Wednesday 16 March 2016

உலகப் புத்தகத் திருவிழா 2016

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா முடிந்ததும் வெளியிட்டிருக்க வேண்டிய பதிவு. தாமதமாக வருகிறது.


வழக்கமாக பிப்ரவரியில் நடைபெறும் உலகப் புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்டது. சீனா இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் நாடு என்பதே காரணம். சீனாவில் பிப்ரவரி மாதம் புத்தாண்டு என்பதால், ஜனவரியில் வைத்தால்தான் நாங்கள் வர முடியும் என்று அவர்கள் சொல்லி விட்டார்கள். அதன்படி ஜனவரி முதல்வாரத்தில் நடத்துவது என கடந்த ஆண்டே முடிவாகிவிட்டது.

சீனர்கள் கச்சிதமாக திட்டமிட்டு வந்திருந்தார்கள். சீன அரங்கில் இருந்த நூல்களைப் பார்த்தபோது, இத்தனை இந்திய எழுத்துகள் சீனத்துக்குச் சென்றிருக்கிறதா என்று வியப்பாக இருந்தது. காந்தி, தாகூர் முதல் அமர்த்தியா சென் வரை... சேதன் பகத் முதல் அடிகா வரை... யோகா குரு ஐயங்கார் முதல் கார்ப்பரேட் சாமியார் வரை... வங்கத்திலிருந்து சீனத்துக்கும் சீனத்திலிருந்து வங்கத்துக்கும் நிறையவே கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்திருக்கிறது. இப்போதுதான் சீன இலக்கியங்கள் நண்பர் ஸ்ரீதரன் மதுசூதனன் சேவையால் தமிழுக்கு வரத்துவங்கியிருக்கின்றன. (அண்மையில் தமிழில் வெளிவந்த சீன நாவல் குறித்து விரைவில் எழுதுவேன்.)


ஜனவரி கடும் குளிர் மாதம் என்பதாலோ, ஒருநாள் குளிர்காற்று வீசினால் அடுத்த மூன்று நாட்களுக்கு கடும் குளிர் இருக்கும் என்பதாலோ என்னவோ, இந்த ஆண்டு பங்கேற்றோர் எண்ணிக்கை சற்றே குறைவு. பொதுவாக 1000 முதல் 1100 பேர் வரை வருவார்கள். இந்த ஆண்டு 820தான். அதுதவிர, சென்னை புத்தகக் கண்காட்சியும் இதே நேரத்தில் நடக்கும் என்பதால், வழக்கமாக வரும் 2 அல்லது 3 தமிழகப் பதிப்பாளர்கள் வரவில்லை. பாரதியும் நியூ செஞ்சுரியும் மட்டுமே வந்திருந்தன. (சென்னையில் புத்தகக் கண்காட்சி ஏப்ரலில் என மாற்றம் நடந்தது பிற்பாடுதான்.)

வழக்கம்போல இந்த ஆண்டும் கருத்தரங்குகள், புத்தக வெளியீடுகள், உரையாடல்கள், ஆசிரியர் சந்திப்புகள் நிகழ்ந்தன. ஆனால் தொய்வு இருந்தது. எழுத்தாளர் சந்திப்பு மேடைகள் எதிர்பார்த்த அளவுக்கு பதிவு செய்யப்படவில்லை. புத்தகத் திருவிழா நடத்திய நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம், புது எழுத்து என்ற தலைப்பில் புதிய நூல்வரிசை ஒன்றைத் துவக்கியுள்ளது. அதன்கீழ், 40 வயதுக்குட்பட்ட வளரும் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடப்படுகின்றன. திருவிழாவை முன்னிட்டு 9 மொழிகளில் தொகுப்புகளை மைய அமைச்சர் ஸ்மிரிதி இரானி வெளியிட்டார். தமிழில் ஜோ டி குருஸ் நூலைத் தொகுத்துள்ளார். (இந்நூலைப் பற்றிய பதிவு விரைவில் வரும்.)


இந்த ஆண்டுக்கான மையக்கருத்து - இந்தியாவின் பாரம்பரியப் பண்பாடு. இதற்கென தனி அரங்கம் இருந்தது. தினமும் பரதம், கதகளி போன்ற செவ்வியல் நடனங்களும், பல மாநிலங்களின் நாட்டுப்புற நடனங்களும் நடைபெற்றன. தமிழகத்திலிருந்து கரகாட்டமும் இடம்பெற்றது. பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் தினமும் நடைபெற்றன. ஆனால் அவற்றில் ஓரிரண்டு தவிர மற்றவை எல்லாம் இந்தியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே விமானம் இருந்தது, சஸ்திர சிகிச்சை இருந்தது, எல்லா அறிவியலும் இந்தியாவில் இருந்த்து என்பதாகவே நீண்டன.


பொதுவாக, திருவிழாவின்போதே அடுத்த ஆண்டுக்கான திருவிழா தேதி முடிவு செய்யப்பட்டு, கடைசிநாள் அறிவிக்கப்படும். அதேபோல அடுத்த சிறப்பு விருந்தினர் நாடும் முடிவு செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு முடிவு செய்யப்படவில்லை.

பதிப்பாளர்கள்தான் ஏமாற்றினார்களே தவிர, முதல் சனி-ஞாயிறு புத்தக ஆர்வலர்கள் நிறையவே வந்தார்கள். வார நாட்களில் குளிர் அதிகம் இல்லாததால், ஓரளவுக்கு வந்தார்கள். குடியரசு தினம் நெருங்குவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் இருந்தது. மக்கள் வரிசையில் நின்றே நுழைய வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை குளிர் அதிகரித்து விட்டது என்றாலும், கடைசி சனி-ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதியது. சில கடைகளில் 100 ரூபாய்க்கு 4 ஆங்கிலப்புத்தகங்கள் மக்களால் அள்ளப்பட்டன. மகள்களும் அள்ளினார்கள்.


இந்த ஆண்டு நான் ஆங்கில நூல்கள் அதிகம் வாங்கவில்லை, தமிழ் நூல்கள் மட்டுமே. வீட்டுக்கு வந்தபிறகு பட்டியல் போடும்போதுதான் இந்த ஆண்டும் மொழியாக்க நூல்கள் நிறைய வாங்கியிருக்கிறேன், கவிதை நூல் ஒன்றுகூட வாங்கவில்லை என்பது புரிந்தது. நூல்களை சுட்டுக்கொண்டு போகிற ஆட்கள் அதிகம் இல்லாத தில்லியில் இருக்கிறேன் என்ற தைரியத்தில், நானும் ஆமீனாவும் வாங்கிய நூல்களின் பட்டியல் -

1.    Mother Tongue - Bill Bryson, Penguin
2.    Notes from a Big Country - Bill Bryson, Black Swan
3.   விட்டு விடுதலையாகி..., ராஜஸ்தான் நாவல் - சாந்தி பரத்வாஜ் ராகேஷ், தமிழாக்கம் - இராம. குருநாதன், சாகித்ய அகாதமி, ரூ. 100
4.    கனவுகள், ஒரிய மொழிச் சிறுகதைகள் - சந்திரசேகர ரத், தமிழாக்கம் - இரா. குமரவேலன், சாகித்ய அகாதமி, ரூ. 190
5.    நர பட்சணி - நானக் சிங், தமிழாக்கம் - முத்து மீனாட்சி, சாகித்ய அகாதமி, ரூ. 235
6.    நுவல் - கமலாதேவி அரவிந்தன் - சிங்கப்பூர் எழுத்தாளர்
7.    சூரிய கிரஹணத் தெரு - கமலாதேவி அரவிந்தன் - சிங்கப்பூர் எழுத்தாளர்.
8.    தங்கக் கிளிகள் - ஜே.எம்.சாலி, கிரிம்சன் எர்த் வெளியீடு, சிங்கப்பூர்.
9.    தேடல் - நா. கோவிந்தசாமி, கிரிம்சன் எர்த் வெளியீடு, சிங்கப்பூர்

பாரதி புத்தகாலயத்தின் நூல்கள்
10.  ஒரு பெண்ணின் கதை - ஓல்கா, தமிழாக்கம் - கௌரி கிருபானந்தன், ரூ. 80
11.   தொடுவானம் தொட்டுவிடும் தூரம் - ஓல்கா, தமிழாக்கம் - கௌரி கிருபானந்தன், ரூ. 110
(ஓல்கா என்னும் புனைபெயரில் எழுதும் லலிதா குமாரி ஆந்திர எழுத்தாளர், பெண்ணியத்தில் ஈடுபாடு கொண்ட போராளி, இவர் எழுதிய A Quest for Freedom வாசித்தபிறகு ரசிகனாகி விட்டேன்.)
12.   என் சக பயணிகள் - தமிழ்ச் செல்வன், ரூ. 120
13.   அவமானம் - சாதத் ஹசன் மன்ட்டோ, தமிழாக்கம் - ராமாநுஜம், ரூ. 60
14.  ஏலகிரியில் சிறுத்தை வேட்டை - கென்னத் ஆண்டர்சன், தமிழாக்கம் - எஸ். சங்கரன், ரூ. 80
15.  மாத்தன் மண்புழுவின் வழக்கு - எஸ். சிவதாஸ், தமிழாக்கம் - யூமா வாசுகி, ரூ. 70
16. அப்பா சிறுவனாக இருந்தபோது - அலெக்சாந்தர் ரஸ்கின், தமிழாக்கம் - முகம்மது செரீபு, ரூ. 70
17.   நாகா - இரா. நடராசன், ரூ. 100

பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியீடுகள்
சத்யஜித் ரே எழுதிய ஃபெலுதா கதை வரிசை நூல்கள் - தமிழாக்கம் வீ.பா. கணேசன்
18.  பிள்ளையாருக்குப் பின்னே மர்மம், ரூ. 80;
19.  வங்கப் புலி மர்மம், ரூ. 80;
20.  மர்மமான ஒரு குடித்தனக்காரர், ரூ. 50;
21.  பூட்டிய பணப்பெட்டி, ரூ. 30;
22.  பிணம் நடந்த மர்மம், ரூ. 50;
23.  நெப்போலியனின் கடிதம், ரூ. 50;
24.  பம்பாய் கொள்ளையர்கள், ரூ. 70;
25.  கைலாஷில் கொலையாளி, ரூ. 80

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடுகள்
26.  கடுகு வாங்கி வந்தவன் (ஒரு அனுபவக் கதை) - பி.வி. பாரதி, கன்னடத்திலிருந்து தமிழில் - கே. நல்லதம்பி, ரூ. 100
27.  விளம்பர உடல் (அதிநவீன மலையாளச் சிறுகதைகள்) - இ.பி. ஸ்ரீகுமார், தமிழாக்கம் - ஏ.எம். சாலன், ரூ. 105
28.  எல்லை பிடாரி - சோலை சுந்தரபெருமாள், ரூ. 250
29.  ஓ... செகந்திராபாத் (நினைவுக் குறிப்புகள்) - சுப்ரபாரதி மணியன், ரூ. 100
30.  குடகு - ஏ.கே. செட்டியார், ரூ. 125
31.  புலம் பெயர்ந்த தமிழர்கள் - மலேசியா - ஒரு மார்க்சிய ஆய்வு - மைக்கேல் ஸ்டென்சன், தமிழாக்கம் - வேட்டை எஸ். கண்ணன், ரூ. 270
32.  அழகான அம்மா (ரஷ்ய சிறார் கதைகள்), தமிழாக்கம் - யூமா வாசுகி, ரூ. 290
33.  காற்றே! கனலே! - சி.ஆர். ரவீந்திரன், ரூ. 180
34.  தேநீர் இடைவேளை - சுப்ரபாரதி மணியன், ரூ. 85
35.  தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரைகள் - திரட்டித் தொகுத்தவர் ஏ.கே. செட்டியார், ரூ. 260
36.  மலாயா தமிழர் சரித்திரம் - இரா. குறிஞ்சி வேந்தன், ரூ. 210
37.  உச்சாலியா (பழிக்கப்பட்டவன்) - லட்சுமணன் கெய்க்வாட், தமிழாக்கம் - எஸ். பாலச்சந்திரன், ரூ. 275
38.  ஜீவாவின் பன்முகம் - பொன்னீலன், ரூ. 150
39.  சொல்லில் நனையும் காலம் (கலை இலக்கியக் கட்டுரைகள்) - எஸ்.வி. ராஜதுரை, ரூ. 320
40.  பார்த்திபன் கனவு - கல்கி, ரூ. 180
41.  அசைவச் சமையல் உலகம் - பூமா பொன்னவைகோ, ரூ. 150
(என்னுடைய இரண்டு நூல்களையும் எடுத்துவரத் தவறி விட்டார்கள். நான் கேட்டபிறகு 10 செட்கள் வெள்ளிக்கிழமைதான் வந்தன. அவற்றில் எட்டு செட்கள் விற்றுப்போய் இரண்டு செட்கள் மட்டுமே எனக்கு மிஞ்சின. என்ன... உங்களுடைய நூல்களா என்று கேட்பவர்களுக்கு — ஆமாம், நானும் இரண்டு நூல்களை எழுதியிருக்கிறேன். சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன் என்ற தலைப்பில் பயண அனுப நூல்; இது மடத்துக்குளத்து மீனு என்ற தலைப்பில் நினைவலைகளின் தொகுப்பு நூல். இரண்டு நூல்களும் கடந்த டிசம்பரில் வேலூரில் வெளியிடப்பட்டன. அதைப்பற்றி வலைப்பூவில் ஏதும் எழுதவில்லை.)

பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடுகள்
42.  புதுமைப்பித்தன் நாடகங்கள் - தொகுப்பு அ. சிவக்கண்ணன், ரூ. 65
43.  வண்டல் உணவுகள் - சோலை சுந்தரபெருமாள், ரூ. 90
44.  ஜல்சாகர் (தேர்ந்தெடுத்த வங்கமொழிச் சிறுகதைகள்) - தமிழாக்கம் - கு. குணசேகரன், ரூ. 120
45.  புதிய பூபாளம் நோக்கி - இளசை எஸ்.எஸ். கணேசன், ரூ. 70
46.  பினாச்சியோ - கார்லோ கொலோடி, தமிழாக்கம் - யூமா வாசுகி, ரூ. 125
47.  சிறுகதை மன்னர் செகாவ் - கி. நடராஜன், ரூ. 55
48.  சமுதாயக் காட்சிகள் - கோ. சௌரிராஜலு, ரூ. 100

தாமரை பப்ளிகேஷன்ஸ்
49.  தெனாலிராமன் கதை நாடகங்கள் - சுகுமாரன், ரூ. 80

50.  தாய் மழை - ந. புகழேந்தி, ரூ. 90

1 comment:

  1. //நூல்களை சுட்டுக்கொண்டு போகிற ஆட்கள் அதிகம் இல்லாத தில்லியில் இருக்கிறேன் என்ற தைரியத்தில், நானும் ஆமீனாவும் வாங்கிய நூல்களின் பட்டியல்//

    இதுக்காகவே நான் தில்லிக்கு வரும்போது உங்களை சந்திக்கிறேன் சார்.

    ஃபெலூடா தொடரின் கதைகளை முதலில் கிழக்கு வெளியிட்டபோதே வாங்கினேன். பின்னர் முழுமையாக பாரதி வெளியிட்டபோது கலஎக்‌ஷன் முழுமையாகட்டுமே என்று வாங்கினேன்.

    மொழிபெயர்ப்பில் எனக்கு இத்தொடர் சரிப்படவில்லை. நீங்கள் வாசித்து விட்டு உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete