Thursday, 4 April 2013

சொற்களோடு உறவாடல்
இப்போதெல்லாம் நான் நிகழ்த்துவது
சொற்களோடு உறவாடல்களை.
தினம் தினமும் உரையாடல்கள்
முடிவடையாமலே முடிவடைகின்றன.
முடிவடையாதோ என்ற கேள்வியும்
முடிந்துவிடுமோ என்ற கவலையும்
முடிய வேண்டாமோ எனும் ஏக்கமுமாய்
முடிவு செய்யாமல் முடியும் நாட்கள்.

இப்போதெல்லாம் நான்
உறங்கும்போது அணைத்துக்கொள்வது
சொற்களைத்தான்.
ஆழ்துயில் கனவுகளில் காண்பதும்
சொற்களைத்தான்
அதிகாலை அரையிருட்டில் விழித்ததும்
என் விரல்பிடித்து இங்கே
அழைத்துவருவதும்
சொற்கள்தான்.

சொற்களோடு உறவாடுவதில்
சுகமும் உண்டு, சௌகரியமும் உண்டு.
அவை சுணங்கிக்கொள்வதில்லை
சொந்தங்களைப் போல.
ஆனாலும் சிக்கலும் உண்டு
சொந்தங்களோடு உறவாடல்
சுருங்கிப்போகிறது என்பதில்.

நானும் சொந்தம் பாராட்டாத சொற்களும்
எங்கள் சொந்த உலகத்துக்குப் போகிறோம்.
மடியில் அமர்ந்த மாடிவீட்டுக் குழந்தைபோல
ஒரு சொல் என் தலையைப் பிடித்தாட்டும்.
குஞ்சுமகளின் பிஞ்சுவிரல் போல்
ஒருசொல் என் சிந்தனையை வருடும்.
கடற்கரையில் நடக்கையில் குதிரையேறிய
குழந்தையாய் ஒரு சொல் மனதில் தொங்கும்.
பக்கத்துவீட்டின் சுட்டிப்பயல் போல ஒருசொல்
என்னுடன் சேர்ந்து தட்டச்ச முயலும்.

சொற்கள் ஒருபோதும் உரிமை பாராட்டுவதில்லை
சொற்கள் ஒருபோதும் தனியே விட்டுச்செல்வதில்லை
சொற்கள் ஒருபோதும் என்னைப் புறக்கணிப்பதில்லை
சொற்கள் ஒருபோதும் கோபமும் கொள்வதில்லை.

சொற்கள் என் பக்கம் வராமல்
சீண்டிப்பார்க்கும் சிலநேரங்களில்
கெஞ்சிக் கேட்டால் மனதில் அமரும்.
ஒளிந்துகொள்ளும் சிலநேரங்களில்
தவித்துத் தேட, தலைகாட்டிச் சிரிக்கும்.
கவனிக்காதுவிட்ட சிலநேரங்களில்
கவனி கவனியென கண்களைச் சுற்றும்.
சொற்களுக்கும் எனக்குமான புரிதல்
நண்பனோடு மட்டுமேயான புரிதல்.

சொற்கள் என்னோடு தமது
ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கின்றன
நானும் அவற்றோடு.
சொற்களும் என்னைப்போலவே
ரகசியங்களைப் புரிந்திருக்கின்றன.
சொல்லாமலே சொல்லுகிற
வித்தை அறிந்து வைத்திருக்கின்றன.
சொல்லாமல் கொல்லுகிற சூட்சுமம்
சொற்களுக்கு அந்நியமானது.

சொற்கள்
நினைவுகளின் எல்லைகளிலும்
நீக்கமற வியாபித்திருக்கின்றன.
கனவுகளில் தவறாமல் வருகின்றன
கண்களைத் திறந்து விடுவதற்கும்
கணினிமுன் அமரச் செய்யவும்
கவிதைகளை எழுத வைக்கவும்.

சாலையில் போகையில் சட்டெனத் திரும்பி
போதைப் புன்னகையை கணப்பொழுதில் வீசி
ஏதுமறியாதவள்போல மேலே நடக்கிற
அறிமுகம் கிடைக்காத அழகிபோல
கணநேரம் மனதில் பட்டு சில சொற்கள்
காணாமல் போய்விடுகின்றன.
ஆற்றிக்கொள்கிறேன் மனதை
என்போன்ற எவரிடம்தான் இருக்குமென்று.

சொற்கள்
பெற்றவரைவிட்டு மற்றவரை நாடும்
பிறந்தகம்விட்டு புகலிடத்தைத் தேடும்.
வளர்ந்தும் திரிந்தும் மாறியும் மருவியும்
உற்றவர் அறிந்து உறவாகி ஒட்டும்.
இப்படித்தான் என்னையும் வந்தடைந்தன
எவரெவரோ பெற்ற சொற்கள்.

எவரெவரோ பெற்றால் என்ன...
மற்றவர் சொத்தென்று அறிந்தபின்னும்
அணைத்துக்கொள்கிறேன் ஆறுதலாக.
நாடி வந்த சொற்கள் எல்லாம்
நானே மறக்கும் வரையும்
நானே மறையும் வரையும்
எனக்கே உடைமையாகும்.

மனதில் அமரத் தயங்கும் சொற்களை
யாசிக்கவும் தயக்கமில்லை.
மனதுக்கு நெருக்கமானவற்றை
பூசிக்கவும் தவறுவதில்லை.
சிதைவுறாமல் செதுக்குகிறேன்.
வலி தராமல் வடிவமைக்கிறேன்.
உறவாகிப்போன சொற்களை
அலங்கரித்து அழகு பார்க்கிறேன்
அன்னை தன் மகவை பார்ப்பதுபோல.

அறிவை, அன்பை, செல்வத்தை
அவரவரே அனுபவித்தல் அறிவல்ல.
அலங்கரித்து அடுக்கி வைத்து
அழகு பார்த்த என் சொற்களை
எழுத்தாக்கிப் பகிர்கின்றேன்
எல்லார்க்கும் பொதுவாக.
யாசித்தும் பூசித்தும் நேசித்தும்
போற்றத் தெரிந்தவர் எவரும்
ஏந்தலாம் இச்சொற்களை
உறவாகலாம், உறவாடலாம், பின்
உலகையே இனிதாக்கலாம்.

7 comments:

Ramani S said...

மிக மிக அருமை
நிச்சயம் உங்களால் பயன்படுத்தப்பட்ட சொற்கள்
பெருமிதம் கொண்டிருக்கும்
ஆழந்த கருத்துடன் கூடிய அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Shahjahan Rahman said...

நன்றி வேலூர் ரமணி அவர்களே.

Chellappa Yagyaswamy said...

சொற்களோடே ஒவ்வோர் இரவும் உறங்கிட வாழ்த்துகிறேன். எப்படியாவது
இந்த பூமியைப் பெயர்க்கும் நெம்புகோல் நூலொன்று உங்களிடமிருந்து வந்துவிட வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

Shahjahan Rahman said...

நன்றி நண்பரே. இங்கே தில்லிக் கவிஞர்களின் நூல்களை வெளியிட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வந்த இராய. செல்லப்பா என்றொரு நண்பர் இருந்தார். தயவுசெய்து அவரிடம் கூறுங்கள், மீண்டும் தில்லிக்கு குடியேறுங்கள் என.

Sathya Asokan said...

பிபிபி... ர....மா.........தத. .ம் .

வேறு எதுவும் சொல்ல "சொற்கள்" கிடைக்கவில்லை.

அதுதான் உங்களுடனேயே உறவாடிக்கொண்டிருக்கிறதே, என்ன சொல்ல!

"ரிப்பீட்டு"" முதல் வரி

சத்யா அசோகன்

Shahjahan Rahman said...

புத்திசாலி. சொற்களை எந்தப் பதிவுக்குப் பயன்படுத்த வேண்டும், எந்தப் பதிவுக்குக் கூடாது என்று நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள் சத்யா.

shanti krishnan said...

அண்ணா,