Tuesday, 9 April 2013

தமிழ்ச்சங்க விருதுகள் - தன்னிலை விளக்கம்


தில்லித் தமிழ்ச்சங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சிக்கு நான் செல்லாமல் இருந்ததற்கு, விருதுக்கு உரியவர்களின்மீதான காய்ச்சல்தான் காரணம் என்று சிலர் பேசியதாகத் தெரிய வந்தது. தினமணி பத்திரிகையில் வெளியான செய்தியைப் பார்த்து, என்னை நன்கறிந்த நண்பர்கள் பலர் தமிழகத்திலிருந்தும் தொலைபேசியில் அழைத்து, ஏன் நிகழ்ச்சிக்கு வரவில்லை, விருதுகள் குறித்து நீங்கள் ஏன் எதுவுமே எழுதவில்லை, என்ன விருது இது என பலவாறாக விசாரித்தார்கள். அதன் பொருட்டே இந்தத் தன்னிலை விளக்கம்.


விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களில் என் மதிப்புக்குரிய சுசீலாம்மா - பேராசிரியர் எம்.ஏ. சுசீலா - இருந்தார்கள். அவருடைய முகநூல் பக்கத்தில் முதலில் வாழ்த்துத் தெரிவித்து விருதுக்குப் பெருமை சேர்க்கும் சுசீலாம்மா என்று பகிர்ந்தேன். இவர் தில்லிக்கு வந்தபிறகு அல்ல, மதுரையில் இருக்கும்போதே நான் ஒருங்கிணைப்பாளராக இருந்த நிகழ்ச்சியில் பேசியவர். இலக்கியம் இவருக்கு மூச்சு, இளையவர்களை அரவணைத்து ஊக்குவிப்பது இவரது பண்பு. இவருக்கு விருது கிடைப்பதில் நான் பெருமை அடைகிறேன். இதனினும் உயரிய பல விருதுகள் அவருக்குக் கிடைக்க வேண்டும், கிடைக்கும்.


விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட எம். சேது ராமலிங்கம் அவர்கள். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பை தில்லித் தமிழர்கள் நன்கு அறிவார்கள். என்னிலும் மூத்த, என்னிலும் கற்றறிந்த, எல்லாவகைகளிலும் என்னிலும் பலபடிகள் மேலே இருக்கிற நண்பர் சேது, என்னை சமவயதுத் தோழனாக நடத்துபவர். நாங்கள் இருவரும் சேர்ந்து பங்கேற்ற கவியரங்குகள் கணக்கில் அடங்காது. அவரது சிந்துக் கவிதைக்கு நான் அடிமை, என் சந்தக் கவிதைக்கு அவர் ரசிகர். இருவரும் மொழியாக்கப் பணிகளில் பரஸ்பரம் செம்மைப்படுத்திக் கொள்பவர்கள். தில்லியில் எனக்குக் கிடைத்த நட்புக் குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. இவருக்கு விருது கிடைப்பதில் மகிழ்கிற முதல் ஆள் நானாகவே இருப்பேன்.


நாடகத்துறைக்காக தேர்வு செய்யப்பட்ட பென்னேஸ்வரன் அவர்கள். யதார்த்தா நாடகக்குழு அமைத்து தீவிரமாக செயல்பட்டு வந்தவர். அவர் இயக்கிய முறைப்பெண் நாடகத்தில் நானும் என் குடும்பத்தில் இருவரும் நடித்தோம். சுப்புடு அமோகமாகப் பாராட்டிய நாடகம் அது. அதற்குப் பிறகு எப்போ வருவாரோ என்றொரு நாடகத்தை மீளவும் அரங்கேற்றினார். முன்னதைவிட சிறப்பாக இருக்கவில்லை என்றாலும் நன்றாகவே இருந்தது. அதற்குப்பிறகு சாம்பசிவா - அது பென்னேஸ்வரனின் முத்திரை இல்லாமல் சோபையிழந்தது என்பது என் கருத்து. சுமார் எட்டாண்டுகளாக அவர் நாடகம் ஏதும் இயக்கவில்லை. அவர் தமிழாக்கம் செய்து வைத்திருக்கிற பாரதி என்னும் நாடகத்தை அரங்கேற்றுங்கள் என்று அவரிடமே பலமுறை கூறியவன் நான்.


சங்கச் செயற்குழுவுக்கான கடந்த தேர்தலில் ஆதரவு-எதிர்ப்பு என்கிற விவகாரத்தில் எங்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது. அவர் என்மீது கோபம் கொண்டு பன்மையில் அழைக்கத் தகுதியற்றவன் என்று என்னைப்பற்றி எழுதியிருக்கிறார். அதற்காக எனக்கு வருத்தம் ஏதுமில்லை. அவரவர் பார்வையில் அவரவர் நியாயங்கள். இப்படி எழுதிவிட்டாரே என்பதற்காக நாடகத்துறையில் அவருக்கு விருது கிடைக்கும்போது நான் மகிழாமல் இருக்க முடியுமா என்ன... ஆனால் பென்னேஸ்வரனுக்கு விருது தருவதால்தான் நான் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று ஒரு கதை தீவிரமாக உருவாகியது, இன்றும் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்தக்கதையை எழுதியவர்களுக்கு அவர்களுக்கே உரிய காரணம் இருக்கலாம்.

நடனத்திற்காக விருது பெற்ற மூன்று பேரில் ஒருவர் சரோஜா வைத்தியநாதன். 90களின் துவக்கத்தில், கணிப்பொறிகள் இல்லாத காலத்தில், இவருக்கு ஒரு விருதுக்குப் பரிந்துரை செய்து சங்கம் அனுப்பிய கடிதத்தை என் கையால் நானே எழுதியிருக்கிறேன். (சங்கத்தின் கடிதங்கள் எல்லாம் அப்போது முத்துமுத்தான என் கையெழுத்தில்தான் இருக்கும்.) தேசிய அளவில் உயரிய விருதான பத்ம விருது பெற்றவர் சரோஜா வைத்தியநாதன். சங்க செயற்குழுவில் இவரும் இவரது கணவர் அமரர் வைத்தியநாதனும் இருந்த காலத்தில் நானும் அதே குழுவில் இருந்தவன். இவருக்கு விருது கிடைப்பதில் நான் வருத்தம் கொள்ள இயலுமா...

நிகழ்ச்சிக்குச் செல்லாததற்கு காரணங்கள் இரண்டு -
முதலாவது காரணம் என் வேலைப்பளு. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக தினமும் காலை 5.30 மணிக்குத் துவங்கி இரவு 12.00 மணிக்கு முடிகிறதாக அமைந்திருக்கிறது என் பணிவாழ்க்கை. அதுவும் கடந்த வாரம் கடுமையான வேலையால் சுட்டியை இயக்கும் சுட்டுவிரல் வலி தாங்கமுடியாததாக இருக்கிறது. ஆனால் திங்களன்று வேலை முடித்தாக வேண்டியிருந்ததால் நான்கு மணி நேரத்தை விருது வழங்கும் விழாவில் செலவு செய்ய முடியாத நிலை. (அந்த வேலை 99 விழுக்காடு முடிந்து விட்டதால்தான் இதை எழுதுகிறேன். இதே காரணத்தால்தான் நேற்று யாரும் சாட்டில் வரவேண்டாம் என்று வேண்டியதும்கூட.)

இரண்டாவது காரணம் - விருதுகள் முடிவு செய்யப்பட்ட விதம். தமிழ்ச்சங்கம் விருதுகளை வழங்க வேண்டும்தான். அதுவும்கூட, தேசிய அளவில் மதிக்கப்படுகிற சாகித்ய அகாதமி விருதினும் உயர்ந்த விருதாக இருக்க வேண்டும் என்பதாக ஒரு திட்டம் நான் பொறுப்புகளிலிருந்து விலகிய காலத்தில் அடுத்த குழுவுக்கு அளித்த ஆலோசனைகளில் உண்டு.

விருது என்றால் அது எப்படி முடிவுசெய்யப்பட வேண்டும் ? முதலில் விருதுக்கான அறிவிப்புக் கொடுக்க வேண்டும், தகுதிகள் வரையறுக்கப்பட வேண்டும், பரிந்துரைகளை வரவேற்க வேண்டும், அவற்றைப் பரிசீலிக்க தகுதி வாய்ந்த குழு இருக்க வேண்டும், அந்தக் குழு தேர்வு செய்த பட்டியலிலிருந்து விருதுக்குரிய நபர் இறுதி செய்யப்பட வேண்டும். அதை சங்கத்தின் செயற்குழு முழுதும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அது விருதாக இருக்கும். 

இப்போது அளிக்கப்பட்டவை நபர்களுக்கேற்ற விருதுகள். இதில் எனக்கு உடன்பாடில்லை - என் மதிப்புக்குரிய நண்பர்களுக்கும் விருது கிடைத்திருக்கிறது என்றாலும். இந்த என் கருத்தை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பது எங்கள் நட்பின் பலம்.  யார் யார், எதற்காக, எந்தெந்த விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார்கள் என்று ஆராய இது உகந்த இடம் அல்ல. ஏதேனுமொரு விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றால், அது நியாயமாக இருந்தால், திருத்த முயற்சி செய்வேன். திருத்த இயலாத நிலையில் நான் இருந்தால், அமைதியாகப் புறக்கணிப்பேன். அதுதான் என் வழக்கம். அதைத்தான் இப்போதும் நான் செய்தேன்.

இந்தத் தன்னிலை விளக்கத்தையும் ஏற்காமல், காழ்ப்பின் காரணமாகவே நான் பங்கேற்கவில்லை என்று யாரேனும் கருதினால், அவர்களுக்காக பரிதாபப்படுவதைத்தவிர நான் செய்யக்கூடியது ஏதுமில்லை.

2 comments:

Chellappa Yagyaswamy said...

நீங்கள் தெரிவித்த அத்தனை கருத்துக்களிலும் எனக்கு முழு உடன்பாடு உண்டு. பரிசு பெற்றவர்கள் தகுதியானவர்கள் தாம் என்றாலும், தலைநகரில் இயங்கும் தமிழ்ச்சங்கம் ஒரு ஞானபீடம் அளவுக்குத் தன்னை உருமாற்றிக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்புகளை ஏன் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது கேள்விக்குறியே. சாகித்ய அகாதெமியையே புறந்தள்ளிவிடும் பணவலிமை இப்போது சங்கத்திற்கு இருப்பதாகத் தெரிகிறது. உரிய கால அவகாசத்தோடு முயன்றால், தகுதியான தேர்வுக் குழுவை அமைத்துத்தரவும் அதில் பங்கு பெறவும் உலகளாவிய தமிழறிஞர்/குழுக்கள் உதவ முன்வருதல் உறுதி. உங்களது கருத்துக்கள் நிச்சயமாகச் சங்கத்தின் கதவுகளைத் தட்டும் என்பது உறுதி. வாழ்த்துக்கள்.

Shahjahan Rahman said...

நன்றி நண்பரே. நீங்களும் நானும் பார்த்த காலத்திற்கும் இன்று நான் மட்டும் பார்க்க நேர்கின்ற காலத்திற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. வேறென்ன சொல்ல இருக்கிறது.