Monday 23 June 2014

கண்ணதாசன் - ஒரு கவிஞன், ஒரு பார்வை, சில கோணங்கள்

நாக. வேணுகோபாலன்


கண்ணதாசன் பிறப்பு 24 ஜூன், 1927,மறைவு 17 அக்டோபர் 1981

[இக்கட்டுரை எழுதிய நாக. வேணுகோபாலன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். தில்லியில் மைய அரசில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்று இப்போது சென்னையில் வசிப்பவர். கவிஞர், பேச்சாளர், நடிகர், இலக்கிய ஆர்வலர், விமர்சகர், வரலாற்று நிகழ்வுகளை நன்றாக நினைவு வைத்திருப்பவர். 1972 ஜூன் மாதத்தில் எழுதிய இக்கட்டுரையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் சமர்பித்தார். அதாவது, கண்ணதாசன் மறைவுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை என்பதை கவனத்தில் கொள்ளவும். அவர் ஒரு தகவல் பொக்கிஷம். அவருடைய நடை வித்தியாசமான நடை. வார்த்தைச் சிக்கனம் அதிகம் கொண்டது. அறிமுகம் இல்லாதவர்களுக்கு சிரமமாகத் தோன்றக்கூடியது.- ஷாஜஹான்]

* * *

“(சிறிய தவறு செய்துவிட்டாலும் அதை நினைத்து வேதனைப்படும் மனது, சிறிய நன்மை செய்துவிட்டாலும் மகிழ்ச்சி கொண்டாடும்) சுகதுக்கங்களைப் பரிபூரணமாக உணரக்கூடிய ஆற்றலே என் கவிதைகளுக்கு அஸ்திவாரம்”...
- ஜனவரி மாத தீபத்தில் கண்ணதாசன்

கணக்கு ஆசிரியரிடமிருந்து கணக்கைப் பிரிக்கலாம். ஆனால் கவிதையாசிரியனை மறைத்து, மறுத்து, மறந்து கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. இதை நாம் நினைவில் கொண்டால் கவியுலகில் கண்ணதாசனின் நிலை, அவருடைய இடம், அவர் செய்கிற, செய்யாது விடுகிற, செய்ய முடிந்த, செய்ய வேண்டிய சாதனைகளைப் புரிந்துகொள்வது எளிது.

1944இல் சிறுகூடற்பட்டியில் தன்னைப் பறிகொடுத்த காதலியின் அபயக்குரலாக உம்மழகுக் கென்மனதை ஒத்தியாய் (அடமானம்) வைத்த பின்னர் என்று கவிதை துவங்கிய டீன் ஏஜ் முத்தையா, கலை, இலக்கியம், அரசியல் என்ற முப்புறப் பிரமுகர் கவியரசு கண்ணதாசனாக உருவான வரலாறு அவர் கவிதைகளின் வள்ர்ச்சிக்குப் பின்னணி. தொட்டாற்சிணுங்கி, அனிச்சமாக அவர் வாழ்ந்துவரும் வாழ்வுதான் அவரது கவிதைகளுக்கும் அடிப்படை. அவற்றில் காணும் முரண்பாடுகளுக்கும் அடிப்படை.

பாரதி மறைந்து, பாரதியின் அருமை மெல்ல மெல்ல உலகுக்குப் புரிய ஆரம்பித்த காலத்தில், தமிழ்ப்பற்றுக்குப் பெயர்பெற்ற தனவணிகர் சீமையிலே கவிஞர் பிறந்தார். பாரதிதாசன் பாதையில் புது எளிமை, இனிமை, புதுக்கருத்து, புதுநோக்கு என்றெல்லாம் பிறகு வளர்ந்த கண்ணதாசன் மிகப்பல பாடல்களில் பாடினார். சுயகவிதைகளுடன் கூட, பழைய இலக்கியம் படிக்க நேரம் அற்றுப்போய்விட்ட தமிழனுக்காக முத்தொள்ளாயிரம், நளவெண்பா இவற்றிலுள்ள இன்பச்சுவைப் பாடல்களை நடைமாற்றம் செய்து படைத்தார். இலக்கியத்திருட்டில் இறங்காத துணிவும், தன்னால் முடியும் என்ற நம்பிக்கையும் மூலப்பாட்டுடன் சேர்த்து அவற்றை மக்களுக்கு அளித்தன. சிறந்த ரசிகனே சிறந்த கவிஞனாக முடியும் என்பதற்கு இவை எடுத்துக்காட்டுகளாகும். இவற்றில் தூணைத்தழுவிய தோகை மிகவும் அற்புதமான தழுவலாகும். இதையே நாம் பிறகு திரையில் தூணைப் பார்த்து மாப்பிள்ளையென்று மயங்குகிறாளய்யாஎன்று கேட்டோம்.

காதல் தோல்வி பற்றிய சருகானாள், காலத்தால் ஒருநாளும் சருகாகாத கவிதை மலர். ஒரு நாவலுக்கே கருவாகக்கூடிய சோகச் சித்திரம் அது. நெருப்புக்கனிகள்என்ற கதையில் நா. பார்த்தசாரதி காட்டும் சட்டங்களிடையே ஒரு தூய காதல் கருகிய மொட்டாகும் வெறுமையை
சிரித்தபடி கயிறேற்றாய் என்றிருந்தேன்-
சிலையாக நின்றாயாம் நண்பர் சொன்னார்.
எரித்தபடி என்மனதை அந்த வார்த்தை-
என்றழுதேன் பூமியதை எதிரொலிக்கும்
என்ற வரியில் கண்டு வாடுகிறோம். அதேசமயம் இல்வாழ்க்கையை நகைச்சுவையோடு
கள்ளனை ஓர் தேள்கடித்த கதையும் -
காதல்கதை நடுவில்
பிள்ளையழும் கதையும் ஒன்றே
என்ற வரிகளிலும், பதிலாக எழுதப்பட்ட
கட்டிலுக்கு வாயிருந்தால் - அந்தக்
காதலுக்கு வெறி என்ற பெயர்தான் உண்டு
தொட்டிலுக்குக் கையிருந்தால் அணைக்கும் - பிள்ளை
தொட்டதெனில் பிணங்கூட விழித்துப்பார்க்கும்
(பிள்ளைதனை) எதிர்ப்பதெனில் எவ்வழியில்? மனைவியர்பால்
இனித்தொடர்பே கொள்ளீரோ, பிழைத்தோம் அய்யா!
என்ற வரிகளிலும் நளினம், நகைச்சுவை, நாகரிகம் குறையாத காதல் இவற்றைக்கண்டோம்.

பழமைப்பாடலைப் புதுச் சொல்லில் தந்ததோடு, பழைய காவியத்தைப் புதுமைக் கண்ணோடும் பார்த்தார் கண்ணதாசன். இதோ மாதவியின் வழக்கறிஞராக கண்ணதாசன் வாதிடுகிறார் :
முன் உணர்ந்த பெருமையெலாம் மூண்டதொரு பாடலிலே
சிக்கிச் சிதறித் திசைமாறிப் போய்விடுமோ?
பாட்டைக்குறித்துப் பறந்துவிட்டாள்- உண்மையிலே
மோகந்த விர்த்தகனால் செய்துவிட்ட மோசமது
பெறமுடியா ஒன்றைச் சுவைப்பதில் பெற்றதனால்
வரமுடியா வார்த்தையெலாம் வந்தது கோவலன் வாயில்
தன்னை யறியாது தாசியரின் வீடுகளில்-
பொன்னைக் கொடுத்து போவதுதான் புவிவழக்கம்
நின்னையறியாமல் நின்னருகில் அவனிருக்க
தன்னையறியாமல் தளிர்க்கொடி நீ பாழானாய்
உன்னைக் கவிதையென்றால் உலகே கவிதைமயம்
பட்டாடை மாற்றிப் பள்ளிக் கழைத்தேகும்
குலத்திடை வந்தவள் நற்குலவிளக்காய் வாழ்வது
கண்டு நெகிழும் கவிஞர் கோவலன் மேல்கோபப்படுகிறார்.
காயந்தலையாகக் கண்மூடிக் கிடந்தவனை
வெட்டி எறியாமல் மெய்தழுவி யார் மகிழ்வார்

இலக்கியத்தில் மட்டுமல்ல அரசியர் கவிதைகளிலும் சோகமும் கோபமும் ஒன்றிக் கிடப்பதைக் காணலாம். இரண்டுமே எதையும் சாதிக்க முடியாது என்கிறார் டாக்டர் லோஹியா. ஆம். ஒடுங்குபவரிடம் அன்பு, ஒடுக்கப்பட்டவரிடம் அன்பு, ஒடுக்குபவரிடம் கோபம் இரண்டும் ஒரே பொருளுக்கான இருவழிகள் அன்றோ? இதுவே சமயத்தில் எதிர்பாராத நகைச்சுவையாகவும் அமைந்துவிடுவதுண்டு. தமிழில் parady (பகடி என்று சொல்லலாம்) என்ற இலக்கிய உத்தி மிகமிகக் குறைவு. அந்த வகையில் காணும் தமிழக அவலமும் காட்டப்படும் தமிழக அழகும் கண்டு நெஞ்சொடியும் கவிஞர் பாடுகின்றார் -
செந்தமிழ் நாடென்னும் போதினிலே - ஒரு
தேள் வந்து கொட்டுது காதினிலே - எங்கள்
மந்திரி மாரென்ற பேச்சினிலே - கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே
காவிரி தென்பெண்ணை...........
மேவிய ஆறு பலவினிலும்-உயர்
வெள்ளைமனம் கொண்ட தமிழ்நாடு
பல்வேறு கேசுகள் பேப்பரிலே வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு

வள்ளுவனை உலகுக்குத் தந்தோம். பெருமைப்பட்டானேமாகவிஞன். இந்த இளங்கவிஞனைக்கேளுங்கள். ஏண்டா கொடுத்தீர்கள் என்பார்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு
விண்ணை இடிக்கும் தலையிமயம் எனும்
வெற்றை இடிக்கும் திறனுடையார் தினம்
தொன்னை பிடித்துத் தெருவினிலே-நல்ல
சோற்றுக்க லையும் தமிழ்நாடு

இங்கே இவர் கூவிச் சிரிக்கிறாரா, குமுறியழுகிறாரா? சார்லஸ் லாம்ப் பற்றிச் சொல்வார்கள் - pathosand humour என்று. அந்தக் கலையும் கவிஞருக்குக் கைவந்த கலையாகும். இப்போது நாம் மீண்டும் தீபத்திடம் கவிஞர் சொன்னதைப் படித்தால் கவித்துவம் புரிந்துவிடும். தலைவர்களைத் தூற்றியும் போற்றியும் சாடுவதில் எல்லைகாண முடிந்ததற்கும் அந்த மனநிலைதான் காரணம்.

வாசிக்கப்பட்ட அன்றோடு முடியும் கவியரங்க முன்னுரைகள் முடிவுரைகளில்கூட ஒரு சுவை கண்டவர் கவிஞர். அளவினால் அரசியல் கவிதைகள் மிகுதியாயினும், சிறப்பால் தங்குபவை சில காதல் பாடல்களும், பல தத்துவப்பாடல்களும், எல்லா இரங்கற்பாக்களுமேயாகும். காதல் பாடல்களை நாம் முன்பே பார்த்து விட்டதால் தத்துவப்பாடல்களுக்கு வருவோம்.
கண் மற்றும் காதொடு நாசிவாயைப்
பண்படப் புறத்தே வைத்து
பண்படும் நெஞ்சை மட்டும்
உட்புறம் பதுக்கிவைத்தேன்
இன்னுமோர் மனிதசாதி
இயற்கையைப் படைக்கும்போது
இன்னொரு தவறு செய்யேன்,
இதயத்தை முகத்தில் வைப்பேன்
அனுபவித்தேதான் அறிவதுவாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகுசெருங்கி
அனுபவமென்பதே நான்தானென்றான்

நாலுபேர் மதிக்க நட அதுநீதி என்பதில் யாரந்த நால்வர் என்று கவிஞர் சொல்கிறார் -
இடுகாட்டவ்வரை ஏந்திநடந்து கடைக்கருமஞ்செயக்
கடைக்கால் மூன்றும் நால்வர்.

தன்னையறிவது தத்துவம் அல்லவா! இதோ:
மானிடரைப்பாடி அவர் மாறியதும் ஏசுவதென் வாடிக்கையான பதிகம்
தலையளவு தூக்கி உடன் வலிக்கும்வரை தாக்குவதில் மனிதரில் நான் தெய்வமிருகம்
வனவாசம் போனபின் மனவாசம் அஞ்ஞாதவாசத்தை தேடு மனமே
மைதான விளையாட்டு பொய்யென்று கவிபாடு வருங்காலம் உணரும் வகையில்

தன் கவிதை பற்றிய தன்னம்பிக்கை இதேவேளையில் வெளிவரக் காணலாம்.
இலை புதிது மலர் புதிது எனுமாறு
என்றென்றும் என் கவிதை ஓங்கி நிற்கும்
இவ்வாணவம் அறிவு இல்லார்க்கும்
வரும்போது இவ்வுலகம் முடிந்துபோகும்”.

இரங்கற் பாடல்களில், தனது கையாலாகாத்தன்மையால் தென்றல் இதழ் நின்றுபோனபோது பாடிய பாடலில், ஒரு தாயின் சோகத்தையே காணலாம். இயற்கையழுதால் உலகம் செழிக்கும், மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் என்று சொன்ன கவிஞர் தாயொடு தந்தை தமக்கை தலைமுறை சரஞ்சரமாகப் பிரிவதை நினைத்து கண்ணீர் ஒன்றே கவலையைத் தீர்க்கும், ஆற்றா ஆழுகை அமைதியன்னை அழுது இளைத்தால் தூக்கிவருவோர் தோள்வலிக்காது சுடப்படும்போது நெய் கேட்காது, அன்னை என்னை அழவே படைத்தாள் என்னை அழவிடு என்னை அழவிடுஎன்றழுகிறார். தனியே எனக்கோர் இடம் வேண்டும் தலைசாயும்வரை நான் அழவேண்டும்என்கிறார்.

சாவல்லாத பிற காரணங்களும் அவரை அழவைத்திருக்கின்றன. ஆசையின் முடிவு ஏக்கம், அழுகையின் முடிவு ஞானம்.அழுகையைப் பற்றி அவரையே கேட்போம்.
எவ்வளவு அழுகிறீர்கள் என்று கேட்கிறோம்:
இறப்பிலே அழுவதெல்லாம் இதுவரை அழுதுவிட்டேன
எப்படி அழுகிறீர்கள் என்று கேட்கிறோம்:
கன்றுபோலழுதேன் ஆனால் கவிதையிலழுதேன்
அழுவதை ஊரார் கண்டு ஆறுதல் சொல்வாரென்றே
விழிகளிலே கண்ணீர் வைத்தால் வியத்தகும் இறைவன்! நானோ
மொழிகளில் அழுகின்றேன்.......என்
விழிகளில் கண்ணீர் காய்ந்துவிட்டது என்பதாலே!
ஏன் அழுகிறீர்கள் என்று கேட்கிறோம்:
பட்டபின் உணர்வதே என் பழக்கமென்றான பின்பு
கெட்டவன் அழுகைதானே கெடுவதை நிறுத்தவேண்டும்

என்னதான் உங்கள் துயரம் என்று கேட்கிறோம்:
தூதுபோய்த் தீருமென்றால் துயரத்தைச் சொல்லமாட்டேன்

இந்தத் துயரம் இன்றைய (15-6-72) குமுதத்தில் ஆறுமாதக் குழந்தையைப் பார்த்து ஏக்கமூச்சு விடுவதாகப் பரிணமிப்பதைக் காண்கிறோம்.
சொர்க்கத்தில் அண்ணாகடிதங்களில் (இந்த நடையை மற்றவர்கள் வசனகவிதை என்று போற்றும்போது, கவிஞர் தத்துவக் கட்டுரை என்றே குறிப்பிடுகிறார். கவித்துவ உரைநடையான இந்த புது இலக்கிய உருவ உத்தியில் போய் வருகிறேன், பாவமன்னிப்பு போன்ற படைப்புகளின் மூலம் இவர் காணும் வெற்றி பாரதி உட்பட யாருமே அடையாத அளவு பெரிதாகும்) வாழ்கிற நல்லாரை வாழ்த்துவதும் மாண்டுவிட்ட பெரியோர்க்கு தமிழில் அழுவதுமே இவன்தொழில் என்று தன்னை (கவிஞரை)ப்பற்றி அண்ணா அவர்கள் ஆண்டவனிடம் சொல்லுவதாக இவர் எழுதியிருப்பது மிகச் சரியான கூற்றாகும்.

கலைவாணர் மறைவு கேட்டதும் கவிஞன் அழுகிறான்.
விந்தியக் கோடும் பொய்யே! விரிகடல் அலையும பொய்யே!
சந்திரன் தாரகை தென்மொழி, தென்றல் யாவும் பொய்யாம்
நெருங்கிய கூட்டம் மோதி நேயனின் முகத்தைப்பார்த்து
வருந்திய வகையைக்கூறி வார்த்தைதான்தமிழிலில்லை.
பட்டினத்தார் சொன்னாரே, “சிறகிலிட்டுக்காத்தவளையோ நான் விறகிலிட்டுத்தீ மூட்டுவேன்என்று, அதனை மீறும் சோகம் கலைவாணரின் பிரிவில் கவிஞர்பால் கிடைக்கிறது.
வாரிய கைகளைத் தீ வாயினில் வைத்தோம்! இன்பம்
ஊறிய வாயில் கொண்டே அரிசியைக் கவித்தோம்
கருகிய சடலத்தோடு கலந்துநான் சென்றிடாமல் இருப்பதேன்

ஒருவனால் கோடிமக்கள் உயர்ந்தனர் என்றால் அந்த
அறிவுறு சாதிப்பாம்பைத் தாக்குவோம் நின்பாற்
பெற்ற தடியுண்டு கைகளுண்டே
என்று முதலாளிகளில் கல்விக்கு முழுமுதல்தந்த முதலான் அழகப்பரை சாவு தன் வயிற்றினிலே சர்வகலாசாலைக்கான இதமான ஆள் வேண்டும்என்று எடுத்துச் சென்றதாம்! 

தி.மு.க. தலைவர் தூத்துக்குடி சாமி கொலையுண்ட செய்தி கேட்டுத் துடிக்கிறார்.
இருநிறக் கொடியைத் தோழர் ஏறிட்டு நோக்குந்தோறும்
ஒருநிறம் உன்னைக்காட்டும்..........
மறுநிறம் வீணர் உன்பால் வாங்கிய உதிரம்காட்டும்
உன் விறைத்த நெஞ்சம் உடைந்துசிதறட்டும்
கொஞ்சமுமே வைக்காது குமுறும் கடல்கொள்ளட்டும்

திரையுலகில் எரிநட்சத்திரம் ஆக விழுந்துவிட்ட கருகிய மொட்டு தோழர் பட்டுக்கோட்டை பற்றிய பாடலில் கவிஞரின் நெருக்கமான அன்பு, பட்டுக்கோட்டையின் சிறுகுடும்பத்துடன் இளங்கவிஞரின் இனிய பண்பு இவையெல்லாம் இழையக் காணலாம்.
ஆற்றதமிழ் விழியில் கவியாகவந்திருக்கும் கல்யாணன்
கழுத்தில் தவழ்ந்துவரும் கைத்தறியின் துண்டெல்லாம்
பழுத்த தமிழ் பாடுமாம்!

இங்கு தன்னையொத்த ஒரு கவிஞனை சிறிதும் அழுக்காறின்றி கவிஞர் மனம் திறந்து மாகவிஞன் என்று ஒப்புக்கொண்டு பாடுவது அவரது மாசறியாப்பிள்ளை மனத்தையும் சேர்த்துக்காட்டுகிறது. இன்னும் பாரதிதாசன், ராஜரத்தினம்பிள்ளை, ஹங்கேரி வீரன் நாகி, டாக்டர் நாயுடு, தலைவர் நேரு மற்றவர்கள் மரணம் பற்றிய பாடல்களும் மரணமடையாப் பாடல்களே. இத்துறையில் பாரதி எதுவும் பாடியதாகத் தெரியவில்லை. பாரதிதாசன், சர். ஏ.டி. பன்னீர்செல்வத்துக்காகப் பாடியதன்றி எதுவும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணதாசனின் அரசியல் ஒதுக்கப்படலாம். ஆனால் அரசியல் கவிதைகள் ஒதுக்கப்படக்கூடியனவல்ல. மக்கள் தொடர்புக்கும், யாப்பை மீறிப்பாடவும், வறுமையில் சிக்கி நலிந்துவிடாமல் வாழவும் திரைப்படம் உதவியது போலவே பொதுமக்கள் தொடர்புக்கும் பிரமுகர்கள் பழக்கத்துக்கும் அகண்ட பார்வைகொள், உலகை விழுங்கு என்று கூறப்பட்ட உலகுதழுவிய சிந்தனைக்கும் அரசியல் உதவியது. மக்கள் கவிஞனாக வாழவேண்டியவன் அரசியலிலிருந்து தப்பமுடியாது. திலகர் வித்து பாரதியாகவும், காந்திய விதை நாமக்கல்லாராகவும் பிரதிபலித்ததாக ராஜாஜி சொல்வதுபோல, பெரியாரிசம் பாரதிதாசனையும், அண்ணாவழி கண்ணதாசனையும் பாதித்தது. கட்சி மாறினாலும் இந்தப்பாதிப்பு அழிந்துவிடவில்லை.

இவர் எழுதத்துவங்கிய காலம் தமிழக அரசியல் மொழியை மையமாக வைத்து இயக்கமொன்று வளரத் துவங்கிய காலம். எனவே கவிஞர் தி.மு.க.வில் சேர்ந்ததும், இயக்கம் அப்போது இருந்த மிடுக்கில் இவரது இளமை வேகம் சேர்ந்து முரட்டுத்தனமாக வெளிவந்ததும் இயற்கையே. அதனால்தான் பிறகு காமராஜரை வாழ்த்தும்போதுகூட இந்தியனென்பதனை இரண்டாவதாக வைத்து செந்தமிழன் என்பதனைத் தீரனே எலேயோஎன்றார். இன்றும் எம்.ஜி.ஆர். விவகாரத்தில் அவரது கருத்து, கட்சி மாறியும் அவரை விடாத அந்தப் பாதிப்பைக் காட்டுகிறது.

இனி, அரசியலின் பாதிப்பைச் சற்று விரிவாகப் பார்ப்போம். காப்பி குடித்துவிட்டு கையெழுத்துப் போட்டு சுதந்திரம் வாங்கியவர் என்று தாமே சொன்ன நேருவை -
போதி மரத்தான் போய்விட்டான் என்றிருந்தோம்
பாதிவழி போனவன் பண்டிதனாய் திரும்பிவந்தான்
என்று பிறகு பாடினார். இத்தகு முரண்கள் நூறு சொல்லலாம். இதற்குக் காரணம் தாள் கண்டார் தாளே கண்டார், தோள் கண்டார் தோளே கண்டார்என்று அவ்வப்போது படும் குறைநிறைகளை, அவையே முழு உண்மை என்று உணர்ச்சிவசப்பட்டுப் பாடியதேயாகும்.

டென்னிசனின் உலைசின் போல Iam a part of all I have met என்று இவர் வாழ்வதும் கவிதை முரணுக்குக் காரணமாகும். இருந்தாலும் நிலையான கவிதைகள் சில உண்டு. கல்லக்குடி மாகாவியம் நிற்காதே தவிர பெரும்பயணம் நிலைக்கலாம். எது நின்றாலும் அண்ணா நாற்பது நிலைக்கலாம். காமராஜர் பற்றிய சில பாடல்களும் நிலைக்கலாம். எது நின்றாலும் அழிந்தாலும் தனியே எனக்கோர் இடம் வேண்டும்என்ற நேரு மீதான இரங்கற்பபாடல், ‘புதிய தமிழ்நாடு satire’, போற்றுவோர் போற்றட்டும்..... என்ற நாமார்க்கும் குடியல்லோம் மனப்பான்மை காட்டும் தன்னிலை விளக்கம், ஜெயங்கொண்டானை மிஞ்சிய பரணி இசை ஒன்றுக்கே, ‘ஒரே தலைவன்என்ற பாடல், இப்படி சில நிலைக்கும்.

சில அரிய உவமைகள் அரசியல் கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. (உ-ம்) கடிவாளம் போட்டாலும் கழுதை குதிரை இல்லை.... கள்ளிச்செடிகளையே காக்கைகள் புகழ்ந்தாலும் முல்லைக்கொடியில் முறுவல் மறைவதில்லை.” ‘எழுகவேமுதலிய சீன எதிர்ப்புப் பரணிகளில் சில அந்தச் சூழலுக்குப் பிறகும் நிற்கும். கிருஷ்ணமேனனின் வீழ்ச்சி சிறியோர் வெற்றி என்று கூறுவதை ஒப்ப முடியாதவர்களும்கூட ஆலுக்கும் அரசுக்கும் ஓர் அரையடி அரிவாள்தானேஎன்ற உவமையில் சொக்கிப் போவார்கள். சுருக்கமாகச் சொன்னால், அரசியலை மிஞ்சிய கவித்துவமுள்ள வரிகளும் (பாடல்களல்ல) வாழ்த்துப் பாடல்களும், வரலாற்றுக் குறிப்புகளும் நிற்கும்... வசவு மறைந்து விடும்.

முரண்பாடு என்பது கண்ணதாசன் என்ற அரசியல்வாதிக்கு செய்தால் குற்றம்; கவிஞன் செய்தால் குறை அவ்வளவுதான்! பாரதி பாட்டிலும் முரணுண்டு. ஈரோட்டு இறைவன் என்று சொன்ன பெரியார் இருக்கும் போதே தமிழனுக்குத் தலைவனென எவருமில்லை என்று பாரதிதாசன் பாடவில்லையா? இதற்கு கல்யாணசுந்தரம் விதிவிலக்கு. அவர் விதியல்ல. விதிவிலக்குதான்.

பாரதி ரஷியப்புரட்சியைப் பாடிய முதல் இந்தியக் கவிஞன் என்பதுபோலவே உலகுதழுவிய பார்வையில் ஹங்கேரி நிகழ்ச்சிகளை உடனே பாட்டில் வைத்தவர் கண்ணதாசன். இது அரசியலால் வந்த வரவாகும். அரசியல் கவிதை அளவால் மட்டுமேயல்லாமல் இயல்பாலும் கடல். சிப்பியும் உப்பும் மீனும் அதிகம் - முத்துக்களும் இல்லாமலில்லை.

பாரதி புயலை ஆண்டார். கவிமணி தென்றலை ஆண்டார். பாரதிதாசன் இரண்டையும் ஆண்டார். கண்ணதாசன் புயலுக்கும் தென்றலுக்கும் ஆட்பட்டார் என்றார் அப்பாத்துரையார். கவிதையில் முரண்பாடுகளை இப்படியும் விளக்கலாம்.

கண்ணதாசனிடம் ஏற்படும் ஒரு பெரிய ஏமாற்றத்தையும் இப்போது குறிப்பிட வேண்டும். பாரதிக்குக் குயில்பாட்டு ஒரு சிறப்பான மறைபொருள் (allegamy) கவிதை; பாஞ்சாலி சபதம் ஒரு காவியம். பாரதிதாசனுக்கோ பாண்டியன் பரிசு ஒரு காவியப் படைப்பு; புரட்சிக்கவி ஒரு சிறுகாவியம்; குடும்பவிளக்கு சாகாவரம் பெற்ற ஜீவகீதம். குடும்பவிளக்கு பாரதிதாசனுக்கே உரிய குறைகள் ஏதுமின்றி பாரதிதாசனில் மட்டுமே காணும் அழகு நிறைந்த படைப்பு. இப்படிச் சொல்ல கண்ணதாசன் எதை எழுதியுள்ளார்?

மாங்கனி ஒரு தரமான படைப்பு. தலைவி உட்கார்ந்திருந்த, நடந்த தடம் தெரிகிறதா என்று தேடும் தலைவனிடம் கவிஞர் கேட்கிறார் தென்றல் வந்துபோனதற்குச் சுவடாஉண்டு?” இப்படிச் சில உண்டானாலும் அது கவிஞரின் முழுத்திறமையைக் காட்டவில்லை. தைப்பாவையில் சேரநாட்டுப்பகுதி முழுக்க முழுக்க 17-18ஆம் நூற்றாண்டுப் புலவர்களைக்கூட மிஞ்சும் சொற்சிலம்பம். சொந்தவரலாறு கூறும் பகுதிகள் அருமையானவை. 31 பாடல்களும் சொல்நயம், உவமைநயம், ஒன்பால்சுவையும் சொட்டச்சொட்ட அமைந்துள்ளன. ஆனாலும் பாவை (திரு-திருவெம்) நூலாகிவிட்டதால் அளவு 31 பாடலாகச் சிறுத்துவிட்டது. இனிதான் அலைபாயும் மனதை நிலையாக்கிக் கவிஞர் அவர் பேரை நிறுத்தவேண்டும் என்று நாம் பாடத்தோன்றுகிறது.

நான்காம் தொகுதியிலே வசவுகள் குறைந்து போயிருப்பதும், இப்போது அரசியல் கட்டுரைகளில்கூட நிதானம் வந்திருப்பதும், தத்துவக் கவிதைகள் அதிகம் வருவதும் நம்பிக்கையூட்டுவனவாக இருக்கின்றன. வெள்ளிவிழாக் கவிதையில் அவரே எழுதினார் -
“25 ஆண்டுகள் எழுதினேன் என்பதால்
என்னை நான் போற்றவில்லை
இன்னுமோர் காவியம் எண்ணுவேன் எழுதுவேன்
இலக்கியம் தூங்கவில்லை
என்பதும் நம்பிக்கைக்கு அரணாகிறது.

பலவிதமான மனது என அவரே கூறுவதையும் அப்பாத்துரையார் கூறுவதையும் சேர்த்துப்பார்த்தால் அதுவே கவிஞரின் பாடல்களுக்கு அஸ்திவாரம் என்று தீபத்திடம் அவர் சொல்லுவதும் புரிந்துவிடுகிறது. அந்த உணர்ச்சி வசப்பட்டு தன்னை இழக்கும் பலவீனமே பலமாய் அமைந்து சில சாதனைகளைச் சாதித்திருக்கிறது.

தமிழிலக்கியம் இதுவரை காணாத ஒரு இரங்கற்பா தொகுப்பை அந்த பலவீனம்தான் தந்திருக்கிறது. ஒரு தலைமுறை தமிழிளைஞர்தம் கொதிப்புக்கு அதுதான் இலக்கியத்தில் இடம் வாங்கிக்கொடுத்து இருக்கிறது. தான் படித்துருகிய தொன்மை இலக்கியங்களை அதுதான் ஜேம்ஸ்பாண்ட் தமிழனுக்குப் புரியும்படி அவரை எழுதத் தூண்டியிருக்கிறது. தலைவர்களிடம் தான் கண்டு கசிந்தவற்றை எல்லாம் வைத்து அரசியல் நாயகர்களை இலக்கிய ஏட்டில் இடம்பெறச் செய்திருக்கிறது. தன்னிரக்கக் கவிதையாலும் எளிய நடையில் தத்துவச்சிதறல்களாலும் இன்றைய தமிழுக்கு எழில் சேர்த்திருக்கிறது. சில -
பின்னோக்கிப் பார்க்கின்ற என் நோக்கில் ஏதேனும்
பிழைகண்ட போதுமென்னை
பிள்ளைக்குச் சோறூட்டி பள்ளிக்கு விடுக்கின்ற
பேருள்ள மிக்க அன்னை
தன்னோக்கில் காணட்டும் தமிழ்நோக்கு மிக்கார்கள்
தயவோடு கேட்கும் மனது

இரு கண்களும் சேர்ந்துதான் ஒரு பொருளைப் பார்க்க முடியுமே அல்லாது ஒரே கண்ணால் பார்த்து தெளிவு காண இயலாது என்று விழி மருத்துவர்கள் கூறுகிறார்கள். வாழ்வின் பிரச்சினைகளும் அறிவு, உணர்ச்சி என்கிற இரு விழிகளால் காணப்பட வேண்டியவனவாக அமைகின்றன. சில பிரச்சினைகளைப் பார்க்கும்போது ஒரு கண்ணோட்டம் மிகுதியாகவும் மற்றது சற்றுக் குறைவாக அமையக்கூடுமே தவிர, ஒரே விழியால் பார்த்து தெளிவு காண இயலாது. அதிலும் அரசியலில் - அறிவுக்கு அதிகாரம் தந்து சூதாடும் அந்த அரங்கில் - உணர்ச்சியையே வைத்து அரங்கேற்றியவர் நமது கண்ணதாசன். இதை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள்தான் அவர் இலக்கியத்தில் இமயமலை-அரசியலில் பரங்கிமலை என்று சொல்லி விடுகிறார்கள். அந்த விமர்சனம், அந்தக் கட்டுரைக்குப் பொருளான பிரச்சினையில் சரியாக அமைகிறதே தவிர, அதையே கண்ணதாசனின் அரசியல் பற்றிய விமரிசனமாகக் கொள்ளுவது விமர்சகனும் கண்ணதாசனைப் போல் உணர்ச்சிவசப்படுவதையே காட்டும்.

இனி, கண்ணதாசனின் அரசியல் நுழைவு, அதன் பின்னணி, உணர்ச்சியில் பங்கு, கவிதை மரபு இவை அவரது அரசியலை எவ்வாறு பாதித்தன என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது. அப்போது அவரது வெற்றி தோல்விகள் மட்டுமல்ல, அவற்றின் காரணங்கள், கண்ணதாசன் இனி செய்யவேண்டுவது என்பதையும் காணலாம்.

ஏழைகளே இல்லாத சீமையில் ஒரு ஏழைக்குடும்பத்தில் - அதுவும் பெரிய குடும்பத்தில் பிறந்த முத்தையா உலகைப் பார்க்கிறார். அவர் பார்க்கும் தமிழகத்து அரசியல் பொருளாதார அடிப்படையில் அமைந்திருக்கின்றது. அதனை ஆள்வதற்கு மாறாக, அது இவரை ஆள்கிறது. சாதி ஒழிப்பு, மொழிக்கு முதலிடம் என்ற முழக்கம், மேம்போக்கான சோஷலிசம் இவற்றைக் கொள்கைகளாகவும், நா-பேனா இவற்றையே கருவிகளாகவும், மேடைத்தமிழே முதலாகவும் கொண்டு ஆயிரக்கணக்கான கீழ்நடுத்தர-கீழ்த்தட்டு இளைஞர்களின் உடல், பொருள், உணர்வு கொண்ட உன்னத ஆதரவு என்ற உயர்ந்த சக்திக்கு வடிகாலாக விளங்கிய திராவிட இயங்கங்கள் இவரை ஈர்க்கின்றன. வறட்டு சித்தாந்திகள் ஒதுங்கிவிட, கவித்துவமும் ஜனநாயக போக்கும் கொண்டவர்களுடன் விண்ணீர்த் துளிகளிடையே ராபின்சன் பூங்காவில் அண்ணா கண்ணிர்த் துளிகளிடையே கழகம் காணும்போது” ‘மழைக்கு ஒதுங்குகிறார் கவிஞர்.

கலைத்துறை ஈடுபாடு இவரை கருணாநிதியுடன் இணைக்கிறது. தனக்கு கெட்டிக்காரன் என்று பட்டுவிட்டால் ஒருவனை உடனே கழகத்தில் இழுத்துப்போடும் கலையில் கைவந்த கருணாநிதி ஐந்தே பாடல்கள் எழுதிய கண்ணதாசனை 1949இல் பொள்ளாச்சி மேடையொன்றில் கவிஞர் கண்ணதாசன் என்று அறிமுகம் செய்கிறார். கண்ணதாசன் என்ற தனிமனிதனுக்கு ஓர் அந்தரங்க நண்பன், கண்ணதாசன் என்ற கவிஞனுக்கு ஓர் அங்கீகாரம் இரண்டும் கிடைத்த அதே மேடையில் கழகத்துக்கென்று ஒரு தொண்டனாக கவிஞரை கருணாநிதி வென்றுவிடுகிறார். செட்டிநாட்டிலேயே கழகக்கூட்டம் போடும் துணிவுக்கு வந்து, கலைஞர், நாவலர், தி.மு.க.வின் ஒரே உண்மையான இலக்கியவாதி டி.கே. சீனுவாசன் இன்னும் சிலரைக் (சிற்றரசு என்று நினைக்கிறேன்) கொண்டு கூட்டம் ஏற்பாடு செய்து கவிஞர் அரசியலில் ஆழ்கிறார்.

அந்தக் காலத்திலும் ஆலயவழிபாடு முதலியவற்றில் அவருக்கென்று ஒரு எண்ணம் இருந்தே வந்திருக்கிறது. ஆனால் யாரை நம்புகிறோமோ, அவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பாடுவது என்ற அவரது வாழ்வு முழுவதும் பரவித்துடிக்கும் பண்புக்கியையவே முதல் கூட்டம்கூட அமைகிறது.

சிவகங்கைச்சீமையைப் பற்றி ஒருவர் வரலாற்றைக் கட்சிக் கண்கொணடு பார்க்கிறபடம் - இருந்தாலும் உன்னதமான படம்என்று சொல்கிறார்: கவிஞர் உன்னதமான படம் என்ற பாராட்டைக்கூட ஒதுக்கிவிட்டுச் சீறுகிறார் : கட்சிதானேடா என் கண்ணைக் கொடுத்தது என்று.

ஒருமுறை (ஒரே முறை) தேர்தலில் போட்டியிட்டாரல்லவா கண்ணதாசன்? அப்போது (1957) மேடையில் நான் எம்.எல்.ஏ. ஆகிவிட்டேன் என்று அறிவித்துக்கொண்டு பேசுகிறார். இடையில் தோற்றாரென்ற செய்தி வருகிறது. உடனே சொல்கிறார். மாட்டுப்பெட்டிக்காரன் என் ஓட்டுப்பெட்டியை உடைத்து விட்டான்’.

உணர்ச்சி வேகத்தால் உண்டாகும் குழப்பத்தைக்கூறும் அதே வேளையில் உணர்ச்சியின் வலிமையையும் கூறத்தான் வேண்டும். உணர்ச்சிவசத்தில் வருவதுதான்உண்மை என்பதை, நிதானமாக யோசித்துப் பொய்யைக் கலந்து விடுபவர்கள் ஒருமுறை எண்ணிப்பார்க்க வேண்டும் என்கிறார் கண்ணதாசன். பொய்மையும் வாய்மையிடத்த என்பதனைக் கவிஞர்க்கு நினைவூட்ட வேண்டும். அப்பாவித்தனம், கோமாளித்தனம், தீர்க்கதரிசனம் (திராவிட நாடு பற்றி முன்னரே முரண்பட்டது) எல்லாவற்றுக்குமே இந்தக்கூற்று ஒருவாறு விளக்கம் தருகிறதா (ஆனால்மாட்டுப் பெட்டிக்காரன் இவருடைய ஓட்டுப்பெட்டியை உடைத்தானா என்று கேட்டுவிடாதீர்கள்).

நேரு இறுதியாக சென்னை வந்தபோது அவரைக் காலில் விழுந்து வணங்கி அதுபற்றி ஒரு பரபரப்பையே கிளப்பிவிட்டு கடைசியாக அதற்கு தன்பதிலில் கவிஞர் சொன்னார் : நான் தொட்டு வணங்கிய கால்கள் இந்த நாட்டுக்காக பல்லாண்டுகாலம் சிறையில் நின்ற கால்கள். சிறுநாய்களின் தலையைவிட, சிங்கத்தின் கால்கள் உயர்வானவையாகும்”. காலில் விழுவதை நியாயப்டுத்த முடியாவிட்டாலும் காப்பி குடித்துவிட்டு கைகுலுக்கி சுதந்திரம் பெற்றவர் என்று தாமே கிண்டல் செய்த நேருவின் உழைப்பை பாரம்பரிய காங்கிரஸ்காரர்களை விட தெளிவாக அழகாக விளக்க முடிந்தது உணர்ச்சியால்தானே!

தமிழ் தேசியக் கட்சி மாநாடுகளில் அரசியல் மேடையையே இலக்கியக் களமாக்கியது கண்ணதாசனின் உணர்ச்சிவசப்படும் தன்மைதானே. போய் வருகிறேன்என்று எழுதிய கட்டுரையில் கொந்தளித்த உணர்ச்சிதான் அந்தக் கட்சியை சிலகாலமாவது வாழவைத்தது.

அண்ணா, கருணாநிதி மீதான நம்பிக்கை தி.மு.க.வில் பிறக்க, சம்பத் மீதான நம்பிக்கை தமிழ் தேசியக் கட்சியைப் படைக்க, காமராஜர் மீதான நம்பிக்கை (கட்சியையும் சேர்த்து) காங்கிரசில் இணைக்க, இந்திரா மீதான நம்பிக்கை இன்றைய நிலையாக அமைந்திருக்கிறது. கொள்கைகளை விட தலைவர்களிடமே தன்னை இழந்ததால்தான் முரண்பாடுகள் ஆளையே மறைக்கும் நிலை ஏற்பட்டது. (காமராஜர், அண்ணா, நேரு, பெரியார் ஆகியோரைப் பற்றி இவரைப்போல் போற்றியும் தூற்றியும் யாருமே எழுதியதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாதலால் உதாரணங்களைத் தவிர்க்கிறேன்).

அரசியலில் முரண்பாடு ஒன்றும் அதிசயமல்ல. இந்தியாவின் elder statesman ராஜாஜியையே பார்ப்போம். அபேதவாதம் என்ற நூலை அளித்த அவர்தான் கம்யூனிஸ்டுகள் என் முதல் எதிரிஎன்றார். இந்தியை எதிர்ப்பவர்கள் ஈ.வே.ரா.வும் சோமசுந்தர பாரதியும் ஆக இருவரே என்றவர்தான் அதே பிரச்சினையில் அண்ணா சொல்லவும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழே கையெழுத்து போடுகிறேன் (1963இல் சட்டக்கல்லூரி தமிழ்மன்றத்தில்) என்று கூறினார். முரட்டு நம்பிக்கை மூடர்க்குரியது என்றார் பேராசிரியர் லாஸ்கி. Change of mind is no inconsistency என்று ஒருபடி மேலேயே போனார் ராஜாஜி.

ஜீவானந்தம் காங்கிரசில் இருந்தார் - சுயமரியாதைக்காரர் ஆனார் - கம்யூனிசத்தில் போய் நிலைத்தார். ஆனால் அவர்களைப் பார்த்து சிரிக்காத நாம், கண்ணதாசனைப் பார்த்து சிரிப்பது ஏன்? இவ்விருவரது மாறுதல்கள் அரசியல் மரபுவழிவந்த மாறுதல்கள். கண்ணதாசனின் மாறுதல்கள் கவிஞனின் உணர்வால் வந்த மாறுதல்கள். அவர்களது மாறுதல்கள் துதியாகவும் வசவாகவும் அமையாதபோது, கவிஞர் மாறியபோதெல்லாம் வாழ்த்துக்களும், வசவுகளும் முகவரி மாற்றி அனுப்பப்பட்டன. சுப்பிரமணியர் வணக்கம், கண்ணன் பாட்டு, சரஸ்வதிமாலை, வேதசாலையில் ஏறுதே தீ இவற்றைப் பாடிய பாரதியே, “ஆயிரந்தெய்வம் உண்டென்று கூறி அலையும் அறிவிலிகாள்”, “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சேஎன்று பாடியது போல், உலக உத்தமர் காந்தி என்றுரைத்த பாரதிதாசனே காந்தியை வருணாசிரமக் காவலனாகக் கண்டு காட்டியதுபோல, கண்ணதாசன் அரசியலில் அவரது கவிதாமரபு ஆதிக்கம் செலுத்தியே உள்ளது.

இந்த வளர்ச்சி எங்கு போனாலும் உடனடி விளைவை ஏற்படுத்துகிறது. கழகத்திற்கு ஒரு சரியான பிரசாரகராக இவர் அமைந்தார். ஆனால் இவர் விலகியபோது கழகம் உடைந்துவிடவில்லை. தமிழ் தேசியக் கட்சி செத்துப் பிறக்காமல் காத்தவர்கள் அதன் அன்னை, பிதாவான இவரும் சம்பந்தமாவர். ஆனால் அதற்கு நீடித்த வாழ்வளிக்க முடியவில்லை. குமரி அனந்தன், பி.சி.கணேசன், நாத்திகம் ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோருடன் இளைஞர் பேரணிசேர்த்தார். பேரணி கிடக்கட்டும், இந்த நால்வரில் ஒருவர்கூட கட்சிப் பிளவின்போது இவரோடு வரவில்லை. தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக்குழுஎனும் மாணவர் அமைப்பும் காமராஜருடன் தங்கிவிட்டன. ஆக அரசியலில் இவரால் அழகான நேர்முக வர்ணனைகளையும் பிரபலத்தை ஒரு கட்சியின் உள் நிலையையும் சிறப்பையும் குத்துவெட்டுகளையும் அறிய வேண்டுமானால் கண்ணதாசனை அனுப்பினால் போதும் என்று சொல்வதில் உணரலாம். இதுதான் அரசியலை இவர் பாதித்தது.

இனி, அரசியல் இவரைப் பாதித்ததைப் பார்ப்போமானால் சிவகங்கைச்சீமை படம் கனடா படவிழாவுக்கு அனுப்பப்படுவதாக இருந்து புறக்கணிக்கப்பட்டது. இவரது தி.மு.க. சார்பினால் ஏற்பட்டது போலவே, அடுத்தகட்டத்தில் எம்.ஜி.ஆர். பட்ங்களுக்குப் பாட்டெழுதும் வாய்ப்பையே இவரது காங்கிரஸ் சார்பு அரசியல் பாதித்ததைக் காணலாம்.

மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன் என்று தனி நபர் கதைகளையே படமெடுத்த இவரை இரத்தத் திலகம், கறுப்புப்பணம் என்று பொதுப்பிரச்சினைகளின் பக்கம் மீண்டும் திருப்பியது அரசியல்தான். கறுப்புப்பணத்தில் கையிலே பணமிருந்தால் பாடலில் அண்ணா, கருணாநிதி, ராஜாஜி, எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். முக்கூட்டணி (தி.மு.க., ராஜாஜி, லீக்) ஆகியவர்களை பெயர் சொல்லாமல் தாக்கி எழுதினாரே அது ஒரு சாதனையாகும். (திரை இசைப்பாடல்கள் இரண்டாம் தொகுதி, பக்கம் 337)

கண்ணதாசன் என்ற எழுத்தாளரையும் அரசியல் பாதித்தது. பாவமன்னிப்பு (திராவிடநாடு, தி.மு.க. தமிழரசுக்கழகம், தி.க. இவற்றைப் பற்றிய உயர்ந்த உருவகமாகும். கவிஞரின் அரசியல் எப்படியாயினும், இந்தப் புத்தகத்தில் உன்னதமான சோகமும், தன்னுணர்ச்சி அழகும் உரைநடைக் கவிதையாலான ஒரு புத்தம்புது உத்தி அமைப்பும் உருவமும் மிக உயர்வானவை). போய் வருகிறேன்போன்ற நூல்களும் நகரத் தந்தைஎன்ற அரசியல் அங்கத நாடகமும் (இது காலத்தால் நிற்காது. ஏனெனில் இதில் வேறெதையும் விட அன்றாட அரசியல் வசவு தவிர வேறு எதுவுமில்லை என்று சொல்லலாம்). சொர்க்கத்தில் அண்ணா போன்ற கட்டுரைகளும் தமிழிலக்கியத்தில் நிச்சயம் இடம் பெறும், வாழ்த்தும் வசவுமான கவிதைகள் அவையவற்றின் தகுதியில் நிற்கும் அல்லது சாகும்.

ஒரே சமயத்தில் கருணாநிதியின் தலைமையில் நூல் வெளியீடும், காமராஜர் தலைமையில் வெள்ளிவிழாவும் காண முடிந்ததை இலக்கியவாதிக்குத் தேவையான பொதுஜனத் தொடர்பு கிடைத்ததையும் அரசியல் விளைவுகள் என்று கூறலாம். எனவே பாரதி புயலை ஆண்டான்; தேசியவிநாயகம் தென்றலை ஆண்டார்; பாரதிதாசன் இரண்டையுமே ஆண்டார்; கண்ணதாசனையோ அவை ஆண்டன என்று அப்பாத்துரையார் செய்த இலக்கிய விமர்சனத்தை அரசியலை பாதித்த கவிஞர்களிடையே, அரசியலால் பாதிக்கப்பட்ட கவிஞர் என்றும் மாற்றி அரசியல் விமரிசனமாகவும் கூறலாம்.

இன்றும் இனியும்
கடந்த ஈராண்டு காலமாக கண்ணதாசனிடம் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை நம்பிக்கை தரும் அறிகுறிகளாக நாம் கருத இடமிருக்கிறது. மனிதனைப் பாடமாட்டேன் என்று சொல்கிறார். (அதைக் காப்பாற்ற முடிகிறதோ இல்லையோ, உணர ஆரம்பித்துவிட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.) காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு தனிநபர் தாக்குதல் மிகப்பெரும் அளவு குறைந்து விட்டது. கட்சி கண்ணை மறைப்பதில்லை. இப்போதும் அவர் தவறு செய்தாலும், அது கட்சி வெறியினால் அல்ல. உதாரணமாக அகில இந்திய சிறந்த நடிகர்விவகாரம். அந்த மனிதனை அழையுங்கள்,இந்திரா,இன்பக்கனா ஒன்று கண்டேன், அன்பில் தர்மலிங்கம் (துக்ளக்ஆயிரம் எண்ணங்கள்) வலது கம்யூனிஸ்ட் கடிதம் இவை நிதானத்தைக் காட்டுகின்றன.

என்னைப்பற்றிய விமரிசனத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிடுங்கள் என்று சொன்னவர், தன்னைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார். தெரிந்து கொள்வதில் துலங்குவது திருத்திக்கொள்வதில் முடியுமல்லவா? நிதானம் நிலைத்தால் ஒரு சக்தியாக விளங்க முடியாவிட்டாலும் கவனிக்கத்தக்க விமர்சகராக, மக்கள் கருத்தை உருவாக்கும் வகையில் புறக்கணிக்கப்பட முடியாதவராக அவர் வரமுடியும். இல்லையேல் அரசியலில் பரங்கிமலை என்பதே சரியான முடிவாக ஆகிவிடக்கூடியஆபத்து தெரிகிறது
கடுத் சுரமும் வயமும் குறைந்து
கூறும் இயலின் பொருளை மறந்து
பாடும் கலைஞரென வேடம்தனைப் புனைந்து
பாசாங்கு செய்து பணங்காசு பூமாலைக்கும்- நான்
(பாடமாட்டேன்)
செந்தாமரையில் கவிஞர்

திரைப்படப் பாடல்கள்
களம் : கவிஞரின் திரைக் கவிதைகளை விமரிசனம் செய்யப்புகுமுன் திரைப்படப் பாடல்களுக்கு இலக்கியத்திலும் மக்களிடையிலும் உள்ள இடத்தை நாம் நிச்சயம் செய்து கொண்டு, பாட்டெழுதுகிறவனுக்கு உள்ள வசதிகள்-சங்கடங்கள் ஆகியவற்றையும் தெரிந்துகொண்டு விடுவது நல்லது. டெலிவிஷன் இன்னும் டெல்லிக்கு வெளியே வராமலும், ரேடியோ பரவலாக வந்தாலும் ஓரளவு சினிமாவைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் இருப்பதாலும், எங்குமே உரைநடையைவிட பாட்டு நினைவில் தங்குவதாலும், சினிமாப்பாட்டு வேறெதையும்விட விரைவாக விரிவான பொதுத்தொடர்புக் கருவியாக அமைகிறது. ஆனால், பல நேரங்களில் கதையைப் படர்ந்தோ, கதாபாத்திரங்களின் எண்ண வெளிப்பாடாகவோ அமைவதால் அவை படத்தின் ஆயுளை மீறி, காலத்தை வென்று நிலைக்க முடிவதில்லை. அதனால் இலக்கிய உயரத்துக்குவரும் உரம் சில பாடல்களுக்கே அமைகிறது. சீர், தளை, அடி, தொடை என்ற கட்டுப்பாடுகளையும் ராகதாளங்களையும் மீறி திரைப்பாடல் எழுகிறது. எனவே எழுதுகிறவனுக்கு இங்கு கட்டுகள் குறைவு. ஆனால் சிலசமயம் மெக்சிகன் சங்கீதம், (பிற தென்னமெரிக்க இசைகளும் இதிலடங்கும்) நமது மரபு வழிஇசை இரண்டிலும் அடங்காத-இரண்டிலும் கதம்பமான ஒரு கலப்பட இசையில் அமைக்கப்படும்மெட்டுக்குப் பாட்டெழுதும் பப்பாயம் பப்பாயம் பம்பம், ஜின்ஜின்னாக்கடி சங்கடங்களும் அவனுக்கு மட்டுமே உரியவை. போதாததற்கு டப்பிங் படங்கள் வேறு.

சூழல் : சக்ஸஸ், சக்ஸஸ் என்று சொல்லிக்கொண்டு வந்த கணேசனைப் போல, கலங்காதிரு மனமே (1948) என்று சொல்லிக்கொண்டு கவிஞர் திரைக்கு வந்த காலத்தில் தமிழ்த்திரையில் பொருளாழம் மிக்க கவிதை எழுதுபவர்கள் குறைவாயிருக்கவில்லை. மணமகள், பராசக்தி போன்ற படங்களுக்கு எழுதியவரும், கொடுத்த மெட்டுக்குப் பாட்டெழுதுவதிலும் சொல்லழகும் கருத்தழகும் தொகுத்தளிக்கும் கவியும் தேவதாஸின் அமரத்வமான பாடல்களையும், கண்ணதாசன் பிரபலமடைந்த பின்பும்கூட, தன்னைத்தானே நம்பாதது சந்தேகம்முதலிய பாடல்களையும் எழுதியவரான நாராயணகவி, பாபநாசம் சிவனவர்கள், எளிய, கிராமிய இசையிலான, சொல்லடுக்கு குறைவானாலும் சிறப்பான பாடல்கள் எழுதிய/எழுதும் மருதகாசி, வானம்பாடி ஆத்மநாதன், ஜாலிலோ முதல் கர்நாடக இசைவரை எழுதிய ஆண்டவனே இல்லையேதஞ்சை ராமையாதாஸ் - ஆகியவர்களை திரையுலகு அப்போதே இனங்கண்டு மதித்து வந்தது. டப்பிங் படங்களுக்கு பாடல் எழுதுவதில் சிறந்த மூவரில் கவிதை நயமும் உள்ளவரான (உதாரணம் : கல்யாணஊர்வலம் வரும்...) கம்பதாசன் முதலிய என் நினைவில் மங்கிய, மறுக்கப்பட்ட பிறரையும் நினைவுகூருகிறார்கள். தமிழரசுக் கழகப் பண்பாட்டில் வளர்ந்தவரும் முதலாளிமுதலிய படங்களுக்கு எழுதியவருமான கா.மு. ஷெரீப், தத்துவக்கனிகள் ஆலங்குடி சோமு, மறைந்த மாயவநாதன், கலைஞர் மு. கருணாநிதி, மொட்டில் உதிர்ந்த மேதை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், அமுதும் தேனும் எதற்கெனக் கேட்கும் சுரதா ஆகியோரைச் சமகாலத்தவராகக் கொள்ளலாம்.

வளர்ச்சியும் சிறப்பும் : முதலாவதாகக் கண்ணதாசனை சுயமாகவும், பிறகு ஒப்பிட்டும் பார்ப்போம். முதல் பத்தாண்டு காலம் மெட்டுக்குப் பாட்டெழுதினேன். பிரபலமாக முடியவில்லை. சில பாடல்களே தரமாய் அமைந்தன. நானே படமெடுப்பதுதான் வழியென்று மாலையிட்ட மங்கைஎடுத்து ஆசைக்குப் பர்ட்டெழுதினேன்என்று கவிஞர் சொன்னது சரியே. அந்த இருண்ட காலத்திலும் சில பாடல்கள் சிறப்பாய் அமைந்தன. சிவகங்கைச் சீமையைத் தொடர்ந்து கறுப்புப்பணம்வரை தன் படங்களில் இவர் பாடல்கள் யாவும் சிறப்பாகவே அமைந்தன. பாடுபவள் பணக்காரி எழுதுபவள் ஏழை” - (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்) என்றநிலை மாறி நோட்டெழுதிப் பெற்ற கடன் யாவும் பாட்டெழுதித் தீர்க்கும்” (....கண்ணதாசன்) நிலை வந்தது; கவிஞர் எழுதுவதைப் பாட்டாக்க மெல்லிசை மன்னரெல்லாம் வந்தார்கள்; பாவ மன்னிப்பு, பாசமலர் உள்ளிட்ட பீம்சிங்கின் கரப்படங்கள், பாதகாணிக்கை, ஆடிப்பெருக்கு, பெரிய இடத்துப் பெண், பாசம், திருடாதே முதல் துலாபாரம், வியட்நாம் வீடு, அன்னை வேளாங்கண்ணி வரை அது வளர்ந்தபோதே, “பருவம் என்பது உருவத்திலேறி”, “பாலிருக்கும் கிண்ணம்”, “அனல் கொண்ட சரமோ”, “மஞ்சம் நெஞ்சம், இடமோ சின்ன இடம்”, “தொட்டுவிடத் தொட்டுவிடஎன்று அந்த வகையிலும் பிறர் தொடாத உயரங்களைத் தொட்ட பாடல்கள் வளர்ந்தன. இரண்டுக்கும் காரணம் கவிஞரின் செல்வாக்குதான். எல்லாம் இவரே எழுதவேண்டும்; ஜட்டியொடு ஒருத்தியை நிற்கவைத்து எழுதச் சொன்னால் என்ன எழுத முடியும் (கவிஞர் கண்ணதாசன்). செல்வாக்கில்லாமல் டப்பாங்குத்து எழுதிய காலம் போலவே, உச்சம் வந்தும் தொந்தரவு தாங்காமல் டிக்டேட்செய்து எழுதியவை அவை. ஆபாசத்தையும் அழகாக எழுதுவதில் இவர் ஒருவரே கண்ணில் படுகிறார். கருங்கல்லுச் சிலையோ? காதலெனக்கிலையோ? வரம்பு மீறுதல் முறையோ?’ எனக் கலயாணப் பரிசின் மூலம் கேட்ட கல்யாணசுந்தரம் கூட்டம் ஒருபக்கம். மாமா  மாமா மசா ராமையாதாசும் நமது வாலியும் மறுபக்கம். இரண்டுக்குமிடையில் சில பாடல்களிலாவது அழகிய ஆபாசம் என்ற புதுமை நிகழ்ச்சியை ஏற்படுத்திய ஒற்றைத் தனியாள் கண்ணதாசன்தான். இந்தப் பாவத்தைத் துவக்கி வைத்தவனே நான்தான். அந்தப் பொறுப்பை நானே ஏற்கிறேன். ஆனால் இன்று, என்னை ஆபாசத்தில் மிஞ்சுகிறவர்கள் அழகை விட்டுவிட்டார்களே!” (லயோலா கல்லூரி மாணவரிடையே 1964இல் கண்ணதாசன்).

இதேபோல் திரையில் தனிநபர் வழிபாடுகளைக் கொண்டுவந்தவரும் இவர்தான். பாரிவள்ளல் மகனா, சேரனுக்கு உறவா, செந்தமிழ் நிலவாஎன்று பணத்தோட்டத்தில் சி.ஐ.டி.யைக் காதலி கேட்கிறாளே, அந்த சி.ஐ.டி.யை வள்ளலாகவும், கேரள நாட்டவராகவும் காட்டினார்களா, இல்லை நிலவு (சந்திரன்) என்ற பெயருடைய எம்.ஜி.ஆருக்கு அது பொருந்துகிறதா? இன்றைக்கு அடுத்தவர்கள் நான் செத்துப் பொழச்சவண்டா வரை கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். இதிலும் வழிபாடு மிஞ்சியது. வளம் குறைந்தது.

படங்கள் மாறுதல் இல்லாமல் தேவதாஸ், மந்திரிகுமாரி, வேலைக்காரி, ஹரிதாஸ், கள்வனின் காதலி, திருடாதே, கல்யாணப்பரிசு, சாரதா போலன்றி திரும்பிப்பார்த்தால் நாம் எங்கே போகிறோம் என்ற மலைப்பை ஏற்படுத்தி, ஒரே boy meets girl கதையாகவும் மாடர்ன் தியேட்டர்ஸ் ஜெய்சங்கர் (ஜேம்ஸ்) பாண்டாகவும் made to order - எம்ஜிஆர் கதைகளாகவும் போனதால் அவர் பாடல்களில் reception குறைவு (அவரே கிடையாது என்று சொல்லவில்லை) என்பதைக்கூட ஒப்ப முடியவில்லை. பொன்னான கைகள் புண்ணாகலாமோ (திரும்பிப்பார், காதலிக்க நேரமில்லை), செங்கரும்புச்சாறும் தென்னை இளநீரும்முதலிய வரிகள் உதாரணங்களாகும். ஆபாசம் (அதிலும் சில அழகுகள்), ரிபெடிஷன் (அதுவும் குறைவு), தேவையற்ற தனிநபர் வழிபாடு போன்ற குறைகளை மறுக்கமுடியாது. ஆனால் அவற்றுக்கு சூழ்நிலையே காரணமென்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இனி சிறப்புக்களுக்கு வருவோம். இலக்கியத்தைத் திரைக்குக் கொண்டுவந்து திரைக்கதை போல் திரைக்கவிதை செய்தவர் கவிஞர். இதில் பட்டுக்கோட்டைகூட இவ்வளவு பரவலாக வெற்றி பெறவில்லை. பாரி மகளிரின் பாடலிலிருந்து அன்றொருநாள் இதே நிலவில் மாணிக்க வாசகரின் இசைமரபில் ஆட, ஆட’ (பெரிய இடத்துப்பெண்), சங்கப்பாணியில் அத்திக்காய் காய் காய்’, அதே பரிசோதனையில் அடுத்தபடியாக அத்தான், என் அத்தான்’, பாரதிதாசனின் குடும்பவிளக்கு பாணியில், அதைவிடச் சிறப்பாக பார்த்தேன், சிரித்தேன்’... இவற்றைச் சொல்லலாம். இவை இலக்கியத்திருட்டு என்போர் குறுநோக்கும் ஓரப்பார்வையும் உடையோரே ஆவார். கவிஞர் தரமான ரசிகராக இருந்ததன் விளைவுகளே இவை. கவிதைகளிலும் பழங்கவிதை-புதுப்பாடல் எனத்தாமே விளக்கிக் கூறியிருப்பதை இவர்கள் காணவேண்டும். யாப்பிலும் கூட விருத்தம் போலமைந்த நதியெங்கே போகிறது’... முதலியவை கவிஞரின் இலக்கண அறிவு இசையுடன் கூடி பாமரரையும் கவர்ந்த வெற்றிச் சின்னங்களாகும்.

இலக்கியத்தில் மட்டுமல்ல, அரசியலில் அவரை மிகவும் பாதித்த அண்ணாவின் பேச்சுகள்கூட பாடல்களுக்கு எடுத்தடி கொடுத்துள்ளன். எங்கிருந்தாலும் வாழ்க”, என்ன (என்.வி.) நடராசன் :கரூரிலிருந்தா வருகிறீர்கள்?. எல்லாரும் கருவூரிலிருந்து பாலூர் வழி வந்து வேலூர் பார்த்து விழியூர் மூடுபவர்தானேஎன்று அண்ணா கேட்டது ஆகியவை தமக்கு அடியெடுத்துக் கொடுத்ததாகக் கவிஞரே கூறுவதைக் குறிப்பிடவேண்டும்.

சுவைகளின் எல்லை கண்டவர் கவிஞர் கண்ணதாசன் என்பதை விரித்தால், பக்கம் போதாது என்பதால் படங்களைச் சுட்டிக்காட்ட - தேவையானால் பாடல்களைத் தொட்டுக்காட்ட - முயல்கிறேன். அமர காதலுக்கு மணப்பந்தல், வெண்ணிற ஆடை, பாவமன்னிப்பு, பாலும் பழமும், இன்ன பிற. சோகத்துக்கு மயக்கம் எனது தாயகம் (இதில் கரையாத மனிதர் உண்டோ?), கண்ணிழந்த மனிதர் முன்னே, நெஞ்சில் ஓர் ஆலயம் பாடல்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பெண் எனும் தெய்வம் தெருக்கல்லாய் மதிக்கப்படுவதைக் கண்டு குமுறுவதில் சித்திரத்தில் பெண்ணெழுதி’ ‘இல்லறமொன்றை நல்லறமென்று’, ‘என் அன்னை செய்த பாவம்இவற்றைக் குறிப்பிடலாம். தத்துவத்தில் பிறக்கும்போதும் அழுகின்றாய்’ ‘ஓகோகோ மனிதர்களே’, ‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான்’. அத்தனைக்கும் முன்பாக ஆசையே அலைபோலே’, ‘போனால் போகட்டும் போடா ஆகியவற்றைக் கூறலாம். குழந்தையைப்பற்றி - மொழிபெயர்ப்புகள் கண்ட மழைகூட’, ‘முத்தான முத்தல்லவோ’, ‘சிங்காரப்புன்னகை’, மலர்ந்தும் மலராத முதலியவை கவிதைகளல்ல - காவியத்துணுக்குகள். உடலழகுக்கோ ஓராயிரம் பாடல்கள்.

பல்சுவைத் தனித்துளிகள் : தன்னை மறந்து பாடும் கவிஞர் தன்னையே பாடிய பாடல் ஒன்றும் உண்டு. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’. அப்பாடலில் சொல்கிற ஒரு பாடலிலே என் உயிர்த்துடிப்பு, நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு, காவியத்தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெருந்தலைவன், நிரந்தமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலுமெனக்கு மரணமில்லைஆகிய வரிகள் உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.

பாரதியின் செந்தமிழ் நாடெனும்பாட்டுக்கு parody ஆக புதிய தமிழ்நாடு கவிதை எழுதியவர், தானே எழுதிய என்ன நினைத்து என் அழைத்தாயோபாடலையே பகடி செய்து சோப்பு சீப்பு கண்ணாடியில் நகைச்சுவைப் பாட்டாக்கியதைக் குறிப்பிட வேண்டும். தீனா, மூனா கானாஆக்க அரசியல் பாடலென்றால் கையிலே பணமிருந்தால்...பாட்டில் பெயர் கூறாமலே ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். எஸ்.எஸ்.ஆர் ஆகியவர்களையும், லீக்-ராஜாஜி, தி.மு.க. கூட்டணியையும் தாக்கியிருப்பதை வசவு அரசியலிலும் ஒரு சமத்காரச் சொல் விளையாட்டு என நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.

இதைக் கூறும்போதே கவிஞரின் அரசியல் வந்துவிடுகிறது. தீனா மூனா கானா உடனும், எங்கள் திராவிடப் பொன்னாடே என்று தேசிய கீதத்துடனும் துவங்குகின்ற அரசியல் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்என்ற சமதர்மப் பாட்டாலும், ‘உழைக்கும் கைகளே’, ‘ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும் வேறுபட்டால் என்ன செய்வது’, புரட்சி ஓங்குக’, ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஓரினத்து மக்களே’, என்ற மார்க்சிய கீதமாகவும், ‘அமைதிப்புறாவே, அமைதிப்புறாவேஎன்று சகவாழ்வுப் பாடலாகவும் புத்தன் வந்த திசையிலே போர்என்ற தேசியப் பரணியாகவும் ஒருமைப்பாடு விருது பெற்ற ராமன் என்பது கங்கை நதிஎன்ற பாட்டில் மதச் சார்பின்மையாகவும், பனி படர்ந்த மலையின்மேலேநேரு துதியாகவும் அந்த சிவகாமி மகனிடம்... சேரும் நாள்என்று காமராஜரிடம் இணையும் பாட்டாகவும் மலரக் காண்கிறோம். இன்றைய கட்சியும் அநேகமாக வந்து விடும்.

தி.மு.க. மேடையிலேயே திலகத்துடன் வந்த அந்தக் கவிஞரின் பக்தி பிற்காலத்தில் திரையிலும் ஒலித்தது. இறைவா, இறைவாஎன்று கறுப்புப்பணத்தில் கிறிஸ்துவகீதம், அல்லாவின் பேரைச் சொல்லி’, பெயரை விளங்க வைக்கும் கண்ணன் பாடல்கள் தசாவதாரம் விளக்கும் திருமால் பெருமைக்கு’ (இது தசாவதாரக் கதைகள் பத்தையும் ஒவ்வொருவரியில் சொல்வதாக அமையும் ஒரு அருமையான படைப்பு) அதேபோல் ஆறுபடைவீடுஎன்ற தல மகிமைப்பாடல். சிலுவைக்கு ஹிந்துக் கண்ணோட்டத்தில் புதுப்பொருளாக ஒரு வழியை மறு வழியால் மளைப்பது அதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்”- (ஏசுநாதர் பேசினால்....) என்ற வரிகள் கவிஞரின் ஆழத்துக்கு அடையாளடமாகும்.

பெண்ணுரிமை பேசுகின்ற பெருங்கவிஞர் ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவாஎன்று எழுதியபோது விதவா விவாகத்தை எதிர்க்கும் பிற்போக்கு என்று இருவண்ணக்காரர்கள் இவற்றில் புது வண்ணமடிக்க முயன்றதுமுண்டு. இது பொருளுக்காகப் பாடியது என்றும் சொன்னார்கள். ஆம். இது கதாநாயகியின் கருத்தை விளக்கும்  பொருளுக்காக பாடியது. திரையில் ஒரு சங்கடம், கவிஞன் நாடகாசிரியனைப்போல் தன்னை மறைத்து பாத்திரத்தை விளக்க நேரிடுவதாகும். சில சமயங்களில் முரண்பாடுகளை அது விளைக்கலாம். ஆனால் அதற்கு கவிஞன் பொறுப்பல்ல. கண்ணதாசனின் அரசியல் கவிதைகளின் முரண்பாடுகளுக்கு மட்டுமே அவர் பொறுப்பேற்க முடியும்! இன்னும் சொன்னால் படக்கவிதையில் இரு முரண்களையும் காட்ட முடிந்தால் அது பெரும் வெற்றியேயன்றி குறையல்ல.

பாத்திரங்களை பிற்காலத்தவரும் சமகாலத்தில் படம் பார்க்காதவரும்கூட சுவைக்க முடியாவிட்டாலும் திரைக்கவிஞர் என்ற கோணத்தில், வேறெதையும் விட இந்த வெற்றிதான் முக்கியம். அவ்வகையில் அவள் பறந்து போனாளே’, ‘ஒரே ஒரு ஊரிலே’, ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’, காதலிலே பற்று வைத்தாள்’, அன்னை என்பவள் நீதானா’, படித்ததினால் அறிவு பெற்றோர்’, ‘கடவுளும் நானும் ஒரு ஜாதிஆகியவற்றைக் குறிப்பிடலாம். நொண்டிக்கு ஆறுதலாக தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் (இதில் முதல் வரியில் பொருட்குற்றம் இருந்தாலும் அது அவன்குற்றம்!), ஊமைக்கு ஆறுதலாக மௌனமே பார்வையால்பாட்டில் முத்துச்சரமேஎன்று துவங்கும் பகுதி ஆகியவற்றைக்குறிப்பிடலாம்.

ஒப்பீடு
மருதகாசியிடம் சொல்லழகு சற்றுக்குறைவு. உடுமலையாரின் அமைப்பில் நளினம், வகைகள் (varieties) குறைவு. ராமையா தாஸ் எழுதியவற்றில் அநத் காலத்தின் பாதிப்பினால் டப்பாங்குத்துக்களே மிகை. பாபநாசம் தியாகையர் பக்தியில் எட்டாத உயர்வில்லை, ஆனால் பக்திக்கு வெளியே வரவில்லை. கம்பதாசன், ராமையா தாஸ் போலத்தான். இரண்டாவது, கருத்துத்தெளிவிருந்த அளவு மொழித்தெளிவு இங்கு சற்றுக் குறைவு. குயிலன் டப்பிங்கில் குறைபாடுகளுக்கு ஒரு பிரதிநிதி. கா.மு.ஷெரீப் அவர்களின் படைப்புகள் குறைவு. சோமு, மாயவநாதன் ஆகியோருக்கும் இதுபொருந்தும். இருந்தும் தன்னுணர்ச்சி வெளிப்பாட்டில் (Lyrical Beauty) இவர்களும் சிறப்பான இடம் பெற்றவர்கள். ஆத்மநாதன், பாலு, செங்குட்டுவன், கருணாநிதி, ஜெயகாந்தன் (தென்னஙகீற்று ஊஞ்சலிலே, அழுத கண்ணீர் பாலாகுமோ) தஞ்சைவாணன் ஆகியவர் படைப்புகளும் அளவினால் மிகக்குறைவு.

சுரதா என்னால் புரிந்துகொள்ள முடியாத கவிஞர். வாழ்க்கையின் ரகசியம் புரியாது’ ‘அமுதும் தேனும் எதற்கு’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடாமுதலியவற்றைப் படைத்த இவர்தான் தமதுபிற பாடல்களையும் படைத்தாரா? புரியாது. புரியாது. சிப்பி, உப்பு, மீன், முதது எல்லாம் உள்ள கடல் இவர். ஆனால் முன்னவையே அதிகம். கண்ணதாசனுக்கு இணையாக வேண்டியவர் - ஏமாற்றிவிட்டார். வாலி - தனக்கெனத் திறமையிருந்தும் அதைவிட கண்ணதாசன் பாணியிலேயே திரையிலும் திரைக்கு வெளியிலும் கூட முயலுவதுதான் குறை. விகடனில் நான் யோக்கியன் என்று கவிதையில் பார்க்கலாம். இவரது உடலழகு, காதல் பற்றிய படப்பாட்டுக்களையும், பெரும்பாலான எம்.ஜி.ஆர். துதிகளையும் பாருங்கள். ஆனால் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’, ‘பிறந்த இடம் நோக்கி ஆகிய பாடல்கள், பாரதிதாசனை ஒற்றி எழுதும் கடுமையான சாதனையில் மிகப் பெரிய வெற்றியான அவளுக்கும் தமிழென்று பேர் மற்றும் நினைவில் மங்கும் சில பாடல்களைக் குறிப்பிடலாம். பூப்போல பூப்போல பிறக்கும் முதலிய பாடல்கள் எழுதிய கண்ணதாசனின் உறவினரான பஞ்சு அருணாசலம் கண்ணதாசன் என்ற ஆலமரத்தடியில் வளர முயலும் வாழைமரம். அரும்புக்கவிஞர். வளரலாம்.

கண்ணதாசன் சூரியன், வாலி அதைப்பிரதிபலிக்கும் நிலாவாக ஆக முயலும் தீபம். பஞ்சு ஒரு அகல். ஆனால் நிலாவாக முயலாத அகல். இப்போது ஒருவரை நீங்கள் தேடுகிறீர்கள் அல்லவா - ஆம். அவன் ஒரு எரி நட்சத்திரம். எவனுடைய பாடல்களைக் குறிப்பிடாவிட்டால் கண்ணதாசன் படப்பாடல்கள் பற்றிய விமரிசனம் எதுவும் நிறைவு பெற முடியாதோ, எவன் மக்கள் கவி, ’சின்ன வயது மகன்’, விழுது விட வந்த மகன்’, என் மாகவிஞன்’, கற்ற தமிழ் விழியில் கவியாக வந்திருக்கும்; கழுத்துத் துண்டெல்லாம் பழுத்த தமிழ் பாடும்என்றெல்லாம் கண்ணதாசனால் அழைக்கப்பட்டானோ எவன்
நெஞ்சொடிய ஓலமிடும் நேயர் முகம் காணாமல்,
காத்திருக்கும் படவுலகில் கையளைவைக்கருதாமல்
பத்தாண்டுப் பாட்டெழுதிப் படவுலகம்போதுமென்று
இத்தரையில் கதை முடித்து நித்திரையில்சேர்ந்தானோ,
வெண்திரையில் தமிழ் எழுத விசாலாட்சிமகனிருப்பான்
விண் திரையில் நானெழுத நாளாச் சென்றொளிந்தானோ....?”
அந்தப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுஎன்ற சமூகப்பார்வை, ‘திண்ணைப்பேச்சு வீரரைஒதுக்கிய அரசியல், காதலிலே தோல்வி - அகம் காட்டும் கல்யாணப்பரிசு, ‘உழைப்பறியா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்என்று கேட்ட மார்க்சிய ஞானம் - இவற்றில் எதை மறக்க முடியும்? கண்ணதாசன் கூட சறுக்கி விழுந்த ஆபாசத்தில், சறுக்காத வீரக்கால்கள். டீ, டீ, டீஎன்ற பாட்டில் தத்துவம் கலந்த முதிர்ந்த மனம், துள்ளாத மனமும் துள்ள வைக்கும் கீதம், துன்பக்கடலைத் தாண்டும்போது தோணியாவது (அவன்) கீதம்.

அவர் உயிரோடிருந்தால் - என்று பேசுவது விமர்சனக் கலையில் எல்லாரும் ஒப்புக்கொள்ளும் விவாத முறையல்ல. ஆயினும் அதைத் தவிர்க்கவும் முடியாது. திரைக் கோட்டையில் புகழ்க்கோட்டை நிறுவிய பட்டுக்கோட்டை எரிநட்சத்திரமாக உதிராதிருந்தால் நாட்டுக்கோட்டையை மிஞ்சியிருப்பார் என்று சொல்ல முடியாது. ஆனால் இணையாக அமைந்திருக்கலாம். பக்திப்பாடல்கள் புனைவதும், ஆபாசத்தை அழகாய்ச் சொல்வதும் அவருக்கு இயலாத ஒன்று என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும். ஒன்றுமட்டும் சொல்வேன். கண்ணதாசன் தரங்குறையாமல் பட்டுக்கோட்டையின் உடனிருப்பு - ஆரோக்கியமான போட்டி - தடுத்திருக்கும். தமிழ்நாடு இருமேதைகளை ஒரே சமயத்தில் பெறும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.

முடிவாகச் சொன்னால் இக்கட்டுரையில் கூறப்படும் குறைகள் கூட சினிமாப் பாடல்களின் அமைப்பு முறையையே நான் மாற்றினேன் என்று அடக்கத்தோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்என்று கவிஞர் கண்ணதாசன் கூறுவதை மறப்பதற்குப் போதுமானவையல்ல. மாறாக, இவர் அடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறார், அதற்கும் கொஞ்சம் மேலேயே அவர் சாதித்திருக்கிறார். துக்ளக் ஒருமுறை இவரை கவிதையில் இமயமலை; அரசியலில் பரங்கிமலை என்று கூறியது. இரண்டாவது கருத்து வேறு கட்டுரைக்காக. ஆனால் முதல் கருத்தில் ஒரு சொல் சேர்த்து திரைக் கவிதையில் இமயமலை என்பது மறக்கவோ, மறுக்கவோ, மறைக்கவோ வேண்டாத வெள்ளிடைமலையாகும்.


5 comments:

  1. இளைஞராக இருந்தபோது வேணுகோபாலன் எழுதிய கட்டுரை. மீண்டும் திருத்தி எழுதல் அவசியமாகிறது. காலம் இக்கட்டுரையில் இடம்பெற்ற மனிதர்களை அன்று இருந்ததிலிருந்து வேறாகவும் உருமாற்றியிருக்கிறது அல்லவா? ஆயினும் தனது வாசிப்பின் அகலத்தை நன்கு உணர்த்தியிருக்கிறார் வேணு. மறு பிரசுரம் செய்தமைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. I can find fault, argue, redo any or some part of this article but, OMG! it's a great work. Kannadaasan is(?!) lucky. I remember Sivaji's fans doing a lot work at Santhi Theatre but this one has done justice to the writer's sincere efforts in bringing out the best(s) of Kavignar.

    by the way I cannot forget kannadaasan's one particular line, "aram paadi vitteno ariyen, siru kuruvi thiram paada maattaamal settha kathai paadugiren".

    My God! even now tears are rolling down on my cheeks, it happens everytime I recall this verse. That is the poet.

    ReplyDelete
  4. வாசிக்க சற்று கடினமாக இருந்தாலும், கவிஞரை ரசித்து நிறைய அவதானித்து எழுதியிருக்கிறார்...

    ReplyDelete
  5. சிறந்த கட்டுரை

    ReplyDelete