Friday 26 April 2013

படித்ததில் பிடித்தது 6 - வேறிடம்


சொந்த ஊரில் அன்னியனாக உணர வேற்றூரில்தான் வசிக்க வேண்டும் என்பதில்லை. தில்லிக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு வந்த புதிதில், தமிழர்களின் வழக்கப்படி முதலில் வசிக்கத் தேர்ந்தெடுத்த கரோல்பாக்கில் என் கால்படாத, அல்லது என் ஸ்கூட்டரின் சக்கரங்கள் படாத தெருக்களே இல்லை. ஆனால் பல ஆண்டுகளாக அந்தப்பக்கம் போகவே இல்லை. ஊரிலிருந்து பள்ளிப்பருவ நண்பர்கள் வடமாநில சுற்றுப்பயணம் வந்திருந்தனர். ஏதோவொரு வாய்ச்சவடால் டிராவல் ஏஜென்ட் கரோல்பாகில் ஒரு லாட்ஜில் தங்க ஏற்பாடு செய்திருந்தான். அது ஒரு தனிக்கதை. நண்பர்களைப் பார்க்கச் சென்றபோது தில்லியில் அன்னியனாகத்தான் உணர்ந்தேன். அன்றாடம் தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது தில்லி. தில்லியுடன் ஒட்டுறவு இல்லாமல் விலகியே வசிக்கும் எனக்கே இப்படி என்றால், தில்லியில் பிறந்து இங்கேயே வளர்ந்து முதுமைதட்டிக்கொண்டிருக்கும் பெரியவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசிக்கும்போது கவலையாக இருக்கிறது. இருக்கட்டும். பயணத்தின்போது பஸ்சில் படிக்க எடுத்துச்சென்ற புத்தகம் சுப்ரபாரதி மணியனின் வேறிடம்.

*  *   *

சுப்ரபாரதி மணியன் என் நண்பர். அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். 1992இல் இவருக்கும் ஜெயமோகனுக்கும் கதா விருது கிடைத்தபோது தில்லித் தமிழ்ச்சங்கத்தில் வரவேற்பு விழா நடத்தி பாராட்டியது நினைவுக்கு வருகிறது. அவருடைய சிறுகதைதளும் நாவல்களும் படித்திருக்கிறேன். குறிப்பாக கொங்குதமிழ் இன்பத்துக்காக. கூடவே நெசவாளிகளின் கன்னடமும் அங்கங்கே ஒலிக்கும். இரண்டும் எனக்கு அறிமுகம். அதனாலேயே இவரது எழுத்துகளில் கொஞ்சம் ஒட்டுதல் அதிகம். ஆனால் இந்தப் புத்தகத்தில் கொங்குதமிழ் கொஞ்சம்தான். கன்னடம் மிகக் கொஞ்சம். பரவாயில்லை.

இதில் இருப்பவை 7 கதைகள். குறுநாவல்கள் என்கிறார் பதிப்பாளர். எனக்கு குறுநாவலாகப் படவில்லை. கொஞ்சம் நீண்டுவிட்ட சிறுகதைகள்தான். பெயர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு வேண்டியது வாசிப்பனுபவம். ஒவ்வொரு கதையிலும் என்னையோ, எனக்குத் தெரிந்தவனையோ, தெரிந்தவனுக்குத் தெரிந்தவனையோ தேடுதல். கொஞ்சம் நெகிழ்தல். உறக்கத்தைத் துறந்து கதைகளில் வந்த பாத்திரங்களை அசைபோடல், சம்பவங்களை காட்சிப்படுத்திப் பார்த்தல். எதனால் அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தன, இவை வேறுமாதிரியாக நடந்திருக்க முடியுமா, அந்தப் பாத்திரம் இப்படித்தான் செய்திருக்க வேண்டுமா, வேறுமாதிரியாக செய்திருந்தால் இந்தக் கதை என்னவாகியிருக்கும் என்று அக்குவேறு ஆணிவேறாக மனசுக்குள் அசைபோடுதல். என்னைப்பொறுத்தவரை இதுதான் வாசித்தல்.

ஆனால் இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளின் எந்தப் பாத்திரமும் வேறுவிதமாகச் செய்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒன்றைத் தவிர. மற்றொரு கதையை எப்படி முடிக்கலாம் என்று குழம்பிப்போய் முடித்ததாகத் தோன்றுகிறது. ஆனாலும் இரண்டும் குறைகள் கொண்டவை என்பதல்ல.

நகரம் 90 ஏர் இந்தியா குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது என்று குறிப்பு இருக்கிறது. அதற்கும் மேல் இதைப் பாராட்ட என்ன வேண்டும்.... மதக்கலவரத்தால் பாதிக்கப்படும் நகரம், சிதைவுறும் மானுடம், இழப்புக்கு உள்ளாகும் குடும்பங்கள். நகரத்தின் பெயர் சொல்லப்படாவிட்டாலும் ஹைதராபாத் என்பது புரிகிறது. எந்த இரண்டு மதங்கள் என்பதும் புரிகிறது. இங்கே யாரும் குறிப்பாக கெட்டவர்களும் இல்லை, நல்லவர்களும் இல்லை. அவர்கள் அவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய மதங்களால் வேற்று மனிதர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். தேசப்பிரிவினை குறித்தான நாவல்கள், சிறுகதைகளுக்குப் பிறகு நான் வாசிக்க நேர்ந்த, மதக்கலவரத்தின் முகங்களை விளக்கும் அருமையான சிறுகதை. படித்து முடிக்கும்போது மௌனம் சூழ்ந்துகொள்கிறது.

வாழ்வின் தீர்வு தற்கொலை செய்துகொள்ளச் சென்றவன் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறான். கடைசியில் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளப்போகிறான் என்பதைச் சுட்டும் கதை. இடையிடையே தத்துவவிசாரங்கள். கதையின் போக்குக்கு இடையூறாக இல்லாதிருப்பது சிறப்பு.

இருள் இசை ஓர் இசைக்குழுவின் பாடகனின் ஒருநாள் அனுபவம். படிக்கப்படிக்க மாரியம்மன் திருவிழாக்களில் இசைக்குழுக்களின் திரைஇசை நிகழ்ச்சிகளின் நினைவு வருகிறது. இசைக்குழுவினர் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு போற்றற்குரிய மனிதர்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களும் வெளியில் இருப்பவர்களைப் போன்ற மனிதர்கள்தான் என்பதை சொல்லாமல் சுட்டிச்செல்கிறது கதை. இக்கதையின் முக்கியக்கரு, அந்தப் பாடகன் தன் பிறந்து வளர்ந்த ஊரை 25 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கச்செல்கிற அனுபவம். சொந்த ஊரில் அன்னியனாக உணரும் அனுபவம். நான் அடிக்கடி சந்திக்க நேர்கிற அனுபவம். ஒரேயொரு வித்தியாசம் அந்தப்பாடகன் மறுபடி அந்த ஊருக்குப்போக மாட்டான், நான் போவேன், இன்னும் போகாமல் மீதம் வைத்திருக்கிற ஊர்களுக்கும் போவேன்.

கவுண்டர் கிளப் விரசமில்லாத ஓர் உறவைச் சொல்லும் கதை. கிராமத்தில் மரியாதைக்குரிய கவுண்டர்தான் நாயகன். குறும்பும், வேடிக்கையுமான மனிதரிடம் இளகிய மனமும் இருக்கிறது. அதுவே சிக்கல்களுக்கும் காரணமாக மாறுகிறது. கிராமத்துப் பழமொழிகள் தாராளமாகப் புரளுகின்றன. கவுண்டரின் மனைவி அவருக்கே உரிய நியாயங்களுடன் ஒரு பெண்ணாக இருக்கிறார். இதிலும் யாரும் மனதறிந்து கெட்டவர்கள் இல்லை. இதிலும் சோகமுடிவு கனக்க வைக்கிறது.

வேறிடம் இதன் நாயகன் வேறுயாருமல்ல, ஏதோவொரு கிராமத்திலிருந்து நகரத்தில் வாழ விதிக்கப்பட்ட நீங்களோ நானோதான். அஞ்சலகத்தில் மணியார்டர் அனுப்பக் காத்திருப்பதில் ஏற்படும் சிரமங்களும் நீங்களும் நானும் ஏதோவொரு இடத்தில் அனுபவிப்பவைதான். அதற்குப்பிறகு வீட்டுக்குப்போகும்போது எரிச்சலும் நமக்கு வருவதில்லையா... ஊரிலிருந்து ஆள்மாற்றி ஆள் நகரத்துக்கு வந்து நம் வீடுகளில் தங்கி கழுத்தை அறுப்பதில்லையா... ஊரைச் சுற்றிக்காட்டியும், பொங்கிப்போட்டும் களைத்துப்போனாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் வெளியே சிரிப்பதில்லையா... இதையெல்லாம் மறக்க ஏதேனுமொரு வடிகாலை சினிமாவோ போதையோ தேடுவதில்லையா... அதுதான் கதை. எந்தவொரு சிறிய விஷயத்தையும் கதையாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தக் கதை.

வர்ணங்களில் இதுவும் ஹைதராபாத் நகரை மையமாக வைத்து எழுதிய கதை. லட்சியத்தின் தீவிரத்தில் வாழ்க்கையுடன் ஒட்டமுடியாமல் போகும் ஓவியக்கலைஞன். பட்டினி கிடந்தாலும் ஓவியத்தையும், உண்மையையும் கைவிட முடியாதவன். அவனைப் புரிந்துகொண்ட ஒரு நண்பன். இந்த இருவர்தான் கதையின் நாயகர்கள். பார்வையற்றோர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தற்செயலாகப் பார்க்க நேர்கிறது. அப்போது குண்டர்கள் அவர்களைத் தாக்க, பார்வையற்றோர் அடிபட்டுச் சிதறுகிறார்கள். அந்தக்காட்சியை நினைவிலிருந்து அகற்ற முடியாமல் போகும் கலைஞன் அதை ஓவியமாகத் தீட்டுகிறான். குண்டர்தலைவன் அடையாளம் காணப்பட, கலைஞன் உயிருக்கே ஆபத்து வருகிறது. அண்மையில் பெங்களூரில் காவிக்கும்பல்கள் ஓவியக்கண்காட்சிகளையும் கலைஞர்களையும் அடித்து நொறுக்குவது நினைவுக்கு வருகிறது, இங்கே எந்த அரசியல் கட்சியும் குறிப்பிடப்படவில்லை என்றாலும்கூட. அதனாலேயே கதை மனதோடு ஒட்டிக்கொள்கிறது. கடைசியில் என்ன செய்கிறான் என்பதை இங்கே சொல்ல விருப்பமில்லை. இப்படிச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது எனக்குள்.

இன்னொரு நாளை மனதைக் கனக்க வைக்கும் மற்றொரு கதை. மதக்கலவரப் பின்னணி. முந்தைய கதையின் சில நிகழ்வுகள் இதிலும் இருக்கின்றன. வீட்டைச் சோதனையிடுவதாக நுழையும் காவலர்களில் ஒருவன் அந்த வீட்டின் பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிறான். கையாலாகாத நிலையில் அடங்கிப்போகும் பெண், ஆதரவான அவள் கணவன், நீதி கேட்கத் துணியும்போது எதிர்கொள்கிற பிரச்சினைகள், ஊடகங்களின் இரக்கமற்ற கேள்விகள்... தொடரும் பாலியல் வன்முறைகள் நிறைந்த இன்றைய சூழலில் கவனம் பெறவேண்டிய சிறுகதை.

மரபு நசிந்துவரும் நெசவாளர் வாழ்க்கையைச் சித்திரிக்கும் கதை. கதாசிரியருக்கு நன்கு அறிமுகமான களம். நெசவாளர் குடும்ப ஆண்கள் சிலர் வேறுவழியின்றி நகருக்குப் புலம் பெயர்கிறார்கள். சிலர் கேரளத்துக்கு அரிசி கடத்தி வயிற்றுப்பாட்டை கவனிக்க முயற்சி செய்கிறார்கள். அடிபடுகிறார்கள், உயிரிழக்கிறார்கள், சகாக்களையும் இழக்கிறார்கள். யாரும் சரிசெய்யவே முடியாத சரிவை, எதிர்கொள்ள வழிதெரியாத ஒரு சிக்கலை, நாம் மௌனமாகவே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது என்பதைக் காட்டும் கதை. கதைமாந்தர்கள் எனக்கும் பரிச்சயமானவர்கள். கேரளாவுக்கு அரிசி கடத்துதல் நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே நடந்திருக்கிறது. அதனாலும் நெருக்கமாக உணர முடிகிறது. குழந்தையைக் குளிப்பாட்டும்போது காலாகாலத்துக்கும் பாடப்படும் பாட்டுடன் கதை முடிகிறது இந்தக் கால்கதா எங்க தங்கமணிக்கு காலம்பூரா பெரிய பெரிய பாடரெல்லாம் போட்டு நல்ல சேலை நெய்து சோறு போடப்போகுதாமா. இந்த வெரல்கதா காலம்பூரா அவங்கப்பனையும் அம்மைவையும் காப்பாத்தப் போகுதாமா...

பெரும்பாலான கதைகள் வேதனையை வெளிப்படுத்தும் கதைகள்தான். இங்கே வேதனைகளே வழக்கமாகிப்போயிருக்கும்போது கதைகளும் அப்படி இருப்பதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது.

ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களத்தையும் வித்தியாசமான பாத்திரங்களையும் கொண்டிருப்பதால் சலிப்பூட்டுவதில்லை. சோகங்களை கொட்டிமுழக்காமல் இயல்பான நகைச்சுவையை இழையோட விட்டிருப்பதால் வாசிப்பனுபவத்துக்கும் குறைவில்லை.



வேறிடம்
சுப்ரபாரதி மணியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 198 பக்கம், 978-81-234-2023-3, ரூ. 125

வாசிப்பை நேசிப்போம்

2 comments:

  1. வாசித்தல் என்றால் என்ன என்பதை அழகாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எழுதுபவன் எழுதி முடித்து, படித்தவன் படித்த பிறகு தங்குவதுதான் இலக்கியம் (என்று எங்கோ படித்ததோ அல்லது நானே எழுதியதோ) என்பதை நீங்கள் குறிப்பிட்டுள்ள விதம் படிப்பவர்க்கும் எளிதில் புரியும். சுப்ரபாரதி மணியனின் எழுத்துகளில் இந்தக் கதைகளில் சோகம் தூக்கலாக இருப்பதாகத் தோன்றுவது வயதாவதைக் காட்டுகிறது - அவருக்கும் படிப்பவருக்கும்.

    நாக. வேணுகோபாலன், யுஎஸ்

    ReplyDelete
  2. Nice post, thanks for this book introduction.

    ReplyDelete