Sunday, 22 July 2012

எந்தன் மனநிலையே தங்கமே தங்கம்

ஒலிம்பிக் துவங்க இருக்கிறது. அதன்பிறகு பதினைந்து நாட்களுக்கு - ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை, உலகெங்கும் ஒலிம்பிக்ஸ் பற்றிய பேச்சாகவே இருக்கும். விளையாட்டு ரசிகர்களுக்கு ஒலிம்பிக்ஸே மூச்சாகவும் இருக்கும்.

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களைத்தான் உலகமே போற்றப் போகிறது. இது சரிதானா? ஒலிம்பிக் நோக்கத்துக்கு உகந்ததா? வெற்றி மட்டும்தான் விளையாட்டின் இலக்கா? விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒலிம்பிக்கின் நோக்கம் அல்லவா?!

இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஒலிம்பிக்கை ஒட்டி இடம்பெற இருக்கிறது ஒரு விளம்பரம். தோற்பவர்களைப் போற்ற இருக்கும் இந்த விளம்பரங்களை வடிவமைக்க இருக்கிறார் புதுதில்லிக் கலைஞர் சாரநாத் பானர்ஜி. ஒலிம்பிக்கை ஒட்டி பல அமைப்புகள் நடத்தும் பல்வேறு விளம்பர வகைகளை வடிவைக்கத் தேர்வு செய்யப்பட்ட ஏழு பேரில் இவரும் ஒருவர்.

ஒலிம்பிக்கை ஒட்டி லண்டனில் பலவிதமான கலை-இலக்கிய-பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை உருவாக்கும் வகையில் இலவச நூலக உறுப்பினர் திட்டம் ஒன்றும்கூட ஒலிம்பிக்கை ஒட்டி நடைபெற்று வருகிறது. அதே போல, ஒலிம்பிக் நடைபெறும் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் வாயிலாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் விளையாட்டில் தோல்வி காண்பது இழுக்கல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில், மயிரிழையில் பதக்கத்தைத் தவற விட்டவர்கள், தோற்றவர்கள் பற்றிய படங்களையும் விளக்கங்களையும் உருவாக்கி இருக்கிறார் சாரநாத். சில விளம்பரப்பலகைப் படங்கள் கீழே - 

 

 
மேலும் விவரம் அறிய விரும்புவோருக்கு - http://friezeprojectseast.org/sarnath-banerjee/


சரி, பங்கும் பெற்று வெற்றியும் பெறும் சாத்தியம் உள்ளவர்கள் என இந்தியா எதிர்பார்ப்பது யாரை? 13 பிரிவுகளில் 81 விளையாட்டு வீரர்கள் இந்தியாவிலிருந்து பங்கேற்கிறார்கள். ஹாக்கியில் 16 பேர், தடகளப் பிரிவில் 14 பேர், துப்பாக்கி சுடும் பிரிவில் 11 பேர், குத்துச் சண்டையில் எட்டுபேரும் இதில் அடங்குவர்.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா 10 முதல் 12 பதக்கங்கள் வெல்லும் என எதிர்பார்ப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சகச் செயலர் கூறியிருக்கிறார். 1900இல் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் துவங்கிய இந்தியா இதுவரை 20 பதக்கங்களைத்தான் வென்றிருக்கிறது. அதிலும் எட்டு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் உள்பட பதினொரு பதக்கங்கள் ஹாக்கியில் கிடைத்தவை. அதே இந்திய ஹாக்கி, கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதிகூடப் பெறவில்லை. பெய்ஜிங்கில் அபினவ் பிந்த்ரா வென்ற தங்கம் ஒன்றுதான் இந்தியாவுக்குக் கிடைத்த ஒரே தனிநபர் தங்கப் பதக்கம். பிறகு எதனால் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு? எல்லாம் காமன்வெல்த் அளித்த ஊக்கம்தான். அத்துடன், இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள்தான் இதுவரையிலான வரலாற்றில் தகுதியின் அடிப்படையில் முன்னிலை வகிப்பவர்கள் என்பதும் ஒரு காரணம். இருக்கட்டும், எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் எல்லாருக்குமே மகிழ்ச்சிதான். இந்தியா யார் யாரை நம்பியிருக்கிறது... 

1948 இந்திய ஹாக்கி அணி
1948இல் லண்டனில் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நிகழ்ந்தபோது, ஹாக்கியில் பிரிட்டிஷ் மண்ணில் பிரிட்டிஷ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது இந்திய அணி. அதுவும், விடுதலைக்குப் பிறகு, தேசப் பிரிவினையின் வேதனைகளுக்குப் பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம் என்பதால் ஹாக்கி வெற்றிகளிலேயே அபார வெற்றியாகக் கொண்டாடப்பட்டது அதுதான். லண்டன்வாழ் இந்தியர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று அந்தக்கால செய்திகள் காட்டுகின்றன. இப்போது லண்டனில் ஏழு லட்சம் இந்தியர்கள். ஹாக்கியில் இந்திய அணியை உற்சாகப்படுத்த ஆட்களுக்குக் குறைவே இருக்காது. ஆனால் மீண்டும் ஒரு 1948 நிகழுமா? பங்கேற்கிற அணிகளில் இந்திய அணி நிச்சயமாகச் சிறந்த அணிதான். ஆனால் சிறந்தவர்கள் எல்லாரும் பதக்கம் பெற்றுவிட முடியுமா...! ஆவலுடன் காத்திருக்கிறது இந்தியா.

ஹாக்கியை விட்டால், இந்தியாவுக்கு முதல் தனிநபர் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்த அபினவ் பிந்த்ரா. அதற்குப் பிறகு 2010இல் காமன்வெல்த்தில் இரட்டையர் பிரிவில் ககன் நாரங்-உடன் தங்கம் வென்றார். ஆனால் தனிநபர் பிரிவில் வெள்ளியை வென்றார். கடந்த ஒலிம்பிக்கில் சாதனைப் புள்ளிகள் பெற்ற அபினவ் அதே திறத்துடன் இருக்கிறாரா... சந்தேகம்தான்.

ககன் நாரங்க், காமன்வெல்த்தில் 10 மீட்டர் ரைபிள் தனிநபர், இரட்டையர் என இரண்டிலும் தங்கம் வென்றிருக்கிறார். 50 மீட்டர் ரைபிளில் தனிநபர் பிரிவில் தங்கமும், இரட்டையர் பிரிவில் இம்ரான் ஹசனுடன் சேர்ந்து தங்கமும் வென்றிருக்கிறார். 2010 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், தனியாகவும் அபினவ் பிந்த்ராவுடன் சேர்ந்தும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் பெற்றிருக்கிறார். காமன்வெல்த் விளையாட்டில் புள்ளிகளில் சாதனை புரிந்தவர் என்பதால் இவரிடமிருந்து எதிர்பார்ப்பு அதிகம்.

துப்பாக்கிப் பிரிவுகளில் மேலும் இருவர் - மானவ்ஜித் சந்து, ரஞ்சன் சோதி. மானவ்ஜித் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பிறகு மெக்சிகோவில் உலகக் கோப்பைப் போட்டியிலும் தங்கம் வென்றார். காமன்வெல்த்தில் இரண்டு வெள்ளிகள் வென்ற ரஞ்சன் சோதி, 2010 ஆசிய விளையாட்டுப் போட்டி, 2010 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை ஆகியவற்றில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என ஏதாவது ஒரு பதக்கத்தை வென்று வந்தார். டபுள் டிராப் பிரிவில் இந்த இருவர்மீதும் கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம்.

கடந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்றதும் இந்தியாவின் எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டன. அதற்கு நியாயமான காரணமும் உண்டு. குத்துச்சண்டையில் ஆடவரில் ஏழு பிரிவுகளில் ஏழு பேர் பங்கேற்கிறார்கள். ஒவ்வொருவருமே அண்மையில் பல சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வென்று வந்திருப்பவர்கள். குத்துச் சண்டையில் விஜேந்தர் சிங், விகாஸ் கிருஷ்ணன், மனோஜ் குமார், ஷிவ் தாப்பா ஆகியோர்மீதான எதிர்பார்ப்பு அதிகம்.

இடது கையிலே ஒண்ணே ஒண்ணுதான் இருக்கும்மா மேரிக் கண்ணு... இன்னொண்ணு சேக்க வேணாமா ?
மகளிர் குத்துச் சண்டைப் பிரிவில் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் மேரி கோம். 48 கிலோ பிரிவில் ஐந்து முறை உலக சாம்பியன். இந்த ஒலிம்பிக்கில் இவருக்கு நிகர் எவருமே இல்லை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இவரிடம் உண்டு.


திரும்பி வர்றப்பவும் இதே மாதிரி வரவேற்பு கிடைக்கணும்...
மல்யுத்தத்தில் சுஷில் குமார் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிறகு, இதிலும் ஆர்வம் கூடிவிட்டது. ஒலிம்பிக் பதக்கத்துக்குப் பிறகு தான் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் தங்கம் வென்று வந்திருக்கிறார் சுஷில் குமார். இந்த ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என்று நம்பிக்கை.

இந்திய வில்வித்தை வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதி பெற்றது 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில்தான். இப்போது இரண்டாவது முறையாக நான்கு பேர் பங்கேற்கிறார்கள். இவர்களில் தீபிகா குமாரி மீது நம்பிக்கை வைக்கலாம். மகளிர் அணியின்மீதும் கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம்.

பேட்மிண்டனில் சைநா நேவால் மீது அபார நம்பிக்கை நமக்கு. கடந்த மூன்று மாதங்களுக்குள் ஸ்விஸ் ஓப்பன் கிராண்ட் பிரி, தாய்லாந்து ஓப்பன் கிராண்ட் பிரி, இந்தோனேசியா ஓப்பன் சூப்பர் சீரிஸ் ஆகிய மூன்றிலும் தங்கம் வென்றதால் இவர்மீது நம்பிக்கை வருவது நியாயம்தான். இரட்டையர் பிரிவுகளில் ஜ்வாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா, டிஜு ஆகியோரும் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள். எனவே பேட்மிண்டனில் குறைந்தது ஒரு பதக்கம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

டென்னிசில் சோமதேவ் தேவ்வர்மனுக்கு பயிற்சி போதாது என்று டென்னிஸ் குழுவின் தலைவரே கூறி விட்டார். பயஸ்-பூபதி குழப்படி வரலாறு காணாதது. இப்போது, இரட்டையர் பிரிவில் பூபதி-போபண்ணா ஜோடி, பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ்-சானியா மிர்சா ஜோடி. இவற்றில் பயஸ்-விஷ்ணுவர்த்தன் ஜோடிக்கு வாய்ப்பு இருப்பதாக யாருக்கும் நம்பிக்கை இல்லை. பூபதி-போபண்ணா ஜோடி மீது கொஞ்சம் நம்பிக்கை. பயஸ்-சானியா மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை.

தடகளப் போட்டிகளில் பலர் இருக்கிறார்கள். டின்டு லுகா, கிருஷ்ணா பூனியா, மயூகா ஜானி, சோனியா ச்சானு - இவர்களில் சோனியா ச்சானு மீது கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம். மற்றவர்களில் எவர் பதக்கம் கொண்டு வந்தாலும் மகிழ்ச்சிதான். முதல் எட்டு இடங்களில் ஓரிடம் பிடிப்பதே பெரிய விஷயம் அல்லவா...

ஜுடோ பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்கும் ஒரே பெண் கரிமா சவுத்ரி. மீரட்டைச் சேர்ந்த இவர் ஒலிம்பிக் தகுதி பெறுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அண்மையில் தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டியில் ஏழாவது இடம் பெற்றதால் ஒலிம்பிக் தகுதி பெற்றிருக்கிறார். உலகத் தர வரிசையில் 88ஆவது இடத்தில் இருக்கும் இவரின் தன்னம்பிக்கை அபாரமானது. "உலகக் கோப்பைப் போட்டியில் பெலாரஸ், ஆஸ்திரேலியா வீராங்கனைகளை நான் தோற்கடித்தேன். இவர்களும்தான் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறார்கள். 63 கிலோ பிரிவில் பங்கேற்கிற எல்லாருமே கிட்டத்தட்ட என் தரத்தில் இருப்பவர்கள்தான். எனக்கு பயமோ அதீத பதற்றமோ இல்லை. எதிராளிகளின் வீடியோக்களைப் பார்த்து அவர்களுடைய தந்திரங்களைப் புரிந்து கொண்டிருக்கிறேன். எடுத்தவுடனேயே தாக்குதலில் இறங்காமல் தாக்கும் தருணத்திற்குக் காத்திருக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். பதக்கத்துடன் திரும்புவேன்" என்று அபார நம்பிக்கையுடன் இருக்கிறார் கரிமா.

கடைசியாக ஒரு சிறப்புச் செய்தி. ஒலிம்பிக் கலைநிகழ்ச்சிகளுக்கு ஆசியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு இசைக்குழுக்களில் ஒன்று தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளதாம். சென்னையைச் சேர்ந்த ஸ்டக்காடோ என்னும் இசைக்குழுவின் இளைஞர்கள், ஜூலை 30, ஆகஸ்ட் 2 ஆகிய இரண்டு நாட்கள் ஒலிம்பிக் பூங்காவில் இசைக்க இருக்கிறார்கள் என்பதில் தமிழர்கள் பெருமைப்படலாம். ஆஹா... இசைக்கு மொழி ஏது... இசை எல்லை கடந்தது அல்லவா என்று எண்ணுபவர்கள் என்னைத் திட்டலாம்.

இறுதியாக, லண்டன் செல்லும்முன் சானியா கூறியதை நினைவுகூரலாம்.
"தங்கம், தங்கம் என்றே பேசிக்கொண்டிருக்கக் கூடாது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் எந்தவொரு விளையாட்டு வீரனுக்கும் இறுதி இலக்கு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பங்கேற்க இருக்கும் 10500 பேருக்கும் இதுதான் இலக்கு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் இல்லையா...? ரோஜர் பெடரர் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம்கூட வென்றதில்லை. அதற்காக அவர் குறைந்து விடுவாரா? பதக்கத்துக்கான ஒவ்வொருவரின் முயற்சியையும் வேறுபாடின்றி பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் கருத்து."

அருமையான வார்த்தைகள். விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்போம். வெற்றியோ தோல்வியோ ஒலிம்பிக்கை ரசிப்போம். 

பி.கு. என்ன இது... தலைப்புக்கும் கடைசிப் பத்திக்கும் சம்பந்தமே இல்லேயேன்னு உங்க மனசுக்குள்ள ஓடறது எனக்குக் கேக்குது. என்ன செய்ய... என்னதான் நம்பிக்கை இருந்தாலும், என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்... அதனால கூபர்டின் சொன்னதையும் மனசுல வச்சுக்கணும் - வெற்றி காண்பதல்ல, பங்கேற்பே முக்கியம்.


9 comments:

  1. மனதிற்கும் மூளைக்கும் எப்போதுமே போட்டி இருக்கும். உங்கள் பதிவைப் படித்தவுடன் பங்கேற்பது தான் முக்கியம் என்று மூளைக் கூறினாலும். தங்கப் பட்டியலில் முன்னேற்றம் இருந்தால் நல்லது என்று மனம் சொல்கிறது.

    குத்துச் சண்டை, மல்யுத்தம், வில்லெறி வீரர்கள், பேட்மிண்டன் போன்றவர்கள் நம்பிக்கைத் தருகின்றனர். துப்பாக்கி சுடுதலில் ககன் மட்டும் தான் நம்பிக்கைத் தருகிறார் (ராத்தோர் தகுதி கூட பெற்வில்லை என்பது பின்னடைவு; பிந்த்ரா-வோ மதில் மேல் பூனை). டென்னிஸ் off-field குழப்பங்கள் வீரர்களின் திறனை பாதிக்காமல் இருக்கவேண்டும்.

    நல்ல அலசல்.

    பார்ப்போம்...வெற்றி மூளைக்கா அல்லது மனதிற்கா என்று.

    ReplyDelete
  2. நன்றி ஸ்ரீநிவாசன். வானொலியில் நிகழ்ச்சியை வழங்குவதற்காக கடந்த 20 ஆண்டுகளாக விளையாட்டு உலகை அவதானித்து வருபவன் என்ற முறையில் எனக்குப் புரிந்தது - ஒலிம்பிக்கில் எப்போதும் எதுவும் நிகழலாம். பெல்ப்ஸ் போன்றவர்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், யாருமே எதிர்பாராத ஒருவர் திடீரென சாதனை புரிவதையும் பார்க்கலாம். டென்னிஸ் குழப்படி இதுவரையிலான குழப்படிகளின் உச்சம். அதனால்தான் எனக்கு டென்னிஸ் பதக்கத்தில் நம்பிக்கையே இல்லை.

    ReplyDelete
  3. //விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்போம். வெற்றியோ தோல்வியோ ஒலிம்பிக்கை ரசிப்போம். //

    நல்ல வார்த்தைகள்....

    ஆனாலும் மனம் ஏனோ பதக்கத்திற்காக ஏங்குகிறதே... பார்க்கலாம் எத்தனை கிடைக்கிறதென.

    ReplyDelete
  4. mun eppozhudum illaadha alavirkku indha murai namadhu vilaiyaattu veerargalin thaguthi matrum thiramai meloangi irukkiradhu...... nambikkaiyudan kaaththiruppoam.

    Amirthalingam

    ReplyDelete
  5. Sir Yellam sari but yen pillai nalla patikkiran yendru sollum ammavin santhoshathirkkum, yen pillai First rank yendru sollum ammavin santhoshathirkkum different irukku illingala? anyway விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்போம். வெற்றியோ தோல்வியோ ஒலிம்பிக்கை ரசிப்போம். //

    ReplyDelete
  6. நல்ல கேள்வி குமரன். பிள்ளை முதல் ராங்க் வாங்கினால் சந்தோஷம்தான். ஆனால் வகுப்பில் உள்ள அத்தனை பிள்ளைகளும் முதல் ராங்க் வாங்க முடியாது என்பதுதான் எதார்த்தம் இல்லையா...

    ReplyDelete
  7. ஒலிம்பிக்கில் இந்தியா பற்றிய அலசல் மிகவும் ஆழமாகவும் நடுநிலையோடும் செய்திருக்கிறீர்கள்.
    //விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்போம். வெற்றியோ தோல்வியோ ஒலிம்பிக்கை ரசிப்போம். // மிகவும் யதார்த்தமான வார்த்தைகள்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. அருண்27 July 2012 at 13:46

    ஒலிம்பிக்கில் பங்கேற்ப்பு பற்றிய ஒரு சுவாரசியமான பதிவு
    http://amuttu.net/viewArticle/getArticle/285

    ReplyDelete
  9. நன்றி அருண். முத்துலிங்கத்துக்கே உருய நடையில் அருமையான பதிவு.

    ReplyDelete