Friday 19 April 2019

தேர்தல் - மக்களுக்கான பாடங்கள்


வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு

இந்தப்பதிவில் சில கதைகளைச் சொல்கிறேன். எல்லாமே அண்மையில் நடந்த கதைகள். இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாரும் பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.

முந்தாநாள் இரவு இன்பாக்சில் நட்பு வட்டத்தில் இல்லாத, புதியவர் ஒருவரின் செய்தி வந்தது. சென்னையில் வசிக்கும் ஒரு பெண்மணி. அவர் கேட்ட கேள்வி என் கணவர் முகவரி மாற்றத்துக்காக விண்ணப்பம் செய்திருந்தார். மாறி விட்டதா என்று தெரியவில்லை. புதிய முகவரியிலும் கிடைக்கவில்லை, பழைய முகவரியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. வோட்டர் ஐடி வரவில்லை. என்ன செய்வது?

அவருடைய கணவரின் விவரங்களைக் கேட்டேன். என் வழக்கமான முறையில் தேர்தல் ஆணைய வலைதளத்தில் இருக்கும் பட்டியல்களில் தேடினேன். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தது. தொகுதி, வாக்குச்சாவடி, பார்ட் நம்பர், சீரியல் நம்பர் எல்லாம் எடுத்துக் கொடுத்தேன். அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு அடையாள அட்டையை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள். பூத் ஸ்லிப் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, வாக்குச்சாவடியில் அடையாள அட்டையைக்காட்டி, இந்த விவரங்களைச் சொன்னால் பட்டியலில் சரி பார்த்துவிட்டு வாக்களிக்க விடுவார்கள் என்றேன். (அதற்குப் பிறகுதான் வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்ப்பது எப்படி என்ற பதிவே எழுதினேன்.)

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் - தேர்தலுக்கு ஒரு நாள் முன்புதான் அவர் இதைத் தேடிக்கொண்டிருந்தார். இருவருமே படித்தவர்கள்தான். பத்திருபது நாட்கள் முன்பே செய்திருக்கலாம் அல்லவா? ஒருவேளை, நான் தேடியபோதும் பட்டியலில் பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம், முகவரி மாற்றச் சொன்னால் பெயரையே நீக்கி விட்டார்கள் என்பதே குற்றச்சாட்டாக இருந்திருக்கும் இல்லையா?

எனக்கு சென்னையில் வாக்கு இருக்கிறது. அடையாள அட்டை கோவையில் இருக்கிறது. நான் என்ன செய்யலாம் என்று கேட்டார் அதே பெண்மணி. தொகுதி, வாக்குச்சாவடி விவரமெல்லாம் தெரியும் என்றால், ஏதேனுமொரு அடையாள அட்டை எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று வழிகாட்டினேன். (2014, 2016 தேர்தல் நேரங்களிலும் இதேபோல பல பேருக்குத் தேடித் தந்திருக்கிறேன்.)

இந்த வலைதளத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று யாரும் பார்க்கலாம். - https://electoralsearch.in/
*
முந்தாநாள் இன்னொரு சம்பவம். திருப்பூரில் வசித்து வந்த அக்கா இப்போது அன்னூரில் வசிக்கிறார். திருப்பூரில் போய் வாக்களிக்க வேண்டும். காரோ ஆட்டோவோ எடுத்துக்கொண்டு செல்லுங்கள், போய்வர 1000/2000 ரூபாய் ஆனாலும் பரவாயில்லை, வாக்களித்து விட்டு வாருங்கள் என்று சொன்னேன்.

இதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் - அவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் தில்லி வந்திருந்தபோது அவருடைய பர்ஸ் திருடு போய்விட்டது. அதில் இருந்த அடையாள அட்டையும் போய்விட்டது. நான்கைந்து நாட்களுக்கு முன்புதான் அவருடைய தொகுதியில் பட்டியலைத் தேடி, மேலே சொன்னது போல பார்ட் நம்பர், சீரியல் நம்பர் எல்லாம் எடுத்துக் கொடுத்தேன். ஆதார் அட்டை எடுத்துச் செல்லுங்கள், பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் இந்த விவரங்களைச் சொல்லி அடையாள அட்டையைக் காட்டி வாக்களிக்கலாம் என்றேன். அதேபோல நேற்று 1000 ரூபாய் செலவு செய்து ஆட்டோவில் போய் வாக்களித்து விட்டு வந்தார். தோழர் சுப்பராயனுக்கு ஒரு வாக்கு நிச்சயம்.
*
அக்காவின் பேரன் சென்னையில் வேலை செய்கிறான். அவன் வாக்களிக்க சென்னையிலிருந்து வருகிறான். அவனுடைய வோட்டர் ஐடி வந்து விட்டது. ஆனால் இன்னொரு பேரன் உள்ளூரிலேயே இருக்கிறான், அவனுடைய அடையாள அட்டை வரவில்லை.

நேற்று சுமார் 5 மணிநேரம் வலைதளத்தை அலசினேன். அக்காவின் மகள், மருமகன், பேரன் ஆகியோரின் அடையாள அட்டைகள் இருக்கிற பார்ட் நம்பர் மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய - பிந்தைய இரண்டு பார்ட்களையும் தேடினேன். மொத்தம் சுமார் 3500 வாக்காளர் பெயர்கள். அத்தனையும் தேடியும் பேரன் பெயர் கிடைக்கவில்லை. அதிலும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தளத்தில் வாக்காளர் பட்டியல் பிடிஎப் வடிவில் இருக்கும். அதில் டைப் செய்து தேட முடியாது. அது படமாக மாற்றப்பட்ட பிடிஎப். வரிசையாகப் படித்துத்தான் தேட முடியும்.

இரவு பதினொரு மணிக்கு அவனுக்கு போன் செய்தேன்.
நிஜமாகவே நீ அப்ளை செய்தாயா?
ஆமாம், அப்ளை செய்தேன்.
ஆன்லைனா?
இல்லை, விண்ணப்பத்தில் எழுதிக் கொடுத்தேன்.
இத்தனை நாட்களாக கேட்கவில்லையா?
இதோ வந்து விடும் என்று சொன்னார்கள்.
நீ செய்தது படு முட்டாள்தனம், விண்ணப்பம் கொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டபிறகு, ஃபாலோஅப் செய்யாதது உன் தவறு. படித்தவர்களே இப்படிச் செய்யலாமா என்று நன்றாகத் திட்டி விட்டேன். ராஜாவுக்கு ஒரு வாக்கு குறைந்து விட்டதே என்று எனக்கு அவ்வளவு வருத்தம்.

இவன் பெயரைத் தேடும்போது இன்னொரு சுவையான சிக்கலும் எழுந்தது. அன்னூர் என்பது நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின்கீழ், அவினாசி சட்டமன்றத் தொகுதியின்கீழ் வருகிறது. பட்டியலைத் தேடுவதற்கு முனைந்தபோது, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் கீழே, ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே காட்டியது வலைதளம். அவினாசி காணவில்லை. அவினாசி கோவை மாவட்டத்தின்கீழ் வருகிறது என்றார்கள். ஆனால் கோவையின் கீழும் காணவில்லை. நானாகவே ஊகித்து, திருப்பூர் மாவட்டத்தின்கீழ் தேடியபோது, அவினாசி கிடைத்தது. அதில் அன்னூர் பட்டியல் கிடைத்தது.
அவினாசி, நீலகிரி நாடாளுமன்றத்தின் கீழான பட்டியலின்கீழ் அல்லவா வந்திருக்க வேண்டும்? அதெப்படி திருப்பூரின்கீழ் போடலாம்? ஆஹா... ஓஹோ... என்று பொங்கலாம். பொங்குவோம். அது அப்புறம். இப்போதைக்கு பட்டியல்தான் முக்கியம். அதற்கு நிதானம்தான் தேவை, ஆத்திரம் அல்ல.

பேரன் பெயரைத்தேடுவதற்காக 3 பட்டியல்களை வரிசையாகப் படித்துப் பார்க்கும்போது, குறைந்தபட்சம் ஐந்து பேரின் பெயர்கள் இரண்டு முறை இடம் பெற்றிருந்தன. அதுவும் அடுத்தடுத்து வந்தன. இது தேர்தல் அலுவலர்களின் குளறுபடிதான். ஆனால், அவர்களின் குளறுபடி மட்டும்தானா? ஒவ்வொரு முறை வாக்களிக்க நேரும்போதும் அந்த ஐந்து பேருக்குமான பூத் ஸ்லிப் கிடைத்திருக்கும் அல்லவா? இரண்டு பெயர்கள் இருக்கிறதே என்று, ஒன்றினை நீக்கச் சொல்லலாமே? இதில் நமது பொறுப்பு ஏதும் இல்லையா?
*
அக்கா வாக்களித்த விஷயம் மேலே சொன்னேன் அல்லவா... அவர் திருப்பூரில் சொந்த வீட்டில் வசித்து வந்தார். அக்காவின் மகன் இளம் வயதில் திடீரென இறந்து விட்டான். பறவைக்கூட்டில் கல் விழுந்தது போல ஆயிற்று. மருமகள் தன் தந்தை வீட்டுக்குச் சென்று விட்டார். தனியே வசிக்கப் பிடிக்காமல், என் அக்காவும் மைத்துனரும் தம் மகளுடன் வசிக்க அன்னூர் சென்று விட்டார்கள். அக்கா கணவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார்.

வாக்காளர் பட்டியலில் அக்காவின் பெயரைத் தேடினேன் என்று சொன்னேன் அல்லவா, அப்போது பார்த்தேன் - மறைந்த மகன், அக்காவின் கணவர், மருமகள் எல்லாருடைய பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்தன. (இதை அக்காவிடம் சொல்லவில்லை.)

இவ்வளவும் எதற்குச் சொல்கிறேன்?
மகனும் கணவரும் மறைந்த செய்தியை தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்து பட்டியலிலிருந்து நீக்கவில்லை. அதனால் அவர்களுடைய பெயர் இப்போதும் பட்டியலில் இருக்கிறது. தேர்தல் பணியாளர்கள் வாக்காளர் பட்டியல் வெரிபிகேஷன் வரும்போது விசாரித்திருப்பார்களே என்ற கேள்வி எழலாம். விசாரித்தும் இருக்கலாம், அவர்களுடைய சொந்த வீடு என்பதால் அப்படியே விட்டுவிட்டிருக்கலாம்.

பொதுவாக தேர்தல் அலுவலர்கள் தாமாக யார் பெயரையும் நீக்குவதில்லை. ஆயிரம் பேர் பட்டியலில் குறிப்பிட்ட சிலரின் பெயரை நீக்க அவர்கள் என்ன பங்காளிகளா பகையாளிகளா?
*
இப்போது நாகர்கோவில் தொகுதி விஷயத்துக்கு வருவோம். மீனவ கிராமங்களின் ஆயிரம் பேரின் பெயர்கள் பட்டியலில் இல்லை என்கிறார்கள். மொத்த கிராமத்தின் பல்லாயிரம் பேரின் பட்டியல் இல்லாமல் போவது என்பது சாத்தியமே இல்லை. ஒன்று, அது மிகைப்படுத்திய செய்தியாக இருக்க வேண்டும். அல்லது, திட்டமிட்டே நீக்கியிருக்க வேண்டும்.

திட்டமிட்டே நீக்கியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். எப்போது நீக்கினார்கள் என்று தெளிவாக அறிவது அவசியம். என்கிட்டே வோட்டர் ஐடி இருக்கு, ஆனா பட்டியலில் பேர் இல்லைஎன்று குமுறுவதில் பயனில்லை. போன தேர்தலில் ஓட்டுப்போட்டேன், இப்போது பட்டியலில் பெயர் இல்லைஎன்று சொல்வதிலும் பயனில்லை.

1993-95இல் நான் தில்லியில் ஆர்கேபுரத்தில் வசித்து வந்தேன். எங்களுக்கு ஆர்.கே. புரம் தொகுதியில் வாக்கு இருந்தது. அடையாள அட்டை இருந்தது. தேர்தலில் வாக்களித்தோம். பிறகு இந்திரபுரி போய்விட்டு, இரண்டு ஆண்டுகளுக்குள் அதையும் விட்டுவிட்டு இப்போது வசிக்கிற பகுதிக்கு குடிவந்தோம். அப்போது ஒரு தேர்தல் வந்தது. வெகு ஜோராக அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு நானும் மனைவியும் வாக்களிக்கப் போனோம். பட்டியலில் பெயர் இல்லை. முகவரி மாற்றாமல் விட்டது என் தவறு. வாக்களிக்காமல் திரும்பி வந்தோம். (அப்புறம் மறுபடி விண்ணப்பித்து அடையாள அட்டை பெற்றோம்.)
*
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பம் செய்யுமாறு இளையமகளிடம் பல மாதங்களாக சொல்லிக்கொண்டிருந்தேன். அவளும் டேக்கா கொடுத்துக்கொண்டே இருந்தாள். கடந்த மாதம் பிடித்து இழுத்து விண்ணப்பம் செய்யச் சொன்னேன். ஆன்லைனில் செய்கிறேன் என்றாள். அதன்படி எல்லாமே சரியாக அப்லோடு செய்தோம். பத்து நாட்களுக்குள் தொலைபேசி அழைப்பு வந்தது. வெரிஃபை செய்ய வரப்போவதாக. அதேபோல வந்தார். அரைநிமிட வேலை. அடுத்த ஒரு வாரத்தில் அடையாள அட்டை வந்து விட்டது. பான்கார்டு போல பிளாஸ்டிக் அட்டை.
*
பத்தாண்டுகளாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் நாகஜோதி சீதா தம்பதி. பேஸ்புக்கிலும் இருக்கிறார்கள். ஒரே மகள். பக்கத்து வீடு என்றால், இரண்டுக்கும் இடையே சுவர்தான் தடுப்பு. ஒவ்வொரு தேர்தலுக்கும் என்னிடம் வருவார் நாகஜோதி. தலைவா... லிஸ்ட்ல எங்க பேர் இருக்கான்னு பாருங்க. அவனுக பாட்டுக்கு தூக்கியிருக்கப் போறாங்க என்பார்.

தேர்தல் ஆணையத் தளத்தில் தேடி எடுத்து, பிரின்ட் எடுத்துக் கொடுப்பேன். ஒரு மாதத்துக்கு முன்பும் வந்தார். பட்டியலிலிருந்து பேர் எடுத்துட்டானுக. நான் போய் எழுதிக்குடுத்துட்டு வந்திருக்கேன். வந்துடுச்சா பாருங்க என்றார். பாப்பாவுக்கு (மகளுக்கு) இருக்கு, ஆனா எங்க பேரைத் தூக்கிட்டான் என்றார். அவருடைய பெயர் ஏன் நீக்கப்பட்டது?

நாங்கள் வசிப்பது டி-96. அவருடைய வாக்காளர் அட்டையில் இருந்த முகவரி 96. அது தவறான முகவரி. விண்ணப்பம் எழுதும்போது ஏற்பட்ட தவறு, அல்லது தேர்தல் அலுவலர் டைப் செய்யும்போது ஏற்பட்ட தவறு. ஆனால் நாகஜோதி அதை சரி செய்யவில்லை. வாக்காளர் சரிபார்ப்புக்கு வந்தவர்கள் 96 என்ற முகவரியில் போய் பார்த்திருப்பார்கள். அப்படி யாரும் இல்லை என்று தெரிய வந்திருக்கும். நீக்கி விட்டார்கள். மகள் பெயர் பட்டியலில் இருந்தது எப்படியென்றால், மகள் கொடுத்த விண்ணப்பத்தில் டி-96 என்று முகவரி சரியாகவே இருக்கிறது. எனவே நீக்கவில்லை. (முந்தாநாள் அவருக்கும் புதிய அட்டைகள் வந்து விட்டன.)
*
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்று பல மாதங்களாக தொடர்ந்து விளம்பரங்களும் அறிவிப்புகளும் வந்து கொண்டே இருந்தன அல்லவா? வாக்காளர்கள் சரிபார்க்க வேண்டும். வாக்காளர்கள்தான் அப்பாவிகள், சரிபார்க்கத் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். கட்சிக்காரர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்கள் முனைப்பாக செயல்பட்டு சரிபார்த்திருக்க வேண்டாமா? இங்கே பேஸ்புக்கில்கூட ஏதோ சில அமைப்புகள் வெளியிட்ட சுற்றறிக்கைகள் பார்த்தேன். வாக்காளர் பட்டியலில் தம் பெயர் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லி எச்சரித்த சுற்றறிக்கை அது. இதுபோல ஒவ்வொரு கட்சிக்காரரும் தத்தம் பகுதியில் செய்திருக்க வேண்டும். வாக்களிப்பு நாளுக்கு முன்பு பூத் ஸ்லிப்கள் கொடுப்பதற்காக வீடு வீடாகப் போகிறார்களே, அதேபோல வாக்காளர் பட்டியல் விஷயத்துக்காகவும் போயிருக்க வேண்டாமா? அப்போது செய்யாமல் கோட்டை விட்டு விட்டு, இப்போது பொங்கினால் பயன் என்ன?

நான் அறிந்தவரையில், வாக்களிப்பு நாளுக்கு 15 நாட்கள் முன்புவரை வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்து கொண்டிருக்கும். ஒருவேளை, பதினைந்து நாட்களுக்குள் முன்னால் பட்டியலில் பெயர் இருந்தது, அதற்குப் பிறகுதான் காணாமல் போனது என்றால், அதற்கான ஆதாரங்களுடன் நீதிமன்றத்தின் கதவைத் தட்டலாம். அதுவும் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் மொத்தமாக பெயர்கள் நீக்கப்பட்டன என்றால், நீதிமன்றத்தில் புகார் செய்வதற்கான வலிமை அதிகம்.

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது, வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுயேச்சை அதிகாரத்தை விட்டுவிட்டு ஆளும் கட்சியின் அடியாளாகச் செயல்படுகிறது என்பதில் எனக்கு எந்த கருத்து மாறுபாடும் கிடையாது.

ஆனால், வாக்காளர் பட்டியல் விஷயத்தில் நம்முடைய தவறு என்ன என்று சுயபரிசீலனை செய்து கொள்வது அவசியம். அதைச் செய்யாமல் வெறுமனே பொங்கிக் கொண்டு இருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

உரிமைகளைக் கோரும்போது கடமைகளையும் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்வோம்.

பேஸ்புக்கில் பதிவு போடுகிற, படம் போடுகிற அக்கறையில் ஒரு சிறுபகுதியை நம் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் காட்டலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று தேடிப்பார்த்துத் தரலாம்.

அதிலும் குறிப்பாக, ஒரு கட்சி அனுதாபி, கட்சித் தொண்டர், கட்சிக்காக செயல்படுகிறவராக இருந்தால், அந்தப் பகுதி முழுக்கவும் இதைச் செய்ய வேண்டும். அதுதான் மக்களுடைய தொடர்பையும் வலுப்படுத்தும். ஆதரவையும் தக்க வைக்கும். இன்று பாஜக இதை மிக நன்றாகவே செய்து வருகிறது என்பது எதார்த்தம். பேஸ்புக்கில் பதிவு போட்டுவிட்டதாலோ,தேர்தல் அறிக்கை வெளியிட்டு விட்டதாலோ மக்கள் ஆதரவு தந்து விட மாட்டார்கள். மக்களின் ஆதரவுக்கு அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் அடுத்த தேர்தலுக்கான பாடமாக இருக்கட்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். குறிப்பாக எந்தக் கட்சிக்காகவும் அல்ல, எல்லாருக்குமான பாடம் இது.

தேரதல் பாடங்கள் தொடரும்...

1 comment:

  1. வாவ் பதிவு
    பத்திரப்படுத்தவேண்டிய பதிவுகள்

    ReplyDelete