Monday 31 August 2015

இரயில் பயணங்களில் (2015) - 1

ரயில்கள் வேறாக இருக்கலாம், பயணிகளும் வேறாக இருக்கலாம், பாதைகளும் வேறாக இருக்கலாம். எல்லாம் நம் பார்வையில் மட்டுமே. மற்றபடி எல்லா ரயில்களும் பயணிகளும் பாதைகளும் ஒன்று போலவே தோன்றுகிறது. ஒவ்வொருவரையும் ஏற்கெனவே பார்த்திருக்கிறேனோ என்று எனக்குத் தோன்றுவது போலவே மற்றவர்களுக்கும் தோன்றக்கூடும்

இந்த ரயிலின் கழிப்பறையிலும் யாரோ ஒருவன் ................... நான் உன்னை ................... என்று எழுதி வைத்திருக்கிறான். வேறு யாரோ ஒருவன் தண்ணீர் பாட்டிலை மற்றவர்களும் பயன்படுத்தட்டும் என்று விட்டுச் சென்றிருக்கிறான்.

இரவு முழுவதும் பாட்டுக்கேட்டோ, கேம் விளையாடியோ, பேஸ்புக் பார்த்தோ செல்போன் பேட்டரிகளைக் காலி செய்து விட்டவர்கள் அதிகாலையிலேயே ப்ளக் பாயின்ட் இருக்கும் இடத்தில் வரிசையில் நிற்கிறார்கள். அங்கும் யாரோ ஒரு புண்ணியவான் அலயஸ் புத்திசாலி த்ரீ-வே பின் மாட்டி, மற்றொருவன் அதற்கும் மேலே மற்றொரு த்ரீ-வே பின் மாட்டி, ஒரு பிளக் பாயின்ட்டில் ஐந்து போன்களுக்கு சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கிறது. அந்த நேரத்தையும்கூட வீணடிக்க முடியாத ஒரு கடமைவீரன் ஏதோ நோண்டிக்கொண்டிருக்கிறான். ஒருவேளை காலை வணக்கம் போட்டுக் கொண்டிருக்கலாம், அல்லது காலை வணக்கங்களுக்கு பதில் வணக்கமாக இருக்கலாம்.

சாய்.... கர்மாகரம் சாய்.... என்று வரிசையாக வந்து கொண்டே இருக்கிறார்கள். அத்தனை பேரும் ஏழு ரூபாய் டீக்கு பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு சலனமே இல்லாமல் நழுவுகிறவர்களாகவே இருக்கிறார்கள். வேண்டுமென்றே அவனை சற்றே விட்டுவிட்டு, ஹலோ பாக்கி எங்கே என்று கேட்டால், பாக்கெட்டில் இருக்கிற மொத்தக்காசையும் தேடுவதுபோல நடித்துவிட்டு குல்லா நஹீ ஹை சாப்... வாபஸ் மே தே தூங்கா - சில்லறை இல்லை சார். திரும்பி வரும்போது தந்துடுவேன் என்று போய்க்கொண்டே இருக்கிறான். இதுவரை எனக்காக மட்டும் மூன்று பேர் திரும்பி வருவதாகச் சொல்லிப் போயிருக்கிறார்கள். எல்லாருமே திரும்பி வரத்தான் போகிறார்கள், யாரும் காசு தரப்போவதில்லை என்பது நிச்சயம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்று ரூபாய்க்கு இரண்டு பிஸ்கட்கள் வைத்த ஒரு சின்ன பாக்கெட் கொடுப்பார்கள். இப்போது ரொம்பவே புத்திசாலிகளாகி விட்டார்கள்.

வேறொரு பெட்டியில் இருக்கை இருந்தும் தெரிந்தவர் இருக்கிறார் என்பதற்காக எங்கள் வரிசையில் வந்து உட்கார்ந்து விட்டான் ஒருவன். இரண்டு வரிசைகளுக்கு அப்பால் ஒரு குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருக்கிறது. டீ-பேக் போடாத பாலை மட்டும் வாங்கிய அம்மா குழந்தைக்கான புட்டிக்குள் ஊற்றிக்கொண்டிருக்கலாம். அப்பா தூங்கிக் கொண்டிருக்கலாம். அல்லது அம்மா தூங்கிக் கொண்டிருக்க, அப்பா திணறிக்கொண்டிருக்கலாம்.

சன்னல்வழிக் காட்சி இதமாக இருக்கிறது. எல்லா நிலங்களும் பச்சையாடை உடுத்தியிருக்கின்றன. வெளிர் பச்சை, இலைப்பச்சை, கிளிப்பச்சை, அடர்பச்சை.... அரசுப்பள்ளிகளின் மாணவர்களின் சீருடையில் தெரியும் பேதங்களை நினைவுபடுத்துகிறாள் நிலமென்னும் நல்லாள். பருவ மழை இன்னும் முடியவில்லை. பாதையோரப் பள்ளங்கள் எல்லாம் நீர் நிரம்பியிருக்க, நீர்க்கோழிகள் நீச்சலடித்துக்கொண்டிருக்கின்றன.

இரண்டு மாதங்களுக்கு முந்தைய பயணத்தில் உடுத்த ஒற்றை இலைகூட இல்லாமல் அம்மணமாக நின்றிருந்த மரங்கள் எல்லாம் மழைத்தாய் புண்ணியத்தில் புத்தாடைகளுடன் சிலிர்த்திருக்கின்றன. புத்தாடையைக் காட்டத் துடிக்கும் குழந்தைகளைப்போல ரயிலை நோக்கிக் கொண்டிருக்கின்றன. பல லட்சம் பேருக்குக் காட்டியிருந்தாலும் இன்னும் பார் பார் என்று அழைத்துக்கொண்டிருக்கின்றன.

காலை ஒளியில் வாய்க்கால்கள் வெள்ளி ஓடைகளாய் மின்னுகின்றன. காட்டாறுகள் செம்புலப்பெயல்நீராய்.....

பார்த்துக்கொண்டே இருக்கிறேன். பயணித்துக்கொண்டே இருக்கிறேன்.

1 comment: