Monday 22 July 2013

அரங்கிற்கு வெளியே


ஜாஃபர் பனாஹி-யின், ஆஃப்சைட் (OffSide) என்ற ஈரானியப் படத்தைப்பற்றி பேஸ்புக் தோழி தீபா நாகராணி எழுதியிருந்தார். சனிக்கிழமை இந்தப்படத்தைப் பார்த்தோம். ஈரானிலிருந்து வந்திருக்கும் மற்றொரு வித்தியாசமான திரைப்படம். பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு உதாரணமாகச் சித்திரிக்கப்படும் இஸ்லாமிய நாடான ஈரானிலிருந்தே இப்படி பெண்களை மையமாக வைத்து அதிரடியான அற்புதமான திரைப்படமும் எடுக்கப்படும் முரண் எப்படி நிகழ்கிறது என்று புரியவில்லை.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தகுதி பெறுவதற்கான போட்டியில் ஆடுகிறது ஈரான் அணி. போட்டியைக் காண பெண்களுக்கு அனுமதியில்லை. என்னதான் தொலைக்காட்சியில் பார்த்தாலும் நேரடியாகப் பார்க்கும் சுவை இருக்காது என்பதால், ஆண்கள் போல வேடமிட்டுச் செல்லும் சில பெண்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கும் அவர்களை காவல் காக்கும் காவலர்களுக்கும் இடையிலான உரையாடல்கள், கால்பந்துப் போட்டி நடைபெறும் பின்னணி, நேரில் பார்க்க முடியாதபோதும் என்ன நடக்கிறது என்று அறியும் ஆர்வம் இவற்றை வைத்து நகர்கிறது கதை. இடையிடையே மெலிதான நகைச்சுவை. 

இந்தியாவில் கிரிக்கெட் ஆர்வம் போல ஈரானில் கால்பந்து ஆர்வம். காவலர்களுக்கும்கூட ஆர்வம் இருக்கவே செய்கிறது. கால்பந்துப் போட்டியைப் பார்க்க முடியாத ஏக்கம் ஒருபுறம், ஊரில் இருக்கும் குடும்பத்தை நினைத்துக்கொள்வதும், ஊருக்குச் செல்ல விடுமுறை கிடைக்காத ஏக்கம் மற்றொருபுறம் என காவலர்களின் உணர்வுகளையும் பதிவு செய்கிறது.

ஒரே ஒரு காட்சியில் மட்டுமே அரங்கமும் போட்டியும் சில விநாடிகளுக்குக் காட்டப்படுகிறது. அதுவும்கூடக் காட்டாமலே இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நாகேஷ் நடித்த எதிர்நீச்சலில் இருமும் கிழவரைக் காட்டாமலே காட்டியிருப்பாரே பாலச்சந்தர், அதுபோல படம் முழுவதும் இரைச்சலையும், பின்னணிக் குரல்களையும், நேர்முக வர்ணனையையும் மட்டுமே காட்டும்போது, இந்த சில விநாடிக் காட்சியைத் தவிர்த்திருக்கலாம்.

கடைசிக் காட்சியில் அவர்கள் எல்லாரும் கொண்டாட்டத்தின் இடையில் தப்பிச்சென்று விடுகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும் சற்றே நம்ப முடியாததாக இருக்கிறது. அதை மட்டும் மறந்துவிட்டுப் பார்த்தால் அற்புதமான படம். வெவ்வேறு வகைப்பட்ட பெண்களின் நடிப்பு, காவலர்களின் நடிப்பு, போட்டி துவங்குவதற்கு முன் அரங்கத்தின் முன் நிற்கும் கூட்டம், போட்டி முடிந்த பிறகான கொண்டாட்டம் என ஒவ்வொரு காட்சியும் இயல்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அத்தனைபேரும் உன்னதமாக நடித்திருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால் குறை சொல்ல முடியாது. ஏற்ற இறக்கங்களோடு உணர்ச்சிவசப்பட்ட உரையாடல்களைப் பார்த்துப் பழகிப்போன நமக்கு, ஈரானிய மொழியில் எல்லாவகையான உணர்ச்சிகளும் ஒரேமாதிரி வெளிப்படுத்தப்படுவது சற்றே அன்னியமாக உணரச்செய்கிறது.

இருந்தாலும், காணத் தவறாதீர்கள்.

No comments:

Post a Comment