கடந்த ஆண்டு நான்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் எழுகின்ற பிரச்சினைகள் பலவும் இந்தத் தேர்தலின்போதும் எழுந்தன, சில பிரச்சினைகள் முடிந்து விட்டன, சில அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் பின்னணியில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் எந்த அளவுக்கு ஆற்றல் கொண்டவையாய் உள்ளன, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமாய் இருக்கிறது, தேவைப்படும் மாற்றங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது.
தேர்தல் ஆணையம் என்பது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வரும் தன்னாட்சி அமைப்பாகும். நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், குடியரசுத் தலைமை உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் ஆகியவற்றுக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் கொண்ட உச்ச அமைப்பு அது. குடியரசுத் தலைவருக்கும்கூட பதிலளிக்கும் கட்டாயம் அதற்குக் கிடையாது. ஒரு தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் நீக்க முடியும். தேர்தல் நேரத்தில் தேர்தல் தொடர்பான எல்லா அதிகாரங்களும் தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே இருக்கும். தேர்தல் முடிந்த பிறகே நீதிமன்றத்தின் கதவைத் தட்ட முடியும்.
தேர்தல் ஆணையம் இவ்வளவு சக்தி வாய்ந்த அமைப்பு என்பதே 1990களில்தான் வெளியே தெரிய வந்தது. அதற்குக் காரணம் சேஷன். அவரது விமர்சகர்களால் ‘அல்-சேஷன்’ என்று வர்ணிக்கப்பட்ட சேஷன், தேர்தல் ஆணையத்துக்கு இருந்த அதிகாரங்களை செயல்படுத்துவதில் முதன்மையானவர் என்பதற்காக என்றென்றும் நினைக்கப்படுவார். அவருடைய பதவிக்காலத்தில்தான் வாக்களார் அடையாள அட்டை துவங்கியது. வேட்பாளர்களின் செலவுக்கான உச்சவரம்பு கண்காணிக்கப்பட்டது. அனுமதியின்றி ஒலிபெருக்கிகள் மூலம் பிரச்சாரம் செய்யவும், உரிமையாளர்களின் ஒப்புதலின்றி சுவர்களில் விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. நடத்தை நெறிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தன. இப்படி இன்னும் சிலவற்றையும் குறிப்பிடலாம்.
அவர் துவக்கி வைத்ததை அடுத்து வந்த தேர்தல் ஆணையர்களும் – கறாராகவோ மிதமாகவோ – பின்பற்றத் துவங்கினார்கள். தேர்தல் ஆணையம் என்பது ஆட்சியில் இருப்பவர்களின் சொற்படி ஆடுகிற அமைப்பு அல்ல, சுயமாக முடிவு செய்யும் அமைப்பு என்பது மக்களுக்கும் தெரிய வந்தது. அதே நேரத்தில், சேஷனின் செயல்பாடுகள் காரணமாகவே ஒரே ஒரு தேர்தல் ஆணையரிடம் அதிகாரம் குவிந்துவிடாதபடி இப்போது மூன்று ஆணையர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தால் மெஜாரிட்டி கருத்துப்படி செயல்படுவார்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் என்று ஒருவர் இருந்தாலும் அவருக்கு மற்ற இருவரையும்விட கூடுதல் அதிகாரங்கள் ஏதும் கிடையாது என மாற்றங்கள் வந்தன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் காட்சி ஊடகங்களின் பரவலால் தேர்தல் ஆணையம் பற்றியும், அதன் அறிவிப்புகள் குறித்தும் மக்களுக்கு நிறைய செய்திகள் தெரிய வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை வலைதளத்தில் அனைவரும் பார்க்கும் அளவுக்கு வெளிப்படைத்தன்மை முன்னேறியிருக்கிறது.
கட்சிகளைப் பதிவு செய்தல், அங்கீகரித்தல், சின்னங்களை ஒதுக்குதல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகளைத் தவிர தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி, தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவது; போட்டியிடும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பது. இந்தக் கடமையை ஒட்டியே வாக்குக்குப் பணம் கொடுத்தல், அதிகார துஷ்பிரயோகம், சாதி-மத-இன ரீதியாக பிரச்சாரம் செய்தல், வாக்காளர்களை மிரட்டுதல் போன்ற நீதிக்குப் புறம்பான செயல்களைத் தடுக்கும் கடமைகளும் ஆணையத்துக்கு உண்டு.
ஆனால் உண்மையில் ஆணையம் தனது அதிகாரங்கள் அனைத்தையும் ஆற்றலுடன் பயன்படுத்துகிறதா, பயன்படுத்த முடிகிறதா என்று பார்த்தால், பெருமளவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. பணபலமும் ஆள் பலமும் தன் வேலையைக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. வேட்பாளர்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எத்தனை பேர், ஒவ்வொருவர் மீதும் எத்தனை குற்றம் சாட்டப்பட்டது என்ற புள்ளிவிவரங்களைத் தருவதற்கும் மேல் ஏதும் செய்துவிட முடியவில்லை. நடத்தைநெறி மீறலுக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டது தவிர எத்தனைபேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, கண்மூடித்தனமாக இலவசங்களை அறிவிக்கக்கூடாது, நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும்போது அதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பதையும் சொல்லியாக வேண்டும் என்கிறது நடத்தை நெறி. ஆனால் இலவசங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அறிவித்த கட்சிகள் மீது எந்த நடவடிக்கையும் காணோம்.
தேர்தல் பிரச்சாரத்தில் சாதியையோ மதத்தையோ பயன்படுத்தக்கூடாது என்பது ஒரு விதி. தில்லி சட்டமன்றத்துக்கான தேர்தலின்போது பாஜக கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர், “பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் ராமர் சாதியினர், மற்றவர்களுக்கு வாக்களிப்போர் நீச சாதியினர்” என்றார். நாடாளுமன்றத் தேர்தலில் “மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்” என்றார் பாஜகவின் கிரிராஜ். இதுபோன்ற மதவெறிப் பேச்சுகளுக்கு தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை வெறும் எச்சரிக்கை விடுப்பது மட்டுமே.
தேர்தல் நேரத்தில் பார்வையாளர்களை நியமிக்கிறது தேர்தல் ஆணையம். வேட்பாளர்களும் கட்சிகளும் தமது குறைகளை பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் என்கிறது நடத்தை நெறிமுறை. நாடாளுமன்றத்துக்கான தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மோதல்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ் அளித்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த பார்வையாளர்களை கடுமையாக சாடினார் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் சவுத்ரி. திரிணமுல் காங்கிரசின் அத்துமீறிய செயல்களைப் பார்த்தபிறகும் செயல்பட முடியாத “பல்லில்லாத புலிகள்” என்று தேர்தல் ஆணையத்தை நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும், அனுமதிக்கப்பட்ட பாதை வழியாகவே செல்ல வேண்டும் என பல்வேறு விஷயங்களை முன்வைக்கிறது தேர்தல் நடத்தை நெறிமுறை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூன்று தொகுதிகளில் தாக்கப்பட்டனர். மால்டா தக்ஷிண் தொகுதியில் விதிக்குப் புறம்பாக ஊர்வலம் நடத்த முயன்ற திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களைத் தடுக்க முடியாமல் போனதால் ஊர்வலத்தைப் புகைப்படம் எடுக்க முயன்றனர் தேர்தல் ஆணையத்தினர். கட்சித் தொண்டர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளைத் தாக்கியதோடு அவர்களுடைய கேமராக்களையும் உடைத்தெறிந்தனர். இறுதியில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, பிரச்சினையை தீவிர கவலையுடன் கவனித்து வருகிறோம் என்று தில்லியிலிருந்து தேர்தல் ஆணையம் கூறியது. அத்துடன் விஷயம் முடிந்து விட்டது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்திலேயே இவ்வளவுதான் நடவடிக்கை.
இவற்றை எல்லாம் பார்க்கையில், நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்துவது என்ற திசையில் செய்ததைவிட அமைதியாக தேர்தல் நடந்தால் போதும் என்ற திசையில்தான் இதுவரை தேர்தல் ஆணையம் அதிகம் செயல்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் எப்போது எங்கே துவங்கியது என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் தமிழகம்தான் இதில் முன்னிலை வகிக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா என்று நாடெங்கும் பிரபலமாகி விட்ட இந்த வழக்கம் இப்போது இதர மாநிலங்களுக்கும் பரவிவிட்டது. முதலிடத்தைத் தக்க வைப்பதில் தமிழகம் ஆந்திரத்துடன் போட்டி போட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில்தான். 100 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டது. (570 கோடி ரூபாய் விவகாரம் மர்மமாகவே தொடர்கிறது.) பணம் தவிர, வாக்குக்கான லஞ்சம் வழங்குவதில் புதுப்புது கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி வருகிறது தமிழ்நாடு. 6112 பறக்கும் படைகளையும், 21,300 பேரைக் கொண்ட கிராம விழிப்புக் குழுக்களையும் அமைத்தும்கூட பணப்பட்டுவாடா நடந்துகொண்டுதான் இருந்தது. சரத் குமார் காரில் 9 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஈரோட்டிலும் தஞ்சாவூரிலும் பெட்ரோல் வாங்கிக் கொள்வதற்கான 3,000 கூப்பன்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டு பெட்ரோல் பம்ப்களிலிருந்து 700 கூப்பன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர, ஒரு மாதத்துக்கான பால் கூப்பன், நகைக் கூப்பன், செல்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்தல், ரயிலுக்கான பயணச்சீட்டு பதிவு செய்து கொடுத்தல் என வாக்காளர்களுக்கு லஞ்சம் தரும் புதிய வழிவகைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒருகாலத்தில் பண விநியோகம் செய்ததுபோல இப்போது தைரியமாகச் செய்ய முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், யாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதோ அல்லது யார் விநியோகம் செய்தார்களோ அவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டது என்பது கடைசிவரை தெரிவதில்லை.
வாக்குக்கு பணமாகவோ பொருளாகவோ லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123(1)ஆவது பிரிவின்படி, வாக்குக்கு பணம் வாங்கியதற்காக அல்லது கொடுத்ததற்காக ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், தவறாமல் வாக்களியுங்கள் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக விளம்பரம் செய்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் மற்றொரு பக்கம் பணவிநியோகமும் நடந்து வருகிறது. பண விநியோகம் காரணமாகவே அரவாக்குறிச்சியிலும் தஞ்சாவூரிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் எந்தக் கட்சியினருடையது என்று தெரிந்தும் கட்சிகளின்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மேல்பாடியில் வாக்குக்காகப் பணம் பெற்ற திமுகவைச் சேர்ந்த ஒருவரும், மாச்சனூரில் பணவிநியோகம் செய்த அதிமுகவினர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இவர்களைப் போன்ற சிறிய மீன்கள்தான் மாட்டுவார்களே தவிர, தலைவர்கள் எவரும் சிக்குவதும் இல்லை, தண்டிக்கப்படுவதும் இல்லை.
இந்த வரிசையில் இப்போது ஆர்.கே. நகர் தொகுதியும் சேர்ந்து கொண்டது. அதிமுகவின் சசிகலா அணியைச் சேர்ந்த தினகரன் ஒரு வேட்பாளர். ஒரு வாக்குக்கு சராசரியாக 4000 ரூபாய் என்ற விகிதத்தில் சுமார் 86 கோடி ரூபாய் விநியோகம் செய்ய விரிவாகத் திட்டமிட்ட ஆவணங்கள் எல்லாம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பிடிபட்டன. தேர்தல் ஆணையம் பொதுவாக ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று சோதனைக் குழுக்களை அமைக்கும். ஆர்.கே. நகர் தொகுதியில் 70 சோதனைக் குழுக்களை அமைத்தது. பல இடங்களில் பண விநியோகம் நடப்பது தெரிந்து பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் கடைசியில் நடந்தது என்ன? மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக 9ஆம் தேதி இரவு அறிவிக்கப்பட்டது. அதாவது, பணம் விநியோகிக்கப்படுகிறது என்று தெரிந்தாலும், எந்த வேட்பாளருடையது என்று தெரிந்தாலும், அந்த வேட்பாளரை மட்டும் நீக்கிவிட்டு தேர்தல் நடத்த முடியாது, ஒத்திவைக்க மட்டுமே முடியும். அந்த அளவுக்கு தேர்தல் ஆணையத்திடம் அதிகாரம் இல்லை.
எந்தவொரு மதத்தின் தலைவரும் அல்லது எவரும் குறிப்பிட்ட மதம், சாதி, இனம் அல்லது மொழி சார்ந்து குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அல்லது வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னால் அதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123(2)ஆவது பிரிவின்படி, ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். தேர்தல் நேரத்தில் இமாம்களும் மதவாத சாமியார்களும் இன்னின்னாருக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்கள். மதத்தின் பேரால் வாக்குக் கேட்டதற்காக ஆறு ஆண்டுகளுக்கு பால் தாக்கரேயின் வாக்களிக்கும் உரிமையும் தேர்தலில் போட்டியிடும் உரிமையும் பறிக்கப்பட்டது தவிர இதுவரை எத்தனை மதத்தலைவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? ‘ராம்ஜாதே-ஹராம்ஜாதே’ (பாஜகவுக்கு வாக்களித்தால் ராம-ஜாதி, மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீச-ஜாதி) என்று கூறிய மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இப்போதும் மத்தியில் அமைச்சராகவே தொடர்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் செலவு செய்வதற்கான உச்சவரம்பு – தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் 16 லட்சம் ரூபாய். கோவா, புதுச்சேரி போன்ற சிறிய மாநிலங்களுக்கு 8 லட்சம் ரூபாய். தமிழ்நாட்டில் எந்த வேட்பாளரும் 16 லட்சம் ரூபாய்க்குள் செலவு செய்வது கிடையாது, அதிலும் பெரிய கட்சிகள் பல கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால் விதிக்கப்பட்ட வரம்புக்குள் செலவு செய்ததாக கணக்கு மட்டும் காட்டுவார்கள். 30 நாட்களுக்குள் கணக்குக் காட்டவில்லை என்றால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 10ஏ பிரிவின்படி அவர் பதவியிழக்க நேரிடும். உத்திரப்பிரதேசத்தில் உமலேஷ் யாதவ் என்ற பெண்மணி தவறான கணக்குக் காட்டியதற்காக அவருடைய எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது தவிர உரிய காலத்தில் அல்லது கணக்குக் காட்டாததற்காக எத்தனை பேரின் பதவிகள் பறிக்கப்பட்டன? மது கோடாவும், அசோக் சவுஹானும் குறைவாகக் கணக்குக் காட்டினார்கள் என்று வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையமே விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
வேட்புமனுவிலும், அத்துடன் தரப்படுகிற சுயபிரமாணத்திலும் தரப்பட்ட தகவல்கள் தவறாகவோ பொய்யாகவோ இருந்தால் ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஒருவர் தவறான சான்றிதழ் தந்தமைக்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இதேபோல முரண்பாடான தகவல் அளித்த இன்னொருவர் மத்தியில் கல்வித்துறை அமைச்சராகத் தொடர்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் சான்றிதழ் விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையில் இருக்கிறது.
மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முனைந்தால் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், பீகார் தேர்தலிலும் மதவாதங்கள் பகிரங்கமாகவே முன்வைக்கப்பட்டன. இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை.
அப்படியானால் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரங்களே இல்லையா? தேர்தல் முறைகேடுகளுக்கு முடிவே இல்லையா? இரண்டுமே உண்டுதான், ஆனால் இரண்டிலும் நிறையவே சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 329 (a) தேர்தல் பிரச்சினைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வரையறுத்துள்ளது. வழக்குகளின் காரணமாக தேர்தல் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதே இதன் நோக்கம். தேர்தல் முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட வேட்பாளரும், குடிமகனும் நீதிமன்றத்தை அணுகலாம்.
1996 வரையில் தேர்தல் குறித்த முறையீடுகளை தேர்தல் ஆணையமே கவனித்துக் கொண்டிருந்தது. மாவட்ட நீதிபதி என்ற தகுதியுடையவரின் கீழ் தற்காலிக டிரிப்யூனல்களை அமைத்து விசாரித்து வந்தது. ஆனால் ஹரி விஷ்ணு காமத் – எதிர் – அஹமத் இஷாக் என்ற வழக்கில், டிரிப்யூனலிடம் ஒப்படைப்பதைவிட உயர்நீதிமன்றம் கவனிப்பதே சரியாக இருக்கும் என உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, இரண்டு அமைப்புகள் தேவை இல்லை என்று கருதிய தேர்தல் ஆணையம், தேர்தல் முறையீடுகள் அனைத்தையும் உயர்நீதிமன்றமே ஏற்க வேண்டும் என ஒப்புக்கொண்டது. 1996இல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்பட்டு, தேர்தல் வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று வழிசெய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் பலவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உள்ளவைதான். எந்தவொரு வேட்பாளரும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதாகத் தெரிந்தால் அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் முறையீடு செய்ய வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் நீதி கிடைக்கவில்லை என்று கருதினால், தீர்ப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம். இந்திரா காந்தி 1971 தேர்தலில் முறைகேடுகள் செய்தார் என்ற வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய தேர்தல் செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதான் தேர்தல் வழக்கில் மிக முக்கியமான வழக்காகும். (ஆனால் தீர்ப்பு வந்த சில நாட்களில் இந்திரா காந்தி நெருக்கடிநிலை பிரகடனம் செய்து விட்டது தனிக்கதை.)
மேற்சொன்ன விஷயங்களில் எல்லாம் வேட்பாளர்கள் பெரும்பாலும் தண்டனை பெறாமல் நழுவி விடுகிறார்கள். சட்டத்தில் உள்ள ஒரு வாசகம் கவனிக்கத்தக்கது. நிகழ்ந்த சம்பவம் வேட்பாளரின் ஒப்புதலுடன்தான் நடந்தது (with the consent of a candidate or his election agent) என்று வழக்குத் தொடுப்பவர் நிரூபிக்க வேண்டியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் தரப்பட்ட ஒரு முறையீட்டின்மீது ஆறு மாதங்களுக்குள் முடிவு செய்யப்பட வேண்டும். 2009 தேர்தலின்போது ப. சிதம்பரத்தின் தேர்வு செல்லாது என 25 வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவருடைய பதவிக்காலமும் முடிந்து அடுத்த தேர்தலும் முடிந்து விட்டது. 2009 தேர்தலுக்குப் பிறகு தொடுக்கப்பட்ட 110 வழக்குகளில் ஒன்றுகூட உரிய காலத்தில் முடியவில்லை. சச்சின் பைலட், கமல்நாத், மு.க. அழகிரி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் போதுமான சாட்சியங்கள் இல்லாததால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டன. 21 வழக்குகள் ஐந்தாண்டுகள் முடிந்தும் தீரவில்லை. சில வழக்குகளில் காலம் கடந்து விட்டது என்ற காரணம் காட்டி அர்த்தமிழந்தவை (infructuous) என்று தள்ளுபடி செய்யப்படும் வழக்கமும் உள்ளது. இது முறையற்றதாகும். குறிப்பிட்ட ஒரு வழக்கில் காலம் கடந்து விட்டாலும், அந்த வழக்கில் கிடைக்கும் தீர்ப்பு அடுத்த முறை அதேபோன்ற மற்றொரு வழக்குக்கு தீர்வாக அமையக்கூடும் என்பதை இதுவரை எவருமே கணக்கில் கொள்ளவில்லையா?
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உள்ள விதிகள் விரிவானவை. வேட்பாளர் அளிக்கும் சுயபிரமாணத்தில் (அஃபிடவிட்டில்) பொய்யான தகவலை அளித்தால் அல்லது தகவல்களை மறைத்தால் அபராதத்துடன் 6 மாதம் வரை சிறைதண்டனை விதிக்கலாம். தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும், தவறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கலாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னையின் பல நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவில்லை. வெறும் 500 ரூபாய் அபராதம் என்பது எவருக்கும் பொருட்டில்லை.
இத்தனை பின்னடைவுகள் இருந்தாலும் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இன்று வேட்பாளர்களின் விவரங்களை யார் வேண்டுமானாலும் அறிந்துகொள்ள முடிகிறதே, இதன் பின்னால் இருப்பதும் ஒரு வழக்குதான். ஜனநாயக உரிமைகளுக்கான சங்கம் (ADR) மற்றும் குடிமை உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUCL) தொடுத்த வழக்கில் கிடைத்த தீர்ப்பின் மூலம்தான் வேட்பாளர்களின் சொத்துகள், குற்றப் பின்னணி, கல்வித்தகுதி ஆகிய விவரங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் குறித்து நிறையவே எழுத முடியும். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று சுருக்கமாகப் பார்ப்போம்.
இப்போது இருக்கிற நடத்தை நெறிமுறைகள் குறித்து கட்சிகள் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. அது குரைக்கிறது, யாரையும் கடித்ததில்லை. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பிலிபிட் தொகுதியில் பாஜக வேட்பாளர் வருண் காந்தி சிறுபான்மையினருக்கு எதிராக விஷமம் தொனிக்கும் வகையில் பேசினார். அதன் காணொளியின் அடிப்படையில், அவரை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு அறிவுறுத்தியது. பாஜக அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவர் கைது செய்யப்பட்டார், 20 நாட்கள் சிறையிலும் இருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் மீதான வழக்கு தொடர்ந்தது. 88 சாட்சிகளும் பிறழ் சாட்சியம் அளித்தார்கள். வழக்கில் நிரபராதி என வெளியே வந்தார் வருண் காந்தி. (சாட்சிகள் மிரட்டப்பட்டது குறித்து தெஹல்கா விரிவாக எழுதியுள்ளது.)
தேர்தல் விதிகளை மாற்ற வேண்டும் என்ற குரல் தேர்தல் ஆணையர்களிடமிருந்தும் பல்லாண்டு காலமாக எழுந்து கொண்டே இருக்கிறது. ஆனால் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. 1991இல் நடத்தை நெறிமுறைகள் அறிமுகம் ஆகி 2011 வரை இருபது ஆண்டுகளில் எட்டாயிரம் புகார்கள் தொடுக்கப்பட்டன. ஆனால் ஒன்றிலும்கூட முடிவு காணப்படவில்லை. ஓர் எச்சரிக்கை அல்லது கண்டனத்துக்கும் அதிகமாக ஏதும் நடந்துவிடப் போவதில்லை என்று கட்சியினரும் வேட்பாளர்களும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ‘நடத்தை நெறிமுறைகளுக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட வேண்டும்,’ என்கிறார் முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி. ‘அப்படியில்லை, தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை,’ என்கிறார் முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி.
தவறு செய்யும் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் அவ்வப்போது எழுவதுண்டு. ஒரு நபர் செய்த தவறுக்கு கட்சியையே எப்படி தண்டிக்க முடியும் என்பது குரேஷியின் வாதம். ஒரு கட்சி தொடர்ந்து தவறு செய்து வந்தால், அதன் சின்னத்தைப் பறிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. ஆனால் இதுவரை அப்படி நடந்தது இல்லை.
வேட்பாளர் சரியான தகவலைக் கொடுக்கவில்லை என்றால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க சட்டக் கமிஷன் பரீசீலித்து வருவதாக அண்மையில் தேர்தல் ஆணையர் கூறியிருக்கிறார். ஒரு கட்சிக்கு நாற்பது பேச்சாளர்கள் வரை அனுமதிக்கும் வழி இப்போது இருக்கிறது. அதைக் குறைக்கும் யோசனையும் பரிசீலனையில் இருக்கிறது. தேர்தல் நிதிக்காக தேசிய தேர்தல் அறக்கட்டளை நிதியம் ஒன்று உருவாக்கி, நிறுவனங்கள் அதற்கு நன்கொடை அளிக்குமாறு செய்யலாம், அரசே வேட்பாளர்களுக்கான செலவுக்குப் பொறுப்பேற்கலாம் என்றும் ஓர் கருத்து இருக்கிறது. ஆனால் நடைமுறை சாத்தியமில்லாதது என்றே தோன்றுகிறது. சட்டக் கமிஷன் தேர்தல் சீர்திருத்த அறிக்கையை மைய சட்டத்துறை அமைச்சகத்துக்கு அளித்து (2015 மார்ச்) இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. இதுவரை எதுவும் நடக்கவில்லை.
இந்தச்சூழலில், அவதூறு வழக்குகள் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அவதூறு வழக்கு என்பது பிரிட்டிஷ் காலத்தியது, இப்போது அர்த்தமிழந்து விட்டது என்று சுப்பிரமணியம் சுவாமி, ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டவர்களின் பல்வேறு மனுக்களின் மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தனிநபரின் பேச்சு சுதந்திரம் அடுத்தவரின் சுய கௌரவத்துடன் தொடர்புடையது என்றும், கிரிமினல் அவதூறு செய்வதை கிரிமினல் குற்றம் என்பது செல்லுபடியாகும் எனத் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் காலங்களில் வாய்க்கு வந்தபடி பேசும் அரசியல்வாதிகளை இது சற்றே கட்டுப்படுத்தும் என நம்பலாம். அதே நேரத்தில், பொய்யான வழக்குகள் தொடுக்கப்பட்டவர்களை இது பாதிக்கவும் செய்யலாம்.
தேர்தல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும், பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அவ்வப்போது பேசப்படுகிறது. இதில் முக்கிய விஷயங்களாக விவாதிக்கப்படுபவை குறித்துப் பார்ப்போம் :
- வேட்பாளரின் செலவு வரம்பு உயர்த்தப்பட வேண்டும் — பெரிய மாநிலங்களில் நாடாளுமன்ற வேட்பாளருக்கு 70 லட்சம், சட்டமன்ற வேட்பாளருக்கு 28 லட்சம் ரூபாய் என்பது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் இதனை அடிக்கடி உயர்த்துவதால் மாற்றம் ஏதும் வந்துவிடப் போவதில்லை. கடந்த சில தேர்தல்களில் சில மாநிலங்களில் போட்டியிட்டவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தொகையில் பாதியளவே செலவு செய்திருக்கிறார்கள் (அல்லது செய்ததாகக் காட்டினார்கள்) என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிலர் பல கோடிகள் செலவு செய்ததும் தெரிய வந்தது. வரம்புக்கு மேல் செலவு செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- வேட்பாளரின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும், தேவைப்படுமானால் தனி வரி விதிக்க வேண்டும் — தேர்தல்களில் கறுப்புப்பணமும் கார்ப்பரேட் பணமும் விளையாடும் இந்திய அரசியலில் இது சிக்கலான விஷயம். வேட்பாளரின் தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்பது அனைத்துக் கட்சியினருக்கும் சமமான நிலையில் போட்டியிட உதவும். ஆனால், கட்சி செலவுகள் கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். தேர்தலுக்காக மேலும் வரி விதிப்பது மக்களின் அதிருப்தியையே கொண்டு வரும்.
- கட்சிகளுக்குத் தரப்படும் நன்கொடைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக கம்பெனி சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும், தனிநபர்கள் அளிக்கும் தொகைகள் காசோலை வழியாகவே தரப்பட வேண்டும் — அரசியல் கட்சிகள் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் வர வேண்டும் என்பதைக்கூட ஏற்காத நமது அரசியல் கட்சிகள் இதை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை.
- பணம் கொடுத்து செய்திகளை வெளியிடும் முறைக்கு முடிவு கட்ட வேண்டும் — வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் பல மாநிலங்களில் கட்சிகளுக்கு சொந்தமாக தொலைக்காட்சி சானல்கள் நிறையவே இருக்கின்றன. அதுதவிர, பெரும்பாலான செய்தி ஊடகங்கள் கட்சி சார்பு கொண்டவையாக அல்லது மறைமுகமாக கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கின்றன. பெய்டு நியூஸ் என்ற விவகாரம் வேறு இருக்கிறது. இப்போது புதிதாக முளைத்திருக்கும் சமூக ஊடகங்களும் வலைதளங்களும் கண்காணிப்பு முறைக்கு பெரும் சவாலாக இருக்கின்றன. இதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
- கருத்துக் கணிப்புகளின் பெயரால் கருத்துத் திணிப்புகள் நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம். அரசியல் கட்சிகளுக்கு சொந்தமான தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்புகள் என்று கூறாமல் வேறு பெயரில் தாக்கம் ஏற்படுத்த முயலும். இதையும் கண்காணிப்பது அவசியம்.
- கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பழிவாங்கும் முறைகள் இல்லாத, நடைமுறை சாத்தியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- எந்த வேட்பாளரும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடலாம் என்று விதி வகுக்க வேண்டும். அல்லது ஒரு தொகுதியில் கிடைத்த வெற்றியை விட்டுக்கொடுக்கும்போது மறுதேர்தலுக்காக அரசு செய்யும் செலவுகளுக்கும் கூடுதலான தொகையை அவரிடமிருந்து வசூலிக்க வழி செய்ய வேண்டும்.
- தேர்தல் முறையீடுகள் மீது ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கென தனி நீதிமன்றங்களையும் அமைக்கலாம்.
- இப்போது இருக்கிற நோடா (NOTA) எந்தப் பயனுமற்றது, செல்லாத வாக்குக்கு நிகரான மதிப்புடையது. இதற்கு பதிலாக, நோடாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல் நடத்தும் வகையில், வேட்பாளரை நிராகரிப்பதற்கான உரிமை (Right to Reject) ஆர்டிஆர், மற்றும் வேட்பாளரை திரும்பப் பெறுவதற்கான (Right to Recall) உரிமை ஆகியவை ஏற்கப்பட முடியாதது என்று சட்டக் கமிஷன் கருதுகிறது. இதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
- தேர்தல் முறைகேடுகளில் பலவற்றை இல்லாமல் ஆக்கக்கூடிய ஒரு தீர்வு உண்டு, அதுதான் விகிதாச்சார பிரதிநிதித்துவம். சட்டக் கமிஷன் இதை முற்றாக நிராகரிக்கிறது என்பது வருத்தத்துக்குரியது. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் என்று வரும்போது தனிநபர் ஆதிக்கம், தனிநபர் புகழ்பாடுதல் குறையும். வாக்குக்குப் பணம் கொடுக்கும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தனிநபர் அவதூறுகள் மட்டுப்படும். ஆரோக்கியமான கொள்கைரீதியான அரசியல் வலுப்பெறும். வாக்களிப்பு விகிதம் அதிகரிக்கும், நோட்டாவுக்கு வாக்களிப்போர் எண்ணிக்கை குறையும். இப்போது நடைமுறையில் இருக்கிற தேர்தல் முறைக்கு முற்றிலும் மாற்றாக அதைக் கொண்டு வருவதா, அல்லது, அத்துடன் இதையும் சேர்ப்பதா என்பதெல்லாம் அலசிப் பார்க்க வேண்டியவை. ஆனால் இதைப்பற்றி தேசியக் கட்சிகள் ஒருபோதும் பேசப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
எல்லாவற்றையும்விட முக்கியமான மற்றொரு விஷயம் இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற வாதம். அதாவது, நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. பிரதமர் மோடி இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். ஆனால் விஷயம் என்னவென்றால், இதுகுறித்து திட்டமிடுமாறு 2015இலேயே தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது என்ற செய்தி ஜூலை மாதம் வெளியாகியிருக்கிறது.
விடுதலை பெற்ற பிறகு 1967 வரை நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. மத்திய அரசு சில மாநில ஆட்சிகளைக் கலைத்ததன் காரணமாகத்தான் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடைபெறும் வழக்கம் துவங்கியது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நடைமுறை வருமானால், மத்திய அரசு எந்த மாநில அரசையும் கலைக்காது என்று உத்தரவாதம் தருமா? நிச்சயமாகத் தராது - மத்தியில் பாஜக இருந்தாலும் சரி, காங்கிரஸ் இருந்தாலும் சரி - இந்த உறுதிமொழி சாத்தியமில்லை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத தொங்குநிலை ஏற்பட்டால் என்னவாகும்? கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டு ஆட்சி கலைந்தால் என்னவாகும்? அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரைக்கும் அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்குமா என்ன? எனவே, இது நடைமுறை சாத்தியமற்ற திட்டம்.
அப்படியானால் இந்தக் கோரிக்கை ஏன் எழுகிறது? நடுத்தர வர்க்க சராசரி மனநிலையில் பார்த்தால், முதல் பார்வைக்கு, இது நல்லதுதானே... செலவு குறையுமே என்று தோன்றும். ஆனால் இந்த யோசனையின் பின்னே இருக்கிற நோக்கம் முற்றிலும் வேறு. மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சி அதே வேகத்தில் எல்லா மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க முடியும். அதன் பிறகு, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கும் அதே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் தேர்வு பெறுவார்கள். ஆக, மக்களவை-மாநிலங்களவை என இரண்டிலும் ஒரே கட்சியின் ஆதிக்கம் இருக்கும். இது அரசமைப்பு வலியுறுத்துகிற கூட்டாட்சி அமைப்பையே பலவீனப்படுத்தும். மையம்-மாநிலங்கள் என இரண்டிலும் ஒரே கட்சி என்னும்போது, மக்கள்விரோத சட்டங்களை கண்மூடித்தனமாக நிறைவேற்ற முடியும். மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க முடியும். எனவே, நடைமுறை சாத்தியமற்றது மட்டுமின்றி, ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தை நிறுவக்கூடிய இந்த முயற்சியை முறியடிக்க வேண்டிய கடமை இந்தியா முழுக்கவும் இருக்கும் எல்லாக் கட்சிகளுக்கும் இருக்கிறது.
வேட்பாளர்களுக்கென தனித்தனி வண்ணப் பெட்டிகள் இருந்த காலத்திலிருந்து வாக்குச்சீட்டு முறைக்கும், இப்போது மின்னணு இயந்திரத்துக்கும் மாறியிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, 1996இல் மொடக்குறிச்சி தொகுதியில் 1033 வேட்பாளர்கள் பங்கேற்ற சம்பவத்தையும் கண்டது. அந்த வாக்குச்சீட்டு சிறிய புத்தகம் போல இருந்தது. உலகின் முன்னேறிய நாடுகள்கூட இன்றும் வாக்குச்சீட்டையே பயன்படுத்திக் கொண்டிருக்கையில், இந்தியா மின்னணு முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறது. 21 வயதினர்தான் வாக்களிக்க முடியும் என்று இருந்ததை 1988 முதல் 18 வயதாகக் குறைத்து, இளைய தலைமுறைக்கு வாக்களிக்கும் பொறுப்பை அளித்திருக்கிறது.
சில குறைகள் இருந்தாலும், வாக்காளர் பட்டியல் கணினிமயமாக்கப்பட்டு, எல்லாருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கச் செய்திருக்கிறது. ஒருகாலத்தில் ஆள்பலமும் பணபலமும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்தன. இன்று ஆள்பலம் என்ற அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பணபலம் இன்றும் பெரிய சவாலாக இருக்கிறது. தேர்தலில் பணம் புதிய புதிய வழிகளில் பாய்கிறது.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகையில் 41 சதவிகிதம் பேர் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். 2014இல் ஐ.நா. வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, உலகிலேயே மிக அதிகமாக - 36 கோடி இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. நாளைய இந்தியாவை ஆளப்போகிறவர்களும் இவர்கள்தான், குடிமகன்களும் இவர்கள்தான். கட்சி நலன் என்ற குறுகிய பார்வைகளைக் கைவிட்டு, இவர்களுக்காக ஆரோக்கியமான ஜனநாயக அமைப்பை உறுதி செய்யக்கூடிய தேர்தல் முறையை விட்டுச்செல்வது நமது பொறுப்பு. அரசியல் கட்சிகள் இதை செய்யவைப்பது நமது கடமைகளில் ஒன்று. தேர்தல் மட்டுமே அரசியல் அல்ல, அரசியலில் தேர்தலும் ஓர் அங்கம் என்றும், நமது ஒவ்வொரு பிரச்சினைக்கும் பின்னாலும் அரசியல் இருக்கிறது என்பதை வரலாற்றோடு சேர்த்து புரிய வைப்பதும் நமது கடமை.
செறிவான பதிவு அய்யா
ReplyDeleteதங்கள் விரிவான கட்டுரை பாராட்டுக்குரியது. இது பற்றி எனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்:
ReplyDelete(1) விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்ற ஒற்றைக் கொள்கை எதிர்பார்த்த பலனைத் தாராது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட இதுபோன்ற நிலைமைதான் உள்ளது. ஆளும்கட்சிக்கு 50 இடங்கள என்றால் எதிர்கட்சிக்கு 52 இடங்கள் கிடைக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதியைப் பின்பற்றுகிறது. எனவே யார் இறுதியில் ஜெயிப்பார்கள் என்பது குழப்பமாகவே இருக்கிறது. இந்தியா மாதிரி கட்சி அமைப்பு இருந்தால் நல்லது என்று இங்கே சிந்திக்கிறார்கள்.
(2) விகிதாச்சாரமும் இப்போதுள்ள முறையும் கலந்தமாதிரியான ஒன்றைக் கொண்டுவரமுடியுமா என்றும் சிந்திக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் இதுமாதிரி விவாதங்கள் நடந்து அவை மறக்கபடுவது வாடிக்கை. உலக நாடுகள் பலவற்றிலும் இதே நிலைமைதான். எனவே, இப்போதுள்ள முறையில் சில சீர்திருத்தங்களிக் கொண்டுவருவதுதான் தேவையாகிறது.
(3) 1967 தேர்தலுக்குப் பிறகு, நான் பார்த்துக்கொண்டு வருகிறேன். தேர்தலுக்கு சில வாரங்கள் அல்லது நாட்களுக்கு முன்பு, (தமிழ்நாட்டில்) மசூதிகளிலும் சர்ச்சுகளிலும் யாருக்கு ஓட்டலிக்கவேண்டும் என்று மதத் தலைவர்கள் தங்களவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். கிறித்தவத் மதத்தலைவர்கள் எப்போதாவது கிறித்தவர் அல்லாத வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் முஸ்லீம் மதத்தலைவர்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பார்த்ததில்லை. மதரீதியாக அமைதியான மாநிலம் தமிழ்நாடு. இங்கேயே இந்த நிலைமை என்றால், நூற்றாண்டுகளாக மதரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் நிறைந்திருக்கும் வடமாநிலங்களில் நிலைமை எப்படியிருக்கும் என்பதிக் கூறவே வீண்டாம். எனவே இந்துமத அமைப்புகள் மீது கூறப்படும் அதே குற்றச்சாட்டை முஸ்லீம் அமைப்புகள் மீதும் கூறியே அஆகவேண்டும் என்பது தெளிவு.
(4) அதனால், தேர்தல் சீர்திருத்தத்திற்கும் மதரீதியான சிக்கல்களுக்கும் தொடர்பு கிடையாது. It needs an unbiased thinking, verily, an out-of-box thinking.
(5) அதிகம் பேர் வோட்டளிக்கவரவேண்டும், அப்போதுதான் ஜனநாயகம் காக்கப்படும் என்றெல்லாம் கூறப்பட்டது எவ்வளவு பேதைமை என்பதை திருமங்கலம் பார்முலா மூலம் அழகிரியும், ஆர்கேநகர் பார்முலா மூலம் பிறரும் நிரூபித்துவிட்டார்கள். அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் 40 சதவிகிதம் பேர் வாக்களிப்பதேயில்லை. இதை ஒரு பெரிய விஷயமாக இங்கே வாதிப்பதேயில்லை. (மூன்று ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் இங்கே இருந்த அனுபவத்தில் சொல்கிறேன்.)
(6) நீங்கள் சொல்லியபடி, தேர்தல் கமிஷனுக்கே இன்னும் சில அதிகாரங்களை வழங்குவதுதான் சிறந்த வழி. வோட்டுக்கு லஞ்சம் தருபவர்களையும், குற்றப் பின்னணி உடையவர்களையும் நாமிநேஷன் நிலையிலேயே அல்லது, தேர்தல் நடப்பதற்கு ஒருநாள் முன்பாக disqualify செய்துவிட்டு, மற்ற வேட்பாளர்களைக் கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரம் இருக்குமானால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
(7) All said and done, elections have to be conducted by govt officials who need to continue in their jobs even after the election is over. எல்லாருமே டிஎன்சேஷன்-களாக இருக்க முடியாது. இருந்தாலும், எல்லா நேரத்திலும் இருக்க முடியாது. எனவே தனி மனித குணங்கள் அவர்களின் நடத்தையைத் தீர்மானிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(8)தேர்தல் வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படவேண்டும். அதிக பட்சம் ஆறுமாதத்திற்குள் முடியவேண்டும். இதற்கு சலுகை காட்டமுடியாதவகையில், அப்படி தாமதம் செய்யும் நீதிபதியை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில், சட்டம் திருத்தப்படவேண்டும். இது ஒன்றைச் செய்துவிட்டாலே மிகப்பெரும் பலன் கிடைக்கும்.
ஆனால், எந்தச் சீர்திருத்தமும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தானே நிறைவேற்றப்பதேவேண்டும்! அவர்கள் செய்யமாட்டார்களே! எப்படி ஒரு டாக்டர் இன்னொரு டாக்டரைக் காட்டிக்கொடுக்க மாட்டாரோ, ஒரு ஐஏஎஸ் அதிகாரி இன்னொரு ஐஏஎஸ் அதிகாரியைக் காட்டிக்கொடுக்க மாட்டாரோ, அப்படியே, ஆளும்கட்சிக்கார்ரும் எதிக்கட்சிக்காரரும் இந்த விஷயங்களில் ஒன்றாகத்தானே செயல்படுகிறார்கள்! காலம் ஓன்றுதான் நிலைமையைச் சீர்திருத்தவேண்டும்.
-இராய செல்லப்பா (on tour) நியூ ஆர்லியன்ஸ்