Monday 7 October 2013

சர்க்கசுக்குப் போனோமே....


தோஸ்த் தோஸ்த் நா ரஹா
ஜீனா யஹாங் மர்னா யஹாங்
யாதோன் கி பாராத்
இந்தப் பாடல்கள் எல்லாம் யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, சர்க்கஸ் கம்பெனிகளின் முக்கிய இசைக்கீற்றுகளாக இன்றும் இவைதான் ஒலிக்கின்றன. புதிதாகச் சேர்ந்திருப்பவை சில ஆங்கில இசைக்கீற்றுகள்.

தில்லியில் கிரேட் பாம்பே சர்க்கஸ் என்ற விளம்பரத்தை என்னைக் கடந்துசென்ற ஆட்டோவில் பார்த்து விட்டு வீடு திரும்பியதுமே மகளிடம் சொன்னேன் - சர்க்கஸ் எங்கே நடக்கிறது என்று விசாரி என்று. பஷ்சிம் விஹாரில் நடக்கிறது என்றும் வெப்சைட் விவரமும் தந்தாள். சனிக்கிழமை போகத்திட்டமிட்டோம். வீட்டிலிருந்து 26 கிமீ. காரில் சென்றதால் வசதியாக இருந்தது. 

100, 200, 300 மூன்றே ரகமான டிக்கெட்டுகள்தான். போகும்போது 200 ரூபாய் டிக்கெட் எடுக்கலாம் என்று யோசித்திருந்தது அங்கே போனபிறகு 300க்கு எடுக்கலாம் என்று மாறியது. எதனால்? வேறென்ன, நலிந்து வரும் கலைக்கு நம்மாலான பங்களிப்பை இதைவிட வேறென்ன வகையில் செய்துவிட முடியும் என்பதே. இதைப்பற்றி எழுதுவதால் நான் பெருமை பீற்றுவதாக யாரும் நினைத்துவிடப்போவதில்லை. இதைப் படித்த எவருக்காவது அவருடைய ஊரில் சர்க்கஸ் வரும்போது தவறாமல் போவதற்கு இந்தப்பதிவு ஒரு ஊக்கமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.

ஒட்டுப்போட்ட வண்ண வண்ணத் துணிகளால் அமைந்த கூடாரம். பார்ப்போர் கண்களிலிருந்து ஒட்டுகளை மறைக்க வண்ணவிளக்குகள். கைக்குக் கிடைத்த அத்தனை இரும்புக்கம்பிகள், பலகைகள், தட்டிகள், மூங்கில்கள், மரங்கள் எல்லாம் வைத்து அமைக்கப்பட்ட தடுப்புகள், பாதைகள், பிரிப்புகள்....

உரிய நேரத்திற்கு வெகு முன்னரே, முன்வரிசைகள் எல்லாம் காலியாக இருந்தபோதே போயும்கூட எங்களுக்கு ஏழு வரிசை தள்ளித்தான் டிக்கெட் நம்பர் கொடுத்திருந்தது குறித்து மனதுக்குள் வருத்தம்தான். சரி போகட்டும் என்று விடவேண்டியிருந்தது. 

வழக்கம்போல பளீரிடும் ஒளிவெள்ளம் திடீரெனப் பாய, ஒரு பக்கத்தில் இருந்த சிறு மேடையில் இசைக்கலைஞர்களின் டிரம்களும் கிடார்களும் திடீரென ஒலிக்க, துவங்கியது சர்க்கஸ். அந்த இசைக்கலைஞர்கள் இருந்த மேடைக்கு முன்பெல்லாம் தனி விளக்குகள் எரியும். இந்த சர்க்கஸில் அவர்கள் கிட்டத்தட்ட மறைந்தே போனார்கள். 


மத்தியில் கட்டப்பட்டிருந்த வலைகளும் மேலே தொங்கிக் கொண்டிருந்த பார்களும், முந்தைய ஷோவில் பார் வித்தைதான் கடைசி அம்சமாக நடந்தேறியது என்று அறிவித்தன. ஆறு பார் கலைஞர்கள், ஒரு குள்ளக் கோமாளியுடன் விறுவிறுவென்று மேலே ஏறினார்கள். "டேய், அவன் பாக்கறதுக்குத்தான் கோமாளி மாதிரி. ஆனா அவனுக்குத்தான் எல்லா சர்க்கஸ் வித்தையும் தெரியும். எந்த இடத்திலும் யார் வராட்டியும் அவனால சமாளிக்க முடியும்..." சிறு வயதில் நாங்கள் பேசிக்கொண்டது என் காதுகளில் திரும்ப ஒலிக்கிறது. யார் சொன்னது...?

முன்னைப்போல அரைமணிநேர பார்விளையாட்டெல்லாம் இல்லை. பிரதானக் கலைஞனை நோக்கி ஐந்துபேர் போனார்கள், அவரைப் பிடித்தார்கள், அந்தரத்தில் ஒரு கரணம் அடித்துத் திரும்பினார்கள். ஒரு பெண்கூட அதில் இருக்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக ஆடப்படும் வித்தை இல்லை. 5 நிமிடத்தில் முடிந்தது. அடுத்த 5 நிமிடத்திற்கு விளக்குகளை அணைத்துவிட்டு மங்கிய நீல ஒளியில் அதே விளையாட்டு. டிரான்ஸ்க்ளூஸன்ட் ஆடைகள் அணிந்த உருவங்கள் மட்டும் மாயம் காட்டின. பார்த்ததை உள்வாங்குவதற்குள் பார் விளையாட்டு முடிந்துவிட்டது, சரசரவென்று வலைகள் நீக்கப்பட்டுவிட்டன. 

அடுத்து வந்தது கலைஞர்களின் அணிவகுப்பு. டிரம்கள் உச்சத்தில் ஒலித்தன. சாதாரணமாக மனிதர்கள் அணியத் துணியாத விதவிதமான பகட்டு வண்ணங்களில், கான்ட்ராஸ்ட் வண்ண வேலைப்பாடுகளுடன் சிக்கென உடலைப்பிடித்திருக்கும் ஆடையணிந்த சிவப்பழகிகள் (!) வண்ணவண்ணக் கொடிகளேந்தி வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்தன விலங்குகள் - ஒரு யானை, 4 ஒட்டகங்கள், 2 குதிரைகள், குட்டி நாய்கள். திட்டமிட்ட பாணியில் வந்து, நடந்து, சுற்றி அதே வேகத்தில் திரும்பியும் விட்டார்கள். 


ஒரு காலம் இருந்தது. புலி, சிங்கம், குரங்கு எல்லாம் இருந்தது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ஏதோ ஒரு சர்க்கஸில் காட்சி நடந்து கொண்டிருக்கும்போதே, சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுத்த ஓமனாக்குட்டி என்ற பெண்ணை சிங்கம் குதறி விட்டது. அதற்குப் பிறகு விலங்குகளின் காப்பாளர்களும் சேர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுக்க, எல்லாம் மாயமாகிவிட்டன. சர்க்கஸ் பார்க்கிற அல்லது சர்க்கஸ் செய்தி கேட்கிற ஒவ்வொரு முறையும் ஓமனாக்குட்டி மனதுக்குள் மரண ஓலமிடுகிறாள்.

வண்ண வண்ணக் கிளிகளைக் கொண்டுவந்த இரண்டு பச்சைக்கிளிகள், இயந்திரத்தனமாக கிளிகளை கம்பியில் சைக்கிள் ஓட்டச்செய்தன, பார் விளையாடச் செய்தன. வித்தை காட்டி முடித்த கிளிகளை அததற்கான ஸ்டாண்டில் திரும்பக் கொண்டுபோய் விடுவதற்காக குறுக்கும் நெடுக்குமாக நடந்தன. கிளிகளுடன் கிளிகளும் திரும்பிப்போயின.

திடீரென்று ஒளியூட்டப்பட்ட மரணக்கூண்டில், சைலன்சர் பிடுங்கிய இரண்டு மோட்டார் பைக் ஓட்டிகள் புர்புர்... என்று ஓசையை எழுப்பி, அச்சமூட்டி, விர்ரென்று புறப்பட்டு சுற்றி ஒரு நிமிடத்தில் மறைந்து போயினர்.

அடியும் விழ வேண்டும், ஒலியும் எழ வேண்டும், வலிக்கவும் கூடாது என்பதற்காகவே அமைக்கப்பட்ட மட்டையை வைத்திருந்த கோமாளிகள் ஒருவரை ஒருவர் புட்டத்தில் அடித்துக் கொண்டனர், உதைத்துக் கொண்டனர், வீழ்த்திக் கொண்டனர். சார்லி சாப்ளினின் The Circus தவிர்க்கவே முடியாமல் நினைவுக்கு வருகிறது.

இந்த சர்க்கஸிலும் மலையாளிகள் குறைந்து விட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. யானையை பந்தடிக்க வைத்தவரும், ஒட்டகங்களை முன்கால்களை ஸ்டூலின்மேல் வைத்து நிற்க வைத்தவருமான ரிங் மாஸ்டர் (!) மலையாளி என்பது பார்த்ததுமே தெரிந்தது. (விலங்குகளின் வித்தை அவ்வளவுதான். குதிரைகள் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. யாரும் நினைவு வைத்துக்கொண்டு நிர்வாகத்திடம் போய் கேட்கப்போவதில்லை.) மலையாளிகளின் இடத்தை நிரப்பி விட்டார்கள் வடகிழக்கு மாநிலத்தவர்.

அதேபோல, எந்தவொரு சர்க்கஸிலும் முன்னர் சில ரஷ்யர்கள் இருப்பார்கள். ரஷ்யா என்றால் இன்றைய ரஷ்யா அல்ல, கஜக்கிஸ்தான், தஜக்கிஸ்தான் போன்ற பக்கத்தில் இருக்கும் நாடுகளிலிருந்து அக்கரைப்பச்சை நம்பிக்கையுடன் வந்தவர்கள். இப்போது அவர்களையும் காண முடியவில்லை. அவர்களுக்குப் பதிலாக ஆறு ஆப்பிரிக்கர்களைக் காண முடிந்தது. புலித்தோல் போல டவுசர் அணிந்து, வித்தை காட்டி முடித்ததும் ஆப்பிரிக்க நடனத்தின் அசைவுகளை சில விநாடிகளுக்குக் காட்டி விட்டு மறைந்த அவர்களின் முகங்கள் மட்டுமே இயல்பான புன்னகையை அணிந்திருந்தன.


ஐந்து பெண்கள் இணைந்து சைக்கிள் ஓட்டினார்கள், சைக்கிளை அக்கக்காகப் பிரித்து சக்கரத்தில் ஓட்டினார் ஒருவர், பல்லில் கயிற்றைக் கடித்துக்கொண்டு பம்பரம்போல் சுற்றினார் ஒரு பெண், இரண்டு பெண்களை தோளில் சுமந்து கொண்டு அரையடி அகலப் பாதையில் ஓரடி உயர சைக்கிளை ஓட்டினார் ஒருவர், குட்டிக்குட்டி நாய்கள் சொன்னதைச் செய்துவிட்டு வாலாட்டிக் கொண்டே கரவொலிகளைப் பெற்றுக்கொண்டு தம் இடத்துக்குத் திரும்பின, வாயில் இரும்புக் கம்பின்மேல் இரும்புக்குண்டுகளை சுமந்து காட்டினார் ஒருவர் .......

விலங்குகள் குறைந்து போனதையும் வித்தைக்காரர்கள் குறைந்து போனதையும் ஈடுகட்ட சில புதுப்பது வித்தைகளை சேர்த்திருந்தார்கள். பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்தவர்களின் நடனங்கள், நாட்டுப்புறக்கலைகள், தற்காப்புக் கலைகள் போன்றவற்றிலிருந்து சுட்டவை. தில்லியில் குடியரசு தின விழாக்களின்போது இவற்றையெல்லாம் பார்த்தவர்களுக்கு இதில் சுவாரஸ்யம் இருக்காது. இருந்தாலும் கைதட்டி, குரலெழுப்பி பாராட்டுகிறோம்.


சர்க்கசின் நுழைவாயிலில், தமது சர்க்கஸைக் காண வந்த பிரபலங்களின் புகைப்படங்களை வைத்திருக்கிறார்கள். வி.வி. கிரி, சாஸ்திரி, காமராஜர், எம்ஜிஆர், இந்திரா காந்தி, நம்பூதிரிபாட், அச்சுதானந்தன், பிரேம் நசீர், கருணாகரன், பிஜு பட்னாயக் .... நமது சமகால பிரபலங்களின் படங்கள் எதுவும் கண்ணில் படவில்லை, நடிகர் சூர்யா படம் தவிர.  சர்க்கஸ் கலைக்கு நாம் கொடுக்கும் மரியாதையை இது சுட்டக்கூடும்.

நம் ஊரில் முக்கோணத் தட்டி கட்டி ஒற்றை மாட்டு வண்டியில் விளம்பர நோட்டீஸ் விநியோகம், பேட்டரி வைத்த மைக்கில் தேய்ந்து போன விளம்பரம், பல கிமீ தூரத்திற்குத் தெரியும் ஃபோகஸ் விளக்கு. விளம்பரத்திற்காக ஊருக்குள் ஊர்வலம் அழைத்துவரும் விலங்குகள்.... எல்லாமே காணாமல் போய் விட்டன. தொலைக்காட்சி அரக்கன் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டான்.

எப்போதும்போல வியக்கவைப்பதும் பாராட்ட வைப்பதும் சர்க்கஸ் ஊழியர்களின் ஒருங்கிணைப்பு முறையும் ஒழுங்கும். அங்கே யாரும் தனிநபர் அல்ல. குழுவின் அங்கம் அல்லது கருவி. கயிறு கட்டுபவனோ, கயிறு இழுப்பவனோ, ஒட்டகத்தின் விட்டைகளை உடனே அகற்றுபவனோ, விளக்குகளை இயக்குபவனோ, கோமாளியோ, பார் கலைஞனோ, குள்ளனோ குண்டனோ... எல்லாருக்கும் ஒரே மந்திரம்தான் - என் கடன் பணி செய்து கிடப்பதே.


பணி என்றால் அதுவும் சொல்லிச் செய்வதில்லை. எவரும் சொல்லாமல் செய்வது. அந்த ஒருங்கிணைப்பில்தான் பல சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி நடந்து கொண்டிருக்கிறது சர்க்கஸ். அவ்வாறு செய்யச்செய்வதில் முதன்மையானது வயிறு. பளீர் ஒளியில் மின்னும் சிவப்புத்தோல் வயிறு அல்ல. அதனுள் இருப்பது. அது சிலரின் கண்களுக்கே தெரிகிறது.


4 comments:

  1. தொலைக்காட்சி அரக்கன் பலவற்றை அழித்துக் கொண்டிருக்கிறான்...

    ReplyDelete
  2. நான்லா, சர்க்கசை பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனா, கல்லூரி செல்லும் வயது வந்தும் என் மகள் இதுவரை ஒருமுறை கூட சர்க்கஸ் போனதில்லை. அதற்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

    ReplyDelete
  3. எனக்கும் சர்க்கஸ் பார்க்க ஆசை தான். என் குழந்தைகளுக்குத் தெரிந்தால் சரி.

    ReplyDelete
  4. சர்க்கஸ் பார்த்து ரொம்ப நாளாச்சு...

    சர்க்கஸ் பார்க்கும் ஆசை வந்தாச்சு...

    ReplyDelete