Friday 1 March 2013

உலகப் புத்தகத் திருவிழா 2013 - 3

பெற்றதும் இழந்ததும்
முந்தைய எந்த புத்தகத் திருவிழாவைவிட இந்தத் திருவிழா பல வகைகளில் எனக்கு வித்தியாசமாக இருந்தது.
முதலாவது, ஓர் இழப்புபுத்தகத் திருவிழா ஏற்பாடுகளின் பணிகளில் தீவிரமாக இருந்தபோது இந்தித் திரைப்படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. மூன்று நாட்கள் ஒதுக்க வேண்டும் என்றனர் திரைப்படக் குழுவினர்அதுவும் மிகத்தீவிரமாக இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருந்த 26-28 தேதிகள். மனசுக்குள் ஆசைதான். திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்து பெரிய பெயர் ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை என்பது தெரியும். ஆனாலும் திரைப்படம் கடினமான ஒரு வேலை.
நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அவை தன்னார்வ ஈடுபாடுகள். அவற்றில் எவரும் வற்புறுத்தியோ திட்டியோ வேலை வாங்கி விடவோ முடியாது. எதையும் பார்வையாளனாக பார்க்க முடியாது. பிற்பாடு வீடியோவில் நாமே பார்க்கும்போது அதன் குறைகள் அவ்வளவாகத் தெரிவதில்லை. திரைப்படத்தில் நடித்தால் உண்மையிலேயே நான் நடிகனா அல்லது நடிகனாக நடித்துக்கொண்டிருக்கிறேனா என்பதைப் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.
ஒருநாள் மனப்போராட்டத்தின்பின் புத்தகங்களே போதும் என்று முடிவு செய்தேன். நண்பர் ஒருவருக்குப் பரிந்துரைத்து அவர் நடித்தார். இப்போது எனக்கு ஒரு வசதி. அவர் நன்றாக நடித்திருந்தால், ஆஹா... நான்தான் அவரைப் பரிந்துரைத்தேன் என்று கூறிக்கொள்ளலாம். இல்லை என்றால், நானாக இருந்திருந்தால் நன்றாகச் செய்திருப்பேன் என்று கூறிக்கொள்ளலாம். சரி போகட்டும். புத்தகத் திருவிழா வேலை முடிந்து, நான் வடிவமைத்த புத்தகங்கள் கைக்குவரும்போது பெற்ற குழந்தையைப் பார்க்கும்போது கிடைக்கும் திருப்தி அந்தத் திரைப்படம் வெளிவரும்போது நிச்சயம் இருந்திருக்காது.

* * *

ஓராண்டுக்குள் அவசரமாக ஏற்பாடு செய்த புத்தகத் திருவிழா என்பதால் அதற்கே உரிய குறைகள் இருந்தன. பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரியாத குறைகள். அவற்றை வெளிப்படுத்தி எதற்காக குறைகாணக் கற்றுக்கொடுக்க வேண்டும்... வேண்டாம், விடுங்கள். மொத்தத்தில் திருவிழா நன்றாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வந்திருந்த சில நண்பர்கள் தெரிவித்தனர்


முதல்நாள் மழையும்இரண்டாம் நாள் குளிர்காற்றும் சேர்ந்து திருவிழாவை மந்தமாக்கினமூன்றாம் நாள் மதியத்துக்குப் பிறகு சூடுபிடிக்கத் துவங்கியதுகடைசி இரண்டு நாட்களும் மிகவும் பரபரப்பாக இருந்ததுகடைசி நாள் வந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.


ஒரே நேரத்தில் இரண்டு கம்ப்யூட்டர்களில் வேலை செய்வீர்களா என்று கேட்டால், ஆமாம், சில வேளைகளில் 
இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் தினசரி பத்திரிகை வெளியிடும் பணி தனியார்மயத்துடன் விரிவாக்கப்பட்டது. அதன் விளைவாக வடிவமைக்கும் பணி குறைந்தது, கூடவே ஓய்வு நேரமும் குறைந்தது. பதினாறு பக்கத்தில் டேப்லாய்ட் அளவில் பத்திரிகை. கடந்த ஒரு மாதமாக கெட்டுக்கொண்டிருந்த தூக்கம் இன்னும் கெட்டது. ஆனால் உற்சாகம் மட்டும் அப்படியே இருந்தது.

* * *

இத்தனை எழுதிக்கொண்டிருக்கிறவன் தமிழ்க் கடைகள் அமைந்திருக்கிற 14ஆம் அரங்கைத்தவிர வேறு ஒரு அரங்குக்கும் ஒரு கடைக்கும் செல்ல இயலவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் அத்தனை அரங்குகளையும் காணாமல் விட்டது இதுவே முதல்முறை.

விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விவேகானந்தர் அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அவருடைய நூல்கள், புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இளைஞர்கள் இந்த அரங்கை கவனமாகப் பார்வையிட்டது கவனிக்கத்தக்க செய்தி.


வழக்கமாக திருவிழாவின்போது வருகிற எழுத்தாளர்கள் தமது பதிப்பகக் கடைக்குச்செல்வதும் அங்கே கையெழுத்து இட்டுத்தருவதும் வழக்கமாக இருக்கும். இந்த முறை ஒவ்வொரு அரங்கிலும் எழுத்தாளர் பகுதி என்று ஒரு பகுதி அமைக்கப்பட்டு, தினமும் பல எழுத்தாளர்கள் தமது வாசகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தமுறை தமிழ்க்கடைகளும் குறைவு, நூல்களும் குறைவு. கிழக்கிலும் பாரதியிலும் இருந்த மிகச்சில புத்தகங்களில் மிகச்சில புத்தகங்களையும், என்சிபிஎச்-இல் சிலதையும் வாங்கினேன். கடந்த ஆண்டு சுமார் பத்தாயிரத்துக்கு வாங்கினோம். இந்தமுறை மூன்றாயிரம் ஆகலாம் என்று தோன்றுகிறது. வாங்கிய நூல்களின் பட்டியல் விரைவில். இரவல் வாங்க நினைப்பவர்கள் மீண்டும் வருகை தரலாம்.


* * *

இந்த ஆண்டின் சிறப்பு - மையக்கருத்து அரங்கமும், புத்தகக் கலை என்ற கலைப்படைப்புகளும்கலைப்படைப்புகள் பற்றிய விளக்கம் அடுத்த பதிவில். மையக்கருத்து அரங்கில் இடம்பெற்ற சில படைப்புகள், உருவாக்கங்களின் படங்கள் கீழே.

  

 


மையக்கருத்து அரங்கில் நடைபெற்ற கருத்தரங்குகள் மிகச் சிறப்பாக இருந்தன. பழங்குடி கலைகள் மற்றும் இலக்கியங்களின் உருவாக்கம், அவற்றின் தனிச்சிறப்பும் புறக்கணிப்பும், பழங்குடி இலக்கியங்கள் பின்தள்ளப்பட்டதன் அரசியல்-பண்பாட்டு சக்திகள் எவை, எவ்வாறு பாதுகாக்கலாம், யார் யார் இதைப் பாதுகாப்பதில் முனைந்திருக்கிறார்கள், செவ்வியல் இசை எவ்வாறு நாட்டுப்புற இசைகளிலிருந்து பெற்று தனதாக்கிக்கொண்டது என பல்வேறு விஷயங்கள் வெளிவந்தன. கருத்தரங்குகளில் பங்கேற்றோர் அனைவருமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் அத்துறை வல்லுநர்கள்தான்.


மையக்கருத்து அரங்கில் சில பட்டறைகளும் நடைபெற்றன. மேற்கு வங்கத்தின் சாவ் வகை முகமூடிகளைச் செய்வது எப்படி, வார்லி ஓவியக்கலை, மதுபனி ஓவியக்கலை, கேரளத்தின் மூங்கில்இசை, லட்சத்தீவுகளின் டோலி பாட்டு, போன்றவை நமக்குத் தெரியாத கலை வடிவங்களை அறிமுகம் செய்தன. இவற்றிலும் சில இசைத்துணுக்குகள் கேட்போரை வியக்க வைத்தன.

கேரளத்தின் புலிக்கலி கலைஞர்கள்... உடலில் புலிப்படம் வரைவது குறித்த பட்டறையை முடித்துவிட்டு மாலை கலைநிகழச்சி வழங்கச்செல்கிறார்கள்

நாட்டுப்புற மற்றும் பழங்குடி இலக்கியங்களைப் பதிவு செய்தல் என்னும் மையக்கருத்தை ஒட்டி, நாள்தோறும் மாலைகளில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சங்கீத நாடக அகாதமி இதை ஒருங்கிணைத்தது. மாலைநேர நிகழ்ச்சிகள் என்பதால் ஒரு நிகழ்ச்சியும் காணக்கிடைக்கவில்லை. ஆனால் மறுநாளில் அவை திரைகளில் ஒளிபரப்பப்பட்டதை சில நிமிடங்கள் பார்த்தபோது, இவை எந்த அளவுக்கு மக்களை ஈர்த்தன என்று தெரிந்தது. பல நடன நிகழ்ச்சிகளில் கலைக்குழுவினர் பார்வையாளர்களையும் அழைக்க, அவர்களும் உற்சாகமாகச் சேர்ந்து ஆடினர். மேனாட்டு இசைக்கு ஆடுவதற்காகவே டிஸ்கொதேக்களுக்குச் செல்வோர், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கும் செல்லலாம். இவை நமது இசைகள், நமது நடனங்கள். எந்தவகையிலும் துடிப்பும் வெடிப்பும் குறையாத நடனங்கள்.


சிறுவர் மற்றும் இளைஞர் அரங்கம் வழக்கம்போல இளம் வயதினரை ஈர்க்கும் வகையில் வண்ணமயமாக உருவாக்கப்பட்டிருந்தது. அங்கும் தினந்தோறும் புத்தக வெளியீடுகள், எழுத்தாளர் சந்திப்புகள், உரையாடல்கள், ஓவியர்களுடன் உரையாடல்கள், சுயமுன்னேற்ற உரைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் பொழுதும் நடந்து கொண்டே இருந்தன. பல்வேறு அரசுசாரா நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் பல நிகழ்ச்சிகளை வழங்கின
ஆள் வராவிட்டால் என்ன... அட்டையில் செய்தே அசத்திவிட முடிகிறதே 
இதே பகுதியில் ஓவியர் பகுதி என்று ஒருபகுதி இருந்தது. இங்கே புத்தகங்களுக்காக ஓவியர்கள் வரைந்த சித்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓர் ஓவியர் அங்கேயே அமர்ந்து பார்வையாளர்களின் கோட்டோவியங்களை வரைந்து தந்து கொண்டிருந்தார். அவரிடம் வரிசையில் நின்று படம் வரைந்து கொள்ளும் கூட்டம் எப்படி இருந்திருக்கும் என்றுகூறத் தேவையில்லை. அவர் வரைந்த முக்கியப் பிரமுகர்களில் ஒருவர் மைய அமைச்சர் தாமஸ்.


சாகித்ய அகாதமி, என்பிடி இணைந்து முழுநாள் எழுத்தாளர் சந்திப்பு ஒன்றை நடத்தின. இதுபற்றி தனியாக பதிவு எழுதிவிட்டதால் இங்கே குறிப்படவில்லை. அதன் சிறப்புப் பேச்சாளர் சச்சிதானந்தன் உரை கவனிக்கத்தக்கது. தமிழில் படிக்க விரும்புவோர் இங்கேசொடுக்கவும். ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.


போலந்தின் கதைசொல்லர் அருங்காட்சியக இயக்குநர் மிகேல் மலினோவ்ஸ்கி. இந்த முறை நான்கு அமர்வுகளில் குழந்தைகளுக்கு கதைகள் கூறி மகிழ்வித்தார். கதைகூறுவது எப்படி என்றும் விளக்கினார். ஈர்க்கப்பட்ட குழந்தைகள் சிலைகள்போல அமர்ந்து கவனித்துக் கேட்பதும் உற்சாகக் கூச்சல்கள் எழுப்புவதும் பார்க்கும்போது புரிகிறது - நாம் இந்தக் கலையை எப்போதோ பறக்க விட்டு விட்டோம் என்பதும், நாமும் இதேபோல் சொன்னால் குழந்தைகளை தொலைக்காட்சிகளிலிருந்து மீட்கவும் முடியும் என்பதும்.




இந்த ஆண்டின் சிறப்பு விருந்தினர் நாடு பிரான்ஸ் நன்றாக ஏமாற்றிவிட்டது. அதன் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். அன்றாடம் ஒரு திரைப்படம் வெளியிட்டதே முக்கிய நிகழ்வு - ஆனால் பார்வையாளர்கள் மிகக் குறைவு.

வழக்கம்போல கடைசிநாள் குடும்பம் வந்திருந்தது. குழந்தைகளும் மனைவியும் தம் விருப்ப நூல்களைத் தேடி வாங்கினர். மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல அன்றும் எனக்கு வேலை கொஞ்சம் மீதமிருந்ததால் கடைசிநாள் சுற்றுவதும் இல்லாமல் போனது.


அடுத்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. 2014 பிப்ரவரி 15 முதல் 23 வரை நடைபெறும். போலந்து சிறப்பு விருந்தினர் நாடாகப் பங்கேற்க இருக்கிறது. இதன் அறிவிப்புக்கூட்டத்தில் போலந்தின் இந்தியத் தூதர் பங்கேற்றார். இந்திய மொழி இலக்கியங்களை போலிஷ்  மொழியில் மொழியாக்கம் செய்ய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

* * *

கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின்போது எஸ். ராமகிருஷ்ணன் வந்திருந்தார். அவரை என்பிடி இயக்குநருக்கு அறிமுகம் செய்துவைத்து, சிறுகதைத் தொகுப்பு ஒன்றைக் கேட்டதன் பயனாய் குதிரைகள் பேச மறுக்கின்றன என்ற சிறுகதைத் தொகுப்புநூல் அண்மையில் வெளிவந்தது. சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு சாரு நிவேதிதா வருவதாக இருந்தது. வராததும் நல்லதே. சாகித்ய அகாதமி நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து வந்திருந்தார் கவிஞர் சக்தி ஜோதி.


* * *
திருவிழா முடிந்து வழக்கமான வேலைகளில் இறங்கியாயிற்று. இனி ஒவ்வொன்றாகப் படிக்கவும் ஆரம்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு வாங்கிய நூல்களே இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றில் படித்ததில் பிடித்ததை இன்னும் எழுத இயலவில்லை. விரைவில் எழுத வேண்டும். படிக்க வேண்டும். .... எழுத வேண்டும். டும்...டும்...டும்... 

வாசிப்பை நேசிப்போம்.

No comments:

Post a Comment