Tuesday, 16 April 2013

படித்ததில் பிடித்தது 5 - ஒரு ரூபாய் டீச்சர்


இந்தப் புத்தகத்தை வாங்கியதே சுவையான கதை. புத்தகத் திருவிழா நேரத்தில் ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, நிகழ்ச்சி ஒன்றில் ஒன்பது பேருக்கு பரிசளிக்க வேண்டும், புத்தகங்களாக அளிக்கலாம், நீங்களே வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றார். சரி என்று அவசர அவசரமாக நிறைய அள்ளிக்கொண்டு போய்க் கொடுத்தேன். புத்தகப் பரிசுபெற இருந்தவர்களில் ஆசிரியர் ஒருவரும் இருந்தார். எனவே, கல்வி தொடர்பான நூல்களும் சில வாங்கினேன். அப்போது கண்ணில் பட்டது ஒரு ரூபாய் டீச்சர். ஓஹோ... டோட்டோ சான், பகல் கனவு போல ஏதோவொரு பள்ளி ஆசிரியரைப் பற்றிய புத்தகமாக இருக்கும் என்று எண்ணி எடுத்துக்கொண்டு வந்தேன்.

தமிழ்ப் பதிப்பாளர்கள்தான் பெரிய புத்திசாலிகள் ஆயிற்றே. பின்னட்டையில் ஆசிரியர் குறிப்பு எப்போதும் இருக்காது. இந்தப் புத்தகத்தில் புத்தக அறிமுகம்கூட பின்னட்டையில் இல்லை. யூமா வாசுகி என்று பார்த்தேன். சரி, மோசமாக இருக்காது என்று எடுத்துக்கொண்டேன். இவரது ரத்த உறவு தொகுப்பை 2010 உலகப் புத்தகத் திருவிழாவின்போது வாங்கி பாதி படித்திருந்தேன். தோழி ஒருவர் இரவல் வாங்கிச்சென்றது இன்னும் திரும்பி வரவில்லை.

பரிசளிக்க புத்தகங்களை நண்பரிடம் கொடுக்கும்போது மனதுக்குள் சிறிய சஞ்சலம்.... தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று. அதனால் இதை நான் வைத்துக்கொண்டு வேறொரு புத்தகத்தை பரிசுக்குக் கொடுத்து விட்டேன். இன்றைய வாசிப்புக்குக் கிடைத்ததுதான் இப்படி என்னிடம் தங்கிவிட்ட இந்த ஒரு ரூபாய் டீச்சர். தலைப்பு எனக்குப் பெரிய ஏமாற்றம்.... படித்துக் கொண்டே போகிறேன். உள்ளே டீச்சர் பற்றி எதுவுமே காணப்படவில்லை.

ஆனால் வாசிக்கத் துவங்கியபிறகுதான் தெரிந்தது எவ்வளவு அருமையான புத்தகத்தைத் தக்கவைத்துக்கொண்டேன் என்பது. இதில் உள்ளவை எல்லாம் யூமா வாசுகி மேற்கொண்ட நேர்காணல்கள். நேர்காணப்படுவோர் சொல்வதை அதே மொழிநடையில் தந்திருக்கிறார். சில நேர்காணல்கள் இலக்கணத் தமிழில், சில அந்தந்தப் பகுதியின் வழக்குத் தமிழில். அதுவும் சுவையாகவே இருக்கிறது.

* * *

முதல் நேர்காணலில் சக்தி கோவிந்தன் என்பவரின் மகன் அழகப்பன். அவர் பேசப்பேச தந்தையின் வரலாற்றோடு பதிப்பக வரலாறும் விரிகிறது. இன்று பிரபலமாகப் பேசப்படும் பலர் எங்கே துவங்கினார்கள் என்று தெரிகிறது. ஆனால் இன்று சக்தி கோவிந்தன் என்றால் அவரது ஊரிலேயே தெரியவில்லை. கோவிந்தன் செட்டியார் என்றால்தான் சிலருக்குத் தெரிகிறது.

வை. கோவிந்தன் என்னும் சக்தி கோவிந்தன் சுத்தானந்த பாரதி, சாமிநாத சர்மா ஆகியோரின் சகா. சக்தி காரியாலயம் என்ற பதிப்பகத்தின் மூலம் சாதனை படைத்தவர். சக்தி, மங்கை என்னும் பத்திரிகைகள் நடத்தியவர். இன்று சென்னையில் மியூசிக் அகாடமி இருக்கும் இடத்தில்தான் சக்தி காரியாலயம் இருந்தது. தி.ஜ. ரங்கநாதன், கு. அழகிரிசாமி, தொ.மு.சி. ரகுநாதன் எல்லாரும் இங்கே பணியாற்றியவர்கள். அழ. வள்ளியப்பா இங்கேதான் இருந்தார். குமுதத்துக்குச் சென்ற ரா.கி. ரங்கராஜன் இங்கேதான் இருந்தார். கணக்கு வழக்குப் பார்த்துக்கொள்ள வந்த தமிழ்வாணன் இங்கே அணில் என்னும் குழந்தைகள் பத்திரிகையில் பணியாற்றி, பின்னர் குமுதத்துக்குப் போய் கல்கண்டு துவங்கினார்.

வை. கோவிந்தன் ஒரு ரூபாய்க்கு பாரதி பாடல்களைப் பதிப்பித்து புரட்சி செய்தவர். தரமான நூல்களை வெளியிடுவதையே இலட்சியமாகக் கொண்டிருந்ததால், நொடித்தவர். நான் பணியாற்றிய நிறுவனத்தின் வாயிலாக இவரைப்பற்றிய சில விவரங்கள் எனக்கு முன்பே அறிமுகமானவை என்பதாலேயே இன்னும் நெருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். இதற்குமேல் அவருடைய வறுமை, எதிர்கொண்ட சிக்கல்கள் ஆகியவற்றைப்பற்றியெல்லாம் எழுதி வாசகர்களை நோகச்செய்ய எனக்கு விருப்பமில்லை.

சக்தி கோவிந்தனை அறிந்தால் தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் பலரையும் அறிய முடியும். இலக்கியத்தின் ஜாம்பவான்கள் எல்லாம் எங்கிருந்து துவங்கினார்கள் என்றும் அறியலாம். அரசியலின், வரலாற்றின் சில பக்கங்களையும் அறியலாம்

* * *

இரண்டாவது நேர்காணல் கவிஞர் சுகுமாரன். இலக்கணத் தமிழ் நடையில் எழுதப்பட்டிருப்பதால் சுகுமாரனே எழுதித் தந்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அதனால் என்ன, விஷயங்கள்தானே முக்கியம்.  

சுகுமாரனைப்பற்றி இன்று யாருக்கும் தெரியாமல் இருக்காது என்பதால் அவரை விட்டுவிட்டு, அவருடைய கூற்றுகளிலிருந்து சிலவற்றைத் தரலாம். நிறையவே குறித்து வைத்திருந்தாலும், சில மட்டுமே இங்கே.

மனிதனுக்கு வழிபடுவதற்கோ இட்டு நிரப்புவதற்கோ ஏதாவது ஒரு இடம் தேவைப்படுகிறது. அந்த இடத்தை பெரியார் காலியாகவே விட்டு விட்டார். ... அவர் பேசிய பல கருத்துகள் அன்றைக்குப் (பள்ளியிறுதிப் பருவத்தில்) புரியவில்லை. இன்றைக்கு எனக்கு சில மறுப்புகள் உண்டு. இருந்தாலும் அவர் எனக்கு மிகப்பெரிய விழிப்பைத் தந்தவர்.  ...

என்னை மிகப் பெரிதும் பாதித்தவர் சுந்தர ராமசாமி. இரண்டாவது ஆத்மாநாம். மூன்றாவது பிரம்மராஜன். பிரம்மராஜன் எழுத்து ரீதியாக என்னை பாதிக்கவில்லை. என் வாசிப்பு கூர்மைப்படுவதற்கும் எனது அக்கறைகள் வேறு கலைகளை நோக்கிப் போவதற்கும் வாசல் திறந்து விட்டவர் பிரம்மராஜன். ...

பிரம்மராஜன் தமிழில் மிக முக்கியமான கவிஞர் என்பதில் மாற்று அபிப்பிராயம் கிடையாது. ... ஆனால் பின்னால் என்ன காரணத்தாலோ ரொம்பவும் திருகலான மொழியில், நாம் பொதுவாகச் சொல்வதுபோலப் புரியாத கவிதைகளை எழுதினார். ...

கவிதை வெறுமனே தனிமனித அனுபவம் அல்ல. தனிமனித அனுபவமாக இருக்கும்போதும் அது சமூக அனுபவம். சமூக அனுபவம் என்று சொல்லும்போது வெறும் சமூக அனுபவம் மட்டுமல்ல, ஒரு தனிமனித அனுபவமும்கூட என்கிற பெரிய தெளிவை ஆத்மாநாமுடைய தொடர்பு தந்தது. ...

தொடர்ந்து படிக்க வேண்டும். எழுதுவது நம் வேலை. அதற்கு வருகிற விமர்சனங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்கிற தெளிவைத் தந்தது அவர்தான். (சுந்தர ராமசாமி) ...

நமக்கு மொழி தெரியும் என்பதாலேயே கவிதை புரிய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ... கவிதை பூடகத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதை ஒரு உறுதியான கருத்தாக வைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. கவிதை நீங்கள் எதிர்பார்த்த மொழியில் பேசவில்லை என்பதுதான் அதில் அடிப்படை. கவிதை அது பேசிக் கொண்டிருக்கும் மொழி அல்லாது இன்னொரு மொழியில் தன்னை விளக்கிக் கொண்டேயிருக்கிறது. ...

படைப்பாளிகளுக்குச் சமூகம் கடமைப்பட்டு இருக்கிறது, படைப்பாளிகளை சமூகம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்னும் கருத்தில் எனக்கு மாற்று அபிப்ராயம் உண்டு. ...

சாதி சார்ந்தோ, மதத்தைச் சார்ந்தோ, மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை இணைப்பதைவிட மொழியைச் சார்ந்து இணைப்பது ஒரு பண்பாட்டு நடவடிக்கை. அதன் மூலமாக, மொழியின் மூலமாக சுயமரியாதையை ஏற்படுத்த முடியும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி.
...
தன் கவிதை அனுபவம், மலையாள-தமிழ் கவிதை ஒப்பீடு என சுகுமாரனின் பல கூற்றுகளைக் குறித்து வைத்திருக்கிறேன். தட்டச்ச நேரமில்லை. இந்த நேர்காணலில் பெரிய குறை அது முடிவுறாமலே முடிவுறுவதுதான். கிட்டத்தட்ட என் சமகால அனுபவங்கள் இவருடையது என்பதால் அடையாளப்படுத்திப் பார்த்துக்கொள்ள நிறையவே இருக்கிறது சுகுமாரனின் கூற்றுகளில்.

* * *

அடுத்தது கோபிகிருஷ்ணன் நேர்காணல். கோபிகிருஷ்ணன் அதிகம் அறியப்பட்டவரல்ல. ஆனால் எனக்கு குறுகிய காலம் நேரடி அறிமுகமும் இருந்திருக்கிறது. அதனாலேயே அவருடைய வலிமிகுந்த அவரே சொன்னதுபோல அசிங்கமான சுயவரலாறு மனதைத் தொடுவதாக இருக்கிறது.

என்னைப்போலவே பல வேலைகளைச் செய்தவர், ஓரிடத்தில் தங்காமல் ஓடிக்கொண்டே இருந்தவர். எங்கும் நிலைத்து நிற்க இயலாத மனநோய்க்கு ஆளானவர். பெண்ணின் அன்பைத் தேடியவர், அதற்காக அலைந்தவர். புரிந்து கொள்கிற விஷயத்தில் தவறும் செய்தவர், ஏமாந்தும் நின்றவர். கடைசியில் கொஞ்சம் அமைதியான குடும்ப வாழ்க்கை அமைந்தவர். அதையும் சிக்கலாக்கிக் கொண்டவர். அல்லது சிக்கல் அவருடைய ராசியாக இருந்தது.

இந்த நேர்காணலில் தான் எழுதிய ஒரு காதல் கடிதம் பற்றியும், அதனால் ஏற்பட்ட சிக்கலையும் அவரே விளக்குகிறார். அதே சிக்கல் அவருடைய வாழ்க்கை முழுதும் தொடர்கிறது. அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வேறெவருக்கும் புரியக்கூடியதல்ல. ஆம், அவர் தன் மனைவிக்கு எழுதிய காதல் கடிதத்தை நான் படித்திருக்கிறேன். ஆனால் அப்போது தெரியாத அவருடைய மனச்சிக்கல்கள் இப்போது கொஞ்சம் புரிபடுவதாகத் தோன்றுகிறது.

இவருடைய கதைகளைப் படித்திருக்கிறேன். ஓரிரு நூல்களும் என்னிடம் இருக்கலாம். அவரை அவருடைய கதைகளில் காணலாம். தமிழ்ச் சிறுகதைத்தளத்தில் அவருக்கொரு தனி இடம் உண்டு.

* * *

அடுத்து வருபவர் சிந்தாமணி. புதுக்கோட்டை அருகே ஒரு ஊரில் சிதைக்கு தீமூட்டும் பணியில் இருக்கும் அபூர்வப்பெண். இவர் கூறுவது அப்படியே வழக்குமொழியில் இருப்பதால் அதன் சுவை கூடுகிறது. இங்கே சுவை என்கிற சொல் பொருந்தாதுதான்.

பாரம்பரியத்துக்கு எதிரான தொழிலில் ஈடுபட்டிருப்பவர். கணவனிடமிருந்து தொழிலைக் கற்றுக் கொண்டவர். தொழிலுக்கே உரிய போட்டிகளையும் சமாளிக்க வேண்டியவர். சிதை எப்படி அடுக்குவது, குழைத்துப் பூசுவது, காற்றுக்கும் நெருப்புக்கும் ஓட்டை போடுவது என்றெல்லாம் இவர் விளக்கும்போது கண்முன் ஒரு சிதை உருவாகிறது.

இது எழுதப்பட்டது 2003. அப்போது இவர் 25 ஆண்டுகளாக இதே வேலை செய்கிறார். ஆண்டுக்கு சராசரியாக 10-15 என்றால் .... கட்டிட வேலை கிடைத்தால் அதற்கும் செல்கிறார். மகன் தவுலடிக்கப் போகிறான். சொந்த வீடு இல்லை, நிலபுலன் ஏதும் இல்லை. நாம் பேசுகிற சமூகப் பாதுகாப்புகள் ஏதும் இல்லை.

சொந்த உழைப்பில் மட்டுமே ஜீவனம். ஆனாலும் சுரண்டலும் ஜாதியும் வாட்டுகின்றன. பட்டா கொடுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. ஆண்டவனிடம் கோரிக்கை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இவர் சக்கிலியர் என்பதால் பள்ளர் பறையர் இவருக்கும் மேல் ஜாதி. கூடவே வருகின்றன சாதி சார்ந்த சொலவடைகள் சாணான கண்டா தீட்டு, சக்கிலியனத் தொட்டாத்தான் தீட்டு. சாமப் பயிர் அழகு, சக்கிலியப் பெண் அழகு.

நகர வாழ்க்கைக்கு அறிமுகமற்ற வாழ்க்கையை அறிமுகம் செய்கிறது இந்த நேர்காணல்.

* * *


கடைசியாக வந்து சேர்ந்தார் ஒரு ரூபாய் டீச்சர். சரஸ்வதி அம்மா. 2003இல் நேர்காணல் நடக்கும்போது இவருக்கு வயது 105.

பால்ய விவாகத்துக்கு ஆளானவர். படித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். சரோஜினி நாயுடுவின் உறவினர். கஸ்தூரி பாவுடன் நெருங்கிய பழக்கம் உண்டு. ஆறுமாதம் ஒன்றாக சிறையில் கழித்தவர். தடியடி பட்டவர். கணவர் குண்டடிபட்டு இறந்தவர். போராட்டக் கூட்டத்தில் குழந்தைகளையும் இழந்தவர். சகோதரனையும் இழந்து, பட்டினி கிடந்து, நடந்தும் அலைந்தும் திரிந்தும் பட்டுக்கோட்டை வந்து சேர்ந்து டியூஷன் நடத்தி வாழ்க்கை நடத்தி வந்தவர்.

இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது இவரது வேதனைக் கதையில். மாதம் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு சுமார் 5000 பேருக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவர். ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இது ஒன்று போதாதா...

கடைசிபத்தி கலங்க வைக்கிறது. கீத்து பிஞ்சிபோயி மழை வீட்டுக்குள்ளே கொட்டுது. ராத்திரி பூரா சுவர் ஓரமா ஒக்காந்துகிட்டேயிருந்தேன். எனக்கு ஆதரவு இல்ல. யாருமில்ல. எனக்கு எந்த நேரமும் எது நடக்கும்னு தெரியல. அப்படி ஒண்ணு நடந்து நான் செத்துப்போயிட்டேன்னா தயவுசெஞ்சி ரொம்பநேரம் போட்டு வைக்காம ஒடனே அடக்கம் பண்ணிடுங்க. இதுதான் என் கடைசி ஆசை.

* * * 


ஆனாலும், போகிற போக்கில் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு டியூஷன் எடுத்தார் என்று ஒரு வரி வருவதால் தலைப்பு நியாயமாகி விடுகிறது. எனக்கு, ஒரு ரூபாய்க்கு நூல்களை வெளியிட்ட சக்தி கோவிந்தன் மற்றொரு ஒரு ரூபாய் டீச்சர். ஒரு ரூபாய்கூட இல்லாமல் ஊர்ஊராய் அலைந்த கோபி கிருஷ்ணனும் ஒரு டீச்சர்.

2003இல் எடுக்கப்பட்ட நேர்காணல்கள் 2011இல் புத்தகமாக வருகிறது என்றால், தமிழ் பதிப்புலகை எப்படி சாடலாம்.... நீங்களும் படித்துவிட்டு யோசனை சொல்லுங்கள். 






ஒரு ரூபாய் டீச்சர், யூமா. வாசுகி 
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
978-81-234-1978-7, ரூ. 80

3 comments:

  1. தாமதமாக வந்தாலும், நல்ல நூல் தானே ! படித்து வைப்போமே!

    ReplyDelete
  2. நூல் அறிமுகம் அருமை. வாங்கிப் படிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  3. நல்ல நூல் அறிமுகம் ஷாஜஹான் ஜி!

    வாங்கிப் படிக்க முயல்கிறேன்.

    ReplyDelete