Friday 26 October 2012

சின்மயி விவகாரம் - தாமதமான விழிப்பா? விரைவில் வந்த தளையா ?


சின்மயி விவகாரம் வெடித்து தமிழ் வலையுலகமே இதே பிரச்சினை பற்றி விவாதிக்கத் தொடங்குவதற்கு முன் - 20 அக்டோபர் அன்று மாமல்லனின் ஒரு பதிவை ராஜன்குறை முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அந்தப் பதிவின் துவக்கம் இது -

அறியாத முகங்களை அறிந்த முகங்கள்

* * *
நான்கு நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தியைப் படிக்கும் வரை சின்மயி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அப்படி ஒரு பாடகி இருக்கிறார் என்பதும்கூடத் தெரியாது. அதே போல ராஜன் யார் என்றும் தெரியாது. என்னடா இவன்... சின்மயியைக் கூடத் தெரியாத இவன் எந்த உலகத்துல இருக்கிறான் என்று யாரோ கிண்டலடிப்பது புரிகிறது. ஆனால் இதுதான் உண்மை. இவரைப் போன்றவர்களைத் தெரிந்துகொள்ளாமலே நன்றாக வாழ்க்கை நடத்த முடிகிற சிலரின் நானும் ஒருவன். இவர்களைப் பற்றித் தெரியாமல் இருப்பதாலேயே பயனுள்ள வேறு பலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது என்று இப்போது தோன்றுகிறது.
இணையம் இந்தியாவுக்குள் வந்த காலத்திலிருந்தே பயன்படுத்தி வருபவன்தான் என்றாலும் வலைப்பதிவு துவங்கி ஓராண்டுதான் ஆகிறது. முகநூலுக்கு வந்து ஏழெட்டு மாதங்கள்தான் இருக்கும். ட்விட்டரில் பதிந்து, ஓரிரு நாட்களுக்குள் அதில் நுழைவதையே விட்டு விட்டேன். பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதினாலே ஒத்த கருத்து நண்பர்களை உருவாக்குவது கடினமாக இருக்கின்ற நிலையில் 140 எழுத்துகளில் எதை சாதித்துவிட முடியும் என்ற எண்ணம் காரணம். அதற்காக துவித்தர்களின்மீது காழ்ப்பு என யாரும் கருதிவிட வேண்டாம். எனக்கு அது ஒத்து வராது, அவ்வளவுதான்.
முகநூலில் யாரோ சில நண்பர்களின் கருத்துகளில் சில ட்வீட்களின் படங்களைப் பார்த்தேன். அதில் மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்வது தவறில்லை என்பதான பொருளில் சின்மயி என்பவரின் ஒரு ஸ்கிரீன்ஷாட் பார்த்தேன். இதுபோன்ற அர்த்தமற்ற பலவற்றையும் முகநூலில் பார்த்திருப்பதாலும், சின்மயி யார் என்றும் தெரியாமல் பின்னணி என்ன என்றும் தெரியாமல் இருந்ததாலும் இதைப் பொருட்படுத்தவில்லை.
அடுத்து விவகாரம் வெடித்தது - புகார்-புலம்பல்-கைது-தொடர் கைது எனத் தொடர்ந்தது. முதலில் செய்தியைப் படித்ததும், பெரும்பாலானவர்களைப் போலவே என்னடா இது, ஒரு பெண்ணையும் தாயையும் இழிவுபடுத்தி விட்டார்களே என்றுதான் எனக்கும் தோன்றியது. விவரங்களைத் தேடத் துவங்கிய பிறகுதான் முழு விவரமும் புரிந்தது.
சின்மயி ட்வீட்டுகள் என்ன, ராஜன் போன்றோரின் பதில் ட்வீட்டுகள் என்ன என்பதையெல்லாம் நானும் தேடித்தேடி இணைப்புக்கொடுக்க வேண்டியதில்லை. அவையெல்லாம் இணையத்தில் நிறையவே உண்டு. எனக்கத் தோன்றியது --- தவறு அனைத்துத் தரப்பினரிடமும் இருந்திருக்கிறது.
இங்கே நான் தேட/தொட விரும்புவது முற்றிலும் வேறு --- இது போன்ற பிரச்சினைகளுக்கான மூலம் எது, இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதற்கான பதில் அறியும் முயற்சி.
மேலே குறிப்பிட்ட மாமல்லனின் சுட்டி இதற்கு உதவுகிறது.
பிரச்சினையின் மூலமாக இருப்பது முகம் மறைக்கும் வசதி. புனைபெயரில், போலிப்பெயரில் எத்தனை அடையாளங்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்கிற வசதி. அதுவே கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், மன்மோகனையும், சோனியாவையும் தாக்கி எழுத தைரியம் தருகிறது. நாகரிகமான கேலிச்சித்திரங்கள் அல்லது கருத்துகளால் விமர்சிப்பதையும் தரக்குறைவான வார்த்தைகளால் அல்லது படங்களால் தாக்குவதையும் சமமாகக் கருத முடியாது. இணையத்தில் இந்த இரண்டு வகைகளுமே பரவலாகவே இருக்கின்றன. காரணம், எழுதியவன் யார் என்று தெரியாது என்கிற தைரியம்தான்.
சைபர் கிரைம் துறை நினைத்தால் யாருடைய ஜாதகத்தையும் தோண்டி எடுத்துவிட முடியும் என்பது புரியாதவர்கள், ஆமா... இருபது கோடிப் பேரில் என்னைத்தான் வந்து பிடிக்கப் போறாங்களாக்கும் என்று நினைப்பவர்கள்தான் பெரும்பாலும் இப்படி புனைபெயர்களில் எழுதுகிறார்கள்.
மற்றொரு காரணமாக எனக்குத் தெரிவது --- திடீரெனக் கிடைத்த கருத்துச் சுதந்திரம். ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. வெளிப்படுத்த ஊடகங்களில் வாய்ப்பில்லை, சாத்தியமும் இல்லை. கேட்பதற்கு ஆளும் இல்லை. நாமாகவே வலிந்து மாற்றிக்கொண்ட வாழ்க்கைமுறையில் நிஜ நட்புகளை அறுத்துக்கொண்டு வர்ச்சுவல் நட்புகள்மீதான சார்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பரவலாகிவிட்ட சமூக வலைதளங்கள் இத்தகைய கருத்து வெளிப்பாட்டுக்கு அபாரமான கருவியாகி விட்டன. இந்த வர்ச்சுவல் நட்புவட்டத்தினர் வழங்கும் பாராட்டும் அங்கீகாரமும் இன்னும் தைரியத்தைக் கொடுத்து விடுகிறது. அப்புறம் இது ஒரு விஷச்சுழல்போலத் தொடர்கிறது. ஆனால் இங்கே பலர் புரிந்து கொள்ளாத ஒரு விஷயம் --- கருத்துச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதோடு சமூகப் பொறுப்பு என்பதும் அதில் அடங்கியிருக்கிறது என்பது.
இதைக்குறிப்பிடும் வகையில்தான் மாமல்லனின் பதிவுக்கு முகநூலில் நான் கீழ்க்கண்ட பின்னூட்டம் இட்டேன் -
புனைபெயர் பயன்படுத்துபவர்கள், தம் முகமறிய வாய்ப்பில்லை என்ற தைரியம் உள்ளவர்களுக்கு மட்டுமே விஜயலட்சுமியின் எச்சரிக்கை பொருந்தும். உண்மைப்பெயரில், நண்பர்களை எச்சரிக்கையாகத் தேர்வு செய்வோர், நிஜவாழ்வில் இருப்பதுபோலவே இந்த வர்ச்சுவல் உலகிலும் உலவுகிறார்கள் என்பது என் ஓராண்டு முகநூல் அனுபவம்.
* * *
மீண்டும் சின்மயி விவகாரத்துக்கு வருவோம்.
அவருடைய பதிவு, ட்வீட்டுகள், பதில் ட்வீட்டுகள், வவ்வாலின் ஆராய்ச்சிப் பதிவு எனப் பலதையும் பார்த்தபிறகு எனக்கு சில விஷயங்கள் வியப்பளிக்கின்றன.
மீனவர் விவகாரம், இட ஒதுக்கீடு, வருணமுறை போன்ற பல விஷயங்களில் அவருடைய ட்வீட்டுகள் ஆட்சேபத்துக்கு உரியவை என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி தான் கூறவே இல்லை என்று சொன்னால் யாரும் நம்பத்தேவையும் இல்லை. அந்த அளவுக்குத் தெளிவாகவே இருக்கின்றன.
அப்படி இருக்கும்போதும் அவரை எதற்காகத் தொடர வேண்டும்.... பிரபலம் என்ற மோகம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்... இந்தச் செயல், ஒருவர் பிரபலம் என்பதாலேயே அவர் எல்லா விஷயங்களிலும் கருத்துக்கூறும் தகுதியுடையவராக அங்கீகாரம் அளிப்பதாக ஆகிவிடுகிறது அல்லவா... அதே அங்கீகாரம் பிரபலங்களை இஷ்டப்படி இன்னும் பேச வைத்திருக்கிறது அல்லவா....
தான் படித்தவர், மேல் ஜாதியைச் சேர்ந்தவர், சகலமும் அறிந்தவர் என்பதான தொனி அவருடைய பல ட்வீட்டுகளிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. அப்படியிருக்கையில் 140 எழுத்துகளுக்குள் விமர்சனம் செய்து அவரை மாற்றிவிட முடியும் என்று யாரேனும் எண்ணியிருந்தால் அவர்களை என்னவென்று அழைப்பது...
இந்துஸ்தான் டைம்சில் சின்மயி பெயருக்கு இணையாக ராஜனின் பெயர் வந்தபிறகுதான் மோதல் தொடங்கியிருக்கிறது. ராஜன் இதை மார்ச்-ஏப்ரல் மாதத்திலேயே தன் பதிவில் எழுதி இருக்கிறார். நான் பார்த்த அளவில் இந்த விவகாரத்தில் ராஜன் ஆபாசமாக எழுதியதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படியும் அவர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்குக் காரணம் அரசியல் தலையீடும் காவல்துறையின் ஒருபக்கச்சார்பும்தான். இணையமுகவரி எண்ணை வைத்துப் பிடித்ததாக காவல்துறை சொன்னதாக பத்திரிகைகள் சொல்வதெல்லாம் கட்டுக்கதை.
சின்மயியும் அவரது தாயாரும் தமது இசைப்பாரம்பரியம், ராமநாதபுரம் மகாராஜா குடும்பத்துடன் உறவு, இசைப்பயிற்சி என பல கட்டுக்கதைகளை தம் வலைப்பக்கத்தில் இட்டுக்கட்டியிருக்கிறார்கள். சரி. ஆனால் இப்போதுதான் இதை ஆராய வேண்டுமா... வவ்வால் மிகவும் சிரமப்பட்டு பலமணிநேரம் செலவுசெய்து இதை எழுதியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் சின்மயி புகார் செய்து ராஜன் கைது செய்யப்படுவதற்கு முன்பே செய்திருந்தால் சின்மயியின் உண்மை முன்னரே இன்னும் பலருக்கும் தெரிய வந்திருக்கும் அல்லவா...
குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் - யாரை நாம் நட்பு வட்டத்துக்குள் இணைத்துக்கொள்கிறோம், யாரைத் தொடர விரும்புகிறோம் என்பது. வேலைகளுக்கு இடையில் மாற்றத்துக்காக முகநூல் நண்பர்களின் விவரங்களைப் பார்ப்பது உண்டு. அப்போது எனக்குப் புரிய வந்தது --- வலைப்பூக்கள், முகநூல் போன்ற சமூகவலை வசதிகளில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்பட எந்தெந்தப் பெண்கள் கொஞ்சம் அழகாகத் தோன்றுகிறார்களோ அவர்கள் பின்னால் நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் எந்தக் கருத்தை உதிர்த்தாலும் சொத்தைக் கருத்தாக இருந்தாலும் பின்னூட்டமிடுவதற்கான துடிப்பு அவற்றில் தெரிகிறது. உதாரணங்கள் கொடுக்க விரும்பவில்லை. அப்புறம் இவரையா அழகு என்று சொல்கிறாய் என்று ஒரு கூட்டம் படையெடுத்து வரலாம்.

உதாரணத்துக்கு ஒரு அனுபவம். இரண்டு நாட்கள் முன்புவரையில் என் முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஏதும் இருக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர் உரையாடலில் வந்தார். நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளிலிருந்து என்னை பெண் என்று நினைத்திருக்கிறார் என்பது புரிய வந்தது. அப்பனே நான் படிப்பதை எல்லாம் நிறுத்தி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவர் நம்பவில்லை. அப்போதுதான் என் பக்கத்தில் படம் ஏதும் போடவில்லை என்பது புரிந்து, புகைப்படத்தை இணைத்தேன்.
சின்மயி விவகாரத்திலும் இத்தகைய போக்கைத்தான் நான் பார்க்கிறேன். அவர் திரைப்பாடகராம். நல்லது. இவருடைய கருத்துகள் பலவும் அரைவேக்காட்டுத்தனமானவை, ஜாதிப்பற்று கொண்டவை என்று தெரிந்தபின் இவரை ப்ளாக் செய்துவிட்டு ஒதுங்கிக்கொண்டல்லவா இருக்க வேணடும்... அவருடைய கருத்துகளுடன் உடன்படவில்லையா, எதிர்த்து எழுதலாம். --- ஆனால் நாகரிகமாக. பெண்தானே, என்ன செய்துவிட முடியும் என்ற தைரியமா அல்லது பேருந்தில் சீண்டும்போது கூச்சல் எழுப்பாத பெண்ணை இன்னும் கொஞ்சம் சீண்டிப் பார்க்கலாம் என்ற எண்ணமா...
* * *

சின்மயி மீதும் புகார் கொடுக்கப்பட்டு விட்டது என இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் சமரசம் ஆகவும் வாய்ப்புண்டு. அல்லது ராஜனும் மற்றவர்களும் கண்டனத்துடன் வெளியே வந்து விடலாம். அல்லது குற்றமற்றவர்களாகவே வெளியே வரலாம். ஆனால் காவல்துறை, கைது ஜெயில், வழக்கு, நீதிமன்றம் ஆகிய உளைச்சல்களை மறக்க முடியுமா... 
* * *
இந்த விவகாரத்தின் விளைவுகளாக கண்ணிலும் மனதிலும் படுபவை -
ஆங்கிலத்தில் Pandora’s box என்பார்களே, அப்படி புதிய புதிய செய்திகள் எல்லாம் வெளியாகியுள்ளன. இன்னும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. உதாரணத்துக்கு, ராஜமௌலியின் ஜாதிவெறி அப்பட்டமாகியது.
இந்த விவகாரம் வெளியானதும் ஆளாளுக்கு ட்வீட்களை கட்-பேஸ்ட் செய்து தனக்குப் பிடிக்காத நபர்கள்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டார்கள். இது கவலைக்குரியது என்றாலும் சில நாட்களில் அடங்கி விடும்.
ஆபாசத்தையே எழுத்தாக வைத்திருக்கும் சாரு நிவேதிதா எல்லாம் நாகரிகம் பற்றிப் பேசுகிற நிலை வந்துவிட்டது. இதுவும் நல்லதுதான். இனி எழுதுவதற்குமுன் அவரும்கூட யோசிக்க வேண்டியிருக்கும்.
இந்த ஒருவாரத்தில் மதத்துவேஷ-ஜாதித்துவேஷ வெறித்தனமான கருத்துகள் குறைந்துள்ளன. இன்னும் குறையும். இது வரவேற்கத்தக்கது.
ஆனால் வரவேற்கத்தக்க இந்த மாற்றத்துக்கு நாம் கொடுக்கப்போகும் விலை மிக அதிகமானதாக இருக்கும். சின்மயி இதற்கு அஸ்திவாரம் இட்டு விட்டார், அவர் எதிரிகளாகக் கருதுபவர்கள் அந்த அஸ்திவாரத்துக்கு சிமென்டும் மணலும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். இந்தக் கடைசி விஷயம்தான் எனக்கு முதன்மையான கவலையாக இருக்கிறது.
ஏற்கெனவே கட்டுக்குள் அடங்காத அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் காவல்துறைக்கு இன்னும் வசதியாகி விடும். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல, பதிவர்கள்-சமூகவலைதள நண்பர்களுக்குள் எழும் மோதல்கள் காவல்துறையின் மிரட்டலுக்கு, துன்புறுத்தலுக்கு, பணம் பிடுங்கலுக்கு மேலும் வாய்ப்புகளை அளிக்கும். அதிலிருந்து தப்பிக்க அரசியல்வாதிகளை அண்ட வேண்டியிருக்கும்.  
கட்டற்ற சுதந்திரம் இனி சாத்தியமில்லை. தளைகளோடுதான் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
* * *
மாமல்லனின் சுட்டியில் துவங்கியதை அவரது வரியுடன் முடிக்கலாம்.
இத்துனைபேர் சுற்றி இருக்கிறார்கள் என்பது வியப்பாகவும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எச்சரிக்கையாகவும் கவிழாமல் மிதந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  கூச்சத்தைக் கொஞ்சம்போல கூட வைத்துக்கொண்டிருந்தால் பொய்யின் சுமையை மட்டுமின்றி உண்மையின் உப்புசத்தைக்கூட கணிசமாகக் குறைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

6 comments:

  1. மிகவும் சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  2. அருமை, நீங்கள் கூறியது முற்றிலும் சரி.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பதிவு சகோ... கட்டற்ற கருத்துச் சுதந்திரம் சாத்தியமில்லை, ஆனால் வரன்முறை எவ்வளவு என்பதை அந்தந்த நாடுகள், மக்கள், கலாச்சாரம், வாழ்க்கை முறைகள் மட்டுமே தீர்மானிக்கும் ... !

    ReplyDelete
  4. ரொம்பவும் சரியாய் சொன்னீங்க. முகமூடிகள் முகத்துக்குமட்டுமேயன்றி எண்ணத்துக்கோ கருத்துக்குக்கோ கிடையாது....
    Faceboook Profile -களும் போஸ்ட் களும் Split personality ஐ வெளிக்கொணர்கின்றன.

    ReplyDelete
  5. //இவர்களைப் பற்றித் தெரியாமல் இருப்பதாலேயே பயனுள்ள வேறு பலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது என்று இப்போது தோன்றுகிறது//சரியாகச் சொன்னீர்கள் ஷாஜகான்.

    ReplyDelete
  6. பிரபலங்களிடம் அவர்கள் துறைத் தவிர்த்து மற்ற விஷயங்களை பெறுவது என்பது ஊடகங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக ஆரம்பித்து வைத்தது மக்களுக்கு தினப்பழக்கமாக மாறிவிட்டது. [அரசியலுக்கே வராத சினிமா நடிகரிடம் அடுத்த முதலமைச்சராக யார் வரவேண்டும் என்று கேட்பதைப் போல]. அந்த வேத வாக்குகள் இல்லாமல் மக்களுக்கு தூக்கமே வரமாட்டேன் என்கிறது.

    பிரபலங்களுடன் நட்பு சேர்ந்து கொள்வது தன் சுயமதிப்பை அதிகமாகக் காட்டிக் கொள்ளவும் உதவுகிறது. இதற்கு இந்த முகநூல் போன்றவை எளிதாக உதவுகின்றன.

    சுயக்கட்டுப்பாடு மட்டுமே இதற்குத் தீர்வளிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

    நல்ல அலசல்.

    ReplyDelete