Tuesday 2 September 2008

நான் ஏன் நாத்திகன் - பகத் சிங்

நான் ஏன் நாத்திகன்

பகத் சிங்

ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம் அறிந்த கடவுளின் இருப்பை நான் நம்ப மறுப்பதற்கு என் அகங்காரம்தான் காரணமா? இப்படியொரு கேள்வியை எதிர்கொள்ள நேரும் என்று நான் கற்பனைகூடச் செய்ததில்லை. ஆனால், சில நண்பர்களுடன் நான் உரையாடியதில், சிறிது காலமே என்னுடன் பழகிய குறிப்பிட்ட சில நண்பர்கள் - அவர்களை நண்பர்கள் என்று நான் கருதுவது அதிகப்படி உரிமை எடுத்துக் கொள்வதாகாது என்றால் - கடவுளின் இருப்பையே மறுக்கின்ற அளவுக்கு நான் போகக்கூடாது; என்னுடைய இந்த நம்பிக்கைக்கு அகங்காரம்தான் காரணம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அறிய நேர்ந்தது. இது முக்கியமான ஒரு பிரச்சினைதான். மனித குணங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று கூறிக்கொள்ள நான் விரும்பவில்லை. நான் சாதாரண ஒரு மனிதன்தான். மனிதருக்கும் மேற்பட்டவன் என்று யாரும் கூறிக் கொள்ளவும் முடியாது. என்னிடமும் குறைகள் உண்டு. என் இயல்பில் அகங்காரமும் ஒரு அங்கம்தான். என் தோழர்கள் என்னை எதேச்சாதிகாரி என்றார்கள். அவ்வளவு ஏன், என் நண்பர் திரு பி.கே. தத் கூட சில நேரங்களில் அப்படி அழைத்ததுண்டு. சில சந்தர்ப்பங்களில் நான் அடாவடிக்காரன் என்று கண்டனம் செய்யப்பட்டதும் உண்டு. நான் என்னை அறியாமலே என் கருத்துகளை மற்றவர்கள் மீது திணித்து, அவற்றை ஒப்புக்கொள்ளச் செய்கிறேன் என்று சில நண்பர்கள் கடுமையாக என் மீது புகார் செய்கிறார்கள். ஓரளவுக்கு இதில் உண்மை உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. இது அகம்பாவமாகவும் இருக்கலாம். பொதுவாக ஊறிக்கிடக்கும் வழக்கங்களை எதிர்ப்பதற்கு எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு என்னில் அகங்காரம் இருக்கிறது. ஆனால் அதில் சுயநலம் ஏதும் இல்லை. அப்படி இருந்தாலும், நாம் பின்பற்றும் நம்பிக்கையின்பாற்பட்ட நியாயமான பெருமையே தவிர, அது அகங்காரம் ஆகாது. வீண் பெருமை, அல்லது தெளிவாகக் கூறினால், `அகங்காரம்' என்பது ஒருவன் தன்னைப் பற்றி அளவுக்கதிகமாக பெருமை கொள்வது. என்னை நாத்திகத்துக்கு இட்டுச் சென்றது இத்தகைய அளவுக்கதிகமான தற்பெருமையா அல்லது இந்த விஷயத்தைப் பற்றி நான் கவனமாகப் படித்து, தீவிரமாக சிந்தித்து, அதற்குப் பிறகு கடவுளின்மீது நம்பிக்கை இழந்தேனா என்பதைத்தான் இங்கே விவாதிக்க விரும்புகிறேன். தன்முனைப்பு, அகங்காரம் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்பதை முதலில் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.

முதலாவதாக, தகுதிக்கு மீறிய தற்பெருமை அல்லது வீண் கௌரவம் ஒரு மனிதனின் கடவுள் நம்பிக்கைக்கு எவ்வாறு குறுக்கே நிற்க இயலும் என்பதை என்னால் சிறிதும் உணர்ந்து கொள்ள இயலவில்லை. எனக்குத் தகுதியற்ற புகழை நான் ஓரளவுக்குப் பெற்றிருந்தால், அல்லது அத்தகைய புகழைப் பெறுவதற்கு தேவைப்படும் தகுதிகள் உண்மையிலேயே இல்லாதவனாக இருந்தால் மட்டுமே, உண்மையாகவே உயர்ந்த மனிதராக இருக்கும் ஒருவரின் மகத்துவத்தை அங்கீகரிக்க மறுக்கலாம். ஆனால் கடவுள் நம்பிக்கை உடைய ஒருவன், தன் அகங்காரத்தின் காரணமாக அந்த நம்பிக்கையை எப்படி விட்டுவிட முடியும்? இதற்கு இரண்டே வழிகள்தான் உண்டு. அந்த மனிதன் தன்னை கடவுளின் எதிரி என்று சிந்திக்கத் துவங்கியிருக்க வேண்டும்; அல்லது அவன் தன்னைத்தானே கடவுளாக எண்ணத் துவங்கியிருக்க வேண்டும். இந்த இரண்டு வழிகளிலும் அவன் உண்மையான நாத்திகன் ஆகிவிட முடியாது. ஏனெனில், கடவுளின் எதிரி என்று கருதினால், தன் எதிரியான கடவுளின் இருப்பை அவன் ஒப்புக் கொள்கிறான். தானே கடவுள் என்று அவன் எண்ணினால், மறைமுகமான ஒரு சக்தி திரைக்குப் பின்னாலிருந்து இயற்கையின் இயக்கங்களை வழி நடத்துகிறது என்பதை ஒப்புக் கொள்கிறான். ஆக, தானே அந்த எல்லாம் வல்ல சக்தி என்று நம்புகிறானா, அல்லது தான் அல்லாத வேறொரு சக்தி எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கிறது என்று நம்புகிறானா என்பது நமக்கு முக்கியமல்ல. கடவுள் உண்டு என்ற அடிப்படையான நம்பிக்கை அங்கே இருக்கிறது. எனவே அவன் எவ்விதத்திலும் நாத்திகன் அல்ல.

இப்போது என் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். நான் மேலே சொன்ன முதல் வகையைச் சேர்ந்தவனும் அல்ல, இரண்டாவது வகையைச் சேர்ந்தவனும் அல்ல. எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளின் இருப்பையே நான் மறுக்கிறேன். ஏன் மறுக்கிறேன் என்பதைப் பற்றிப் பின்னர் விளக்குகிறேன். இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாத்திகக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள என்னைத் தூண்டியது அகங்காரம் அல்ல என்பதுதான் அது. நான் கடவுளின் எதிரியும் அல்ல, அவதாரமும் அல்ல, எல்லாம் வல்ல அந்த முழுமுதற் கடவுளும் அல்ல. ஒரு விஷயம் தெளிவாகி விட்டது - அதாவது, நாத்திக சிந்தனைக்கு என்னை இட்டுச் சென்றது அகங்காரம் அல்ல.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கான உண்மைகளைப் பற்றிப் பார்ப்போம். தில்லி வெடிகுண்டு வழக்கு மற்றும் லாகூர் சதி வழக்கு விசாரணைகளால் கிடைத்ததாகக் கருதப்படுகிற, என் தகுதிக்கு மீறிய புகழின் காரணமாக நான் வீண்பெருமை கொண்டவனாகி விட்டேன் என்பது இந்த நண்பர்களின் கருத்து. இவர்களுடைய கருத்து சரிதானா என்று பார்ப்போம். 

என் நாத்திக உணர்வு ஏதோ அண்மையில் ஏற்பட்டது அல்ல. நான் அறியப்படாத இளைஞனாக இருந்தபோதே - அப்படிப்பட்ட இளைஞன் இருந்ததை மேலே குறிப்பிட்ட என் நண்பர்கள் அறிந்திராத காலத்திலேயே - நான் கடவுளை நம்புவதை விட்டு விட்டேன். சாதாரண கல்லூரி மாணவனாக இருக்கிற ஒருவன் தன்னை நாத்திகத்துக்கு இட்டுச் சென்றிருக்கக் கூடிய அளவுக்கு தற்பெருமை பாராட்டுபவனாக இருக்க முடியாது. சில பேராசிரியர்களின் அன்புக்கும், சில பேராசிரியர்களின் வெறுப்புக்கும் ஆளானவனாக இருந்த நான், சுறுசுறுப்பான மாணவனாகவோ அல்லது படிப்பில் ஆர்வம் கொண்டவனாகவோ இருந்ததே இல்லை. அகங்காரத்தில் தலைக்கனம் பிடிக்கும் அளவுக்கு உணர்ச்சியூட்டும் சந்தர்ப்பங்கள் ஏதும் எனக்கு வாய்க்கவில்லை. சொல்லப்போனால், நான் மிகவும் கூச்ச சுபாவமுடைய பையனாக, எதிர்கால வாழ்க்கை பற்றிய நிச்சயமற்றவனாக இருந்தேன்; அந்த நாட்களில் நான் முழுமையான நாத்திகனாக இருக்கவில்லை. என் பாட்டனார் - அவருடைய கவனிப்பில், அவருடைய தாக்கத்துடன்தான் நான் வளர்ந்தேன் - ஆரிய சமாஜத்தில் மிகவும் பிடிப்புள்ளவர். ஒரு ஆரிய சமாஜி எதை ஏற்றுக் கொண்டாலும் சரி, நிச்சயம் நாத்திகத்தை ஏற்பவராக இருக்கவே முடியாது. தொடக்கக் கல்வியை முடித்த பிறகு நான் லாகூரில் டி.ஏ.வி. பள்ளியில் சேர்ந்தேன்; அதன் விடுதியில் முழுதாக ஓராண்டு தங்கியிருந்தேன். அங்கே காலையும், மாலையும் பிரார்த்தனைகள் செய்வது தவிர, மணிக்கணக்கில் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பேன். அக்காலத்தில் நான் முழுமையான பக்தனாகவே இருந்தேன். பிற்பாடு என் தந்தையுடன் வசிக்கத் துவங்கினேன். மதப்பற்று என்கிற விஷயத்தில் அவர் தாராள மனப்போக்கு உடையவர். அவருடைய அறிவுரைகளின் வாயிலாகத்தான் என் வாழ்க்கையை விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆயினும் அவர் ஒரு நாத்திகர் அல்லர், உறுதியான கடவுள் நம்பிக்கை கொண்டவர். தினமும் பிரார்த்தனை செய்யுமாறு என்னை உற்சாகப்படுத்துவார். ஆக, இப்படித்தான் நான் வளர்க்கப்பட்டேன். ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்குதான் நான் சுதந்திரமாக சிந்திக்கவும், கடவுள் உள்பட மதம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் விமர்சிக்கவும் துவங்கினேன். என்றாலும், அப்போதும் நான் கடவுள் நம்பிக்கை உடையவன்தான். அதுவரையில் மத ஆச்சாரப்படி தலைமயிரைக் கத்தரிக்காமல் வளர்த்து வந்தேன் என்றாலும், சீக்கிய மற்றும் பிற மதங்களின் புராணங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்ள இயலவில்லை. என்றாலும் கடவுள் உண்டு என்பதில் மட்டும் உறுதியான நம்பிக்கை இருந்தது. 

பிறகு நான் புரட்சிக் கட்சியில் சேர்ந்தேன். நான் அதில் சந்தித்த முதல் தலைவர், கடவுள் இல்லை என்று தெளிவுபட நம்பியவர் அல்ல; என்றாலும், கடவுளின் இருப்பை மறுக்கிற அளவுக்கு துணிவுடையவரும் அல்ல. கடவுளைப் பற்றி விடாமல் நான் கேள்வி எழுப்பினால், ``உனக்கு எப்போது விருப்பமோ அப்போது வணங்கு'' என்று அவர் கூறுவது வழக்கம். இந்தப் பதிலில் நாத்திகம் உண்டு என்றாலும், அதை ஒப்புக் கொள்வதற்கான தைரியம் இல்லாத நாத்திகம்தான் இது. இரண்டாவதாக நான் சந்தித்த தலைவர் உறுதியான கடவுள் நம்பிக்கை உடையவர். அவருடைய பெயர் - மரியாதைக்குரிய தோழர் சச்சீந்திர நாத் சன்யால்; காக்கோரி சதி வழக்கில் ஆயுளுக்கும் நாடுகடத்தப்பட்ட தண்டனையை இப்போது அனுபவித்து வருபவர். அவருடைய ஒரே நூலும், புகழ் பெற்ற நூலுமான `அடிமை வாழ்க்கை'  (பந்தி ஜீவன்) என்ற புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே கடவுளின் புகழ் பாடப்பட்டுள்ளது. அருமையான அந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தின் கடைசிப் பக்கத்தில் வேதாந்தம் செறிந்த புகழ்மாலைகள் கடவுளுக்கு சூட்டப்பட்டுள்ளன; இவை அவருடைய சிந்தனைகளின் முக்கிய அங்கமாகும். 1925 ஜனவரி 28ஆம் தேதி இந்தியா முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட `புரட்சிப் பிரசுரம்' என்ற துண்டறிக்கை, அரசு வழக்குரைஞர் தரப்பின் கருத்துப்படி கூறினால், சன்யாலின் அறிவுக்கூர்மையின் வெளிப்பாடாகும். எந்தவொரு இரகசியப் பணியிலும் தவிர்க்க முடியாமல் ஏற்படுவது போலவே, இதில் அந்த முன்னணித் தலைவர் தனது சொந்தக் கருத்துகளை - தனக்கு மிகவும் பிடித்தமானவற்றை - வெளியிடுகிறார்; இயக்கத்தின் மற்றவர்களுக்கு அதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தப் பிரசுரத்தில் ஒரு பத்தி முழுவதும் எல்லாம் வல்ல இறைவனையும், இறைவனின் திருவிளையாடல்களையும் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. அது முழுக்கவும் `மறைபொருள் ரகசியம்'. நான் இங்கே கூற விரும்புவது என்னவென்றால், புரட்சிக் கட்சியில் கடவுள் மறுப்பு என்ற சிந்தனைகூட எழுந்திருக்கவில்லை என்பதுதான். புகழ் பெற்ற காக்கோரி தியாகிகள் நான்கு பேரும் தம் கடைசி நாட்களை பிரார்த்தனையில் கழித்தார்கள். ராம் பிரசாத் பிஸ்மில், ஆர்ய சமாஜத்தில் பற்றுள்ளவர். சோஷலிசம், கம்யூனிசம் ஆகிய துறைகளில் மிகவும் கற்றறிந்தவராக இருந்த ராஜன் லஹரி, உபநிடதங்கள் மற்றும் கீதையின் சுலோகங்களை ஜெபிக்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியாதவராக இருந்தார். அவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே பிரார்த்தனை செய்யாதவராக இருந்தார். ``மனிதனின் பலவீனம், அல்லது வரம்புக்கு உட்பட்ட அறிவால் விளைந்ததுதான் தத்துவம்'' என்பார் அவர். அவரும் இப்போது நாடு கடத்தப்பட்ட ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இருந்தாலும், அவரும்கூட ஒருபோதும் கடவுளின் இருப்பை மறுக்கத் துணியவில்லை.

அந்தக் காலகட்டம் வரை நான் கற்பனைக் கொள்கைகளால் கவரப்பட்ட புரட்சிக்காரனாகத்தான் இருந்தேன். அதுவரை நாங்கள் மற்றவர்களை பின்பற்றுபவர்களாக இருந்தோம். பிறகு முழுப் பொறுப்பையும் சுமக்க வேண்டிய நேரம் வந்து விட்டிருந்தது. சிறிது காலத்திற்குத் தொடர்ந்த, தவிர்க்க முடியாத எதிர் நடவடிக்கைகள் காரணமாக, கட்சி பிழைத்திருப்பதே இயலாத காரியமாகத் தோன்றியது. உத்வேகம் கொண்ட தோழர்கள் - ஏன், தலைவர்கள்கூடஎம்மைப் பார்த்து பரிகசிக்கத் துவங்கினார்கள். எங்கள் திட்டம் பயன் தருமா என்ற சந்தேகம் எனக்கே ஒருநாள் ஏற்பட்டு விடக்கூடும் என்ற அச்சமும் சில நேரங்களில் எனக்கு ஏற்பட்டது உண்டு. அதுதான் என் புரட்சி வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. ``கற்றுணர்'' என்று என் உள்ளத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு குரல் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. எதிராளி முன்வைக்கும் வாதங்களை எதிர்கொள்வதற்கு கற்றுணர வேண்டும். உன் நம்பிக்கைக்கு ஆதரவான வாதங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காகக் கற்றுணர வேண்டும். நான் படிக்கத் தொடங்கினேன். என் பழைய நம்பிக்கைகளும் முடிபுகளும் மகத்தான மாற்றத்துக்கு ஆளாயின. எமக்கு முந்தைய புரட்சிக்காரர்களுக்கு வன்முறை வழியின் பால் மட்டுமே பிரதானமான பிடிப்பு இருந்தது; இந்த இடத்தை தீவிர சிந்தனைகள் பிடித்துக் கொண்டன. அதீத சக்திகள் மீதான நம்பிக்கையோ, மூட நம்பிக்கையோ இனியும் இருக்க முடியாது என்று ஆனது. எதார்த்தவாதம் எமது நம்பிக்கை ஆனது. தவிர்க்கவே முடியாத நிலையில் மட்டுமே பலப் பிரயோகத்தை நியாயப்படுத்த முடியும்; மக்கள் இயக்கங்கள் அனைத்துக்கும் அகிம்சை என்பது கொள்கை அளவில் அத்தியாவசியமானது என்று தெளிந்தோம். வழிமுறைகளைப் பொறுத்தவரை இவ்வளவுதான். நாம் எதற்காகப் போராடுகிறோம் என்ற இலக்கு பற்றிய தெளிந்த கருதுகோள்தான் முக்கியமான விஷயம். செயல்பாட்டுக் களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் ஏதும் இருக்கவில்லை என்பதால் பல்வேறு இலட்சியங்கள் பற்றியும் உலகப் புரட்சியைப் பற்றியும் படிக்க எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அராஜகவாதத் தலைவர் பகூனின் எழுதியதைப் படித்தேன்; கம்யூனிசத்தின் தந்தை மார்க்ஸ் எழுதிய சிலவற்றைப் படித்தேன்; தமது நாட்டில் புரட்சியை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராட்ஸ்கி மற்றும் பலரது எழுத்துகளை நிறையப் படித்தேன். அவர்கள் அனைவரும் நாத்திகர்கள்தான். பகூனின் எழுதிய `கடவுளும் அரசும்' (காட் அண்ட் ஸ்டேட்) என்ற நூல் முழுமையானது அல்ல என்றாலும்கூட, இவ்விஷயத்தைப் பற்றிய ஆர்வமூட்டும் நூலாகும். பின்னர் நிர்லம்ப ஸ்வாமி எழுதிய `பொதுப் புத்தி' (காமன் சென்ஸ்) என்ற நூலைப் படித்தேன். அது ஒருவகையான மறைபொருள் நாத்திகவாதம். நாத்திகம் என்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒரு விஷயமாக ஆகிப்போனது. 1926ஆம் ஆண்டின் முடிவுவாக்கில், இந்த உலகத்தைப் படைத்து, வழிகாட்டி, கட்டுப்படுத்துகிற எல்லாம் வல்ல இறைவனின் இருப்பைப் பற்றிய தத்துவத்தில் சாரம் எதுவுமே இல்லை என்று தெளிந்தேன். கடவுளின்பால் நம்பிக்கை இன்மையை வெளியிட்டேன். இந்த விஷயத்தைப் பற்றி என் நண்பர்களுடன் விவாதங்கள் நடத்தினேன். இப்போது நான் பிரகடனம் செய்யப்பட்ட நாத்திகன் ஆகிவிட்டேன். ஆனால், அது எப்படி நிகழ்ந்தது, நாத்திகம் என்றால் என்ன என்பதைத்தான் இப்போது கீழே பார்க்கப் போகிறோம்.

1927 மே மாதத்தில் நான் கைது செய்யப்பட்டேன். அது ஒரு திடீர் நிகழ்வு. காவல்துறை என்னைத் தேடிக் கொண்டிருக்கிறது என்பதை சிறிதும் அறியாதவனாக இருந்தேன். ஒரு பூங்காவின் வழியாகப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென்று காவலர்கள் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அப்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன் என்பது எனக்கே வியப்புதான். எனக்கு எந்தவித உணர்வோ அல்லது பரபரப்போ ஏற்படவில்லை. முதலில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டேன். மறுநாள் ரயில்வே போலீஸ் காவலில் வைக்கப்பட்டு முழுமையாக ஒரு மாதம் அங்கே இருந்தேன். காவல்துறை அதிகாரிகளுடன் பல நாட்கள் உரையாடிய பிறகுதான் காக்கோரி சம்பவத்துடனும் புரட்சி இயக்கத்தின் நடவடிக்கைகளுடனும் எனக்கு உள்ள தொடர்பு பற்றி ஏதோ தகவல் அவர்களிடம் இருக்கிறது என்று ஊகம் செய்ய முடிந்தது. காக்கோரி சதி வழக்கு லக்னோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நான் லக்னோ சென்றதாகவும், புரட்சிக்காரர்களை காப்பாற்ற ஏதோ ஒரு திட்டத்தை வகுத்ததாகவும், அவர்களின் ஒப்புதல் கிடைத்த பிறகு நாங்கள் வெடிகுண்டுகளை ஏற்பாடு செய்தோம் என்றும், வெடிகுண்டுகளை பரிசோதிப்பதற்காக 1926ஆம் ஆண்டு தசரா திருவிழாவில் மக்கள் கூட்டத்தின்மீது ஒரு குண்டை வீசினோம் என்றும் அவர்கள் கூறினார்கள். என்னுடைய நன்மைக்காகக் கூறுவதாக அவர்கள் சொன்னார்கள்: புரட்சிக் கட்சியின் நடவடிக்கைகள் பற்றி ஒரு வாக்குமூலம் அளித்தால் நான் சிறையில் வைக்கப்பட மாட்டேன்; அதற்குப் பதிலாக, நீதிமன்றத்தில் அப்ரூவராக சாட்சியம் அளிக்காமலேகூட விடுதலை செய்யப்படுவதோடு உரிய பரிசுகளும் வழங்கப்படும் என்று சொன்னார்கள். அதைக்கேட்டு நான் சிரித்தேன். அது முழுக்கவும் புரட்டுதான். எம்மைப்போன்ற லட்சியங்களைக் கொண்டவர்கள் தமது சொந்த மக்கள் மீது, அப்பாவி மக்கள்மீது வெடிகுண்டை எறிய மாட்டார்கள்.

ஒரு நாள் காலை, புலனாய்வுத்துறையின் அன்றைய கண்காணிப்பாளர் திரு. நியூமேன் என்னிடம் வந்தார். அனுதாபத்துடன் நீண்டநேரம் பேசிய பிறகு, தன்னை மிகவும் வருத்திய செய்தியைக் கூறினார்: அவர்கள் கேட்டபடி நான் வாக்குமூலம் தரத் தவறினால் காக்கோரி வழக்கு தொடர்பாக போர் தொடுக்கும் சதி செய்ததற்காகவும், தசரா வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கொலைக் குற்றத்துக்காகவும் என்மீது விசாரணை நடத்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்றார். என்னை குற்றவாளி என்று நிரூபித்து தூக்கிலேற்ற போதுமான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறினார். அந்த நாட்களில் நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன் என்றாலும், காவல்துறையினர் தாம் விரும்பியதை நிறைவேற்றி விட முடியும் என்று நம்பினேன். அதே நாளில், நான் இரண்டு நேரமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் எனக்கு அறிவுரைகளை வழங்கினார்கள். நான் இப்போது நாத்திகன். அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுகிற காலத்தில் மட்டும் நான் நாத்திகன் என்று சொல்லிக் கொள்வதா, அல்லது இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும் என் கொள்கையை விடாமல் பற்றிக் கொண்டிருப்பதா என்ற கேள்விக்கு நானே முடிவு செய்ய வேண்டும் என விரும்பினேன். மிகுந்த சிந்தனைக்குப் பிறகு, கடவுள்மீது நம்பிக்கை கொள்ளவும், இறைவனைப் பிரார்த்திக்கவும் என்னை நானே தயார் செய்து கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். இல்லை, அப்படி ஒருபோதும் நான் செய்யவில்லை. அதுதான் உண்மையான சோதனை, அதில் நான் வெற்றி கண்டேன். மற்ற சிலவற்றை காவு கொடுத்துவிட்டு என் உயிரைக் காத்துக் கொள்ளலாம் என்று ஒரு கணப்போதும்கூட நான் விருப்பம் கொண்டதில்லை. ஆக, நான் ஒரு முழு நாத்திகன், நாத்திகனாக ஆனது முதல் அவ்வாறே இருந்து வந்திருக்கிறேன். இந்தப் பரிசோதனையை எதிர் கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஏதேனும் ஒன்றின் மீதான `நம்பிக்கை', துன்பங்களை எளிதாக்குகிறது, ஏன், அவற்றை மகிழ்ச்சி தருவதாகவும்கூட ஆக்குகிறது. மனிதன் கடவுளில் மிகுந்த ஆறுதலையும் ஆதரவையும் காண முடியும். கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், மனிதன் தன்னைத்தானே நம்பியிருக்க வேண்டும். கடும் புயலும் சூறாவளியும் சுழன்றடிக்கும்போது ஒருவன் தன் சொந்தக்கால்களின் பலத்தில் மட்டும் நிற்பது என்பது ஒன்றும் சிறுபிள்ளை விளையாட்டு அல்ல. இத்தகைய சோதனையான தருணங்களில் அகங்காரம் - அது இருந்தால் - காற்றில் கரைந்து விடும்; பொதுவான நம்பிக்கைகளை மனிதன் மறுக்கத் துணிய மாட்டான்; அவ்வாறு செய்யத் துணிகிறான் என்றால், அவனிடம் அகங்காரம் என்பதைவிட வேறு வலிமைகள் உள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இதுதான் இப்போதைய என் நிலைமை. தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது ஏற்கெனவே நன்கு தெரிந்ததுதான். ஒரு வாரத்துக்குள் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ஒரு இலட்சியத்துக்காக நான் தியாகம் செய்யப்போகிறேன் என்ற ஒரு விஷயத்தைத் தவிர ஆறுதல் தரக்கூடிய விஷயம் வேறு என்ன இருக்கிறது? கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு இந்து, தான் ஒரு மன்னனாக மறுபிறவி எடுப்பதாகக் கற்பனை செய்யலாம்; ஒரு முஸ்லீம் அல்லது கிறித்துவர், தான் அனுபவித்த வேதனைகளுக்கும் செய்த தியாகங்களுக்கும் பிரதிபலனாக சுவர்க்கத்தில் கிடைக்கப்போகும் சுகங்களைப் பற்றிக் கனவு காணலாம். ஆனால் நான் என்ன எதிர்பார்ப்பது? என் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டப்பட்டு காலுக்குக் கீழே பலகைகள் நீக்கப்படும் கணம் எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும் - அதுதான் கடைசிக் கணம், இறுதிக் கணமாக இருக்கும். நான் - அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வேதாந்த சாத்திரங்களில் கூறப்படுகிற என் ஆன்மா - அங்கே முடிந்து போகும். அதற்கு அப்பால் ஏதுமில்லை. இந்தக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் தைரியம் எனக்கு இருந்தால், மகத்தான முடிவு ஏதும் இல்லாத போராட்டம் நிறைந்த குறுகிய வாழ்க்கையே ஒரு பரிசுதான். அவ்வளவுதான். 

எந்த சுயநலமும் இன்றி, இந்த வாழ்க்கையில் அல்லது இந்த வாழ்க்கைக்குப் பிறகு பரிசு கிடைக்கும் என்ற ஆவல் ஏதுமின்றி, பற்றுகள் அற்றவனாக என் வாழ்வை சுதந்திரத்திற்காக அர்ப்பணித்திருக்கிறேன்; ஏனெனில், என்னால் வேறு மாதிரியாகச் செய்திருக்கவும் முடியாது. வேறு எதற்காகவும் இன்றி மனிதகுல சேவைக்கும், மனித குலத்தை துன்பங்களிலிருந்து விடுவிக்கவும் மட்டுமே தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் இத்தகைய மனப்பாங்கு கொண்ட ஆண்கள்-பெண்களின் எண்ணிக்கை பெருகுகிற நாள்தான் சுதந்திர யுகத்தின் துவக்க நாளாக அமையும். ஆளும் அரசனாக ஆவதற்கோ. இப்பிறப்பில் அல்லது அடுத்த பிறப்பில் வேறு பரிசுகள் கிடைக்கும் என்பதற்காகவோ, அல்லது சுவர்க்கத்தில் கிடைக்கும் சுகங்களுக்காகவோ ஒடுக்குவோரையும் சுரண்டுவோரையும் எதிர்ப்பவர்களாக இல்லாமல், அடிமைத்தனம் என்னும் நுகத்தடியிலிருந்து மனிதகுலத்தை விடுவிக்கவும், சுதந்திரத்தையும் அமைதியையும் நிலைநாட்டவும் தனிநபர்கள் என்ற வகையில் அபாயகரமானதும், உணர்வு என்ற வகையில் உன்னத மானதுமான இந்தப் பாதையை மேற்கொள்வார்கள். அவர்களுடைய இந்த உன்னதமான இலட்சியத்தின் பெருமையை அகங்காரம் என்று தவறாகப் பொருள் கூறலாமா? இப்படிப்பட்ட கடுமையான அவதூறு பேச யாருக்குத் துணிவு உண்டு? அப்படி யாரேனும் இருந்தால் அவன் ஒரு முட்டாள் அல்லது பித்தலாட்டக்காரன் என்றுதான் கூறுவேன். இலட்சியப் போராளிகளின் இதயத்தில் குமுறும் உத்வேகம், எழுச்சி, உன்னத உணர்வுகளின் ஆழத்தை அவன் உணர முடியாது என்பதால் அவனை மன்னித்து விடுவோம். அவனுடைய இதயம் வெறும் தசைப் பிண்டம் போன்றது; சுயநலங்கள் என்னும் படலம் கண்களை மூடியிருப்பதால் அவனுடைய கண்கள் மங்கிப் போனவை. சுயநம்பிக்கை என்பது எப்போதுமே அகங்காரம் என்று பொருள்படக்கூடியதுதான். இது மிகவும் வேதனையும் வருத்தமும் தருவது, என்றாலும் வேறு வழியில்லை.

வழக்கத்தில் உள்ள ஒரு நம்பிக்கையை நீங்கள் எதிர்த்துப் பாருங்கள்; விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்றும், தவறேதும் செய்ய முடியாதவர் என்றும் பொதுவாக நம்பப்படுகிற ஒரு தலைவரை விமர்சனம் செய்து பாருங்கள் - உங்கள் வாதத்தின் வலிமை, நீங்கள் வீண்பெருமை பேசுபவர் என்று பொதுமக்கள் கூறும்படி செய்து விடும். சிந்தனைத் தேக்கம்தான் இதற்குக் காரணம். விமர்சனமும், சுதந்திரமான சிந்தனையும் ஒரு புரட்சிக்காரனிடமிருந்து பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். மகாத்மா காந்தி பெரிய மனிதர் என்பதால் யாரும் அவரை விமர்சனம் செய்யக் கூடாது; அவர் மேலே உயர்ந்து விட்டார் என்பதால் அரசியல் அல்லது மதமாக இருந்தாலும், பொருளாதாரம் அல்லது அறம் என்றாலும் - அவர் சொல்வதுதான் சரி. அவருடைய கருத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களோ, இல்லையோ, ``ஆமாம், அது சரிதான்'' என்று நீங்கள் கூற வேண்டும். இத்தகைய மனப்போக்கு முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லாது. சொல்லப்போனால் இது மிகப் பிற்போக்குச் சிந்தனை.

அனைத்துக்கும் மேலான ஒன்றில் - எல்லாம் வல்ல இறைவனில் நமது முன்னோர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதால், அந்த நம்பிக்கையை அல்லது அந்த அனைத்துக்கும் மேலான ஒன்றின் இருப்பை எவரேனும் எதிர்க்கத் துணிந்தால் அவன் மதத் துரோகி என்று கூறப்படுவான். அவனுடைய வாதம், எதிர்வாதங்களால் தகர்க்க முடியாத அளவுக்கு வலுவாக இருந்தால், எல்லாம் வல்லவனின் கோபத்துக்கு ஆளாகி கெட்டழிந்து போவான் என்ற அச்சுறுத்தலுக்குப் பயப்படாத அளவுக்கு அவனுடைய ஊக்கம் திடமாக இருந்தால், அவன் வீண்பெருமை பேசுபவன் என்று கூறப்படுவான். அவனுடைய ஊக்க உணர்வு அகங்காரம் என்று இகழப்படும். அப்படியானால், பயனற்ற இந்த விவாதத்தில் எதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டும்? எதற்காக இதை விவாதிக்க வேண்டும்? இந்தக் கேள்வி மக்கள் முன்னால் முதன்முறையாக வந்திருக்கிறது; முதன்முறையாக உள்ளது உள்ளபடி கையாளப்படுகிறது; அதனால்தான் இவ்வளவு நீண்ட விவாதம் தேவைப்படுகிறது.

முதல் கேள்வியைப் பொறுத்தவரை, என்னை நாத்திகத்திற்கு இட்டுச்சென்றது அகங்காரம் அல்ல என்பதை தெளிவாக்கி விட்டேன் என்று நம்புகிறேன். நான் முன்வைத்த வாதம் ஏற்கத் தக்கதா இல்லையா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும், நான் அல்ல. தற்போதைய சூழ்நிலையில், கடவுளின்மீது நான் நம்பிக்கை கொண்டிருந்தால் வாழ்க்கை இன்னும் எளிதாக இருந்திருக்கும், என் சுமை குறைந்திருக்கும்; இறைவனின்மீதான என் நம்பிக்கையின்மை, சூழலை வறண்டதாக்கி விட்டது, நிலைமை இன்னும் கடுமையாகும் என்பதை நான் அறிவேன். சிறிதே இறையுணர்வு இருந்தால் வாழ்க்கை கவிதைநயம் உடையதாக ஆகும். ஆனால் என் விதியை சந்திக்க எந்த போதையின் உதவியையும் நான் விரும்பவில்லை. நான் ஒரு எதார்த்தவாதி. எனக்குள் எழுகிற தூண்டலை பகுத்தறிவின் துணை கொண்டு தீர்க்க முயன்று வந்திருக்கிறேன். இதில் எல்லா நேரங்களிலும் நான் வெற்றி கண்டதாகச் சொல்ல முடியாது. இருப்பினும், தொடர்ந்து முயற்சி செய்வது மனிதனின் கடமை; வெற்றி கிடைப்பது சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் பொறுத்தது.

இரண்டாவது கேள்விக்கு வருவோம்; அகங்காரம் இல்லை என்றான பிறகு, கடவுளின் இருப்பு பற்றிய பழமையான, இப்போதும் வழக்கத்திலிருக்கிற நம்பிக்கையை மறுப்பதற்கு வேறேதோ காரணம் இருக்க வேண்டும். ஆம், காரணம் இருக்கிறது. பகுத்தறியும் ஆற்றல் சிறிதேனும் உள்ள ஒரு மனிதன், தன் சூழலின் காரண காரியத்தை அலச எப்போதும் முயற்சி செய்வான் என்பது என் கருத்து. நேரடி சாட்சியங்கள் எங்கே இல்லையோ, அந்த முக்கியமான இடத்தை தத்துவங்கள் பிடித்துக் கொள்கின்றன. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, `தத்துவம் என்பது மனித பலவீனத்தின் விளைவு' என்று என் புரட்சிக்கார நண்பர் ஒருவர் கூறுவது வழக்கம். நம் முன்னோர்கள் இந்த உலகத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர் கால மர்மங்களை விளக்கவும், ஏன், எதனால் என்ற கேள்விகளை எழுப்புவதற்கும் போதிய நேரம் இருந்த போது நேரடியான சாட்சியங்கள் இல்லாத பட்சத்தில் அவரவர் தத்தம் வழிகளில் பிரச்சினையைத் தீர்க்க முனைந்தனர். அதனால்தான் பல்வேறு மதப்பிரிவுகளுக்கிடையே மிகுந்த வேறுபாடுகளை நாம் காண்கிறோம்; இந்த வேறுபாடுகள் சில நேரங்களில் முரண்களாகவும் மோதல்களாகவும் வடிவம் கொள்வதைக் காண்கிறோம். கீழை மற்றும் மேலைத் தத்துவங்கள் வேறுபடுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வட்டத்துக்குள்ளும் இருக்கிற வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளுக்கு இடையிலும்கூட வேறுபாடுகள் உள்ளன. கிழக்கத்திய மதங்களில் இஸ்லாமிய நம்பிக்கை இந்து நம்பிக்கையுடன் சிறிதும் இணைவதில்லை. இந்தியாவில் கூட புத்த மதமும் ஜைன மதமும் சில வேளைகளில் பிராமணியத்திலிருந்து மிகவும் வேறுபடுகின்றன; பிராமணியத்திலும்கூட ஆரிய சமாஜம், சனாதன தர்மம் என முரண்படும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. சார்வாகனர் கடந்த காலத்தின் சுதந்திரச் சிந்தனை யாளராக இருக்கிறார். பண்டைக் காலத்திலேயே அவர் கடவுளின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். இந்த எல்லாப் பிரிவுகளும் அடிப்படைக் கேள்வியில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டு நிற்கின்றன, ஒவ்வொருவரும் தமது வழியே சரியானது என்று நினைக்கிறார்கள். இதுதான் நமது துரதிர்ஷ்டம். அறியாமைக்கு எதிரான நமது போராட்டத்திற்கும், இந்த மர்மப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் பண்டைய சிந்தனையாளர்களின், ஞானிகளின் பரிசோதனைகளையும் வெளிப்பாடுகளையும் பயன்படுத்தாமல் நாம் சோம்பேறித்தனமாக இருந்து கொண்டு மத நம்பிக்கை என்று கூச்சலிடுகிறோம்; அவர்களுடைய கருத்துக்கு ஒத்துப்போகாத நம்பிக்கையைக் கொள்கிறோம்; அதனால் மனித முன்னேற்றத்தில் தேக்கத்தை ஏற்படுத்திய குற்றத்தைச் செய்கிறோம்.

முன்னேற்றத்தை விரும்பும் எந்தவொரு மனிதனும் பண்டைய நம்பிக்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் விமர்சனம் செய்யவும் கேள்விக்கு உள்ளாக்கவும் வேண்டும். நிலவுகிற நம்பிக்கையின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் பகுத்தாய்வதற்காக ஒவ்வொரு அம்சமாக அவன் அலச வேண்டும். போதுமான அளவுக்குப் பகுத்தாய்ந்த பிறகு ஒருவன் ஏதேனுமொரு கொள்கை அல்லது தத்துவத்தை நம்ப முன்வந்தால். அவனுடைய நம்பிக்கை வரவேற்கப்படுகிறது. அவனுடைய பகுப்பாய்வு தவறானதாக, குறையுடையதாக. தவறான திசைவழியிலானதாக, சில நேரங்களில் பொய் மயக்கமாக இருக்கலாம். இருப்பினும், பகுத்தறிவே அவன் வாழ்வில் வழிகாட்டும் நட்சத்திரமாக இருப்பதால் அவன் திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால் வெற்று நம்பிக்கையும் குருட்டு நம்பிக்கையும் ஆபத்தானது: அது மூளையை மந்தமாக்குகிறது, மனிதனை பிற்போக்குவாதியாக ஆக்குகிறது. எதார்த்த வாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு மனிதன் பண்டைய நம்பிக்கையை முற்றிலுமாக கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். பகுப்பாய்வின் முன் அந்த நம்பிக்கை நிலைத்து நிற்க இயலாதபோது அது நொறுங்கி விடும். அப்போது அவன் செய்ய வேண்டிய முதல் வேலை அதை முழுக்கவும் தகர்த்து விட்டு புதிய தத்துவத்தைக் கட்டமைப்பதற்காக இடம் ஏற்படுத்துவது தான். இது அழிப்பு வேலை; அதற்குப் பிறகு ஆக்க வேலை தொடங்குகிறது இதில் சில நேரங்களில் பழைய நம்பிக்கையின் சில இடிபாடுகளையும் மறுகட்டுமானப் பணிக்காகப் பயன்படுத்தலாம். என்னைப் பொறுத்த வரை, இந்த அம்சத்தைப் பற்றி நான் அதிகம் கற்றறிய இயலவில்லை என்பதை முதலில் ஒப்புக் கொள்கிறேன். கீழைத் தத்துவத்தைக் கற்க எனக்கு பெருத்த ஆர்வம் உண்டு; ஆனால் அதற்கேற்ற வாய்ப்போ சந்தர்ப்பமோ எனக்குக் கிட்டவில்லை. எனினும் இப்போது விவாதித்துக் கொண்டிருக்கும் அழித்தல் பற்றிய விஷயத்தில், பழைய நம்பிக்கையின் வலிமையை கேள்வி கேட்கும் அளவுக்கு நான் தெளிவு பெற்றிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன். இயற்கையின் அசைவுகளை வழிகாட்டி இயக்குகிற அனைத்துக்கும் மேற்பட்ட சக்தி எதுவும் இல்லை என்கிற அளவுக்கு நான் தெளிவாக இருக்கிறேன். நாம் இயற்கையை நம்புகிறோம்; இயற்கை நமக்காகப் பணியாற்றும்படி அதை ஆதிக்கம் செலுத்துவதில்தான் முற்போக்கு இயக்கம் முழுவதும் நாட்டம் கொண்டுள்ளது. அதன் பின்னாலிருந்து இயக்கும் அரூப சக்தி எதுவும் அதற்குக் கிடையாது. இதுதான் எங்கள் தத்துவம். 

பாதகமான பக்கத்தைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கையாளர்களிடம் சில கேள்விகள் கேட்கிறோம்:

(1) ஒருவேளை நீங்கள் நம்புவதுபோல, அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாவற்றுக்கும் மேலான, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த இறைவன் உண்டு என்றால், இந்த பூமி அல்லது உலகத்தைப் படைத்தது யார்? அதைப் படைத்தது எதற்காக என்று தயவுசெய்து சொல்லுங்கள். துன்பங்களும் துயரங்களும், முடிவே இல்லாத எண்ணற்ற துயரச் சம்பவங்களும் நிறைந்த, உலகத்தில் உள்ள ஒரேயொரு மனிதன்கூட முழுக்கவும் திருப்தியடைய இயலாத உலகம் இது.

அதுதான் கடவுளின் சட்டம் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்; இறைவன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவன் என்றால், அவன் அனைத்திற்கும் மேலானவனாக இருக்க முடியாது; அவனும் நம்மைப் போலவே ஒரு அடிமைதான். அவனுடைய மகிழ்ச்சிக்கான திருவிளையாடல் என்று தயவுசெய்து கூறாதீர்கள்; நீரோ மன்னன் ஒரு ரோம் நகரை எரித்தான். அவன் கொன்றது எண்ணிக்கையில் அடங்கக்கூடிய அளவு மக்களைத்தான். சில துயரச் சம்பவங்களை நிகழ்த்தினான். எல்லாம் அவனுடைய மகிழ்ச்சிக்காக. ஆனால் வரலாற்றில் அவனுடைய இடம் எது? வரலாற்று ஆய்வாளர்கள் அவனை என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள்? இருக்கிற வசைச் சொற்கள் அனைத்தும் அவன்மேல் பொழியப்படுகின்றன. அவன் கொடுமைக்காரன், இதயமற்றவன், வெறிபிடித்தவன் என்ற வசைச் சொற்களால் வரலாற்று நூல்களின் பக்கங்கள் எல்லாம் கறைபடிந்துள்ளன. ஒரு செங்கிஸ் கான் தன் மகிழ்ச்சிக்காக சில ஆயிரம் உயிர்களை பலி கொடுத்தான்; நாம் அவன் பெயரையே வெறுக்கிறோம். இப்படி இருக்கையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்தி வந்திருக்கிற, இப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற உங்களுடைய அந்த எல்லாம் வல்லானை, நிலைபேறுடைய நீரோவை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறோம்? செங்கிஸ்கான் செய்ததை விட அதிகமாக ஒவ்வொரு கணமும் செய்கிற கொடுமைகளை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்? நரகம் என்ற பெயருக்கேற்ப எப்போதும் துன்பங்கள் நிலவுகிற இந்த உலகத்தை அவன் எதற்காகப் படைத்தான் என்று நான் கேட்கிறேன். இதெல்லாம் எப்படி நியாயமாகும்? துன்பப்படும் அப்பாவிகள் அடுத்த பிறப்பில் அதற்கான பரிசு பெறுவார்கள், தவறு செய்தவர்கள் அடுத்த பிறப்பில் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுகிறீர்களா? சரி, இந்தப் பிறப்பில் உங்கள் உடலில் காயத்தை ஏற்படுத்தியவன் அடுத்த பிறப்பில் அதன்மீது மருந்தைத் தடவுவான் என்பதை எந்த அளவுக்கு நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்? கிளேடியேட்டர் காட்சிகளை நிகழ்த்திக் காட்டியவர்களும் அதன் ஆதரவாளர்களும் பசியோடு இருக்கிற சிங்கங்களின் முன்னால் மனிதர்களை வீசினார்கள்; அந்த விலங்குகளிடமிருந்து அவர்கள் தப்பி வந்தால் அவர்களை நன்றாகக் கவனித்து ஆதரவு அளிப்போம் என்றார்கள்; இதை எந்த அளவுக்கு நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்? அதனால்தான் நான் கேட்கிறேன்: ``அனைத்துக்கும் மேலான அந்தக் கடவுள் எதற்காக உலகையும் அதில் மனிதனையும் படைத்தான்? உல்லாசத்துக்காகவா? அப்படியானால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசம்?''

முகமதியர்களையும் கிறித்துவர்களையும் கேட்கிறேன்: மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு இந்து மதத்திலாவது வேறொரு பதில் வாதம் இருக்கிறது; உங்களுடைய பதில் என்ன? முற்பிறப்பில் உங்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஏதுமறியாத அப்பாவிகளின் துன்பங்களுக்கு முற்பிறப்பின் பாவங்கள்தான் காரணம் என்று இந்துக்களைப்போல நீங்கள் வாதம் புரிய முடியாது. எல்லாம் வல்லவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உலகமாகப் படைத்து விட்டு `எல்லாம் நன்றாக இருக்கிறது' என்று சொல்வதற்காக எதற்காக ஆறுநாட்கள் உழைக்க வேண்டும் என்று கேட்கிறேன். அவனிடம் கடந்த கால வரலாற்றைக் காட்டுங்கள். இப்போதைய நிலைமையையும் பார்க்கச் சொல்லுங்கள். அப்போது பார்ப்போம் ``எல்லாம் நன்றாக இருக்கிறது'' என்று அவன் சொல்லத் துணிவானா என்று.

சிறைக் கொட்டடிகளிலிருந்தும், சேரிகள், குடிசைகளில் பட்டினி கிடக்கும் கோடிக்கணக்கான மனிதர்களிடமிருந்தும், சுரண்டப்படும் உழைப்பாளிகளிடமிருந்தும் அவர்களுடைய இரத்தம் முதலாளித்துவக் காட்டேரிகளால் உறிஞ்சப்படுகிறது; சராசரி அறிவுடைய சாதாரண மனிதனையேகூட அதிர்ச்சியும் நடுக்கமும் ஏற்படுத்தக்கூடிய வகையில் மனித ஆற்றல் வீணடிக்கப் படுகிறது; உபரி உற்பத்தி, பட்டினியால் வாடுகிற தேவைப்படும் மக்களுக்கு அளிப்பதை விடுத்து கடலில் கொட்டப்படுகிறது; மனிதர்களின் எலும்புகளை அஸ்திவாரமாகக் கொண்டு அரசர்களின் மாளிகைகள் கட்டப்படுகின்றன... இதை எல்லாம் பொறுமையாக அல்ல அல்ல, உணர்ச்சியற்று பார்த்துக் கொண்டிருக்கிற கடவுள் சொல்லட்டும் ``எல்லாம் நன்றாகவே இருக்கிறது'' என்று. ஏன், எதற்காக என்பதே என் கேள்வி. உங்களிடம் பதில் இல்லை அல்லவா. சரி, இதற்குப் பதில் சொல்லுங்கள். இந்துக்களே, நீங்கள் சொல்கிறீர்கள் இன்று துன்பப்படுபவர்கள் எல்லாம் முந்தைய பிறவியில் பாவம் செய்தவர்கள் என்று. சரி. இன்றைய ஒடுக்குமுறைக் காரர்கள் எல்லாம் முந்தைய பிறவிகளில் துறவிகளாக இருந்தவர்கள். அதனால் இப்போது அதிகாரத்தை அனுபவிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்; அப்படி யானால் உங்கள் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நம்புகிறேன். பகுத்தறிவும் அவநம்பிக்கையும் செய்கிற எல்லா முயற்சிகளையும் உடைத்தெறியும் அளவுக்கு உறுதியான கோட்பாடுகளைக் கண்டறிய அவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த வாதம் எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்கும் என்று பார்ப்போம்.

புகழ்பெற்ற நீதிவல்லுநர்களின் கருத்துப்படி, குற்றம் செய்தவர்களுக்கான தண்டனை என்பதை மூன்று அல்லது நான்கு வழிகளில் நியாயப்படுத்தலாம். குற்றத்துக்குப் பதிலடி கொடுத்தல். சீர்திருத்தல். அச்சத்தை ஏற்படுத்தித் தடுத்தல். இவற்றில், பதிலுக்குப் பதில் தண்டனை என்பது முற்போக்கான சிந்தனை யாளர்கள் அனைவராலும் கண்டிக்கப்படுகிறது. அச்சத்தை ஏற்படுத்தித் தடுத்தல் என்பதும் அவ்வாறே. சீர்திருத்தல் கோட்பாடு ஒன்று மட்டுமே அவசிய மானது, மனித முன்னேற்றத்தில் இன்றியமையாதது, குற்றம் செய்தவனை திறமைசாலியாகவும், அமைதியை விரும்பும் குடிமகனாகவும் ஆக்கி சமுதாயத்திற்கு திருப்பி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால். மனிதர்கள் குற்றம் செய்தார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கடவுள் வழங்குகிற தண்டனையின் தன்மை எப்படிப்பட்டது? அவர்களை மாடாக, எலியாக, மரமாக, ஆடாக அல்லது விலங்காகப் பிறக்க வைத்து அனுப்புகிறார் கடவுள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இப்படி 84 லட்சம் தண்டனைகள் உள்ளன என்றும் நீங்கள் பட்டியல் போடுகிறீர்கள். இப்படிப் பட்ட தண்டனையில் மனிதனைச் சீர்திருத்துவதில் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்று கேட்கிறேன். `தான் செய்த பாவத்துக்காக முந்தைய பிறப்பில் கழுதையாகப் பிறந்தேன்' என்று சொல்கிற எத்தனை பேரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள்? ஒருவரும் இல்லை. உங்கள் புராணங்களை இங்கே மேற்கோள் காட்டாதீர்கள். உங்கள் கற்பனைப் புராணங்களைத் தொடுகிற அளவுக்கு இங்கே எனக்கு இடமில்லை. மேலும், ஏழையாக இருப்பதுதான் மிகப்பெரிய பாவம் என்று நீங்கள் அறிவீர்களா? ஏழ்மை ஒரு பாவம், அது ஒரு தண்டனை. குற்றவியல் வல்லுநர், நீதி வல்லுநர், அல்லது சட்டத்தை வகுப்பவர், இத்தகைய தண்டனைகள் ஒரு மனிதனை மேலும் குற்றங்கள் செய்யத்தான் தூண்டும் என்று கூறினால் அதை எந்த அளவுக்கு உங்களால் ஏற்க முடியும்? இதைப்பற்றி உங்கள் கடவுள் சிந்திக்கவே இல்லையா? அல்லது மனிதர்களுக்கு சொல்ல வொணாத் துன்பங்களை ஏற்படுத்தி, அவற்றின் அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில்தான் கடவுள் இருக்கிறாரா? அருந்ததியர் அல்லது தெருக் கூட்டுபவர் போன்ற ஏழையான, படிப்பறிவற்ற ஒரு வீட்டில் பிறந்தவனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அவன் ஏழை, அதனால் கல்வி கற்க இயலாது. உயர் வகுப்புக் குடும்பத்தில் பிறந்தவர்கள் என்பதால் அவனை விட உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொள்கிற சக மனிதர்களால் அவன் வெறுக்கப்படுகிறான், விரட்டப் படுகிறான். அவன் மீதான புறக்கணிப்பும், ஏழ்மையும், சமூகத்தால் அவன் நடத்தப்படும் விதமும் சேர்ந்து அவன் மனதை இரும்பாக்கி விடும், சமுதாயத்தின்பால் அக்கறை அற்றவனாக்கி விடும். அவன் ஒரு குற்றம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு யார் பொறுப்பு? கடவுளா, அவனா, அல்லது சமூகத்தில் கற்றறிந்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களா? வேதங்கள் என்னும் உங்கள் புனித நூல்களின் சில வாசகங்களைக் காதில் கேட்டு விட்டார்கள் என்பதற் காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற தண்டனைக்கு யார் பொறுப்பு? மமதையும் சுயநலமும் கொண்ட பிராமணர்களால் திட்டமிட்டே அறியாமையில் மூழ்கிக்கிடக்கும்படி தண்டனை அளிக்கப்பட்டுள்ளதற்கு யார் பொறுப்பு? அவர்கள் ஏதேனும் குற்றம் செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம்; அவர்களுக்கு யார் பொறுப்பு? யார் தண்டனையை ஏற்பது? நண்பர்களே, இந்தக் கோட்பாடுகள் எல்லாம் தனியுரிமை கொண்டவர் களின் கண்டுபிடிப்புகள் அவர்கள் தாமே கையில் எடுத்துக் கொண்ட அதிகாரம், செல்வம், ஆதிக்கம் இவற்றை நியாயப்படுத்த இந்தக் கோட்பாடுகள் அவர்களுக்கு உதவியாக நிற்கின்றன. அப்டன் சின்கிளேர் என்பவர்தான் இதை எழுதினார் என்று நினைக்கிறேன் `ஒரு மனிதனை நிலைபேற்றின்மீது நம்பிக்கை ஏற்படுத்தி விடுங்கள் போதும், அப்புறம் அவனுடைய செல்வம், உடைமை அனைத்தையும் கொள்ளையடித்துக் கொள்ளலாம். அவன் சிறிதும் எதிர்ப்புணர்ச்சியின்றி உங்களுக்கு உதவிகூடச் செய்வான்.' மதப் பிரச்சாரம் செய்பவர்களையும் அதிகாரத்தை வைத்திருப்பவர் களையும் கொண்ட கூட்டணிதான் சிறைகளையும் தூக்குமேடைகளையும், கசைகளையும் இந்தக் கோட்பாடுகளையும் உருவாக்கியது.

எல்லாம் வல்லவனான உங்கள் கடவுள், ஒரு மனிதன் பாவமோ குற்றமோ செய்யும்போதே ஏன் தடுப்பதில்லை என்று கேட்கிறேன். எல்லாம் வல்லவன் அதை எளிதாகச் செய்து விடலாமே? மாபெரும் போர்களை நடத்தும் படைத் தளபதிகளைக் கொன்றோ அல்லது அவர்களுடைய உள்ளத்தில் இருக்கும் போர் வெறியைக் கொன்றோ மனிதகுலத்தின் தலையில் விடியும் பேரழிவுகளைத் தவிர்க்கலாமே? இந்தியாவை விடுதலை செய்யும்படி ஆங்கிலேயர்களின் மனங்களில் அவன் நல்லுணர்வை ஏன் ஏற்படுத்தக்கூடாது? உற்பத்திச்சாதனங்களை எல்லாம் தம் உடைமையாக வைத்துக்கொண்டு உழைக்கும் வர்க்கம் முழுவதையும் அல்ல அல்ல, மனித சமுதாயம் முழுவதையும் முதலாளித்துவத்தின் அடிமைகளாக வைத்திருக்கும் முதலாளிகள் தமது உடைமைகளைத் துறக்கும்படி அவர்களின் மனங்களில் தயாளப் பண்பை கடவுள் ஏன் புகுத்தவில்லை? சமத்துவக் கோட்பாடு நடைமுறைக்கு உகந்தததுதானா என்று பகுத்தறிய விரும்புகிறீர்களா? அதைச் செயல்படுத்தும் வேலையை எல்லாம் வல்ல உங்கள் கடவுளிடமே விட்டு விடுகிறேன். பொது நலன் என்ற அளவில் சமத்துவக் கொள்கை சரியானது என்பதை மக்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் நடைமுறைப்படுத்த இயலுமா என்ற போர்வையில் அதை எதிர்க்கிறார்கள். எல்லாம் வல்லவன் இதில் தலையிட்டு, அனைத்தையும் முறையாக ஒழுங்கு படுத்தட்டுமே? இப்போது நீங்கள் தலையைச் சுற்றி மூக்கைப் பிடிக்கும் வாதங்களில் இறங்க முயற்சி செய்யாதீர்கள், அவையெல்லாம் காலம் கடந்தவை. ஆங்கிலேயர் ஆட்சி இங்கே இருக்கிறது என்றால் அது கடவுளின் விருப்பத்தால் அல்ல; அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது, நாம் அதை எதிர்க்கத் துணியவில்லை என்பதால்தான். ஆங்கிலேயர் நம்மை அடக்கி ஒடுக்குகிறார்கள் என்றால் அது கடவுளின் உதவியால் அல்ல; அவர்களிடம்இருக்கும் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள், காவலர்கள், இராணுவம் ஆகியவற்றின் உதவியாலும், ஒரு நாடு இன்னொரு நாட்டைச் சுரண்டுகிற சமுதாயத்திற்கு எதிரான படுமோசமான பாவத்தைச் செய்கிறஅவர்களைப் பற்றி நாம் உணர்ச்சியற்றவர்களாக இருப்பதாலும்தான்; கடவுளின் உதவியால் அல்ல. கடவுள் எங்கே? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? மனித இனத்தின் அத்தனை துன்பங்களையும் அவன் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறானா? அவன் என்ன நீரோவா? அல்லது செங்கிஸ்கானா? அப்படிப்பட்ட கடவுள் ஒழிந்து போகட்டும்.

இந்த உலகம் எப்படி உருவானது, மனிதன் உருவானது எப்படி என்று கேட்கிறீர்களா? சரி, சொல்கிறேன். இந்த விஷயத்தைப் பற்றி சார்லஸ் டார்வின் சற்றே விளக்கமளிக்க முயற்சி செய்திருக்கிறார். அதைப் படித்துப்பாருங்கள். சோஹம் ஸ்வாமி எழுதிய `பொதுப் புத்தி' (காமன் சென்ஸ்) என்ற நூலைப் படியுங்கள். இது உங்கள் கேள்விக்கு ஓரளவு விடை தரும். உலகம் இயற்கையின் உருவாக்கம். நெபுலா என்று அழைக்கப்படும் வெவ்வேறான கூறுகள் தற்செயலாகச் சேர்ந்ததால் ஏற்பட்டது இந்த உலகம். எப்போது நிகழ்ந்தது என்று அறிய வரலாற்றைப் படியுங்கள். இயற்கையின் இதே இயக்கம்தான் விலங்குகளையும், பினனர் கால ஓட்டத்தில் மனிதனையும் பிறப்பித்தது. டார்வின் எழுதிய `உயிரினங்களின் தோற்றம்' (ஆரிஜின் ஆப் ஸ்பெசிஸ்) நூலைப் படியுங்கள். பிற்பாடு ஏற்பட்ட முன்னேற்றங்கள் எல்லாமே மனிதனுக்கும் இயற்கைக்கும் ஏற்பட்ட முரண்களால், இயற்கையை வசப்படுத்த மனிதன் மேற்கொண்ட முயற்சிகளால் விளைந்தவைதான். இதுவே உலகத் தோற்றம் பற்றிய கருத்தின் சுருக்கமான விளக்கம்.

முந்தைய பிறப்பின் பலன் அல்ல என்றால், ஒரு குழந்தை பார்வையிழந்தோ அல்லது முடமாகவோ பிறப்பது ஏன் என்று கேட்பீர்கள். இதற்கு உயிரியல்தான் காரணம் என்று உயிரியல் வல்லுநர்கள் ஏற்கெனவே விளக்கி விட்டார்கள். இதன் முழுப் பொறுப்பும் பெற்றோர்கள்தான் என்று கூறுகிறார்கள் அவர்கள்; பெற்றோர் அறிந்தோ அறியாமலோ செய்யும் செயல் களின் விளைவாகத்தான் குழந்தை பிறப்பதற்கு முன்பே ஊனம் ஏற்படுகிறது.

நீங்கள் இன்னொரு கேள்வியும் எழுப்பலாம் - அது குழந்தைத்தனமான கேள்வியாக இருந்தாலும் சரிதான். கடவுள் இல்லை என்றால், மக்கள் எப்படி கடவுளை நம்பத் துவங்கினார்கள்? இதற்கான என் பதில் சுருக்கமானது, தெளிவானது எப்படி பேய்களையும் பிசாசுகளையும் நம்பத் துவங்கினார்களோ அப்படியே தான்; இதில் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், கடவுள் நம்பிக்கை என்பது உலகம் முழுக்கவும் நிலவுகிறது, கடவுள் நம்பிக்கைத் தத்துவம் நன்றாக வேரூன்றி விட்டது. அனைத்துக்கும் மேலான ஒரு சக்தி என்று உபதேசம் செய்து, மக்கள்மீது தம் அதிகாரத்தை செலுத்துவதற்கான தனியுரிமையை கடவுளிடமிருந்து தாம் பெற்றிருப்பதாகக் கூறி மக்களை அடக்கி ஒடுக்க விரும்பும் சுரண்டல்காரர்கள்தான் கடவுள் என்ற சிந்தனை தோன்றியதற்குக் காரணம் என்று சில புரட்சிக்காரர்கள் கூறுவது போல நான் கூற மாட்டேன். அதே சமயத்தில், எல்லா மதங்களும், நம்பிக்கைகளும், மதப்பிரிவுகளும், இதர அமைப்புகளும் காலப் போக்கில் சுரண்டும் அமைப்புகள், மனிதர்கள், இனங்களின் ஆதரவாளர்களாக ஆகி விட்டார்கள் என்ற அடிப்படை உண்மையில் அவர்களுடன் எனக்கு கருத்து வேறுபாடு ஏதுமில்லை. அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வது எப்போதுமே அனைத்து மதங்களிலும் பாவமாகக் கருதப்படுகிறது.

கடவுளின் தோற்றம் என்பதைப் பொறுத்தவரை என் சொந்தக் கருத்து இதுதான் - மனிதன் ஒரு வரம்புக்கு உட்பட்டவன்தான் என்று புரிந்த பிறகு, மனிதனின் பலவீனங்களையும் குறைகளையும் கருத்தில் கொண்டு, மனிதன் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள, அபாயங்களை தைரியமாக சந்திக்க, செழிப்பும் வளமும் சேரும்போது பகட்டைக் காட்டாமல் கட்டுப்படுத்த கடவுள் என்ற கற்பனைக் கருத்து உருவகப்படுத்தப்பட்டது. கடவுளுக்கு என சொந்த சட்டங்களும், பெற்றோருக்கு உள்ளது போன்ற பெருந்தன்மையும் கற்பனை செய்யப்பட்டு மேலும் விளக்கமாக சித்திரிக்கப்பட்டது. மனிதன் சமூகத்திற்கு ஆபத்தானவனாக மாறிவிடக் கூடாது என்று தடுப்பதற்காக கடவுளின் கோபம், சாபம் என்ற கற்பனையான தடுப்புக் காரணிகள் கண்டுபிடிக்கப் பட்டன. கடவுளின் தயாள குணத்தை விளக்க, கடவுள் தந்தையாக, தாயாக, தங்கையாக, சகோதரனாக, நண்பனாக, துணையாளாக உதவுகிறார் என்று கூறப்பட்டது. தன் எல்லா நண்பர்களும் தனக்குத் துரோகம் செய்து விட்ட பிறகு, மிகுந்த விரக்தியில் இருக்கும் மனிதனுக்கு எப்போதும் துணையாக நிற்கும் ஒரு சக்தியில் ஆறுதல் பெற முடியும் என்பதற்காகவே இது. கடவுள் அனைத்துக்கும் மேலான சக்தி, அவனால் இயலாதது எதுவுமே இல்லை என்று கூறப்பட்டது. உண்மையாகச் சொன்னால், ஆதிகாலத்தில் இது சமுதாயத்துக்கு உதவியாகத்தான் இருந்தது. கடவுள் என்ற கருத்து, விரக்தியில் உள்ள ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய ஆறுதல்.

சிலை வழிபாட்டுக்கும், மதம் என்ற குறுகிய சிந்தனைக்கு எதிராகவும் சமுதாயம் போராடியது போலவே இந்த நம்பிக்கைக்கு எதிராகவும் போராடியே தீரவேண்டும். அதே போல, மனிதன் தன் சொந்தக் கால்களில்நிற்க முயற்சி செய்யும்போது அவன் இந்த மூடநம்பிக்கைகளை புறம் தள்ளிவிட வேண்டும்; சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் விரக்திகளையும் சிக்கல் களையும் ஆண்மையுடன் எதிர்கொள்ள வேண்டும். இதுதான் என் கருத்து நிலைபாடு. நண்பர்களே, நான் கடவுளை மறுப்பது அகங்காரத்தினால் அல்ல. என் சிந்தனை முறைதான் என்னை நாத்திகன் ஆக்கி யிருக்கிறது. கடவுள் மீதான நம்பிக்கையும் அன்றாடப் பிரார்த்தனைகளும் மனிதரின் விஷயத்தில் மிகவும் சுயநலமிக்க, கௌரவக் குறைவான செயலாக நான் கருதுகிறேன். இந்தப் பிரார்த்தனைகள் உதவியாக இருக்குமா அல்லது என் விஷயத்தில் இன்னும் மோசமாக்கி விடுமா என்று எனக்குத் தெரியாது. கடவுள் மறுப்பாளர்கள் எல்லா சிரமங்களையும் மிகவும் உறுதியுடன் எதிர் கொள்வதை நான் படித்திருக்கிறேன்; அதேபோலத்தான் நானும் ஒரு ஆண்மகனாக இறுதி வரை தூக்கு மேடையிலும்கூட தலைநிமிர்ந்து நிற்க முயற்சி செய்கிறேன்.

நான் இதை எப்படிச் செய்கிறேன் என்று பார்ப்போம்: ஒரு நண்பர் என்னைப் பிரார்த்தனை செய்யுமாறு சொன்னார். என் நாத்திகக் கொள்கையைப் பற்றிக் கூறியதும் அவர் சொன்னார்: ``உன் கடைசி நாட்களில் கடவுளை நம்பத் தொடங்கி விடுவாய்''. நான் சொன்னேன்: `இல்லை நண்பரே, அது ஒருபோதும் நடக்காது. அப்படிச் செய்தால் என்னை நானே தரம் தாழ்த்திக்கொள்கிற, துணிவற்ற செயலாகத்தான் நான் எண்ணுவேன். சுயநல நோக்கங்களுக்காக நான் பிரார்த்தனை செய்யப்போவதில்லை.' வாசகர்களே, நண்பர்களே, இப்போது கூறுங்கள் ``இது அகங்காரமா?'' இது அகங்காரம்தான் என்றால், அப்படியே இருக்கட்டும், நான் அகங்காரம் உள்ளவனாகவே இருந்து விட்டுப் போகிறேன்.