அக்டோபர் 2. ஸ்வச்ச பாரத்
(தூய்மை இந்தியா) திட்டம் துவங்கி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.
மேனுவல் ஸ்கேவஞ்சிங் எனப்படுகிற கையால்
மலம் அள்ளுகிற வழக்கமே நிறுத்தப்பட்டு விட்டது அல்லவா? சட்டம் போட்டு
ஒழிக்கப்பட்டு விட்டது அல்லவா?
கையால் மலம் அள்ளும் வழக்கம்
ஒழிக்கப்பட்டது என்றால், அந்த வேலை செய்து வந்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்?
அவர்கள் மறுவாழ்வுக்கு அரசு என்ன செய்தது என்ற கேள்வி வரும் அல்லவா? ஸ்வச்ச பாரத்
கடந்த நான்கு ஆண்டுகளில் இவர்களுக்காக என்ன செய்தது என்று பார்ப்போமா?
அவர்களின் மறுவாழ்வுக்காக (முந்தைய) அரசு
சில திட்டங்களை வகுத்தது. (இப்போதும் அவை நடப்பில் உள்ளன.)
1.
ஒரு மலமள்ளும் குடும்பத்தின் ஒரு நபருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிப்பது. இதன் மூலம் அவர்
மறுவாழ்வுக்கு வழி செய்வது!
2.
வேறு தொழில்களைக் கற்றுக்கொள்ள பயிற்சி அளிப்பது. இதற்கு, துறைசார் பயிற்சிக்கு மாதம் 3000 வீதம் அளிப்பது.
3.
குறிப்பிட்ட தொகை வரை கடனுதவி அளிப்பது.
இவைதான் அந்தத் திட்டங்கள்.
2015-16இல் 8627 பேருக்கு 40 ஆயிரம்
தரப்பட்டது.
2016-17இல் 890 பேருக்கு 40 ஆயிரம்
தரப்பட்டது.
வெறும் 40 ஆயிரம் ரூபாயில்
ஒரு குடும்பம் என்ன தொழில் தொடங்கி நடத்திவிட முடியும் என்பது ஒரு கேள்வி.
கடனுதவியைப் பெற அவர்கள் அச்சப்படுகிறார்கள். நாளை திருப்பித்தர முடியாவிட்டால்
அரசு கழுத்தைப் பிடிக்குமே என்று அஞ்சுகிறார்கள் என்கிறார் அவர்களுடைய நலனுக்காக
உழைக்கும் மகசெசே விருதாளர் வில்சன். “அவர்கள் வியாபாரம் செய்யலாம் என்று
சொல்கிறது அரசு. இவர்களுக்கு வியாபாரம் என்பது பழக்கமில்லாத தொழில் என்பது
ஒருபுறம் இருக்க, காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் வியாபாரம் செய்தால்
வாங்குவதற்கு யார் வருவார்கள்” என்பது இன்னொரு கேள்வி.
ஸ்வச்ச பாரத் என்ற சொல்லைக் கேட்டாலே
எனக்கு உடலெல்லாம் பற்றி எரிவதுபோல இருக்கிறது. ஏன் தெரியுமா?
ஸ்வச்ச பாரத்துக்கு இந்த அரசு ஒரு
சிறப்பு வரிகூட (செஸ்) விதித்தது என்பது உங்களுக்கும் தெரியும்தானே?
இல்லை, அந்த வரியின்
காரணமாக எனக்கு எரிச்சல் இல்லை.
அந்த வரி வருவாயை எல்லாம் இந்த அரசு என்ன
செய்தது என்பதுதான் எரிச்சலுக்குக் காரணம்.
தகவல் உரிமைச்சட்டத்தின்கீழ் ஒரு கேள்வி
எழுப்பப்பட்டு இப்போது பதில் கிடைத்திருக்கிறது.
இந்த அரசு, கைகளால் மலமள்ளும்
தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக இதுவரை ஒரு பைசாகூட நிதி ஒதுக்கவில்லை.
ஆமாம். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு பைசா
கூட நிதி ஒதுக்கவில்லை.
முந்தைய யுபிஏ அரசு கடைசியாக ஒதுக்கியது 2013-14ஆம் ஆண்டில் 55 கோடி.
யுபிஏ அரசு ஒதுக்கிய நிதியும்கூட
இன்னமும் முழுமையாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறது இந்த அரசு. மேலும் விவரங்களை இங்கே வாசிக்கலாம்.
இந்த வெட்கம் கெட்ட அரசுதான் ஸ்வச்ச
பாரத் என்று மார்தட்டிக்கொண்டு விளம்பரம் செய்துகொள்கிறது.
ஆண்டுதோறும் நடப்பதுபோல ஆட்களை விட்டு
குப்பைகளைக் கொட்டி தலைவர்கள் கூட்டிப்பெருக்கும் நாடகங்கள் இன்றும் நடக்கும். அதைப் படமாகப் போட்டுப் புல்லரித்துப் போகும் வெட்கங்கெட்ட
ஊடகங்கள். தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு ஊரார் தெரிந்து கொள்ளப்
படம்பிடித்தால் சுயநலமுண்டு என்ற பாட்டு நம் மனதுக்குள் ஒலிக்கும். அப்புறம்
மறுபடி ஸ்வச்ச பாரத் வரும். மறுபடி நாடகம் நடக்கும். மறுபடி ஊடகங்கள் ஊதுகுழலாகும்....
படத்தில் இருப்பது ராஜஸ்தானைச் சேர்ந்த
மலமள்ளும் தொழிலாளர்கள். இவர்களுக்கு ஊதியமே கிடையாதாம். வீட்டுக்கு 2 ரொட்டி
கொடுப்பார்களாம்.
மேனுவல் ஸ்கேவஞ்சிங் ஒழிக்கப்பட்டு விட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கிறது அரசு.
இப்போது சொல்லுங்கள் ஸ்வச்ச பாரத்
மகத்தான வெற்றியா இல்லை நாடகமா !
No comments:
Post a Comment