Wednesday, 1 August 2012

கதம்பம் 1

அவ்வப்போது தோன்றுகிற விஷயங்களிலிருந்து, அடடா... பகிர்ந்து கொண்டிருக்கலாமே என்று எண்ணச்செய்கிற விஷயங்களை கதம்பம் என்ற வரிசையில் வெளியிடலாம் என்று யோசனை. இது முதல் கதம்பம்.
*

கூடங்குளத்தில் விபத்து நிகழ்ந்தால் யார் நஷ்டஈடு தருவார்கள்? - பிரதமர் கேள்வி
இந்து நாளிதழின் தலைப்புச் செய்தி 
என்ன ...! மன்மோகன் வாய் திறந்துவிட்டாரா என்று யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். இதெல்லாம் சும்மானாச்சிக்கி.
அதான் சின்ஹா சொல்லீட்டாரில்லே - இதெல்லாம் ருட்டீன் மேட்டருன்னு!
*
மக்களைத் துன்பப் படுத்துவதற்கென்றே அரசு எத்தனையோ இலாக்காக்களை நிறுவியிருக்கிறது. அதில் இந்த மின்சார இலாக்காவும் ஒன்று. மின் உற்பத்திக்கு எத்தனையோ வழிகள் இருக்கும்போது தண்ணீரை மட்டும் நம்பி மின்உற்பத்தி தொடங்கியது முதல் தப்பு. இதைத் தீர்க்கதரிசனம் இல்லாத பார்வை என்று சொல்லலாம். நம்முடைய நாட்டில் வெயில் என்னபோடு போடுகிறது! கொல்லும் இந்த வெயிலை நம்ம விஞ்ஞானிகள் எப்படிப் பயன்படுத்தாமல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியம்தான்....
வெயிலைப் போலவே, இங்கே காற்று - முக்கியமாக ஆறு மாதங்கள் அடித்து முழக்கும் பேய்க்காற்று - ஓயாமல் நம்மிடம் வந்து வந்து புகார் செய்யும் கடல் அலைகள்.
இவை அத்தனையிலிருந்தும் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்தால் மின் தட்டுப்பாடே இருக்காதே என்று எனக்குத் தோன்றும்....
இங்கே, எங்கள் ஊரில் கரண்ட் திகழும் அளகைச் சொல்லி முடியாது. பிரயோகம் ஒன்று சொல்வார்கள் - 'நீயெல்லாம் உசுரை வெச்சுக்கிட்டு இருக்கணுமாக்கும்?' என்று. இந்த மேற்படிப் பிரயோகத்தை அப்படியே நமது தமிழ்நாடு மின்வாரியத்துக்குச் சமர்ப்பணம் செய்யலாம்....
ஒன்பது மணிக்குக் கிராமம் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும். அதோடு, இந்த அளகில் வரும் கரண்ட்டும் எந்தச் சமயத்தில் எந்த விநாடியில் கோவிந்தா ஆகும் என்று சொல்ல முடியாது. வட்டிலில் சாதத்தைப் போட்டு ஒரு உருண்டை பிசைந்து வாயருகே கொண்டு போகும்போது... கையில் தாலியை எடுத்து மணமகளின் கழுத்தில் கட்டப்போகும்போது... பிள்ளைப்பேறு நடந்து கொண்டிருக்கும்போது... விளக்கு எரிய வேண்டிய வெள்ளிக்கிழமை அன்று...
அடடா, அடடா...! இந்தத் தமிழ்நாட்டு மின்வாரியத்துக்கு இப்படிப்பட்ட காரியத்துக்காகவே கின்னஸ் புத்தகத்தில் நிரந்தரமாக ஒரு இடம் கிடைக்கிறது எனகிற விஷயம் அவர்களுக்கே தெரியுமோ என்னவோ!
- மேற்கண்ட துளிகள் நான் எழுதியதில்லை என்று சொல்லத் தேவையே இல்லை. 1987இல், யார் எழுதியது என்று நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.
*
தமிழ் - இந்தி இலக்கிய உறவு என்ற முந்தைய பதிவில் எச். பாலசுப்பிரமணியம் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருந்தேன். அவர் லண்டன், டென்மார்க் பயணம் சென்றிருந்ததால்தான் நான் தில்லிகை நிகழ்ச்சியில் உரையாற்ற ஒப்புக்கொண்டேன். தனக்குத் தெரியாத விஷயங்களை தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு மொழியாக்கம் செய்வார் என்றும் அவரைப் பற்றிக் குறிப்பிட்டேன். மொழியாக்கத்தில் இருக்கும் சிக்கல்கள் பற்றி அவர் பேசுவதைக் கேட்க வேண்டாமா... 
லண்டன் தீபம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணல் யூ-டியூபில் இருக்கிறது. எழுத்தாளர் உதயணனும் கூட இருக்கிறார். இளைய அப்துல்லா நேர்காண்கிறார்.
நேர்காணல் செய்பவர் எப்படிப் புரிந்து கொண்டாரோ தெரியவில்லை, பாலசுப்பிரமணியன் அவர்களை ஜேஎன்யூ பல்கலைப் பேராசிரியர் என்று அறிமுகம் செய்கிறார். அந்தக் குறையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நேர்காணல் அருமையாக இருக்கிறது. நீங்களும் பாருங்கள்.
பாலசுப்பிரமணியன் நேர்காணல்
(பிந்தைய திருத்தம் - திரு பாலசுப்பிரமணியன் ஜவஹர்லால் நேரு பல்கலையில் வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளதாக திரு சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தவறு அப்துல்லாவிடம் இல்லை, என்னுடைய தவறு)
*
பேஸ்புக் பத்தி நகைச்சுவையாக வினவில் எழுதியதை முந்தைய பதிவில் ஒரு சுட்டியில் கொடுத்தேன். ஆனால் யாருமே அந்த இணைப்புக்குப் போகவில்லை போலத் தெரிகிறது. அதனால், யாம் பெற்ற இன்பம் ... கீழே -
மைதானத்தில் பெரிய பந்தல் போட்டு, ஊரெங்கும் நோட்டிஸ் ஒட்டி பிரபலமாக்குவதுதான் பேஸ்புக்கின் வேலை. கூட்டம் சேர சேர பந்தலை விரிவுபடுத்துவது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது இவைதான் தொடரும் அதன் பணிகள். கூட்டமாக சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளத்தான் வந்திருக்கிறார்கள். சிறு சிறு குழுக்களாக குழுமிக் கொள்கிறார்கள். ஒரு குழுவில் நடனம் நடக்கிறது, ஒரு குழுவினர் நாடகம் போடுகின்றனர், ஒருவர் பாட்டு பாடுகிறார், ஒருவர் உரையாற்றுகிறார், ஒருவர் சமையல் செய்கிறார், ஒருவர் குடிநீர் வழங்குகிறார். கூட்டத்தை நடத்துவது வந்திருக்கும் மக்கள்தான்.
அப்படி கூடும் மக்களுக்கு பொருட்களை விற்க கடை போட வருமாறு வணிகர்களை வரவழைத்து கட்டணம் வசூலித்து வருமானம் பார்ப்பதும் பேஸ்புக்கின் வேலைகளில் ஒன்று. பயனர்களின் புகைப்படங்கள், கருத்துரைகள், தொடர்புகள் அனைத்தும் பேஸ்புக்குக்கு பணம் சம்பாதித்துத் தரும் கறவை மாடுகள்தான். பேஸ்புக்கில் சேர்க்கப்படும் ஒவ்வொரு புகைப்படமும், அதில் எழுதப்படும் ஒவ்வொரு கருத்துரையும், அதில் தொடங்கப்படும் ஒவ்வொரு விவாதக் குழுவும், அதில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு விளையாட்டும் பேஸ்புக்கின் விளம்பர சந்தையை விரிவாக்கி அதன் வருமானத்தை பெருக்குகின்றன.
*
கொடைக்கானல் அருகே இருக்கும் தலையாறு அருவியைப் பற்றி தற்செயலாக அறிய நேர்ந்தது. எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருப்பதுதான் என்றாலும் நான் போனதும் இல்லை, பார்த்ததும் இல்லை. இதற்கு எலிவால் அருவி என்றும் பெயர் உண்டு. அதைப்பற்றித் தேடியபோது கிடைத்தது அரியதொரு அருமையான பதிவு. சாகசப் பயணத்தில் கிடைத்த அற்புதமான புகைப்படங்கள்.  முகம் தெரியாத அந்த ஆங்கிலப் பதிவருக்கு வாழ்த்து எழுதி பின்னூட்டம் இட்டேன். நீங்களும் பாருங்கள், படியுங்கள். நீளமான பதிவு - முழுதும் படிக்க இயலாவிட்டாலும் புகைப்படங்களைப் பாருங்கள்.
*
இதுவும் தற்செயலாகக் காண நேர்ந்த பதிவு. கோவையைச் சேர்ந்த எளிய மெகானிக்கின் கண்டுபிடிப்பு. அவருடைய ஆங்கிலத்தையும் சேர்த்து ரசிக்கலாம். அதுல பாருங்க... இந்த முருகானந்தம் எங்க ஊருக்காரருங்கோ....
*
நாளிதழைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியருக்குக் கடிதம் எழுதி விடுவதில்லை. பதிவைப் படிக்கும் அனைவரும் பின்னூட்டம் இட்டு விடுவதில்லை. பின்னூட்டம் இடாமலே பின்னூட்டம் தரும் நண்பர் ஒருவர் எனக்கு உண்டு - அவர்தான் குமரன். மைய பாதுகாப்புப் படையில் பணிபுரிவதால் தில்லியில் சில ஆண்டுகள்  வசித்து, நாங்க புதுசு (இப்போது தபஸ் என்று பெயர்) நாடகக் குழுவின்  நிறுவகர்களில் ஒருவராக இருந்து, இப்போது ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் அருகே இருப்பவர். 
யோரா இயக்கத்தில், தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற கர்ணோபதேசம் நாடகத்தில்  அர்ஜுனனுக்கு உபதேசம் தரும் கிருஷ்ணனாக குமரன்
பதிவு வெளியான ஓரிரு நாளில் தொலைபேசியில் அழைத்து தன் கருத்தைக் கூறுவார். மாவோயிஸ்டுகள் பகுதியில் பணியாற்றுவதால் கணினி வசதி அதிகம் இல்லை, தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாது. எல்லாரும் தமிழில் பின்னூட்டம் இடும்போது தான் மட்டும் ஆங்கிலத்தில்  இடமுடியுமா என்று தயங்கி ஏதோ ஒரு செல்பேசி நிறுவனத்துக்கு தண்டம் கட்டி நீண்டநேரம் பேசுவார்.  ஒலிம்பிக் பற்றிய பதிவுக்கு பாதி ஆங்கிலம்-பாதி தமிழில் அவர் அளித்த சிறிய பின்னூட்டத்தைப் பார்க்கலாம். ராணுவத்துக்கும் - அதாவது, ராணுவம், பாதுகாப்புப் படை போன்றவற்றில் பணியாற்றிய நண்பர்களுக்கும் எனக்கும் உள்ள உறவை வைத்து ஒரு பதிவு எழுத வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறார். எழுத வேண்டும் - அவருக்காகவே.

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கதம்பம்.

ஒவ்வொரு பூவும் மணக்கிறது!

வெங்கட ஸ்ரீநிவாசன் said...

நல்ல பல தகவல்கள்.
நன்றிகள்.

Chandrasekaran said...

Dr.H.B.S. has been invited as a Visiting Professor for the next semester in our school, JNU.
very nice kathambam...keep on writing like this on any thing.

Shahjahan Rahman said...

நண்பர் குமரன் எழுதிய பின்னூட்டத்தில் என்னைப்பற்றிய மிகைப்புகழ்ச்சிச் சொற்களை நீக்கி விட்டு இதைமட்டும் தருகிறேன் -
உங்கள் கதம்பத்தில் நானும் நாறாக மணக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி குமரன். கதம்பத்தில் மட்டுமல்ல, என் நினைவுகளிலும் என்றென்றும் மணப்பீர்கள்.

Anonymous said...

Arumaiyana pathivuhal.

sathya asokan said...

வேற யாரா இருக்க முடியும்
நம்ம கி. ரா-வை தவிர
அவரு எழுதற அளகே அளகாச்சே

என்ன பண்ணறது! அப்ப அவரு எழுதுனது இப்பவும் பொருந்துது

சத்யா அசோகன்