியதில்லை, தூக்குவதில்லை, தூக்கப்போவதும் இல்லை. 

அஞ்சல் 1 - 27 மார்ச் 2012
இந்தியக் குடியரசைக் கிண்டல் பண்ணும் திராவிடத் தமிழகத் தேசீயவாதிகளுக்கு இது மூன்றாம் பாடம் :
1.  பெரியாரின் திராவிட நாடுப் பிரிவினைப் போராட்டம்
2.  வடக்கில் ஆயுத மனிதன் பிந்திரன்வாலாவின் காலிஸ்தான் பிரிவினைப் போராட்டம்.
3.  உதயக்குமாரின் கூடங்குள அணுமின் உலை நிறுத்தப் போராட்டம்.
பத்தாயிரம் மீனவக் கூட்டம் நூறு கோடி மத்திய அரசின் கையை முறிக்க முயன்றது.
விவாதிக்கப்படும் விஷயத்திற்குத் தொடர்பில்லாமல் பிந்தரன்வாலே, திராவிட நாடு என்றெல்லாம் உளறுபவரை என்னவென்று சொல்வீர்கள்...

அஞ்சல் 2 - 27 மார்ச் 2012
செர்நோபில் விபத்து தவிர உலக அணுமின் உலைகளில இதுவரை ஒருவர் கூட மரிக்க வில்லை.  புகுஷிமா  அணு உலை மேற்தள வெடிப்பில் ஒருவர் கூட மடியவில்லை.
மற்றொரு அபார உண்மை. இத்தகைய உண்மைகளை இவர் முன்வைக்கிறார் என்பதால்தான் நான் முந்தைய பதிவுக்கு தலைப்பு வைத்தேன் - உண்மை எனப்படுவது யாதெனில்....

பின்னுரை
நேற்று இரவு வழக்கம்போல என் நண்பன் அலைபேசியில் அழைத்தான். மின்வெட்டால் ஆலை நின்றிருக்கிறது, இரண்டுமணிநேரம் மின்சாரம் வரும், இரண்டு மணிநேரம் வெட்டப்படும். இதுதான் அட்டவணை. கூடங்குளம் வந்தால் ஓரளவக்கு நிலைமை சரியாகும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றான். 
அப்பனே, 1000 மெகாவாட்டில் உத்தேசமாக 500-600 மெவா உற்பத்தி ஆனாலும் அதில் பாதி 300 மெவா இப்போது தமிழகத்துக்குக் கிடைத்தாலும் அதில் நிச்சயம் நம் ஊருக்கு பத்து நிமிடத்துக்கூட பயன்தரப் போவதில்லை“” என்றேன்.
என்னடா நீ இப்படிப்பேசறே... கரண்டு கட்டு தீரப்போற நேரத்துல வீணா ஜெனரேட்டரை வாங்கிப்போட்டுட்டோமே, அதுக்கும் வேற இந்தம்மா கூடுதல் டேக்ஸ் போட்டுட்டாங்களே அப்படீன்னு எங்க மில் ஓனரு பொலம்பீட்டிருக்காரு“” என்றான்.
கூடங்குளத்தால உங்க ஊருக்கு கரண்டு வரப்போறதில்லே, ஜெனரேட்டர் வீணாச்சேன்னு கவலையே பட வேணாம்னு சொல்லு என்றேன்.

கூடங்குள எதிர்ப்பாளர்களுக்கு தோல்வி என்று பல ஊடகங்கள் மகிழ்ந்து கூத்தாடுகின்றன. அகிம்சைப்போராளிகள் மீது வீசப்படுகிற அவதூறுகள் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களுடைய இலக்கில் வெற்றி பெறவில்லை என்றால் அதற்குக் காரணம் நானும் நீங்களுமான நடுத்தர வர்க்கம்தான். கூடங்குளத்தில் மேலும் உலைகள் இனி அமைக்கப்படாது என்பது என் நம்பிக்கை. ஆனால் வேறுபகுதிகளில் வரவிருக்கின்றன மேலும் சில அணுஉலைகள். எந்த மாநிலமாக இருந்தாலும்சரி, அரசுகளின் மெகா திட்டங்களால் இடப்பெயர்வு முதல் அனைத்தையும் இழக்கப்போகிறவர்கள் வறிய மக்கள் மட்டுமே.

ஜெயலலிதா அறிவித்தது போல கூடங்குளம் இன்னும் இரண்டு மாதங்களில் துவங்கி விடலாம் - அல்லது ஆறு மாதங்களில். ஆனால் கூடங்குளம் எழுப்பிய கேள்விகள் இந்தியாவெங்கும் எதிரொலிக்கின்றன. அணுசக்திக்கு எதிரான இந்தக் குரல் இன்னும் வலுக்கப்போகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. மேதா பாட்கர் போராட்டத்திற்குப் பிறகு, வேறொரு அமைப்பின் சார்பில் தில்லியில் ஏழுநாள் தொடர் உண்ணாவிரதம் நடைபெற்றது. தமிழக மக்களை ஏமாற்றி வெற்றிகொண்டதுபோல மராட்டிய, ராஜஸ்தானிய, ஹரியாணா மக்களையும் எதிர்காலத்தில் இப்படி ஏமாற்ற முடியாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் கூடங்குளத்தை ஆதரிக்கின்றன என்பது தெரிந்ததே. மார்க்சிஸ்ட் கட்சி சார்பான ஒரு தளத்தில் இதுகுறித்த நீளமான ஒரு கட்டுரையும் படித்தேன். ஆனால் அதே மார்க்சிஸ்ட் கட்சி ஹரியாணா மாநிலத்தில் அணு உலை அமைக்கப்படுவதை எதிர்த்துக் குரல்கொடுக்கிறது - மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்ப்பு


இனி நிறுவப்பட இருப்பதை எதிர்த்தோம். கூடங்குளத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டு விட்டதால் ஆதரித்தோம் என்று சமாதானம் கூறப்படுமோ என்னவோ தெரியவில்லை. இதென்ன இரட்டை வேடம் என்று கேட்பவர்களும் கேட்கலாம். இப்போதேனும் இடதுசாரிகளுக்கு விழிப்பு வந்ததே என்று மகிழ்பவர்களும் மகிழலாம். நான் இரண்டாவது வகையில் சேரலாம் என்றிருக்கிறேன்.

படித்தவர் முன்னே இரண்டு வழிகள் இருக்கின்றன தான், தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று தன்னல நோக்குடன் எதையும் ஆதரிப்பது / எதிர்ப்பது. அல்லது, நுனிப்புல் மேய்ந்து, ஊடகங்கள் பரப்பும் கருத்துகளையே தம் கருத்துகளாகக் கொள்ளாமல், தன்னலத்தோடு பிறர் நலத்தையும் பிரச்சினைகளின் மறுபக்க உண்மைகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவது.

இணையம் இன்று வலுவான ஊடகமாக வளர்ந்து வருகிறது. ஆட்சியாளர்களின், அதிகாரவர்க்கத்தின் பொய்ப்பிரச்சாரங்களை லாபம் கருதும் மரபுவழி ஊடகங்கள் அப்படியே எதிரொலிக்கின்றன. இணையம் ஒன்றுதான் சுதந்திரமான கருத்துகளுக்கு இடம்தரக்கூடிய அரங்கமாக இருக்கிறது. எனவே, இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிரான கருத்துகளை மற்றவர்களுக்கும் எட்டச்செய்யும் விதத்தில் இணையப் பயனாளிகளான படித்தவர்கள் செயல்படலாம். நடுத்தர வர்க்கத்தில் பகுத்தாய்ந்து முடிவு செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிப்பது அவசியத் தேவையாக இருக்கிறது. 

படித்தவர் சூதுகளை படித்தவர்களே வெல்லுவோம்.

1 comment:

  1. If you ask any person from kanyakumari district to tell the number of deaths occurred to their relative and friends due to cancer, they can tell a minimum of 10 deaths because of cancer. It is due to natural radiation prevailing there. But Indian nuclear energy department is spreading a wrong information that there is no proof of abnormal disease due to radiation.

    ReplyDelete