Monday 9 March 2015

முகங்கள் (சிறுகதை)



டைரக்டரின் அறை பரபரப்பாயிருந்தது. அவருடைய பி.ஏ.வின் ரூமில் இருந்த அழைப்புமணி இடைவிடாமல் ஒலித்து இரண்டு பியூன்களையும் ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தது. டீ வைத்த டிரேக்களோடு உள்ளே போவதும் காலிக் கோப்பைகளை எடுத்து வருவதுமாக அவர்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். டைரக்டரின் ரூமில் அவருக்கு எதிரே இருந்த நான்கு நாற்காலிகளிலும் வரவேற்புப் பகுதியிலும் ஆட்கள் நிரம்பியிருந்தனர். போதாததற்கு பி.ஏ.வின் ரூமிலும் சிலர் காத்துக் கொண்டிருந்தனர். கோட்-சூட் அணிந்தவர்கள், பைஜாமா-குர்தா போட்டவர்கள், வேஷ்டி அணிந்து சால்வை போட்டிருந்தவர், தார்ப்பாய்ச்சி வேட்டி கட்டியவர், பைஜாமா குர்தாவுடன் மேலே ஒரு அரைக்கோட்டு போட்ட பிஹாரி... என நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் அங்கே குழுமியிருந்தனர்.

பி.ஏ.வின் மேஜையிலிருந்த போன்கள் மாறி மாறி ஒலித்துக் கொண்டேயிருந்தன. வெளியிலிருந்து வந்த போன்கால்களை பில்டர்செய்து, ’அவசியமானதைமட்டும் உள்ளே அனுப்பினார். அவ்வப்போது டைரக்டர் கேட்ட நம்பர்களை டயல் செய்து கனெக்ட் செய்தார். அடிக்கடி ஒரு வாக்கியம் மட்டும் அவரிடருந்து வந்து கொண்டேயிருந்தது. சாப் பிஸி ஹை(ங்)... ஆப் கல் போன் கரியே.” (சார் பிசியா இருக்காரு. நாளைக்கு போன் செய்ங்க.)

மைய அரசின் புத்தக வெளியீட்டுத் துறை ஒன்றின் அலுவலகம்தான் அது. அம்பேத்கரின் நூல்களை வெவ்வேறு மொழிகளில் வெளியிடும் பணியை ஏற்றுக் கொண்டிருந்தது. கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட கூட்டங்கள், கடிதத் தொடர்புகள், விவாதங்கள், விமர்சனங்களின் விளைவாக முதல் தொகுப்பு வெளியாக இருந்தது. அதுதான் அத்தனை பரபரப்புக்கும் காரணம்.

வந்திருந்தவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள், அச்சிட்டவர்கள், விற்பனையாளர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள். சோபாக்களை ஆக்கிரத்துக் கொண்டவர்கள் ஏதோ சிம்மாசனத்தைக் கைப்பற்றி விட்டவர்கள்போல் புளகாங்கிதம் அடைந்திருந்தனர். அவ்வப்போது வந்தவர்கள், உட்கார இடமில்லாமல் சோபாக் கைப்பிடிகளிலும் டீபாயின் ஓரங்களிலும் உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும், உட்கார இருக்கை இல்லாதது பெரிய விஷயமில்லை என்பது போலக் காட்டிக் கொள்வதற்காக வெகு தீவிரமாகப் பேசுவது போல நடித்துக்கொண்டும் இருந்தனர். அமர்ந்திருந்தவர்களில் இடையில் கழிப்பறைக்குப் போன ஓரிருவரின் இருக்கைகள் உடனே வேறு யாராலோ ஆக்கிரக்கப்பட்டதைக் கண்ட மற்றவர்கள் டாய்லெட்டுக்குச் செல்லவும் அஞ்சியவர்களாய் உட்கார்ந்திருந்தனர்.

டைரக்டர் ஏக உற்சாகத்தில் இருந்தார். உத்தரப் பிரதேசத்தின் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்த சேர்ந்தவர் அவர். எப்படியெப்படியோ வளர்ந்து, ஏதேதோ தகிடுதத்தம் செய்து கடைசியில் இந்த டைரக்டர் பதவியைப் பிடித்தே விட்டார். அவர் இதற்கு முன்னர் வகித்த பதவிகளிலும் பல குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டு பேசப்பட்டன என்றாலும் அவர் எல்லாவற்ரையும் வென்று, வெல்ல இயலாத வீரராகத் திகழ்வதற்கு காரணம் அவருடைய சாமர்த்தியமா, அதிர்ஷ்டமா, வளர்ந்துவரும் மதவாத அரசியலா என்பது பற்றி பட்டிமன்றமே நடத்தலாம்.

மணி பதினொன்று. டைரக்டர் இன்டர்காமை எடுத்தார் சர்மாஜி... ஒரு நிமிடம் இங்கே வருகிறீர்களா...

சர்மா என்று அழைக்கப்பட்ட அவருடைய பி.ஏ. ஷார்ட்ஹேண்ட் புக்கும் பேனாவுமாக வந்து நின்றார். சர்மாஜி...! கேளுங்கள். இப்போது மீட்டிங் ஆரம்பிக்கப் போகிறது... முக்கியமான போன்கள் வந்தாலொழிய என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம். தயவு செய்து... சரியா?” “டீக் ஹை சாப்...தலையாட்டிவிட்டுத் திரும்பிச் சென்றார் சர்மாஜி.

சர்மாஜி... இன்னொரு விஷயம்... கொஞ்ச நேரத்தில் மந்திரியிடமிருந்து போன் வரும்...எல்லாரும் அவர் சொன்னதைக் கவனித்தார்களா என்று ஒருமுறை பார்த்துவிட்டுத் தொடர்ந்தார் “...அதைத் தடுத்து விடாதீர்கள்!அறையில் ஒரு சிரிப்பலை ஒலித்து ஓய்ந்தது. இந்தி தெரியாத தமிழர் மட்டும் என்னவென்று புரியாமல் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்து வைத்தார். இதற்கெல்லாம் சலனப்படாத பக்குவத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே பெற்றிருந்த பி.ஏ. சர்மா அமைதியாக வெளியேறினார். டைரக்டர் மணியடித்து பியூனை அழைத்து எல்லாருக்கும் பிஸ்கட்டும் டீயும் கொண்டு வர ஆணையிட்டார்.

நண்பர்களே! நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். முதலில் ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்திக் கொண்டு, பிறகு கூட்டத்தைத் துவங்குவோம்.

சார்... இங்கேயே வெளியீட்டு விழாவையும் வைத்திருக்கலாம். இப்போது இருபத்தைந்து முப்பது பேராவது இருக்கிறோம். மாலையில் என்னவாகப் போகிறதோ...இடையே குறுக்கிட்டு கிண்டலடித்தவர் டைரக்டரின் நண்பரும்’, இந்தி நூலை அச்சிடுவதற்கான ஆர்டர் பெற்றவருமான குப்தா. டைரக்டருடைய சொந்த நூல்களை குப்தாவின் அச்சகம்தான் அச்சிடுகிறது என்பதையோ, அதற்காக பணம் ஏதும் தரப்படுவதில்லை என்பதையோ அங்கிருந்த பலர் அறிய மாட்டார்கள். மீண்டும் ஒரு சிரிப்பலை, இம்முறை மெதுவாக, எழுந்து அடங்கியது. பியூன் கொண்டு வந்த பிஸ்கட்கள் காணமல் போயின.

நோ...நோ... மிஸ்டர் குப்தா! மாலையில் சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அரங்கத்தை நிரப்ப சிறப்புஏற்பாடும் செய்யப்பட்டிருகிறது... அதை அங்கே வந்து தெரிந்து கொள்ளுங்கள்...நமட்டுச் சிரிப்புடன் தொடர்ந்தார் இயக்குநர். ஸோ... நாம் அறிமுகப்படுத்திக் கொள்வோமா... ?”

ஒவ்வொருவராக எழுந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். சிலரை அவரே அறிமுகப் படுத்தினார். தார்ப்பாய்ச்சி வேட்டி கட்டிய சீனிவாச சர்மா - சமஸ்கிருத மொழி பெயர்ப்பாளர்; குர்தா பைஜாமாவும் அரைக் கோட்டுமணிந்த பியாரேலால் பீஹாரி மைதிலி மொழிபெயர்ப்பாளர்; தாடியும் தொப்பியுமாக பள்ளிவாசல் இமாம்போல் தோன்றிய சைபுதீன் அகமது - உருது; வெள்ளைப் பேண்ட-சர்ட் அணிந்த இளைஞர் ரகுநாத ராவ் - தெலுங்கு; சீக்கிய உடையணிந்த ஜஸ்வந்த் சிங் - பஞ்சாபி; கறுப்புக் கோட்டு அணிந்திருந்த புரொபசர் பாலகிருஷ்ணா - கன்னடம்; டாக்டர் சுரேந்திரநாத் - இந்தி; சுகுமார் சென் - வங்காளி; டாக்டர் மாடசாமி - தமிழ் மொழிபெயர்ப்பாளர்; விரேந்திர குப்தா - இந்தி நூலை அச்சிடுபவர்; டி.பி. பை - இந்தி நூலின் மொத்த விற்பனையாளர்; டாக்டர் சித்தார்த்த ராய், டாக்டர் முகமது அஸ்லம், டாக்டர் பி.வி. கிருஷ்ணா...

அறிமுகப் படலம் முடிந்து டைரக்டர் மீண்டும் பேச ஆரம்பித்தார். ஸோ... நணபர்களே!எப்போதும் பேச்சைத் துவங்குகையில் ஸோவுடன் துவக்குவது அவருடைய மானரிஸம். “.... இன்று டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள். பாபா சாகேப் அம்பேத்கர் எந்த அளவுக்கு மக்கள் மனங்களிலே இடம் பெற்றிருக்கிறார், நாட்டுக்காக அவர் ஆற்றிய தொண்டு இதைப்பற்றியெல்லாம் நான் கூறத் தேவையில்லை...கூறத் தேவையில்லை என்பது மட்டுமல்ல, அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதை அங்கிருந்த பலர் அறிந்திருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. எது புத்திசாலித்தனம் என்பதைப்பற்றி அவர்களுக்குப் பாடம் சொல்லித்தர வேண்டியதில்லை.

இன்று அவருடைய நினைவு நாள். இந்நாளில் அவருடைய நூல்கள் பல மொழிகளில் வெளியிடப்படுகின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்... அவருடைய ஒப்பற்ற கருத்துக்களை நூல் வடிவில் கொண்டுவருவதன் மூலம் நாம் அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்கிறோம்...இந்தியில் பாஷன்எனக் கூறப்படும் சொற்பொழிவுபோல் காட்டவேண்டும் என்பது டைரக்டரின் ஆசை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் கவனமாகக் கேட்பது போலப் பாசாங்கு செய்தார்கள். அவருடைய பேச்சைத் தாம் கேட்டுக் கொண்டிருப்பதை ஒரு புன்னகையின் மூலமோ, ஒரு தலையாட்டலின் மூலமோ டைரக்டருக்குக் காட்டிவிடத் துடித்தார்கள். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அதை நிரூபித்தார்கள்.

“...டாக்டர் அம்பேத்கரின் நூல்கள் அனைத்தையும் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிட நமது அரசு முடிவு செய்தது. நமது அமைச்சகம், குறிப்பாக நம் அமைச்சர், இப்பணியை விரைவாக முடிக்க விரும்புகிறார். தனியான ஆர்வத்துடன் நம் அமைச்சர் இதன் முன்னேற்றத்தைப் பற்றி அடிக்கடி கேட்கிறார். அதனால்தான் நம்மால் சிறப்பாகச் செயல்பட முடிகிறது...இங்கு அமைச்சருக்குச் சூட்டப்படும் புகழ்மாலை நிச்சயம் அமைச்சரின் காதுக்குப் போய்ச் சேரும் என்பதை டைரக்டர் நன்கு அறிவார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களிடையே எதிர்க்கட்சி புகழ் பெற்றுக் கொண்டிருப்பதை முறியடிக்க ஆளுங்கட்சி போட்டிருக்கும் திட்டம்தான் இந்த நூல் வெளியீட்டுத் திட்டம். அதையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் டைரக்டரின் சாமர்த்தியத்தை சிலரால் மனதுக்குள் வியக்காமலிருக்க முடியவில்லை.

ஸோ... நண்பர்களே! இன்று மாலை விழாவில் வெளியிடப்பட இருக்கின்ற நூல்களைக் கொஞ்சம் பார்ப்போமா... ? முதலில் மிஸ்டர் குப்தா!

இந்தி நூலை அச்சிட்ட குப்தா, கையிலிருந்த பண்டலைப் பிரித்து ஒரு பிரதியை டைரக்டரிடம் கொடுத்தார். இன்னொரு பிரதியை எடுத்து பெருமையுடன் அனைவரும் பார்க்கும்படியாக உயர்த்திப் பிடித்தார்.

வாஹ்... வாஹ்! பர்ஸ்ட் கிளாஸ்... குப்தாஜி! மிகவும் அழகாக அச்சிட்டிருக்கிறீர்கள்!டைரக்டரைத் தொடர்ந்து அனைவரும் கைதட்டினார்கள்.

டைரக்டர் சார்! இது என்ன... இப்படி அச்சாகியிருக்கிறது?” நூலைக் கையில் வாங்கிப் பார்த்த சுகுமார் சென் கூறியதைக் கேட்டு அனைவரும் திடுக்கிட்டார்கள்.

ஏன்... டாக்டர் சென்... என்னவாயிற்று?”

சார்... முதுகுப்புறத்தில் டாக்டர் அம்பேத்கர்என்பதை சுருக்கமாக ’’டா. அம்பேத்கர்என்று அச்சாகியிருக்கிறதே!

அட...! அப்படியா! என்ன டாக்டர் சுரேந்திரநாத்! எப்படி ஆயிற்று இது...?”

அது... டைரக்டர் சாப்! டாக்டர் என்று போட்டால் இடம் போதவில்லை. எனவே டாபோட வேண்டியதாயிற்று. இதில் ஒன்றும் தவறில்லை சார்! ஏற்கெனவே டா போட்டு பல நூல்கள் வெளிவந்துள்ளன.

டாக்டர்என்று போட இடம் போதவில்லையென்றால் சிறிய எழுத்துகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று யாரும் வாயைத் திறக்கவில்லை. விற்பனையாளர் டி.பி. பை. எழுந்தார்.

கவலைப்படாதீர்கள் டைரக்டர் சாப்! நீங்கள் டாக்டர் போட்டலும் சரி, டா போட்டாலும் சரி, ஒன்றுமே போடாவிட்டாலும் சரி... விற்றுத் தீர்க்க வேண்டியது என்னுடைய பொறுப்பு...

பை கூறியதைக் கேட்டு டைரக்டர் ஹாஹ்ஹா என்று சிரிக்க, மற்றவர்களும் அவரைத் தொடர்ந்து சிரிக்க அப்பிரச்சினை முடிந்தது.

அடுத்து... தமிழ் நூல்... டாக்டர் மடசாமி!

மாடசாமியை மடசாமிஎன்று டைரக்டர் உச்சரித்ததை மாடசாமியைத் தவிர யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள்.

ஏற்கெனவே பிரித்து வைத்திருந்த கட்டிலிருந்து ஒரு பிரதியை டைரக்டரிடம் கொடுத்து விட்டு இன்னொன்றை உயர்த்திப் பிடித்தார் மாடசாமி.

வாஹ்... வாஹ்...!டைரக்டரின் கை புத்தகத்தைப் பிரிக்காமல் லேமினேட் செய்யப்பட்டிருந்த அட்டையைத் தடவியது. என்ன நேர்த்தி... குப்தா சாப்! பார்த்தீர்களா!நூலை குப்தாவிடம் நீட்டிவிட்டு கைதட்டலைத் துவக்க எல்லாரும் அவரைப் பின்பற்றினார்கள். ஒவ்வொருவராக இந்தியில் பாராட்ட, எதுவும் புரியாத மாடசாமி அசட்டுப் புன்னகையுடன் தாங்க்யூசொல்லி அமர்ந்தார்.

ஸோ... நண்பர்களே! மடசாமி ஹேஸ் டன் எ குட் ஜாப். சொல்லப்போனால், மற்ற மொழிகளில் வருவதற்கு முன் முதல்முதலாகக் கொண்டு வந்தவர் மடசாமிதான். அடுத்து உருது நூல்.

சைபுதீன் எழுந்து முன்னவர்களைப் போலவே ஒரு நூலை டைரக்டரிடம் கொடுத்து விட்டு இன்னொன்றை உயர்த்திப் பிடித்தார். மேலட்டை இல்லாமல் காலிகோ பைண்ட் மட்டும் செய்த நிலையில் முழுமையடையாதிருந்தது அது.

அட்டைக்கான போட்டோக்கள் அஞ்சலில் தவறிவிட்டதால் மேலட்டை அச்சிட முடியாமல் போனது. மற்றபடி நூல் முழுமையடைந்து விட்டது. இதனை முடிப்பதற்கு உதவிய டைரக்டருக்கே பெருமைகள் அனைத்தும் சேரும்!அட்டையில்லாத குறையை மறைக்க பலர் முன்னிலையில் டைரக்டருக்குப் புகழ்மாலை சூட்டிவிட்ட சைபுதீனின் சாமர்த்தியத்தை பலராலும் மனதுக்குள் வியக்காமலிருக்க முடியவில்லை.

ஹா...ஹா... நான் என்ன செய்து விட்டேன் சைபுதீன் சாப்... எல்லாம் உங்கள் சாதனைதான்...குளிர்ந்து போயிருந்த டைரக்டர் போலியான அடக்கத்துடன் கூற மீண்டும் கைதட்டல் ஒலித்தது. சைபுதீன் திருப்தியுடன் அமர்ந்தார்.

ஸோ... நண்பர்களே! கன்னட நூல் அச்சிட்டு முடியவில்லை. இருந்தாலும் வெளியீட்டு விழாவுக்காக ஜெராக்ஸ் செய்து நூல் வடிவில் கொண்டு வந்துள்ளார் பாலகிருஷ்ணா, மிஸ்டர் பாலகிருஷ்ணா...

கிட்டத்தட்ட புத்தகம்போலவே பைண்ட செய்யப்பட்ட, அச்சிடப்படாத மேல் அட்டையைக் கொண்ட நூலை எடுத்துக் காட்டினார் பாலகிருஷ்ணா. அதற்கும் ஒருமுறை கைதட்டல் ஒலித்து அடங்கியது.

நண்பர்களே...டைரக்டர்தான் மீண்டும் பேசினார் “...மற்ற மொழிகளில் இன்னும் அச்சிட்டு முடியவில்லை. ஆனாலும் மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. அவற்றின் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அச்சிட முடியாவிட்டாலும் வேகமாக மொழிபெயர்த்து முடித்த அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

பேசி முடித்ததும் தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், வங்காளி மொழிபெயர்ப்புகளின் கையெழுத்துப் பிரதிகளை ஒவ்வொருவராக டைரக்டரின் மேஜைமேல் வைத்தார்கள். கூட்டம் முடிந்ததற்கு அடையாளமாக அவர் மணியடித்து பி.ஏ.வை வரவழைத்தார்.

சர்மாஜீ...! மினிஸ்டருக்கு போன் போடுங்கள். அப்படியே ஆர்ட்டிஸ்ட் பாஸ்கரை வரச் சொல்லுங்கள்.

பாஸ்கர் உள்ளே நுழைந்தார். பாஸ்கர்...! இதோ, இவைதான் இன்று வெளியிடப்படும் நூல்கள்... இவற்றைக் கச்சிதமாக இரண்டிரண்டு பிரதிகளாக கிஃப்ட் பேக் போல பேக் செய்ய வேண்டும். பிரிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும். சரியா... ?”

யெஸ் ஸார்... நல்ல பளபளப்பான கலர் பேப்பரில் பேக் செய்து விடுகிறேன்...

இல்லை சார்... பாபா சாகேபுக்குப் பிடித்தது நீல நிறம். இதோ! இந்தப் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள நீலம். இதே கலர் பேப்பரில் பேக் செய்தால் பொருத்தமாக இருக்கும். இல்லையா?” அம்பேத்கரைப் பற்றித் தனக்கும் தெரியும் என்பதை வெளிப்படுத்த தருணம் பார்த்திருந்த டாக்டர் முகமது அஸ்லம் குறுக்கிட்டார்.

வாஹ்... வாஹ்... டாக்டர் சாப்! நல்ல ஐடியா. அதற்குத்தான் உங்களைப் போன்றவர்கள் வேண்டும் என்பது... என்ன டாக்டர் கிருஷ்ணா...?”

ஆஹாங்... ஆமோதித்தார் கிருஷ்ணா.

சரி பாஸ்கர்! இதே மாதிரி கலர் பேப்பரில் பேக் கெய்து விடுங்கள்.

சார்... ஆனால்... இது மாதிரிப் பேப்பர் நம்மிடம் இல்லையே...?”

அப்படியா... பல்பீர் சிங்கைக் கூப்பிடுங்கள்.

உள்ளே நுழைந்த பல்பீர் சிங்குக்கு வயது ஐம்பத்தைந்து இருக்கலாம். காலம் முழுதும் தலையாட்டித் தலையாட்டிப் பழகிப்போன சுபாவம் அவர் உள்ளே நுழைந்து யெஸ் ஸார்சொன்னதில் வெளிப்பட்டது.

பல்பீர் சிங்ஜீ! இதோ, இந்தப் புத்தகம் ஒன்றை... இல்லையில்லை, இந்த அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். இதே கலரில் கொஞ்சம் பேப்பர் வாங்கி பாஸ்கரிடம் கொடுத்து விடுங்கள்.

யெஸ் ஸார்... ஆனால் இதற்கு மார்க்கெட்டுக்குப் போகவேண்டும்...

சரி... கார் எடுத்துக் கொண்டு போங்கள்.

சார்... கார் இல்லை போலிருக்கிறதே...கார், டைரக்டரின் குடும்பம் எங்கோ செல்வதற்காக எடுத்துப் போகப்பட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் ஒன்றுமறியாத அப்பாவி போல முகத்தை வைத்திருந்தார் பல்பீர் சிங்.

சரி.. சரி.. கார் இல்லையென்றால் டாக்சி எடுத்துக் கொள்ளுங்கள். பேப்பர் இரண்டு மணிக்குள் இங்கே வந்துவிட வேண்டும்.

தலையாட்டிவிட்டு வெளியேறினார் பல்பீர்சிங். டைரக்டரின் போன் ஒலித்தது. ஹலோ... ஆஹாங்... கொடுங்கள்! கொடுஙகள்...ரிஸீவரின் வாயைப் பொத்திக்கொண்டு மந்திரியின் போன்என்றார் மற்றவர்களைப் பார்த்து. சட்டென்று அவருடைய உடல் முழுக்க பணிவு நிரம்பிக் கொள்வதை உணர முடிந்தது.

யெஸ் ஸார்... ஆமா ஸார்... இல்லை ஸார்... மூன்று மொழிகளில் புத்தகம் முடிந்து விட்டது... ஆமாம் ஸார்.... இந்தி வந்து விட்டது... இல்லை சார். உருதுவும் தமிழும் வந்துவிட்டன. கன்னடத்தில் சாம்பிள் காப்பி வந்திருக்கிறது சார்... ஆமாம் மற்றதில் கையெழுத்துப் பிரதிகள் தயாராக உள்ளன சார்... ரெடியாக இருக்கும் சார்... என்ன சார்...? கையழுத்துப் பிரதிகளை வெளியிடலாம் சார்... ஆமாம் சார். ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் சார்... அப்படியெல்லாம் இல்லை ஸார்... எல்லாம் உங்கள் தயவு சார்... யெஸ் ஸார், நமஸ்கார் சார்...

போனை வைத்துவிட்டுத் திரும்பியவர் பெருமை பொங்க எல்லாரையும் ஒருமுறை பார்த்து பொதுவாகப் புன்னகைத்தார். மந்திரிதான் பேசினார்... எல்லா விபரங்களையும் கேட்டார்... சொல்லி விட்டேன்... நாம் நம் கடமையைச் சரியாகச் செய்யும்போது மறைக்க என்ன இருக்கிறது... இல்லையா?”

பொதுவாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் தேவையிருக்கவில்லை என்றாலும், ’ஹாங்...ஹாங்...என்று எல்லாரும் தலையாட்டினார்கள்.

என்ன சார்... இதைக் கொண்டாட வேண்டாமா...! லஞ்சுக்கு ஏற்பாடு செய்யலாமே...குப்தாதான் இதை உரிமையுடன் கேட்க முடியும். கேட்டார்.

ஆஹாங்... இல்லாமல் என்ன!மணியடித்து பியூனை வரவழைத்து சாப்பாடு கொண்டு வரச் சொன்னார்.

மூடிய பிளேட்டுகளில் வந்தது சாப்பாடு. ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு டைரக்டரைப் பாராட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்தார்கள். அவரை வார்த்தைகளால் குளிப்பாட்டுவதில் ஒருவரையொருவர் வெல்ல முயன்றார்கள். அதில் சிலர் வெற்றியும் பெற்றார்கள். மாடசாமி மட்டுமே திணறினார். அவருடைய ஆங்கிலம் இந்த இடத்துக்கு போதவில்லை. இந்தி அவருக்குத் தெரியாது. எதற்கும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து, புரிந்ததுபோல் நடித்துக் கொண்டே இருந்தார் அவர்.

மணி இரண்டாயிற்று. கலர் பேப்பர் வாங்கப்போன பல்பீர் சிங்கை இன்னும் காணவில்லை. டைரக்டரின் ஆர்வம் பதட்டமாக மாறத் துவங்க்யது. பி.ஏ.வை அழைத்துத் திட்டினார். கொஞ்சமும் பொறுப்பே இல்லாதவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றார். கார் வந்திருந்ததால் எடுத்துக் கொண்டுபோய் பல்பீர் சிங்கைத் தேடிப்பிடித்து அழைத்துவர ஆணையிட்டார்.

மார்க்கெட்டில் பல்பீர் சிங்கைக் கண்டுபிடிப்பது இயலாது என்று தெரிந்திருந்தாலும் யாரும் மறுக்கவில்லை. அஸிஸ்டென்ட் பர்ச்சேஸ் ஆபீஸர் இதுதான் சாக்கு என்று காரை எடுத்துக்கொண்டு காணாமல் போனார். அவர் போன பத்து நிடங்களுக்கெல்லாம் பல்பீர் சிங் வெற்றிப் புன்னகையுடன் உள்ளை நுழைந்தார். அவரைக் கண்டதும் டைரக்டர் தன் இருப்பை மறந்து எழுந்து நின்றார். பின்னர் தன்னை உணர்ந்தவராக உட்கார்ந்து கொண்டு பேப்பருக்காகக் கையை நீட்டினார்.

பல்பீர் சிங் கொண்டு வந்த பேப்பரைக் கண்டதும் டைரக்டரின் முகம் மாறியது. அநத மாற்றத்தைக் கவனித்ததும் பல்பீர்சிங்கின் முகமும் மாறியது. முகத்தை சோகமாக வைததுக் கொண்டு டைரக்டர் பேசு முன்பே ஆரம்பித்தார். சார்... மார்க்கெட் பூராவும் அலைந்தாகி விட்டது. இந்தக் கலரில் பேப்பரே கிடைக்காதாம். இது அச்சகத்தாரால் மையில் மேட்ச் செய்யப்பட்டடது. இதே கலரில் வரவேண்டுமென்றால் பிரின்ட் செய்தால்தான் முடியும். அதனால்தான் கிட்டத்தட்ட அதே கலரில் கிடைத்ததை வாங்கி வந்தேன் சார்...எப்படியும் சமாதானப்படுத்தி விடுவது என்ற முடிவுடன் முயற்சி செய்தார்.

அரே பாபா... உங்களுக்கெல்லாம் ஏன் புரியமாட்டேன் என்கிறது...? பாபா சாகேபுக்குப் பிடித்த நிறம் என்பதற்காகத்தானே அதை வாங்கி வரச் சொன்னது! இப்போது ... உங்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய...அம்பேத்கருக்குப் பிடித்த நிறம் என்று யாரோ சொல்லக் கேட்டு அட்டையை அதே நிறத்தில் அச்சிடச் சொன்ன தன் மூளையை தானே நொந்து கொண்டார். அதே கலர் பேப்பரில் பேக் செய்ய ஐடியா கொடுத்த முகமது அஸ்லத்தை அவர் பார்த்த பார்வையில்அஸ்லம் நொறுங்கிப் போனார்.

சார்...! தவறாக நினைக்காதீர்கள்... அடியேனிடம் ஒரு சின்ன யோசனை...பயந்தவர்போல், தயங்கியவர்போல் நடித்தவாறே கேட்டார் பல்பீர்சிங்.

சொல்லும்...நம்பிக்கையின்றி, அவரைப் பார்க்காமலே பதில் தந்தார் டைரக்டர்.

இதே கலர் பேப்பரில் பேக் செய்து விடுவோம்...டைரக்டரின் பார்வை தன்னை கோபத்துடன் துளைப்பதை வெல்வதற்கான புன்னகையுடன் ஒரு சிறு உருளையை எடுத்தார். “... இதில் நீங்கள் கேட்ட அதே கலரில் ரிப்பன் வாங்கி வந்திருக்கிறேன். அதை அழகாகச் சுற்றி முடிச்சுப் போட்டுவிடலாம்!கைதேர்ந்த மேஜிக் வித்தைக்காரனின் திறமையுடன் உருளையைப் பிரித்து ரிப்பனின் கலரைக் காட்டினார். டைரக்டரின் முகம் பளீரென மின்னியது.

வாஹ்... வாஹ்..! சபாஷ் பல்பீர் சிங்ஜி! இதற்குத்தான் உம்மைப் போன்ற திறமையான ஆட்கள் வேண்டுமென்பது...டைரக்டரின் கோபம், பதட்டம் எல்லாம் தணிந்து புன்னகை மயமானதைக் கண்ட அனைவருக்கும் புன்னகை உயிர் பெற்றது. படியா காம்... சபாஷ்...! கமால் கர்தியா...ஆளாளுக்கு பல்பீரைப் பாராட்டினார்கள். முகமது அஸ்லம், தன்னைக் காப்பாற்றிய பல்பீர் சிங்கை நன்றியுடன் பார்த்து கைகுலுக்கினார். தீடீரென பல்பீர் சீங் கதாநாயகனாகி விட்டது கண்டு டைரக்டர் குறுக்கிட்டார்.

சரி... சரி... பல்பீர் சிங்ஜீ! இதை பாஸ்கரிடம் கொடுத்து உடனே பேக் செய்யச் சொல்லுங்கள். நான்கு மணிக்குள் விழாவுக்குப் போகவேண்டும்...


யெஸ் ஸார்... இதோ இப்போதே செய்கிறேன் சார்...பணிவான, பெருமை கலந்த புன்னகையோடு கூறிவிட்டு வெளியேறினார் பல்பீர்சிங். சர்மாஜீ! நாங்கள் எல்லாரும் விழாவுக்குப் போக வேண்டுமல்லவா..ஒருமுறை அங்கிருந்த எல்லாரையும் நோட்டம் விட்டு கணக்கெடுத்தார் “....ம்... நான்கு கார்களுக்கு ஏற்பாடு செய்து விடுங்கள், அப்படியே, நண்பர்களுக்கு டீ கொண்டுவரச் சொல்லுங்கள்இன்டர்காமை வைத்துவிட்டு எழுந்தார்.

ஒவ்வொன்றையும் முன்யோசனையுடன் திட்டடும் டைரக்டரின் திறமையைப் பாராட்டினார் ஒருவர். உபசரிப்பில் அவருக்கு இணையே இல்லை என்றார் இன்னொருவர். அதனால்தான் எண்ணற்ற நண்பர்களைக் கொண்டிருக்கிறார் என்று புகழ்ந்தார் மற்றொருவர். அவருடைய சாமர்த்தியத்தை ஒப்பிட முடியாத திறமை என்று வெவ்வேறு வார்த்தைகளால் பாராட்டியவாறே டீயைக் குடித்து முடித்தார்கள்.

வெளியிடப்பட வேண்டிய நூல்களும் கையெழுத்துப் பிரதிகளும் அழகாகக் கட்டப்பட்டு வந்ததும் எல்லாரும் கீழே இறங்கி வந்தார்கள். தான் மந்திரியைப் பார்த்துவிட்டு நேராக விழாவுக்கு வந்து விடுவாதாகவும் அனைவரும் கார்களில் புறப்பட்டு வருமாறும் கூறிவிட்டு டைரக்டர் தன் காரில் புறப்பட்டார். குப்தாவும் அவருடன் சென்றார்.

அவர் போனதும் அங்கே இன்னொரு போட்டி துவங்கியது. வரவழைக்கப்பட்ட நான்கு கார்களில் முதலில் முன் சீட்டைப் பிடிப்பதில் போட்டி நடந்து முடிய, பிறகு பின் சீட்டுகளுக்குப் போட்டி... மாடசாமி இந்தக் காருக்கும் அந்தக் காருக்கும் இடம் பிடிக்க ஓடினார். ஒரு வழியாக அங்கிருந்த 25 பேரும் ஆட்டுமந்தைகள் போல அடைத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

அந்தப் போட்டியின்போதுதான் அவர்களுடைய உண்மை முகங்கள் வெளிப்பட்டன.

1 comment: