Wednesday, 4 February 2015

ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கையோடு இருப்பது ஏன்?




தேர்தல் கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிற நிலையில், கட்சியின்மீது பொய்யான குற்றச்சாட்டுகளிலும், அதன் தலைவர் கேஜ்ரிவால் மீது தனிநபர் தாக்குதலிலும் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக இறங்கியிருக்கிறது. ஏன்? - Business Standard தளத்தில் பட்டாச்சார்யா எழுதிய கட்டுரையின் சுருக்கம்

ஆம் ஆத்மி கட்சி கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் என்று கூறிக்கொள்கிற ஒரு குழு, சந்தேகத்துக்கு இடமளிப்பவர்களிடமிருந்து கட்சி 2 கோடி ரூபாய் பெற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. எந்த விசாரணையும் எதிர்கொள்ளத் தயார் என்று ஆம் ஆத்மி கட்சி பதிலடி கொடுத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியும் இதே பிரச்சினையை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சியை குறிப்பாக அதன் தலைவர் கேஜ்ரிவாலை தாக்குகிறது. ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. தில்லி தேர்தல் இப்படியொரு கடுமையான போட்டியை கண்டதே இல்லை.

தேர்தல் களம் ஏன் இவ்வளவு சூடாக இருக்கிறது என்று அலசுவோம். தேர்தலில் வெற்றி கண்டு ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சியின் தலைமை எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை. 17 ஆண்டுகளாக தில்லியில் ஆட்சியில் இல்லாத கட்சி இப்போது மட்டும் இவ்வளவு தீவிரமாக முயற்சி செய்வது ஏன்? ஆம் ஆத்மி கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருவதாகத் தோன்றுவது ஏன்? ஆம் ஆத்மி பெரும்பான்மை பெற்றுவிடும் என்று நாளுக்கு நாள் நம்பிக்கை வலுப்படுவது ஏன்?


முதல் காரணம் அண்மையில் பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள். கிட்டத்தட்ட எல்லா கணிப்புகளுமே ஆம் ஆத்மி கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் எனக் காட்டுகின்றன. 2013இல் ஆம் ஆத்மிக்கு 28 இடங்கள் கிடைத்தன, இப்போது 35 முதல் 41 இடங்கள் வரை கிடைக்கும் என கணிப்புகள் கூறுகின்றன. கணிப்புகள் உண்மையானால், கேஜ்ரிவால் மீண்டும் தில்லி முதல்வர் ஆவார். அதனால்தான் பாரதிய ஜனதா தன் முயற்சிகளை பல மடங்கு பெருக்க வேண்டியதாயிற்று. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும், பதில் குற்றச்சாட்டுகளையும் பார்க்கும்போது பாரதிய ஜனதா கட்சி நிதானமிழந்து பதற்றத்தில் இருப்பதையே காட்டுகிறது, ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுவதில் உறுதியோடு இருப்பதைக் காட்டுகிறது.

இரண்டாவது காரணம் பாரதிய ஜனதாவின் சொந்த மதிப்பீடும் அதை பதற்றம் கொள்ளச் செய்திருக்கலாம். தில்லியில் அடுத்த ஆட்சியை தனது கட்சிதான் அமைக்கும் என்று ஜனவரியில் பாஜக தலைவர் மிகுந்த நம்பிக்கையோடு கூறினார். அதற்குப்பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. கட்சிக்குள்ளேயே இருக்கும் தலைமைப் போட்டி தில்லியையும் விட்டு வைக்கவில்லை. வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தாலும்கூட, முதல்வர் பதவிக்கு உரிய வேட்பாளர் என்று கட்சியிலிருந்து யாரையும் முன்வைக்க முடியவில்லை. எனவே, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் கேஜ்ரிவாலுடன் சகாவாக இருந்த கிரண் பேடியைத் தேர்வு செய்ய வேண்டியதாயிற்று. நடுத்தர மக்களை, குறிப்பாக பெண்களைக் கவர்வதற்கான தந்திரம் என்று இது கருதப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, இது கட்சிக்குள்ளேயே தொண்டர்களிடமும் தலைவர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு இன்னும் ஊக்கத்தை அளித்தது.

பாரதிய ஜனதா பிரச்சாரத்தில் கிரண் பேடியை இழுத்தது இன்னும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டது. இந்தக் காரணிதான் தில்லி தேர்தலில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தோன்றுகிறது. மகாராஷ்டிரத்திலும் ஹரியாணாவிலும் இதேபோன்ற நிலைமை வந்தபோது பாரதிய ஜனதா என்ன செய்தது என்று பார்ப்போம். இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று பாரதிய ஜனதா கட்சி முடிவெடுக்க முடியாமல் திணறியது. எனவே, கட்சிக்கு உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ யாரையும் தேர்வு செய்ய முடியாமல் போனதால், பிரதமர் மோடியை மட்டுமே பிரச்சாரத்திற்கு நம்ப வேண்டியதாயிற்று. கடைசியில் என்னவாயிற்று? யாருக்கு எதிராகப் போட்டியிட்டார்களோ, அவர்களையும் சேர்த்தே ஆட்சி அமைக்க வேண்டியதாயிற்று.

இதே ஃபார்முலாவை தில்லியில் ஏன் பயன்படுத்த முடியாமல் போனது? தில்லி தேர்தலில் மோடியை மட்டுமே முன்னிறுத்தினால், பிரதமராக இருக்கும் மோடியின் மீது மக்களுக்கு இப்போது இருக்கும் அதிருப்தியால் தோல்விதான் கிடைக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி நினைத்ததா? அப்படிப்பட்ட சூழலில் கிரண் பேடி பயன்தரக்கூடிய தலைவர்தானா? கட்சி வெற்றி பெற்றால், அதன் பெருமையை தலைமை எடுத்துக்கொள்ளும், தோல்வி அடைந்தால், முதல்வர் வேட்பாளர்மீது குற்றம் சாட்டப்படும். கிரண்பேடி பலியாடு ஆவார். இந்தக் கேள்விகளுக்கு பாரதிய ஜனதாவில் யாரும் பதிலளிக்கப் போவதில்லை. ஆனாலும், இந்த வகையான சிந்தனையே ஆம் ஆத்மி கட்சியினருக்கு நம்பிக்கை அளிக்கப் போதுமானதாக இருந்தது. வெற்றி பெறுவோம் என்ற உறுதி பாரதிய ஜனதாவுக்கே இல்லை என்று ஆம் ஆத்மி நம்பிக்கை கொண்டது.

நான்காவதாக, 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத வேறு கட்சியை பாரதிய ஜனதா எதிர்கொள்வது இது மூன்றாவது முறை. முந்தைய இரண்டிலும் பாரதிய ஜனதாவின் வெற்றி அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. ஜார்க்கண்டில் மயிரிழையில் வெற்றி கிடைத்தது, ஜம்மு கஷ்மீரில் கூட்டணி இருந்தும்கூட ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால் அதற்கு முன்னர் மகாராஷ்டிராவிலும் ஹரியாணாவிலும் காங்கிரசை எளிதாக வெல்ல முடிந்த்து. தில்லியில் காங்கிரஸ் முற்றிலும் குலைந்து போயிருக்கும் நிலையில், பாரதிய ஜனதாவின் முக்கிய எதிர்க்கட்சி ஆம் ஆத்மி கட்சிதான். அதாவது, ஜார்க்கண்ட் அல்லது ஜம்மு கஷ்மீர் நிலைமைதான் இங்கும் இருக்கிறது. வாக்காளர்களை சந்திக்கும்போது பாரதிய ஜனதா தன்மீதே நம்பிக்கை இல்லாம் இருக்கிறது என்றால், மேற்சொன்ன தேர்தல் கணக்கு காட்டும் உண்மைதான் காரணமாக இருக்க வேண்டும்.

இறுதியாக, ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதாக இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மட்டுமே இல்லாமல், வர்த்தகர்களின் நலன்களையும் உள்ளடக்கியிருக்கிறது தேர்தல் அறிக்கை. மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் குறைப்பு போன்ற வாக்குறுதிகளுடன், வாட் வரிக் குறைப்பையும் பேசுகிறது. இது, அண்மைக்காலம் வரை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருந்த தில்லியின் வர்த்தக சமூகத்தினருக்கு மகிழ்ச்சி அளித்திருக்க வேண்டும்.

இப்படியிருக்கையில், ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கையோடு இருப்பதிலும், பாரதிய ஜனதா கவலையோடு இருப்பதிலும் வியப்பேதும் இருக்க முடியுமா என்ன?

ஆங்கிலக் கட்டுரைக்கான இணைப்பு
http://www.business-standard.com/article/opinion/a-k-bhattacharya-why-aap-looks-confident-115020301506_1.html

2 comments:

  1. இன்றைய ஹிந்துவும் இதையேதான் சொல்லிருக்காங்க..
    எப்படியே AAP வந்தா சந்தோசம் தான் :-)

    http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-2014-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/article6855506.ece?homepage=true&theme=true

    ReplyDelete
  2. மிகச் சிறப்பான கட்டுரை....
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete