Wednesday 3 May 2017

உயிர்த்துளிகள் சேமிப்போம்

பூமியில் உள்ள மொத்த நீரில் 97.4% கடல் நீர். மீதி 2.6% மட்டுமே நன்னீர் - Freshwater. அந்த 2.6% நீரிலும் ஏறக்குறைய முக்கால்வாசி போலார் துருவப்பகுதியில் இருக்கும் பனிமலைகள். அது எல்லாம் போக, ஆறுகளில் குளம் குட்டைகளில் இருக்கும் நீர் எவ்வளவு இருக்கும்? இதைத்தான் நாம விவசாயம், தொழிற்சாலை, குடிநீர், கட்டுமானம் என எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். படத்தைப் பாருங்கள். பெரிய துளிதான் 2.6% நன்னீர். சிறிய புள்ளிதான் நமக்குப் புழங்குவதற்குக் கிடைக்கும் நீர்.



ஒவ்வொரு துளியும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிய மேற்கண்ட விவரம் போதும், இது வெறும் நீர் அல்ல, உயிர்த்துளி. நீரை சேமிப்பது தொடர்பான செய்திகள் பள்ளிப் பருவத்திலிருந்தே நமக்குத் தெரிய வருகிறது என்ராலும் எல்லாரும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. குறிப்புகள் எல்லாமே எல்லாருக்கும் தெரிந்திருக்காது. அவரவர் தம்மால் முடிந்த அளவில் சிக்கனத்தைப் பின்பற்றினால், நாம் சேமிக்கும் நீர் வேறு ஒருவருக்கு உதவியாக இருக்கும். அதற்காக சில குறிப்புகளை தொகுத்து கீழே தருகிறேன். (நல்லதொரு பிளம்பரைப் தேடிப் பிடித்து தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள்.)

சமையலறை, கழிப்பறை, குளியலறை, தோட்டம் என எல்லா இடங்களிலும் இருக்கும் குழாய்களில் கசிவு இருக்கிறதா என்று பார்த்து சரி செய்ய வேண்டும். ஒரு நொடிக்கு ஒரு சொட்டு என விழுந்தாலும் ஒரு குழாயில் ஒரு நாளில் வீணாகும் நீரின் அளவு சுமார் 20-25 லிட்டர்!
மாடியில் இருக்கும் தண்ணீர்த் தொட்டிக்கு நீர் ஏற்றும்போது, நீர் நிறைந்ததும் மோட்டார் தானே அணையும் வகையில் ஏற்பாடு செய்யலாம். அல்லது தொட்டியில் நீர் நிறைவதை கவனமாகப் பார்த்திருந்து உடனே மோட்டாரை நிறுத்தவும்.
தொட்டியில் தண்ணீர் குறைந்தவுடன் தானாகவே நீர் ஏற்றும் தானியங்கி மோட்டார் அமைப்பு இருந்தால், தொட்டியிலிருந்து கசிவு ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் நீர் வீணாவது நமக்குத் தெரியாமலே போய்விடும்.
மொட்டை மாடியிலிருந்து வரும் மழை நீரை சேமிக்க ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளலாம். நிலத்தில் குழி வெட்டி சேமித்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். டிரம்களில் சேமித்து வைத்தால் வாகனங்களைக் கழுவப் பயன்படுத்தலாம்.
பல் துலக்கும்போது பிரஷ் நனைத்தவுடன் வாஷ் பேசினில் குழாயை அடைத்து விடுங்கள். (ஒரு நிமிடத்தில் 6 லிட்டர் வரை வீணாகும்.)
சவரம் செய்யும்போது வாஷ் பேசின் குழாயை மூடி விட வேண்டும்.
ஷவரில் குளிப்பதைத் தவிர்க்கலாம். பக்கெட்டில் பிடித்து வைத்துக் குளிக்கலாம்.
கைகளைக் கழுவும்போது, சோப்பைத் தேய்க்கும் நேரத்தில் குழாயை மூடி வைக்கவும்.
நவீன வாழ்க்கை இப்போது எல்லா வீடுகளிலும் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை உருவாக்கிவிட்டது. பழைய கமோடுகளில் பக்கெட்டால் தண்ணீர் ஊற்றிவிடலாம். வெஸ்டர்ன் முறை கமோடுகளில் ஃப்ளஷ்தான் செய்ய முடியும். ஒவ்வொரு முறை ஃபிளஷ் செய்யும்போதும் சுமார் 6 லிட்டர் வரை தண்ணீர் செலவாகிறது. இதைக் குறைப்பதற்கு மேலை நாடுகளில் Cistern Water Displacement Device என்ற ஒரு பையைப் பயன்படுத்துகிறார்கள். பெரிய தொழில்நுட்பம் ஏதும் கிடையாது. யூடியூப் வீடியோவில் பார்த்து நாமும் வீட்டிலேயே செய்துவிட முடியும். ஒவ்வொரு முறையும் 2 லிட்டர் வரை சேமிக்க முடியும். பழைய தண்ணீர் புட்டிகளில் அடிப்பக்கத்தில் கூழாங்கற்களை நிரப்பி, இறுக மூடி, ஃப்ளஷ் தண்ணீர் தொட்டியில் போட்டு விடலாம். இதனால், ஒவ்வொரு முறை அழுத்தும்போதும் வெளியாகும் நீரின் அளவு குறையும்.
கழிப்பறை கமோடில் ஃப்ளஷ் தொட்டியிலிருந்து நீர் கசிந்து கொண்டே இருக்கக்கூடும். இது நம் கவனத்துக்கு வராமல் இருக்கலாம். தொட்டி நீரில் ஏதாவதொரு நிறமூட்டியைக் (மஞ்சள் தூள் / ஜிலேபி பவுடர்) கலந்துவிட்டுப் பார்த்தால், கமோடில் வண்ண நீர் கசிவது தெரிந்து விடும். கசிவை சரி செய்யலாம்.
கழிப்பறை கமோடில் டிஷ்யூ பேப்பர், சிகரெட் துண்டுகள் போன்றவற்றைப் போட வேண்டாம். இதனால் அதிக நீரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
வாஷிங் மெஷின் பயன்படுத்தும்போது, இயன்றவரையில் முழு கெபாசிட்டிக்கும் துணிகளைப் போடுஙகள். பயன்படுத்திய நீரை தோட்டத்துக்கு அல்லது வாசலுக்குப் பயன்படுத்தலாம்.
வீட்டை தண்ணீர் ஊற்றிக் கழுவுவதைத் தவிர்த்துவிட்டு, ஈரத்துணியால் துடைக்கலாம்.
சமையலறையில் பாத்திரம் துலக்கும்போது குழாயில் தண்ணீரைத் திறந்து வைக்கக் கூடாது. பாத்திரத்தில் பிடித்துவைத்துக் கழுவினால் நிறைய மிச்சமாகும். (வேலைக்காரர்கள் தாராளமாகத் திறந்து வைத்துப் பழகிப் போயிருக்கிறார்கள். அவர்களுக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.)
சமையலறைக் குழாயைத் திறந்து விட்டு காய்கறிகளைக் கழுவ வேண்டாம். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றிக் கழுவலாம். (கழுவிய நீரை பறவைகளுக்காகவோ செடிகளுக்கோ பயன்படுத்தலாம்.)
வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் நிரப்பிய போத்தலைப் பயன்படுத்தலாம். டம்ளர்களைக் கழுவும் வேலையும் மிச்சம்.
ஃபிரிஜ்ஜிலிருந்து டீஃப்ரோஸ் செய்த பிறகு எடுத்த நீரை செடிகளுக்கு அல்லது வாசலுக்கு ஊற்றலாம்.
ப்ரீசரில் சேர்ந்துவிட்ட ஐஸ் கட்டிகளை சுத்தம் செய்த பிறகு, அவற்றை செடிகளுக்குப் பயன்படுத்தலாம், அல்லது பறவைகளுக்கான தொட்டியில் போடலாம்.
காரைக் கழுவும்போது ஹோஸ் பைப்பில் தண்ணீர் பீய்ச்சிக் கழுவ வேண்டாம். பக்கெட்டில் பிடித்து துணியால் துடைக்கலாம். (தில்லியில் ஒரே ஒரு பக்கெட் தண்ணீரில் காரை சுத்தமாகக் கழுவித் துடைத்து விடுகிறார்கள் வேலைக்காரர்கள்.)
தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்ற ஹோஸ் பைப்பை பயன்படுத்த வேண்டாம். பூவாளியைப் பயன்படுத்துங்கள். (ஹோஸ் பைப்பில் ஒரு மணி நேரத்தில் 500 முதல் 1000 லிட்டர் வரை நீர் வரும்.)
செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதை காலையிலும் மாலையிலும் செய்வதால் நீர் ஆவியாகி வீணாவதைத் தவிர்க்கலாம்.
தோட்டச் செடிகளுக்கு, புல்தரைக்கு நீர் விடும்போது, தரை எவ்வளவு உறிஞ்சுமோ அந்த அளவுக்கு மட்டும் தெளியுங்கள். தேங்கும் அளவுக்கு வீணாக்காதீர்கள்.
செடிகளுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு ஊற்றினால் போதும், அதிகம் ஊற்றினாலும் வேர்கள் அழுகி செடிகள் செத்துப்போகும்.
தோட்டத்தில் விழுந்து கிடக்கும் சருகுகளை சுத்தம் செய்தாக வேண்டியதில்லை. சருகுகள் நிலத்தை ஈரமாக வைக்கவும், நீர் ஆவியாவதைத் தடுக்கவும் உதவும்.
செடிகளுக்கு, தோட்டத்துக்கு, வாசலுக்கு தண்ணீர் விடும்போது தெளித்தால் போதும். நீரை ஓட விட வேண்டாம்.
வீட்டின் வெளிப்புற கான்கிரீட் தளங்களை சுத்தம் செய்ய ஹோஸ் பைப்பால் நீரைப் பீய்ச்சி வீணாக்க வேண்டாம். துடைப்பத்தால் கூட்டிப் பெருக்கினால் போதும்.
தோட்டத்துக்கு அன்றாடம் நீரூற்ற வேண்டும் என்பதில்லை. இரண்டு அங்குல ஆழத்தில் மண் ஈரமாக இருந்தால், நீர் விடத் தேவையில்லை. தண்ணீர் குறைவாக இருந்தால், அதற்கேற்ப தம்மைத் ததவமைத்துக் கொள்ளும் செடிகளின் வேர்கள் ஆழமாக உள்ளே இறங்கவும் கூடும்.
புதிய செடிகளை வாங்கும்போது, குறைந்த நீரில் வளரக்கூடிய செடிகளை தேர்வு செய்யலாம்.
மீன் தொட்டியை சுத்தம் செய்த நீரை தோட்டத்துக்கு / செடிகளுக்கு ஊற்றலாம்.
நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை தோட்டத்தில், புல்வெளியில் தெளிப்பான் மூலம் குளிப்பாட்டலாம். குட்டிக் குழந்தைகளையும். இது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

மேலே சொன்னதெல்லாம் வாய்பேசத் தெரிந்த மனிதர்களுக்கு. மனிதர்கள் எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள். நம்மை வருத்தும் தண்ணீர்ப் பஞ்சம் பறவைகள் விலங்குகளையும் வருத்தும்தானே? மொட்டை மாடிகளில், காம்பவுண்ட் சுவர்களில் பறவைகளுக்காக தண்ணீர் வைக்க முடியுமா என்று யோசியுங்கள்.


தண்ணீர் சேமிப்பு, சிக்கனம், குழாய்களை இறுக மூடி வைப்பது உள்பட முக்கியமான விஷயங்களை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். இளமையில் கற்பி - Catch them young. அக்கம் பக்கத்தினருடன், குடியிருப்போர் நலச் சங்கத்துடன், வாய்ப்புக் கிடைக்கும் சந்திப்புகளில், இதைப்பற்றி உரையாடி நீரை சேமிக்கும் யோசனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment