Friday 7 April 2017

மைல் கற்கள் பேசும் மொழி

வரலாற்றில் அல்லது வாழ்க்கையில் முக்கியமான சம்பவத்தை important milestone என்பார்கள். என்னதான் நாம் மெட்ரிக் முறைக்கு மாறி விட்டாலும், ‘கிலோமீட்டர் ஸ்டோன்என்று சொல்லும்போது அழகாக இல்லை. அது கிடக்கட்டும். தமிழ்நாட்டில் இப்போது milestone important ஆகியிருக்கிறது. மீண்டும் துவங்கி விட்டது இந்தி சர்ச்சை.

பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப அந்தந்தப் பகுதிகளுக்கு சர்ச்சை ஏற்படுத்துவதற்கென்றே தனியாக ஒரு துறையை மத்திய அரசு வைத்திருக்கிறதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. வெளிப்படையாக ஒரு துறை இல்லாவிட்டாலும் இப்படியொரு ஆலோசகப் பிரிவு இருக்கும் சாத்தியங்கள் நிறையவே உண்டு என்பதை கடந்த மூன்று ஆண்டுகால நிகழ்வுகளைப் பார்த்தால் ஊகிக்கலாம். அது ஒருபக்கம் இருக்கட்டும்.

இப்போது துவங்கியிருப்பது மைல்கற்களில் இந்தி எழுத்துகள் என்ற சர்ச்சை. வேலூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் முன்னர் ஆங்கிலம்-தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் தகவல்கள் இருந்தன. இப்போது ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி இடம் பெறுகிறது. தெற்கே வரும் வடக்கத்திய லாரிக்காரர்களுக்காக இந்தி என்று வழக்கம்போல மொக்கைக் காரணங்களை அடுக்குகிறார் பொன்னார். அப்படியானால் வடக்கே போகும் தமிழ்நாட்டு டிரைவர்களுக்காக வடக்கே தமிழில் போடுவீர்களா என்று யாரும் அவரிடம் கேட்டதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் போக்குவரத்துத் துறை அமைச்சர்!

மற்ற எல்லா மொழிகளையும்விட இந்தி சிறந்தது, மேன்மையானது, இந்தியாவின் மொழி இந்திதான் என்ற கருத்து, தெற்கத்தியர்களை விட தாம் மேலானவர்கள் என்று கருதும் வடக்கத்தியர்களிடையே ஆழமாகப் பதிந்திருக்கிறது. பொன்னார் போன்றவர்கள் அந்த வடக்கத்தியர்களின் அடிமைகள். சுயமாக சிந்திக்கத் தெரியாது, அல்லது சிந்தித்தாலும் பேச முடியாது. இந்த இந்தி வெறி ஏதோ பாஜகவினருக்கு மட்டும் உள்ளது அல்ல. நேரு போன்றவர்களைத் தவிர, அன்றைய லால் பகதூர் சாஸ்திரி, டாண்டன்கள் முதல் இன்றைய முலாயம் வரை எல்லாருக்கும் பொருந்தும். பாஜக ஆட்களுக்கு இந்த வெறி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதுவும் ஒருபக்கம் இருக்கட்டும்.

கவனிக்க வேண்டியது, இந்த சர்ச்சை விஷயம் புதியதல்ல என்பதே. இது எங்கிருந்து துவங்கியது என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ் (Indian Roads Congress) என்று ஓர் அமைப்பு இருக்கிறது. (ஒரு காலத்தில் நான் சென்னையில் அச்சகத்தில் பணியாற்றி வந்தபோது, IRC-யின் ஆண்டுக்கு நான்கு இதழ்களை எமது அச்சகம்தான் அச்சிடும். பெயர்தான் இதழ்கள், ஒவ்வொரு இதழும் 10 பாயின்ட் டைம்ஸ் ரோமன் எழுத்துகளில் சுமார் 300-360 பக்க புத்தகமாக வரும். தில்லியிலிருந்து வரும் கிழட்டு அதிகாரிகளின் கையெழுத்துப் பிரதிகள், எமது அச்சகத்தின் லலிதா, ஜூலி, காமாட்சி போன்ற கம்பாசிடர் பெண்களுக்கு மட்டுமே புரியும்.) மைய அரசால் நிறுவப்பட்ட இந்த காங்கிரஸ், பெரும்பாலும் துறைசார் வல்லுநர்களைக் கொண்ட அமைப்பு. சாலைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் செய்கிறது, பரிந்துரைகள் வழங்குகிறது.

மைல்கற்கள் பலவகை என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். வெள்ளைக் கற்களில் கறுப்பு எழுத்துகள். மேலே மஞ்சள் நிறப் பட்டை இருந்தால் தேசிய நெடுஞ்சாலை. மேலே பச்சை நிறப்பட்டை இருந்தால் மாநில நெடுஞ்சாலை. கருநீல/கருமை நிறப்பட்டை இருந்தால் மாவட்ட சாலை. சிவப்பு நிறப்பட்டை என்றால் ஊரகச் சாலை.

மைல் கல் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும், வண்ணப் பட்டை எவ்வளவு அகலம் இருக்க வேண்டும், மைல்கல்லின் உச்சியிலிருந்து எத்தனை செமீ கீழே நகரத்தின் பெயர் இருக்க வேண்டும், எண்கள் என்ன அளவில் இருக்க வேண்டும், கல்லின் பக்கப் பகுதியிலிருந்து எத்தனை செமீ இடைவெளி விட்டு எழுத்துகள் அமைய வேண்டும், என பல விதிகளை அது பரிந்துரை செய்திருக்கிறது. அதன் பரிந்துரைகள்தான் பெரும்பாலும் விதிகளாக ஆகின்றன. புறப்பட்ட இடத்திலிருந்து முதல் மைல் கல்லில் என்னென்ன தகவல்கள் இருக்க வேண்டும், 2ஆவது மைல் கல்லில்... 3ஆவது.... இப்படி எல்லாம் அந்தப் பரிந்துரைகளில் தரப்பட்டிருக்கும். இதற்கு ஐஆர்சி ஸ்டாண்டர்டு என்று பெயர். (ஐஆர்சி ஸ்டாண்டர்டு வேறு சில நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது வியப்புதான்!)

கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தப் பரிந்துரையின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் மைல் கல்லில் (கிமீ கல்லில்) அடுத்து வரும் நகரத்தின் பெயர் இந்தியில் இருக்க வேண்டும். 2ஆவது மைல் கல்லில் அதுவே உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும். (தமிழ்நாடு என்றால் தமிழில்.) 3ஆவது மைல் கல்லில் இந்தி, 4ஆவது மைல் கல்லில் உள்ளூர் மொழி. ஐந்தாவது மைல் கல்லில் ரோமன் எழுத்துகளில் - ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். இப்படியே 6...7...8 என்று இதே வரிசையில் தொடர வேண்டும். அதாவது, எந்தவொரு கல்லிலும் இரண்டு மொழிகள் கிடையாது. Only one script being used on any one km stone என்று சொல்கிறது அந்தப் பரிந்துரை. ஐந்தாவது மைல் கல்லில் மட்டுமே ஆங்கிலம் வரலாம். முக்கியமான சுற்றுலாத் தலம் அல்லது தொன்மை வாய்ந்த முக்கியப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஆங்கிலத்தில் தரப்படலாம்.

2004இல் மைய அரசின்கீழ் வரும் போக்குவரத்து அமைச்சகம் ஓர் உத்தரவை இடுகிறது. 1-2-3ஆவது மைல் கற்களில், மேலே இந்தி, கீழே உள்ளூர் மொழி. (Next important place in Hindi on top and in local language on bottom and in between kilometerage in symmetrical manner.) நான்காவது கல்லில் உள்ளூர் மொழி. ஐந்தாவது கல்லில் மேலே உள்ளூர் மொழி, கீழே ஆங்கிலம். உள்ளூர் மொழியும் இந்தி மொழிக்கான தேவநாகரி எழுத்துகளையே பயன்படுத்துகிறது என்றால் (உதாரணமாக மராத்தி) உள்ளூர் மொழியின் இடத்தில் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டும். சர்வதேச அளவில் பின்பற்றப்படும் 1-2-3... எண் வடிவத்தையே பயன்படுத்த வேண்டும். உள்ளூர் மொழி எண் வடிவங்களோ, தேவநாகரி எண்களோ பயன்படுத்தக்கூடாது.

ஆக, மேற்கண்ட பரிந்துரையிலும் சரி, மைய அரசின் உத்தரவிலும் சரி, மூன்று மொழிகள் கிடையாது.இப்போது படங்களைப் பாருங்கள். இணையத்திலிருந்து எடுத்தவைதான். பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. மேற்குறிப்பிட்ட உத்தரவு சீராகப் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இப்போது தமிழ்நாட்டில் எழுந்திருக்கிற அதே பிரச்சினை 2004இலும் எழுந்தது. ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் எழுதுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மைய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு தான் ஏற்கெனவே அறிவுறுத்தி விட்டதாக அப்போதைய மைய அமைச்சர் பாலு பதில் கூறியிருக்கிறார். (அறிவுறுத்தியதாக கூறியுள்ளார், மைய அரசு உத்தரவிட்டதாகவோ, விதிகளில் திருத்தம் செய்ததாகவோ கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.)

நான் தேடிப்பார்த்த வரையில், 2004க்குப் பிறகு வேறெந்த உத்தரவும் கிடைக்கவில்லை. ஆக, மேற்கண்ட இருமொழிகள் தொடர்பான உத்தரவுதான் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது.

இப்போதிருக்கிற விதிகளின்படி பார்த்தாலும் ஐந்து மைல் கற்களுக்குள் ஒரு முறை ஆங்கிலம் வந்து விடுகிறது. பெரிய பிரச்சினை என்று கூற முடியாது. என்றாலும், மொழி தெரியாதவர்கள் அந்த ஆங்கில மைல்கல்லைத் தவற விட்டுவிட்டால் 5 கிமீ அப்பால்தான் அடுத்த மைல் கல்லைப் பார்க்க முடியும். போனால் போகிறது என்று விடுகிற விஷயமில்லை. வங்கிகளில் இந்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். மாநிலங்களில் இருக்கிற மத்திய அரசு அலுவலகங்களிலும் படிப்படியாக இந்தித் திணிப்பு நடைபெறுகிறது. இந்தியில் சிந்தியுங்கள் என்று விளம்பரம் செய்கிறது மைய அரசு. எவனொருவனும், அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் ஆயினும், அவன் எத்தனை மொழிகள் அறிந்தவனாக/பேசுபவனாக இருந்தாலும், அவனுடைய சிந்தனை தாய்மொழியில்தான் நடக்கும்.


திமுகவின் டி.ஆர். பாலு அமைச்சராக இருந்த காலத்தில் காங்கிரஸ் அரசுதான் இதைச் செய்தது என்றே வைத்துக் கொள்வோம். இது தவறு என்றால் திருத்திக் கொள்ள வேண்டும்தானே? அவர்கள் செய்தது என்று குற்றம் சாட்டுவதால் இப்போது நியாயமாகி விடுமா? அதைத்தான் செய்வார்கள் இவர்கள். இந்தப் பிரச்சினையில் மட்டுமல்ல, எல்லாப் பிரச்சினைகளிலும் பாஜகவினரின் வாதம் இப்படித்தான் இருக்கிறது.


இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு மும்மொழிகளைப் பயன்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் செய்வதுதான். நாடு முழுமைக்கும் சீர்மையாக்கச் செய்வது ஒன்றே இதற்குத் தீர்வு. (மும்மொழிகள் பயன்படுத்த விரும்புவோர் பயன்படுத்தலாம் என்று சொல்வதில் பயனில்லை. அப்படிச் செய்யும்போது, எழுத்துகள் / எண்களின் அளவு குறித்தான விதிகள் மீறப்படும்.) அதைச் செய்யாத வரை, பிரச்சினை தீரப்போவதில்லை. தகவல் தொழில்நுட்பம் மிக விரைவாக வளர்ந்திருக்கிற நிலையில் மைல்கற்கள் என்னும் பழங்கால தொழில்நுட்பத்தை படிப்படியாக கைவிட்டு, நவீன சின்னங்களுக்கு மாற வேண்டும். ஜிபிஎஸ் பரவலாகி வருகிற இக்காலத்தில் முக்கியமான அடையாளங்களுக்கு மட்டும் மைல்கற்களை வைக்கலாம், அவற்றில் மும்மொழிகளைப் பயன்படுத்தலாம்.

3 comments:

 1. வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்று பெயர் பெற்றபிறகு அங்கு இருப்பவர்களைப்பற்றி சிந்திப்பதில்... இன்னமும் குண்டுச்சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டிருப்பதற்கு சமம் ....
  வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்வான் என்கிற கதைகளை படித்திருக்கிறீர்களா?... "நான் என்ன கத்திரிக்காயிடமா வேலைசெய்கிறேன்? மன்னரிடமல்லாவா வேலைசெய்கிறேன்... மன்னர் கத்தரிக்காய் உடலுக்கு நல்லது என்றால் ஆமாம் என்று சொல்வது தானே சிறந்தது" என்று கூறிய தெனாலிராமன் கதை படித்ததில்லையா?... ஹிந்தி மொழிதான் சிறந்தது என்று கூறுபவர்களை ... உங்களைப்போன்ற நல்லவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை என்று புகழ்ந்து கூறி வாழ்க்கையை வசதியாக்கிக்கொள்ள தெரியவில்லை என்றால் என்ன சொல்வது ...
  "சமைக்கி சாத் சலோ" என்று வாழ்க்கையோடு ஓடவேண்டியிருக்கும் காலத்தில் முடியாது நான் நடந்துதான் செல்வேன் என்று அடம் பிடிப்பதால் என்ன பயன் ... மொழி திணிக்கப்படுகிறது என்று கூறி அடம் பிடிப்பதால் யாருக்கு என்ன பயன்? .... இப்படிக்கு கோகி-ரேடியோ மார்கோனி.

  ReplyDelete
 2. நல்ல சிந்தனைத் துளிகள் அய்யா

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete